World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக் David North addresses public meetings in Australia and New Zealand The war in Iraq and the 2004 US presidential election ஆஸ்திரேலியாவிலும், நியூ சிலாந்திலும் டேவிட் நோர்த் பொதுக் கூட்டங்களில் உரையாற்றுகிறார் ஈராக்கியப் போரும் 2004 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் By David North உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, நியூசிலாந்தில், வெலிங்டன், மற்றும் ஆஸ்திரேலியாவில் சிட்னி ஆகியவற்றில் முறையே ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5 தேதிகளில் டேவிட் நோர்த் பொதுக் கூட்டங்களில் நிகழ்த்திய உரையைக் கீழே பிரசுரிக்கிறோம். நோர்த், உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும் ஆவார். இன்னும் இரண்டு மாதங்களில் ஐக்கிய அமெரிக்க அரசுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் தன்னுடைய ஜனாதிபதித் தேர்தலை நடத்த இருக்கிறது. புரிந்து கொள்ளக் கடினம் இல்லாத காரணங்களினால், உலகம் முழுவதும் இந்தத் தேர்தலின் முடிவு ஆழ்ந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது; உண்மையில் அமெரிக்காவிற்குள் இருப்பதைவிட வெளி உலகம் கூடுதலான ஆர்வத்தைக் காட்டுகிறது எனக் கூறலாம். அமெரிக்கா ஓர் ஆபத்தான நாடு, தங்களுடைய உலகந்தழுவிய இலக்குகளை அடைவதற்கு எதையும் செய்யத் தயாரயுள்ள, கருணையற்ற, பொறுப்பற்ற இராணுவ வெறியர்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. நான் வாதிடப் போகும் கருத்து இதுவல்ல. கடந்த வாரத்தில், நியூ யோர்க் நகரில் நடந்த ஒன்றுகூடலில் குடியரசுக் கட்சியினர் ஜோர்ஜ் டபுள்யு. புஷ்ஷை மீண்டும் தங்கள் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்தமை, அமெரிக்காவில் ஒரு முதலாளித்துவ ஜனநாயகக் கட்சி தன் மாநாட்டை இயல்பாகக் கொண்டிருந்தது என்பதை விட நூரெம்பர்க்கில் நாஜிக்கட்சி தின அணிவகுப்பைத்தான் பெரிதும் ஒத்திருந்தது. மாநாட்டிற்கு வெளியே, நியூ யோர்க் தெருக்களில், அரசியல் எதிர்ப்புக்களை தடுக்கவும், முறிக்கவும், ஒழுங்கு செய்யப்பட்ட போலீசாரின் வலைவீச்சில் கிட்டத்தட்ட 2,000 பேர் விரட்டித்தள்ளப்பட்டு, கைதிகளாக சிக்குண்டனர். மாநாட்டு அரங்கிற்குள், ஒரு பிற்போக்கான கூட்டம், துணை ஜனாதிபதி டிக் செனி போன்றவர்களின் பாசிச-முறையிலான உரைகளை பெரும் களிப்புடன் ஆர்ப்பரித்து வரவேற்றனர்; ஒருகாலத்திலும், வருங்காலத்திலும் ஹாலிபர்டனுக்கு துணையாளாக இருக்கும், டிக் செனி, இப்பொழுது அமெரிக்கச் செய்தி ஊடகம் ஒன்றும் கூறாத, இரகசிய அரசாங்கத்திற்கு தலைமை தாங்குபவர் என்பது அறியப்பட வேண்டும்; ஜோர்ஜியாவின் செனட்டர் ஜெல் மில்லர், ஒரு ஜனநாயகக் கட்சி வாதியாயினும், ஜோர்ஜ் புஷ் மறுதேர்தலை இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ ஆதரிக்கும் ஜனநாயகக்கட்சிப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக விரோத, அதிகார கர்வமுடைய, இராணுவவெறியுடைய, ஏகாதிபத்திய நோக்கைக் கொண்டிருந்த தன்மையுடைய மில்லருடைய உரையில்தான் ஆளும் செல்வந்தத் தட்டிற்குள்ளே இருந்த ஆணவத்தில் மிகத் துல்லியமான வெளிப்பாட்டை காணமுடிந்தது. "படையினர்தான், நமக்கு செய்தி ஊடகத்தின் சுதந்திரத்தை கொடுத்துள்ளவர், செய்தியாளர் அல்ல. படையினர்தான் நமக்குப் பேச்சு சுதந்திரத்தை கொடுத்துள்ளவர், கவிஞர் அல்ல" என்று அவர் கூறினார். இந்த அறிவிப்பில் உள்ள அபத்தத்தை நம்முடைய கவனத்திற்கு ஊடகம் கொண்டுவரவில்லை; இது அமெரிக்க அரசியல் அமைப்பு, அதன் வளர்ச்சி ஆகியவை, கொடுத்துள்ள சட்டக் கோட்பாட்டிற்கு முரணானது என்பது மட்டுமின்றி, நாட்டின் உண்மை வரலாற்றுக்கும் எதிரிடையான கருத்தாகும். ஒரு வலதுசாரி அரசியல் கிறுக்கருடைய உளறல்கள் என்று மட்டும் மில்லருடைய கருத்துக்களை உதறிவிட முடியாது; ஏனென்றால் கடந்த மூன்று ஆண்டுகளாக, இராணுவ நீதிமன்றங்களில் சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகள், நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படும் உரிமை உட்பட, பறித்துக் கொண்டிருப்பதை, அரசாங்கம் சட்ட நெறியாக்கிவிடுவதற்கு உறுதியுடன் செயல்பட்டு வருவதைக் கண்டு வருகிறது. இது குடியரசுக் கட்சி மாநாட்டில் மில்லர் கூறிய இன்னொரு அறிக்கையை என்னுடைய நினைவிற்கு கொண்டு வருகிறது. "நம்முடைய படையினர் வெளிநாடுகளுக்கு சுதந்திரம் வாங்கித் தருபவர்கள், உள்நாட்டில் அதைப் பாதுகாப்பவர்கள் என்று நம்பாதவர் எவரும் இந்த நாட்டின் தலைமை தளபதியாகலாம் என்று நினைக்கக் கூட துணிவு கொள்ளக்கூடாது." அமெரிக்க அரசியலமைப்பின் பொருள் உரையையும், அதை இயற்றியவர்களுடைய உட்கருத்தையும் இந்த அறிவிப்பு பொய்மை ஆக்கியுள்ளது. ஆனால் மில்லருடைய அறிக்கை முதலில் வெளிவந்ததோ அல்லது விதிவிலக்கோ அல்ல. அரசியல் வாதிகளும், செய்தி ஊடகத்தினரும் அடிக்கடி போடும் கூச்சல்கள், நாட்டின் "தலைமைத் தளபதி" ஜனாதிபதி என்பது, மக்களை திசைவிலகச்செய்து, அவர்களுடைய இயல்பான ஜனநாயக உள்ளுணர்வுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, இராணுவ போலீஸ் சர்வாதிகாரப் போக்கிற்கு பிறழ்வதை சட்ட நெறியாக மாற்ற முற்படுகின்றன. அமெரிக்க அரசியல் அமைப்பு விதி II, பிரிவு 2, உட்பிரிவு 1 ன்படி, "அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்காவின் தரைப்படை, கடற்படை ஆகியவை மற்றும், பல மாநில இராணுவங்கள் அமெரிக்கப் பணிக்காக பயன்படுத்தப்படும்போதும், தலைமைத் தளபதியாக இருப்பார். ... " இந்த உள்விதியில் தெளிவற்ற தன்மை ஏதும் இல்லை. ஜனாதிபதி, நாட்டிற்கு தலைமைத் தளபதி அல்ல, ஆனால் இராணுவத்திற்கு தலைமைத் தளபதி ஆவார். இவர் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மை நடுவர், அதனுடைய மட்டில்லா தலைவர் அல்ல. ஜனாதிபதியின் துணைப் பட்டத்தின் சரியான பயன்பாடு இராணுவத்தின் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட சாதாரணக் குடிமக்களின் ஆதிக்கத்தை அடிக்கோடிடுகின்றதே அன்றி, அரசாங்கத்தின் சிவிலியன் பிரிவின்மீது இராணுவத்தின் ஆதிக்கத்தை அல்ல. மில்லருடைய பேச்சு, எந்த அளவிற்கு ஜனநாயகம் பற்றிய அடிப்படைக் கருத்துக்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு முற்றிலும் எதிரிடையாகத் தெரிகின்றன என்பதற்கு பல உதாரணங்களில் இது ஒன்றாகும். நாம் வெறும் புத்திஜீவித நிலையில் இழிவகை ஏற்பட்டுள்ளதைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்கவில்லை. தங்கு தடையின்றி அமெரிக்க மக்களின் ஒரு மிகச் சிறிய பகுதியினரிடையே செல்வக் குவிப்பு ஏற்பட்டுள்ள நிலை, தவிர்க்க முடியாத வகையில் முதலாளித்துவ ஆட்சி தளம் கொண்டிருக்கும் உண்மையான சமுக அடித்தளம் குறுகிக்கொண்டு செல்லும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மக்களின் பரந்த தட்டுக்களில் இருந்து பெரிதும் தனித்து அதற்கு வெளியே இருக்கும் ஒரு புதிய அடித்தளத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் வர்க்கம் உள்ளது. இதுதான் விரும்பிச் சேருவோர் இராணுவம் (Volunteer Army) என்பதின் பங்கு; இதற்கு துணையாக கூடுதலான ஒப்பந்தமுறை கொலையாளிகளும், சித்திரவதை செய்வோரும், இராணுவத்தால் கூலிக்கு அமர்த்தப்பட்டு ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அடக்குமுறைச் சக்திகளுக்கு உறுதுணையாக இருக்கின்றன. ஈராக்கில் நகர்ப்புறப் போரில் பெற்ற அனுபவம், அமெரிக்க படையினர் அங்கு பழகி விட்டு, சில நிகழ்வுகளில் ஓரளவு சாதாரண மக்களை பெரும் அளவு கொன்று குவிப்பதில் சுவை பெறுவது கூட, ஆளும்தட்டு அதிகரித்தளவில் அமெரிக்காவில் "சட்டம், ஒழுங்கைப்" பராமரிக்க நம்பியிருக்க வேண்டிய ஒரு ஆபத்தான சமூகப் பிரிவைத் தோற்றுவித்திருக்கிறது. சிட்னியில் இந்த அரங்கத்தில் நான்கு ஆண்டுகளுக்கும் முன்னர் நான் நவம்பர் 2000 தேர்தல் முடிந்த உடனே பேசியதை உங்களில் சிலர் நினைவு வைத்திருக்கக் கூடும். அன்று டிசம்பர் 3ம் தேதி; தேர்தலின் முடிவுகள் இன்னும் தெரிந்திராத நிலை. எந்த அளவிற்கு மரபு முறையிலான முதலாளித்துவ ஜனநாயக வடிவமைப்புக்களின் பால் உறுதித்தன்மை இன்னமும் உள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்று அப்பொழுது நான் கூறினேன். இரண்டு வாரங்களுக்குப் பின்னர், தலைமை நீதிமன்றம், பூசலுக்கு உட்பட்டிருந்த புளோரிடா வாக்குகள் எண்ணப்படுதலைத் தடுத்து நிறுத்தி, ஜோர்ஷ் டபுள்யூ. புஷ்ஷை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிந்தெடுத்தது. அந்த நிகழ்வு அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். அதன் உலகளாவிய தாக்கங்கள் அதன் பின்னர் தெளிவாகியுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள சம்பவங்கள் அமெரிக்கா பற்றிய உலகப் பார்வையை ஆழ்ந்த மாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளன. அமெரிக்க சமுதாயத்தை ரோசா வண்ணப் பூச்சுக் கண்ணாடிகளைக் கொண்டு பார்க்க விருப்பமற்றோர்களுக்கும்கூட, வாஷிங்டனுடைய முடிவிலா ஜனநாயக, நன்மையளிக்கும் உயர்சிந்தனைகளை விமர்சனமற்று ஏற்க இயலாது என்று அறிந்தவர்களுக்கும் கூட, சமீபத்திய நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளன. ஆப்கானிய, ஈராக்கிய படையெடுப்புக்கள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் காணப்படாத வகையில் தடையற்ற ஏகாதிபத்திப் போக்கிற்கு சான்றுகளைக் கொடுத்துள்ளன. அபு கிறைப் சிறையில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் புலப்படுத்தியுள்ள பிறரைத் துன்புறுத்துவதில் மகிழ்ச்சி காணும் இயல்பைக் குறிப்பதுடன், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் காட்டுமிராண்டித்தனம், கொள்ளைமுறையின் சாரத்தை ஒரு முழு தலைமுறைக்கும் விளக்குவதாக உள்ளன. வாழ்வில் பொதுவாக உள்ளது போலவே, அரசியலிலும், தீவிரமான, கடினமான பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வுகளைக் காணலாம் என்ற இயல்பான நம்பிக்கையுணர்வை மக்கள் கொண்டிருக்கின்றனர். ஜோன் கெர்ரி, அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பெரும் அடிப்படை மாறுதல் இல்லையென்றாலும், ஒட்டுமொத்த அரசியல் சூழ்நிலையில் பொதுவான முன்னேற்றம் சற்று இருக்கும் என்ற முறையீட்டின் தளம் இதில்தான் உள்ளது. இதை நம்ப விரும்புவர்கள், இன்றைய அமெரிக்கக் கொள்கை வெள்ளை மாளிகையில் இருப்பவருடைய தனிப்பட்ட குணநலன்கள் மூலம் விளக்கப்பட முடியும் என்ற கருத்துருவில் இருந்து அவ்வாறு நினைக்கின்றனர். இத்தகைய கருத்துரு, ஒரு அறியாமை மிக்க மதிப்பு ஏதுமற்ற புஷ்ஷை ஒரு உலக வரலாற்று மனிதர் என்பது போன்ற ஒரு வகைக்கு உயர்த்திவிடும். ஆனால், "வரலாற்றின் தீய புஷ் தத்துவம்" நம்முடைய நாட்களின் பெரிய பிரச்சினைகளை தீர்ப்பது ஒரு புறம் இருக்க, அவற்றைப் புரிந்து கொள்ளுவதற்கு கூட உதவாது. கோழைத்தனமும், வெற்றுத்தனமும் நிறைந்த அவருடைய பிரச்சாரத்தின் தன்மையையும் மீறி, கெர்ரி இந்தத் தேர்தலில் வெற்றியடைந்தாலும்கூட, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழிக்கும் தன்மையுடைய, காட்டுமிராண்டித்தனமான வளைவரை பாதையை எந்தக் குறிப்பிடத்தக்க வகையிலும் அது மாற்றப்போவது இல்லை. ஈராக்கிய ஆக்கிரமிப்பை அது ஒரு முடிவிற்குக் கொண்டுவராது. இன்னும் பெருகிய இடங்களில், கூடுதலான அழிவுகள் தரும் போர்கள் அண்மையில் ஏற்படும் அபாயத்தையும் அந்த முடிவு குறைக்கப் போவதில்லை. குற்றஞ்சார்ந்த குணநலன்களுடைய புஷ் மற்றும் அவருடைய சிறுகுழுவினரால் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை வரையறுக்கப்படுகிறது என்றே வைத்துக் கொண்டாலும் --அதுவும் உறுதியாக-- இந்த அகநிலைக் காரணி இரண்டாந்தர முக்கியத்துவத்தைத்தான் கொண்டிருக்கிறது. மொத்தத்தில், புஷ்ஷின் கொள்கைகள் மிகப் பரந்த அளவில் அமெரிக்க அரசியல், சமுதாய நடைமுறைக்குள் ஆதரவு பெற்றுள்ளது என்ற உண்மை, அரசாங்கக் கொள்கை வகுப்பதில் ஜனாதிபதியின் ஆளுமை ஒழுங்கீனங்கள் சம்பந்தப்பட்டிருப்பதற்கும் அப்பால் கூடுதலான, கணிசமான காரணிகள் இருக்கின்றன என்பதை நிருபிக்கிறது. ஈராக்கின்மீதான படையெடுப்பும் ஆக்கிரமிப்பும், அமெரிக்க ஜனநாயகத்தின் மாபெரும் தோல்வியைப் பிரதிநிதிந்நுவம் செய்கின்றன. உலகில் இப்பொழுதும் அனைவரும் அறிந்துள்ளது போல், இப்போர் முற்றிலும் பொய்களை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது: 1) அதாவது ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன; 2) சதாம் ஹுசைனின் ஆட்சி அல் கொய்தாவுடன் தொடர்பு கொண்டுள்ளது, அதன் உட்குறிப்பாக ஏதேனும் ஒரு முறையில் செப்டம்பர் 11 தாக்குதல்களுடன் தொடர்பு உடையது; மற்றும் 3) அமெரிக்கா, ஈராக்கிற்கு ஜனநாயகத்தை கொண்டு வர முற்படுகிறது. மார்ச் 2003 படையெடுப்பிற்கு முன்பு, இந்தக் கூற்றுக்கள் எவையும் அரசியல் நடைமுறை அல்லது செய்தி ஊடகத்தால் தீவிர ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. இந்த விடுபடல் தற்செயல் நிகழ்வு அல்ல. புஷ் நிர்வாகத்தின் போர் ஊக்கக் கொள்கைகள், ஆளும் செல்வந்தத்தட்டு மற்றும் இரண்டு பெரிய கட்சிகளிடையேயும் பரந்த அளவில் ஆதரவைக் கொண்டிருந்த நிலையில், அரசாங்கம் போருக்குச் செல்லுவதற்காக முன்வைத்த காரணங்களை ஆழ்ந்து ஆராயவேண்டும் என்ற ஆர்வம் எவருக்கும் இல்லை. இந்த அரசியல் உண்மை, பின்னர் பொய்கள் அம்பலமான பிறகு ஈராக்கிய ஆக்கிரமிப்பைத் தொடர்வதற்கு, ஆளும் செல்வந்தத்தட்டின் அரசியல் ஆதரவுத் தளத்தில் எந்தக் குறிப்பிடத்தக்க வகையிலும் புரையோடிய தன்மை காணப்படவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. செனட்டர் கெர்ரி சமீபத்திய தனது அறிவிப்பில், ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று தெரிந்திருந்தாலும், தான் அக்டோபர் 2002 இழிவான செனட் தீர்மானமான ஈராக்கிற்கு எதிராகப் படைகளைப் பயன்படுத்த இசைவளித்த தீர்மானத்திற்குத் தான் வாக்களித்திருப்பேன் என்று கூறியுள்ளமை, புஷ் நிர்வாகத்தின் கொள்கையானது அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் மிதமான மற்றும் கட்டுப்படுத்தப்படக்கூடிய போக்கில் இருந்து ஒரு வகை விலகிச்செல்லலைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என்ற வாதத்தை பலமான வகையில் தவறென மறுக்கிறது. தன்னுடைய கொள்கைகளை நியாயப்படுத்தும் முறையில், புஷ் நிர்வாகம் செப்டம்பர் 11, 2001 பூதத்தை கணக்கிலடங்கா வகையில் பயன்படுத்தி வருகிறது. உண்மையில் அமெரிக்க அரசியலின் தற்கால புராணத்தில், இத்தேதி மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. 9/11க்குப் பின்னர், "அனைத்தும் மாறிவிட்டன" என்ற சொற்றொடர்தான் புழக்கத்தில் உள்ளது. உலகறிந்த உண்மையென பலரும் ஏற்றுக்கொள்ளும் கருத்துக்களுள் ஒன்றான இது மிகவும் கவனமான ஆய்வில் நின்றுபிடிக்க முடியாமல் போகும். அமெரிக்காவின் சர்வதேச மூலோபாயத்தை உறுதிப்படுத்துவதில் 9/11 நிகழ்வுகள் எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையை ஒரளவு உன்னிப்பாக கவனிப்போர்கூட, செப்டம்பர் 11, 2001 க்கு முன்பு, இன்னும் சொல்லப்போனால் புஷ் ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஜனவரி 2001 க்கும் முன்பே, ஆப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும் அமெரிக்கப் படையெடுப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்திருப்பர். முதல் வளைகுடாப் போரின் முடிவிற்குப்பின், அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் இயக்கம் முழுவதும் ஈராக்கின் மீது போரை மீண்டும் தொடக்குவதை நியாயப்படுத்தும் நோக்கத்தில்தான் இருந்தது. இதேபோன்று, மத்திய ஆசியாவின் புவிசார் அரசியல், பொருளாதார முக்கியத்துவத்தைக் கணக்கில் கொண்டுதான் 1990 கள் முழுவதும் அமெரிக்கக் கொள்கை வரையறுப்போர் ஆப்கானிஸ்தானின் மீதான படையெடுப்பை எதிர்நோக்கியிருந்தனர். 1997ல் (The Grand Chessboard) பெரும் சதுரங்கப்பலகை, என்ற தலைப்புடைய புத்தகத்தை எழுதியது வேறு யாருமல்ல, ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டருடைய முந்தைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான Zbigniew Brzezinski தான், மத்திய ஆசியாவில் பெரும் ஆதிக்கத்தை அடைவதில்தான் இருபத்தியோராம் நூற்றாண்டில் அமெரிக்காவின் உலக ஆதிக்க வேட்கை அமையும் என்று அதில் அவர் வாதிட்டுள்ளார். மத்திய ஆசியாவில் நீண்ட கால அமெரிக்கத் தலையீடு கணிசமான சமுதாயச் செலவினங்களை அமெரிக்க மக்கள்மீது சுமத்தும் என்பதை ஏற்றுக் கொண்ட அவர், "மக்கள் உள்நாட்டு நலன்களின் பொதுத் தன்மைக்கு திடீரென அச்சுறுத்தல் அல்லது சவால் வரும்" என்பதை ஏற்றால் ஒழிய உள்நாட்டு ஆதரவு அதற்கு இருக்காது என்றும் எச்சரித்தார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகள் மாற்று முறையில் அமைய செப்டம்பர் 11 உதவவில்லை. மாறாக, அந்நிகழ்வு ஜிம்மி கார்ட்டர் காலத்திற்குப் பின்சென்று அமெரிக்க நிர்வாகம் மேற்கொண்டு, தொடர்ந்திருந்த புவியியல் உத்திகளின் பேரவாவை அடைவதற்கு ஒரு சாக்குப் போக்கைக் கொடுத்தது. ஒருவேளை மறக்கப்பட்டு விடலாம் என்பதால், புஷ் நிர்வாகம் மேற்கொண்ட படையெடுப்பிற்கான புவியியல் - மூலோபாய நோக்கங்களை எவ்வாறு ஜனாதிபதி பில் கிளின்டன் 1999ல் சேர்பியாவிற்கு எதிரான போரில் மேற்கொண்டார் என்பது அடிக்கோடிட்டுக் காட்டுவதால், அவற்றை இங்கு மீண்டும் கூறுவது உகந்ததேயாகும். சோவியத் ஒன்றியம் 1991ல் சிதைந்த பின்னர் பதவியைக் கொண்டிருந்த மூன்று ஜனாதிபதிகளின் (முதலாம் புஷ், கிளின்டன், இரண்டாம் புஷ்) நிர்வாகங்களின் முக்கிய நோக்கம், சோவியத்தின் பொறிவு கொடுத்துள்ள வரலாற்றுச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, உலக விவகாரங்களில் எதிர்க்க முடியாத வகையில் அமெரிக்காவின் மேலாதிக்க நிலையை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதுதான். 1992ம் ஆண்டிலேயே, அமெரிக்க இராணுவம் ஒரு புதிய மூலோபாய ஆவணத்தை வெளியிட்டு, அதில் அமெரிக்க கொள்கையின் இலக்கு எந்த நாடும் உலக விஷயங்களில் அமெரிக்காவின் மேலாதிக்க நிலையை பொருளாதார, இராணுவ முறையில் சவால்விடாமல் தடுத்து நிறுத்திவிடவேண்டும் என்று பிரகடனப்படுத்தியது. இந்த உலக மூலோபாயப் பின்னணியின் வரம்பிற்குள், மத்திய ஆசியா, மத்திய கிழக்கு இவற்றின் மீதான ஆதிக்கம், அவற்றின் பரந்த எண்ணெய், எரிவாயு இவற்றுடன், தேவை என்பது முழுமையான கட்டாயம் என்பதாயிற்று. அமெரிக்காவை பொறுத்த வரையில், உலகில் தெரிந்துள்ள அனைத்து இருப்புக்களிலும் இந்த இருப்புக்களின்மீது தடையற்ற தொடர்பும் கட்டுப்பாடும், இதன் உள்நாட்டு ஆற்றல் தேவையை மட்டும் நிறைவு செய்தால் போதும் என்பது மட்டும் ஒரு நிர்ப்பந்தமாக இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் உலகெங்கிலும் குறைந்து நெருக்கடியை ஏற்படுத்தவுள்ளன என்ற கணிப்பில், இந்த இருப்புக்கள்மீதான பங்கீட்டு முறை, ஒதுக்கும் முறை இவற்றின் மீதான ஆதிக்கம் அமெரிக்காவிற்கு இப்பொழுதுள்ள, இனி வரும் திறனுள்ள போட்டியாளர்களின் விதிமீது மரணப்பிடியைக் கொடுக்கும். உலக அரங்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவி அதைக் கட்டிக்காத்திடல் என்ற, இந்த அடிப்படை மூலோபாய நோக்கத்தைப் பொறுத்தவரையில், ஜோர்ஜ் புஷ்ஷிற்கும், ஜோன் கெர்ரிக்கும் இடையே அடிப்படை வேறுபாடுகள் எதுவும் குறிப்பிடத்தக்க வகையில் கிடையாது. வேறுபாடுகள் இருக்கும் அளவில், எந்த அளவிற்கு மேலாதிக்கத்தை தொடர்வதற்கு உதவும் என்ற வகையில், அவை சர்வதேச ஏகாதிபத்திய, பலரும் பங்கேற்கும் வடிவமைப்பிற்குள் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதிலான வகையின் தந்திரோபாய முறையில்தான் முக்கியமாக உள்ளன. ஆனால், புஷ்ஷின் வெளிநாட்டுக் கொள்கையை செலுத்தும் முறையில் குறைகாண்போர் கூட, நிர்வாகத்தில் ஏற்படும் மாற்றம் இதன் ஒருதலைப்பட்ச அடிப்படையை மாற்றாது என்பதை உணர்ந்துள்ளனர். பேராசிரியர் ஜோன் ஐகென்பெரி எழுதியுள்ளார்: "குளிர் யுத்தம் முடிந்த நிலையிலும், பூகோள அரசியல் முறையில் சவால் விடுவோர் இல்லாத நிலையிலும், அமெரிக்கா இப்பொழுது ஒருதலைப்பட்ச வாதத்தை ஆதரிப்போரின் கருத்தின்படி, தீவிரச் செலவினங்களுக்கு உட்படாமல் தனியே செயலாற்ற முடியும். அவர்கள் கருத்து சரியெனக் கொண்டால், சர்வதேச ஒழுங்கு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தின் ஆரம்பக் கட்டங்களில் உள்ளது; முந்தைய சகாப்தங்களின் ஒருதலைப்பட்ச தடைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் தொடர்ந்த உறுதியான முயற்சியில் அமெரிக்கா அத்தகைய நிலையில் உள்ளது. "யார் ஜனாதிபதி, எந்தக் கட்சி அரசாங்கத்தை நடத்துகிறது என்பது ஒரு பொருட்டல்ல: அமெரிக்கா தன்னுடைய அதிகாரத்தை இன்னும் நேரடியாக, சர்வதேச விதிகள், அமைப்புக்கள், கூட்டணிகள் இவற்றின் தலையீடு, மத்தியஸ்தம் குறைந்த நிலையில் இருக்கும். இதன் விளைவு, மேலாதிக்கம் நிறைந்த, அதிகார தளத்தைக் கொண்டுள்ள சர்வதேச ஒழுங்கு எனப் போகும். உலகின் மற்ற நாடுகள் குறைகூறும்; ஆனால் மற்ற நாடுகள் அமெரிக்காவின் பெருகிவரும் அதன் ஒருதலைப்பட்சப் போக்கை மாற்றுவதற்கும், அதற்கான செலவினங்களை அதன் மீது சுமத்துவதற்கும் திறனற்றும், விருப்பமற்றும் போய்விடும்" (வலியுறுத்தல் காட்டப் பட்டுள்ளது). 1 [1] இந்த முடிவரை சந்தேகத்திற்கிடமில்லாமல் சரியானதேயாகும்; ஏனெனில் புஷ் நிர்வாகத்தின் ஒருதலைப்பட்ச முறையைப்பற்றி ஆழ்ந்த குறைபாடுகளைக் கூறாவிடினும், கெர்ரி தொடர்ந்து தன்னுடைய நிர்வாகம் "தேசிய நலன்களுக்கு" உகந்தவை என்றால் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்கத்தயங்காது என்று தொடர்ந்து வலியுறுத்தித்தான் வருகிறார். ஒருதலைப்பட்சப் போக்கு விரைவாவதற்கு ஐகென்பெரி புலம்புகிறார்; ஆனால் இதன் வளர்ச்சிக்கான காரணத்தை அவர் விளக்கவில்லை. மற்ற தேசிய நாடுகளையெல்லாம் விட அமெரிக்காவின் மகத்தான இராணுவ உயர்வைப் பலமுறையும் அவர் குறிப்பிடுகிறார்; மேலும் இந்த புவிசார் அரசியல் உண்மை அமெரிக்காவைத் தேவையானால், தான் தொடரும் கொள்கைகளுக்கு எத்தகைய சர்வதேச எதிர்ப்பு நேர்ந்தாலும் அவற்றைப் புறக்கணிக்குமாறு செய்துள்ளது என்று கூறுகிறார். ஆனால் இந்த விளக்கம் போதுமானது அல்ல. இரண்டாம் உலகப்போருக்குப் பின் உடனடியாக, அமெரிக்காவின் இராணுவப் பொருளாதார மேன்மை அதன் உச்சக் கட்டத்தில் இருந்தபோது, ட்ரூமன் நிர்வாகம் சிக்கல் வாய்ந்த பலரின் பங்கேற்கும் சர்வதேச அமைப்புக்களை நிறுவுவதில் முனைந்து நின்றிருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த வேளையில், சர்வதேச முதலாளித்துவ அமைப்பில் அமெரிக்காவின் ஆதிக்க நிலைமை இராணுவ சக்தியைவிட, மிக அதிகமான அளவிற்கு, அக்காலக்கட்டத்தில் அது பெற்றிருந்த சவாலில்லாத பொருளாதார உயர்வினால்தான் உறுதி செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க அதிகாரத்தின் மிக உயர்ந்த அடையாளம் அணுகுண்டு என்றில்லாமல், டாலர் என்றுதான் இருந்தது. சர்வதேச நிதி, வணிகத்தின் முழு அமைப்பு முறையும் டாலரை நம்பி இருந்தது; அது உலக இருப்பு நாணயமாகச் செயலாற்றியது; எந்த நேரத்திலும் $35 க்கு ஒரு அவுன்ஸ் என்று தங்கமாக மாற்றிக் கொள்ளப்படலாம் என்ற நிலை இருந்தது. அமெரிக்காவின் மகத்தான நிதி, தொழிலியல் சக்தி, உலகப் பொருளாதாரம் பரந்து விரிவடைவதற்கு அடிப்படை ஆதாரத்தை அளித்திருந்தது. இன்றைய உலக நிலை, இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்ததை விட முற்றிலும் பரந்து மாறுபட்டுள்ளதாகும். கடந்த 60 ஆண்டுகளில், அமெரிக்காவின் உலகப் பொருளாதார நிலைமை வியத்தகு அளவில் குன்றியுள்ளது. 1971ம் ஆண்டுகூட, அதன் முக்கிய ஐரோப்பிய, ஜப்பானியப் போட்டியாளர்களுக்கெதிரான, ஒப்புமையில் அதன் வலிமை குன்றிய நிலை பிரெட்டன் ஊட்ஸ் முறையையும் அதன் முக்கிய அச்சாக இருந்த டாலர்-தங்க மாற்றுவீதத்தையும் சரிவிற்குட்படுத்தியது. இதன் பின்னர் வந்த தசாப்தங்களில் அமெரிக்கா உலகிற்குக் கடன் வழங்கும் நாடு என்ற நிலையில் இருந்து உலகத்தின் மிகப் பெரிய கடனாளி என்ற நிலைக்கு மாற்றப்பட்டு விட்டது. 60 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க தொழில், நிதித் துறைகளின் சக்தி உலக முதலாளித்துவ அமைப்பின் ஒழுங்கை மறுசீரமைக்கும் எரிபொருளாக இருந்த நிலை, பெருமந்தத்தாலும் போரினாலும் சிதையுண்டது. இன்று அமெரிக்க நிதி அமைப்புமுறை நிலைத்து நிற்பது, அமெரிக்காவின் நடப்புக் கணக்கின் பெரும் தள்ளாடும் கணக்குப் பற்றாக்குறையைச் சரி செய்ய வெளிநாடுகள், முதலீட்டாளர்கள் நிதிஉதவும் விருப்பத்தில்தான் அது தங்கி உள்ளது. இப்பொழுது அமெரிக்கா, வெகு வேகமாக விரிவடையும் நடப்புக் கணக்குப் பற்றாக் குறையை அகற்றுவதற்கு, ஆண்டு ஒன்றுக்குக் கிட்டத்தட்ட $540 பில்லியனைக் கடன் வாங்க வேண்டிய நிலைமையில் உள்ளது. இது 2004ம் ஆண்டு முதல் கால்பகுதியில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 5.4 சதவிகிதம் ஆகும்; இது 1987ல் டாலர் தன்னுடைய மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை இழந்து, பங்குச் சந்தை சரிந்ததை அடுத்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதுகாறும் உயர்ந்திருந்த 3.5 சதவிகிதத்தைவிட மிக அதிகமாகும். முதலாளித்துவப் பொருளாதார வல்லுனர்களிடையே, வணிகச் சமன்பாட்டில் எதிர்மறைக் கூறுபாடாக உள்ள, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பற்றி ஒரு பொது உடன்பாட்டுக் கருத்து உண்டு; அதன்படி இது பெரும் நெருக்கடியை நோக்கி நிதி நிலைமையை இட்டுச்செல்லும். டாலர் மதிப்பு கணிசமாகக் குறைதல், அதையொட்டிய சர்வதேச உறுதியற்ற விளைவுகள் தவிர்க்கமுடியாததும், தேவையானதுமாகும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். வெளியுறவுக்குழுவின் தலைவரான பீட்டர் ஜி. பீட்டர்சன்னின் கருத்தாவது: "அடுத்த முறை டாலர் சரிவு ஏற்பட்டால், அது 'உண்மை' பொருளாதாரத்தில் கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தி, நுகர்வோர், முதலீடு செய்பவர் நம்பிக்கையில் பெரும் அவநம்பிக்கையை நிலைப்படுத்தி, கடும் குறைப்பையும் கொண்டு, இறுதியில் உலகைப் பெருமந்த நிலையில் தள்ளிவிடும். "கொள்கை வரையறுக்கும் நிபுணர்கள், நிதிய வணிகர்கள், மற்றும் பொருளாதார வல்லுனர்கள் என்று இந்த ஆசிரியர் (பீட்டர்சன்) பேட்டி கண்ட எவரும் தற்போதைய அமெரிக்க நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இப்பொழுதைய விகிதத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தாக்குப் பிடித்து நிற்கும் என்ற நம்பிக்கையைக் கொள்ளவில்லை. ஒரு நெருக்கடிக்கான ஆபத்து உண்மையில் இருப்பதாகத்தான் பலரும் கருதுகின்றனர். முன்னாள் கூட்டரசு இருப்பு நிதித் தலைவரான போல் வோல்கர், இத்தகைய நிலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாகும் வாய்ப்பு 75 சதவிகிதத்தை ஒட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். கருவூலச் செயலாளரான றொபர்ட் ரூபின் "கணக்கு முடியும் நாள் தீவிரமாகி விட்டது" என்று பேசுகிறார். அத்தகைய நெருக்கடியை எது தூண்டக் கூடும்? கிட்டத்தட்ட அனைத்துமேதான்: ஒரு பயங்கரவாதச் செயல், வோல்ஸ்ரீட் இல் ஒரு கெட்ட நாள், ஒர் ஏமாற்றமளிக்கும் வேலைகள் பற்றிய அறிவிப்பு அல்லது ஒரு மத்திய வங்கியாளரின் சீற்றமான கருத்துரைகூட என்ற நிலை உள்ளது." [2] பைனான்சியல் டைம்ஸின் புகழ்பெற்ற பொருளாதாரப் பகுப்பாய்வாளரான மார்ட்டின் வொல்ப், இந்நிலையை இன்னும் வெளிப்படையாக விவரிக்கிறார்: "அழிவின் வசதியான பாதையில் இப்பொழுது அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறது. எப்பொழுதும் உயர்ந்து கொண்டிருக்கும் பற்றாக்குறை, கடன், வெளிநாட்டிற்குக் கொடுக்க வேண்டியது, அதன் நிதியம் சார்ந்தது என்று இரண்டும் போதாதென்று, நாட்டின் கடன் மதிப்பு அழியும் அபாயமும், அதன் நாணயம் தன் உலகப் பங்கில் அழியும் நிலையும் ஏற்பட்டுள்ளன. இதோடு இணைந்தது என்றில்லாமல், இந்நிலை அமெரிக்க பாதுகாப்பு வாதத்தில் கற்பனை பண்ணவியலா அளவு அதிகரிப்பை உருவாக்கும். இதையும் விட மோசமானது என்னவென்றால், இந்த முறை கூடுதலாக நீடித்தால், டாலருக்கும் உள்நாட்டு உண்மைச் செலவின தரத்திற்கும் வரக்கூடிய இறுதி அதிர்ச்சி இன்னும் பெரிதாக இருக்கும். இப்போக்குகள் மாறவில்லை என்றால், இப்பொழுதில் இருந்து 10 ஆண்டுகளில் அமெரிக்கா நிதியக் கடன்களையும், நிதியத் திருப்பிக் கொடுத்தல்களையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவிகிதத்திற்கு மேலாகக் கொண்டிருக்கும் தன்மை வந்துவிடும். தன்னுடைய பொருளாதார தலைவிதியின் மீது எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் நாடு போய்விடும்." [3] தன்னுடைய இராணுவத்தில் கூடுதலான நம்பிக்கையைக் கொண்டிருப்பது, உலகப் பொருளாதாரத்தில் சரிந்துகொண்டிருக்கும் தன் நிலைமையை அது உணர்ந்ததால் விளைந்த முக்கியமான காரணியாகும். ஆனால், புதிரான வகையில், அமெரிக்காவில் மிகத் தொலைவில் நடத்தப்படும் இராணுவச் செயற்பாடுகளின் செலவினங்கள், மற்றொரு பெரிய சுமையாக தேசியப் பொருளாதாரத்தில் இறங்கும். ஈராக்கில் நடைபெறும் போர் இதற்குத் தக்க உதாரணமாகும். அமெரிக்காவிற்கு, ஒரு வாரத்திற்கு இரண்டு படைப்பிரிவுகளை "உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக" ஆகும் செலவு ஒரு பில்லியன் டாலர்கள் ஆகும். ஓர் ஆண்டு முழுவதும் போரிடும் நிலையில் வைத்தால் அது நியூஸிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொகைக்குச் சமமாகும். [4] ஈராக் போருக்கு செலவழிக்கப்படும் தொகை, ஏற்கனவே மிக அதிகமான இராணுவச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏராளமான தொகையோடு சேர்க்கப்படாத கூடுல் செலவு ஆகும். சட்டமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகத்தின் சமீபத்திய கணக்கீட்டின்படி, புஷ் நிர்வாகம் அடுத்த தசாப்தத்தில் இராணுவ வகைச் செலவுகளுக்காக ஒதுக்கப்படும் தொகையை பெரிதும் குறைமதிப்பீடு செய்துள்ளதாக தெரிகிறது. இன்னும் கூடுதலான $1.1 டிரில்லியன் டாலர்கள் புதிய செலவினங்களுக்காக ஒதுக்கப்படவேண்டும். [5] அமெரிக்க இராணுவ வாதத்தினால் தோன்றியிருந்த நிதி நெருக்கடிகளைவிடக் கூடுதலான முக்கியத்துவம் வாய்ந்தது, ஏகாபத்திய நாடுகளுக்கு இடையேயும், ஏனைய மற்ற நாடுகளுக்கிடையேயும் வெடிக்கும் தன்மையுடன் கூடிய, உறுதித்தன்மையைக் குலைக்கும் தாக்கத்தை அது ஏற்படுத்தியது ஆகும். உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதல் புவிசார்- அரசியல் வெற்றிடத்தில் ஏற்பட்டுவிடவில்லை. அமெரிக்காவின் பேரவாக்கள் மற்ற நாடுகளுடைய முக்கிய நலன்கள்மீது பாதிப்பை ஏற்படுத்தும் அளவில், அவற்றை எதிர் கொள்ளுவதும், மோதலில் ஈடுபடுவதும் தவிர்க்க முடியாதவையாகி விட்டன. அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஈராக் போர் தொடக்கத்திற்கும் முன் ஏற்பட்ட பதில்குற்றச்சாட்டுக்கள், பொருள்சார் நலங்களின் மீதான பூசல்களைப் பிரதிபலித்தன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்தப் பூசல்கள் கடுமையான இராஜதந்திரமுறை வாக்குவாதங்களைளையும் விட அதிகமாகப் போகக்கூடும். இறுதியில் "பழைய ஐரோப்பா" உதட்டைக் கடித்துக் கொண்டு, அமெரிக்கா ஈராக்கின் மீது படையெடுப்பதை மிகிழ்வற்ற வகையில் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் தன்னுடைய எண்ணெய்க்கான புதிய இருப்புக்களைத் தொடருதலில் அமெரிக்கா, ஐரோப்பாவை ஆபிரிக்காவிலிருந்து அகற்றக் கருதும்போது இதேபோல் பார்த்துக்கொண்டிருக்குமா? அரசுத்துறை துணைச் செயலாளர் வால்டெர் கான்ஸ்டினர், ஜூலை 2002ல் நைஜீரிய வருகையின் போது, "ஆபிரிக்க எண்ணெய் எங்களுடைய மூலோபாய தேசிய நலன்களுக்கு முக்கியமானது" என்று அறிவித்தார். அமெரிக்காவின் ஆற்றல் துறைக் கொள்கைக்கு மிக முக்கியமானவை என்று ஆறு ஆபிரிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகளை, புஷ் நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது: நைஜீரியா, அங்கோலா, காபோன், காங்கோ குடியரசு, சாட் மற்றும் பூமத்தியரேகை கினியா என்பவையே அவை (இதில் கடைசி நாட்டிற்கு சதித் திட்டம் ஒன்றை, பிரிட்டனின் முன்னாள் புகழ்பெற்ற பிரதம மந்திரியின் மகனான சேர் மார்க் தாட்சரே தீட்டியிருந்தார்.) இப்பொழுது பாதுகாப்புத் துறைக்குள் புதிய ஆபிரிக்க ஆணையகம் நிறுவப்பட வேண்டும் என்றும் அது அந்தக் கண்டத்தில் அமெரிக்க இராணுவம் ஒருங்கிணைந்து செயல்படப் பொறுப்புக் கொள்ள வேண்டும் என்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. [6] பழைய ஏகாதிபத்தியப் போட்டி நாடுகளுடன் மோதல்கள் வரக்கூடிய திறன் ஒரு புறம் இருக்க, கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் தகாநிலைத் தலையீடு அப்பகுதியின் வருங்காலத்தில் பெரும் அக்கறைகள் கொண்ட ஈரான், இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் இராணுவப் போருக்கு மாறக்கூடிய பெருகிய அபாயத் தன்மை உள்ளது. வெள்ளை மாளிகை, அரசுத்துறை மற்றும் பென்டகனில் மனிதர்கள் மாறுவதால் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் கூறுபாடுகள் சில பாதிப்பிற்கு உட்படக் கூடும் என்று வைத்துக் கொள்ளுவோம். ஏதேனும் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு மற்ற ஏகாதிபத்திய நட்புநாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் கூடுதலான முயற்சியை கெர்ரி நிர்வாகம் கொள்ளக் கூடும். ஆனால் அத்தகைய வேறுபாடுகள் கொள்கையின் சாரத்தில் இல்லாமல், நடத்தும் முறையில்தான் இருக்கும். உலக முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பிற்குள், உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்பிற்கும் இடையே உள்ள முரண்பாடு சமாதான முறையில் நிர்வகிக்கப்பட முடியாது. அமெரிக்க முதலாளித்துவத்தின் வன்முறை, ஆக்கிரோஷம் சார்ந்த தன்மை, 1930 களிலும் 1940 களிலும் இருந்த ஜேர்மன் முதலாளித்துவத்தினது போலவே, ஏகாதிபத்திய அமைப்பின் அடிப்படை இயல்பான கொள்ளையிடும் தன்மையின் பெருத்த தீவிர வெளிப்பாடே ஆகும். 1940ம் ஆண்டு மே மாதம், ஹிட்லருடைய படைகள் பிரான்ஸ் முழுவதிலும் ஆக்கிரமித்த நிலையில், போரின் வெடிப்பு பற்றிக் கூறப்பட்ட எளிதான விளக்கங்களை லியோன் ட்ரொட்ஸ்கி நிராகரித்தார்: "இரண்டாம் ஏகாதிபத்தியப் போரான இந்தப் போர், ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. இந்த அல்லது அந்த சர்வாதிகாரியின் விருப்பத்தின் விளைவு அல்ல இது. இதைப்பற்றி நீண்ட காலம் முன்னரே முன்கூட்டிக் கூறப்பட்டுவிட்டது. மக்களை மயக்கும் வகையில் கூறப்படும் அதிகாரபூர்வ கட்டுக் கதைகளுக்கு மாறாக, வேலையின்மை, வாழ்க்கைச் செலவினங்களின் உயர்வு, பாசிசம், காலனித்துவ அடக்குமுறை போன்ற மற்ற சமுதாயத் தீமைகள் போலவே, போரின் முக்கிய காரணம் உற்பத்தி முறையில் தனியார் உடைமை இருப்பதும், இந்த அடிப்படையில் முதலாளித்துவ அரசாங்கம் தங்கி இருப்பதும்தான். ...சமுதாயத்தின் முக்கிய உற்பத்தி சக்திகள் நிதித் தொகுப்புக்களினால், அதாவது தனித்திருக்கும் முதலாளித்துவக் குழுக்களினால் கட்டுப்படுத்தப்படும் வரையிலும், தேசிய அரசு இந்தக் குழுக்களின் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கும் கருவிகளாகச் செயல்படும் வரையிலும், உலகச் சந்தைகள், மூலப் பொருட்களுக்கான ஆதாரங்கள், உலக ஆதிக்கம் ஆகியவற்றிற்கான போராட்டங்கள் தவிர்க்க முடியாமல் கட்டாயமாக மேலும் மேலும் அழிவுத் தன்மையைத்தான் கொள்ளும்." என்று அவர் எழுதினார். [7] எவ்வளவு பொருத்தமாகவும், உரிய நேரத்திற்கானதாகவும், முன்னறிதல் தன்மையும் உடைய சொற்களாக இன்றும் இவை உள்ளன! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை வடிவமைத்து உறுதி செய்யும் பரந்த, ஆற்றல் மிகுந்த பொருளாதரா சக்திகள் வாஷிங்டனில் வெறும் பணியாளர்கள் மாறுவதின் மூலம் பெரும் மாற்றத்தைப் பெற்று விடாது. புஷ்ஷிற்கும் கெர்ரிக்கும் இடையேயான விவாதத்தின் தன்மையான எவ்வாறு அமெரிக்காவின் உலக அபிலாஷைகளை சிறந்த முறையில் அடையலாம் என்பது, நாட்டின் செல்வத்தின் பெருந்தொகுப்பைக் குவித்துவைத்திருக்கும் அமெரிக்க சமுதாயத்தின் மிகச்சிறிய பகுதியான ஆளும் செல்வந்தத் தட்டிற்குள்ளே இடம்பெறும் ஒன்றாக இருக்கிறது. போருக்குப் பெரும்பாலும் எதிராக உள்ள மில்லியன் கணக்கான சாதாரண தொழிலாள வர்க்க அமெரிக்கர்களின் அக்கறைகள் இரண்டு ஏகாதிபத்திய கட்சிகளுடைய உத்தியோகப்பூர்வமான பிரச்சாரத்தில் உண்மையான வெளிப்பாட்டை சிறிதும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்க கொள்கையின் திசைவழி புஷ்ஷிற்குப் பதிலாக கெர்ரி வந்துவிட்டால் குறிப்பிடத்தக்கவாறு மாறும் என்று நினைப்பது, மிகப் பரிதாபமான பிரமைகளில் ஆழ்வதற்கு ஒப்பாகும். ஆனால் "இடது" என்று தங்களைக் கருதிக் கொண்டிருப்போரிடையே அத்தகைய பிரமை கொள்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகத் தெரியவில்லை. 1960 களிலும், 1970 களிலும் பிரிட்டனில் சர்வதேச மார்க்சிச குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தும், இப்பொழுதும் தன்னை ஒரு சோசலிஸ்ட் என்று அழைத்துக்கொள்ளும் திரு. டாரிக் அலி, கெர்ரிக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுவது இதற்கு ஓர் உதாரணமாகும். அரசியல் பகுப்பாய்வாளர் என்ற முறையில் திரு. அலியின் பின்னணி ஒன்றும் பெரும் ஊக்கத்தைத் தந்துவிடவில்லை. 1980 களின் கடைசிப் பகுதியில் சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்திற்கு பெரிய முன்னேற்றம் பெரஸ்துரோய்கா, கிளாஸ்நோஸ்ட் என்று உற்சாகத்துடன் வரவேற்றபோது, தன்னுடைய இக்கருத்தைப் பற்றி எழுதிய நூல் ஒன்றை, "நாடு முழுவதும் அவருடைய அரசியல் தைரியத்திற்காக பெரும் அடையாளமாக கொள்ளப்படுபவர்" எனப் புகழ்ந்து வேறுயாருக்கும்ல்ல, பொறிஸ் யெல்ட்சினுக்கு அவர் சமர்ப்பணம் செய்தார். ஆனால் இப்பொழுது கடந்த காலத்தைப் பற்றிப் பேசவேண்டிய தேவையில்லை; மாறாக டாரிக் அலி அமெரிக்க தேர்தல்களைப் பற்றி இப்பொழுது என்ன கூறுகிறார் என்பதைக் காண்போம். ஆகஸ்ட் 5 ம் தேதி நியூயோர்க் நகர WBAI வானொலியினால் பேட்டி காணப்பட்டபோது, புஷ்ஷின் தோல்வி, கடல் கடந்து ஓர் உண்மை நிலைச் செய்தியை அனுப்பும் என்று வலியுறுத்திக் கூறினார். "போர் வெறி அரசாங்கத்திற்கான ஒரு தோல்வி, முன்னேற்றத்தில் ஒரு அடி எடுத்து வைப்பது என்று பார்க்கப்படும். அதைவிட அதிகமாகக் கூற நான் விரும்பவில்லை; ஆனால் உலக அளவில் இதன் தாக்கம் இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார். எந்தக் கருத்துணர்வில் கெர்ரி தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு முன்னேற்றச் செயலாக இருக்கும், மற்றும் இந்த பூகோளப் பாதிப்பாக எது இருக்கும்? இதைத் தொடர்ந்து ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக திரும்பப் பெற்றுவிடப்படுமா? அது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப்பெறச் செய்துவிடுமா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் எவ்வித ஐயத்திற்கு இடமின்றி விடை "பெறப்படாது" என்பதுதான். புஷ்ஷின் தோல்வியானால் உலகப் பாதிப்பு என்பது, உண்மையில் அது அமெரிக்கா தன்னுடைய ஈராக் ஆக்கிரமிப்பிற்கு ஐரோப்பிய ஆதரவு பெறக்கூடிய முயற்சிகளை எளிதாக்கக் கூடும்; இதேபோல் மற்ற இடங்களிலும் அவர்கள் திட்டமிட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளுக்கும் ஐரோப்பிய ஆதரவு கிடைக்கக் கூடும். இத், உண்மையில், ஆளும் செல்வந்தத்தட்டின் செல்வாக்கு நிறைந்த பகுதிகளை, அவற்றின் ஆதரவு தன்னுடைய வேட்பாளர் நிலைக்கு அளிப்பதற்காக அவற்றை நம்பவைக்கும் வகையில் கெரி பயன்படுத்தும் வாதங்களில் இதுவும் ஒன்றாகும் Nation ஆகஸ்ட் 16 பதிப்பில் கெரிக்கு ஆதரவாக மற்றொரு வாதம் வெளிவந்தது. தான் ஏன் இறுதியில் "புஷ்ஷைத் தவிர எவரேனும்" என்ற முகாமில் சேர்ந்தேன் என்பதை விளக்கும் வகையில், Naomi Klein தன்னுடைய புதுவகை வாதத்தை முன்வைத்துள்ளார். "முன்னேற்றப் போக்கு" உடையவர்களால் புஷ் ஜனாதிபதியாக இருக்கும் வரை பெரிதும் வெறுக்கப்படப் போவதால், அவர்கள் அரசியல் மற்றும் போருக்கான காரணங்கள், சமுதாயத்தின் பொதுநெருக்கடிகள் பற்றி பற்றித் தீவிரமாகச் சிந்திக்க முடியாது என்கிறார்."இந்தப் பைத்தியக்காரத்தனம் நிறுத்தப்படவேண்டும்; இதை விரைவில் செய்வதற்கு ஒரு வழி ஜோன் கெர்ரியை தேர்ந்தெடுத்தல் ஆகும்; அவர் வித்தியாசமானவர் என்பதால் அல்ல, பல முக்கிய வகைகளில், ஈராக், "போதைப் பொருட்கள்மீதான போர்", இஸ்ரேல்/பாலஸ்தீனம், தடையற்ற வணிகம், பெருநிறுவன வரிவிதிப்பு ஆகியவற்றில் அவரும் இத்தனை மோசமாகத்தான் இருப்பார். முக்கிய வேறுபாடு என்னவென்றால் கெர்ரி அவற்றைச் செயல்படுத்தும்போது, ஒரு அறிவார்ந்த, தெளிவு கொண்ட, களிப்புடன் கூடிய மழுங்கல் தன்மையையும் கொண்டிருப்பார். எனவேதான் நான் புஷ்ஷைத் தவர எவரேனும் என்ற முகாமில் சேர்ந்துள்ளேன்: கெர்ரியைப் போல ஒரு இணக்கமற்ற மனிதர் பொறுப்பில் இருந்தால்தான் ஜனாதிபதி அனைத்துப் பிரச்சினைகளிலும் கட்டாயமாகக் கருத்தைக் கூறிக்கொண்டிருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" என்று இந்த அம்மையார் எழுதுகிறார். இத்தகைய வாதம் விடை தரக்கூடிய தகுதியைக் கொண்டுள்ளதா? தன்னுடைய நண்பர்கள் அனைவரும் சிந்திக்கும் திறனை இழந்து விட்டார்கள் என்று கண்டுபிடித்துள்ள மிஸ் கிளைன் தன்னுடைய சொந்த சிந்திக்கும் திறனை அகற்றியதன் மூலம் அவர்களுடன் சேர்ந்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார். உலகத்தில் உள்ள டாரிக் அலிகளும், நெளமி கிளைன்களும் கையாளும் அரசியல் வகை முழுதும் படர்ந்துள்ளதிற்கு ஒரு சொல் உள்ளது. அதுதான் சந்தர்ப்பவாதம் என்பதாகும்; நாம் இதன்மூலம் கொள்ளும் பொருள் என்றவென்றால் முற்றிலும் நடைமுறை, தந்திரோபாய கணக்குகளுக்காக, அடிப்படை அரசியல் கொள்கைகளை தாழ்த்திக் கொள்ளுதல் என்பது ஆகும். (வெறும் "அருவம்" என்று அவர்கள் உதறிவிடும்) கோட்பாடு, வரலாறு இவற்றின்மீதான அவர்களுடைய அசட்டைத் தன்மையினால், சந்தர்ப்பவாதிகள் அரசியல் வளர்ச்சியின் கடினமான பிரச்சினைகளை வாடிக்கையாக தவிர்த்து விடுகின்றனர். தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அரசியல் அமைப்பு மற்றும், சோசலிச வர்க்க நனவின் அபிவிருத்தி என்ற நிலைப்பாட்டில் இருந்து நடைமுறையில் இருக்கும் தீர்வுகளின் உட்குறிப்புக்களை இவர்கள் ஆராய மறுக்கிறார்கள் என்று மார்க்சியவாதிகளால் சவால்விடப்படும்போது, இச்சந்தர்ப்பவாதிகள் தங்களுடைய செயல்முறைக் கொள்கைகளை அரசியல் யதார்த்தவாதம் என்ற பெயரில் நியாயப்படுத்துகின்றனர். "மார்க்சிச வாதிகளாகிய நீங்கள் கோட்பாட்டு உலகில் வாழ்ந்து வருகிறீர்கள்; நாங்கள் 'உண்மை' உலகில் வாழ்கிறோம்" என்று அவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய செயல்முறை சந்தர்ப்பவாதிகள், அரசியல் வாதிகளிலேயே தாங்கள்தாம் மிகவும் உண்மையற்றவர்கள் என்பதை நினைத்தும் பார்ப்பதில்லை. அவர்களுடைய உண்மையைப் பற்றிய கருத்துப்படிவம் மேம்போக்காக நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வு, குறுகியகால நலன்களைப் பற்றிய மதிப்பு, கணிசமான அளவு தம்மையே ஏமாற்றிக் கொள்ளுதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது; அது வர்க்கப் போராட்ட விதிகளுள் மற்றும் , அவற்றின் அரசியல் இயக்கமுறை பற்றிய விதிகளுள் அறிவியல் நுண்ணறிவுத்திறத்தைக் கொண்டிருக்கவில்லை. கெர்ரிக்கு ஆதரவாக சந்தர்ப்பவாதிகள் முன்வைக்கும் வாதங்கள், அவர்கள் உள்ளக் கிடக்கை எவையாயினும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலை தவறுவதற்கு உதவியாகத்தான் உள்ளன. தேர்தலுக்குப் பின், எவர் வந்தாலும், அவர்கள் அமெரிக்காவில் எதிர்கொள்ளவேண்டிய அரசியல், பொருளாதார மற்றும் சமுதாய நெருக்கடி ஆழமாக உக்கிரமடையும் சூழலுக்கு, முற்றிலும் தயாரற்ற நிலையில் தொழிலாள வர்க்கத்தை அவை தள்ளிவிடுகின்றன. தாராண்மைவாதத்தின் பலபத்தாண்டுகால மரணவேதனையின் பொழுது, தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் தவறியமை ஒரு வரலாற்றுத் துயரமாகும். ஜனநாயகக் கட்சி தடுத்து நிறுத்தப்பட முடியாத அளவிற்கு வலதுபுறம் சார்ந்து செல்லும் வளர்ச்சியைத்தான் கடந்த 35 ஆண்டுகள் சந்தித்துள்ளன. இந்தப் பரிணாமம் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக நிலை வலுவிழந்ததிலிருந்து முக்கியமாகத் தோன்றியுள்ளது; அந்நிலை ஜனநாயகக் கட்சி தொழிலாளவர்க்கத்திற்கு முறையீடு செய்து கொள்வதற்கு அடிப்படையாக இருந்த சமூக சீர்திருத்த தாராளவாதத்தின் வகைக்கான சட ரீதியான அடிப்படையை கீழறுத்திருக்கிறது. அமெரிக்க சமுதாயத்தின் சமூக தளத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன; ஜனநாயகக் கட்சி தன்னுடைய அரசியல் பிரதிநிதிகளாக பாரம்பர்யமாக ஆள்சேர்த்து வந்த உயர் நடுத்தர வர்க்க தொழில்முறை சார்ந்த பகுதியினரை(குறிப்பாக வக்கீல்கள், பல்கலைக் கழக ஆசிரியர்கள் போன்றோர்) முக்கியத்துவம் வாய்ந்த வகையில் வளப்படுத்தியது உள்ளடங்கலாக மாறுதல் ஏற்பட்டது; இது அமெரிக்க முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி, முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ளும், அதன் சமூக எல்லைக்குள்ளும் இருந்திருந்த தாராண்மை சீர்திருத்தவாதத்தை ஒரு தளமாகக் கொண்டிருந்த நிலையைக் கிட்டத்தட்ட அகற்றிவிட்டது. அமெரிக்க தாராண்மைவாதத்தின் அரசியல் சிதைவு எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதற்கு, ஜனநாயகக் கட்சி புஷ் நிர்வாகத்திற்கு எதிராக தீவிரமான அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்குக் கூட இயலாத நிலையில் உள்ளமை சான்றாகும். உழைக்கும் மக்களின் பரந்த பகுதியினரின் போர் எதிர்ப்பு உணர்வுகளைக்கூட அது வெளிப்படுத்த இயலாத, முடியாத நிலையில் உள்ளது. இன்னும் எதிரிடையான நிலையில் ஜனநாயகக் கட்சியின் முக்கிய நோக்கமே போருக்கு அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவதைத் தடுப்பதாக இருந்து வருகிறது. செனட்டர் ஜோன் கெர்ரி வேட்பாளராக ஏற்கப்பட்ட வழிவகையை சற்று ஆராய்வோம். 2003-2004 குளிர்காலத்தில் ஆரம்ப கட்ட பிரச்சார காலத்தில், அரசியல் செயல்பாட்டுவாதத்தைத் தூண்டிவிடும் பெரிய பிரச்சனையாக எல்லா இடத்திலும் கொள்ளப்பட்டது ஈராக்கியப் போருக்கு எதிர்ப்பு என்று இருந்தது. ஜனநாயகக் கட்சிக்கு வாக்களாளிப்பவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டிருந்தவர்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தினர் ஈராக் போரை எதிர்த்ததாகக் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதையொட்டி நியூ ஹாம்ப்ஷைரின் கவர்னரான ஹோவர்ட் டீன் ஆரம்ப கட்டத்தில் பெரும் புகழை ஈட்ட முடிந்தது. செனட்டர் ஜோசப் லிபர்மன்னைத் தவிர மற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் போருக்கெதிரான பொது உணர்விற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டிருந்தனர். ஈராக்கின் மீதான படையெடுப்பு, அதன்மீதான ஆக்கிரமிப்பு இவற்றிற்குப் பெருமையுடன் ஆதரவு கொடுத்த லிபர்மன் எந்த மாநில ஆரம்ப வாக்குகளிலும் 7 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லை. பல மாதங்களுக்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பு நியமனத்தை டீன் பெறக்கூடும் என்றுதான் தோன்றியிருந்தது. இதன் பின்னர் செய்தி ஊடகத்தின் கடுமையான தாக்குதலுக்கு அவர் உட்பட்டார்; அவரை "தேர்ந்தெடுக்கத் தகுதியற்றவர்" என்று ஊடகம் அறிவித்தது. செய்தி ஊடகப் பிரச்சாரம் திறமை மிகுந்திருந்தது; ஏனெனில் நவம்பர் தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு இருக்கக் கூடியவர்தான் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று கருதும் சாதாரண ஜனநாயகக் கட்சியினரின் கருத்தை, அது பிரதிபலித்தது. இந்த உணர்வுதான் திடீரென ஜோன் கெர்ரியின் வேட்புத் தன்மைக்குப் புத்துயிர் அளித்தது; அதற்கு முன் அவர் செல்லுமிடம் தெரியாமல்தான் திகைத்திருந்தார். செய்தி ஊடகத்தின் நிதானத் தன்மையின் விளைவாக அயோவா, நியூ ஹாம்ப்ஷைர் ஜனநாயகக் கட்சி வாக்காளர்களுக்கு -- இங்குதான் முதல் உட்பிரிவு, தொடக்கத் தேர்தல்கள் நடைபெற்றன -- ஒரு போர்வீரர் என்னும் அடிப்படையில் தேசியத் தேர்தலில் வெறிபிடித்த தேசிய உணர்வை உறுதியாகத் தூண்டும் தன்மை படைத்த புஷ் பிரச்சாரத்திற்கு அவர் அசைந்து கொடுக்க மாட்டார் என்ற எண்ணம் தோன்றியது. தன்னுடைய பிரச்சார சொல்வன்மையை போரெதிர்ப்பிற்கு நிதானமான முறையில் கெர்ரி பயன்படுத்தி, போர் தீர்மானத்திற்கு ஆதரவாகத் தான் செனட்டில் வாக்களித்ததை பெரிதுபடுத்தாமல், பேசி வந்தும், தன்னை புஷ்ஷின் ஈராக்கியக் கொள்கைகளுக்கு எதிரானவர் என்றும் காட்டிக் கொண்டதால், ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் தேசியத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய போரெதிர்ப்பு வேட்பாளராக அவரிடம் பற்றுக் கொண்டனர். எனவே மார்ச் தொடக்கத்தில் அவரால் வேட்பு நியமனத்தில் ஆதிக்கம் செய்துகொள்ள முடிந்தது. ஜனநாயகக் கட்சிக்குள், ஈராக்கியப் படையெடுப்பு, ஆக்கிரமிப்பு பற்றிய விவாதங்கள் அனைத்தும் அத்துடன் முடிவுற்றன. ஆரம்ப தேர்தல் காலத்தில் அனைத்து அரசியல் செயல்பாட்டு வாதத்தையும் தூண்டிவிட்ட போர்ப் பிரச்சினை ஒரு விவாதத்திற்குரிய பிரச்சினையே அல்ல என்று மாற்றப்பட்டு விட்டது. மிகத் திறமையுடன் செயல்பட்டு, ஆளும் செல்வந்தத்தட்டு தேசியத் தேர்தலில் ஈராக் பற்றிய பொது எதிர்ப்பிற்கு அரங்கு கிடைக்காது என்று உறுதி செய்துவிட்டது. போரெதிர்ப்பு வாக்குத் தளம் முழுவதும் செல்வாக்கிழந்த தன்மையை முற்றிலுமாகக் கொண்டு விட்டது. இந்த வழிவகையின் விளைவு, அமெரிக்காவில் உத்தியோகபூர்வமான அரசியல் கட்சிகள் பரந்த மக்கட்திரளில் இருந்து, எந்த அளவிற்கு, முற்றிலும் சுதந்திரமாக இருக்கின்றன என்பதின் தன்மையை நிரூபித்தது. அரசியல் அதிகாரம் இரு முதலாளித்துவ வர்க்கக் கட்சிகளில் குவிந்துள்ளது, அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டினன கொண்டிருக்கும் மிகச் சிறிய சமூக அடுக்கில் தேசியச் செல்வம் குவிவதற்கு நிரப்புக்கூறாய் அமைகிறது. சமூக துருவமுனைப்படலும் அமெரிக்காவில் செல்வக்குவிப்பும் அமெரிக்க சமுதாயத்தின் மிக முக்கியமான கூறுபாட்டை ஆராயாமல் அதன் அரசியல் நிலைமை பற்றி புரிதல் இயலாததாகும்; இச்சமுதாயத்தில் மிக அதிகமான முறையில் செல்வக் குவிப்பும் அதையொட்டிய சமத்துவமற்ற நிலையின் வளர்ச்சியும் உள்ளன. இந்த ஜூன் மாதம் றொனால்ட் றேகனுடைய இறப்பு, ஆளும் செல்வந்தத்தட்டினுள்ளே அசாதாரண முறையில் வெளிப்பாட்டை ஏற்படுத்தியது. உள்ளத்தில் தேங்கியிருந்த உணர்வுகளை பெரும் பாராட்டுக்களாக தெரிவித்த தன்மை என்பதைவிட கூடுதலான விஷயம்தான் இந்த வெளிப்பாட்டில் உள்ளது. றேகனுடைய மரணம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில், அதாவது றேகன் ஜனாதிபதியாக 1980ல் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் இருந்து, அமெரிக்க சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களைப் பற்றிச் சிந்திக்க ஒரு வாய்ப்பினைக் கொடுத்து; இதன் விளவுதான் நடைமுறையில் அதன் மொத்தச் சொத்து மகத்தான அளவிற்கு வளர்ந்துவிட்டதைக் கொண்டாடவேண்டும் என்ற கருத்து தோன்றியது. இந்த ஆய்வுக்கு உதவும் வகையில், செல்வக் குவிப்பு, சமூக சமத்துவம் அற்ற நிலையின் வளர்ச்சி பற்றிய பல அட்டவணைகளை சேகரித்துள்ளேன். [8] இவை இன்றுள்ள மிக இடைவெளியுள்ள சமத்துவமற்ற தரங்களை மட்டும் உறுதிப்படுத்தவில்லை. இந்தப் புள்ளி விவரங்கள், கடந்த 25 ஆண்டு காலத்தில் முக்கிய அரசியல் நிகழ்வுகளின் சமுதாய பொருளாதார பின்னணியைப் பற்றி ஓர் உட்பார்வையைக் கொடுக்கின்றன.
முதலாவது அட்டவணை 1947ல் இருந்து 1979வரை குடும்ப வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாறுதலை விவரித்துக் காட்டுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் விளைந்த மகத்தான அமெரிக்கப் பொருளாதார விரிவு மக்கட்தொகையின் அனைத்துப் பிரிவினரின் குடும்ப வருமானத்தையும் உயர்த்தியது என்று இப்புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வருமான நிலையினால் கடைசிப் பிரிவிற்கு தள்ளப்பட்ட 20 சதவீதக் குடும்பங்கள், தங்கள் வருமானத்தில் 116 சதவீத உயர்வை அடைந்தன. அதற்கு அடுத்த நிலையில் இருந்த 20 சதவீதக் குடும்பங்கள் 100 சதவீத உயர்வை தம் வருமானத்தில் பெற்றன. நடுவில் இருந்த 20 சதவீதக் குடும்பத்தினர் 114 சதவீத உயர்வைக் கண்டன. மேல்மட்ட 20 சதவீதத்தினர் 99 சதவீத உயர்வைக் கண்டனர். மிக உயர்ந்த 5 சதவீதத்தில் இருந்தவர்கள் தங்கள் குடும்ப வருமானத்தில் 86 சதவீத உயர்வைக் கொண்டனர். எனவே மக்கட்தொகையின் அனைத்துப் பிரிவுகளும் போரைத் தொடர்ந்திருந்த பொருளாதார வளர்ச்சியினால் கணிசமாக பலன் பெற்றன; சதவிகிதக் கணக்கிலேனும் மிகப்பெரிய நலன்கள் கீழ் 80 சதவீதத்தினரால் அடையப்பட்டது.
நாம் இப்பொழுது இரண்டாவது அட்டவணையைக் காண்போம்; இது 1979ல் இருந்து 2001 வரையிலான குடும்ப வருமானங்களில் உள்ள மாற்றங்களைக் காட்டுகிறது. எவ்வளவு பெரிய வேறுபாட்டைக் காண்கிறோம்! கீழ் 80 சதவீதக் குடும்பங்கள் மிகக் குறைந்த நன்மைகளையே பெற்றன; ஆனால் சமுதாயத்தில் மிகச் செல்வம் கொழித்துள்ள பகுதிகள், குறிப்பாக உயர்மட்ட 5 சதவீதத்தினர் மிகக் கணிசமாகக் குடும்ப வருமானத்தில் வளர்ச்சியைப் பெற்றனர். கீழ் 20 சதவீத குடும்பங்கள் 3 சதவீத நன்மைகளையே அடைய முடிந்தது. இரண்டாவது 20 சதவீதத்தினர் 11 சதவீத நன்மைகளை கொண்டனர். நடுவில் இருந்த 20 சதவீதத்தினர்17 சதவீத உயர்வையும், நான்காம் 20 சதவீதத்தினர் 53 சதவீத உயர்வையும் கொண்டனர். ஆனால் மிக உயர்ந்த 20 சதவீதத் தட்டினரோ 53 சதவீத உயர்வைக் கொண்டு, அந்தப் பிரிவிற்குள் உயர் 5 சதவீதத்தினரின் குடும்ப வருமானம் 81 சதவீதம் உயர்ந்தது.
வரிகளுக்குப் பின்னர் குடும்ப வருமானத்தை காட்டும் மூன்றாவது அட்டணையைப் பார்த்தால், குடும்ப வருமானத்தில் சமத்துவமற்ற தன்மை இன்னும் வியப்படையும் வகையில் உள்ளது. 1979 லிருந்து 1997 வரை கீழ் 20 சதவீதத்தினர் தங்கள் குடும்ப வருமானத்தில் 1 சதவீதக் குறைவைக் கண்டனர். மேல்மட்ட 5 சதவீதத்தினர் 157 சதவீத உயர்வைக் கண்டனர்!
இப்பொழுது நாம் அட்டவணை 4ஐ பார்ப்போம்; இது 1960லிருந்து 2001வரை சராசரி தொழிலாளி ஊதியத்தில் இருந்து தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எத்தனை மடங்கு அதிகம் ஊதியம் பெற்றார் என்பதைக் காட்டுகிறது. 1960ம் ஆண்டு CEO உடைய சராசரி வருமானம், Fortune 100 நிறுவனங்களில் 41 மடங்கு சராசரி ஆலைத் தொழிலாளருடையதைவிடக் கூடுதலாக இருந்தது. 1970ம் ஆண்டு, பங்குச் சந்தையில் கணிச உயர்வு காரணமாக இந்தப் பெருக்கம் 79 மடங்காயிற்று. 1970 களில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியின் விளைவாக பங்கு மதிப்புக்கள் பெரிதும் குறைந்து விட்ட நிலையில் இப்பெருக்க மடங்கு 42 ஆகக் குறைந்தது. பின் என்ன ஆயிற்று என்று பாருங்கள். 1990ஐ ஒட்டி, CEO உடைய வருமானம் சராசரித் தொழிலாளருடையதைவிட 85 மடங்கு அதிகமாயிற்று. 1996 அளவில் அது 209 மடங்கு அதிகமாக ஆயிற்று. 2000 அளவில், இது 531 மடங்கு உயர்ந்தது!
2001ம் ஆண்டில் அமெரிக்காவில் செல்வப் பங்கீடு எவ்வாறு இருந்தது என்பதை அட்டவணை 5 காட்டுகின்றது. செல்வம் கொழிக்கும் உயர் 1சதவீதத்தினர், தேசிய வருமானத்தில் 33சதவீதத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளனர். இதற்கு அடுத்த 4 சதவீதத்தினர் 26 சதவீதத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். அதற்கும் அடுத்த 5 சதவீதத்தினர் நாட்டுச் செல்வத்தில் 12 சதவீதத்தைப் பெற்றனர். மொத்தமாக செல்வம் கொழித்த உயர்மட்ட 10 சதவிகிதத்தினர் நாட்டின் செல்வத்தில் 71 சதவிகித்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கீழேயுள்ள 10 சதவீதத்தினர் 13 சதவீதத்திற்கு உரிமையாவர். அதற்கடுத்த 20 சதவீதத்தினர் 11 சதவீதத்திற்கு உரிமையாளர் ஆவர். நடுவில் உள்ள 20 சதவீதத்தினர் 4 சதவீதத்தை மட்டுமே கட்டுப்படுத்துகின்றனர். அதற்கு அடுத்த 22 சதவீதத்தினர் 0.3 சதவீதத்தைக் கொண்டுள்னர். கீழ்மட்ட 18 சதவிகிதத்தினருக்கு சொத்துக்கள் ஏதும் கிடையாது அல்லது அதன் மதிப்பு எதிர்மறையாகும்.
அட்டவணை 6 மிகவும் முக்கியமானது. மக்கட்தொகையின் உயர்மட்ட 1 சதவீதத்தினர் தேசிய சொத்தைக் கட்டுப்படுத்துவதில் கொண்டுள்ள மாற்றங்களை பற்றிய பகுப்பாய்வு கடந்த 80 ஆண்டுகளில் அமெரிக்க வரலாற்றின் சமூக - வர்க்க இயக்கத்தைப் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவை அளிக்கின்றது. அதன் உச்ச நிலையை 1929ல் அடைந்த பின்னர் தேசிய சொத்தில் செல்வம் கொழித்த 1 பகுதியினர் கட்டுப்பாட்டில் கொள்ளுதல், பெருமந்த நிலை காரணமாக, 1930களில் கணிசமாகக் குறைகிறது. இது உறுதிப்பட்டு 1940 களின் கடைசிப் பகுதிகளிலும், 1950 களிலும் நிதானமாகவும், சற்று கூடுதலான விறுவிறுப்பில் 1960 களிலும் உயரத்தொடங்கியது; இதன் காரணம் ஓரளவு உழைக்கும் வர்க்கம் போராட்டங்களின் மூலம் பெற்ற நலன்களினாலாகும்; பின்னர் இன்னும் பெரிய காரணி உலகப் பொருளாதார நெருக்கடி 1970களில் நிலவிய நிலைமை ஆகும்; அவை பங்கு விலைகள் மகத்தான அளவில் சரிவதற்குக் காரணமாயின. பங்கு விலைகளின் சரிவு பணவீக்கம், பெருமந்த நிலை இரண்டும் இணைந்திருந்த வினோதமான நிலை (பொருளாதாரப் பின்னடைவு), அமெரிக்கப் பொருளாதாரத்தில் உற்பத்திப் பிரிவின் இலாபத்தில் வீழ்ச்சி மற்றும் ஆளும் வர்க்கத்திற்குள் நம்பிக்கை குறைந்திருந்த தன்மை ஆகியவை ஒன்று சேர்ந்திருந்ததாகும். தன்னுடைய சமூக நிலையின் இந்தச் வீழ்ச்சிக்கு அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம், தொழிலாள வர்க்கத்தின் பால் கடுமையான தாக்குதல்களை பதிலடியாகத் தந்தது. 1979 ம் ஆண்டு, ஜனநாயகக் கட்சியியைச் சேர்ந்த ஜனாதிபதி கார்ட்டர், கூட்டாட்சி இருப்பு நிதிக்கு தலைவராக போல் வோல்கரை நியமித்தார். இவர் வியத்தகு அளவில் வட்டி விகிதத்தை முன்னோடியில்லாத அளவுகளுக்கு உயர்த்தியதால், அமெரிக்கப் பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது.இந்தக் கொள்கையில் நனவுபூர்வமான நோக்கம் மிகப் பெரியமுறையில் இருந்த வேலையின்மையை பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தை வலிமை குன்றச் செய்து, அரசாங்கம்-பெருநிறுவனங்கள் தொழிற்சங்கவாதம் மீது தாக்குதல் நடத்தி தொழிலாளர் வாழ்க்கை தரங்களைக் குறைக்க வேண்டும் என்பதாகும். முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்கை Business Week இனால் விளக்கப்பட்டது. 1980 ஜூன் மாதம் அமெரிக்க தொழிற்துறையில் மாற்றம் ஏற்படுத்ததல், "அடிப்படை நிறுவன அமைப்புக்களில், பொருளாதாரக் கொள்கை வகுப்பதற்கான கட்டமைப்பில், பொருளாதாரக் காட்சியில் முக்கிய நடிகர்களான, வணிகம், உழைப்பு, அரசாங்கம், சிறுபான்மையினர் என்று அனைவரும் தாங்கள் பொருளாதாரத்திற்கு என்ன கொடுக்கிறோம், தாங்கள் என்ன பெறுகிறோம் என்பதை கூடுதலாகச் சிந்திப்பதில் பெரும் மாற்றங்கள் செய்வது தேவைப்படும். இந்த மாற்றங்களில் இருந்து ஒரு புதிய சமூக ஒப்பந்தம் இந்தக் குழுக்கள் இடையே உருவாக வேண்டும்; இது ஒவ்வொருவரும் பொருளாதார வளர்ச்சி விரைவாகப் பெருகுவதற்கு என்ன பங்கை ஆற்றவேண்டும், எவற்றை எதிர்பார்க்கலாம் என்பதை குறிப்பாக அறிந்து கொண்ட அடிப்படையில் இருக்கவேண்டும்" என்று அது எழுதியது. சில மாதங்களுக்கு பின்னர், றோனால்ட் றேகன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; முன்னோடியில்லாத முறையில் உழைக்கும் வர்க்கத்தின் மீதான அரசாங்க ஆதரவுடனான தாக்குதல் நடாத்தப்பட்டது; அதன் வெற்றி தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் காட்டிக்கொடுப்புக்களால் உறுதியளிக்கப்பட்டது. இதன் விளவுகள், தேசிய செல்வத்தில் உறுதியான முறையில் உயர் 1 சதவிகிதத்தினர் குவித்துக் கொள்ளுதலில் உயர்நிலை ஏற்பட்டமையில் பிரதிபலித்தது. கூட்டாட்சி ரிசர்வ் குழுவைச் சேர்ந்த ஆர்தர் கென்னிக்கெல் நடாத்திய புதிய ஆய்வு, மிகச் செல்வம் கொழித்த 1 சதவீதத்தினர் கிட்டத்தட்ட 2.3 டிரில்லியன் டாலர் பங்குகளை உரிமையாகக் கொண்டுள்ளனர் என்றும் இது கிட்டத்தட்ட 53 சதவீதம் தனிப்பட்ட முறையில் அல்லது குடும்பங்களினால் உரிமைகொள்ளப்பட்ட சதவீதம் என்றும் தெரிகிறது. அவர்கள் குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் உரிமையில் இருக்கும் அனைத்துப் பத்திரங்களிலும் 64 சதவிகிதத்தைக் கொண்டுள்ளனர். வியத்தகு முறையில் செல்வந்தத்தட்டு குவித்துள்ள செல்வத்தின் மாற்றுப் பக்கத்தில் பெரும்பான்மையான அமெரிக்க தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பெருகிய பாதுகாப்பற்ற நிலையைக் காண்கிறோம், உண்மையில் இன்னும் மோசமான திகைப்பூட்டும், ஆற்றொணா நிலையில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மிக வறிய பகுதியினர் தம்மையே காண்கின்றனர். தொழிலாள வர்க்கத்தின் விரிவடையும் வகையினம் "உழைக்கும் வறியவர்" என்று அழைக்கப்படும் பிரிவையும் கொண்டுள்ளது. Business Week-ன் கருத்தின்படி, "இன்று 28 மில்லியனுக்கும் மேலான மக்கள், உழைக்கும் சக்தியில் கிட்டத்தட்ட கால் பகுதியினர், 18 லிருந்து 64 வயதுவரை வரம்பில் உள்ளவர்கள், மணி ஒன்றுக்கு $ 9.04 க்கும் குறைவாகப் பெறுகின்றனர்; முழுநேர ஊதிய விகிதத்தில் $18,800 ஆண்டுக்கு என்ற முறையில், நால்வர் உள்ள குடும்பம் ஒன்றிற்கு கூட்டரசு நிர்ணயித்துள்ள வறுமைக் கோட்டில் உள்ளனர்." Business Week உழைக்கும் வறியவர், "மிக அதிகமான பாதுகாப்பின்மை என்ற உலகில் உழல்கின்றனர்; ஒரு பேருந்தைத் தவறவிட்டாலோ, ஒரு எந்திரம் பழுதுபட்டாலோ, ஒரு நோய்வாய்ப்பட்ட குழந்தை என்றாலோ வேலையைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கும் இழப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காண்பிக்கும்; மிகக் குறைவான வாழ்க்கைத் தரம் கொள்ளுதலுக்கும், பண நடுக்கத்தினால் மூடிவைக்கப்பட்ட தொலைபேசிகள், $1,000 அவசர சிகிச்சைக் கட்டணமாக கொடுக்க வேண்டிய மருத்துவமனை கட்டணங்கள் என்பவற்றை ஏற்படுத்தி அவர்களை மலைபோன்ற சுமக்க முடியாத கடனில் தள்ளிவிடும்."எந்த நேரத்திலும் இலாபத்தைக் கூடுதலாகக் கொள்ளவேண்டும் என்று நினைக்கும் ஒரு முதலாளி, வேலை நேரத்தைக் குறைக்கலாம்; அது ஒரு குடும்பத்தின் மளிகைச்சாமான் திட்டத்தைக் குறைத்துவிடும் அல்லது எதிரிடையாக தொழிலாளர்களைக் கூடுதலாக உழைக்க வைத்து, குழந்தை நலத் திட்டங்கள் மீது கடுந்தாக்குதலைக் கொள்ளலாம். பல நேரமும் அவர்கள் பல நன்மைகள் பெறும் கட்டத்தை அடையக் கூடிய நேரத்தில், அவர்களுடைய வேலை அட்டவணை குறைக்கப்படுவதைச் சந்திக்க நேரிடும். சீருடை அணியத் தேவையான நேரம், குளியலறை செல்வதற்காகும் நேரம், அல்லது சற்று ஓய்வெடுக்கும் நேரங்களில் வாடிக்கையாக ஊதியத்தை இழக்க நேரிடும். குறைகூறினால், இவரைவிட இன்னும் இளைய, மலிவான, அமெரிக்காவிற்கு புதிய, குறைவான ஊதியத்திற்கு உழைக்கத் தயாராக இருக்கும் நபர்கள் எப்போதும் உள்ளனர்." [9] இதுதான் 2004 ம் ஆண்டில் அமெரிக்காவின் நிலையாகும்! அமெரிக்க நெருக்கடியும் சோசலிசத்திற்கான எதிர்கால உலக வாய்ப்பும் மிக அளவுக்கு அதிகமான செல்வக் குவிப்பும், சமூக சமத்துவமின்மையும், அமெரிக்காவுக்குள் முதலாளித்துவ ஜனநாயகத்தின் நிலைமுறிவிற்கு அடிப்படையாக உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் பரந்த அளவில் போலீஸ் நடவடிக்கைகள் அரசாங்கத்தால் எடுக்கப்படுவது, "பயங்கரவாத அச்சுறுத்தல்" என அழைக்கப்படுவதிலிருந்து தோன்றவில்லை, மாறாக அவை அமெரிக்க சமுதாயத்திற்குள்ளேயே சமூக மற்றும் வர்க்கப் பதட்டங்கள் மிகக் கூர்மையடைந்து வருவதிலிருந்தே தோன்றுகின்றன. மார்க்சிஸ்டுகளுக்கு மாறாக, அமெரிக்க அரசியலில் (சர்வதேச அளவிலும் என்று நான் சேர்த்துக் கொள்ளலாம்) மிக கவனத்தைக் கவரும் வகையிலும், ஆபத்தான நிலையிலும் தீவிர இடதுகள் உள்ள தன்மை, அமெரிக்க முதலாளித்துவ அமைப்பில் உள்ள அடிப்படை நெருக்கடியைப் புரிந்து கொள்ள இயலாத நிலையும், அமெரிக்க சமுதாயத்தில் தொழிலாள வர்க்கம் அடிப்படையில் ஒரு புரட்சிகர சக்தியைக் கொண்டது என்பதை அறிந்து கொள்ளாததும் ஆகும். சமூக ரீதியில் தொழிலாள வர்க்கத்திலிருந்து அந்நியப்பட்டு அரசியல் ரீதியாக செய்தி ஊடகச் செயலால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் சர்வவல்லமை என்ற போதையினாலும், இடது தீவிர குழு அமெரிக்காவில் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தப்பட முடியும் என்பதற்கான புறநிலை அடிப்படை எதையும் காணவில்லை. இதுதான் தீவிர இடது அதி சோர்விழந்து இருப்பதற்குக் காரணம்; தான் கதியின்றி தனிமைப்பட்டதாக அது கருதுகிறது. அமெரிக்காவிற்குள்ளேயே பூகோளப் பொருளாதார முரண்பாடுகளின் பரஸ்பர பாதிப்பு மற்றும் உக்கிரமடைந்து வரும் வர்க்கப் பதட்டங்கள் உலக ஏகாதிபத்தியத்தின் மையத்தானத்திலேயே ஒரு புரட்சிகர வெடிப்பிற்கான சூழ்நிலைகளை எப்படி ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை முற்றிலும் அது காணத் தவறுகின்றது. இது அமெரிக்க இடதுகளுக்கு மட்டும் பிரத்தியேகமான பலவீனம் அல்ல. இது ஒரு சர்வதேச இயல்நிகழ்ச்சி என்றே கூறமுடியும். இந்த இடதுகளின் பொது அரசியல் நெருக்கடியில் பல கூறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்நெருக்கடியின் காரணங்களை ஆராய்ந்து, விளக்குவதற்கு, இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான மூலோபாய வரலாற்று அனுபவங்களை --அதுவும் குறிப்பாக சோவியத் ஒன்றியம் சீரழிந்து மற்றும் இறுதியில் பொறிந்துபோனது பற்றிய காரணங்களை-- முறையாகக் கற்கவும், உள்வாங்கவும் இந்த இடதுகள் அதிகமான அளவு தவறிவிட்டது பற்றி சிறப்பாக வலியுறுத்திக் கூறவேண்டியது முக்கியமானதாகும். இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச சோசலிச இயக்கத்தின் அடிப்படையான அனுபவங்கள் பற்றி முறையான உழைப்பறிதல் இல்லாத நிலையில், சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, சோசலிசத்தின் தோல்வி என்றும் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர முன்னோக்கின் திவால் என்றும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், இந்த வரலாற்றைப் படித்தவர்கள், சோவியத் ஒன்றியத்தின் பொறிவும், தொழிலாள வர்க்கத்தின் தோல்வியும் தவிர்க்க முடியாதவை, முன்கூட்டியே எழுதப்பட்டவை என்பது சரியல்ல, அவை தவறான கொள்கையின் அடிப்படையில், மார்க்சிச-விரோத, சோசலிசத்திற்கான தேசியப் பாதை பிற்போக்கான கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டவை என்று உணர்பவர்களுக்கு, இன்றைய அரசியல் நிலைமை வேறுவிதமாகத் தோன்றும். கடந்தகாலத்தைப் பற்றிய ஆய்வினால் எடுக்கப்படும் இப் படிப்பினை தற்போதைய நிலையை அறிவதற்கு முக்கிய திறவுகோல் ஆகும். தத்துவார்த்த சிந்தனை பற்றிய இரு பெரும் முன்னேற்றங்களில் வரலாற்று ஆண்டு நிறைவுகளின் கொண்டாட்டங்களை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவத்தின் ஆரம்ப சூத்திரப்படுத்தலின் நூற்றாண்டு விழாவை 2005ம் ஆண்டு குறிக்கும். இக்கருத்து பிரபஞ்சத்தைப் பற்றிய மனிதனுடைய கருத்துருவை முற்றிலும் மாற்றி அமைத்தது. ரஷ்யாவில் 1905ம் ஆண்டு நடந்த புரட்சியின் நூற்றாண்டும் இப்பொழுது வருகிறது; இருபதாம் நூற்றாண்டில் இதுதான் மிகப் பெரிய தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் புரட்சிகர வெடிப்பு ஆகும். அந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சிகள், சர்வதேச சோசலிச இயக்கத்தின் தத்துவார்த்த சிந்தனைக்கு பெரும் ஊக்கம் கொடுத்தது -- அதுதான் லியோன் ட்ரொட்ஸ்கி நிறுவிய நிரந்தரப் புரட்சித் தத்துவம் (Theory of permanent Revolution) ஆகும். அதன் தொழிற்துறை வளர்ச்சித் தரத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த நாட்டிலும் சோசலிசத்திற்கான வாய்ப்பை மதிப்பீட்டிற்கு உட்படுத்தியிருந்த, அப்பொழுதிருந்த தேசிய கருத்துப் படிவங்களுக்கு சவால்விடுக்கும் வகையில், ட்ரொட்ஸ்கி, உலகப் பொருளாதாரத்தின் பொது வளர்ச்சிதான் சோசலிசத்திற்கான சக்திவாய்ந்த ஊக்கியாக இருக்கும் என்று நிரூபித்துக் காட்டினார். எந்த நாட்டிலும் புரட்சிகர நெருக்கடியின் வெளிப்பாட்டின் உறுதியான காரணி குறிப்பிட்ட விதிவிலக்கான நாட்டுக் காரணங்களில் தோன்றா என்றும், சர்வதேச முதலாளித்துவ முரண்பாடுகளில் இருந்துதான் வெளிப்படும் என்று அவர் கூறினார். மேலும், உலகப் பொருளாதார நிலைமையில் சோசலிசப் புரட்சிக்கான காரணங்கள் இருந்ததால், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் சோசலிசத்திற்கு தேசியப் பாதை இருக்க முடியாது. தொழிலாள வர்க்கத்திற்கு நிலைத்திருக்கக் கூடிய ஒரே மூலோபாயம், ஒன்றுபடுத்தப்பட்ட, ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும், உலகப் புரட்சிகர நிகழ்ச்சிப்போக்காக சோசலிசத்திற்காகப் போராடுவதும் அதனைக் கட்டி அமைப்பதும் தான். ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தால் முன்வைக்கப்பட்ட தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகள் வெறுமனே அருவமான வரலாற்றுப் பிரச்சினைகள் அல்ல. அவை இன்றைய உலக நிலைமை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பணிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுவதற்கான அடிப்படையை அமைக்கின்றன. சோசலிசத்திற்கான தேசியப்பாதை என்ற ஸ்ராலினின் கருத்துரு எவ்வாறு இருந்தது என்பது பற்றி ஆராயலாம்; அது "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற கோஷத்தின் கீழ் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு எதிராக பிரகடனப்படுத்தப்பட்டது; அக்கருத்து இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் தகர்ப்பிற்குக் காரணமாயிற்று. இந்த அனுபவத்தைப் பற்றிய ஆய்வு, இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச சோசலிச இயக்கத்தின் விதியைப் புரிந்துகொள்வதற்கான அரசியல் மற்றும் தத்துவார்த்த அடிப்படை ஆதாரத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இன்றைய ரஷ்யாவில் உள்ள பேரழிவு நிலைமகள் 1917ல் போல்ஷேவிக்குகளால் அதிகாரம் கைப்பற்றப்பட்டது தங்கி இருந்த சர்வதேச மூலோபாயம் காட்டிக்கொடுக்கப்பட்டதன் விளைவுகளை விளக்கிக் காட்டுகிறது. நாம் சீனாவின் தலைவிதியையும் காணலாம். புரட்சிகர சிந்தனையின் இறுதி வார்த்தையை ("துப்பாக்கி முனையில் இருந்து அதிகாரம் வருகிறது"), மாவோயிசம் என்ற அற்ப மதியீனத்தில்தான் இருக்கிறது என தாங்கள் கண்டுபிடித்திருந்ததாக தீவிர இடது போக்குகள் சமீப ஆண்டுகள் வரை நம்பிக்கொண்டு இருந்தனர். உண்மையில் உலகம் முழுவதும் இருந்த மாவோயிசக் குழுக்கள் இடையே ட்ரொட்ஸ்கிசத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இருந்தனர். தீவிரப் போக்கினர் மத்தியிலும் லியோன் ட்ரொட்ஸ்கியின் எண்ணங்களுக்கு அரசியல் பரிவுணர்வு காட்டியவர்கள் மத்தியிலும் கூட, சீனப்புரட்சியின் "வெற்றி", சோசலிசத்தின் வெற்றிக்கு நான்காம் அகிலத்தை அமைப்பது இன்றியமையாதது என்ற ட்ரொட்ஸ்கியின் கூற்றை மறுத்தது என்ற கருத்து அடிக்கடி வெளிப்படுத்தப்பட்டது. மாவோவையும், பின்னர் ஹோ சி மின்னையும், காஸ்ட்ரோவைக் குறிப்பிடத் தேவையில்லை, ட்ரொட்ஸ்கியும் அவருடைய பழைய பாணி கருத்துருக்கள், வழிமுறைகள், முன்னோக்குகள் மற்றும் தொல்சீர் "உயர்தர மார்க்சிசத்தின்" மூலோபாயம் விஞ்சி நிற்கவில்லையா? சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளைப் பொறுத்தவரையில் மாவோவுடைய கட்சியின் தளமாகிய தொழிலாள வர்க்கமற்ற, அதிகாரத்துவத்தினரின் விமர்சனத்திற்கு ஆளானார்கள், தங்களுடைய கோட்பாடுகளில் வளைந்து கொடுக்காதவர்கள் பல தசாப்தங்கள் சிறையில் வாடினர்; அவர்கள் நம்பிக்கையற்ற "குறுங்குழுவாதிகள்" மற்றும் "புரட்சியிலிருந்து வெளியேறும் அகதிகள்" ஆக இருக்கவில்லை. 2004ம் ஆண்டின் நிகழ்வுகளை "விரைவாகப் பார்ப்போம்". மாவோவுடைய சீனாவிற்கு என்ன ஆயிற்று? இதன் மலிவுகூலி உழைப்பு தொழிலாளர் அடிப்படையைத்தான், இன்றைய உலக முதலாளித்துவம் தப்பிப் பிழைத்துக்கொள்ள நம்பியிருக்கிறது. நவீன உலகப் பொருளாதார சமன்பாட்டிலிருந்து சீனாவை கழித்து விட்டுப் பார்த்தால் அமெரிக்க முதலாளித்துவத்தின் இன்றைய நிலை என்ன ஆகும்? 2003 ம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வணிகம் 190 பில்லியன் டாலராக இருந்தது. அமெரிக்காவுடன் கனடா, மெக்சிகோவிற்கு அடுத்து மூன்றாம் இடத்தின் வர்த்தகப் பங்காளியாக சீனா உள்ளது. சீனாவுடன் அமெரிக்க வணிகப் பற்றாக்குறை 135 பில்லியன் டாலர்கள் ஆகும்; வரலாற்றில் இது போன்ற பற்றாக் குறையை எந்த நாடும் கொண்டிருந்ததில்லை. அமெரிக்க முதலாளிகள் அரசாங்கம் விற்கும் சொத்துக்களை வாங்குவதற்கும், சீன உள்நாட்டுச் சந்தையில் நுழைவதற்கும் பெருந்துடிப்புடன் உள்ளதால் அமெரிக்க மூலதனம் சீனாவிற்குள் கொட்டுகின்றது. அமெரிக்க முதலாளிகளை சீனாவில் ஈர்ப்பது என்ன? "பெரும் ஓநாய்" போன்ற அவர்களுடைய உபரி மதிப்பு மற்றும் இலாபத்திற்கான வேட்கை, அனைத்தையும் விட மிகக் குறைவான தொழிலாளர் ஊதியத்தால் தூண்டப்படுகிறது. ஒரு சீனத் தொழிலாளி ஒப்பிட்டுப் பார்க்கையில் அமெரிக்க அல்லது ஐரோப்பிய தொழிலாளி பெறும் கூலியில் பதினைந்தில் ஒரு பங்கைத்தான் பெறுகிறார். சீனா இப்பொழுது ஆதிக்கம் செய்யும் ஆடைத் தொழிலில், ஒரு மணிக்குச் சராசரியாக 40 சென்டுகள் என்பது மெக்சிகோவில் ஒரு தொழிலாளருக்கு கொடுக்கப்படும் கூலியில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ஐ.நா, 16.1 சதவிகித சீனர்கள் (கிட்டத்தட்ட 208 மில்லியன்கள்) நாள் ஒன்றுக்கு 1 டாலரை விடக் குறைவாகப் பெறுகின்றனர் என்றும் 47.3 சதவீதத்தினர் (615 மில்லியன்) 2 டாலருக்கும் குறைவான ஊதியத்தை அன்றாடம் பெறுகின்றனர் என்று மதிப்பிட்டுள்ளது. இதுதான் உலக வங்கியின் பார்வையில், சீனாவை, உலகில் மிகச் சாதகமான முதலீட்டிற்கான சூழ்நிலை உள்ளவற்றுள் ஒன்றாக மாற்றி உள்ளது என்ற கருத்தாகும். [10] சீனாவை மகத்தான அளவிற்கு ஏகாதிபத்தியவாதிகள் சுரண்ட விட்டிருப்பது ஒரு பெருந்தீமையான சமுதாய விலையைப் பற்றியுள்ளது. ஏகாதிபத்திய முதலீட்டின் நலன்கள் ஊழல் மலிந்த சீன அரசாங்கக் குழுக்களாலும் கட்சி அதிகாரத்துவத்தினாலும் அனுபவிக்கப்படும் அதேவேளை, நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள், குறிப்பாகக் கிராமப் பகுதிகளில், எதிர்கொண்டு வருவது பேரழிவைவிடக் குறைந்தது அல்ல. ஒருவர் உலகப் பொருளாதாரத்தில், சீனாவின் தலையெழுத்தை ஆராயும்போது, ஸ்ராலினிசத்தின் இன்னொரு மாற்றுவடிவான மாவோயிசம், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவம் தப்பிப் பிழைக்க கணிசமாக உதவியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. ஆனால் இந்நிலைமைக்கு இன்னொருபக்கமும் உள்ளது. அமெரிக்க, சர்வதேச மூலதனம் சீனாவின் குறைந்த கூலி உழைப்பு வளங்களை நம்பியிருப்பது அவர்களை அந்த நாட்டை உச்ச முறையில் சுரண்டுவதால் ஏற்படும் நிலைமையில் இருந்து தவிர்க்க முடியாமல் ஊற்றெடுக்கும் வெடிப்புத் தன்மை வாய்ந்த சமுதாய விளைவுகளின் ஆபத்திற்குப் பெரிதும் ஆளாக்கும். இவ்வாறு, உலக அளவில் வளர்ந்து வரும் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தினால் பண்பிடப்படும் ஒரு புதிய காலக்கட்டதிற்குள் நாம் நுழைகிறோம். மார்க்சிச இயக்கத்தை இன்று எதிர் கொண்டுள்ள சவால், இந்த உலக இயக்கத்தை அதன் சர்வதேசத் தன்மையின் நனவுடன் தோய்த்து, அதற்கு மீண்டும் சோசலிச நம்பிக்கைகளால் புத்துயிர் அளித்து, கடந்த நூற்றாண்டின் படிப்பினைகளின் அடிப்படையில் அதற்குப் பயிற்சி அளித்தல் ஆகும். இதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலக சோசலிச வலைத் தளம் ஆகியவற்றின் முன்னோக்கு ஆகும்; 2004 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி தன்னுடைய தலையீட்டிற்கு இதைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக, சோசலிச சமத்துவக் கட்சி, தன்னுடைய தேசிய, மாநில, உள்ளூர் பதவிகளுக்கு தனது வேட்பாளர்களை வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்யும் முயற்சியில் எவ்வளவு மாநிலங்களில் முடியுமோ, அவற்றில் பதிவு செய்ய தீவிரமான, உற்சாகமான பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இது ஒரு கடினமான வழிவகையாகும்; எங்களுடைய வேட்பாளர்கள், மூன்றாம் கட்சி அதிகாரபூர்வ அந்தஸ்தை வாக்குச் சீட்டில் பெற முடியாமல் தடுக்கும் ஜனநாயக விரோதச் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். பல மாநிலங்களும், மூன்றாம் கட்சிகள் பல்லாயிரக் கணக்கில் வாக்காளர்கள் கையெழுத்துக்களை பெற வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. இந்த ஆண்டு, ஜனநாயகக் கட்சி, மூன்றாம் கட்சி வேட்பாளர்களின் மனுக்களில் உள்ள கையெழுத்துக்களை திட்டமிட்டு சவால்செய்வதை ஒரு கொள்கையாகவே கொண்டிருக்கின்றது. கடந்த சில மாதங்களாக சோசலிச சமத்துவக் கட்சி அத்தகைய அறைகூவல்களை சமாளித்துவருகிறது. இதுவரை நம் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்களை நியூ ஜேர்சி, ஓகையோ, அயோவா, கோலராடோ, வாஷிங்டன் ஆகிய மாநிலங்களில் வாக்குச்சீட்டு பதிவுத் தகுதியில் வைத்துள்ளோம். பில் வான் ஒகெனும், ஜிம் லோரன்சும் மின்னிசோட்டாவிலும் தகுதி பெறுவர் என்று நம்புகிறோம். மைன், மிச்சிகன், இல்லிநோய் ஆகியவற்றில் மாநிலங்களில், மாநில, மாவட்ட அளவிலும் சோசலிச சமத்துவக் கட்சி தன்னுடைய வேட்பாளர்களை வாக்குச்சீட்டில் கொண்டிருக்கும். உழைக்கும் மக்கள் தங்களுடைய வாக்குகளை எங்கள் வேட்பாளர்கள் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுகிறோம். தேசிய சட்டமன்றத் தேர்தல்களில், டேவிட் லோரன்ஸ், ஓகையோவில் வாக்குச்சீட்டுப் பதிவில் இருந்து மிக ஜனநாயக விரோதச் சட்டங்களினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளார்; அங்கு அவருடைய பெயரை எழுதுமாறு நாங்கள் வாக்காளர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். ஆனால் எங்களுடைய பிரச்சாரத்தின் மைய நோக்கம் வாக்குகளைப் பெறுவது அல்ல; தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் படிப்பினைகளை அளித்து, உலக நிகழ்வுகள் பற்றிய அவர்களுடைய புரிதலை ஆழ்ந்த தன்மையுடையதாக்கி, வர்க்க நனவை அவர்களிடையே வளர்ப்பதேயாகும். கிட்டத்தட்ட 66 ஆண்டுகளுக்கு முன்னர், நான்காம் அகிலத்தை தோற்றுவித்தபோது, லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார்: "நாம் மற்ற கட்சிகள் போன்ற ஒரு கட்சி அல்ல. நம்முடைய அவா கூடுதலான உறுப்பினர்கள், கூடுதலான செய்தித்தாட்கள், நம்மிடையே கூடுதலான பணம், கூடுதலான பிரதிநிதிகள் என்பவை அல்ல. அவை எல்லாம் நமக்குத் தேவைதாம், ஒரு வழிவகை என்ற முறையில் மட்டுமே. நம்முடைய நோக்கம் உழைப்பவர்கள், சுரண்டப்படுபவர்கள், ஒரு சோசலிசப் புரட்சி மூலம் முழு சடரீதியான மற்றும் ஆன்ம ரீதியான விடுதலையைப் பெறுவதாகும். இந்த இலக்கை அடைவதற்கு எம்மைத் தவிர வேறு எவரும் தயாரிப்பு செய்யமாட்டார்கள் மற்றும் வேறெவரும் வழிகாட்ட மாட்டார்கள்." 75 ஆண்டுகளுக்குப் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்காக இதுதான் உள்ளது. ஆனால் இதை அடைவதற்குக் குறுக்கு வழி ஏதும் கிடையாது. போர்க்குணம் மிக்க தொழிற்சங்கக் கோரிக்கைகள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இவற்றின் முழு நனவு அற்ற ஒரு துணைவிளைவு ஒரு புறம் இருக்கட்டும், புத்திசாலித்தனமான தந்திரோபாயங்களின் தொகுப்பு அல்ல சோசலிசம். அத்தகைய போராட்ட வடிவங்கள் ஒரு பங்கைக் கொண்டுள்ளன; ஆனால் மார்க்சிசத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கு அது ஒரு பதிலீடு ஆகாது. வர்க்க நனவுடைய தொழிலாளர்களில் கணிசமானோர் மத்தியில் விஞ்ஞான உலக புரட்சிகர கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்பது அவசியமாகும். நம்முடைய சகாப்தத்தின் பிரச்சினைகளுக்கு உலக அளவில் அதிகாரத்தைக் கைப்பற்றி, மற்றும் அதன் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்குள் சக்திமிக்க சர்வதேச சோசலிச கலாச்சாரத்தை மீளவும் கட்சி எழுப்புவதை தவிர தீர்வு இல்லை என்பதை விளக்க இடையறாமல் சளையாமல் போராடுவதன் மூலம்தான் சோசலிசத்தை அடைய முடியும். |