: மத்திய
கிழக்கு :
ஈராக்
As thousands march to demand end to siege
US pulls back from Najaf
முற்றுகைக்கு முடிவுகட்டக்கோரி மேலும் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம் சென்றனர்
நஜாப்பிலிருந்து அமெரிக்கா பின்வாங்கியது
By James Conachy
28 August 2004
Back to screen version
முக்கியமான மதபோதகர்
Ayatollah Ali al-Sistani, ஷியைட்டுடைய நகருக்கு
வந்ததும் பல்லாயிரக்கணக்கான நிராயுதபாணிகளான ஷியைட்டுகள், அவர்களின் மிக முக்கிய புனிதத்தலமான இமாம் அலி
மசூதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியதை
அடுத்து, நஜாப்பில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது மற்றும் அமெரிக்கா மற்றும் ஈராக் இடைக்கால அரசாங்க
துருப்புக்கள் பின்வாங்கி வெளியேறத் தொடங்கியுள்ளன.
கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக நஜாப் நகரத்தின்
சில பகுதிகளை பிடித்து வைத்திருந்த மதபோதகர் மொக்தாதா அல் சதரின் மஹ்தி இராணுவப் போராளிகள், மசூதியைவிட்டு
வெளியேறி அந்த மசூதிகளின் சாவிகளை சிஸ்தானியோடு சம்மந்தப்பட்ட மதகுருமார்களிடம் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டதாகக்
கூறப்படுகிறது. ஆகஸ்ட் 5-ந் தேதி சண்டை தொடங்கியது, அதற்குப்பின்னர் வெள்ளிக்கிழமைதான் நஜாப் ஒப்பீட்டளவில்
அமைதியாக இருந்தது.
பாஸ்ராவிலிருந்து 1000-க்கு மேற்பட்ட சிவிலியன் வாகனங்கள் புடைசூழ சிஸ்தானி வியாழனன்று
நஜாப் நகருக்கு வந்ததும் போர் நிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அருகாமையிலுள்ள கூபா நகரிலிருந்து பல்லாயிரக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள் நஜாப்பிற்கு அணிவகுத்து வந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர், பாக்தாத்திலிருந்தும் நஜாப்பிற்கு
வடக்கேயுள்ள கர்பாலா நகரிலிருந்தும் அணிவகுத்து வந்தனர்.
ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ் தகவலின்படி: ''இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதும்,
பெரும் மக்கள் கூட்டம், புதன் கிழமை காலை முதற்கொண்டு அமெரிக்கா கடுமையாகக் குண்டுவீசி தாக்கியதாலும், டாங்கி
நடத்திய தாக்குதலினாலும், வெளித்தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்த நஜாப்பின் உயர்வாய் மதிக்கும் இமாம்
அலியின் கல்லறை மாடத்திற்குள் பலவந்தமாய் புகுந்து வழியைக் கண்டது.... 'முற்றுகையை முறியடிக்க நஜாப்புக்குத்
தன்னோடு தொடர்ந்து வர கட்டளையிட்ட சிஸ்தானியின் அழைப்புக்கு பதிலளித்தோம். போலீசார் ஒருவகையில் எங்களைக்
கைது செய்ய முயன்றனர், ஆனால் அந்த இடத்தில் அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. இதுதான் முற்றுகையின்
முடிவு'' என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காசிம் ஹமீத் கூறினார்.
AFP தந்துள்ள அறிக்கை அந்த மசூதியை
சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களை விவரித்தது: ''பழைய நகருக்கு வெளியில் அல்-ஜடிடா புறநகரில்
குறைந்த பட்சம் 20,000- ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு வந்து, தங்களின் டாங்கிகளுக்குள் சிக்கிக்கொண்ட அமெரிக்க
வீரர்கள் சிஸ்தானி மற்றும் அல் சதர் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் தங்களது முகத்திற்கு நேராக
அசைத்துக்கொண்டு செல்லப்படுவதை திகைத்துப்பார்த்துக் கொண்டு இருந்தவாறு ஒரு கனவுக்காட்சி அவிழ்ந்தது.''
63-வயதான Akir Hassan,
AFP- க்கு பேட்டியளித்தார்: ''இதுதான் ஜனநாயகம், இதுதான்
புதிய ஈராக், அமெரிக்கர்களுக்கு நாம் கட்டாயப்படுத்தி அளிக்கக்கூடிய மிகப்பெரிய தோல்வி இது. எனது வாழ்நாளில்
இது தான் மிக அழகான நாள்''
அன்றைய தினம் கணிசமான இரத்தம் சிந்தாமல் கழிந்துபோகவில்லை. கூபாவிலிருந்து
வந்தவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதற்காக இடைக்கால அரசாங்கத் துருப்புக்கள் சுட்டனர், ஷியா மக்கள்
கூபா பிரதான மசூதியிலிருந்து அணிவகுத்து வந்தபோது மோட்டார் குண்டுகளால் தாக்கப்பட்டனர். அந்தத்தாக்குதலில்
குறைந்தபட்சம் 74 பேர் கொல்லப்பட்டனர், இரண்டு சம்பவங்களிலும் 376-பேருக்கு மேல் காயமடைந்தனர்.
நஜாப்பிற்கு கிழக்கேயுள்ள திவானியா நகரத்திலிருந்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு
நடத்தப்பட்டது.
சிஸ்தானி திரும்பிவரல் மற்றும் தற்காலிக போர்நிறுத்தத்தை வரவேற்கும் அறிக்கைகளை
அமெரிக்க இராணுவம் மற்றும் இடைக்கால அரசாங்க பேச்சாளர்கள் வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும், கடந்த 48
மணி நேரங்களில் நடைபெற்ற சம்பவங்கள் அமெரிக்கா தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பிற்கு தலைகுனிவு என்ற
உண்மையை எதனாலும் மறைக்க முடியாது. ஏப்ரல் இறுதியில் பல்லூஜா நகர முற்றுகைக்கு முற்றுப்புள்ளி வைக்க
நடத்தப்பட்ட பேரத்தை விட இது மாபெரும் நீண்ட கால தாக்கங்களைக் கொண்டதாகும்.
மில்லியன் கணக்கான ஈராக் மக்கள் கண்முன்னால், அல் சதர் -அவரது ஊசலாட்டங்கள்
மற்றும் ஆக்கிரமிப்புப்படைகளோடு சமரசம் செய்து கொள்வதற்கான பல்வேறு முயற்சிகளுக்கு பின்னரும்-----அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் வலிமையை எதிர்த்து நின்று நஜாப் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வருவதைத்தடுத்து இன்னொரு நாளில்
போராடுவதற்கு தயாரானார். அவரது செல்வாக்கு அதன் மூலம் நாடு முழுவதிலும் வளர்ந்தது, குறிப்பாக அவரது
பிரதான அரசியல் எதிரி இயக்கமான, ஆக்கிரமிப்பு ஆதரவு ஈராக்கில் இஸ்லாமிய புரட்சியின் சுப்ரிம் சபையின் (SCIRI)
பாரம்பரிய மேலாதிக்கமாக செலுத்திவந்த பாஸ்ரா, அமாரா போன்ற நகரங்களில் அவரது செல்வாக்கு வளர்ந்து
வருகிறது.
அமெரிக்க இராணுவமும் அமெரிக்கா நியமித்துள்ள இடைக்கால பிரதமர் இயத் அல்லாவியும்
மெஹ்தி இராணுவத்தை ஒழித்துக்கட்டவும், நஜாப் மீது கட்டுப்பாட்டை நிலைநாட்டவும் பல வாரங்கள்
அச்சுறுத்தல்களையும், உறுதிப்பாட்டையும் பிரகடனப்படுத்திய பின்னர், சிஸ்தானியின் ''சமாதான திட்டம்''
ஆக்கிரமிப்புப்படைகளிடமிருந்து கணிசமான சலுகைகளை கோருகின்றன. எல்லா அமெரிக்க மற்றும் வெளிநாட்டு
துருப்புக்களும் நஜாப்பிலிருந்து வெளியேறவேண்டும்; நஜாப்பும், கூபாவும் ''ஆயுதங்களற்ற நகரங்களாக''
அறிவிக்கப்படவேண்டும் மற்றும் ஈராக் போலீசாரால் பாதுகாப்பளிக்கப்பட வேண்டும், அமெரிக்க தாக்குதலால்
சரீரரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது பொருள்இழப்பு ஏற்பட்டவர்களுக்கு இடைக்கால அரசாங்கம் இழப்பீடு
வழங்கவேண்டும்.
சதரின் உடன்பாட்டை பெறுவதற்காக மெஹ்தி இராணுவப்போராளிகளுக்கும், அல் சதருக்கும்
முழு பொதுமன்னிப்பு வழங்குவதாகவும் ஈராக் போலீசாரிடம் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும்
இடைக்கால அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இடைக்கால அரசாங்க அமைச்சர் காசிம் தாவூத் செய்திஊடகங்களுக்கு
பேட்டியளிக்கும்போது, சதர் ''மற்ற ஈராக் குடிமக்கள் எவரையும் போல் சுதந்திர மனிதர் அவர் ஈராக்கில்
விரும்புவதைச் செய்யலாம்'' என்று குறிப்பிட்டார்.
வாஷிங்டன் போஸ்ட் செய்தி அறிவித்தது: ''சதரின் இராணுவப்போராளிகள் பலர்
புனிதத்தலத்திற்கு அருகிலுள்ள சதரின் அலுவலகங்களில் ஆயுதங்களை ஒப்படைத்ததை பார்க்க முடிந்தது. பலர் அந்தப்
போராளிகளின் ஆயுதங்களை சேகரிப்பதற்காக கைவண்டிகளை தெருக்களில் கொண்டுவந்தனர். பலர் போராடும்
சீருடைகளான கருப்பு சட்டை மற்றும் டிரவுசர்களை மாற்றிக்கொண்டு, சாதாரண உடுப்பில் மக்களோடு சேர்ந்து
கொண்டனர்.'' ''மிகப்பெரும்பாலோரை அவர்கள் விருப்பப்படி வெளியேற அனுமதிக்கப்போகிறோம்'' என்று பெயர்
குறிப்பிட விரும்பாத ஈராக் இடைக்கால அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜூனில் புஷ் நிர்வாகம் நியமித்திருக்கிற இடைக்கால அரசாங்கத்தை ஈராக்கின் ஷியைட்
பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அச்சுறுத்துவதற்காகவும் சதரின் இயக்கத்தை ஒழித்துக்கட்டும்
நோக்கிலும் அமெரிக்க இராணுவத்தால் வேண்டுமென்றே கிளறிவிடப்பட்ட கடுமையான போர் கடந்த மூன்று வாரங்களுக்கு
மேலாக நஜாப், பாக்தாத், மற்றும் இதர நகரங்களில் ஆக்கிரமிப்புப்படைகளுக்கும் சதரின் குடிப்படை இராணுவத்திற்கும்
இடையே நடைபெற்றது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற கிளர்ச்சியெழுச்சிகளை முடிவுக்குக் கொண்டுவர
அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர், நஜாப், சதரின் ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டில்
இருந்து வந்தது. அந்த இரண்டு மாதங்களிலும், அமெரிக்கப்படை எடுப்பிற்குப்பின் மிகக்கடுமையான போர் நடைபெற்றது.
அமெரிக்க இராணுவ அமைப்பு கணக்கிட்டது சரி என்றால், ஆக்கிரமிப்பு படையிலிருந்து நகரத்தை பாதுகாத்து
நிற்பதற்காக குறைந்த பட்சம் 1000- போராளிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்க அரசாங்கம் குடிமக்கள் மரணங்கள்
குறித்து மதிப்பீடுகள் எதையும் தருவதில்லை, ஆனால் அவர்கள் நூற்றுக்ணக்கானோர் பலியானதாக தெரிவித்தனர்.
ஜெட் போர் விமானங்கள், ஹெலிகாப்டர் குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் டாங்கிகள்
போராளிகளின் தற்காப்பு அரண்களை தகர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டன மற்றும் நஜாப் நகரின் மையப்பகுதியில்
பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. மேற்கிலுள்ள மசூதியில் அமைந்துள்ள மிகப்பிரம்மாண்டமான கல்லறையில் குடிப்படைகள்
வெறுங்கையோடு போரிடும்பொழுது அமெரிக்க கடற்படையில் நிலப்படை வீரர்களும், போர்வீரர்களும் அதிர்ச்சி தரும்
வகையில் நேருக்குநேர் கைகளால் போரிட்டனர் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. போரிட்டதில் குறைந்தபட்சம் 11
அமெரிக்க துருப்புக்கள் கொல்லப்பட்டார்கள், 100-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நஜாப்பில் சதரின் போராளிகளுக்கு மிகப்பெருமளவில் சேதம் ஏற்பட்டாலும், அமெரிக்க
இராணுவமும் இடைக்கால அரசாங்கமும் அவர்களது குறிக்கோள்கள் எதையும் பெற்றிருக்கவில்லை.
நஜாப் நகரின்மீது தாக்குதல் தொடங்கிய சில நாட்களிலேயே ஈராக்கிய ஷியாக்களின்
எதிர்ப்பை சிதைத்துவிட முடியவில்லை என்று தெளிவாக தெரிந்துவிட்டது. மாறாக ஒடுக்கப்பட்ட ஈராக் மக்களிடையே
கொழுந்துவிட்டு எரியும் ஆழமான காலனித்துவ எதிர்ப்பு உணர்வுகள் உருவாகின மற்றும் அமெரிக்கா நியமித்துள்ள
இடைக்கால அரசாங்கத்திற்கெதிரான அவர்களது வெறுப்புணர்வு உக்கிரமடைந்தது.
ஷியைட் மக்களிடையே பரந்த அனுதாபத்தைப் பெற்ற மஹ்தி ராணுவப் போராளிகள்
பாஸ்ராவில் இருந்து பாக்தாத்தின் சதர் புறநகர்வரை ஆக்கிரமிப்புப்படைகள் மீது தாக்குதலை முன்னெடுத்தனர்.
வியாழனன்று பாக்தாத் கொரில்லாத்தாக்குதலில் மற்றொரு அமெரிக்க இராணுவம் மடிந்தது, போரில் மடிந்த அமெரிக்க
இராணுவத்தின் மொத்த எண்ணிக்கை குறைந்தபட்சம் 970 பேர் இறந்தனர் மற்றும் 6500 பேருக்குமேல்
காயமடைந்திருக்கின்றனர்.
ஷியைட்டுக்களின் புனித நினைவிடத்தின்மீது அமெரிக்கா நடத்தியத தாக்குதல் மத்திய கிழக்கு
முழுவதிலும் பெரும் கண்டனப்பேரணிகளையும் அதிருப்தியையும் தூண்டிவிட்டது. உலக நிதிச்சந்தைகளுக்கு மிகப்பெரிய கவலை
தரும் அம்சம் தெற்கு ஈராக் எண்ணெய் கிணறுகளில் ஊழியர்கள் நடத்திவருகிற வேலை நிறுத்தமும் இடைவிடாது நடத்தப்பட்டு
வருகின்ற நாசவேலைகளும்தான். எண்ணெய்விலை உயர்வில் முக்கியத்துவம் வாய்ந்த காரணியான, ஈராக்கிலிருந்து எண்ணெய்
ஏற்றுமதிகள் குறைந்ததால் அதனுடைய எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 40 டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளது.
ஈராக் மற்றும் சர்வதேச விமர்சகர்கள் அமெரிக்கா அல்லது ஈராக் பொம்மையாட்சியின்
படைகள் இமாம் அலியின் புனித தலத்திற்குள் புகுதல் மேலும் பொறுத்துக்கொள்ளாத நிலையை தோற்றுவிக்கும் சிறு
துரும்பாக இருக்க முடியும், லட்சக்கணக்கான ஷியைட்டுக்கள் ஆக்கிரமிப்பிற்கெதிராக தெருக்களில் அணிவகுத்து
வருவார்களென்று ஈராக் மற்றும் சர்வதேச வண்ணனையாளர்கள் கடுமையாக எச்சரிக்கைகளை விடுத்தனர். அந்த நினைவிடத்திலிருந்து
100- அடிக்கு அப்பால் இரண்டு வாரங்களுக்கு மேல் போர் நடைபெற்றது, ஆனால் அந்த வளாகத்தை தகர்க்க
வேண்டாமென்று கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஈராக்கிலுள்ள அமெரிக்கப்படைகள் உற்சாகத்தை குன்றச்செய்கிற ஓர் அம்சம்
என்னவென்றால் சொற்ப ஆயுதங்களோடு போர் புரிகின்ற ஈராக் போராளிகளை முறியடிக்கின்ற வல்லமையிருந்தாலும்,
யதார்த்தத்தில் அமெரிக்க போர்வீரர்கள் வாஷிங்டனிடமிருந்து ஆட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத பரந்த
பெரும்பான்மை ஈராக்கிய மக்களை எதிர்த்துப் போர்புரிகின்றனர்.
நஜாப் மோதல்கள் நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்
என்பது குறித்து கவலைப்பட்ட, பெருநிறுவன வட்டாரங்களும், குடியரசுக்கட்சி மூலோபாயங்களை வகுப்பவர்களும் நஜாப்
மோதல்களை ஒரு முடிவிற்கு கொண்டுவர வேண்டுமென்று புஷ் நிர்வாகத்திற்கு நிர்ப்பந்தம் கொடுத்தனர் என்பதில் சந்தேகத்திற்கு
இடமில்லை. ஈராக் படையெடுப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பேரழிவாகி அதன் உலக செல்வாக்கை பலவீனப்படுத்திவிட்டது,
பொருளாதார நெருக்கடியை அதிகரித்துள்ளது மற்றும் அதன் இராணுவத்தை உடைவின் புள்ளிக்கு இழுத்துச்சென்றுள்ளது.
தெற்கு ஈராக்கில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காக 74-வயதான சிஸ்தானியை ஒரு
கருவியாக பயன்படுத்தும் சூதாட்டத்தில் வாஷிங்டன் ஈடுபட்டிருக்கிறது. லண்டனில் இதய நோய் சிகிச்சை பெற்றுவந்த
சிஸ்தானி முன்னணி ஷியா மதபோதகர், அவரை அவசரமாக நேற்று அழைத்துவந்து நஜாப்பிற்குள் அணிவகுத்து வருவதற்கு
ஏற்பாடு செய்வதன்மூலம் அமெரிக்க இராணுவமும் இடைக்கால அரசாங்கமும் நஜாப் நகரின் மையபகுதியிலிருந்து
விலகிக்கொள்வதற்கு ஒரு மூடுதிரையை வழங்கியது.
ஈராக் மக்களுக்கு, நஜாப் நகரை வெளிநாட்டு தாக்குதலில் இருந்து காப்பாற்றும்
அமெரிக்க எதிர்ப்பு முயற்சியை சித்தரிக்கும் வகையில் சிஸ்தானி அவரது அணிவகுப்பைக் காட்டினார். அவர் ஆக்கிரமிப்பிற்கு
எதிராக ஆயுதந்தாங்கிய கிளர்ச்சி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு பொதுமக்களது ஆதரவு
குறைந்து கொண்டுவருவதை மாற்றுவதற்காக இந்த முயற்சி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஷியைட் அரசியல்
வாதியான Ali al-Lami
இந்த வாரம் ÜTM ஜெசீராவிற்கு அளித்த பேட்டியில்,
''அயத் அல்லாஹ்
(சிஸ்தானி)
நிலைமையை சீர் செய்ய முயன்றுவருகிறார். அமெரிக்கர்கள் மிருகத்தனமான இராணுவ வலிமையை பயன்படுத்துவது
தொடர்பாக அவர் மெளனமாக இருப்பது குறித்து ஈராக்கிலுள்ள மக்கள் சக்திகள் வியப்படைந்துள்ளன'' என்று
குறிப்பிட்டிருந்தார்.
பல ஷியைட் போராளிகள் நகரின் பல பகுதிகளில் எதிர்காலத்தில் சண்டை மூளக்கூடும் என்ற
எதிர்பார்ப்பில் ஆயுதங்களை மறைத்துவைத்துக் கொண்டிருக்கின்றனர். ''போர் முடிந்துவிட்டது ஆனால் எனது ஆயுதங்களை
நான் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறேன். ஏனெனில் அவை விரைவில் எனக்கு மீண்டும் தேவைப்படலாம் என்ற
உணர்வு ஏற்படுகிறது'' என்று சதரின் இராணுவ போராளி ஒருவர்
AFP யிடம்
தெரிவித்தார். ''மஹ்தி இராணுவத்தை ஒழித்துக்கட்டிவிட முடியுமென்று அமெரிக்கர்கள் நினைத்தார்கள், ஆனால் எங்களது
போராளிகள் இன்னும் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் வேலைக்குத் திரும்பவும் செல்ல முடியும் அதேவேளை
ஒரு இராணுவம் போல் தொடர்ந்தும் இருப்பர்'' என்று சதரின் சார்பில் குரல்தரவல்ல ஒருவர் தெரிவித்தார். |