:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka returns to the brink of war
இலங்கை யுத்தத்தின் விளிம்புக்கு திரும்புகிறது
By the Socialist Equality Party
18 August 2004
Back to screen version
இலங்கை, உள்நாட்டு யுத்தத்தின் மீள்வெடிப்பின் விளம்பில் நின்றுகொண்டுள்ளது. இது ஏற்கனவே
1983ல் இருந்து 65,000ற்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்டுள்ளதோடு, தீவு பூராவும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இரண்டரை
ஆண்டுகளின் பின்னர், இருசாராரும் மீண்டும் ஆயுத மோதலுக்குள் வேகமாக மூழ்கத் தயாராகின்றனர்.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க யுத்த விதைகளை தூவுவதில் ஈடுபட்டு வருகின்றார் என
சோசலிச சமத்துவக் கட்சி மீண்டும் மீண்டும் எச்சரித்து வந்துள்ளது. அவர் 2002 மற்றும் 2003ம் ஆண்டுகள் பூராவும்,
இராணுவ உயர்மட்டத்தினர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி) அணிசேர்ந்தவாறு, விடுதலைப் புலிகளுடனான
பேச்சுவார்த்தைகளின் மூலம் நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை கண்டனம்
செய்து அதற்கெதிராக ஒரு நீண்ட பேரினவாதப் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்
தன்னால் கட்டுப்படுத்த முடியாத சக்திகளை அக்கறையற்று இயங்கச் செய்துள்ளார்.
எமது எச்சரிக்கைகள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. ஏப்பிரலில் பதவிக்கு வந்த உறுதியற்ற சிறுபான்மை
அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில், குமாரதுங்க, வெளிநாட்டு உதவி மற்றும் முதலீடு நாட்டிற்குள் தொடர்ந்தும்
ஈர்க்கப்படுவதை உறுதி செய்துகொள்ளும் முயற்சியில், கிடப்பில் இருந்த விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை
மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்தார். ஆயினும் அவரது கூட்டாளிகளான இராணுவமும், ஜே.வி.பியும் எதிர் திசையில் தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.
அவப்பெயர் பெற்ற இராணுவப் புலனாய்வுக் குழு உட்பட, ஆயுதப்படைகளின் ஒரு பகுதியினர்
கிழக்குப் பிராந்தியத்தில் விடுதலைப் புலி ஆதரவாளர்களை தாக்குவதற்காக வி.முரளீதரன் (கருணா) தலைமையிலான விடுதலைப்
புலிகளில் இருந்து பிளவடைந்த குழுவை தூண்டி விடுவதில் ஈடுபட்டுள்ளனர். இராணுவம் எந்தவொரு தலையீட்டையும் மீண்டும்
மீண்டும் நிராகரித்த போதிலும், இராணுவப் புலனாய்வுக் குழு கருணாவுக்கு கொழும்பில் உள்ள ஒரு இரகசிய இல்லத்தில்
பல வாரங்களாக அடைக்கலம் கொடுத்திருந்தமை கடந்த மாதம் அம்பலத்துக்கு வந்ததையடுத்து இந்தப் பொய்கள் வெளிச்சத்திற்கு
வந்தன.
உண்மையில், இரகசிய ஒற்றர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு யுத்தம் இப்பொழுதும்
கூட கிழக்கிலும் கொழும்பிலும் நடைபெறுகின்றது. இரு பகுதிகளையும் சேர்ந்த போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும்
கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் ஒரு தற்கொலைக் குண்டுதாரியை கொழும்புக்கு அனுப்பிய விடுதலைப் புலிகள்
கருணாவை வெளிப்படையாக ஆதரிக்கும் அரசாங்க அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவை கொலைசெய்ய முயற்சித்தனர்.
இந்தத் தாக்குதலை, பாதுகாப்புப் படையினர் தலைநகரில் சோதனைச் சாவடிகளை மீண்டும் ஸ்தாபிக்கவும் மற்றும் விசாரணையின்றி
நீண்டகாலத்திற்கு தடுத்துவைக்க அனுமதிக்கும் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு
குமாரதுங்கவை நெருக்கவும் சுரண்டிக்கொண்டனர்.
அதே சமயம், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளியான ஜே.வி.பி
எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையையும் கசப்புடன் எதிர்க்கிறது. ஊடகங்களின் ஒரு பிரிவின் ஆதரவைப் பெற்ற
ஜே.வி.பி தலைவர்கள், விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகார சபையைக்
கோருவதைக் காரணம் காட்டி அவர்களுடனான பேச்சுவார்த்தையை கண்டனம் செய்வதோடு, குமாரதுங்க
பேச்சுவாத்தைகளை முன்னெடுத்தால் அவரிடமிருந்து பிரிவதாக அச்சுறுத்துகின்றனர்.
தன்னாட்சி அதிகாரசபை பற்றிய கலந்துரையாடல் இறுதியான அரசியல் தீர்வை அடையும்
பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்துகின்றது. ஆனால், ஜே.வி.பி க்கு நன்கு
தெரிந்தவாறு, அத்தகைய ஒரு பிரேரணை "இடைக்கால" நிர்வாகம் என்ற குறிக்கோளை முழுமையாக
பயனற்றதாக்குவதன் காரணமாக விடுதைலப் புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். யுத்த நிறுத்த உடன்படிக்கை
கைச்சாத்திடப்பட்டதில் இருந்து, விடுதலைப் புலிகள் தமது தனித் தமிழ்நாட்டுக்கான கோரிக்கையை கைவிட்டதற்கு
பிரதியுபகாரமாக எதனையும் பெறவில்லை. தனது சொந்த அங்கத்தவர்கள் மத்தியிலும் மற்றும் பழைய யுத்தப்
பிராந்தியத்தில் தொடரும் பயங்கரமான நிலைமைகளுக்கு முகம் கொடுத்துவரும் தமிழர்கள் மத்தியிலும் ஆதரவை
சேமித்துக்கொள்ளும் அவநம்பிக்கையான முயற்சியில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
இப்போது யுத்தப் பேரிகை கொட்டும் ஜே.வி.பி, தன்னாட்சி அதிகாரசபை தீவை
பிளவுபடுத்துவதற்கான திட்டம் எனவும் அதை ஏற்றுக்கொள்வது ராஜ துரோகத்துக்கு சமனானதாகும் என கண்டனம்
செய்கிறது. ஜே.வி.பி யின் பேரினவாத வாய்வீச்சுக்களை எதிர்ப்பவர்கள் "சமாதான புலிகள்", அதாவது விடுதலைப்
புலி ஏஜன்டுகள் என்ற கண்டனத்திற்கு உள்ளாக்கப்படுவதோடு, சமாதானப் பேச்சுக்களுக்கான நோர்வேஜிய
மத்தியஸ்தர்கள் "வெள்ளைப் புலிகள்" என முத்திரை குத்தப்பட்டுள்ளார்கள். ஜே.வி.பி யின் பிரச்சாரம் சமாதானப்
பேச்சுக்களை தடம்புரளச் செய்ய அச்சுறுத்திய போதிலும், குமாரதுங்க வெளிப்படையாக அதை எதிர்க்கவில்லை.
பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் நின்றுவிட்டிருக்கின்றன. கடந்த
மாதம் நோர்வே துணை வெளிவிகார அமைச்சர் விதர்
ஹெல்ஜெஸ்ஸனால்
மேற்கொள்ளப்பட்ட போய்வரும் ராஜதந்திரம் பேச்சுவார்த்தைகளுக்கான எந்தவிதமான அடிப்படையையும் நிலைநாட்டத்
தவறியது. "முனைகளில் உருக ஆரம்பித்திருக்கும் உறைந்துபோன போரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்" என
எச்சரித்து அவர் கொழும்பை விட்டு அகன்றார். கிழக்கில் நடக்கும் கொலைகளைச் சுட்டிக்காட்டி, அமைதி நடவடிக்கை
அதன் "மிக ஆபத்தான காலகட்டத்தில் இருக்கிறது" என்று அவர் அறிவித்தார். மிகைப்படுத்தல் என கொழும்பு செய்தி
ஊடகத்தால் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, "நெருப்போடு விளையாடும் சக்திகள் இருக்கின்றன மற்றும் அது தொடர்பாக
மிக உண்மையான ஆபத்துக்கள் இருக்கின்றன" என்று கூறி
ஹெல்ஜெஸ்ஸன்
பதிலடி கொடுத்தார்
எப்படி போருக்கருகில் சிறீலங்கா இருக்கிறது என்பது இந்தவாரம்
United Press International-க்கு
குமாரதுங்கவால் கொடுக்கப்பட்ட குறிப்புக்கள் வெளிச்சம்போட்டுக் காட்டின. இந்தப் பிராந்தியத்தில்
கன்னைவாத உட்கொலைகள் தொடர்ந்தால் கிழக்கில் எல்டிடிஇ
கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசாங்கத் துருப்புக்களுக்கு அவர் ஆணையிடுவார் என்று எச்சரித்தார். அத்தகைய
நகர்வு போர்நிறுத்தத்தை தகர்த்தெறியும் மற்றும் விரைந்து ஒரேயடியான மோதலுக்கு திரும்பும். அதேவேளை,
எல்டிடிஇ-ன் விட்டுக்கொடாத்தன்மை பற்றி குற்றம் சாட்டி, புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையின்
மீது உடன்பாடு இல்லை என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.
மிகவும் ஆபத்தான இந்த நிலைமைகளுக்கு மத்தியில், மிகவும் தீக்குறியான அடையாளமாக
உலக தலைநகர்களிலிருந்து, எல்லாவற்றுக்கும் மேலாக வாஷிங்டனிலிருந்து அமைதி வெளிப்பட்டிருக்கிறது. இந்தப்
பிராந்தியத்தில் அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் ஒரு
மோதலை முடிவு கட்டுவதற்கு ஒரு வழிமுறையாக சிறீலங்கா "அமைதி நடவடிக்கையை" அமெரிக்கா ஆதரித்திருக்கிறது.
இந்தியா, குறிப்பாக, மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் மேலாதிக்கம் செய்வதற்கான அமெரிக்க திட்டங்களில்
முக்கிய மூலோபாயப் பங்காளியாகி இருக்கிறது மற்றும் சிறப்பாக தகவல் தொழில் நுட்பம்
தொடர்பான தொழிற்துறைகளில் மலிவான உழைப்பிற்கான ஒரு முக்கிய
மூலாதாரமாகவும் ஆகியுள்ளது.
புஷ் நிர்வாகம் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கும் அதேவேளை, எல்டிடிஇ ஆயுதம்
களையப்பட்டாக வேண்டும் மற்றும் எந்தத் தீர்விலும் அது ஒரு துணைப்பாத்திரத்தை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி
உள்ளது. அதன் "பயங்கரவாத" அமைப்புகள் பட்டியலில் எல்டிடிஇ-யை அது பேணிவருகிறது -"பயங்கரவாதத்தின் மீதான
போர்" எனும் உள்ளடக்கத்தில் உள்ள அச்சிறப்புப்பெயர் இராணுவ அச்சுறுத்தலை உட்பொருளாய் குறிக்கும். கடந்த மூன்று
ஆண்டுகளாக, அமெரிக்காவும் சிறீலங்கா இராணுவமும் அவற்றின் உறவுகளைப் பலப்படுத்தி இருக்கின்றன. உயர்பதவி
வகிக்கும் அமெரிக்க அதிகாரிகளின் அணி ஒன்று, அதேபோல மதிப்பீட்டு மற்றும் பயிற்சிக் குழுக்கள், கொழும்புக்கு
கூட்டமாகச் சென்றன மற்றும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பதட்டம் நிறைந்த பகுதிகளைப் பார்வையிட்டன.
ஒரு செய்தி தெளிவாக வெளிப்படுகின்றது: அமைதி நடவடிக்கை குலைந்து போனால், எந்த
விதமான மீண்டும் தொடக்கப்படும் சண்டை நிகழுமானால் வாஷிங்டன், சிறீலங்கா இராணுவத்தை ஆதரிக்கும்.
பேச்சுவார்த்தைகளுக்கான அதன் ஆதரவை அமெரிக்கா இன்னும் சம்பிரதாயபூர்வமாக பராமரிக்கும் அதேவேளை,
சம்பந்தப்பட்ட அணிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழுத்தம் கொடுத்து தள்ளுவதில் எந்தவிதமான உயர்மட்ட
முயற்சிக்கான ஆதாரமும் இல்லை. உண்மையில், அமெரிக்க இராணுவ மற்றும் உளவு வட்டாரங்களுடன் நெருக்கமான
தொடர்பைக் கொண்டிருக்கும், அமெரிக்க சிந்தனைக்குழாம்
Stratfor,
கருணா சம்பந்தப்பட்ட சிறீலங்கா இராணுவ ஆத்திரமூட்டலுக்கு வாஷிங்டன்
"மறைமுக அங்கீகாரத்தை" வழங்கியது என்று சுட்டிக்காட்டியது. கடந்தமாத ஆய்வு ஒன்றில்,
Stratfor
குறிப்பிட்டதாவது: "புலிகளை (எல்டிடிஇ) சீர்குலைக்க, தூண்டில் இரைவைத்து
அக்குழுவை மோதலுக்குள் இழுக்க மற்றும் இறுதியாக உடைந்து போன தமிழ் இயக்கத்தை ஒரேயடியாக அழித்துக்
கட்டுவதை தோக்கங்கொண்ட ஒரு தாக்குதலை தொடுப்பதற்கு திட்டம் இருக்கிறது."
இந்தப் பிராந்தியத்தில் வாஷிங்டனின் கூட்டாளியான புதுதில்லி, இதேபோன்ற நிலையை
ஏற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசாங்கம், சிறீலங்காவுடன் ஒரு பாதுகாப்பு
ஒத்துழைப்பு உடன்படிக்கையை (DCA)
தொடர்ந்து முன்னெடுக்க ஆதரவு தந்தது. அது எல்டிடிஈ யைக் கவனிப்பதற்கு சிறீலங்காவின் இராணுவத்திறனை
குறிப்பிடத்தகுந்த வகையில் ஊக்குவிக்கும். பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் உளவுத்துறை ஒத்துழைப்பு, சிறீலங்கா
சிறப்புப்படைகளுக்காக பயிற்சி, வட பகுதி போர் மண்டலங்களுக்கு துருப்புக்களை வான்வழியாக கொண்டுசெல்வதில்
இந்திய உதவி மற்றும் சாதனங்களை வழங்கல், மற்றும் ஆயுதக் கடத்தலுக்கு எதிரானது உள்பட கூட்டு கடற்படை
நடவடிக்கைகள் உள்ளடங்குவன, போரை நோக்கி நழுவிச்செல்வதை பற்றி இந்தியா பகிரங்கமாக கருத்துக்கூறவில்லை.
முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் திவால்
போரின்
ஆபத்தை எச்சரிக்கையில், பொறுக்கவியலாத அளவுக்கு தூண்டப்பட்ட ஹெல்ஜெஸ்ஸன்
கொழும்பில் ஆளும் வட்டாரங்களில் அசாதாரணமான அரசியல் செயலிழந்த தன்மை என்று அவர் கருதியதைக்
குறிப்பிட்டார். "(கிழக்கில்) வன்முறை பற்றி நான் பெரிதும் கவலையடைந்துள்ளேன்" என்று நோர்வே அமைச்சர்
கூறினார், "ஆனால் (நான்) அதே அளவு நம்பமுடியாத அளவுக்கு சுயதிருப்தி நிலவுவது பற்றியும் கவலை அடைகிறேன்."
பெரும்பான்மை மக்கள் அமைதிக்கு ஆதரவாக இருக்கின்றனர், ஆனால் அவர்கள் அமைதி நடவடிக்கைக்கு ஆதரவாக இல்லை
என்று அவர் விளக்கினார்.
எவ்வாறாயினும் தற்செயலான, ஹெல்ஜெஸ்ஸன் கருத்துக்கள் சிறீலங்கா ஆளும் வர்க்கத்தின்
அனைத்துப் பகுதிகளையும் பற்றிய ஒரு பழிகூறும் குற்றச்சாட்டைக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டில் தேர்தலுக்குத்
தேர்தல், பத்துலட்சக் கணக்கான சாதாரண மக்கள் அமைதியை, அடிப்படை ஜனநாயக உரிமைகளை, வாழ்க்கைத்
தரங்களில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டு வரும் என்று அவர்கள் நம்பிய கட்சிகளுக்காக திரும்பத்திரும்ப
வாக்களித்திருக்கிறார்கள். இருந்தும், அப்பொழுதும் இப்பொழுதும், குமாரதுங்கவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும்
(SLFP)
போட்டியாளரான ஐக்கிய தேசியக் கட்சி (UNP)
இந்த அடிப்படை அபிலாஷைகளை நிறைவு செய்வதற்கு திராணியற்றது என்பதை நிரூபித்திருக்கிறது.
முந்தைய ஐக்கிய முன்னணி (UNF)
அரசாங்கம் 2001 தேர்தல்களில் வெற்றிபெற்ற பின்னர் தற்போதைய
"அமைதி நடவடிக்கையை" முன்னெடுத்தது. இலங்கை வணிகத்தின் மேலாதிக்கம் செய்யும் பகுதிகளால் ஆதரிக்கப்பட்ட,
அதன் நோக்கம் தொழிலாள வர்க்கத்தை பரஸ்பரம் சுரண்டுவதை உக்கிரப்படுத்துவதற்கு எல்டிடிஇ-உடன் ஒரு வகுப்புவாத
அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டை அடைதலாகும். ஐ.தே.முவின் "சிறீலங்கா இழந்ததை மீண்டும் பெறல்"
வேலைத்திட்டம், தீவின் உள்கட்டமைப்பை புதுப்பிப்பதற்கான பேராவலுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்கான
திட்டத்தின், சீனபிரதானப் பகுதியுடன் ஹொங்காங்கிற்குள்ள உறவை பிரதிபலிக்கும் - பொதுத்துறையைக் கடுமையாய்
குறைக்கும் மற்றும் இந்தப் பகுதியின் ஒரு பூகோள முதலீட்டுக்குள் சிறீலங்காவை திருப்பும் திட்டத்தின் ஒரு அம்சமாக
அமைதிப் பேரம் இருந்தது.
ஆயினும், அமைதி நடவடிக்கை என்று அழைக்கப்பட்டது, 1948 சுதந்திரத்திலிருந்து, சமூகப்
பதட்டங்களிலிருந்து திசைதிருப்புவும் உழைக்கும் மக்களை வகுப்புவாத வழிகளில் பிளவுபடுத்தவும் ஒரு வழிமுறையாக தமிழ்
விரோத பழிப்புவாதத்தின் மீது தங்கியிருக்கும், கொழும்பிலுள்ள அரசியல் ஏற்பாட்டினை ஆழமாக சீர்குலைத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதன் சுதந்திர சந்தைக் கொள்கைகளுக்கு வளர்ந்து வரும் எதிர்ப்புடன் மோதலுற்ற
பின்னர், நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொண்ட நச்சுத்தன்மை வாய்ந்த தமிழ் எதிர்ப்பு இனப்படுகொலையை தூண்டிவிட்ட
பின்னர் உள்நாட்டு யுத்தம் 1983ல் வெடித்தது.
ஐதேமு மற்றும் சிறீலங்கா சுதந்திர கட்சி -இரண்டு கட்சிகளும் கொடூரமான உள்நாட்டு
யுத்தத்திற்கு தலைமை வகித்தன, அது அதன் இலக்காகக் கொண்டிருந்த, சிங்கள புத்த செல்வந்தத் தட்டின் அரசியல்
மேலாதிக்கத்தை தொடர்ந்தது. இராணுவம், அரசு அதிகாரத்துவம், புத்தமத குருக்கள் மற்றும் வர்த்தகத்தின் மிகவும்
பின்தங்கிய பகுதிகளில் இவ்வாறு உருவாக்கப்பட்ட நலன்கள் குறிப்பிடத்தக்கவாறு வலிமைப்படுத்தப்பட்டன. குறிப்பாக,
சிறீலங்கா அரசியலில் ஒரு சக்தி மிக்க சுய ஆட்சி சக்தியாக ஆகியிருக்கிறது. 2002 போர் நிறுத்தத்திலிருந்து,
குமாரத்துங்கவுடன் ஒரு இரகசிய உடன்பாட்டுடன், ஆயுதப்படைகள் அமைதி நடவடிக்கையைக் கீழறுக்கவும் ஊதிப்பெருகிய
அதிகாரிகள் சாதியின் சலுகை மிக்க நிலைப்பாட்டை பாதுகாக்கவும் ஒன்றை அடுத்து மற்றொன்றாக ஆத்திரமூட்டலை
அரங்கேற்றின.
கடந்த நவம்பரில், இராணுவம் மற்றும் ஜேவிபி ஆதரவுடன், குமாரதுங்க மூன்று முக்கிய
அமைச்சகங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு தனது பெரும் ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தினார்.
பெப்ரவரியில், அவர் ஐதேமு அரசாங்கத்தை தன்னிச்சையாக அகற்றினார். அவரது சிறீலங்கா சுதந்திர கட்சி ஐதேமுவின்
வேலைகளை, சமூக சேவைகளை மற்றும் மானியங்களை அழித்தலுக்கு எதிரான பரந்த மக்களின் குரோதத்தை சுரண்டிக்
கொண்டு, தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேவிபி உடன் சேர்ந்து
UPFA கூட்டணியை அமைத்தது. ஏப்ரல் தேர்தலில் தீர்ந்த முடிவாய்
கொள்ளமுடியாத வெற்றியில் வென்று கொண்டு, குமாரதுங்க பதவி நீக்கப்பட்ட ஐதேமு தலைவர் ரணில் விக்கிரமசிங்க
எதிர்கொண்ட சரியாக அதே நெருக்கடிகளுடன் மோதலுற்றார்.
நாடு உயர்ந்துவரும் பூகோள எண்ணெய் விலைகளால் பெருகிக்கொண்டிருக்கும் ஆழாமான
நெருக்கடிகளில் இருக்கிறது. சிறுபான்மை UPFA
அரசாங்கம் வாழ்க்கைத் தரங்களை உயர்த்துவதற்கான அதன் தேர்தல்
உறுதிமொழிக்கு விரைந்து குழிபறித்திருக்கிறது மற்றும் இது எண்ணெய்த் துறைகள் உள்பட முக்கிய துறைகளில் வளர்ந்துவரும்
வேலை நிறுத்த அலைகளுக்கும் எதிர்ப்புக்களுக்கும் வழிவகுத்தது. அவசரமாகத் தேவைப்படும் சர்வதேச நிதி உதவியைப்
பெறுவதற்கு UPFA,
ஐதேமு-வின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறது மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை
திரும்ப ஆரம்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கறது. ஆயினும், செய்தி ஊடக, ஜேவிபி மற்றும் ஏனைய இன பழிப்புவாத
சிங்கள குழுக்கள் எல்டிடிஇ-க்கு சலுகைகள் கொடுக்கும் ஏதாவது குறிப்பினையும் நாட்டுக்கு ஒரு காட்டிக்கொடுப்பாகக்
கண்டனம் செய்தது மற்றும் வகுப்புவாத குரோதங்களை தட்டி எழுப்பியது.
மாற்ற முடியாத வகையில் இராணுவ மோதலுக்கு இட்டுச்செல்லும் இந்த சமூக மற்றும்
அரசியல் முரண்பாடுகளிலிருந்து ஆளும் வர்க்கத்திற்கு வேறுவழி இல்லை. புதுப்பிக்கப்படும் ஒரு சண்டையானது
தவிர்க்கமுடியாதவகையில் இராணுவ எந்திரத்திற்கு செலவழிக்க வாழ்க்கைத் தரங்களில் மிருகத்தனமான வெட்டுக்களை
அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதை பார்க்கும். இந்த நடவடிக்கைகளை திணிக்க போரை மேற்கொண்டு நடத்த
குமாரதுங்க எந்தவித எதிர்ப்பையும் நசுக்குவதற்கு அதிகரித்த அளவில் ஏதேச்சாதிகார வடிவிலான ஆட்சியை
மேற்கொள்வார்.
ஜேவிபி மிக ஆபத்தான பாத்திரத்தை ஆற்றும் என சோசலிச சமத்துவக் கட்சி
எச்சரிக்கிறது. 1980களில், அப்பொழுது சட்டவிரோத அமைப்பான ஜேவிபி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான
பிரச்சாரத்தில் மேலும் தனது "தேசபக்தியை" முன்னெடுக்க பாசிசத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்,
தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை கொன்றது. 1994ல் உத்தியோக ரீதியிலான அரசியலுக்கு
கொண்டுவரப்பட்ட பின்னர், ஜேவிபி போருக்கு எதிரான எந்த எதிர்ப்பையும் மிதித்து நசுக்க மிகவும் ஆகக்கூடிய
வழிமுறைகளைப் பயன்படுத்த தயங்காது.
பாரம்பரிய தொழிலாளர் கட்சிகள் என்று அழைக்கப்படும் எதுவும் எந்தவித ஒரு
மாற்றையும் வழங்கவில்லை. அவை அனைத்துமே தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முதலாளித்துவ வர்க்கத்தின்
ஏதாவதொரு பகுதிக்கு பகிரங்கமாக கீழ்ப்படுத்துகின்றன. நான்கு பத்தாண்டுகளாக குமாரதுங்கவின் சிறீலங்கா சுதந்திர
கட்சியுடன் லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டுறவில் இருந்து வருகின்றன மற்றும் அதன் இனவாத
அரசியலுக்கு முற்றிலும் ஒப்புதல் அளித்து வருகின்றன. நவசமசமாஜக் கட்சியானது உழைக்கும் மக்கள் "அமைதி
நடவடிக்கையில்" ஆளும் தட்டுக்கள் இரகசியமாக பேரம்பேசுவதிலும் இழுபடுவதிலும் தங்களின் நம்பிக்கையை வைக்குமாறு
வற்புறுத்துகின்றனர்.
ஆளும் வர்க்கத்தின் எந்தப் பகுதியின் மீதும் தொழிலாள வர்க்கம் எந்த அரசியல்
நம்பிக்கையையும் வைக்க முடியாது. போரின் சலிப்பின் கீழ் சிறீலங்காவில் முழு தலைமுறையும் வளர்ந்து வந்திருக்கின்றது.
பத்தாயிரக் கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டிருக்கின்றன மற்றும் பல முடமாக்கப்பட்டிருக்கின்றன அல்லது அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றன.
இராணுவவாதம் மற்றும் வகுப்புவாத அரசியலும் நாளாந்த வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் நஞ்சூட்டி இருக்கிறது.
இது முதலாளித்துவ அரசியலின் முழுக் கட்டிடத்திலிருந்தும் இந்தப் பேரழிவுகர போருக்குப் பொறுப்பானவர்களிடமிருந்தும் முற்றிலும்
துண்டித்துக்கொள்வதன் மூலம் மட்டுமே வெல்லப்பட முடியும்.
உண்மையான அமைதிக்கான, ஜனநாயக உரிமைகளுக்கான மற்றும் ஒரு நல்ல வாழ்க்கைத்
தரங்களுக்கான உழைக்கும் மக்களின் தேவைக்கு, தற்போதைய அழிவை உண்டு பண்ணியிருக்கின்ற அரசியல் ஏற்பாட்டினையும்
அரசு எந்திரத்தையும் புரட்சிகர முறையில் தூக்கி வீசலுக்கு குறைவான எதுவும் தேவைப்படவில்லை. இதனை மேற்கொள்ளக்கூடிய
ஆற்றலுள்ள ஒரே சமூக சக்தி, ஒடுக்கப்பட்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் தலைமையில் தொழிலாள வர்க்கமாகும்.
தொழிலாள வர்க்கமானது அதன் சொந்த சுதந்திரமான வர்க்க நலன்களுக்கான
போராட்டத்துக்கான ஒரு அரசியல் மூலோபாயத்தை கட்டாயம் விரிவாக்க வேண்டும் மற்றும் அதன் பின்னே ஒடுக்கப்பட்ட
நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை அணிதிரட்ட வேண்டும். அத்தகைய இயக்கத்திற்கான அத்தியாவசிய முன்நிபந்தனை
அனைத்துவிதமான இனவாதம் மற்றும் பிற இன பழிப்புவாதம் ஆகியவற்றின் அனைத்து வடிவங்களுக்கும் விட்டுக்கொடுக்காத
எதிர்ப்பாகும் மற்றும் இனம், மத அல்லது மொழி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப்
பாதுகாப்பதாகும். தொழிலாளர்கள் -சிங்கள மற்றும் தமிழ்; பெளத்தர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள்-
ஒரு பொதுவான ஒடுக்கப்படுவராக எதிர்கொள்கின்றனர் மற்றும் அவர்கள் போருக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக
ஒரு ஒன்றிணைந்த போராட்டத்தினை கட்டாயம் தொடுக்க வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சியானது
(SEP) வடக்கிலும்
கிழக்கிலும் இருந்து சிறீலங்கா இராணுவத்தினரை உடனடியாகவும் நிபந்தனை இன்றியும் திரும்பப் பெறுவதற்கு அழைக்கிறது.
ஐக்கியப்பட்ட அரசை பலாத்காரமாகப் பராமரிப்பது நாடு முயுவதும் இராணுவவாதத்தையும் பிற இன
பழிப்புவாதத்தையும்தான் பலப்படுத்தி இருக்கிறது. துருப்புக்களை விலக்குவதைக் கோருவதில் முன்முயற்சி எடுப்பதின் மூலம்,
தொழிலாள வர்க்கம், ஒரு சில இலாப நோக்காளர்களின் தேவையைவிட, பெரும்பான்மை மக்களின் தேவைகளை
நிறைவேற்றுகின்ற ஒரு பொதுவான சோசலிச வேலைத் திட்டத்தை சுற்றி தமிழ் மற்றும் சிங்கள மக்களை
ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சக்திமிக்க ஈர்ப்புமுனையாக ஆகும்.
ஜனநாயக உரிமைகள் பற்றிய அனைத்து தனிச்சிறப்பான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு
பகிரங்கமாகவும் சுதந்திரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதாரண உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளை கொண்ட ஒரு
உண்மையான ஜனநாயகத்தன்மை உடைய அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதை சோசலிச சமத்துவக் கட்சியானது
ஆதரிக்கிறது. இது இந்தியத் துணைக்கண்டத்தில் ஐக்கிய சோசலிசக் குடியரசுகளுக்கான ஒரு பரந்த போராட்டத்தின் ஒரு
பகுதியாக சிறீலங்கா மற்றும் ஈழம் சோசலிசக் அரசுகளின் ஒன்றியத்தை நிறுவுவதற்கான போராட்டத்துடனும் சர்வதேச
ரீதியான போராட்டத்துடனும் முழுமையாக இணைந்துள்ளது.
சிறீலங்காவிலும் இந்தப் பிராந்தியம் முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்
ஒரு பகுதியாக சோசலிச சமத்துவக் கட்சியானது இந்த சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்திற்காக
போராடுகின்றது. சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்திலும் சிறீலங்காவிலும்
உள்ள உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள் அனைவரையும் எமது முன்னோக்கை கவனத்துடன்
எண்ணிப்பார்க்குமாறும் எமது கட்சியில் இணைந்து அதனைக் கட்டி எழுப்புமாறும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். |