World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Which way forward in the struggle against Hartz IV?

ஜேர்மனி: Hartz IV இற்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கி செல்லும் பாதை என்ன?

By the Socialist Equality Party (Partei für Soziale Gleichheit)
21 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

Hartz IV க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்கள், இந்தச் சமீபத்திய சமுதாய விரோத சட்டத்திற்கு எதிராக மேம்போக்கான பூசி மெழுகும் மாற்றங்களைத் தவிரக் கூடுதலான மாற்றங்களைத்தான் கோருகின்றனர். பொதுமக்களின் பரந்த பிரிவினர் கடுமையான வறுமைக்குத் தள்ளி, ஒரு குறுகிய சிறுபான்மை வெட்கம் கெட்டதனமாக தன்னைச் செல்வச் செழிப்புடையதாக மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு சமூக வளர்ச்சிக்கு எதிரான போராட்டம்தான் இங்கு நடைபெறுகின்றது. பழமொழியில் கூறப்படுவது போல் ஒட்டகத்தின் முதுகில் கடைசியாக ஏற்றப்பட்ட வைக்கோலை ஒத்ததுதான் (நிலைமையை தாங்கமுடியாதளவிற்கு உருவாகியுள்ள பிரச்சனைகளில் இறுதியானதுதான்) இந்த Hartz IV சட்டமாகும்.

சமூக ஜனநாயகவாதிகளும் (SPD), பசுமைகளும் ஆட்சியை 1998ல் எடுத்துக் கொண்டதில் இருந்து, செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி கணிசமாகப் பெருகியுள்ளதை சமீபத்திய புள்ளி விவரங்கள் குறிப்படத்தக்க வகையில் தெளிவாக காட்டுகின்றன.

அதே நேரத்தில் பொதுவாகப் பணம் இல்லா நிலை ஏற்பட்டுவிடவில்லை. ஜேர்மனிய மத்திய வங்கி (Bundesbank) கொடுத்துள்ள புள்ளி விவரங்களின்படி, தனியார் வீடுகளின் சொத்து மதிப்பு (அதாவது நிலச்சொத்தை நீங்கலாக) 2.5 லிருந்து 4 டிரில்லியன் யூரோக்களாக கடந்த பத்து ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த அதிகரிப்பு தனிய செல்வந்தர்களுக்கு சாதகமான தன்மையைத்தான் கொண்டுள்ளது. உயர்மட்ட 10% இனரின் சராசரி வருமானம் 77,000 த்தில் இருந்து 160,000 யூரோக்களாக மேற்கிலும், 27,000 த்தில் இருந்து 56,000 யூரோக்களாகக் கிழக்கிலும் உயர்ந்துள்ளது. அடிமட்ட 25% இனரின் சிறிய உடைமைகள் குறிப்பிடத்தக்க வகையில், 4,900 லிருந்து 2,500 யூரோக்களாக மேற்கிலும், 2,600 லிருந்து 2,000 யூராக்களாகக் கிழக்கிலும் சரிந்துள்ளன. மிக அடிமட்ட 10% இனர் 2003 ஆண்டில் எந்த சொத்தையும் கொண்டிருக்கவில்லை.

வருமானங்களின் வளர்ச்சியும் இதேபோன்ற முறையில்தான் தொடர்ந்துள்ளன. அதிகார பூர்வமான வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் சதவிகிதம், கிட்டத்தட்ட பாதிச் சராசரி வருமானம், 2001 க்கு முந்தைய ஆண்டுகளில் 10 சதவிகிதத்திற்கும் கீழேதான் எப்பொழுதும் இருந்திருந்தது; இது 2 சதவிகிதப் புள்ளிகள் 2002 ல் உயர்ந்து 11 சதவிகிதத்தை எட்டியது. "அனைத்துக் குறியீடுகள் 2002இல் வறுமை, முந்தைய ஆண்டை விடத் தெளிவாக உயர்ந்துவிட்டது என்பதைக் குறிப்பிடுகின்றன." என்று தேசியப் புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது. Hartz IV இதன் வளர்ச்சியை விரைவுபடுத்தத்தான் செய்யும். "இது பின்னர் விரைந்து ஓடும் தன்மையாக வரவுள்ள 10 ஆண்டுகளில் மாறி, கிழக்கில் வறுமை மிக அதிகமாகப் பெருகிவிடும்" என்று பேர்லின்-பிராண்டன்பேர்க்கிலுள்ள சமூக அறிவியியல் ஆய்வு அமைப்பில் உள்ள Hanna Haupt தெரிவிக்கிறார்.

ஸ்தாபிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளும் இந்த நிகழ்ச்சிப்போக்கை ஆதரிக்கின்றன. பழமைவாத கட்சிகளான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்(CDU), கிறிஸ்தவ சமூக யூனியன்(CSU) மற்றும் தாராளவாத சுதந்திர ஜனநாயகக் கட்சியான (FDP) ஆகியவையும் இந்த நிழ்ச்சிப்போக்கின் வேகம் போதாது என்ற புகாரைத்தான் கூறுகின்றன; எங்கு அரசாங்கத்தை அமைக்கவில்லையோ, அங்கு ஜனநாயகச் சோஷலிசக் கட்சி (PDS) "Hartz அகற்றப்படவேண்டும்"---- என்று கூக்குரல் இடுகின்றது. ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் PDS முற்றிலும் எதிரிடையான நிலைப்பாட்டைத்தான் எடுக்கும். பேர்லினுடைய பொருளாதாரத்துறை மந்திரியான Harald Wolf (PDS), வெளிப்படையாகவே "Hartz இன் முக்கிய கூறுபாடுகளை ஆதரிக்கிறார்; அவருடைய கட்சியை சேர்ந்த சக கூட்டாளி, ஹெல்முட் ஹோல்டெர், மெக்லென்பர்க்-பொமெரேனியாவின் தொழிற்துறை அமைச்சர் என்னும் முறையில் அனைத்துக் குறைப்புக்களையும் மேற்பார்வையிடுகிறார். SED கட்சிக்குப் பின்வந்த, முந்தைய கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினியக் கட்சியான ஜனநாயகச் சோசலிசக் கட்சி, முந்தையவற்றின் வழிவகைகளைத்தான் தொடர்ந்து பின்பற்றுகிறது. SED சோசலிசத்தைப் பேச்சளவில் கூறினாலும், தன்னுடைய அதிகாரத்தையும் சலுகைமிக்க நிலைமைகளையும் பாதுகாக்க செயல்பட்டு வருகிறது.

தொழிற்சங்கங்கள் அடிப்படையில் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றன. IG Chemie உடைய தலைவரான Hubertus Schmoldt தன்னுடைய அரசாங்கத்திற்கான ஆதரவை உறுப்பினர்களுக்கு ஒரு சுற்றறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். பல குடிமக்களின் மன வேதனையும், ஏமாற்றத்தையும் தொழிற்சங்கங்கள் பிரதிபலிக்கவேண்டும் என்றாலும், "நம்முடைய பொறுப்பு முக்கியமான சீர்திருத்தங்களைத் தாக்குவது அல்ல" என்று அவர் எழுதியுள்ளார். ஒரு சமூக அரசில் தவிர்க்கமுடியாத சீர்திருத்தம் தொடர்ந்து "மேலும் சுமைகளைத்தான் கொண்டுவரும்". IG Metall, Schmoldt உடைய கடிதத்தை விமர்சித்தாலும், தொழிற்சங்கங்கள் "சீர்திருத்தங்களைத் தடைசெய்யா" என்று அது வலியுறுத்தியுள்ளது.

1989 இலிருந்து படிப்பினைகள்

இப்போக்கு எவ்வாறு நிறுத்தப்படலாம்? பரந்த தட்டினர்கள் கடுமையான வறுமையில் வீழாது தவிர்க்க என்ன செய்யப்படவேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க, பல அடிப்படை உண்மைகள் எதிர்கொள்ளப்பட வேண்டும். சமீபத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் நடத்திய எதிர்ப்பை நாம் முழு உள்ளத்துடன் வரவேற்றாலும்கூட, தவிர்க்கமுடியாத அரசியல் பணிகளைத் தெளிவாக அறிந்து கொள்ளுவதுதான் அவர்கள் திறமையுடன் பதிலடி கொடுக்கத் தேவையான சக்தியைக் கொடுக்கும். இல்லாவிடடால், இன்றைய ஆர்ப்பாட்டங்கள் 1989 ஆம் ஆண்டு திங்கள் போராட்டங்களுக்கு ஏற்பட்ட கதியைத்தான் கொள்ளும்.

1989ம் ஆண்டு "நாம்தான் மக்கள்" என்ற முழகத்தில் தெருவிற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில், ஒரு சிலர்தான் முதலாளித்துவ மீண்டும் அறிமுகப்படுத்துவதின் கொடிய விளைவுகளான----- பாரிய வேலையின்மை, சமூக பாதுகாப்பின்மை, பெருகிவரும் வறுமை இவற்றைக் கற்பனை செய்திருக்கக் கூடும்.

அந்த நேரத்தில், கிழக்கு ஜேர்மனி அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், குடிமக்கள் உரிமை பாதுகாவலர்களும் ஒன்றாக ஒரு "வட்ட மேசை" கூட்டத்தில் அமர்ந்து ஒன்றாக, சந்தை முறை அறிமுகப்படுத்தலும், போட்டியும் விரைவான வாழ்க்கைத்தர உயர்வைக் கொண்டுவரும் என்று உறுதிமொழி அளித்தனர். போருக்கு பிந்தைய மேற்கு ஜேர்மனியின் முன்மாதிரியான ஒரு ''சமூக சந்தை பொருளாதாரம்" போல் அவ்விடத்தில் உதித்தெழும் என்று கூறப்பட்டது. இது ஒரு நனவுபூர்வமான மோசடியாகும். உண்மையில் மேற்கு ஜேர்மனியின் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் ஏற்கனவே ஒரு நீண்ட சரிவிற்கு உட்பட்டுத்தப்பட்டும், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றியும் இருந்தனர்.

பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திமுறையும், நிதிச் சந்தைகளும், சமூக சீர்திருத்தங்களின் அடிப்படையை அழித்துவிட்டது. அத்தகைய சீர்திருத்தங்கள், உலக அளவில் செயல்படும் வங்கிகள்மீதும் பெருநிறுவனங்கள் மீதும் வலியுறுத்தி நடைமுறைப்படுத்த முடியாதவையாகி விட்டன. உயர்ந்த ஊதிய கோரிக்கை மற்றும் வரி உயர்வுக்கு, உற்பத்தியையும் மற்றும் மூலதனத்தையும் வேறு இடங்களுக்கு மாற்றுவதன் மூலம் பெருநிறுவனங்கள் பதிலளிக்கின்றன. சமூக ஜனநாயகவாதிகளும், தொழிற்சங்கங்களும் இந்த போக்கினை எதிர்கொள்ள பலமற்றுள்ளன. ஏனெனில், அவர்கள் உற்பத்தி முறைகள் மீதான தனியார் சொத்துரிமையை முற்றிலும் ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் முதலாளித்துவத்தின் அடியாட்களாகத்தான் செயற்படுகின்றனர்.

சோவியத் ஒன்றியத்தினதும், ஜேர்மன் ஜனநாயகக்குடியரசினதும் நெருக்கடி பின்னணியாக இருந்த அதே அடிப்படை நிகழ்வுதான் இங்கு எழுந்துள்ளது. உலக பொருளாதார உறவுகளின் ஆதிக்கத்தினால் ஒரு தேசிய எல்லைக்குள் திட்டமிட்ட பொருளாதாரத்தை கட்டும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முயற்சி வீழ்ச்சியுற்றது.

சோசலிச தொழிலாளர் கழகம் (சோசலி சமத்துவ கட்சியின் முன்னோடி) முதலாளித்துவம் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு எதிராக எச்சரித்திருந்தது.

1990 ஆம் ஆண்டு கிழக்கு ஜேர்மனி பாராளுமன்றத் தேர்தல் அறிக்கையில், சோசலிச தொழிலாளர் கழகம் தொழிலாளர்களிடம் "ஸ்ராலினிச சர்வாதிகாரத்திற்கு பதிலாக சர்வாதிகார ஜேர்மன் வங்கியை (ஏகாதிபத்தியத்தின் சர்வாதிகாரத்தினால்) மாற்றீடு செய்யும் அனைத்து அரசியல் போக்குகளை நிராகரிக்கப்பட வேண்டும்" என்று கோரியது. "வட்ட மேஜை'' கூட்டத்தில் முதலாளித்துவத்தின் மேன்மைகளைப் பற்றி தீர்க்கமாக, குட்டி முதலாளித்துவத்தினர் கிறுக்குத்தனமாக பெரும் உவகையைக் காட்டிய அதே நேரத்தில்தான் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் கடந்த பத்து ஆண்டுகளில், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் பாரியளவிற்கு சரிந்திருந்தன."

சோசலிச தொழிலாளர் கழகம், SED ஆட்சிக்கு எந்த ஆதரவையும் கொடுக்காமல் அதற்கெதிரான இயக்கத்தை ஆதரித்தது. ஆனால் நாம் இந்த இயக்கம் ஒரு சர்வதேசச் சோசலிச முன்னோக்கில்தான் வெற்றி அடைய முடியும் என்று எச்சரித்திருந்தோம். "முன் எப்பொழுதைக் காட்டிலும், இன்றைய நிலைமை சர்வதேச தொழிலாள வர்க்கம் அனைத்து எல்லைகளையும் கடந்து ஸ்ராலினிசம், முதலாளித்துவம் இவற்றை அகற்றுவதற்கான பொதுப் போராட்டத்தை நடத்தவேண்டிய கட்டாயம் வந்துள்ளது.... ஒரு புதிய காலகட்டத்தின் மிருகத்தனமான அடக்குமுறை, தேசிய மோதல்கள், போர்கள் ஆகியவற்றிற்கு இது ஒன்றுதான் மாற்றீடாகும். ஏற்கனவே, ஐரோப்பிய வரலாற்று குப்பை மேற்புறத்திற்கு கொண்டுவரப்பட்டு மற்றும் இரண்டு உலகப் போர்களுக்கு காரணமாக இருந்த முக்கிய விளைவுகளுக்கு மறுபடியும் தீமூட்டும் போக்கு நடைபெறுகின்றன."

முடிவுகள்

இந்த எச்சரிக்கைகள் இப்பொழுது முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

Hartz IV இனால் மிகத்தெளிவாக, கிழக்கு ஜேர்மனிய மாநிலங்கள் கடுமையான தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளன. பல ஆண்டுகளும் வேலையற்று இருந்த மில்லியன் கணக்கான மக்கள் தங்களுடைய வாழும் வழியை இழுந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்சினை கிழக்கு ஜேர்மனியிடனோ அல்லது முழு ஜேர்மனியினுள் மட்டுப்படுத்தப்படவில்லை. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களையும் இது கவனத்திற்கு இழுத்துள்ளது.

கிழக்கு ஐரோப்பாவில், முதலாளித்துவத்தின் மீட்சியின் விளைவுகள் இன்னும் மோசமாகத்தான் உள்ளன. போலந்தில் மட்டும் மில்லியன் கணக்கானவர்கள், கப்பற் தளங்கள், உருக்கு தொழில், சுரங்கங்கள் ஆகியவை மூடப்பட்டதை அடுத்து வேலையை இழந்துள்ளனர். வேலைசெய்பவர்களோ மேற்குப் பகுதியினர் பெருவதில், ஒரு சிறிய பகுதியைத்தான் சம்பாதிக்கிறார்கள். உலகின் பெரும் பணக்கார நாடான அமெரிக்காவில், சமுதாயச் சமத்துவமற்ற நிலை முன்கண்டிராத வகையில் உயர்ந்துள்ளது. 40 மில்லியனுக்கும் மேலான அமெரிக்க மக்களுக்குச் சுகாதாரக் காப்பீடு கூடக் கிடையாது. ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும், விவரிக்க இயலாத வறுமை போர்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்கள் இவற்றுடன் இணைந்துள்ளது.

சில வாசகர்களுக்கு 1989ல் நாம் புதிய போர்களைப் பற்றி விடுத்த எச்சரிக்கைகள் நடைமுறையாகும் வாய்ப்பு இல்லை எனத் தோன்றியிருக்கக் கூடும்; ஆனால் இவை ஈராக்கில் நடைபெறும் நிகழ்வுகளினால் முழுமையாக உறுதி செய்யப்படுகின்றன. இருக்கும் ஒரே பெரிய வலிமையுடைய நாடு என்ற முறையில் அமெரிக்கா, தன்னுடைய இராணுவ வலிமையை பயன்படுத்தி உலகத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முற்பட்டுள்ளது. ஆத்திரமூட்டல் இல்லாமல் ஈராக்கிற்கு எதிராக ஒரு சட்டவிரோதமான போரை நடத்தியது, பயங்கரவாதத்திற்கும், பேரழிவுகரமான ஆயுதங்களுக்கு எதிரானதல்ல. அது எண்ணெய் மற்றும் மூலோபாய சக்தியை பற்றியதாகும். கெர்ரி ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றிபெற்று, ஒரு ஜனநாயகக் கட்சி நிர்வாகம் வந்தாலும் இதே போக்குத்தான் நீடிக்கும்.

ஆரம்பத்தில் சில தயக்கங்களைக் காட்டியபோதிலும், ஜேர்மனிய அரசாங்கம் பின்னர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு உடன்பட்டது. அதே நேரத்தில், சர்வதேச தலையீட்டிற்கு திறமைவாய்ந்த போரிடும் சக்தியாக ஜேர்மன் இராணுவம் மாற்றமடைந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தது போலவே, இராணுவ அதிகரிப்பின் அச்சுறுத்தல், உலகத்தையே பேரழிவிற்கு இட்டுச் செல்லும் நிலைதான் இப்பொழுது இருக்கிறது.

சமூக ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவர் ஒஸ்கார் லபொன்ரைன் வெளியிட்டுள்ள கருத்தான "தேர்தல் மாற்றீடு" மற்றும் பிற குழுக்களும்--- இந்த நிலைமையின் கீழ்---- 1970 களின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளுக்கு மீண்டும் திரும்பிவிடலாம் என்ற கருத்துக்கள், முற்றிலும் கேலிக்கூத்தானவையும், நேரடி மோசடியும் ஆகும். Hartz IV க்கு எதிரான இயக்கத்தை சமூக ஜனநாயக கட்சியின் கொள்கை வழியின் பின்னால் மீண்டும் கொண்டுசெல்வதற்கு இது சேவை செய்கிறது.

இப்பொழுதுள்ள ஆபத்துக்களை எதிர்த்து தீர்க்கரமாக போராடுவதற்கு ஒரு ஐக்கியத்துடன் கூடிய தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தினால்தான் முடியும். ஒரு சர்வதேச வர்க்கத்தின் ஒரு பாகமாக கிழக்கு, மற்றும் மேற்கு ஜேர்மனியின் தொழிலாளர்கள் தங்களைக் கருத்தில் கொண்டு, நனவு பூர்வமாக கிழக்கு ஐரோப்பா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுவதிலும், அமெரிக்கா, மத்திய கிழக்கு இவற்றில் உள்ள தொழிலாளர் வர்க்க சகோதர சகோதரிகளுடன் நெருங்கிய தொடர்பை உருவாக்க முயற்சித்தல் வேண்டும். முதலாளித்துவத்தின் இலாப முறைக்குப் பதிலாக மக்களுடைய தேவைகள் முன்னுரிமை பெறுதல் வேண்டும். இதற்கு சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேசப் பொருளாதார வாழ்வு மறுசீரமைக்கப்படுதல் இன்றியமையாததாகும். பெரிய வங்கிகளும், பெருநிறுனங்களும் பொதுக் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

மூத்த ஓய்வூதியம் பெறும் குடிமக்கள், வேலையற்றோர், இளைஞர் ஆகியோரின் நலன்களைப் பிரதிபலிக்கும் ஒரு புதிய கட்சிக்கு அஸ்திவாரங்களை விரிக்கும் நோக்கத்தை சோசலிச சமத்துவ கட்சி கொண்டுள்ளது. இது ஓர் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் ஒரு பகுதி ஆகும். இதன் நீண்ட கால வரலாறு, 1923 இல் லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத்தில் இடது எதிர்ப்பை நிறுவிய காலத்திற்கு செல்கிறது; இது ஸ்ராலினிசத்திற்கும், சமூக ஜனநாயகத்திற்கும் எதிராக மார்க்சிச முன்னோக்கைப் பாதுகாத்து வந்துள்ளது.

12 மொழிகளில் வெளிவருவம் உலக சோசலிச வலைதளம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அங்கமாக செயலாற்றி வருகிறது; இது மிக முக்கிமான சர்வதேச நிகழ்வுகளை அன்றாட ஆய்விற்கு உட்படுத்துகின்றது. சர்வதேச தொழிலாள வர்க்கத்துடைய அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்வதன் ஊடாக ஒரு சோசலிச முன்னோக்கை முன்வைக்கின்றது.

ஒரு முக்கியமான முன்னோக்கான பாதையை காணவிழைவோர் அனைவரும் நம்முடைய ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ளுமாறு அழைக்கப்பட்டு, உலக சோசலிச வலைத்தள வாசகர் வட்டங்களை நிறுவவும், சோசலிச சமத்துவ கட்சியில் சேரவும் அழைப்புவிடுக்கப்படுகிறார்கள்.

Top of page