WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Republican convention opens: panic-mongering in the service of war and
reaction
குடியரசுக் கட்சியின் மாநாடு தொடக்கம்: போர் மற்றும் பிற்போக்கின் பணியில் பீதியைக்
கிளப்பிவிடுதல்
By the Editorial Board
1 September 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
"பயங்கர வாதத்தின்
மீதான போர்" என்ற பதாகையின் கீழ் அச்சுறுத்தல் சூழ்நிலையை தோற்றுவிக்க, போர் மற்றும் அரசியல் பிற்போக்கு
கொள்கை இவற்றை நியாயப்படுத்தும் வெளிப்படையான நோக்குடன் செப்டம்பர் 11, 2001 பெருந்துயரத்தை
இழிமுறையில் பயன்படுத்துவதற்கு, குடியரசுக்கட்சியின் தேசிய மாநாட்டு தொடக்க நாள் ஒதுக்கப்பட்டது.
அந்த சோக தினத்தின் கதாநாயகனாக, ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷை, பொருத்தமற்ற
வகையில் பேச்சாளர்கள் வரையறுத்து, வெள்ளை மாளிகையின் அரசியல் மற்றும் அறிவுசூன்யத்தை, "வலிமையுடையவர்",
"கொள்கையுடையவர்", இன்னும் "பெரும் நோக்குடையவர்" என்றும் சித்தரித்துக் காட்டினர்.
நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான், ஈராக் போரில் இருந்து,
அரசியல் அமைப்பு உரிமைகள், குடிமை உரிமைகள் இவற்றை இரத்துச்செய்தல், பெருஞ்செல்வந்தருக்கு மகத்தான
வரிகுறைப்புக்கள், மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளில் புதிய இழப்புக்கள் ஏற்படுத்துதல் வரை, கிட்டத்தட்ட
மூன்று ஆண்டுகளாக, தன்னுடைய அரசியல் செயற்பட்டியலின் ஒவ்வொரு அம்சத்தையும் செயல்படுத்துவதற்கான
சாக்குப்போக்காக,
செப்டம்பர் 11 தாக்குதல்களை புஷ்
நிர்வாகம் பயன்படுத்திவருகிறது.
இப்பொழுது செப்டம்பர் 11, புஷ் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு பதவியில் இருத்தப்பட
வேண்டும் என்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
நியூ யோர்க் நகரத்தின் மாடிசன் சதுக்கத் தோட்டதில், பயங்கரவாதிகள்
தாக்குதல் நடைபெற்ற மூன்றாண்டு நிறைவின்பொழுது, மாநாட்டை அங்கு நடத்துதல் என்ற குடியரசுக் கட்சியின்
முடிவு, புஷ்ஷின் தோற்றத்தை ஒரு "போர்க்காலத் தலைவர்" மற்றும் தலைமைத் தளபதி என வலுப்படுத்தும்
வகையில் விருப்பத்தைக் கொண்டுள்ளது.
போரெதிர்ப்பு, மற்றும் புஷ்-எதிர்ப்பு என்று, எத்தனையோ தசாப்தங்களில் நியூ
யோர்க் கண்டிராத மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடந்த ஒரு நாளுக்குப்பின் தொடங்கிய மாநாட்டின்
நடவடிக்கைகள், நிர்வாகம் மற்றும் அரசியல் நடைமுறை எந்த அளவு ஆர்ப்பாட்டத்தால் நெருக்கடிக்காளாகியுள்ளன
என்பதைத் தம்மையும் அறியாமல் எடுத்துக்காட்டியுள்ளன. சர்வதேச பயங்கரவாதம் என்று எங்கும் நிறைந்துள்ள,
இராட்சத குணம் படைத்த தன்மையினால் ஒரு நாடு முற்றுகைக்கு உட்பட்டுள்ளது என்ற மதிகெட்ட பார்வையின்
அடிப்படையில், மாநாட்டில் முழு அரசியல் வடிவமைப்பும், உள்நாட்டிலும், வெளியிலும் அது எதிர்கொள்ளும், ஆனால்
விடை காணமுடியாது வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல்முரண்பாடுகள் இவை பற்றிய ஆளும்
செல்வந்தத்தட்டின் பார்வையை பிரதிபலிக்கின்றது.
"பயங்கரவாதத்தின்மீதான போர்" என அழைக்கப்படுவது இப்பொழுது இரண்டு பெரு
வணிக கட்சிகளின் உரைகல்லாகப் போய்விட்டது. மக்களுடைய உள்ளங்களில் பயத்தையும், பீதியையும் விதைக்கும்
பன்முக முக்கியப் பணிக்கு இது உதவுகிறது; வேலைகள் இழப்பில், வாழ்க்கைத்தர வீழ்ச்சியில் மற்றும் ஜனநாயக உரிமைகளை
நசுக்கலில் நிதி செல்வந்தத்தட்டை கொழிக்க வைத்தலில் இருந்து கவனத்தைத் திசை திருப்புதற்கு, ஜனநாயக உரிமைகள்
தாக்குதல் இவற்றில் இருந்து வெளிப்படும் சமுதாய சீற்றத்தை உள்நாட்டில் இருந்து வெளிநாட்டு விரோதியின்பால்
திசை திருப்புதல், இவற்றிற்கு உதவுவதுடன், இன்னும் கூடுதலான குருதிவெறி தோய்ந்த ஏகாதிபத்தியப் போர்களுக்கு
போலிக் காரணத்தையும் வழங்குகிறது.
குளிர் யுதத்த்தின் முடிவிற்குப் பின்பும், சோவியத் கம்யூனிச அச்சுறுத்தல் எனக்
கூறப்படுவது அகன்ற பின்னர், ஒரு புதிய அரசியல் ஒருமித்த உணர்வின் அடிப்படையில், தன்னுடைய ஆட்சியை
உறுதிசெய்து கொள்ளுவதற்கு, அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டு ஒரு புதிய சிந்தனை, அரசியல் வடிவமைப்பை
புனைந்தியற்றும் முயற்சியையும் இது உள்ளடக்கி உள்ளது; அதிலும் பெருகிவரும் சமூக சமத்துவமற்ற நிலையிலும்,
பெருகிவரும் சமுதாயப் பதட்டங்களின் நிலைகளிலும் இப்பணியை அது கொண்டுள்ளது. "பயங்கர வாதத்தின்மீதான
போர்" என்ற அரசியல் புனைகதையில், 9/11 ஒரு தவிர்க்கமுடியாத மற்றும் மத்திய பங்கைக் கொண்டுள்ளது.
அது ஒரு புதிய வரலாற்றுச் சகாப்தத்தின் தொடக்கமாக சித்தரிக்கப்படுகிறது; இச்சகாப்தம் ஒரு முகமற்ற,
எப்பொழுதும் மாறிவரும் விரோதிகளுக்கு எதிரான நிரந்தப் போர்முறைகொண்ட சகாப்தம் என்றும்
கொள்ளப்பட்டுள்ளது.
"அமெரிக்க கோட்டை" என்ற சொல்லாட்சி, குடியரசுக் கட்சி மாநாட்டில் இருந்து
வெளிப்பட்டு வலிமை, அதிகாரம் இவற்றைத் தாம் கொண்டுள்ளோம் என்பதைச் சுட்டிக் காட்டுவதை நோக்கம்
கொண்டதாக இருந்தது. உண்மையில், அது அதிகரித்த அளவில் ஒரு மிகக்குறுகிய சமுதாய அடித்தளத்தின் மீது தங்கி
இருக்கும் விரிசல் மிகுந்த அரசியல் முறையைத்தான் பிரதிபலிக்கிறது; மேலும் இது வெளிநாட்டைப் பொறுத்தவரையில்
ஏகாதிபத்தியக் கொள்கைகள், மற்றும் உள்நாட்டில் ஒரு சிலவராட்சிக்கு கீழ்ப்படிதல் என்ற அரசாங்கத்தின்
ஏகாதிபத்தியக் கொள்கைகளின் பால் சீற்றம் கொண்டுள்ள பரந்த மக்கட்தொகுப்பின் தட்டுக்களின் மத்தியில்
வளர்ந்துவரும் எதிர்ப்பு இயக்கத்தைத்தான் எதிர்கொண்டுள்ளது.
இராணுவப்படையின் ஐந்து பிரிவுகளின் பாடல்கள் அனைத்தையும் இசைத்தது உள்பட,
இம்மாநாட்டில் நிறைந்திருந்த பிற நாட்டு பழிப்புவாதம் மற்றும் இராணுவவாதம், புஷ் மறுதேர்வுப் பிரச்சாரத்தின்
கீழ்காணப்படும் மூலோபாயத்தின் தீக்குறியான கருத்தைச் சுட்டிக் காட்டுகிறது: அது, சட்ட மன்றம் அல்லது
நீதிமன்றங்களுக்குக் கட்டுப்படாமலும், அனைத்துக்கும் மேலாக இராணுவ மற்றும் போலீஸ் அதிகாரத்தை
அடிப்படையாகக் கொண்டிருக்கும் ஒரு ஜனாதிபதி ஆட்சி முறையைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான்.
மாடிசன் சதுக்கப் பூங்காவில் இருந்து வெளிவரும் வாடையில் பாசிசத்தின் கூடுதலான
தன்மைதான் மிகுந்துள்ளது; தொலைக்காட்சி காமெராவுக்கு முன்
Giuliani, McCain,
Schwarfzenegger உட்பட
அணிவகுக்கப்பட்டவர்கள் கட்சியின் "மிதவாதிகள்" என்று கூறப்படுகின்றனர். பேராளர்களில் அதிகம் இருப்பவர்கள்,
கொழுத்த பணக்காரர்கள், தீவிர வலதுசாரியினர், கிறிஸ்துவ அடிப்படைவாதிகள், மற்றும் அமெரிக்கக் குட்டி
முதலாளித்துவத்தின் மிகப்பிற்போக்கான தட்டுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
திரைக்குப் பின், குடியரசுக் கட்சி சமய வலதுகளின் சமுதாய செயற்பட்டியலைச்
சுமந்துள்ள ஒர் அரங்கில் வாதத்தைத் திணித்துக்கொண்டிருக்கிறது. அனைத்து கருச்சிதைவுகளையும்
சட்டவிரோதமாக்குதல், ஒரின இணைகளுக்கு எந்த உரிமைகளையும் மறுத்தல் முக்கியமான கொள்கைகளாக
கூறப்படுகின்றன.
தொடக்க நாள் இரவன்று தலைமைப் பேச்சாளராக இருந்த, நகரத்தின் பழைய
மேயரான ருடால்ப் கியுலியானி, செப்டம்பர் 11 அன்று நடந்த நிகழ்வுகள் பற்றி குடியரசுக் கட்சி ஆட்சிக்குப்
புகழாரம் சூட்டும் வகையில் சுருக்கமான ஓர் உரையை நிகழ்த்தினார். எரிந்து கொண்டிருந்த, உலக வர்த்தக
மையத்தின் மேல் மாடிகளில் இருந்து மக்கள் குதித்து வெளியயேறுவதைக் கண்ணுற்றபோது, தான் தன்னுடைய போலீஸ்
கமிஷனரின் தோள்களைப் பற்றி, "இறைவனுக்கு நன்றி கூறுவோம்; புஷ் நம்முடைய ஜனாதிபதியாக உள்ளார்" என
அறிவித்ததான பொருத்தமாகத் தோன்றாத கூற்றையும் இவர் தெரிவித்தார்.
கியிலியானியின் கருத்துக்கள் அமெரிக்க இராணுவாதத்துக்கு ஒரு விழா எடுத்தது போல்
இருந்ததுடன், உலகின் மற்ற பகுதிகளுக்கு "நீங்கள் அடுத்த இலக்காக இருக்கக் கூடும்" என்ற வெளிப்படையான
அச்சுறுத்தலையும் உள்ளடக்கி இருந்தது. செப்டம்பர் 14, 2001 அன்று இத்தாக்குதல்களுக்குக் காரணமாக
இருந்தவர்கள் "நம்மிடம் இருந்து தக்கதைக் கேட்பர்" எனக் கூறிய புஷ்ஷின் நியூ யோர்க் வருகையின் போது
கூறப்பட்ட சொற்றொடரை மேற்கோளிட்ட பழைய மேயர், "அவர்கள் ஆப்கானிஸ்தானில் நம்மிடமிருந்து
கேட்டனர். ..நம்மிடத்தில் இருந்து ஈராக்கில் கேட்டனர். ..ஜோர்ஜ் புஷ் நம்முடைய ஜனாதிபதியாக இருக்கும்
வரை, அவர்கள் தொடர்ந்து நம்மிடம் இருந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பதில் சந்தேகமும்
இருக்கிறதா?" என்று வினவினார்.
புஷ்ஷின் உலக மக்களுக்குக் கொடுத்த இழிவான இறுதி எச்சரிக்கையான "ஒன்றில்
நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் இருக்கிறீர்கள்" என்பதையும் எதிரொலித்து பழைய
மேயர் கூறினார்; இச்சமயம் உட்குறிப்பு என்னவென்றால் பயங்கரவாதத்தின் ஆதரவாளர்தான் வெள்ளை மாளிகையில்
குடியரசுக் கட்சி ஜனாதிபதி வருவதை எதிர்ப்பர் என்பது ஆகும்.
கியுலியானி இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனி ஐரோப்பாவை வெற்றி கொள்ளும்
நிலை, குளிர் யுத்த காலத்தில் சோவியத் அணுவாயுத தாக்குதல் இருக்கும் என்ற இரண்டையும் எங்கும் நிறைந்திருந்த
பயங்கரவாத அச்சுறுத்தலுடன் ஒப்பிட்டுப் பேசினார். "பயங்கரவாதத்துடன்" துணிவான தாக்குதல் நடத்துவதற்காக,
அல் குவைதாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாத, செப்டம்பர் 11 தாக்குதல்களில் எந்த தொடர்பும் இல்லாத
ஈராக்குடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த போர்த்தாக்குதலை நடத்தியதற்காக இவர் புஷ்ஷைப்
புகழ்ந்தார். இந்தத் தூண்டுதல் அற்ற ஆக்கிரமிப்புப் போரை நடத்தியதற்கு புஷ்ஷைப் பாராட்டியதுடன், ஆயுதப்
போட்டியில் ஈடுபட்டு, அணுவாயுதப் பயன்பாடு என்ற அச்சத்தின் மூலம், உலகை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்ற
"பரஸ்பர உறுதிப்படுத்தப்பட்ட அழிப்பு" கொள்கையை சோவியத் ஒன்றியத்துடன் ரோனால்ட் றேகன் முறித்துக்
கொண்டதுடன் ஒப்பிட்டார்.
ஜனநாயக விரோத, சர்வாதிகார போக்கு சாரம் மிகுந்த புஷ்ஷின் கொள்கைகளை
எதிரொலிக்கும் வகையிலும், அவரை மீண்டும் ஜனாதிபதியாக்கும் பிரச்சாரத்திற்கு நெருக்கித்தள்ளும் வகையிலும்
கியிலியானி அறிவித்தார்: "ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும்போது, நாம் ஒரு குடியரசுக் கட்சியைச்
சேர்ந்தவர், அல்லது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் அல்லது ஒரு தாராளவாதி என்பதற்காக
தேர்ந்தெடுக்வில்லை. நாம் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கிறோம். இப்பொழுதுள்ளது போன்ற ஒரு
போர்க்காலத்திலும், ஆபத்துக் காலத்திலும், அமெரிக்கர்கள் தங்களுடைய முடிவிற்கு மையத்தானமாக தலைமைத்
தன்மையை மதிப்பிற் கொள்ளவேண்டும்."
செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு எதிர்விளைவு காட்டும் வகையில் 2001 நியூ
யோர்க் மேயர் தேர்தலே இரத்து செய்யப்படவேண்டும் என்றும், தன்னுடைய பாதி சர்வாதிகார ஆட்சிமுறை
தொடரப்படாவிடில் நகரம் தப்பிக்க முடியாது என்றும் கியுலியானியே அப்பொழுது வற்புறுத்தியிருந்தார். சமீப
மாதங்களில், புஷ் நிர்வாகத்திற்குள்ளேயே மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏற்பட்டால், நவம்பர்
தேர்தல்கள் ஒருவேளை ஒத்திவைக்கப் படுவதற்கான வாய்ப்புக்களைப் பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மற்றொரு முக்கிய பேச்சாளரான அரிசோனாவின் செனட்டு உறுப்பினர் ஜோன்
மக்கெயின், இதேபோன்ற பல்லவியைப்பாடி, உலகளாவிய பயங்கரவாதத்தின்மீதான போர் "நன்மைக்கும்
தீமைக்கும் இடையே நடக்கும் போர்" என்று பிரகடனம் செய்தார். "நம்மில் மிகவும் புத்தி
சிதைவுடையவர்கள்தாம் போரின் தேவையைப் பற்றி ஐயப்படுவார்கள்" என்று கூறிய அவர் "நம்முடைய பாதுகாப்பு
பற்றி நடக்கும் தியாகங்கள் அனைத்து அமெரிக்கர்களாலும் சமமான முறையில் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.
ஆனால் அமெரிக்கர்கள் அனைவரும் இந்தப் போர் ஒரு நியாயமான முடிவிற்குக் கொண்டுவரப்படவேண்டும் என்ற
உறுதியையாவது பகிர்ந்து கொள்ளவேண்டும்" என்றார்.
மக்கெயினுடைய வரையறையின்படி, "பெரும் மனச் சிதைவுப் பட்டியலில்" உள்ள
முக்கியமானவர்கள், ஏற்கனவே ஈராக்கில் உயிரை இழந்த 1000 வீரர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்களும்,
இப்பொழுது அங்குள்ள பலருடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
வியாழக்கிழமை, மாநாடு தொடக்கப்படும் முன்பு, 20 வயதான நிக் ஸ்கின்னர்
நஜாப்பில் கொல்லப்பட்டார். இந்த இளைய கடற்படையின் நிலப்படைவீரர், ஜூலை 2003 ல் இருந்து
கொல்லப்பட்டவர்களில், அயோவா மாநிலத்தின் பதினைந்தாவது நபராவார். இவருடைய தாயார் லாரா ஹமன்
உள்ளுர் செய்தித் தாள் ஒன்றில், அமெரிக்கப்படைகள் அனைத்தும் ஈராக்கில் இருந்து இப்பொழுது திரும்பப் பெற
வேண்டும்; "ஏனெனில் அவர்கள் நம்மை அங்கு விரும்பவில்லை. நான் போரை ஆதரிக்கவில்லை; ஆனால்
படைவீரர்களுக்கு ஆதரவு தருகிறேன்" என்று கூறியுள்ளார்.
இத்தகைய விளைவு தங்கள் மகன், கணவன் அல்லது பிரியத்திற்குள்ளானவர் போரில்
கொல்லப்பட்டுவிட்டர் என்ற கொடூரமான செய்தியை அறிந்தவர்கள் அனைவரிடையேயும் பெருகிய முறையில்
பொதுவாகத்தான் உள்ளது.
எவ்வகையில் பார்த்தாலும், இப்போரும், இதைத் தொடக்கிய ஜனாதிபதியும்
ஈராக்கிலுள்ள படைகளால் அதிகமாக எதிர்ப்பிற்கு ஆளாகியுள்ள நிலையைக் காண்கிறோம். ஒரு சமீபத்திய
அறிக்கையின்படி, புஷ் "ஒடிப்போனவர்" என்று ஏளனமாக வீரர்கள் அழைப்பதை நிறுத்தும் வகையில், கடுமையான
இராணுவக் கட்டுப்பாட்டை அமெரிக்க அதிகாரிகள் செலுத்துகின்றனர் எனத் தெரிய வருகிறது.
அமெரிக்காவிற்குள்ளேயே, பாதிக்கும் மேலான மக்கள் போரை எதிர்க்கின்றனர்.
மாநாட்டு அரங்கத்தின் சொல்லலங்காரத்திற்கும், அமெரிக்க சமுதாய மற்றும்
அரசியல் உண்மைக்கும் இடையேயுள்ள ஆழ்ந்த துண்டிப்பு, மாநாட்டிற்கு வெளியே உள்ள தெருக்களில் மட்டும்
வெளிப்படையாகத் தெரிவது மட்டும் இல்லாமல், வறுமை, வேலையின்மை, வீடின்மை ஆகியவை பெருகியுள்ள, நியூ
யோர்க் நகர அண்மைப்பகுதிகளிலும் வெளிப்படையாக உள்ளது.
மூன்றில் ஒரு குழந்தை அதிகாரபூர்வ வறுமைக் கோட்டிற்குக் கீழே வசித்துவரும்,
மற்றும் ஆபிரிக்க-அமெரிக்கர்களில் 50 சதவிகிதத்தினர் வேலையின்மையிலும் இருக்கும் ஒரு நகரத்தில் குடியரசுக்
கட்சியினர் மாநாடு போட்டுள்ளனர். அமெரிக்க வரலாற்றிலேயே இதுகாறும் காணப்படாத அளவிற்கு சமுதாயத்தின்
துருவமுனைப்படல் வளர்ந்துவிட்டன; நகரத்தின் செல்வம்மிகுந்த 20 சதவிகிதத்தினர், வறிய நிலையில் உள்ள 20
சதவிகிதத்தினரைவிட 30 மடங்கு வருமானத்தைக் கொண்டுள்ள நிலை இருக்கிறது. இந்தப் பின்னனியில் நியூ யோர்க்
"எப்பொழுதும் இல்லாத அளவு வலிமை உடைய நகரம்" என்று கியுலியானி பீற்றிக் கொள்ளுகிறார்.
செப்டம்பர் தாக்குதல்களைப் பயன்படுத்தும் புஷ் நிர்வாகத்தின் பிற்போக்குக்
கொள்கைகள் நியூ யோர்க் நகரத்திலும், அதற்கு அப்பாலும் பெரும் விரோதப் போக்கையும் அவநம்பிக்கையையும்
ஏற்படுத்தியுள்ளன. செய்தி ஊடகத்தால் கிட்டத்தட்ட மறைக்கப்பட்டு விட்ட கருத்துக் கணிப்பு, மாநாட்டிற்கு முன்
நடத்தப்பட்டது, நகர மக்களில் பாதிப் பேர் (49.3%), நிர்வாகத்தின் சில உறுப்பினர்களாவது "முன்கூட்டிய
செப்டம்பர் 11 அல்லது அதை ஒட்டி ஒரு தாக்குதல் நடத்தத் தயாரிப்புக்கள் இருந்தன என்பதை அறிந்திருந்தனர்
என்றும் அவர்கள் முழு உணர்வுடன் செயல்படவில்லை" என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர்.
Zogby Intgernational
ஆல் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பு தாக்குதல்களைப் பற்றிய அதிகாரபூர்வ விசாரணையில் பெரும்பாலான
மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதையும் ஒரு புதிய விசாரணை செப்டம்பர் 11 நிகழ்வுகளைச் சூழ்ந்துள்ள
"இன்னும் விடையளிக்கப்படாத வினாக்கள்" பற்றித் தேவை என்ற கருத்தையும் கூறியுள்ளனர்.
மில்லியன் கணக்கான மக்கள் தாங்களே சில முடிவுகளைத் தெளிவாகக்
கொண்டுள்ளனர்: பொய்களின் அடிப்படையில் மக்களை போருக்கு இட்டுச் சென்ற ஒரு அரசாங்கம் எதையும்
செய்யத் தயங்காது. நீண்டகாலத் திட்டங்களான மத்திய கிழக்கு, மத்திய ஆசியா இவற்றின்மீது அப்பகுதிகளின்
வளமான எண்ணெய் இருப்புக்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போரைச் செயல்படுத்தப்
போலிக்காரணம் காட்டுவதற்கு ஒரு பயங்கரவாதத் தாக்குதலையும் அரசாங்கம் அனுமதிக்கக் கூடும் என்பதும் இதில்
அடக்கம்.
ஆகஸ்ட் 29 மக்கட்திரளின் ஆர்ப்பாட்டங்களில் வெளிப்படுத்தப்படட்ட உணர்வுகளும்,
இந்தக் கருத்துக் கணிப்பில் உள்ள உணர்வுகளும், அமெரிக்காவில் அதிகாரபூர்வமான அரசியல் விவாதத்தில்
விளிப்பாட்டைக் காணவில்லை என்பது, புஷ் நிர்வாகத்தின் போர்க்கொள்கை, அரசியல் பிற்போக்கு இவற்றுடன்
கொண்டுள்ள ஜனநாயகக் கட்சியினுடைய அடிப்படை உடன்பாட்டைக் காட்டுகிறது. இம்மாநாட்டில் தன்னுடைய
உரையில் மக்கெயின் இந்த அடிப்படை ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி, ".. அரசாங்கத்தின் மிக முக்கிய கடமை
இந்த பயங்கரவாதத்திற்கெதிரான போரில் வெற்றி கொள்ளுதல் என்பதை ஜனநாயகக் கட்சியில் உள்ள தன்னுடைய
நண்பர்களும் பகிர்ந்துகொள்ளுகிறார்கள்" என்று அறிவித்தார்.
பூகோள இராணுவவாதம், ஜனநாயக உரிமைகள் குறைக்கப்படுதல், தொழிலாள
வர்க்கத்தின் சமுதாய நிலைமைகள் மீதான தாக்குதல்கள் இவற்றை நியாயப்படுத்தும் புஷ் நிர்வாகத்தின்
கொள்கைகளை, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோன் கெர்ரியும் ஏற்றுள்ளார். புஷ் நிர்வாகம் போலவே,
ஜனநாயகக் கட்சியின் அரங்கமும் அமெரிக்காவை எதிர்கொண்டுள்ள "மிகப் பெரிய சவால்களில்" முக்கியமானது
"பயங்கரவாதத்தின்மீது உலகளாவியமுறையில் நடக்கும் போரில் வெற்றி காணுதல்" என்று வலியுறுத்தியுள்ளது.
இதுபோலவே, கெர்ரியும், ஈராக்கைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பது என்ற கருத்திற்கு
முழுமனத்துடன் நின்று, நவம்பர் மாதம் ஜனநாயகக்கட்சி வெற்றி பெற்றால் அது அமெரிக்கப் படைவீரர்களால் அங்கு
கொல்லப்படுதல் மற்றும் இறத்தல் என்பது தொடரும் என்பதையே அர்த்தப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
அக்டோபர் 2002 ல் இழிந்த தீர்மானமாகிய தூண்டுதலற்ற போரை ஈராக்கில் நடத்துவதற்கு
புஷ்ஷிற்கு அனுமதி அளித்த கெர்ரியின் வாக்கு, ஒரு தவறோ அல்லது தற்செயலான நிகழ்வோ அல்ல. அமெரிக்க
ஆளும் செல்வந்தத்தட்டிற்குள்ளே உள்ள ஒருமித்த கருத்தை அது வெளிப்படுத்துகிறது; அதாவது வாஷிங்டன் தன்னுடைய
தலையாய இராணுவ வலிமையைப் பயன்படுத்தி, உலகளாவிய போருளாதார, அரசியல் மேலாதிக்கத்தைத் தொடரவேண்டும்
என்பதும், இதற்காக முதலும் முதன்மையாகவும் மத்திய ஆசியா, பாரசீக வளைகுடாவில் வளமான எண்ணெய்
இருப்புக்களைப் பற்றிக் கொள்ளும் வகையில் நிறுவ வேண்டும் என்பதும் ஆகும்.
குடியரசுக் கட்சிக்கும், ஜனநாயகக் கட்சிக்கும் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளுவது
அல்லது சர்வதேச ஏகாதிபத்தியக் கூட்டுக்களுடன் இணைந்து செயலாற்றுவது என்பது பற்றி தந்திரோபாயமுறையில் வேறுபாடுகள்
என்னென்ன இருந்தபோதிலும், இந்த மூலோபாய நோக்கங்களில் இரண்டிற்கும் இடையே பெரிய அடிப்படைக் கருத்து
வேறுபாடு கிடையாது. குடியரசுக் கட்சியின் மாநாட்டில் வெளிப்பட்ட இராணுவவாதம், ஜூலை மாதம் போஸ்டன்
நகரில் ஜனநாயகக் கட்சியினர் வெளிக்காட்டிய பகட்டின் மற்றொரு மிகவும் வெறிபிடித்த வடிவேயாகும்.
போருக்கு எதிராகப் போராடவோ அல்லது ஜனநாயக உரிமைகளைப்
பாதுகாத்தலை இருக்கும் இரு கட்சி அமைப்புமுறையின் எல்லைக்குள் இருந்து போராடவோ வேறு எந்த வழியும்
இல்லை. அத்தகைய போராட்டம் நடத்துவதற்கான முன் நிபந்தனை இரு பெரு வணிகக் கட்சிகளிடம் இருந்தும்
முறித்துக் கொள்ளுவதும், உழைக்கும் மக்களை ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத் திட்டத்தில் அரசியல்
ரீதியாக அணிதிரட்டுவதன் அடிப்படையில் ஒரு புதிய வெகுஜனக் கட்சியைக் கட்டி எழுப்புவதும்தான். 2004 தேர்தலில்
சோசலிச சமத்துவக் கட்சி கலந்து கொள்ளுவது அத்தகைய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும், அத்தகைய
சுதந்திரமான மக்களின் இயக்கம் வெளிப்படுவதற்கான அடித்தளங்களை நிறுவுவதற்கும்தான்.
See Also :
குடியரசுக்கட்சி மாநாடு
நடைபெறுவதை ஒட்டி
நியூயோர்க்கில் பிரமாண்டமான புஷ்-எதிர்ப்புப் பேரணி
Top of page
|