World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காAs the 1,000th US soldier dies in Iraq The fight to end the war means opposing both Bush and Kerry போரை முடிப்பதற்கான போராட்டம் புஷ்ஷையும், கெர்ரியையும் எதிர்ப்பதை அர்த்தப்படுத்துகிறது By Bill Van Auken, SEP presidential candidate ஈராக்கில் 1000- அமெரிக்கப் படையினர் மடிந்து, கடுமையான மைல் கல்லை கடந்து செல்வது போரால் சீரழிக்கப்பட்ட நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்திருப்பதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான போராட்டத்தை இரட்டிப்பு வேகத்தோடு கட்டாயம் நடத்தவேண்டிய தருணமாக இது இருக்கிறது. புஷ் நிர்வாகத்திற்கு எதிராக மட்டுமல்ல, அந்தப்போருக்கு அங்கீகிகாரம் தந்து அதை நீட்டிப்பதாக உறுதிமொழியளித்துள்ள ஜனநாயகக் கட்சிக்கும், அதன் வேட்பாளர் ஜோன் கெர்ரிக்கு எதிராகவும் போராட்டம் நடத்தவேண்டும் என்பதுதான் இதன் பொருளாகும். பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர் அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்தால் கொல்லப்படுவதையும், காயமடைவதையும் மற்றும் சித்திரவதை செய்யப்படுவதையும் பார்க்கும் ஈராக்கிய மக்களுக்கு பின்னர், இந்தப் போரினால் பிரதானமாக பாதிக்கப்படுவது அமெரிக்க துருப்புக்கள்தான். போரிட்டு மடிய அவர்களை அனுப்பியதற்கு தரப்பட்ட ஒவ்வொரு காரணமும் பொய் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அங்கு பேரழிவு ஆயுதங்களும் இல்லை அல் கொய்தா பாக்தாத் தொடர்பும் இல்லை. புஷ் நிர்வாகம் ஈராக்கை ஜனநாயகத்தின் ஒளிவிளக்காக மாற்றுவதாக உறுதியளித்தது. ஆனால் அதற்கு மாறாக பெரும்பாலான மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும் கொலைகார முரடனும் சிஐஏ- இன் நீண்டகால ஏஜெண்டுமான ஒருவரின் தலைமையில் பொம்மை ஆட்சியை உருவாக்கியிருக்கிறது. இந்த எல்லா தவறான சாக்குப்போக்குகளையும் நீக்கிவிட்டுபார்த்தால், அதன் பரவலான எண்ணெய் வளத்தை கைப்பற்றும்பொருட்டு ஈராக்கை இராணுவ வலிமையால் அடிமைப்படுத்தும் நோக்கம் கொண்ட இந்தப் போர் ஒரு கிரிமினல் காலனியாதிக்க நடவடிக்கையாகும். ஈராக்கில் கொல்லப்பட்ட போர்வீரர்களில் பாதிக்கு மேற்பட்டோர் 30- வயதிற்கும் குறைந்தவர்கள் மிகப்பெரும்பாலோர் தொழிலாள வர்க்கப் பகுதிகளில் இருந்து இராணுவத்தில் சேர்ந்தவர்கள், இவர்களில் பலரது வாழ்வு, வாஷிங்டனின் உள் விவகாரங்களை அறிந்தவர்கள் வர்ணிப்பதைப்போன்று, உயர்நிலைப் பள்ளியிலிருந்து நேரடியாக வேலை கிடைக்க வேண்டுமென்பதற்காக அல்லது கல்லூரியில் படிக்க பணம் கிடைக்கும் என்பதற்காக இராணுவத்தில் சேர்வதை "தேர்வாகக் கொண்டு" தேர்ந்தெடுத்த போரில் அனாவசியமாக தியாகம் செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய இளைஞர்களும், இளம் பெண்களும் ஒரு நாளைக்கு மூன்று பேர் வீதம் இப்போது மடிந்துகொண்டிருக்கிறார்கள். ஈராக்கில் மடிந்த 1000- வது போர்வீரர் யார் என்பது இன்னும் தெரியாதவேளை, பென்டகன் புதன்கிழமையன்று வெளியிட்ட பட்டியலில் 19- வயது இராணுவ வல்லுனர் Tomas Garces பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இவர் Taxas Rio Grande பள்ளத்தாக்கு நகரான Weslaco- வை சேர்ந்தவர், அங்கு வேலையில்லாத்திண்டாட்டம் 15- சதவீதமாக உள்ளது. ஓகியோ, மதினாவைச் சேர்ந்த, தனியார் பகுதியில் முதல் வகுப்பு பெற்ற, 21-வயது Devin Grella வும் மடிந்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார் அந்த மாநிலத்தில் அவர் மடிந்த 35-வது இராணுவத்தினராவர். மாண்டவர்கள் தவிர 7000-பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் நிரந்தரமாக உடல் ஊனமுற்றவர்கள். ஈராக்கில் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் ஈராக் மக்களது உறுதியான எதிர்ப்பை அமெரிக்கப்படைகள் எதிர்கொண்டதால், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1,100-இராணுவத்தினரும் கடற்படையின் நிலப்படைவீரர்களும் காயமடைந்துள்ளனர். நவம்பர் தேர்தலுக்குப்பின்னர் மடிந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று கருதுவதற்கு எல்லாவிதமான காரணமும் உண்டு. புஷ் நிர்வாகம், ஈராக்கியரின் எதிர்ப்பை நசுக்கவும் தற்போது அவர்கள் வசமுள்ள நகரங்களை மீண்டும் கைப்பற்றுவதற்கு மிகத்தீவிரமான நடவடிக்கைகளை இப்போது மேற்கொண்டால் அதனால் நவம்பர் தேர்தலில் பாதிப்பு ஏற்படக்கூடுமென்று கருதி இவ்வாறு தீவிர தாக்குதலை திட்டமிட்டே தள்ளிப்போட்டிருக்கிறது. இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு முன்னேற்பாடுகள் இப்போதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செவ்வாய் கிழமையன்று பென்டகனில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளித்த கூட்டுப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் ரிச்சர்ட் மயர்ஸ், ஈராக் எதிர்ப்பினர் கட்டுப்பாட்டிலுள்ள நகரங்களுக்கும் பகுதிகளுக்கும் எதிராக "பின்னர் படைகளை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதற்கான நிலைமைகளை வகுப்பதற்கு" ஈராக்கில் அமெரிக்க இராணுவம் இப்போது வேலை செய்து கொண்டருக்கிறது என்று குறிப்பிட்டார். அத்தகைய நடவடிக்கைகள் எடுப்பதற்கு இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை தாமதப்படுத்தப்படும் என்று ஈராக்கிலுள்ள தளபதிகள் கோடிட்டுக்காட்டியுள்ளனர். ஈராக்கில் 1000-மாவது இராணுவப் பலி தொடர்பாக புஷ் நிர்வாகம் எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. பாதுகாப்புத்துறை செயலாளர் ரம்ஸ் பெல்ட், இந்த எண்ணிக்கை உலக அளவில் "பயங்கரவாதத்தின் மீதான போரின்" ஒரு பகுதியாக, 2001- செப்டம்பர் 11ல் நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் இறந்தோருடன் ஒப்பிட்டு மற்றும் மிகவும் அருவெறுக்கத்தக்கவகையில் ஒன்றுசேர்த்து "ஒப்பீட்டளவில் சிறியது" என்று குறிப்பிட்டார். கெர்ரி இந்த புள்ளிவிவரத்தை "துயரமானது" என்று குறிப்பிட்டு ஈராக் போர் தொடர்பான ஜனநாயகக் கட்சி பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக சேர்த்துக்கொண்டார். தொடக்கநிலை தேர்தல்களில் கெர்ரி தன்னை போர் எதிர்ப்பு வேட்பாளராக ஈராக்கில் புஷ்ஷின் கொள்கைகளை எதிர்ப்பவராக காட்டிக்கொண்டதை நினைவுபடுத்த வேண்டும். அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு போதுமான வாக்குகள் கிடைத்தவுடன் ஈராக் ஒரு பிரச்சனையாக கருதப்படவில்லை. போருக்கு பரந்த மக்களிடையே உள்ள எதிர்ப்பிலிருந்து கெர்ரி திட்டமிட்டு தன்னை விலக்கி வைத்துக்கொண்டார். ''தோல்வி ஒரு தேர்வு அல்ல'' என்ற முழக்கத்தை மேற்கொண்டார் மற்றும் ஆக்கிரமிப்பை நீடிப்பதாகவும் அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை கூட உயர்த்துவதாகவும் உறுதியளித்தார். அதற்குப்பின்னர், சென்றமாதம் ஈராக்கிடம் ஆயுதங்கள் இல்லை அல்லது நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ள பயங்கரவாதி தொடர்புகள் இல்லை என்பது தனக்கு தெரிந்திருந்தால்கூட அப்போதும் ஈராக்கின் மீது "முன்கூட்டிய" படையெடுப்பை துவக்குவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் புஷ்ஷிற்கு அங்கீகார வாக்குகள் தந்ததை நிறுத்திக்கொண்டிருக்க மாட்டேன் என்று கெர்ரி விளக்கினார். இந்த அறிக்கையோடு ஈராக் பிரச்சனையை புஷ்ஷிற்கு ஜனநாயகப் பிரச்சாரம் விட்டுவிட்டது. தற்போது, குடியரசுக் கட்சிக்காரர்கள் இடைவிடாது அவர்மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாலும், பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு உறுதியாக வாக்களிப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாலும், கெர்ரி ஈராக் பிரச்சனையை தனது பிரச்சாரத்தின் கருப்பொருளாக மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார். தொழிலாளர் தின தொடக்கத்தில், ஈராக் போரை கெர்ரி ''தவறான திட்டத்தில் தவறான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தவறான போர்'' என்று வர்ணித்தார். ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்கு முன்னர் புஷ் இந்தப்போருக்கான மோசடி வாதத்தை எழுப்பிய அதே மண்டபத்தில், புதன்கிழமையன்று உரையாற்றுவதற்காக கெர்ரி ஓகியோவிலுள்ள Cincinnati- க்கு சென்றார். அங்கு உரையாற்றிய கெர்ரி புஷ் நிர்வாகம் பல்வேறு "தவறான கணிப்புக்களில்" ஈடுபட்டதாக கண்டனம் செய்தார். ''கவனமான திட்டமிடாமல் நட்புநாடுகளும் இல்லாமல் போருக்குச் சென்றது அவரது தவறான கணக்கீடாகும். இதன் விளைவாக ஈராக்கில் செலவாகும் தொகையில் 90- சதவீதத்தை அமெரிக்கா ஏற்றுள்ளது. வளைகுடாப் போரோடு ஒப்பிடும்போது நமது நட்பு நாடுகள் 95-சதவீத செலவினத்தை ஏற்றுக்கொண்டன'' என்று கெர்ரி குறிப்பிட்டார். வாஷிங்டன் செலவினத்தை ஏற்றுக்கொண்டது என்பதைத்தவிர ஈராக் போரில் கெர்ரியும், அவரது சக வேட்பாளரான ஜோன் எட்வார்சும் அங்கீகாரம் அளித்த போரில் திட்டவட்டமாக எது "தவறு" என்று கெர்ரி காண்கிறார்? அந்தப்போர் பொய்களை அடிப்படையாகக்கொண்டு சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுகின்ற வகையில் நடத்தப்பட்டது என்பதைப்பற்றி கெர்ரி எதுவும் கூறவில்லை. பாக்தாத்தில், பல்லூஜாவில், நஜாப்பில் மற்றும் ஈராக்கின் பெரும் நெரிச்சல் மிக்க நகரங்களில், போர்க்குற்றமாக தொடர்ந்து விமானப்படைகுண்டு வீசி தாக்குதல்களை நடத்திக்கொண்டிருப்பது பற்றி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எதுவும் சொல்லவில்லை. அபு கிறைப் மற்றும் இதர அமெரிக்க தடுப்புக்காவல் சிறைமுகாம்களில் ஈராக் குடிமக்கள் கொடுமைசெய்வதில் இன்பம் காணும் அடிப்படையில் சித்திரவதை செய்யப்பட்டதைப்பற்றி கெர்ரி எதுவும் கூறவில்லை. போரில் தவறான அடிப்படை என்று அவர் கூறுகின்ற பட்டியலிலும் இடம்பெறவில்லை. அப்பட்டமாகச் சொல்வதென்றால் ஈராக் மக்களுக்கு என்ன நடந்தது? என்பதே கெர்ரிக்கு பிரச்சனையல்ல. ஈராக்கில் 1000-மாவது அமெரிக்கப் படையாள் பலியானதை நாம் குறிப்பிடுகின்ற இந்த நேரத்தில், வாஷிங்டன் நிர்வாகம் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குப்பின் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஈராக் குடிமக்கள் பலியானது பற்றி கணக்கெடுப்பதற்குக் கூட கவலைப்படவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்டியாகவேண்டும். ஈராக்கில் 37,000- பேர் கொல்லப்பட்டிருக்கலாம் பலர் காயமுற்றிருக்கலாம் என்று மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஈராக்கின் மக்கள் தொகையில் 60- சதவீதம் 18- வயதிற்கும் குறைந்த இளைஞர்கள். இவர்களில் அமெரிக்காவின் குண்டுகளால், ராக்கெட்டுகளால், பீரங்கிகளால், துப்பாக்கிகளால் சுடப்பட்டு மடிந்தவர்கள் அல்லது முடமாக்கப்பட்டவர்கள் குழந்தைகளாவர். அவர்களது மரணங்களும், துயரங்களும், பதிவு செய்யப்படாமல் விடப்படுகின்றன, தொடர்ந்து பிரதான ஊடங்கள் அனைத்தினது போர்ச் செய்திகளிலிருந்தும் முன்தணிக்கை செய்யப்படுகின்றன. எனவே கெர்ரியை பொறுத்தவரை இந்தப்போரில் என்ன தவறு நடந்திருக்கிறது? அவரது வேறுபாடுகளெல்லாம் தந்திரோபாயங்கள் மற்றும் பாணி பற்றியவை ஆகும். புஷ் நிர்வாகம் தொடங்கியுள்ள கொடூரமான கிரிமினல் ஆக்கிரமிப்பு வெற்றிகரமாக நிறைவுபெற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால் அவர் வலியுறுத்துவதெல்லாம் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் மிகப்பெருமளவில் சர்வதேச ஆதரவை வென்றெடுக்க முடியும், அதேவேளை அமெரிக்காவிற்குள் பெருகிவரும் போர் எதிர்ப்பு உணர்வுகளை அடக்கிவிட முடியும் என்று அவர் வலியுறுத்துகிறார். கெர்ரி அமெரிக்கத் துருப்புக்கள் தனது பதவிக்காலம் முடிந்த பின்னர் விலக்கிக்கொள்ளப்படுமென்று அறிவித்திருக்கிறார். இதன் பொருள் என்னவென்றால் மேலும் நான்காண்டுகளுக்கு போர் நீடிக்கும் மேலும் ஆயிரக்கணக்கான அமெரிக்கத்துருப்புக்களும், பல்லாயிரக்கணக்கான ஈராக் மக்களும் பலியாவார்கள். இந்த அரைமனது உறுதிமொழியையும், ஒரு எச்சரிக்கையுடன் கூறியிருக்கிறார். மிக விரைவாக ஈராக்கிலிருந்து படைகளை விலக்கிக்கொள்வதால் அங்கு அரசியலில் ஓர் "வெற்றிடம்" ஏற்படுமென்று கூறுகிறார். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஆதரவான ஆட்சி உறுதியாக வலுப்படுத்தப்படுகின்றவரையில் ஆக்கிரமிப்பு நீடிக்கும் என்பதுதான், இந்தக் குறிக்கோளின் அர்த்தம் முடிவற்ற காலனித்துவ போர் ஆகும். குடியரசுக் கட்சிக்காரர்கள் கெர்ரி மீது சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் சேற்றைவாரி இறைக்கின்றனர் மற்றும் அவரது அரசியல் சாதனையை திரித்துவரும் அதேவேளை, அவர்கள் "பிளிப்-ப்ளாப், பிளிப் -ப்ளாப்" என முழங்கும் நையாண்டிப்பாட்டில் சில அரசியல் அடிப்படைகள் உள்ளன. ஈராக்கிய போர் தொடர்பாக கெர்ரி பிரச்சாரத்தின் திருகுதாளங்கள் அனைத்துமே தேர்தல்களால் அல்லது சில தனிப்பட்ட உறுதியின்மையால் உந்தப்படும் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் அது அவரை அமெரிக்காவின் "தலைமை தளபதி" என்ற பட்டத்தைப் பெறுகின்ற தகுதியற்றதாக்குகிறது என்றும் புஷ்ஷும், அவரது பிரச்சாரத்தைக் கையாளுபவர்களும் சித்திரிக்கின்றனர். உண்மையிலேயே கெர்ரியின் பிரச்சனை என்னவென்றால், ஆரம்பத்திலிருந்தே இரண்டு வகையான தரப்பினரிடையே அவர் உரையாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. முதல் தரப்பு ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கின்ற மற்றும் அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேற வேண்டுமென்று கோருகின்ற மிகப்பெரும்பாலான அமெரிக்க மக்களைக்கொண்டது. இரண்டாவது தரப்பு, அவருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தத்தரப்பு அமெரிக்க பெருநிறுவனம் மற்றும் நிதியாதிக்க ஒருசிலவராட்சியின் மேலாதிக்க பகுதிகளாகும். அந்தப் பிரிவினர் ஈராக் போர் மற்றும் பூகோள அளவிலான அமெரிக்க இராணுவவாதம் மீதான, வாக்கெடுப்பாக பொதுத்தேர்தல் மாறிவிடக்கூடாது என்பபதை விரும்புபவராக இருக்கின்றனர். தனது தேர்தல் பிரச்சாரத்தில் வேகம் குறைவதை சரிகட்டுவதற்காக ஈராக் போர் தொடர்பாக மீண்டும் புஷ்ஷை கண்டிக்க வேண்டிய கட்டாயம் கெர்ரிக்கு ஏற்பட்டிருப்பது வெறும் வாய்ச்சொல் அலங்காரம் தான். ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்பான அடிப்படை நோக்கங்கள் என்று வரும்போது, இரண்டு வேட்பாளர்களுக்குமிடையில் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை. கெர்ரி தான் வாக்களித்ததைப் போல் போருக்கான அடிப்படை பொய் என்று தெரிந்தாலும் வாக்களிப்பேன் என்று கூறியிருந்தது தற்செயலாக நடந்துவிட்டதல்ல. ஈராக் மீதான போர் அது தொடக்கப்பட்ட நேரத்தில் மற்றும் ராஜியத்துறை முன்னேற்பாடுகளில் என்னதான் தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும் அந்தப்போர் ஆளும் செல்வந்தத்தட்டின் கருத்து ஒற்றுமை அடிப்படையில் உருவாகிய கொள்கையாகும். 13- ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் சிதைந்துவிட்ட பின்னர், அமெரிக்காவின் அபரிமிதமான இராணுவ வலிமையைப் பயன்படுத்தி சந்தைகள் மீதும் மூலோபாய மூலப்பொருட்கள் மீதும் அவற்றிற்கெல்லாம் மேலாக எண்ணெய் வளத்தின் மீதும் உலகமேலாதிக்கம் செலுத்தவேண்டுமென்று குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் இரண்டும் உருவாக்கிய மூலோபாயத்தின் உச்சக்கட்டம் தான் ஈராக்கிய போர். கெர்ரி தேர்ந்தெடுக்கப்படுவதால் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்திருப்பதற்கோ அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சாக்குப்போக்கின் கீழ் பூகோள இராணுவவாதத்தின் தொடர்ச்சியான பிரச்சாரத்திற்கோ முடிவு ஏற்பட்டுவிடப்போவதில்லை. இந்தப் போரில் பலியாகும் அல்லது கொல்லப்பட்டுவரும் மற்றும் ஊனமடைந்துவரும் இராணுவ சீருடையில் பணியாற்றும் தொழிலாள வர்க்க இளைஞர்களுக்கு என்னதான் அவர் அனுதாபம் காட்டுவதாக நாடகமாடினாலும், இன்னும் பல ஆண்டுகளுக்கு அந்தப் படுகொலையை நீட்டிப்பதில் அவர் உறுதிகொண்டிருக்கிறார். இந்தப் போருக்கும் உலக மேலாதிக்கத்திற்கான இருதரப்பு வேலைத்திட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்றால் இருகட்சி அரசியல் கட்டுக்கோப்பில் இருந்து உழைக்கும் மக்கள் முறித்துக்கொண்டு, சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில் ஒரு புதிய பரந்த அரசியல் இயக்கத்தை உருவாக்கினால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய இயக்கம் ஒன்றினால் மட்டும்தான் மிகப்பெரும்பாலான மக்களது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற முடியும், அமெரிக்க வெளியுறவுக்கொள்கை ஆதிக்கத்திற்கு முடிவுகட்ட முடியும் மற்றும் பிற ஒவ்வொரு முக்கிய சமுதாய பிரச்சனையிலும் சிறு நிதியாதிக்க செல்வந்தத்தட்டினாலான சூறையாடும் நலன்களுக்கு முடிவு கட்ட முடியும். 2004- தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி ஆற்றும் முக்கிய பாத்திரம் என்னவென்றால் அத்தகைய இயக்கம் தோன்றுவதற்கான அரசியல் அடித்தளத்தை அமைப்பதுதான். நமது வேட்பாளர்கள் மட்டுமே ஆப்கானிஸ்தானிலிருந்தும், ஈராக்கிலிருந்து அமெரிக்கத்துருப்புக்கள் அனைத்தும் உடனடியாக எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் விலக்கிக்கொள்ளப்பட வேண்டுமென்று கோருகின்றனர். பொய்களை அடிப்படையாகக் கொண்டு போருக்கு அமெரிக்க மக்களை இழுத்துச்செல்ல சதி செய்த அனைவர் மீதும் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தவேண்டுமென்று நாங்கள் கோருகிறோம். இவற்றிற்கெல்லாம் மேலாக, எங்களது தேர்தல் பிரச்சாரமானது நவம்பர் தேர்தல்களில் கெர்ரி அல்லது புஷ் இவர்களில் எவர் வெற்றிபெற்றாலும் அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல் வரவிருக்கின்ற போராட்டங்களுக்கு தயார் செய்கின்ற வகையில் அமைந்திருக்கிறது. |