World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காKerry and the Democratic campaign: a descent into farce கெர்ரியும் ஜனநாயககட்சி பிரச்சாரமும்: ஒரு தரம்தாழ்ந்த வெறும் நாடகப்பேச்சு By Bill Van Auken, SEP presidential candidate ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்ற இரண்டு வாரங்களில் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியின் தேர்தல் பிரச்சாரம் அரசியல் திவாலில் இருந்து அப்பட்டமான நாடகமாக தரம் தாழ்ந்துவிட்டது. கெர்ரியும், அவரது ஆலோசகர்களும் தங்களது முகத்திலேயே பூசியுள்ள நிறம் அரசியலில் ஒதுக்குப்புறமாக ஒதுங்கியிருப்பது மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது கற்பனை கூட செய்துபார்க்க முடியாததாகத் தோன்றும். ஈராக் போரில் ஜனநாயகக் கட்சி போட்டியாளரை தற்காப்பு நிலைக்கு புஷ் அனுப்பிவிட்டார். மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் சட்டவிரோதமானது என்று கருதும் இந்த தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் படுபயங்கரமான பொய்களைச் சொல்லி இந்த நாட்டை சட்டவிரோதமான மற்றும் ஆத்திரமூட்டலுக்கு இடமில்லாது ஒரு போரில் இழுத்துச் சென்று ஈடுபடுத்திய செயலில் கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்றது. இந்த முழு நடவடிக்கைகளின் கிரிமினல் தன்மை அமெரிக்கா மற்றும் சர்வதேச மக்கள் முன் அம்பலத்திற்கு வருகின்ற வகையில் அபுகிரைப் சிறைச்சாலை சித்ரவதைகள், நகரங்கள் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு மற்றும் புஷ் நிர்வாகத்தோடு நெருக்கமான தொடர்புகள் உள்ள பெரிய நிறுவனங்களது வெட்கக்கேடான ஊழல் மற்றும் போர்கால கொள்ளை இலாபம் ஆகியவை அம்பலத்திற்கு வந்திருக்கின்றன. அமெரிக்க போர் வீரர்களை பூ செண்டு கொடுத்து வரவேற்பார்கள் என்று புஷ் கூறிய ஆக்கிரமிப்பின் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் அந்த நாடே போர்கள மண்டலமாக மாறிவிட்டது. பல்லாயிரக்கணக்கான சாதாரண ஈராக்கிய மக்கள் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கும், சட்டவிரோத பொம்மையாட்சிக்கும் எதிராக ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க இராணுவத்தினர் மடிவது 1000 இனை தொட்டுவிட்டது. இந்த நிலமையின் கீழ் மிகப்பெரும்பாலான அமெரிக்கர்கள் அங்கே இந்தப்போர் அவசியமற்றது எனறு நம்புவதுடன், ஏற்கனவே இரத்தம் சிந்தப்பட்டதில் எந்தவித பயனுமில்லை என்று கருதுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புஷ் தாக்குதலில் இறங்கியிருப்பது எப்படி சாத்தியமாகும்? இது போன்ற ஒரு மக்கள் விரோத மற்றும் மதிப்பிழந்த யுத்தத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எப்படி பின்வாங்குகிறார்? இதற்கு பதில் என்னவென்றால் போரை தேர்தலில் ஒரு பிரச்சனை ஆக்குவதில்லை என்று முன்கூட்டியே ஒரு தீர்மனத்திற்கு ஜனநாயகக்கட்சி வந்துள்ளது, போரை தேர்தலில் ஒரு பொதுவாக்கெடுப்பாக மாற்றுவதற்கு அக்கட்சிக்கு விருப்பமில்லை, ஏனென்றால் கெர்ரி, புஷ்ஷை விட மேலாக இரத்தக்களரி போரை நீடிப்பதில் உறுதியாக இருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே, ஈராக் தொடர்பாக இரு கட்சிக்காரர்களுக்குமிடையே நிலவும் முரண்பாடு தந்திரோபாயமானதே தவிர அடிப்படையானது அல்ல. அமெரிக்க மக்களது விரும்பாத, ஏற்றுக்கொள்ளாத ஒரு போரை எப்படி சிறப்பாக நடத்துவது அதை நியாயப்படுத்த எப்படி சிறந்த பொய்களை உருவாக்குவது என்பதில்தான் அவர்கள் கவலை கொண்டிருந்தார்கள். ஈராக் தொடர்பாக உண்மையான விவாதம் எதுவும் இல்லாத நிலையில், இரண்டு கட்சிகளாலும் பயன்படுத்தப்படும் ''மதிப்பு'' மற்றும் ''தன்மை'' பற்றிய முட்டாள்தனப்பேச்சு வாக்காளரை அரசியல் ரீதியான மயக்கமடைய செய்வதுடன், மற்றும் பரந்த வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் எந்த வித முக்கிய பிரச்சனையும் கருத்தில் கொள்ள தவிர்க்கின்றது. இதன் விளைவாக, புஷ் மற்றும் அதன் சகவாளர்களுக்கு ஈராக் தொடர்பாக கெர்ரியின் அரசியல் திசை விலகல்கள் மற்றும் திரிபுகள் தொடர்பாகவும் கவனத்தை திருப்புவது, ஈராக் போர் தொடர்பான விவாதத்திலிருந்து விலக்கிக்கொள்வதிலும் பார்க்க அவர்களுக்கு கடினமாகயில்லை. ஜனநாயகக் கட்சி வேட்பாளரின் பிரச்சனையைப் பாருங்கள். உரிய காலத்திற்கு முன்னரே போருக்குச் சென்றுவிட்டதாக புஷ் நிர்வாகத்தை விமர்சித்த பின்னர், 2002- அக்டோபரில் இதர செனட் ஜனநாயகக் கட்சிக்காரர்களோடு சேர்ந்து கொண்டு அவர் சரியென்று கருதுகிற காலத்தில் போர் தொடுப்பதற்கு முழு உரிமை வழங்கும் வெற்று காசோலைக்கு வாக்களித்தார். ஜனநாயகக் கட்சி முதன்மை நடவடிக்கைகளில், ஹோவார்ட் டீன் போர் அங்கீகாரம் தீர்மானத்திற்கு வாக்களித்ததற்காக கெர்ரியை கடுமையாகச்சாடினார். அதற்கு கருத்து தெரிவித்த கெர்ரி ஈராக்கிடம் நடமாடுகின்ற பேரழிவுகரமான ஆயுதங்களின் மிகப்பெருமளவிலான மூலப்பொருட்கள் உள்ளது என்று புஷ் கூறிய வார்த்தையை எடுத்துக்கொண்டு வாக்களித்ததாக குறிப்பிட்டார். அவர் தவறான வழியில் இட்டுச்செல்லப்பட்டுவிட்டதாகவும் வலியுறுத்திக் கூறினார். lowa நகரவாக்காளர்களிடையே உரையாற்றும்போது ''நான் ஜோர்ஜ் புஷ் வழியில் போருக்குச் சென்று இருப்பேன் என்று நம்புவார்களானால், எனக்கு வாக்களிக்க வேண்டாம்'' என்று குறிப்பிட்டார்.அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் உட்பட, உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள், புஷ் நிர்வாகம் கூறியதை கொச்சையான பொய்யென்று கணித்து நிர்வாகத்தின் போர் வெறிப்போக்கை கண்டிப்பதற்கு தெருக்களில் அணிவகுத்து வந்த சூழ்நிலையில் கெர்ரி நம்பகத்தன்மை வேடம் கட்டிக்கொண்டு நிற்பதை, மிதமாக கூறுவதென்றால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதுதான். நியமன உறுதி கிடைத்ததும், கெர்ரி உடனடியாக தனது போர் எதிர்ப்பு பாவனையை கைவிட்டுவிட்டு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாகவும் அமெரிக்கத்துருப்புக்களை விலக்கிக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை பெருகிக்கொண்டு வந்ததையும் எதிர்த்து நின்றார். அமெரிக்கா ''வெட்டிக்கொண்டு ஓடிவந்துவிட முடியாது'' என்று திரும்பத்திருப்ப கூறினார். இறுதியாக, இந்த வாரத்தில் புஷ்ஷின் நேரடி சவாலுக்கு பதிலளிக்கும் வகையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வெளியிட்ட அறிவிப்பில் ஈராக்கிடம் பாரிய அழிவிற்கான ஆயுதங்கள் உள்ளது என்பது மற்றும் சதாம் ஹூசைனுக்கும் அல்கொய்தாவிற்கும் தொடர்புகள் என்ற குற்றச்சாட்டு பொய்யென்று அதனுடைய தீர்மானம் வழங்கிய தீர்ப்புகள் வந்ததை அறிந்தும் கூட போரை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தே இருப்பேன் என்று தெரிவித்தார். அவரது பிரதான தேசிய பாதுகாப்பு ஆலோசகரான முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி ஜேம்ஸ் ரூபின், அவரது சான்றுகளில் குறிப்பிட்டுள்ளதில் கெர்ரி ஜனாதிபதியாக இருப்பாரானால், அமெரிக்கா இப்பொழுது ஈராக் மீது படையெடுக்க ''எல்லா சாத்தியக்கூறுகளை'' வழங்கிருப்பார் என்று குறிப்பிடுகிறது. புஷ் ஆலோசகர்கள் அவர்களது எதிரியின் நடவடிக்கையை எடுத்துக்கொண்டனர். அவர்கள் ஒரு தெளிவான பிரச்சார மூலோபாயத்தை கடைபிடித்து வருகின்றனர். போர் தொடர்பாக கெர்ரியின் உருக்குலைந்த நிலையை கொண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளர், ஒரு குற்றங்காண்கிற பாசாங்கு பேர்வழி என்று சித்தரித்து வருகின்றனர். இதன் மூலம் போர் ஆதரவு வாக்காளர்களை புஷ்ஷிற்கு ஆதரவாகத்திரட்டுவதுடன், கெர்ரிக்கு வாக்களிப்பது போருக்கு எதிர்ப்புக்காட்டுவதென்று நினைக்கும் வாக்களர்களை திசைதிருப்பவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குடியரசுக் கட்சிக்காரர்கள் இறுதியாக கூறப்பட்ட விஷயத்தில்: "எங்களது கட்சி வேட்பாளருடன் போர் தொடர்பாக உடன்பாடு கொண்டிருக்கிற ஒருவருக்கும் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு ஏன் செல்லவேண்டும்?'' என குறிப்பிட்டிருந்தது. இப்படி தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய அளவிற்கு குழப்பத்தில் சிக்கிக்கொண்ட கெர்ரியும், அவரது தற்காப்பாளர்களும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஈராக் தொடர்பாக ''உறுதியான'' சான்றைக் கொண்டிருக்கிறார் என்று உறுதியாகக் கூறுகின்றனர். அவர்கள் சொல்வது சரிதான்--- ஏனென்றால் கெர்ரி உறுதியாக இரட்டை நாக்கோடு பேசி வருகிறார். ஒரு பக்கம், இடையிடையே போர் விமர்சகர் என்று காட்டிக் கொள்வதற்கு முயலுகிறார், போரை எதிர்க்கின்ற மில்லியன் கணக்கான மக்களது ஆதரவை நிலைநாட்டுவதற்காக அவ்வாறு பாவனைக்காட்டுகிறார். மற்றொரு பக்கம், அவர் திரும்பதிரும்ப அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டிற்கும், தனது சொந்தக்கட்சியின் ஆதிக்க வலதுசாரி பிரிவினருக்கும் புஷ் நிர்வாகத்தின் மூலோபாய குறிகோளான ஈராக்கில் காலனித்துவ ஆதிக்கத்தை நிலைநாட்டி அதன் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற இராணுவ வலிமையை பயன்படுத்தவேண்டும் என்பதை பகிர்ந்து கொள்கிறார். அவரது பிரச்சார தீவிரம் புஷ் அந்தப்பணியில் குளறுபடி செய்துவிட்டார் என்றளவிற்கு சுருங்கிவிட்டது. தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதே கொள்கையை பின்தொடர்ந்து ''சரியாக செய்வேன்'' என்றார். அதை விரிவுபடுத்த வேண்டிய கடமை ஏற்பட்டபோது, இந்தப்போருக்கும், எதிர்காலப் போர்களுக்கும் அதிகளவில் சர்வதேச ஆதரவை நாடப்போவதாகவும், அத்தகைய போர்கள் உள்ளடக்கியுள்ள உயிர் மற்றும் வாழ்க்கைதரத்தின் அழிவிற்கு ''தியாகத்தில் சமத்துவம்'' தேவை என்பதை பராமரிக்கின்றார். இந்த வலதுசாரி வெளிப்படையான ஏகாதிபத்திய முன்னோக்கோடு தான் ஒரு வியட்நாம் போர்வீரர் என்று தன்னைத்தானே முன்னிலைப்படுத்திக் கொள்வதை இணைத்து பூகோள அளவில் ''பயங்கரவாதத்தின் மீதான போரை'' தீவிரப்படுத்தப்போவதாகவும், இராணுவச் செலவினத்தை அதிகரிக்கப்போவதாகவும், அமெரிக்க விஷேடபடைகளை இரட்டிப்பாக்க போவதாகவும் உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்தப்பிற்போக்குத் தனமான நாடகத்தை பார்க்கும்போது, ''புஷ்ஷை தவிர வேறு எவரும்'' என்ற கோஷத்தின் கீழ் கெர்ரி ஆதரித்து அமெரிக்க இராணுவவாதத்தை எதிர்ப்பவர்களுக்கு நாம் கூறுவது அந்த முயற்சியை கைவிடுங்கள் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதுதான். கெர்ரியின் தாராளவாத மற்றும் ''இடது'' வக்காலத்து வாங்குபவர்கள் கூறுகின்ற நியாயமற்ற சமாதானங்களை பெருமளவு உற்பத்தி செய்வதை காது கொடுத்து கேட்கமுடியவில்லை. அமெரிக்க மக்களுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலாக இல்லாத ஒரு நாட்டின்மீது படையெடுப்பதற்கான முடிவை கெர்ரி திட்டவட்டமாக ஆதரித்த பின்னர் அவரது ''போர் எதிர்ப்பு'' ஆதரவாளர்கள் சிலர் இன்னமும் தலைமயிரை பிய்த்துக்கொள்ளும் நுட்பமான விவாதங்களை நடத்திக்கொண்டிருப்பது, போருக்கு அங்கீகாரம் தருவதற்கும், ஆதரிப்பதற்கும் வேறுபாடு உள்ளது என்று கூறுவதை சகித்துக்கொண்டு கேட்க முடியவில்லை. மாசாசுசெட்ஸ் செனட்டர் ஒருமுறை அதிகாரத்தைக் கொடுத்தபின்னர் புஷ், செனி, ரம்ஸ்பீல்ட் ஆகியோர் அதைப்பயன்படுத்த மாட்டார்கள் என்று நம்புகின்ற அளவிற்கு அப்பாவித்தனமானவரா? வாஷிங்டனிலுள்ள ஒவ்வொருவரும் அந்த நிர்வாகம் ஈராக் மீது படையெடுக்க வேண்டும் என்ற உறுதியோடுதான் பதவிக்கு வந்தார்கள் என்பதையும், பேரழிவுக்குரிய ஆயுதங்கள் பற்றிய வாதம் வெறும் சாக்குப்போக்குத்தான் என்பதையும் அறிவார்கள். இதில் உண்மை என்னவென்றால், கெர்ரியும் இதர முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரர்களும் புஷ் நிர்வாகத்தின் போலி புலனாய்வு அறிக்கைகளை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் அவர்களே, ஈராக் மீது ஆத்திரமூட்டல் எதுவும் இல்லாமலே தாக்குதல் நடத்துவதை ஆதரித்தாலாகும். வெள்ளை மாளிகையிலும், பென்டகனிலும் உள்ள போர் சதியாளர்களுக்குப்பின்னால் அணிவகுத்து நிற்பதற்கு சாக்குப்போக்கையும், அரசியல் முகமூடியையும் தேடிக் கொண்டிருந்தார்கள். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சிகளுக்கிடையில் நடைபெறுகின்ற போட்டிகளில் ''இரண்டு தீங்குகளில் குறைந்தது எது'' என்ற விவாதத்தை கொள்கை அடிப்படையில் சோசலிஸ்டுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு கட்சிகளுமே ஒரே அமைப்பின் பிணைந்துகிடக்கும் பகுதிகளாகும். அவர்களது நடவடிக்கை தந்திரங்களில் வேறுபாடுகள் எவை இருந்தாலும் இரண்டுமே அமெரிக்க நிதியாதிக்க குழுவினரின் கருவிகளும், அவர்களது நலன்களை காத்து நிற்பதற்கு அர்பணித்துக் கொண்டவர்களுமாவர். குறைந்த பிற்போக்குத்தன வேட்பாளர் என்று சொல்லி ஆதரவு திரட்டுவது முதலாளித்துவ கட்சிகளிலிருந்து உழைக்கும் மக்கள் தங்களுக்கென்று சுதந்திரமான அரசியலை நிலைநாட்டும் அவசியமான போராட்டத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்புகின்ற முயற்சியாகும். ஆனால் இந்தத்தேர்தலில், கண்ணுக்கு தெரிகின்ற ''குறைந்த தீங்கு'' தென்படவில்லை கடந்த தசாப்தங்களுக்கு மேலாகவே ஜனநாயகக் கட்சி, குடியரசுகட்சிக்காரர்களோடு தோளோடு தோள் சேர்ந்து அரசியலில் நடைபோட்டு வருகிறார்கள். ஈராக் போரிலிருந்து, அமெரிக்க தேசபக்தி சட்டம்வரை நடப்பு நிர்வாகத்தின் முக்கியக்கொள்கைகள் ஒவ்வொன்றையும் ஆதரித்து நிற்கின்ற கெர்ரி மற்றும் எட்வர்ட்ஸ் போன்ற ஜனநாயக நபர்களையும் அது தந்துகொண்டிருக்கிறது. புஷ்ஷிற்கு பதிலாக கெர்ரி என்ற வாதத்தை சோசலிச சமத்துவக் கட்சிகாரர்களாகிய நாங்கள் திட்டவட்டமாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம், 2004 தேர்தலில் இந்த மோசடிக்காரர்கள் இரண்டு கள்வர்களில் எவர் வெற்றிபெறுவது என்பது பற்றி நாங்கள் முற்றிலும் கவனத்தில் கொள்ளவில்லை. அது எப்படியிருந்தாலும், வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கை எழுவதும், உள்நாட்டில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்க்கத்தரத்தின் மீது தாக்குதல்கள் நீடித்துக்கொண்டுதான் இருக்கும். புஷ் நிர்வாகத்தின் பிற்போக்குத் தனமான கிரிமினல் கொள்கைகள் அதன் முன்னணி அதிகாரிகள் வலது-சாரி சித்தாந்த நேர் வழியிலிருந்து விலகுவதால் எழுந்தததல்ல. மாறாக அமெரிக்க முதலாளித்துவத்தின் தீர்த்துவைக்க முடியாத நெருக்கடியின் விளைவுகள்தான், அந்த நெருக்கடி நவம்பருக்குப்பின் இன்னும் அதிகரிக்கும். கெர்ரியை ஆதரிப்பதற்கு அப்பால் புஷ்ஷை தோற்கடிப்பதற்கு வேறுவழியில்லை மற்றும் எல்லா அரசியல் நடவடிக்கைகளுமே நவம்பரில் ஜனநாயகக் கட்சியின் வெற்றிக்கு உதவியாகவே அமையவேண்டும் என்ற கூற்றை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் ஜனநாயகக் கட்சிக்காரர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டவை எனவே இந்தக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இரண்டு கட்சிகளுக்கும் வெளியில் ஒரு புதிய தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கம் சோசலிச சர்வதேச வேலைதிட்டத்தோடு ஆயுத பாணியாக்குவதை தவிர வேறு வழியில்லை. அத்தகைய இயக்கத்தை அரசியல் அடிப்படையிலும் வேலைதிட்ட அடிப்படையிலும் உருவாக்க வேண்டுமென்று அத்தியாவசியமான நோக்கத்தோடுதான் 2004-தேர்தல் பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்சி இறங்கியிருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக மட்டுமே இந்த உயிர்நாடிப் பணியை நாம் முன்னெடுத்துவைக்கவில்லை. வரும் ஜனவரியில் வெள்ளை மாளிகையில் ஆட்சிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் வரவிருக்கின்ற மகத்தான போராட்டத்தை நோக்கித்தான் இந்த முக்கியத்துவம் வாய்ந்த பணியில் இறங்கியிருக்கிறோம். நம்முடைய ஆதரவாளர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் எங்களோடு இணைந்து நிற்கவேண்டும். எங்களது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அதற்கெல்லாம் மேலாக சோசலிச சமத்துவ கட்சியின் உறுப்பினராவதற்கு முடிவு செய்ய வேண்டும் என்று அழைப்புவிடுகின்றோம். |