WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ரஷ்யா
மற்றும் முந்தைய USSR
Russia-Georgia tensions worsen following
Beslan siege
பெஸ்லன் முற்றுகையை தொடர்ந்து ரஷ்யா - ஜோர்ஜியா கொந்தளிப்புகள் மோசமடைகின்றன
By Simon Wheelan
11 October 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
ரஷ்ய குடியரசான வடக்கு ஒசட்டியாவிலுள்ள பெஸ்லன் பள்ளிக்கூட முற்றுகைக்கு பின்னர்
ரஷ்யாவிற்கும், அதன் தெற்கு காக்கஸஸ் பக்கத்து நாடான ஜோர்ஜியாவிற்குமிடையே கொந்தளிப்புக்கள் அதிகரித்துள்ளன.
ஜனாதிபதி விலாடிமீர் புட்டினால் தலைமை தாங்கப்படும் ரஷ்ய நிர்வாகமானது அந்த
துயர சம்பவத்தை அமெரிக்காவின் 9/11 அன்று உலக வர்த்தக மையம் சிதைக்கப்பட்ட பின்னர் எவ்வாறு குடியரசுக்கட்சி
நிர்வாகம் பயன்படுத்திக்கொண்டதோ, அதேபாணியில் மேற்கொள்கிறது. தனது எதிரிகளுக்கு எதிராக தனது
சொந்த எல்லைகளுக்கு அப்பால் இராணுவத்தின் மூலம் முன்கூட்டித் தாக்குதல் நடத்தப்போவதாக கிரெம்ளின்
அச்சுறுத்தல் செய்திருக்கிறது. ரஷ்யாவின் தலைமை தளபதியான, ஜெனரல் யூரி பாலுயேவ்ஸ்கி (Yuri
Baluyevsky) இராணுவப் படைகள் ''உலகின் எந்த பிராந்தியத்திலும்
உள்ள பயங்கரவாத தளங்களை ஒழித்துக்கட்டுவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்குமென்று'' அறிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு வெளியில் முன்கூட்டித் தாக்குல்கள் நடத்துவது தொடர்பான மாற்றப்போக்கு
என்பது அசட்டுத்தனமான அச்சுறுத்தல் அல்ல. ஏரியல் ஷரோனின் இஸ்ரேல் அரசாங்கம், வாஷிங்டனின் ஒப்புதலோடு
பயன்படுத்திவருகிற படுகொலைக் கொள்கையை ரஷ்யா ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது. கடந்த பெப்ரவரியில் ரஷ்ய
உளவாளிகளால் செச்சென்யாவின் முன்னணி தலைவரான ஷெலிம்கான் யான்டர்பியேவ் படுகொலை செய்யப்பட்டார்.
அவர் அரபியா தீபகற்ப நாடான தோஹாவில் வாழ்ந்த போது படுகொலை செய்தார்கள். மாஸ்கோவின்
மெட்ரோவில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தக் கொலை நடைபெற்றிருக்கிறது. இதற்கு
செச்சென்யா பிரிவினைவாதிகள்தான் காரணம் என்று கிரெம்ளின் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த வாரம் கட்டார் நீதிபதி ஒருவர் இரண்டு ரஷ்ய ஏஜன்ட்களுக்கு 25 ஆண்டுகள்
சிறைத் தண்டனை விதித்து தீர்பளிக்கும்போது, ''முன்னாள் செச்சென்யா தலைவர் ஷெலிம்கான் யான்டர்பியேவை படுகொலை
செய்வதற்கு ரஷ்யத் தலைமை ஒரு கட்டளையை பிறப்பித்தது'' என்று குறிப்பிட்டார்.
ஆனால், அந்தத் தாக்குதல் பற்றி எந்தத் தகவலும் தனக்குத் தெரியாது என்று ரஷ்ய
அரசாங்கம் மறுத்தது.
புட்டின் மற்றும் இதர முன்னணி அரசாங்கத் தலைவர்கள் ஜோர்ஜியாவின்
பான்கிசி கோர்ஜ்
(Pankisi Gorge)
பகுதியே முன் கூட்டி தாக்குதலுக்கான இலக்கு என்ற சாத்தியக்கூறை அடையாளம் காட்டியுள்ளனர். ரஷ்யாவின்
அட்டூழியங்களை தாக்குப்பிடிக்க முடியாமல் பல்லாயிரக்கணக்கான செச்சென்யா அகதிகள் தப்பி ஓடி தற்போது
துயர்மிகுந்த சூழ்நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மற்றும் அவர்கள் தற்போது ஊடுருவதில் கடினம்
இருக்கின்ற பிராந்தியத்தில் தஞ்சம் புக முயற்சித்து வருகின்றனர்.
இந்த அகதிகள் சமூகமானது செச்சென்யா கிளர்ச்சிக்காரர்களுக்கு தகுந்த
முகமூடியாக பயன்பட்டு வருவதாகவும், ரஷ்ய குடியரசில் இருந்து ஜோர்ஜியாவிற்கு நுழைவதற்கும், ஜோர்ஜியாவின்
மிகுந்த இடைவெளிகள் நிறைந்த அடிக்கடி சட்டம் ஒழுங்கு தவறிவிடுகிற வடக்கு எல்லைகளில் இருந்து, வடக்கு
ஒசட்டியா போன்ற இதர ரஷ்ய மாகாணங்களிற்கு திரும்பவும் நுழைந்துவிட முடிகிறதென்றும் ரஷ்ய வட்டாரங்கள்
தெரிவித்தன. வறுமையும், கொந்தளிப்பும் மிக்க குடியரசுகளான இங்குசேட்டியா, தாகேஸ்தான், செச்சென்யா
மற்றும் வடக்கு ஒசட்டியாவுடன் ஜோர்ஜியாவிற்கு எல்லைகள் உள்ளன. ஆதலால் ரஷ்யா, ஜோர்ஜியாவுடன் தனது
எல்லா எல்லைகளையும் மூடிவிட்டுள்ளது.
ரஷ்யாவின் பலம்மிக்க இராணுவப் படைகளோடு மோதுவதை தவிர்க்கவும்,
விமர்சனங்களை திசைதிருப்பவும் முயலும் வகையில் ஜோர்ஜியா அதிகாரிகள் செச்சென்யா கிளர்ச்சிக்காரர்களுக்கு
அடைக்கலம் தரவில்லை என்று திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர். ஜோர்ஜியாவின் நடப்பு அரசிற்கு தலைமை
வகிக்கும் மிக்கையில் சாக்கசிவிலி (Mikhail
Saakashvili) இதற்கு முன்னர் ஜோர்ஜியாவிற்குள்ளேயும்
வெளியிலும் கிளர்ச்சிக்காரர்கள் புகுந்தது, பதவியிலிருந்து இறக்கப்பட்டுள்ள எட்வார்ட் செவன்நாட்சே
தலைமையிலான முன்னாள் நிர்வாகத்தின் போதுதான் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
வாஷிங்டனிலுள்ள புஷ் நிர்வாகம் முரண்பட்ட சமிக்கைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க அரசுத்துறை திபிலிசி (Tbilisi)
நிர்வாகத்தின் கூற்றுக்களை ஆதரித்துள்ளது. பாங்கிசி கோர்ஜ் கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும்
கூறியுள்ளது. பாங்கிசி கோர்ஜ் ''பயங்கரவாதிகளின் சரணாலயமாக இல்லை'' என்று வெளியுறவுத்துறை அதிகாரி
ரிச்சர்ட் பவுச்சர் கூறினார். ஆனால் ஜோர்ஜியாவிலுள்ள அமெரிக்க தூதர்
ரிச்சர்ட் மைல்ஸ் இன்னும் சில சர்வதேச பயங்கரவாதிகள் இந்த
இடத்தில் உள்ளனர் என்று கூறுகிறார்.
பெஸ்லன் துயர நிகழ்ச்சியோடு ஜோர்ஜியாவை தொடர்புபடுத்த, ரஷ்ய வெளியுறவு
அமைச்சரான சேர்ஜி லாவ்ரோவ் தெற்கு ஒசட்டியாவில் அண்மையில் தொடர்ந்து நடந்துவரும் இராணுவ
மோதல்ககளுக்கும், பள்ளிக்கூடம் முற்றுகையிடப்பட்டதற்கும் தொடர்புபடுத்திக் கூறியுள்ளார். அத்தோடு, ரஷ்ய
ஊடகங்களும் மற்றொரு பிரிந்து விட்ட ஜோர்ஜியாக் குடியரசான அப்காசியாவை சம்மந்தப்படுத்த முயன்றுள்ளன.
பெஸ்லன் பிணைக் கைதிகளை பிடித்தவர்களில் ஒருவர் ஜோர்ஜியா படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டு போர்
புரியும் தரப்பிற்கு இடையிலான எல்லையில் ஒளிந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டன. கோடேரி கோர்ஜ் (Kodori
Gorge) பகுதி ஜோர்ஜியா இராணுவம் மற்றும் திபிலிசிக்கு
விசுவாசமாக உள்ள ஜோர்ஜியா
அப்காசியன் இன படைகள் வசம் உள்ளது.
தற்போது ரஷ்யா தாக்குதல் நிலையில் உள்ளது. ஆனால், பெஸ்லன் முற்றுகைக்கு
முன்னர் சற்று மாறுபட்ட நிலை இருந்தது. மிக்கையில் சாக்கசிவிலி
அட்ஜாரியா கடற்கரை பிராந்தியத்தை யுத்தப் பிரபுவான அஸ்லன்
அபசிட்ஸ் இடமிருந்து கைப்பற்றிக் கொண்ட உற்சாகத்தோடு தனது வாய்ப்பை, பிரிந்துவிட்ட இரண்டு குடியரசுகளில்
பலவீனமான தெற்கு ஒசட்டியா மீது பயன்படுத்த முடிவு செய்தார்.
ஆனால், தெற்கு ஒசட்டியாவில் நுழைந்த சில நாட்களில் ரஷ்யா மற்றும் தெற்கு ஒசட்டியா
துருப்புக்களோடு திரும்பத் திரும்ப மோதிப்பார்த்த பின்னர் ஜோர்ஜியா துருப்புக்கள் விலகிக்கொண்டன. மிக்கையில்
சாக்கசிவிலி தேசிய உணர்வுகளை முன்னிறுத்தி ரஷ்யாவுடன் போர் நடத்துவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக எச்சரித்தார்.
ஆனால், அவரது தெற்கு ஒசட்டியா போராட்டம் தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளால் படுதோல்வி
என்று எள்ளி நகையாடப்படுகிறது. முன்னர் சாக்கசிவிலியை போற்றிப்புகழ்ந்த நியூஸ் வீக் பத்திரிகையானது, இப்போது
புதிய ஜனாதிபதியின் தாரகை ஏற்கெனவே மங்கிவிட்டதாகவும், ஜோர்ஜியாவை ஒன்றுபடுத்துவதற்கான வாய்ப்பு
மறைந்துவிட்டதாகவும் ஊகங்களை வெளியிட்டிருக்கிறது.
தெற்கு ஒசட்டியா தொடர்பான மோதல்கள் ரஷ்யாவின் இறையாண்மைக்கே
அச்சுறுத்தல் என்று புட்டின் வர்ணித்துள்ளார். ஆனால், பெஸ்லன் சம்பவத்திற்குப் பின்னர் அவர் இன்னும் அதிகமாக
சென்று ஜோர்ஜியாவின் புவியியல் அடிப்படையின் தன்மையையே ஆட்சேபித்தார். ஜோர்ஜியா ''மிகவும்
செயற்கையாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் இதர படைப்புக்களைப் போன்று உருவாக்கப்பட்டிருக்கிறது''
என்று புட்டின் அறிவித்தார். தெற்கு ஒசட்டியா மோதலை மீண்டும் திபிலிசி ''தொடக்கியிருப்பதாக'' அவர்
பழிபோட்டதுடன், ஒசட்டியர்களையும், அப்காசியர்களையும் ஜோர்ஜியாவில் இருக்குமாறு எவரும்
கேட்டுக்கொள்ளவில்லை'' என்று அவர் மேலும் கூறினார்.
அண்மையில் தெற்கு ஒசட்டியா
தொடர்பாக நடைபெற்ற இராணுவ மோதல்களுக்கு மேலாக
சாக்கசிவிலி அரசாங்கத்தை மாஸ்கோ மேலும் ஆத்திரமூட்டுகிற வகையில், ரஷ்ய தலைநகருக்கும், அப்காசியா
தலைநகரான சுக்குமிக்கும் (Sukhumi)
இடையில் 11 ஆண்டுகளுக்கு பின் முதல் தடவையாக ரயில் தொடர்புகளை மீண்டும் திறந்திருக்கிறது. தனக்கு
சேரவேண்டிய 3.6 மில்லியன் டாலர் கடன்களை திரும்ப செலுத்துகின்ற வரை ஜோர்ஜியா விமானங்கள் தனது
வான்பரப்பை பயன்படுத்திக் கொள்வதற்கு ரஷ்யா தடையும் விதித்திருக்கிறது. ஐ.நா விற்கு செலுத்த வேண்டிய
கட்டணங்களைக் கூட செலுத்த முடியாத காரணத்தினால் ஜோர்ஜியா அண்மையில் தனது வாக்களிக்கும் உரிமையை
இழந்துவிட்டது. இது ஜோர்ஜியா அரசாங்கம் எந்த அளவிற்கு திவாலாகிவிட்டது என்பதைக் காட்டுகிறது.
இதற்கிடையில், திபிலிசி மேற்கு நாடுகளோடு தனது உறவுகளை வலுப்படுத்தி
வருகிறது. நேட்டோவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்பினராக முனைந்து பாடுபட்டு வருகிறது. புதிதாக
காக்கஸ் மற்றும் மத்திய ஆசியாவிற்கு சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ரொபேர்ட் சைமன்ஸ், அண்மையில்
திபிலிசியில் நேட்டோ தொடர்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும், அவர் பாதுகாப்புத்துறை
சீர்திருத்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உதவுகின்ற வகையில் நெருக்கமாக இணைந்து
பணியாற்றுவார் என்றும் அறிவித்தார். அண்மையில் ஐரோப்பிய கமிஷன் தலைவரான ரோமானோ பிராடி
ஜோர்ஜியா, அர்மேனியா மற்றும் அஜர்பைஜான் முதலிய காக்கஸஸ் நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில்
உறுப்பினராவதற்கு தொடர்ந்து முயலுமாறு ஊக்குவித்தார்.
தெற்கு ஒசட்டியாவிலிருந்து மிக இழிவான முறையில் பின்வாங்கிய பின்னர்,
சாக்கசிவிலி தனது மோதலை சர்வதேச அளவில் கொண்டு செல்வற்கு
தன்னை ஆதரிக்கும் மேற்கு நாடுகளின் ஆதரவை நாடியுள்ளார். ஆனால், பெஸ்லன் முற்றுகைக்குப் பின்னர் உடனடியாக
ரஷ்யாவின் எதிரிகளை ஆதரிக்க எவரும் பகிரங்கமாக விரும்பவில்லை. எடுத்துக்காட்டாக, பிரிட்டனின் உள்துறை
அமைச்சரான ஜாக் ஸ்ட்ரோ, முன்கூட்டி தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யா விரும்புவது அந்தச் சூழ்நிலைகளில்
''புரிந்து கொள்ளக்கூடியதுதான்'' என்று தெரிவித்தார். ஆனால், அதோடு ஒப்புநோக்கும்போது புஷ் நிர்வாகம்
செச்சென்யா மற்றும் ஜோர்ஜியாவில் ரஷ்யாவின் கொள்கை தொடர்பாக போர் வெறிப்போக்கு பதிலை அபிவிருத்தி
செய்துள்ளது.
ரஷ்யா ஜோர்ஜியாவிலிருந்து தனது துருப்புக்களை விலக்கிக்கொள்ள வேண்டுமென்று
மீண்டும் வலியுறுத்தி வாஷிங்டன் கோரிக்கை விடுத்திருப்பதுடன், ஜோர்ஜியா படைகளுக்கு தொடர்ந்து பயிற்சியும்,
தளவாடங்களும் தந்து வருகிறது. அது ஜோர்ஜியாவிற்கு நிதியுதவியை மும்மடங்காக தருவதற்கும் திட்டமிட்டுள்ளது.
இதற்கு உபகாரமாக ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கப் படைகளுக்கு உதவுகின்ற வகையில் மேலும் ஜோர்ஜியா
துருப்புக்கள் அனுப்பப்படுமென்று ஜோர்ஜியாவின் பாதுகாப்பு அமைச்சரான ஜியோஜி பாராமிட்ஸ் அறிவித்தார்.
வடக்கு காக்கஸஸ் பிராந்தியத்தில் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் ரஷ்யாவிற்கு
உயிர்நாடி மூலோபாய நலன்கள் உள்ளது. அமெரிக்கா சாக்கசிவிலியின் ஜோர்ஜியா நிர்வாகத்திற்கும், அஜர்பைஜானை
ஆளும் அலியேவ்
பரம்பரைக்கும் ஆதரவு தந்து தெற்கு காக்கஸ் பகுதியை சுற்றிவளைக்க திட்டமிட்டிருப்பதை
சிதைப்பதிலும் ரஷ்யாவிற்கு நலன்கள் உள்ளது. காஸ்பியன் கடல்பகுதியில் கிடைக்கின்ற மிக முக்கியமான எண்ணெய்
வளத்தை ஏகபோகமாக தன் கையில் எடுத்துக்கொள்ளும் அமெரிக்காவின் நோக்கத்தை முறியடிக்க ரஷ்யா திட்டமிடுகிறது.
செச்சென்யா பகுதியிலும் குறிப்பிடத்தக்க எண்ணெய் வளம் உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.
அஜர்பைஜான் உட்பட தெற்கு காக்கஸ் பகுதியில் தனக்கு வேண்டிய தன் சொற்படி
கேட்கிற ஆட்சிகளை உருவாக்குவதிலும், அத்தகைய அரசுகளோடு உறவை வளர்த்துக் கொள்வதிலும் அமெரிக்கா ஆதிக்கம்
செலுத்த நீண்டகாலமாக முயன்று வருகிறது. அஜர்பைஜானில் எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஜோர்ஜியாவிலும் எண்ணெய்
வளம் உள்ளது. ஜோர்ஜியா வழியாக 1.5 பில்லியன்
டொலர்கள் எண்ணெய்
Baku-Tbilisi-Ceyhan
குழாய் வழியாக செல்கிறது. எனவே, அமெரிக்க அரசாங்கம் காக்கஸ் பகுதியில் மேலாதிக்கம் செலுத்த ரஸ்யா
மேற்கொண்டுள்ள முயற்சிகளை முறியடிப்பதில் உறுதியுடன் உள்ளது. எனவேதான் கடந்த காலத்தில் புஷ் நிர்வாகமானது,
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ரஷ்யாவின் முயற்சிகளுக்கு ஆதரவு காட்டுவதாக நடித்தாலும், ரஷ்யா அந்த பிராந்தியத்தில்
மேலாதிக்கம் செலுத்தும் அனைத்து முயற்சிகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பது அதன் அடிப்படை கொள்கையாக இருந்து
வருகிறது.
ஆகஸ்ட் 29 ல் அமெரிக்க வெளியுறவுத்துறை செச்சென்யா தேர்தல்கள் சுதந்திரமானவையும்
அல்ல, நியாயமாகவும் நடைபெறவில்லை என்று விமர்சனம் தெரிவித்ததுடன், இவான் மாஸ்க்டோவின்
(Ivan Maskhadov) அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக
இருந்த இல்யாஸ் அக்மடோவிற்கு (Ilyas Akhmadov)
அது தஞ்சமளித்தது. அத்தகைய ஆதரவு மூலம் அக்மடோவ், இச்கேரியா
(Ichkeria)
குடியரசிற்காக சர்வதேச ஆதரவை வென்றெடுக்கும் நோக்கத்தில் ராஜியத்துறை உறவுகளை மேற்கொள்வதற்கு
அனுமதிக்கப்பட்டார்.
எனவே, செச்சென்யா ''மிதவாத'' பிரிவினைவாதிகளோடு ரஷ்யா
பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென்று அமெரிக்காவும், ஐராப்பிய ஒன்றியமும் அழைப்பு விடுத்தன. ஆனால், பிரான்சும்,
ஜேர்மனியும் இந்த வகையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டிலிருந்து விலகிக்கொள்ள முயன்று ஆகஸ்ட் 29 ல் நடைபெற்ற
தேர்தல் சட்ட பூர்வமானது என்று ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையிலேயே ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்
என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த உறுதியற்ற போக்குகள் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்காவின்
செல்வாக்கிற்கு எதிராக ரஷ்யாவிற்கு முட்டுக்கொடுக்கும் வகையில், அதனுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும்
இலாபம் தரும் பொருளாதார உறவுகளை குறிப்பாக எண்ணெய்த் தொழிலில் அதை உருவாக்கிக் கொள்ளவும் இந்த
நாடுகள் விரும்புகின்றன என்பதைக் காட்டுகின்றன. இருந்தபோதிலும், இந்த இரு நாடுகளும் காஸ்பியன் கடல் எண்ணெய்
வளத்தை ரஷ்யாவின் மேலாதிக்கத்திலிருந்து விடுவிக்க முயன்று கொண்டிருக்கின்றன.
Top of page |