World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்Reaction to the French hostage crisis பிரெஞ்சு பிணைக்கைதிகள் நெருக்கடி தொடர்பான எதிர் வெளிப்பாடு By Antoine Lerougetel பிரெஞ்சு பத்திரிகையாளரான ஜோர்ஜ் மால்புறினோ (Georges Malbrunot) மற்றும் கிறிஸ்ரியோன் செஸ்னோ (Christian Chesnot) ஆகியோர் ஈராக்கில் ஒரு இஸ்லாமிய அடிப்படை வாதக்குழுவினால் கடத்தி செல்லப்பட்டிருப்பது தொடர்பாக பிரெஞ்சு மக்கள் -முஸ்லீம்களும், முஸ்லீம் அல்லாதவர்களும் ஒரு சேர இணைந்து எதிர்விளைவை தெரிவித்திருப்பது சாதாரண மக்களது சமுதாய மற்றும் ஜனநாயக விருப்பங்களுக்கும், "இஸ்லாத்தை காத்து நிற்கிறோம்" என்ற பெயரால் தங்களது சொந்த செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக பயங்கரவாத குழுக்கள் மேற்கொண்டுள்ள முன்னோக்கிற்கும் இடையிலுள்ள இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது. ஈராக்கில் இஸ்லாமிய இராணுவத்தினரால் ஆகஸ்ட் 20-ல் மால்புறினோவும் செஸ்னோவும் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இந்த இரகசியக் குழு பிரான்சு அரசாங்கத்திற்கு முஸ்லீம் பள்ளிகளில் பயிலும் முஸ்லீம் சிறுமிகள் தலை முக்காடு அணிவதற்கு எதிராக இயற்றப்பட்டுள்ள சட்டம் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று 48- மணிநேர இறுதிக் கெடுவை தந்திருக்கிறது. அரபு தொலைக்காட்சி அலைவரிசையான அல் ஜெசீரா வீடியோ ஒளிபரப்பு மூலம் ஆகஸ்ட் 26 GMT மாலை 6.30- மணிக்கு இந்த இறுதி எச்சரிக்கை வெயிட்டது. ஆனால் பகிரங்கமாக அறிவிக்கப்படாவிட்டாலும் அந்த அச்சுறுத்தலின் உள்ளார்ந்த பொருள் என்னவென்றால் பிரெஞ்சு அரசாங்கம் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிணைக்கைதிகளை பிடித்தவர்கள் அவர்களை கொன்றுவிடுவார்கள் என்பதுதான். இரண்டாவது வீடியோ ஆகஸ்ட் 30 மாலை ஒளிபரப்பப்பட்டதில் இரண்டு பத்திரிகையாளருக்கும் வெளிப்படையாக கொலை அச்சுறுத்தல் வெளியிடப்பட்டது. பிணைக்கைதிகாளக பிடிக்கப்பட்ட அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் மத்திய கிழக்கோடு நீண்ட உறவு கொண்டிருப்பவர்கள் ஈராக் மற்றும் பாலஸ்தீனம் தொடர்பாக புத்தகங்களை எழுதியுள்ளார்கள். இந்த மக்களது பிரச்சனைகள் குறித்து செய்தி கொடுப்பதில் அவர்கள் மதிக்கப்படுகின்றார்கள். பர்தா தொடர்பான பிரெஞ்சு அரசாங்கத்தின் சட்டத்திற்கு அவர்கள் எந்தவகையிலும் பொறுப்பல்ல, பத்திரிகையாளர்கள் என்ற முறையில் அவர்கள் சம்பவங்கள் பற்றி மக்களுக்கு தகவல் தருகிறார்கள், தகவல் தரவும், தகவல் பெறுவதற்குமுள்ள, ஜனநாயக உரிமையை அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். ஈராக் எதிர்ப்பு அணியைச் சேர்ந்த ஒரு தலைவர் குறிப்பிட்டதைப்போல் ஈராக்கிலிருந்து வெளிநாட்டு ஊடகங்கள் வெளியேறுமானால் ''ஆக்கிரமிப்பாளர்கள் கையில்தான் அந்த நாடு சிக்கக்கொள்ளும் மேலும் எதிர்ப்பு இயக்கங்களை தனிமைப்படுத்திவிடும்.'' பிரான்சில் மக்கள் வெளிப்படையாக தங்களது வெறுப்பை வெளியிட்டனர். ஆட்சேபிக்கப்பட்டுள்ள பர்தா பற்றிய சட்டத்தை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் இணைந்து பேரணிகள் நடத்தி அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டுமென்று கோரினர். அதேநேரத்தில், செல்வாக்கை இழந்துவிட்ட ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் பிரதமர் ரஃபரான் அரசாங்கமும் பிரான்சின் நிர்வாக கட்டுக்கோப்பின் இதர உறுப்பினர்களும் இஸ்லாமிய இராணுவம் பயன்படுத்தியுள்ள பிற்போக்குத்தனமான முறைகளால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பிணைக்கைதிகளை பிடித்தவர்களுக்கு எதிரான பொதுமக்களது கடும் வெறுப்பின் உருவாக தன்னை முன்வைத்துக் கொண்டு, ஜனநாயக உரிமைகளை காத்து நிற்பவர்களாகவும் காட்டிக்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை பிற்பகலுக்கு பின்னர் பாரிசில் உள்ள Trocadéro சதுக்கத்தில் சுமார் 3000- மக்கள் திரண்டு பேரணி நடத்தினர். தேசிய நாடாளுமன்ற தலைவராலும், நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளின் செனட் பிரதிநிதிகளாலும் கூட்டாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு செவிமடுத்து இந்தப்பேரணி நடைபெற்றது. நாடாளுமன்ற அரசாங்க அமைச்சர்களும் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் தலைவர்கள், பாரிஸ் நகரின் ரோமன் கத்தோலிக்க மத தலைமை மதகுரு, யூதத்தலைவர்கள், சக பத்திரிகையாளர்கள், பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் உட்பட சாதாரண மக்கள் ஆகியோர் அங்கிருந்தனர். ஒரு சிறுமி ஒருபதாகையை ஏந்திவந்தாள்: ''கடவுளின் பெயரால், பிரான்சிலுள்ள பர்தா அணிந்த எல்லா பிரான்சு நாட்டு சிறுமிகளின் பெயரால், பிரெஞ்சு முஸ்லிம்களின் பெயரால், இதில் தலையிட்டு எங்களது அப்பாவி பிரெஞ்சு குடிமக்களான, அந்த இரண்டு பத்திரிகையாளரையும் விடுவிக்க இறைஞ்சுகிறோம்'' என்ற வாசகம் அடங்கியிருந்தது. வடக்கு இஸ்லாமிய லீக்கை சேர்ந்த லீல் மகளிர் குழு சார்பில் பர்தா அணிந்து சிறுமி எலா வந்திருந்தார். ''சிலர் நாங்கள் இங்கே வந்திருப்பதையே, ஆத்திரமூட்டலாக நினைக்கின்றனர். அந்தக் கருத்து முற்றிலும் எதிரானது. நாங்கள் துன்புற்றுக்கொண்டிருக்கிறோம், மற்றும் இது இரட்டிப்பு துன்பம். இந்த துன்பத்தை இங்குள்ள ஒவ்வொருவரோடும் நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம். ஏனெனில் இரண்டு பிரெஞ்சு மக்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள் மற்றும் எங்களது நோக்கத்தை முறைகேடாக கையாண்டிருப்பதால் நாங்கள் துன்பத்தை உணருகிறோம்'' என்று அந்த பெண் குறிப்பிட்டார். ''அப்பாவி மக்களது இரத்தக்கறை எனது தலை அணியில் படவேண்டாம்'' என்ற பரவலான உணர்வு வெளிப்படுத்தப்பட்டது, ஈராக்கிலுள்ள இஸ்லாமிய இராணுவம் பயன்படுத்தி வருகின்ற கும்பலாதிக்க முறைக்கு பிரெஞ்சு முஸ்லீம் சமுதாயத்தில் உணரப்பட்ட குரோதத்தின் ஒரு சக்திமிக்க குறிகாட்டல் ஆகும். ஆகஸ்ட் 31-ல் லு மொன்ட் பத்திரிகையில், மதசார்பற்ற முஸ்லீம்கள், பெண்ணுரிமை அமைப்புக்கள் மற்றும் மதச் சின்னங்கள் பள்ளிகளில் பயன்படுத்தப்படுவதற்கு தடைவிதிக்கும் சட்டத்திற்கு எதிராக நிற்கும் அனைத்துத் தரப்பினரும் ஒரு குடை அமைப்பாக "பையன்களுக்கும் சிறுமிகளுக்குமான ஒரு பள்ளி" என்ற அமைப்பின் சார்பில் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர். "இந்தச் சட்டத்தை எதிர்க்கும் நோக்கில் பிரெஞ்சு பத்திரிகையாளர்களை கடத்திச்சென்று கொல்வதாக அச்சுறுத்தியிருப்பதை இந்த அமைப்பு மிக வன்மையாக கண்டிப்பதை" பிரதிநிதித்துவப்படுத்துகிறது. "தகவல் சுதந்திரத்தின் பெயரால் குறிப்பாக ஆக்கிரமிப்புப் போரில் அதன் அத்தியாவசியத்தன்மை குறித்து" அந்தக் குழு தனது கூட்டறிக்கையில் கூறியுள்ளது. ஆள் கடத்தலும் மரண அச்சுறுத்தலும் "இந்த சட்டத்தினால் ஏற்கனவே வளர்க்கப்பட்டுவிட்ட இஸ்லாமிய பூச்சாண்டி உணர்வை ஊக்குவிக்கவே உதவி செய்யும்." ஆகஸ்ட் 31ல் லு பிகாரோ ஒரு முஸ்லீம் பெண் பத்திரிகையாளர் கருத்தை வெளியிட்டிருக்கிறது. ''இஸ்லாத்தின் பெயரால் அவர்கள் இப்படி செய்து கொண்டிருக்கிறார்களா? அவர்களுக்கு ஜனநாயகத்தில் விருப்பமில்லை என்றால் குறைந்த பட்சம் எங்களது ஜனநாயகத்தையாவது விட்டுவிட வேண்டும்'' ஸ்ரார்ஸ்பேர்கை சேர்ந்த மருத்துவர் அப்துல்லா தோமஸ் மில்லிசன்ட் பெண்கள் பள்ளிகளில் பர்தா அணிவதை தற்காத்து நிற்பதற்கு குரல் கொடுப்பதில் பிரபலமானவர் மற்றும் முஸ்லீம் மதத்திற்கான அரசாங்க வாரிய உறுப்பினர்களில் ஒருவர். அவர் கருத்துத் தெரிவிக்கும்போது, "இந்த சட்டத்திற்கு ஈராக்கில் கடத்தப்பட்டுள்ள பிரெஞ்சு பத்திரிகையாளர்களை பொறுப்பாக்க முடியாது. அவர்கள் கொலை செய்யப்பட்டால் சர்வதேச சட்டத்தின்படியும், இஸ்லாத்தின்படியும் குற்றமாகும்" என்று கூறினார். ஆகஸ்ட் 29-ல் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிணைக்கைதிகளை எந்தவிதமான தீங்கும் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று" கோரியுள்ளார். ஆகஸ்ட் 30 பிற்பகலில் வானொலி நிலையத்திற்கெதிரே அரபு அறிவுஜீவிகள் ஏற்பாடு செய்த மற்றொரு கண்டனப் பேரணியில் 300 பேர் கலந்துகொண்டனர். இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு நெருக்கமாக உள்ள பிரெஞ்சு இஸ்லாமிய அமைப்புக்களின் யூனியனை சார்ந்த Thami Brèze, பிரெஞ்சு மக்கள் அனைவரும் திரள வேண்டுமென்று கோரியுள்ளார். ''கடத்தியவர்கள் ஈராக்கியர்களது குறிக்கோளையோ முஸ்லீம்களது குறிக்கோளையோ நிறைவேற்றுவதற்காக செய்யவில்லை. நம்முடைய ஒற்றுமையையும், உணர்வுபூர்வ ஒருமைப்பாட்டையும் தெரிவிப்பதற்காக நாம் இங்கே திரண்டிருக்கிறோம். ஒரு துயரச்சம்பவம் நடக்காது தடுப்பதற்காக எல்லா மட்டங்களிலும் நாம் தலையிட்டிருக்கிறோம். கடத்தியவர்கள் பர்தா தொடர்பாக தந்துள்ள திரிக்கப்பட்ட விளக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அரபு உலகில் பர்தா தொடர்பாக ஒரு உடன்பட்ட கருத்து இல்லை. "பேச்சுவார்த்தை" என்ற கட்டுக்கோப்பிற்குள்தான் தலை அணி தொடர்பாக விவாதிக்க முடியும்'' என்று Breze கூறியுள்ளார். பர்தா தொடர்பான சட்டம் அண்மை மாதங்களில் பிரான்சில் பர்தா அணிவதை தடுப்பது தொடர்பான தகராறு பொது விவாதமாக தொடங்கியிருக்கின்ற நேரத்தில், பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்டது தொடர்பாக பிரெஞ்சு மக்களின் எதிர்வினைகள், அவற்றை அம்பலப்படுத்துவதாக உள்ளது. "ஆரம்பப்பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் lycées ஆகியவற்றில் வெளிப்படையாக மதத்தொடர்புகளை அடையாளம் காட்டும் சின்னங்களையோ அல்லது உடுப்புக்களையோ அணிவதற்கு மார்ச் 15- சட்டம் தடை விதிக்கிறது" என்பதுதான் அதிகாரபூர்வமாக அந்த சட்டத்திற்கு தரப்பட்டுள்ள பெயர், ஆனால் சர்வதேச அளவில் இது "பர்தா தொடர்பான சட்டம்" என்றே அழைக்கப்படுகிறது. செப்டம்பர் 2-ல் இந்த சட்டம் செயல்படத் தொடங்கியது. இரண்டு பத்திரிகையாளர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பின்னர் புதிய கல்வியாண்டை ஒட்டி இது அமலுக்கு வந்தது நிகழ்வுப் பொருத்தமாகி உள்ளது. இந்த சட்டத்தை எல்லா பெரிய கட்சிகளும் ஆதரிக்கின்றன- சிராக்கின் UMP கட்சியிலிருந்து எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதி இடதுசாரிகளான லுத் உவ்றியேர் கட்சி ஆகியன வரை ஆதரிக்கின்றன. பள்ளிகளில் மத சின்னங்களுக்கு தடைவிதிப்பதன் மூலம் இந்தச் சட்டம் மதச்சார்பற்ற தன்மையை பலப்படுத்துவதன் மூலம் மற்றும் மகளிர் உரிமைகளை தற்காத்து நிற்பதன்மூலம் ஜனநாயக உரிமைகளை தற்காத்து நிற்கிறது என அக்கட்சிகள் வாதிடுகின்றன. உண்மையிலேயே அந்தச் சட்டம், எதிர்மாறான விளைவையே ஏற்படுத்துகின்றது. மதச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பள்ளிகளில் முஸ்லீம் இளைஞர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுகிறது. இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்குள்ளே பிளவுகளை வளர்க்கிறது. பிரான்சிலுள்ள உழைக்கும் மக்களுக்கிடையிலும், பிளவுகளை ஊட்டிவளர்க்கிறது. அந்தச் சட்டத்தை எதிர்த்து நிற்போர் ஏறத்தாழ ஒருமனதாக அந்த இரண்டு பத்திரிகையாளர்களையும் காப்பாற்றுவதற்காக முன்வந்திருப்பது இந்த எதிர்ப்பின் அடிப்படை ஜனநாயகத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் இஸ்லாமிய இராணுவம் தலையிடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த இராணுவத்தின் ஆழமான ஜனநாயக விரோத மற்றும் காட்டுமிராண்டி நடைமுறைகள் பிரான்சிலும் மத்திய கிழக்கிலும் பிற்போக்கினரின் கையாளலுக்கு உரியதாய் அமைந்துவிடுகிறது. பிரான்சில் எந்த நாட்டின் மூலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது நம்பிக்கைகளை கொண்டிருந்தாலும், எல்லா குடிமக்களும் வென்றெடுத்த சுதந்திரங்களையும், உரிமைகளையும், பல ஆண்டுகளுக்கு மேலான போராட்டம் மூலம் தற்காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரெஞ்சு மக்களும் குடியேறியவர்களும் ஒருசேர பேணிக்காத்துவருகின்ற சிவில் உரிமைகள்மீதும், சேமநல அரசுத்திட்டங்கள் மீதும் அரசாங்கம் பிற்போக்குத்தனமான செயற்திட்டங்களை கொண்டுவந்து தாக்குதல் நடத்த பெருமளவில் முயன்றுவருகிறது. புலம்பெயர்ந்தோரில் பலர், அல்ஜீரியா போன்ற தீவிர ஒடுக்குமுறை ஆட்சிகள் நடைபெறும் நாடுகளில் இருந்து வந்தவர்கள். பல மாணவிகள் அரசாங்க கல்வி வாய்ப்புக்களை இழப்பதைவிட தலை அணிகளை விட்டுவிடலாம் என்று விரும்புகின்றனர். உலக சோசலிச வலைத் தளம் எப்போதுமே பர்தா தொடர்பான சட்டத்தை எதிர்த்தே வந்திருக்கிறது. என்றாலும், பள்ளியில் முஸ்லீம்கள் பர்தா அணியும் உரிமை பற்றிய ஒரே பிரச்சனையை பிடித்துக்கொண்டு ஜனநாயக உரிமைகளை தற்காத்து நிற்கமுடியாது என்று சொல்லியாக வேண்டும். உண்மையிலேயே இந்த பிரச்சனை கிளப்பியுள்ள பரபரப்பு, அனைவருக்கும் கண்ணியமான கல்வி கிடைக்கவேண்டும் என்ற உரிமைக்கு எதிராக அரசாங்கம் தொடுத்துள்ள தாக்குதலை மூடி மறைப்பதற்காக அமைந்திருக்கிறது. புதிய கல்வியாண்டில் ஆசிரியர்கள், மேற்பார்வையாளர் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. பொதுக் கல்விக்கான ஒதுக்கீடும் குறைந்துள்ளது. இன மற்றும் மத பிரச்சனைகளில் பிளவுபட்டு நிற்பதற்கு பதிலாக அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளையும் தற்காத்து நிற்பதற்கு மற்றும் விஸ்தரிப்பதற்கு ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான முன்னோக்குகளை வளர்ப்பது தேவையாக இருக்கிறது. நெருக்கடியை பயன்படுத்திக் கொள்ளும் சிராக் தனது வலதுசாரி அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து கொண்டுவருவதை தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி ஜாக் சிராக் இஸ்லாமிய இராணுவத்தின் இந்த பிற்போக்குத்தனமான வழிமுறைகளை பெரும்பாலும் பயன்படுத்திக்கொள்வதற்கு முயன்று வருகிறார். வலதுசாரி நாடாளுமன்ற தலைவரான ஜோன் லூயி டெப்ரே (Jean-Louis Debré) ஆகஸ்ட் -30-ந்தேதி கண்டனப் பேரணிக்கு அழைப்புவிடுத்தது, "சுதந்திரத்தை காப்பதில் பிரெஞ்சு மக்கள் தங்களது வேறுபாடுகளை மறந்து தங்களது கொள்கைகளை காக்க ஒன்றுபடுவார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்குத்தான்" என்று குறிப்பிட்டார். அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தேசிய கீதத்தை திரும்பத்திரும்ப பாடினர். பிணைக்கைதிகள் விடுதலை முயற்சியை பயன்படுத்தி பிரெஞ் அரசாங்கம் அதிகாரபூர்வ முஸ்லீம் அமைப்புக்களின் உறவை வலுப்படுத்திக்கொள்ள முயன்று வருகிறது. முஸ்லீம் மதம் தொடர்பான பிரெஞ்சு கவுன்சிலின் பிரதான அமைப்புக்களை சேர்ந்த மூன்று தலைவர்களை ஜோர்டானுக்கும், ஈரானுக்கும் சிராக் அரசாங்கம் அனுப்பியுள்ளது. மத்திய கிழக்கிலுள்ள அரபு -முதலாளித்துவ வர்க்கத்தோடு பிரான்சின் உறவை வளர்த்துக் கொள்ளும் நோக்கிலும் இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அரபு ஊடகங்களும், பள்ளிகளில் முஸ்லீம் பெண் குழந்தைகள் ''பர்தா'' அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டிப்பதை கைவிட்டுவிட்டனர். பிரெஞ்சு குடிமக்கள் இருவரையும், விடுதலை செய்யும் பிரான்ஸ் நாட்டின் முயற்சிகளை அரபு ஊடகங்கள் ஆதரிக்க தொடங்கியுள்ளனர். பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டதை ''அல்ஜெசீரா'' கண்டித்துள்ளது. இந்த கத்தார் நாட்டு தொலைக்காட்சி நிலையம் பர்தா தொடர்பான சட்டம் குறித்து பிரான்சை கண்டிக்கும் ஒளிபரப்புக்களை அடிக்கடி செய்து வந்தது. இப்போது அரபு ஊடகங்கள் போருக்கு பாரீஸ் தெரிவிக்கும் எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி வெளியிடுகின்றன மற்றும் இஸ்ரேல் -பாலஸ்தீன சண்டையில் பிரான்ஸ் நாட்டு நிலைப்பாட்டையும் வலியுறுத்தி வருகின்றன என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். லெபனான் ஷியாக்களின் தலைவர் ஷேக் பதலா, ஹெசபொல்லா தலைவர் பிரெஞ்சு பத்திரிகையாளர் இருவரை கடத்தியவர்கள் அவர்களை விட்டுவிட வேண்டுமென்று கோரியுள்ளார். அடிப்படைவாத மத போதகரான யூசுப் -அல் - கார்ட்வீ- போன்ற அரபுத்தலைவர்கள் பர்தா தொடர்பான சட்டத்தை எதிர்த்தவர், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் மிசேல் பார்னியேரை சந்தித்த பின்னர், பிணைக்கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென்று கோரியுள்ளார். பிரான்சில் பர்தா தொடர்பான சட்டத்திற்கு சம்மந்தம் இல்லாத பத்திரிகையாளர்களை விடுதலை செய்துவிட வேண்டுமென்று எகிப்தின் முஸ்லீம் லீக் சகோதரர்கள் அமைப்பின் முதன்மை வழிகாட்டி முகம்மத் மெஹ்தி அக்கேப் கோரிக்கை விடுத்துள்ளார். எகிப்தின் வெளியுறவு அமைச்சர் அஹமத் அப்துல் கெய்த் அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அமீர் மூஸா ஆகிய இருவரும் பாரீசிற்கு தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளனர். பாலஸ்தீன நிர்வாக தலைவர் யாசர் அரபாத் பிணைக்கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறார். "இந்த இரு பத்திரிகையாளர்களும் ஈராக்கிய மக்களுக்காகவும், பாலஸ்தீன மக்களுக்காகவும் உதவுபவர்கள்" என்று அராபத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஈராக்கில் தங்கள் நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை எதிர்த்து நிற்கின்ற முஸ்லீம் தலைவர்கள் ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக ஷியாக்களின் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி படைத்தலைவரான முக்தாதா அல் சதார் உட்பட அனைவரும் பிரெஞ்சு பிணைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். இதில் ஒரே குறிப்பிடத்தக்க விதிவிலக்கு அமெரிக்க கொத்தடிமை ஈராக்கிய பிரதமர் இயட் அல்லாவிதான், அவரது செய்திப்பத்திரிகை இந்த சம்பவம் தொடர்பாக பிரெஞ்சு அரசாங்கத்தின் மீது பழிபோட்டிருக்கிறது. செப்டம்பர் 2-ல் அந்தப் பத்திரிகை எழுதியுள்ள தலையங்கத்தில் மிகக் கடுமையாக பிரெஞ்சு ஜனாதிபதி சிராக்கின் கொள்கைகளை விமர்சித்துள்ளது. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் கடத்தப்பட்டதற்கு சிராக்கின் "கொள்கைகளும், ஓரளவிற்கு காரணம்" என்று அந்தப் பத்திரிகை கூறியுள்ளது. "ஈராக் மக்களுக்கு பாதுகாப்பு தருவதை நோக்கமாக கொண்டு வரப்பட்ட எல்லாத் தீர்மானங்களையும் சர்வதேச அளவில் சிராக் எதிர்த்ததாக" அந்த தலையங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது உண்மையல்ல, ஈராக் மீது தொடர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பு நீடிப்பதற்கு வகை செய்யும் ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக பிரெஞ்சு அரசாங்கம் வாக்களித்தது. அதற்குப்பின்னர் அந்த தலையங்கம் "எங்களோடு சேர்ந்து போராடாதவர்கள் உள்நாட்டில் பயங்கரவாதிகளை விரைவில் காண்பார்கள்" என்றும், பிரான்ஸ் தனது செயலுக்குரிய தண்டனையை பெற்றிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் பிரெஞ்சு அரசாங்கம் ஈராக்கிலும், அரபு மற்றும் முஸ்லீம் உலகிலும் பிணைக் கைதிகள் விடுதலை தொடர்பாக மிகுந்த பரபரப்போடு ராஜ்ஜியத்துறை முயற்சிகளை உற்சாகத்தோடு மேற்கொண்டது. ஆனால் இப்போது அந்த முயற்சி தணிந்து விட்டது. அரசாங்கம் தற்போது இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதுகின்ற நேரத்தில், அந்த இரண்டு பிரெஞ்சு பத்திரிகையாளர்களும் உயிரோடு உற்சாகமாகயிருப்பதாக அதிகாரிகள் நம்புகின்றபோதிலும், இந்தப் பிணைக்கைதிகள் விவகாரம் இப்போது அதன் நான்காவது வாரத்தை அடைந்துகொண்டிருக்கிறது. |