World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Who is responsible for the increased vote for the extreme right?

ஜேர்மனி: அதி வலதுசாரிகளுக்கு வாக்குகள் அதிகம் கிடைப்பதற்கு காரணம் யார்?

By Ulrich Rippert
14 September 2004

Back to screen version

மிகக்குறைந்த அளவிற்கு (55-சதவீத) வாக்குப்பதிவு சமூக ஜனநாயகக் கட்சியின் வாக்குகள் திடீரென்று (13.6- சதவீதம்) குறைந்தது ஆகியவற்றுடன் செப்டம்பர் 5-ல் நடைபெற்ற Saarland மாகாணத் தேர்தலில் மற்றொரு முடிவும் உருவாகியிருக்கிறது: அதி வலதுசாரி ஜேர்மன் தேசியக் கட்சி (NPD) க்கு வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு முன்னர் Saarland-TM NPD வேட்பாளர்களை நிறுத்தியதில்லை. இப்போது முதல் தடவையாக போட்டியிட்ட அக்கட்சி 4-சதவீதவாக்குகளை பெற்றிருந்தது, மாகாண சட்டசபைக்கு அக்கட்சி தனது உறுப்பினர்களை அனுப்பியிருக்க இயலக் கூடியதாக்கும் 5சதவீதம் எனும் தடையை மயிரிழையில் பெறத் தவறியது.

Soxony மற்றும் பிரான்டன்பேர்க்-ல் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் அதி வலதுகட்சி இன்னும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. NPD Saxony யிலும், பிரான்டன் பேர்க்கிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. தீவிர வலதுசாரி ஜேர்மன் மக்கள் யூனியனும் (DVU) அதன் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

Saarland மாகாண தலைநகரான Saarbruecken -ல் தேர்தல் நேரத்தில் மாலையில் குற்றச்சாட்டுக்கள் பரஸ்பரம் கூறப்பட்டன. அரசாங்கத்தின் மீது கண்டனம் தெரிவிப்பவர்கள் வேலையில்லாதிருப்போர் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி அரசாங்கத்தின் "Hartz-IV" சமூக நல வெட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் ஆகியோர் NPD க்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தேர்தல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Hartz-IV க்கு எதிராக பொதுமக்கள் எதிர்ப்புக்களில் இறங்கியது NPD-ஐ வலுப்படுத்தியிருப்பதாக சில ஊடக வர்ணனையாளர்கள் கூறியுள்ளனர்.

மறுநாள் காலை Peter Mueller (கிறித்தவ ஜனநாயக சங்கம் CDU-வைச் சேர்ந்த) மீண்டும் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக ஜனநாயகக் கட்சி (SPD) யின் முன்னாள் தலைவரான Oskar Lafontaine உழைப்பு சந்தை சீர்திருத்தங்கள் தொடர்பாக செய்த விமர்சனங்களை NPD தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விட்டது என்று Mueller குறிப்பிட்டார். Lofontaine-ஐ போன்றவர்கள் மக்கள் ஆதரவைப் பெறவேண்டும் என்பதற்காக Hartz-IV க்கு எதிராக போரிடுவார்களானால் அதன் விளைவு வாக்காளர்கள் அதி வலதுசாரிகளை நாடுகின்ற போக்கு தவிர்க்க முடியாததாக ஆகிவிடும் என்று Mueller வலியுறுத்திக்கூறினார்.

SPD செயற்குழு இந்த நிலைப்பாட்டை மிக ஆவலாக ஏற்றுக்கொண்டது. வியாழனன்று SPD ஆதரவு அரசியல் வார பத்திரிகையான Die Zeit சென்ற வியாழக்கிழமை ஒரு புதிய வாதத்தை முன்னெடுக்கும்வரை அது பல்வேறு பேட்டிகளிலும் இதே கருத்தை திரும்பத்திரும்ப வலியுறுத்திக் கூறி வந்தது. ''செல்வாக்கு இழந்தவர்களின் கிளர்ச்சி'' என்ற தலைப்பில் Die Zeit ஆசிரியர் Matthias Geis எழுதியுள்ள கட்டுரையில், Lafontaine-ஐ (முன்னாள் கிழக்கு ஜேர்மன் ஸ்ராலினிச அரசாங்க கட்சியின் வாரிசுக்கட்சியான PDS) ஜனநாயக சோசலிசக் கட்சித் தலைவர்களோடு தொடர்புபடுத்தி மற்றும் தீவிர வலதுசாரிகளோடும் சம்மந்தப்படுத்தி எழுதியுள்ளார். ''Bisky, Gysi, Lafontaine மற்றும் வலதுசாரிகள் லாபம் அடைகின்ற அச்சங்களை ஊக்குவிக்கின்றனர்'' என்று எழுதியுள்ளார். "Hartz-IV க்கு எதிரான அணி" Lafontaine மற்றும் PDS-ல் இருந்து NPD மற்றும் DVU வரை நீண்டுகொண்டே செல்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ஷ்ரோடரின் சமூக விரோத கொள்கைகளுக்கு எதிராக நிற்பவர்களையும், கண்டிப்பவர்கள் அனைவரையும் தீவிர வலதுசாரிகளின் நண்பர்கள் என்று முத்திரை குத்தி அச்சுறுத்துவதை இந்த விவாதம் அர்த்தப்படுத்துகிறது. இது தவறானது மற்றும் அகந்தைப் போக்குள்ளது.

Hartz-IV சட்டங்களை விமர்சிக்கும் லாபொன்டைன் அல்லது ஏனையோர் அதி வலதுசாரிகளால் வாக்குகள் பெறுவதற்கு பொறுப்பானவர்கள் என்ற கூற்றை நிராகரிக்கும் லாபொன்டைனின் அரசியல் கருத்துருக்களுடன் ஒருவரும் உடன்படார். அத்தகைய முடிவு அபத்தமானது. உண்மையிலேயே இது முற்றிலும் எதிரான காரணங்களால் நடைபெறுகிறது. ஏனென்றால் பெரிய கட்சிகள் எதுவும் பொதுமக்களது கவலைகளையும், அச்சங்களையும் கடுமையாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் Hartz-IV க்கு மாற்று எதுவுமில்லை என்று கூறிவருகிறார்கள். வலதுசாரி தீவிரவாதிகள் இத்தகைய சமுதாய பிரச்சனைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் பேர்லினிலுள்ள SPD பசுமைக் கட்சி அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற சமூக விரோத கொளைகைகள்தான் ஏராளமான மக்களை மேலும் அதிகமான அளவிற்கு வறுமையிலும், துயரத்திலும் தள்ளுகிறது. வலதுசாரி ஆவேச பேச்சாளர்களுக்கு ஏற்ற சூழ் நிலையை உருவாக்கித்தருகிறது- இந்தக் கொள்கைகளை தாக்குபவர்கள் மற்றும் கண்டிப்பவர்கள் இதற்குக்காரணமல்ல.

தற்போது, தீவிர வலதுசாரிகள் பிரதானமாக கண்டன வாக்குகளையே திரட்டி வருகின்றனர். 1930-களைப்போல் தெருக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அணிதிரட்டப்பட்ட தீவிர வலதுசாரி அல்லது பாசிச கும்பல்கள் தற்போதில்லை. Hartz-IVக்கு எதிராக கண்டனப்பேரணிகளை நடத்திவருவோரில் மிகப்பெரும்பாலோர் தீவிர வலதுசாரிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த கண்டனங்களில் கலந்துகொள்பவர்களில் மிகப்பெரும்பாலோர் சாதாரண மக்கள் இவர்கள் குடும்பம் குடும்பமாக கண்டனப்பேரணிகளில் அடிக்கடி ஈடுபடுகின்றனர். இவர்கள் சமுதாயத்தின் எதிர்காலம் பற்றி கவலை கொண்டிருக்கின்றனர். சமூக நலத்திட்டங்கள் வெட்டப்படுகிற நேரத்தில் பெருவர்த்தக நிறுவனங்களுக்கும், பணக்காரர்களுக்கும் பெருமளவில் வரிவிலக்கு வழங்கப்படுவது குறித்து ஆத்திரமடைந்துள்ளனர். அண்மைய வாரங்களில் நடைபெற்ற கண்டனப்பேரணிகளில் நடுநாயகமான கோரிக்கை ''சமூக நீதி'' தான்.

இந்த கண்டன பேரணிகள் ஜேர்மனி முழுவதிலும் வாரக்கணக்காக, நடைபெற்றுவருகின்றன. அரசாங்கத்திற்கு மிகப்பெருமளவில் நெருக்குதல்கள் உருவாகிவருகின்றன. அதன் பங்கிற்கு, அரசாங்கம் இந்த எதிர்ப்பை அடக்கி ஒடுக்குவதற்கு வழிவகைகளை தேடிவருகிறது. தீவிர வலதுசாரிகள் வாக்குகளை அதிகம் பெற்றிருப்பதை அரசாங்கம் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறது.

Saarland தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு முன்னரே தீவிர வலதுசாரிகள் இந்த கண்டனப் பேரணிகளில் ஊடுருவி விட்டதாகவும், அவற்றிற்கு உந்து சக்தியாக செயல்பட்டுவருவதாகவும், கூறப்பட்டது. வலதுசாரி குழுக்களை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் சாதாரணமாக பேரணிகளில் ஒரங்களில்தான் அவர்கள் ஒதுங்கி நிற்கின்ற போதும், வலதுசாரி தீவிரவாதிகள் சிறிய குழுக்களாக சேர்ந்து கொண்டு நடத்துகின்ற ஆர்பாட்டங்களுக்கு ஊடகங்களில் மிதமிஞ்சிய முக்கியத்துவம் தரப்படுகிறது.

எதிர்பார்க்கப்பட்டதைப்போல் Saxony யிலும், பிரான்டன்பேர்க்கிலும் தீவிர வலதுசாரிகள் வாக்குளை பெறுவார்களானால் ஊடகங்களின் பிரச்சாரம் தீவிரமடையும். இது அந்தப்பேரணிகளில் கலந்து கொள்வோரை மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்தவும் இழிவுபடுத்தவும்தான் பயன்படும். அதே நேரத்தில் "தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை" எனும் முழக்கம் பொதுமக்களது எதிர்ப்பை மீறி Hartz-IV சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டுமென்ற கூட்டணியை வலுப்படுத்தவே உதவும். இந்தக்கூட்டணியில் எல்லா பெரிய அரசியல் கட்சிகளும், வேலைக்கு அமர்த்துவோர் கூட்டமைப்புக்களும், மாதா கோயில்களும், ஊடகமும் மற்றும் சில நிபந்தனைகளோடு தொழிற்சங்கங்களும் சேர்ந்து கொண்டுள்ளன.

''தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக எல்லா ஜனநாயக வாதிகளும் ஒன்றுபட வேண்டும்" என்ற முழக்கம் பிற்போக்குக் கொள்கையை மறைப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகும் உண்மையில், அத்தகைய முழக்கம் தீவிர வலதுசாரி அரசியல் சக்திகள் கையில் சிக்கிக்கொள்வது இதுவே முதல் தடவையுமல்ல. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் SPD மற்றும் பசுமைக் கட்சிக்காரர்கள், முந்திய CDU தலைமையிலான Helmut Kohl அரசாங்கம் தூண்டிவிட்ட "மரியாதைக்குரியோரின் கிளர்ச்சியை" ஆதரித்தார்கள். அந்த நேரத்தில் Kohl மேற்கொண்ட புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு கொள்கைகள் வலதுசாரி கும்பல்கள் வெளிநாட்டவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்துவதை ஊக்குவித்தது.

ஜேர்மனியில் தஞ்சம்புக விரும்பியவர்கள் பலர் தங்கியிருந்த ஓட்டல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்ட நேரத்தில் அரசாங்கம் "ஜனநாயகவாதிகள் அனைவரதும் கூட்டுக்கு" அழைப்பை விடுத்தது மற்றும் மெழுகுவர்த்தி பேரணிகள் நடத்தப்பட்டன. "தீவிர வலதுசாரிக்கெதிராக உருவாக்கப்பட்ட ஒற்றுமை" -யின் விளைவாக ஜேர்மன் அரசியல் சட்டத்தில் வகை செய்யப்பட்டிருந்த தஞ்சம் கோரும் உரிமையை பெரும்பாலும் இரத்துசெய்வதற்கு SPD உடன்பட்டது. அதற்கு பின்னர் குடியேறுவோரின் உரிமைகள் படிப்படியாக வெட்டப்பட்டு தஞ்சம் கோருவோர் மற்றும் அகதிகள் திட்டமிட்டு ஆயிரக்கணக்கில் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் NPD-ஐ தடைசெய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததை நினைவுபடுத்தியாக வேண்டும். அப்போது NPD கட்சி நிர்வாகிகள் 7-பேரில் ஒருவர் ஜேர்மன் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி என்பது அம்பலத்திற்கு வந்தது. யூதர்களுக்கு எதிராகவும், மற்றும் இனவெறியைத் தூண்டுகிற வகையிலும் எழுதப்பட்ட பல ஆவணங்கள் அக்கட்சியை தடைசெய்வதற்கு நியாயப்படுத்தும் சான்றுகளாக கூறப்பட்டன. அவற்றில் பல இந்த ஜேர்மன் புலனாய்வு அதிகாரிகள் எழுதியவை என்று தெரியவந்தன. NPD உள்ளூர் மற்றும் மண்டல சம்மேளனங்களை பல புலனாய்வு அதிகாரிகள் உருவாக்கினார்கள் அல்லது தலைமை தாங்கினார்கள் என்பதும் தெரியவந்தது.

NPD க்கு கூடுதலாக வாக்குகள் கிடைத்திருப்பதை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள முயல்வது தனது சொந்த பிற்போக்கு அரசியல் வேலைத் திட்டத்தைத் திணிப்பதை நோக்கங்கொண்ட போலி நடிப்பாகும். தீவிர வலதுசாரிகளையும், பாசிச கட்சிகளையும் எதிர்த்து போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தை அணி திரட்டலும் அதன் அரசியல் அபிவிருத்தியும் தேவைப்படுகிறது. தற்போது நடத்தப்பட்டு வரும் கண்டப்பேரணிகள் ஒரு தொடக்கம்தான். என்றாலும், அவற்றிற்கு ஆக்கபூர்வமான முன்னோக்கு இல்லை. ஒரு புதிய கட்சி சர்வதேச முன்னோக்கு மற்றும் சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசரத்தை அவை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved