World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Kerry: "I would still have voted for Iraq war"

கெர்ரி: ''எப்படியிருந்தாலும் ஈராக் போருக்கு நான் வாக்களிக்கவே இன்னும் விரும்புகிறேன்''

By Bill Van Auken, SEP presidential candidate
12 August 2004

Back to screen version

2004. ஜனாதிபதி தேர்தல் போட்டி அமெரிக்க வரலாற்றில் முன்கண்டிராத அரசியல் மோசடி சூழ்நிலையை வெளிச்சம்போட்டுக்காட்டுகிறது. அமெரிக்க மக்களை எதிர்நோக்கியுள்ள மிகப்பெரும் முக்கிய பிரச்சனை ஈராக் போராக இருக்கையிலும் இரண்டு பெரிய கட்சிகளும் நவம்பரில் வாக்களிக்கப்போகிறவர்கள் தங்களது கட்டளைகளையோ அல்லது தங்களது கருத்தையோ இந்த இரத்தககளரி காலனித்துவ முயற்சியின் மீது தெரிவிக்கின்ற உரிமையை மறுத்துவருகின்றன.

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியை தேர்ந்தெடுப்பதன் மூலம் போருக்கான எதிர்ப்பை முன்னெடுத்துச்செல்ல முடியும் என்ற நப்பாசையை இன்னமும் தங்களது கருத்தில் கொண்டிருப்பவர்கள், இந்த வாரம் அந்த வேட்பாளர் தந்திருக்கும் அசாதாரணமான அறிக்கைகளை கவனமாக ஆராய வேண்டிய கடமையுள்ளவர்களாவர்.

திங்களன்று அரிசோனாவில் கெர்ரி அறிவித்ததில் ''இப்போது நாம் தெரிந்துகொண்டிருப்பதை அறிந்திருந்தால் கூட ''தான் செனட்டில் புஷ் நிர்வாகம் ஈராக் மீது படையெடுப்பதை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருக்க முடியுமென்று அறிவித்தார். ''அந்த அதிகாரத்திற்கு நான் வாக்களித்திருப்பேன்'' ஜனாதிபதிக்கு இருக்க வேண்டிய சரியான அதிகாரம்தான் அது என்று நான் நம்புகிறேன்'' என்று கெர்ரி குறிப்பிட்டார்.

கெர்ரியுடைய நிலைப்பாட்டின் அரசியல் விளைபயன்கள் அதிர்ச்சியூட்டுவதாகும். அமெரிக்காவிற்கு எதிராக எந்தவிதமான ஆக்கிரமிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடாத இறையாண்மை கொண்ட ஒரு நாட்டிற்கு எதிராக புஷ் வெள்ளை மாளிகை போர் தொடுப்பதற்கு 2002 அக்டோபரில் தரப்பட்ட வெற்று காசோலையை வழங்கும் தீர்மானத்தை அவரும் அவருடன் போட்டியிடும் ஜோன் எட்வார்ஸும் ஆதரித்தார்கள். ஈராக் நேரடியாக அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலை கொடுத்துக்கொண்டிருக்கிறது என்ற சாக்குப்போக்கின் அடிப்டையில் இந்த அதிகாரம் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

''ஈராக் தொடர்ந்து அமெரிக்காவிற்கும், சர்வதேச அமைதிக்கும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது, ஏனென்றால் ''தொடர்ந்து அதன் வசம் கணிசமான அளவிற்கு இரசாயன மற்றும் உயிரியியல் ஆயுதங்களை தயாரிக்கும் வல்லமையுள்ளது. அணு ஆயுதங்களை தயாரிக்கும் வல்லமையை பெறுவதற்குரிய முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது, பயங்கரவாத அமைப்புக்களை ஆதரிக்கிறது. அவர்களுக்கு தஞ்சம் கொடுக்கிறது'' என்பன நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுத்தீர்மான வாசகத்தின் முக்கிய பிரிவுகள் விளக்குகினறன.

அந்தத் தீர்மானத்தின் வாசகம் மேலும் கூறுவதாவது..... ''நடப்பு ஈராக்கிய ஆட்சி அந்த ஆயுதங்களை அமெரிக்காவிற்கு அல்லது அதன் ஆயுதப்படைகளுக்கு எதிராக பயன்படுத்தி திடீர்தாக்குதல் நடத்தக்கூடிய ஆபத்து உள்ளது. அல்லது அது அவற்றை சர்வதேச பயங்கரவாதிகளுக்கு வழங்கி அவர்கள் அவ்வாறு செய்வதற்கான ஆபத்து உள்ளது. அத்தகைய தாக்குதலால் அமெரிக்காவிற்கும் அதன் குடிமக்களுக்கும் ஏற்படுகின்ற தீவிரமான தீங்குகளின் தன்மையின் விளைபயனாக அமெரிக்கா தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கு எடுக்கும் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன''

ஈராக்கிடம் எந்தவிதமான பேரழிவுகரமான ஆயுதங்களும் இல்லை அல்லது சதாம் ஹூசைன் ஆட்சிக்கும், அல் கொய்தா பயங்கரவாத வலைபின்னலுக்குமிடையே எந்தவிதமான ஒத்துழைப்பும் இல்லையென்று, உலகம் முழுவதும் அறிந்து கொண்டபின்னரும் எப்படி அப்போதும் தான் அந்தத் தீர்மானத்தை ஆதரிக்க முடியும் என்று எவரும் சொல்ல முடியும்?

இதற்கான பதில் மிக எளிதானது: அந்தப்போர் பொய்களை அடிப்படையாகக் கொண்டது, கெர்ரி, எட்வார்ட்ஸ், மற்றும் பிற முன்னணி ஜனநாயகக் கட்சி தலைவர்கள் அதை அறிந்திருக்கிறார்கள். கற்பனையாக உருவாக்கப்பட்ட பேரழிவுகரமான ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாத தொடர்பு அச்சுறுத்தல்கள் என்ற கட்டுக்கதை அவர்களை முட்டாளாக்கவில்லை, ஆனால் அமெரிக்க மக்களை முட்டாள்களாக்க உருவாக்கப்பட்டவை. முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரர்களான கெர்ரியும், எட்வார்ஸும் புஷ் நிர்வாகத்தின் பொய்களை ஏற்றுக்கொண்டனர். ஏனெனில் அவர்களே முழுமையாக அதிகாரமளித்த ஆக்கிரமிப்புப் போருக்கு அரசியல் முகமூடியை வழங்கினர்.

இந்த வகையில் சந்தேகங்கள் எதையும் கெர்ரியின் தலைமை தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் கிளிண்டன் நிர்வாகத்தில் வெளியுறவுத்துறை பத்திரிகை தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த ஜேம்ஸ் ரூபின் தெளிவுபடுத்தினார். அரை மில்லியன் ஈராக் குழந்தைகள் சாவிற்கு காரணமாக இருந்த பொருளாதாரத்தடைகளை பல ஆண்டுகள் ரூபின் நியாயப்படுத்திவந்தார். நாசப்படுத்தபப்பட்ட அந்த நாட்டின் மீது தொடர்ந்து விமானப்படை தாக்குதல்கள் நடத்தப்படுவதையும், அவர் நியாயப்படுத்தினார். சென்ற சனிக்கிழமை அவர் வாஷிங்டன் போஸ்டிற்கு பேட்டியளித்தபோது கெர்ரி ஜனாதிபதியாக இருந்திருப்பாரானால் தற்போது அவர் ஈராக் படையெடுப்பு நடத்த ''ஒப்புதலை கொடுத்திருப்பார்'' என்பது முற்றிலும் சாத்தியமானது என்று கூறினார்.

2002 அக்டோபரில் புஷ்ஷிற்கு நாடாளுமன்றம் வழங்கியுள்ள தீவிரமான அதிகாரங்கள் ''ஜனாதிபதி பெற்றிருக்க வேண்டிய சரியான அதிகாரம்தான்'' என்று கெர்ரி கூறியிருப்பதும் தீவிரமான ஆய்வுக்குரியதாகும். அமெரிக்க அரசியல் சட்டம் போர் பிரகடனம் அறிவிப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் வழங்கியுள்ளது. படையெடுப்பை புஷ் தனது உசிதப்படி புஷ் நடத்துவதற்கு கெர்ரி, எட்வார்ஸ் மற்றும் பிறர் செனட்டிலும் மக்கள் பிரதிநிதிகள் சபையிலும் அந்த அதிகாரத்தை அரசியல் சட்டத்திற்கு விரோதமாக விட்டுக்கொடுத்தனர். அப்படிச் செய்வதன் மூலம் அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு அச்சுறுத்தலாக தோன்றக்கூடும் என்ற எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா தனது இராணுவத்தைப் பயன்படுத்தும் உரிமையை அளித்தனர். இதன் மூலம் வரலாற்று அடிப்படையில் முன்கண்டிராத ஆபத்தை எதிர் நோக்கிய திடீர் தாக்குதல்களுக்கு மறைமுகமாக அங்கீகாரமளித்தனர்.

''இத்தகைய அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டிய அதிகாரம்தான்'' என்று கெர்ரி, வலியுறுத்துவது கெர்ரி நிர்வாகத்தில் ஈரான், வடகொரியா, மற்றும் இதர அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு தடைக்கற்களாக இருக்ககூடுமென்று கருதப்படுகிற நாடுகள் மீது புதிய ''முன்கூட்டி'' தாக்குதல்களை நடத்துதற்கான அதிகாரத்தை செலுத்த வேண்டுமென்று விரும்புகிறார் என்று தான் பொருளாகும்.

ஜனநாயக்கட்சி மேடைகளில் ஏற்கெனவே வரவிருக்கின்ற கெர்ரி நிர்வாகம் ஈராக் ஆக்கிரமிப்பை நீடித்துச்செயல்படுத்தும் என்று உறுதியளித்துள்ளனர். புஷ் நிர்வாகத்தின் மீது அவர்கள் கூறுகின்ற பிரதான கண்டனங்களில் ஒன்று ''பணியை முடிப்பதற்கு போதுமான படையை புஷ் ஈராக்கிற்கு அனுப்பத்தவறிவிட்டார்,'' என்பதுதான்.

கெர்ரி போர் பிரச்சனை தொடர்பாகத் தொடர்ந்து தனது தெளிவற்ற கருத்துக்களை கூறிவருவதுடன், இடையிடையே ஈராக் போரை புஷ் நிர்வாகம் நடத்திவருகிற முறையை விமர்சித்து வருகிறார். அதே நேரத்தில் ஈராக்கில் மூலோபாயக் குறிக்கோள்கள் தற்பொழுதைய நிர்வாகத்தின் குறிக்கோள்களில் இருந்து பிரித்துப்பார்க்க முடியாது.

அவர் தேர்ந்தெடுக்கப்படுவது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்ற மாயையில் இன்னும் இருப்பவர்களது நம்பிக்கையை அப்படியே நீடிக்கச்செய்கின்ற முயற்சியாக சென்றவாரம் நேஷ்னல் பப்ளிக் ரேடியோவிற்கு பேட்டியளித்தபோது கெர்ரி ''இன்னும் ஓராண்டிற்குள் ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துவிட முடியுமென்று நான் நம்புகிறேன் அதுதான் எனது திட்டம்'' என்று குறிப்பிட்டார். இதற்கு முன்னர் அவர் தனது பதவிக்காலத்தில் முதல் நான்காண்டுகளுக்கு அமெரிக்கத்துருப்புக்கள் ஈராக்கில் இருக்குமென்று கூறினார். எனவே அதிலிருந்து விலகிச்செல்கிற வகையில் இப்போது பேட்டியளித்திருப்பதால் அவரும் அவரது உதவியாளர்களும் அவசரமாக ''விளக்கம்'' தரவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

''சம்பவங்கள் எப்படி விரிவடைகின்றன என்பதை நாம் பார்க்க வேண்டும் இதில் ''ஓரளவு அளவுகோல் நான் தொடர்ந்து கூறிவருவது ஈராக்கில் ஸ்திரதன்மையை உருவாக்குவது அவர்கள் தேர்தல்களை நடத்தும் வல்லமை மற்றும் ஈராக் பாதுகாப்புப்படைகளுக்கு அவர்களே பயற்சிதருகிற வல்லமை'' என்று திங்களன்று கெர்ரி குறிப்பிட்டார். தனது நிர்வாகம் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கட்டளையிடக் கூடுமென்றார் ''களத்திலுள்ள தளபதிகள் கேட்டதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் '' என்று அவர் சொன்னார்.

கெர்ரி போர் அங்கீகாரத் தீர்மானத்தை ஆதரித்தது தொடர்பாக கெர்ரியின் அறிக்கையை புஷ் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திகொண்டார். புளோரிடாவில் குடியரசுக் கட்சி விசுவாசிகளிடையே உரையாற்றிய புஷ் -''ஈராக் போருக்கு ஆதரவாக அவர் வாக்களித்து ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்கு பின்னர் தன்னை போர் எதிர்ப்பு வேட்பாளர் என்ற நிலையில் இருந்து தன்னை மாற்றிக்கொண்டு ஏறத்தாழ 220 நாட்களுக்குப்பின்னர் எனது எதிரி ஒரு புதிய நுட்பமான வேறுபாட்டை கண்டுபிடித்திருக்கிறார்''. இப்போது அவர் ஈராக் மீது நடவடிக்கையை எடுத்தது சரியான முடிவு என்று ஏற்றுக்கொள்கிறார்'' என்று குறிப்பிட்டார்.

தேர்தல் பிரச்சார சொற்சிலம்பம் எதுவாக இருந்தாலும் உண்மை என்னவென்றால் அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டு அதற்குள் உருவாக்கிக்கொண்ட பொதுக்கருத்து அடிப்படையிலான கொள்கைதான் போராக ஆயிற்று, சோவியத் யூனியன் சிதைந்துவிட்டபின்னர் இரண்டு கட்சிகளுமே உலக சந்தைகளையும், உயிர்நாடி மூலப்பொருட்களையும் தனது தன்னிகரற்ற இராணுவ வலிமையால் கைப்பற்றி மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மூலோபாயத்தை ஆரத்தழுவிக்கொண்டன. இதல் முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. எண்ணெய் பாரசீகவளைகுடாப் பகுதி எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பது அமெரிக்க எரிபொருள் வினியோகத்தை உறுதிசெய்து தருவதுடன் அமெரிக்காவின் முதலாளித்துவத்திற்கு எதிரான பிரதான பொருளாதார எதிரிகளுக்கு நிபந்தனைகளை விதிக்கவும் வகைசெய்யும் ஒரு வழி என்று கருதப்பட்டது.

ஈராக் போருக்கு கெர்ரியின் ஆதரவு அறிக்கைகள் அவரது வலதுசாரி மற்றும் லிபரல் ஆதரவாளர்கள் கூறுவதைப்போல் புஷ்ஷிடம் இருந்து வாக்குகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட தேர்தல் மூலோபாயத்தின் தவறான கருத்தல்ல, இந்தக்கருத்துக்களை அவர் ஆளும் செல்வந்த தட்டை நோக்கிக் கூறிக்கொண்டிருக்கிறார். கெர்ரி நிர்வாகம் தொடர்ந்து அமெரிக்காவின் பூகோள மேலாதிக்க முயற்சியை கடைபிடிக்கும் என்பது மட்டுமல்ல அந்தக் கொள்கையை திறமையாக கொண்டுசெலுத்தும் என்றும் உறுதியளிப்பதற்காகத்தான்.

குடியரசுக் கட்சிக்காரர்கள் அல்லது ஜனநாயகக் கட்சி நிர்வாகமாக இருந்தாலும் அமெரிக்கப்போர் நீடிக்கும் இரண்டு கட்சிகளுமே ஈராக் மக்களது எதிர்ப்பை நசுக்கவும், நாட்டின் எண்ணெய் வளத்தை அமெரிக்க பெரிய நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் தரும் பொம்மை ஆட்சியை நிலைநாட்டவும் தொடர்ந்து இரத்தக்களரி போரை நீடிக்க உறுதி எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

பொது மக்கள் கருத்துக்கணிப்புக்கள் அமெரிக்க மக்களில் பாதிப்பேர் ஈராக் போருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தெளிவுபடுத்துகின்றன. இப்படி எதிர்ப்பவர்களில் ஜனநாயகக்கட்சி வாக்களார்கள் மிகப்பெருமளவில் இடம்பெற்றிருக்கின்றனர். ஈராக் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று கோருகின்ற கோடிக்கணக்கான மக்கள் அரசியல் அடிப்படையில் வாக்குரிமை அல்லாதரவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர். ''புஷ்ஷை தவிர வேறு எவரும்'' என்ற முழக்கம் போரையும் ஆக்கிரமிப்பையும், நீடிக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அந்த இராணுவ வாதத்தின் எதிர் நடவடிக்கை தவிர்க்கமுடியாத உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்காகவும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்க செய்வதாகவுமே ஆகும்.

இரண்டு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமும் உண்மைக்கு புறம்பானவை மோசடிகள் நிறைந்தவை தவறான அடிப்படைகளைக் கொண்டவை இரண்டு வேட்பாளர்களுமே ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட செனட் வாக்கெடுப்பை பற்றியே விவாதித்துக் கொண்டிருக்கின்றர். ஈராக்கில் தினசரி நடந்துகொண்டிருக்கிற படுகொலைகளை புறக்கணித்துவிட்டனர். இரண்டு கட்சிகளும், ஊடகங்களுடன் சேர்ந்து கொண்டு ஈராக்கில் கொல்வதும் மடிவதும் தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை குறைத்து மதிப்பீடு செய்ய முயன்று வருகின்றனர்.

அமெரிக்கர்களின் மரணம் குறித்து அண்மைய விகிதாச்சாரம் தற்போது தினசரி இரண்டு அமெரிக்கர்கள் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாத வாக்கில் அது 1000 தை கடந்துவிடும். பலியான ஈராக் பொதுமக்கள் 37,000 இருக்குமென்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஈராக்கின் தெற்கு நகரான நஜப்பிலும், பாக்தாத்தின் சதர் நகர குடிசைப்பகுதிகளிலும் தற்போது அமெரிக்கா நடத்திவருகின்ற தாக்குதல்களால் பலர் மடிகின்றனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து வருகின்றனர்.

ஈராக்கிலிருந்து மடிந்தவர்கள் உடல்கள் தொடர்ந்து அமெரிக்காவிற்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கொல்லப்பட்டவர்கள் பற்றி இரண்டு பெரிய கட்சிகளுக்கும் அல்லது ஊடகங்களுக்கும் அக்கறையில்லை பொய்கள் அடிப்படையில் துவக்கப்பட்ட போரில் மடிகின்ற ஆண்களும், பெண்களும் தொழிலாள வர்க்கத்தின் குடும்பங்களில் இருந்து மட்டுமே போரில் மடிவதற்கு அனுப்பப்பட்டவர்கள் அவர்களில் பலர் வேலை கிடைக்காததால் அல்லது மேற்கல்விக்கு பணம் கிடைக்க வேண்டுமென்பதற்காக இராணுவத்தில் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த பல நாட்களில் நாடு முழுவதிலும் பல இளைஞர்கள், ஈராக் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

Joshua Bunch வயது 23, Mississippi யிலுள்ள Hattiesburg சேர்ந்த இராணுவத்தினர் ஆகஸ்ட் 6 ல் பாக்தாத்தில் நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி தாக்குதல்களுக்கு அவரது பிரிவு இலக்கானபோது அவர் மடிந்தார். அந்த மாநிலத்தில் இதுவரை மடிந்துள்ள 15 பேரில் அவரும் ஒருவர் ''எங்களால், முடிந்தவரை எங்களது துக்கத்தை சமாளிக்க முயன்று வருகிறோம்'' என்று அவரது தாய் உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அரிஜோனா, Gonado பகுதியைச் சேர்ந்த 19வயது இராணுவத்தினரான Henry Shondee வடக்கு கரோலினாவைச் சேர்ந்த 28 வயது ustin Onwordi, அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 2இல் அவர்கள் சென்ற வாகனத்திற்கு கீழ் ஒரு குண்டு வெடித்ததால் மடிந்தனர். Shondee, Navajo அமைப்பில் ஒரு உறுப்பினர் ''அவர் அங்குள்ள பல இளைஞர்களைப் போல இவரும் மேற்கல்விக்கு பணம் சம்பாதிப்பதற்காக இராணுவத்தில் சேர்ந்தார்'' என்று அவரது மாமியார் கூறினார்.

Onwodi நைஜீரியாவிலிருந்து வந்து குடியேறியவர் அவர் தனது மனைவி மோனிக்கும் குழந்தை Jonathan ஐயும் விட்டுவிட்டு ஈராக்கிற்கு பணியாற்றச் சென்றவர். அங்கு அவர் இருந்தபோது ஜூலை 7இல் Jonathan பிறந்தான் அந்த இராணுவத்தினரின் தாய் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது ''சமாதானத்திற்காக வழிபாடு நடத்தவேண்டிய தருணமிது'' என்று குறிப்பிட்டார்.

கலிஃபோர்னியா, Hesperia வை சேர்ந்த 22 வயது இராணுவத்தினரான ArmandoHernandez அவர் சமாரா விலுள்ள காவல் சாவடியில் பணியாற்றியபோது ஆகஸ்ட் 1 இல் அவர் சாவடிக்கருகில் குண்டு வெடித்ததில் மடிந்தார். ''அவர் இருந்த பகுதி மிக ஆபத்தானது என்று கூறினார். அவர் பார்த்ததை நாம் நம்பக்கூட முடியாது'' என்று அந்த வீரரின் சகோதரி லொஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸிற்கு தெரிவித்தார். ஒரே மகன் Hernandez தாயையும், இரு சகோதரிகளையும், இரு மைத்துனிகளையும் காப்பாற்றி வந்தார். ''அவர் ஒருவர்தான் எங்கள் குடும்பத்தையே காப்பாற்றி வந்தார்'' என்று சகோதரி Delia சொன்னார்.

அவரோடு கொல்லப்பட்ட மற்றொருவர் Lindenwood ஐ சேர்ந்த 20 வயது இராணுவத்தினர் அந்தோனி டெக்ஷன் உயர்நிலைப்பள்ளியில் படித்துதேறிய பின்னர் கல்லூரியில் படிப்பதற்காக பணம் திரட்ட முடியுமென்ற நம்பிக்கையில் இராணுவத்தில் சேர்ந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருடன் அவரது நீண்டகால நண்பர் 21 வயது Adam Froehlich உம் இராணுவத்தில் சேர்ந்தார். இதுபோன்றதொரு தாக்குதலில் மார்ச் மாதம் அவரும் பலியானார்.

நிதியாதிக்க குழுவின் நலன்களுக்காக போர்புரிகின்ற இத்தகைய மக்கள்தான் பயங்கரமான விலையை அதற்காக தந்துகொண்டிருக்கிறார்கள். புஷ் நிர்வாகமும், அதன் ஜனநாயகக் கட்சி எதிரிகளும் இந்த ஆக்கிரமிப்பு நீடிக்கும் என்றும் சீருடையில் பணியாற்றிவரும் தொழிலாளவர்க்க இளைஞர்களின் பயனற்ற இந்தத் தியாகம் நீடிக்குமென்றும் குறித்து அவ்விரு கட்சிகளும் எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை நவம்பர் தேர்தலில் அந்த பிரச்சனை இடம்பெறுவதையும் விரும்பவில்லை.

அமெரிக்கா ஆக்கிரமிப்பை ஈராக்கில் முடித்து வைப்பதற்கான போராட்டத்தை இரண்டு கட்சி முறைக்கும் அப்பாற்பட்டு அவற்றிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறாமல் நடத்தமுடியாது.

ஜனநாயகக் கட்சி திட்டமிட்டு அடக்கிவரும் பொதுமக்களது போர் எதிர்ப்பு உணர்வுகளுக்கு வடிகால் அமைத்துத்தருவதற்காககத் தான் சோசலிச சமத்துவக் கட்சி 2004 தேர்தலில் போட்டியிடுகிறது. ஈராக்கிலிருந்து அனைத்து அமெரிக்கத் துருப்புக்களும் உடனடியாக நிபரந்தனை எதுவுமின்றி வெளியேற வேண்டுமென்பதை எங்களது பிரச்சாரத்தின் மையமான கோரிக்கையாக வைத்திருக்கிறோம். ஆப்கானிஸ்தானிலிருந்தும் அந்த பிராந்தியத்திலிருந்தும் அனைத்துப்படைகளும் வெளியேற வேண்டும். ஈராக்கை காலனித்துவமாக மாற்றுவதற்கு நடைபெற்ற போரில் மடிந்த போர்வீரர்களது, ஈராக் மக்களது குடும்பங்களுக்கும், காயமடைந்து உடல் ஊனமுற்றவர்களுக்கும் இழப்பீடு தரவேண்டும் என்பதற்காக நாங்கள் போராடிவருகிறோம். அமெரிக்க மக்களை ஆத்திரமூட்டல் எதுவுமில்லாத நிலையில் இந்தப்போருக்கு இழுத்துச்சென்றதற்கு பொறுப்பான அனைவர் மீதும் கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம், போருக்கு எதிராக வாக்களிப்பதற்கு மட்டுமல்லாமல் அமெரிக்க சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றியமைத்து இராணுவமயத்திற்கு முற்றுப்புள்ளிவைக்க ஒரு புதிய வெகுஜன அரசியல் இயக்கத்திற்கு அரசியல் மற்றும் முன்னோக்கிற்கான அடித்தளங்களை உருவாக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved