:
ஆசியா
:
இலங்கை
The JVP intensifies its campaign against Sri Lankan peace talks
ஜே.வி.பி இலங்கை சமாதான பேச்சுக்களுக்கு எதிரான தனது பிரச்சாரத்தை உக்கிரப்படுத்துகின்றது
By Wije Dias
31 August 2004
Back to screen version
இலங்கையில் இனவாத பதட்ட நிலைமைகளை உக்கிரப்படுத்துவதன் ஒரு பாகமாக, மக்கள்
விடுதலை முன்னணி (ஜே.வி.பி) "சமாதானத்தின் உண்மையான எதிரிகள் யார்?" என்ற தலைப்பில் தீவு பூராவும் ஒரு
தொடர் விரிவுரைகளை நடத்திவருகிறது. ஜே.வி.பி சமாதானத்திற்கு சார்பாக பேசியபோதிலும் இந்த விரிவுரைகளின்
முழு இலக்கும் நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளுவதாகும். இந்த விரிவுரைகளில் ஒன்று ஆகஸ்ட் 17 கொழும்பில் நடத்தப்பட்டது.
ஏப்ரல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும்
அவரது சிறுபான்மை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் இடைநிறுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடனான
சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க தற்காலிகமாக முயற்சித்தனர். ஆயினும், சுதந்திர முன்னணியின் பிரதான
பங்காளியான ஜே.வி.பி, பேச்சுவார்த்தைகளை எதிர்த்து பிரச்சாரத்தல் ஈடுபட்டுவருகிறது. இந்த பேச்சுவார்த்தைகள்,
இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான தனது பிரேரணையின் அடிப்படையில் இடம்பெற வேண்டும் என விடுதலைப் புலிகள்
வலியுறுத்துகின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கும் அதன் கிழக்குப் பிராந்திய தலைவரான கருணா என்றழைக்கப்படும்
வி. முரளீதரன் தலைமையிலான எதிர்க் குழுவுக்கும் இடையிலான ஒரு தொடர்ச்சியான படுகொலைகள் மற்றும் பழிவாங்கல்கள்
நடவடிக்கைகளுக்கு மத்தியில், "சமாதான முன்னெடுப்புகளை" மீண்டும் ஆரம்பிப்பதற்கான நோர்வே மத்தியஸ்தர்களின் முயற்சிகள்
இடைநிறுத்தப்பட்டன. விடுதலைப் புலிகளை கீழறுப்பதன் பேரில் கருணாவின் போராளிகளுக்கு ஆதரவாக இராணுவம் தலையீடு
செய்துவருவதற்கான ஆதராங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், ஜே.வி.பி யின் பிரச்சாரம் ஆயுதப் படைகளின்
யுத்தத்தை மிகவும் விரும்பும் பிரிவினரோடு அணிசேர்கின்றது.
சில சந்தர்ப்பங்களில் ஜே.வி.பி தன்னை "சோசலிஸ்டுகள்" மற்றும் மார்க்சிஸ்டுகள் என
கூறிக்கொண்டாலும், அது நேரடியாக முதலாளித்துவ அரசின் நலன்களை தெளிவாக உச்சரிக்கின்றது. ஜே.வி.பி முதல்
தடவையாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதோடு, தனது நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளையிட்டும்
வாழ்க்கை நிலைமைகளின் தொடர்ச்சியான சீரழிவையிட்டும் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்புக்கு முகம்கொடுக்கின்றது.
"சமாதான முன்னெடுப்புகளுக்கு" எதிரான அதன் பிரச்சாரமானது, இவ்வாறு அதிகரித்துவரும் அதிருப்தியையும் மற்றும்
மாயையிலிருந்து விடுபடும் நிலையையும் சிங்களப் பேரினவாத அரசியலின் ஆபத்தான மரணப்பொறிக்குள் தள்ளிவிடுவதை
இலக்காகக் கொண்டதாகும்.
ஜே.வி.பி யின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச கொழும்பு இளைஞர் மன்ற
நிலையத்தில் விரிவுரையாற்றினார். சமாதானப் பேச்சுக்களுக்கு ஊக்கமளிக்கும் அனைவரையும் விடுதலைப் புலிகளின்
கையாட்கள் என உணர்ச்சிகரமாக கண்டனம் செய்வதுடன் அவர் ஆரம்பித்தார். அவர் 2002ல் விடுதலைப் புலிகளுடன்
யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்ட முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்தை "பச்சை
புலிகள்" --பச்சை ஐ.தே.மு வின் உத்தியோகபூர்வ நிறம்-- என வகைப்படுத்தினார். அவர் நோர்வே
மத்தியஸ்தர்களை "வெள்ளைப் புலிகள்" என பிரகடனம் செய்தார். பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கும் பலவித
அரச சார்பற்ற அமைப்புக்களை "டொலர்களுக்காக கூச்சலிடுவதாக" அவர் குற்றம் சாட்டினார்.
மீண்டும் யுத்தத்திற்கு திரும்ப திட்டவட்டமாக அழைப்புவிடுக்காவிட்டாலும்,
சமாதானத்திற்கான வலியுறுத்தல்களை விடுதலைப் புலிகளின் அழுத்தங்களுக்கு தலைவணங்குவதன் விளைவு என வீரவன்ச
தாக்கினார். எல்லா கோரிக்கைகளையும் விட "தாயகத்தின் பாதுகாப்பு" முன்நிறுத்தப்பட வேண்டியுள்ள அதே வேளை
சமாதானமானது பின் ஆசனத்திற்கு செல்லவேண்டும் என அவர் குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொள்ளும்
போது அரசாங்கத்தின் இருப்பும் கூட இரண்டாம் பட்சமானது என வீரவன்ச பிரகடனம் செய்தார். இதை தனது சுதந்திர
முன்னணி பங்காளிகளுக்கான ஒரு எச்சரிக்கையாக அன்றி வேறுவகையில் அர்த்தப்படுத்த முடியாது. "எமது எல்லா பெரும்
முயற்சிகளிலும் தாயகத்தின் பாதுகாப்பு சிகரத்தில் இருக்கவேண்டும்," என குறிப்பிட்ட அவர், "இந்த பெயரளவிலான
சமாதான முன்னெடுப்புகளை தோற்கடிக்க மக்களை அணிதிரட்டவேண்டிய" தேவையை அவர் வலியுறுத்தினார்.
வீரவன்ச, ஒரு வர்க்க அடிப்படையில் இருந்தோ அல்லது யுத்தநிறுத்தமானது அதிகரித்துவரும்
வேலையின்மை மற்றும் வறுமைக்கு வழிவகுக்கும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்துடன் அந்தரங்கமாக கட்டுண்டுள்ளதை
சுட்டிக்காட்டியோ "சமாதான முன்னெடுப்புகளை" தாக்கவில்லை. "சமாதான முன்னெடுப்புகளுக்கான" ஜே.வி.பி யின்
எதிர்ப்பு முற்றிலும் பிற்போக்கானதும், சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை பாதுகாப்பதை அடிப்படையாகக்
கொண்டதுமாகும். ஜே.வி.பி, சாதாரண உழைக்கும் மக்களின் தேவைகளைப் பற்றி பேசுவதற்கு பதிலாக, விடுதலைப்
புலிகளுடனான எந்தவொரு அதிகாரப் பகிர்வு சமாதான கொடுக்கல் வாங்கல்களிலும் தமது நலன்களுக்கு ஊறு
விளைவிக்கப்படும் என்பதையிட்டு ஆழமாக அக்கறை கொண்டுள்ள ஆளும் கும்பல் பிரிவினரின் -- இரானுவம் மற்றும் அரச
எந்திரம், பெளத்த பீடம் மற்றும் கைத்தொழில்துறை உரிமையாளர்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினர்--
நிலைப்பாட்டை பிரதிநிதித்துவம் செய்கின்றது.
வீரவன்ச, இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான விடுதலைப் புலிகளின் பிரேரணையை
கண்டனம் செய்வதானது, அது "ஐக்கிய அரசை", அதாவது தமிழர் விரோத வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட
தற்போதைய முதலாளித்துவ அரசை கீழறுக்கும் என்பதாலேயே அன்றி, இந்தத் திட்டம் ஜனநாயக விரோத மற்றும்
இனவாத இயல்பைக் கொண்டிருப்பதால் அல்ல. விடுதலைப் புலிகள் தமது தனித் தமிழ் நாட்டுக்கான கோரிக்கையை
உத்தியோகபூர்வமாக கைவிட்டிருந்த போதிலும் கூட, வீரவன்ச பின்வருமாறு பிரகடனம் செய்கின்றார்: "தன்னாட்சி
அதிகாரசபை தனித் தமிழீழத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. வெற்று வயிற்றிலேனும் நாம் எமது தாயகத்தின் ஐக்கிய
அரசை பாதுகாப்போம்."
தன்னாட்சி அதிகாரசபையை ஸ்தாபிப்பது தொடர்பாக அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன்
பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமானால் அதிலிருந்து விலகிக்கொள்வதாக கூறும் ஜே.வி.பி யின் அச்சுறுத்தலை வீரவன்ச
மீண்டும் வெளியிட்டார். "சுதந்திர முன்னணியின் நிலைப்பாடு அதன் வேலைத்திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரச்சினைக்கான இறுதித்தீர்வு பற்றியே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் மற்றும் அத்தகைய ஒரு தீர்வுக்கான
கட்டமைப்பு தீர்மானிக்கப்படும் போது மட்டுமே இடைக்கால நிர்வாக சபை பற்றிய விடயம் கலந்துரையாடப்பட
வேண்டும், என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடு மாற்றப்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம், என
அவர் முழங்கினார்.
"இடைக்கால நிர்வாகத்தை" "இறுதித் தீர்வுடன்" முடிச்சுப்போடுவதை விடுதலைப்
புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது வீரவன்சவுக்கு தெரியும். 2002ல் யுத்த நிறுத்த உடன்படிக்கை
கைச்சாத்திடப்பட்டது முதல் தொடர்ச்சியான சலுகைகளை வழங்கிய விடுதலைப் புலிகள், தனது சொந்த
பிரிவுகளிடையேயும் மற்றும் முன்னைய யுத்த பிராந்தியத்தில் பயங்கரமான நிலைமைகளுக்கு தொடர்ச்சியாக
முகம்கொடுத்துள்ள தமிழ் மக்கள் மத்தியிலும் அதிகரித்துவரும் மருள்நீக்கத்திற்கு (மயக்கந்தெளிவு) முகம்
கொடுத்துக்கொண்டிருக்கின்றது. தன்னாட்சி அதிகாரசபையை ஒளிவுமறைவின்றி எதிர்ப்பதன் மூலம் ஜே.வி.பி எந்தவொரு
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராகவும் நாசவேலையில் ஈடுபடுகிறது.
வீரவன்ச, முன்னைய ஐ.தே.மு அரசாங்கத்தை, இராணுவத்தை கீழறுத்ததாகவும் நாட்டை
காட்டக்கொடுத்ததாகவும் குற்றம்சாட்டனார். "2001ம் ஆண்டளவில், இலங்கை இராணுவத்தின் வீரம்செறிந்த இராணுவ
பிரச்சாரத்தால் விடுதலைப் புலிகள் பலவீனமடைந்த சக்தியாக இருந்தனர். ரணில் விக்கிரமசிங்கவின் (முன்னாள் பிரதமர்)
ஐ.தே.மு கைச்சாத்திட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையின் கீழேயே இலங்கை அரசை அரசியல் ரீதியில் தோற்கடிக்க
விடுதலைப் புலிகளால் முடிந்தது," என அவர் குறிப்பிட்டார்.
வரலாற்றை மீள எழுதுவதற்கு சமமான இந்தக் கருத்துக்கள், அரசியல்வாதிகள் யுத்த
முயற்சிகளை கீழறுத்துவிட்டார்கள் என தொடர்ச்சியாக குற்றம்சாட்டும் இராணுவ உயர்மட்ட பிரிவுகளுக்கு
அழைப்புவிடுப்பதற்காக கணிப்பிடப்பட்டவையாகும். உண்மையில், 2000 ஏப்பரல்-மே மாதங்களில், விடுதலைப் புலிகள்
முக்கியத்துவம் வாய்ந்த ஆணையிறவு இராணுவத் தளத்தை கைப்பற்றியதோடு யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும்பகுதியை
வேகமாக பறிக்கத் தொடங்கியபோது, இலங்கை இராணுவம் முன்னெப்போதும் இல்லாத பின்னடைவை அனுபவித்தது.
தாக்குதலை நிறுத்துமாறு விடுதலைப் புலிகளுக்கு தினிக்கப்பட்ட சர்வதேச அழுத்தத்தின் மத்தியில், சுமார் 40,000
இலங்கை துருப்புக்கள் கசப்பான மோதலுக்குப் பின் சற்றே தொங்கிக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
இந்தத் தோல்வி கொழும்பில் கடுமையான அரசியல் நெருக்கடியை உருவாக்கிவிட்டது.
குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கம், இராணுவத் தளபாடங்களை அவசரமாக கொள்வனவு செய்யத்
தள்ளப்பட்டதுடன், அதே சமயம், சமாதானப் பேச்சுக்களுக்கான அடித்தளத்தை அமைப்பதன் பேரில் அரசியலமைப்பு
மாற்றத்தை ஏற்படுத்தவும் தள்ளப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக ஐக்கிய
தேசிய கட்சியுடன் (ஐ.தே.மு வின் பிரதான கட்சி) சேர்ந்து கண்டனம் செய்த ஜே.வி.பி, மாற்றங்களைத் தடுத்தது.
பொருளாதாரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடையந்து வந்த அளவில், பொதுஜன முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும்
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வழிதேடக் கோரும் பெரு வர்த்தகர்களின் நெருக்குதலுக்கு உள்ளாயின. குமாரதுங்க
இலாயக்கற்றவர் என்பது உறுதியானதை அடுத்து அவரது அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு 2001 டிசம்பரில் நடத்தப்பட்ட
புதிய தேர்தலில் ஐ.தே.மு வெற்றிபெற்றது.
"இலங்கை இராணுவத்தின் வீரம் செறிந்த இராணுவ பிரச்சாரத்தை" பற்றி பரிந்து
பேசுவதன் மூலம், 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஆரம்பத்திலேயே எதிர்த்த இராணுவத் தலைவர்களின்
பிரிவுகளுடன் நேரடியாக ஜே.வி.பி அணிதிரள்கின்றது. இராணுவம் குமாரதுங்கவுடன் கூட்டுச் சேர்ந்து சமாதானப்
பேச்சுக்களை விளைவுகளுடன் கீழறுத்த தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் படகு கவிழ்ப்பு சம்பவங்களை அரங்கேற்றியதுடன்,
பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று அமைச்சுக்களை ஜனாதிபதி ஜனநாயக விரோத முறையில் அபகரித்ததற்கும் பின்னணியில்
இருந்தது. குமாரதுங்க, ஜே.வி.பி உடன் சுதந்திர முன்னணியை அமைத்ததை அடுத்து, பெப்பிரவரியில் எதேச்சதிகாரமான
முறையில் பாராளுமன்றத்தை கலைத்து ஏப்பிரல் தேர்தல்களுக்கு வழிவகுத்தார்.
இப்போது முதல் தடைவையாக அதிகாரத்திற்கு வந்துள்ள ஜே.வி.பி யின் மக்கள் நலன்சார்ந்த
வாய்வீச்சுக்கள் வேகமாக அம்பலத்திற்கு வந்துள்ளன. அரசாங்கம் தனது "நாடு முன்னோக்கி" வேலைத்திட்டத்தில்
ஒட்டவைத்துக்கொண்டுள்ள அற்ப கோரிக்கைகளை அது வழங்கினாலும், அரசாங்க ஊழியர்களுக்கு 70 வீத சம்பள அதிகரிப்பு,
மானியங்களை மீள வழங்குதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் தனியார்மயத்தை நிறுத்துதல் போன்ற சுதந்திர
முன்னணியின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
"சமாதன முன்னெடுப்புகளுக்கு" எதிரான ஜே.வி.பி யின் பிரச்சாரம் குமாரதுங்கவும் சுதந்திர
முன்னணி அரசாங்கமும் எதிர்கொண்டுள்ள தர்மசங்கடத்தை வெளிக்காட்டுகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு
முகம்கொடுத்த ஜனாதிபதி, சர்வதேச நிதி மற்றும் உதவிகளுக்கு வழிவகுப்பதன் பேரில் சமாதான பேச்சுக்களை மீண்டும்
ஆரம்பிக்க அழைப்புவிடுத்தார். ஆயினும், அதே சமயம், ஜே.வி.பி யிடமிருந்து மட்டுமன்றி, இராணுவ உயர்மட்டத்தினர்
மற்றும் சிங்களப் பேரினவாதத்தில் ஆழமாக மூழ்கிப்போயுள்ள அவரது ஸ்ரீ.ல.சு.க வினுள்ளும் எதிர்ப்புகளுக்கு
முகம்கொடுக்கின்றார்.
குமாரதுங்க ஜே.வி.பி யிடமிருந்து தன்னை தூரத்தில் வைத்துக்கொள்வதற்காக சுதந்திர முன்னணியின்
தலைமைப் பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக ஒதுங்கிக்கொண்டார். ஆனால் அவருக்கு பதிலாக அந்த இடத்தில் பதிலீடு
செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும் தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சருமான ரட்னசிறி விக்கிரமநாயக்க அவரது
சிங்களப் பேரினவாத கடும்போக்கால் பிரசித்தி பெற்றவராகும். குமாரதுங்க ஒரு தனிப்பட்ட விடயத்திற்காக லண்டன்
சென்றிருந்த போது, ஆகஸ்ட் 23 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ அலுவலர்கள் மத்தியில் ஒரு உக்கிரமான
உரையை நிகழ்த்திய அவர், தனது சொந்த நிர்வாக அமைப்பை அமைத்துக்கொண்டதற்காக விடுதலைப் புலிகளை கண்டனம்
செய்ததோடு ஸ்கன்டினேவிய சமாதான கண்கானிப்பாளர்களையும் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் என கண்டனம் செய்தார்.
இரண்டு நாட்களின் பின்னர், "எமது பொறுமைக்கும் எல்லை உண்டு" என கடற்படை அதிகாரிகளிடம் கூறிய அவர்,
எவ்வாளவு காலத்திற்கு நாங்கள் இந்த கொலைகளை தாங்கிக்கொள்வது (கிழக்கில்)," என மிகைப்படுத்தினார்.
அதே தினம், இராணுவத் தளபதி சாந்த கோட்டேகொட ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போது: விடுதலைப் புலி போராளிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி எமது இராணுவ வீரர்களை
தாக்குகிறார்கள். இந்த நிலை தொடர எம்மால் அனுமதிக்க முடியாது. நான் கிழக்கு இராணுவத் தளபதிகளுக்கு
பாதுகாப்புக்காக அவர்களது ஆகக்கூடிய சக்தியை பயன்படுத்துமாறு கட்டளையிட்டுள்ளேன்," எனத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் மீதான கருணா குழுவின் தாக்குதலில் கூட்டாக செயற்பட்ட இராணுவம், விடுதலைப் புலிகளின்
பழிவாங்கல் நடவடிக்கைகளை இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முன்நிபந்தனையாக பயன்படுத்துகிறது.
யுத்தத்திற்கு மீண்டும் திரும்புவதானது மக்களின் --சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்--
பெரும்பான்மையானவர்களின் அதிருப்திக்கு உள்ளாகும். இரு தசாப்தகால யுத்தத்தில் 60,000ற்கும் மேற்பட்ட மக்கள்
கொல்லப்பட்டுள்ளதோடு பலர் ஊனமுற்றவர்களாக அல்லது வீடுவாசல்களை இழந்தவர்களாக உள்ளனர். எல்லாவற்றுக்கும்
மேலாக "தாயகத்தின் பாதுகாப்பைக்" கோருவதன் மூலம், யுத்தத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும்
நசுக்குவதற்கு கொடூரமான வழிமுறைகளை பயன்படுத்த தயாராவதை ஜே.வி.பி சுட்டக்காட்டுகின்றது. 1980களின்
கடைப்பகுதியில், "தாயகம் முன்னிலையில்" என்ற பெயரில் ஜே.வி.பி நூற்றுக்கணக்கான தொழிலாள வர்க்கப்
போராளிகள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களை படுகொலை செய்ததை எவரும் மறந்துவிடக்கூடாது. |