World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

WSWS Chairman David North denounces Iraq war at Dublin debate

உலக சோசலிச வலைத் தள தலைவர் டேவிட் நோர்த் டப்ளின் விவாதத்தில் ஈராக்கின் மீதான போரைக் கண்டிக்கின்றார்

By David North
15 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

அயர்லாந்தில், டப்ளினிலுள்ள டிரினிடி கல்லூரியின் தத்துவ சங்கம், அக்டோபர் 14ம் தேதி மாலை அதன் அமெரிக்க வெளிநாட்டு கொள்கை தொடர்பான வருடாந்த விவாதத்தை நடந்தியது. 200 பேர்களுக்கும் மேல் பங்கு பெற்றிருந்த இந்த விவாதத்தின் தலைப்பு: "இம் மன்றம் அமெரிக்காதான் இன்னும் உலகில் சமாதானத்தின் காவலன் என நம்புகிறது." என்பதாகும்.

தத்துவச் சங்கத்தால் விவாதத்தில் பங்குபெற அழைக்கப்பட்டிருந்த உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவர் டேவிட் நோர்த் இக்கருத்தாய்விற்கு எதிராக உரையாற்றினார். தீர்மானத்தை எதிர்த்துப் பேசியவர்களில் ஐரிஷ் நாட்டுச் சட்ட மன்ற மேலவை உறுப்பினர் டேவிட் நாரிஸ், பிரிட்டிஷ் சோசலிச் சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கிறிஸ் மார்ஸ்டன் மற்றும் பிரிட்டிஷ் நாளேடான இண்டிபென்டென்ட் இன் வெளிநாட்டு விவகார ஆசிரியர் லியோனார்ட் டோய்ல் ஆகியோர் அடங்குவர்.

தீர்மானத்திற்கு ஆதரவாகப் பேசியவர்களில், லண்டன் எகானமிஸ்ட்டின் அமெரிக்கப் பிரிவு ஆசிரியர் ஜோன் மிக்டில்த்வைத், டப்ளின் பல்கலைக் கழகத்தில் வரலாற்றாளராகவும், சர்வதேச உறவுகள் ஆய்வு வல்லுனராகவும் இருக்கும் ரிச்சர்ட் ஆல்டுவஸ் மற்றும் பொதுக் குடியரசு நிறுவனத்தின் போல் மக்டோனால்டும் அடங்குவர். உரைகளுக்குப் பின்னர் பெரும்பான்மையான பார்வையாளர்கள் தீர்மானத்தை நிராகரித்து வாக்களித்தனர். டேவிட் நோர்த் ஆற்றிய உரையை கீழே பிரசுரம் செய்கிறோம்.

முதற்கண், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய இந்த விவாதத்தில் பங்கு பெறுவதற்காக எனக்கு அழைப்பு விடுத்துள்ள தத்துவச் சங்கத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஈராக் ஆக்கிரமிப்பை சமரசத்திற்கிடமின்றி எதிர்க்கும் மற்றும் புஷ் நிர்வாகத்தையும் அதன் நடவடிக்கைகள் அனைத்தையும் வெறுக்கும் மற்றும் அமெரிக்க மக்களின் பெயரில் அமெரிக்க அரசாங்கம் செய்துள்ள, செய்துவரும் செயல்கள் தொடர்பாக ஆழமான அவமான உணர்வை கொண்டுள்ள பல மில்லியன் கணக்கான அமெரிக்க மக்களின் சார்பில் உரையாற்றுவது தொடர்பாகவும் கிடைத்த இந்த வாய்ப்பை நான் வரவேற்கிறேன்.

ஏகாதிபத்தியத்தை புகழ்ந்துரைக்கும் போலிக் கற்பனைகளினால் போதை கொண்டிருக்கும் அரசியல் நடைமுறைக்கும், போரை வெறுக்கும், அமெரிக்கப் பேரரசின் கருத்துடன் பங்கு கொள்ள விருப்பம் இல்லாத, எவரையும் கொல்ல விரும்பாத, எவர்மீதும் ஆதிக்கம் செலுத்த விருப்பம் இல்லாத, மத்திய கிழக்கு, மத்திய ஆசிய எண்ணெய் வளங்களில் நிதி அக்கறைகள் இல்லாத, சரியானதுதான் வலிமையைக் கொடுக்கும், வலிமை சரியாகிவிடாது என்ற லிங்கனுடைய சொற்களைத் தங்கள் இதயத்திலிருந்து நம்பும், மில்லியன் கணக்கான அமெரிக்க உழைக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பெரும் சமன்படுத்தமுடியாத அறநெறிப் பிளவு உள்ளது.

இந்த அரங்கத்தின் முன் உள்ள கருத்தாய்வு "அமெரிக்கா இன்னும் உலகத்தின் சமாதான காவலன்" என்பது சர்வதேச அரசியல் உண்மையை தலைகீழாக மாற்றிக் கூறுகிறது. அமெரிக்காவை "சமாதான காவலன்" என்று அழைப்பது பிரேததத்தை புதைப்பவரை "வாழ்விற்குப் பிந்தைய நிகழ்வை மேன்மைப்படுத்தும் வல்லுனர்" என்று கூறுவதற்கு ஒப்பாகும்.

உலக ஆதிக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று முயலும் அமெரிக்க ஏகாதிபத்தியம், இன்றைய உலகில், வன்முறை, சுரண்டல், மனிதாபிமானமற்ற செயல்கள் இவற்றைத் தூண்டும் முக்கிய சக்தியாக உள்ளது. அதன் வெளியுறவுக் கொள்கை ஒரு பரந்த முறையில் சர்வதேசக் குற்றம் இழைக்கும் தன்மையை கொண்டுள்ளது. பயங்கரவாதத்தின் மீதான போர் என்று பிரகடனப்படுத்திய பின்னர், அமெரிக்க உலகிலேயே தன்னுடைய அரசாங்கத்திற்கு மூலோபாயக் கொள்கைக்கு அடித்தளமாக, அதிகாரபூர்வமாக பயங்கரவாதத்தைத் தழுவிக்கொண்டு நிற்கும் ஒரே நிர்வாகத் தலைவரை கொண்டுள்ள நாடாக மாறியுள்ளது. இது செப்டம்பர் 2002 ல் ஜனாதிபதி புஷ் "முன்னரே தாக்கும் போர்" என்ற கொள்கைவழியை பிரகடனப்படுத்தியதன் இன்றியமையாத முக்கியத்துவமாக உள்ளது.

வரலாற்றுப் பின்னணியில், "பயங்கரவாதம்" என்ற சொல் சிக்கல் வாய்ந்த பொருளைக் கொண்டுள்ளதுடன், தற்பொழுது வெவ்வேறு அரசியல் தேவைகளுக்கு பிரயோகிக்கப்படுகின்றது. ஆனால் இந்தச் சொற்றொடரை நாம், மிகப் பரந்த பொதுக் கருத்தில் பயன்படுத்தினால், அதாவது மற்ற நாடுகள், அவற்றில் உள்ள மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு, சில பொருளாதார அரசியல் மூலோபாய நோக்கங்களுக்காக சட்ட விரோதமான முறையில் வன்முறையை பயன்படுத்துதல் (அல்லது பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தல் கொடுத்தல்) அல்லது கடுமையான காயங்கள், இறப்புக்கள் போன்றவற்றை வேண்டுமேன்றே கொடுத்து மற்ற நாடுகள், அங்குள்ள மக்களின்மீது அவர்களை தங்கள் நோக்கத்திற்கு அடிபணியும் வகையில் பயன்படுத்தினால் பயங்கரவாதத்தின் தலையாய, மிக பயங்கரமான வடிவமே போர் என்பதுதான்.

இந்த நிலைப்பாட்டில் இருந்து காணும்போது, முன்னரே தாக்கும் போர் என்னும் கொள்கைவழி, ஈராக்கின்மீது படையெடுப்பு, அதைத் தன் வயப்படுத்துதல் என்ற அதன் ஆரம்ப முயற்சியை செயல்படுத்தியது, ஒரு மிக ஆபத்தான வரலாற்றுப் பின்னடைவை பிரதிபலிக்கிறது; இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இவ்வகை குருதிதோய்ந்த நிகழ்வுகளுக்கு பின் ஏற்படுத்தப்பட்டிருந்த சர்வதேச சட்டக் கொள்கைகளில் இருந்து அப்பாற்பட்டு ஜேர்மனியின் நாசி அரசாங்கம் கடைபிடித்திருந்த ஏகாதிபத்திய குற்றம் சார்ந்திருந்த நடவடிக்கைகளை மீண்டும் புதுப்பிப்பதற்கு ஒப்பாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், வல்லரசுகள் இராஜதந்திர, இராணுவக் கொள்கைகள் மூலம் தமது வேறுவகையில் அரசியலை தொடருவதுதான் போரின் சாரமாக உள்ளது என்று வான் கிளாஸ்விட்ச் உரைத்திருந்தார். ஆனால் முதலாம் உலகப் போருக்குப் பின், ஐரோப்பா மற்றொரு கொலைக்களமாக மாற்றப்பட்டதை அரசியலில் வேறுஒருவகை என்று வெறுமனே விவரித்துவிட முடியாது. போர்க்குற்றம் என்ற கருத்துப்படிவம் எழுச்சியுற்றது: ஆக்கிரமிப்பு போர்களை நடத்தியதற்கு அரசாங்கங்கள் பொறுப்பேற்று விடையிறுக்கவேண்டும் என்று கூறப்பட்டது. தற்காப்பிற்காகத்தான் போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம், என்று இல்லாமல் மற்ற காரணங்களுக்காக, அதாவது பூகோள அரசியல், பொருளாதார இலக்குகளுக்காக தொடரப்படும் போர் சர்வதேச சட்டத்தின்படி ஒரு குற்றம் என்று கொள்ளப்பட்டு, மரபு வகையிலான "அரசாங்க (நாட்டு நலன்களின்) காரணங்களுக்காக" மேற்கொள்ளப்படுவது நியாயப்படுத்த முடியாது என்றும் ஏற்கப்பட்டது.

ஆக்கிரமிப்புப் போரை குற்றச்செயலாக்கும் அடுத்த முன்னோக்கிய அடி 1928ம் ஆண்டு அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக இருந்த பிராங்க் கெல்லோக்கினால் (Frank Kellogg) கொண்டுவரப்பட்ட போரை நிராகரித்தல் என்னும் ஒப்பந்தம் ஆகும். இந்த கெல்லோக்-பிரியண்ட் ஒப்பந்தம் (Kellogg-Briand Pact) அதை வெளிப்படையாக மீறுதலை ஒரு குற்றமாக்கவில்லை. இந்த பலவீனத்தை நேச நாடுகள் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின்னர் தீர்ப்பதற்கு முடிவெடுத்தன. சர்வதேச இராணுவ நடுவர் குழுவின் அடிப்படை சாசனத்தின் விதி 6 (a) படிதான் நாசி தலைவர்கள்மீது நூரம்பேர்க் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது; இதன்படி, "அமைதிக்கு எதிரான குற்றங்கள் என்று", "ஆக்கிரமிப்புப்போர் திட்டமிடுதல், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுதல், அல்லது சர்வதேச ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை மீறும் போர், அல்லது அவ்வாறான ஒன்றை நிறைவேற்றும் வகையிலான எந்தப் பொதுத் திட்டத்திலும் அல்லது சதித்திட்டத்திலும் பங்கு கொள்ளுதல்'' ஆகியவை கருதப்பட்டன".

மேலும், "போர் என்பது அடிப்படையிலேயே ஒரு தீமையானதாகும். அதன் விளைவுகள் போரை தொடக்கும் நாடுகளுடன் நின்று விடாமல் உலகம் முழுவதையும் பாதிப்பிற்கு உட்படுத்துகின்றன. ஓர் ஆக்கிரமிப்பு போரை தொடக்கும் முயற்சி சர்வதேசக் குற்றம் என்று மட்டும் இல்லாமல், மற்ற போர்க் குற்றங்களைவிட முழுத் தீமையையும் வெளிப்படுத்தும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளதால், அது தலையாய குற்றம் ஆகும்" என்று சர்வதேச நடுவர்குழு அறிவித்துள்ளது.

1945-46ம் ஆண்டுகளில் ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபடுவது பெரும் குற்றம் என்ற கருத்தை வலியுறுத்தி வாதிடுவதில் அமெரிக்கா மிகவும் தீவிரமானதாக இருந்தது. அமெரிக்காவின் சார்பில் குற்ற வழக்கை நடத்த வந்திருந்த, நாட்டின் தலைமை நீதிமன்றத்தின் நீதிபதியான ராபர்ட் ஜாக்சன், நூரம்பேர்க் குற்றவிசாரணைகளின் அடித்தளத்தில் அமைந்திருந்த சட்டக் கொள்கைகள் உலகந்தழுவிய நலனைக் கொண்டவை என்று குறிப்பிட்டிருந்தார். "ஒப்பந்தங்களை மீறிய சில செயல்கள் குற்றம் என்றால், அவை அமெரிக்காவால் செய்யப்படிருந்தாலும், ஜேர்மனி செய்தாலும் குற்றம்தான்; எங்களுக்கு எதிராகவும் ஏற்றுக் கொள்ளத்தயாராக உள்ள நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் ஒரு குற்றத்திற்கான தன்மையை மற்றவர் மீதும் சுமத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று அவர் வலியுறுத்தினார்.

அச்சொற்கள் கூறப்பட்ட பின்னர், பல மாற்றங்களும் நிகழ்ந்து விட்டன. செப்டம்பர் 2002ல் பிரகடனப்படுத்தப்பட்ட தவிர்க்க முடியாத போர் என்னும் கோட்பாடும், ஈராக்கிற்கெதிராக ஆக்கிரமிப்புப் போர் மார்ச் 2003ல் அதன் உட்குறிப்பாக ஆரம்பிக்கப்பட்டதும், நூரம்பேர்க்கில் நாசிக்குழுத் தலைவர்களுக்கு எதிராகச் செயல்படுத்தப்பட்ட சட்டக் கோட்பாடுகளை ஐயத்திற்கு இடமின்றி அமெரிக்கா புறக்கணித்துள்ளதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே குற்றம்மிக்க தன்மை என்பது முழு ஆழ்ந்த கருத்துரையிலும் சட்டரீதியான தன்மையிலும் அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கையின் தன்மையில் படர்ந்துள்ளது.

செப்டம்பர் 17, 2002ல் புஷ் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட தேசியப் பாதுகாப்பு மூலோபாயம், சர்வதேச சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, நம்பத் தகுந்த ஆதாரம் ஏதும் இல்லாமல் தற்காப்பின் பொருட்டு ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது தாக்குதலை ஒருதலைப்பட்சமாக எடுக்கக் கூடாது என்பதை மீறும் வகையில், அமெரிக்காவிற்கு நடவடிக்கை எடுக்கும் உரிமை உண்டு என்பதைத்தான் வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய அறிக்கை அனைத்தையும் தழுவிய முறையில் வன்முறையில் ஈடுபடுவதற்கு எப்பொழுது வேண்டுமானாலும் தன்னால் முடியும் என்று அமெரிக்கா தெளிவற்ற வகையிலான வார்த்தைகளை கொண்டு நியாயப்படுத்தியிருப்பது, ஒரு சாதாரண ஆய்விற்கு முன் கூட உறுதியுடன் நிலைக்காது: அது "அமெரிக்காவிற்கு அல்லது அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக, போக்கிரி நாடுகளும் (Rogue states) அவற்றின் பயங்கரவாத ஆதரவாளர்களும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதையோ, பயன்படுத்தப் போகிறோம் என்று அச்சுறுத்துவதையோ நாம் தடுத்து நிறுத்த முயலவேண்டும்." என குறிப்பிடுகின்றது.

ஒரு நாடு "போக்கிரி நாடு" என்று எவர் வரையறுப்பது? அமெரிக்க நலன்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த நாடும் சவாலுக்கு உட்படுத்துகின்றதா? "போக்கிரி நாடுகள்" பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்துதலோ அல்லது பயன்படுத்துவோம் என்று அறிவிப்பதற்கும் முன்னதாகவே அதை இராணுவரீதியாக தாக்கும் உரிமை தனக்கு இருப்பதாக வலியுறுத்தும் அமெரிக்காவின் நிலைப்பாட்டின் கருத்து, தான் எவருக்கு அத்தகைய திறன் இருப்பதாகக் கருதுகிறதோ அந்நாட்டை தாக்க தனக்கு உரிமை உண்டு என்பதைத்தான் வலியுறுத்துகின்றது. "அச்சுறுத்தல்" என்ற சொல்லின் பொருள் அமெரிக்காவிற்கு எதிரான வெளிப்படையான செயலாக இருக்க வேண்டும் என்று இல்லாமல், வருங்காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில் தாக்கும் அபாயத்தை கொண்டுள்ளதாக கருதப்படும் உலகத்தில் உள்ள எந்த நாட்டையும் அச்சுறுத்தும் திறன் உடையது என்ற பட்டியலில் சேர்க்க வைத்துவிடும். உண்மையில், இந்த ஆவணத்தின்படி, "எதிரிகள்" என்று கூறப்படாமல், "எதிரிகளாக சாத்தியமான நாடுகள்" என்று இருக்கிறது. எதிரிகளாக சாத்தியமான நாடு அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு வருங்காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்ப்பு அல்லது தடையாக இருக்கக்கலாம். "எதிரிகளாக சாத்தியமானவை" என்று அடையாளம் காணக்கூடியவை என்று அமெரிக்காவால் கூறப்பட்டுள்ள பொதுவான வரையறை எத்தனை நாடுகளுக்கு பொருந்தும்? அவ்வாறான எத்தனை நாடுகள் உலகத்தில் உள்ளன?

மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் "பொதுவான சந்தேகத்திற்குரிய" நாடுகள் என்று அடையாளம் காணப்படும் நாடுகள் மட்டும் இந்த "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதின் திடீரென்ற இலக்கிற்கு உள்ளாகவில்லை. ஜனாதிபதி புஷ்ஷின் பழைய நெருங்கிய உதவியாளர் புகழ்ந்துள்ள புதிய புத்தகம் ஒன்று கீழ்க்கண்ட இழிவான குற்றச்சாட்டைக் கொண்டுள்ளது: "1980 களின் தொடக்கத்தில் இருந்து சர்வதேச பயங்கரவாதத்திற்கு இருப்பு நாடாக கனடா அமைந்திருக்கிறது என்பது ஒரு அச்சமூட்டும் உண்மையாகும். ...நல்ல புகலிடம், பணம், பிரச்சாரம், ஆயுதங்கள், காலாட்படையினர் என்று பலவிதத்திலும் கனடா உலகின் பல சமய, இன, அரசியல் தீவிர வாத இயக்கங்களுக்கு கொடுத்து வந்துள்ளது. ...தன்னுடைய நாட்டை சர்வதேச பயங்கரவாதத்திற்கு ஒரு தளமாக அது மாற்றியுள்ளது." நீங்கள் Canadian Bacon என்னும் திரைப்படம் ஒரு கட்டுக்கதை என்றுதான் கருதியிருப்பீர்கள்!

தற்காப்பிற்கு என்று அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்தும் கூற்றுக்களையொட்டி, அது ஈராக்கை தாக்கியது. சட்டநெறி ஒரு புறம் இருக்க எந்தவிதமான நம்புதல் தன்மையையும் கூட கொண்டிருக்கவில்லை. இவை அனைத்துமே நாசிகள் ஜேர்மனிய இராணுவம் போலந்தில் செப்டம்பர் 1, 1939ல் நுழைந்தபோது கூறிய போலிக்காரணங்களைத்தான் மாதிரியாகக் கொண்டவை ஆகும்.

அமெரிக்கா, ஈராக்கிய பேரழிவு ஆயுதங்களை பற்றி கூறியவை அனைத்தும் பொய்களே என்பதை இப்பொழுது நாம் நன்கு அறிவோம். ஆனால், ஈராக் அத்தகைய ஆயுதங்களைக் கொண்டிருந்தாலும், சர்வதேச சட்டத்தின் கீழ் ஈராக்கின் மீது படையெடுப்பு நடத்துவதற்கு அது ஒரு காரணம் ஆகிவிடுதலை நியாயப்படுத்த முடியாது.

இப்போரின் விளைவுகள் கொடூரமாகி உள்ளன. அமெரிக்க போர்விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அன்றாடம் நகரங்களையும், கிராமங்களையும் குண்டுவீச்சிற்கு உட்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. 30,000 ஈராக்கிய இராணுவத்தினரும், 1,000 அமெரிக்க படையினரும் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்டுள்ளனர். எத்தனை பல்லாயிரக்கணக்கான ஈராக்கி சாதாரண குடிமக்கள் காயமுற்றனர், ஊனமுற்றுள்ளனர் என்று கணக்கில் அடங்காத வகையில் உள்ளது. புஷ் நிர்வகமும் பென்டகனும், இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுவதை ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை.

ஈராக்கின் மீது படையெடுத்தல் என்ற குற்றம் சார்ந்த முடிவையொட்டிக் கூடுதலான குற்றங்களான ஈராக்கிய மக்களை மிருகத்தனமாக அபு கிறைப் சிறைச்சாலையில் நடத்தியது போன்ற மற்றவையும் நடந்துள்ளன. சர்வதேச சட்டத்தின்படி, ஈராக்கிய போரை திட்டமிட்டவர்கள், ஈராக்கிய மக்களுக்கு எதிரான இகழ்வான, பிறர் துன்பத்தில் மகிழ்கின்ற, வக்கிரமான வகைகளை கையாண்டுள்ளவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

நூரம்பேர்க்கில் இருந்து உருவாகிய சர்வதேசச் சட்டத்தின் மற்றொரு முக்கிய தன்மை என்னவெனில், ஈராக்கிற்கெதிராக அமெரிக்காவின் போரினை தீர்மானித்தவர்கள் தொடர்பான சட்டபூர்வமான குற்றத்தன்மை மிக இன்றியமையாத சாராம்சமாக அடங்கியுள்ளது. சமாதானத்திற்கு எதிரான குற்றம் என்பது குற்றஞ்சார்ந்த நடவடிக்கைதான். ஆனால் இந்தக் குற்றம் முழுக் குற்ற உணர்வுடன் வெளிப்பட்டால்தான் முழுக் குற்றமாக விளங்கும். ஆக்கிரமிப்புப் போர் நடத்துவதற்கு நோக்கம் இருந்தது என்பது முறையாக நிறுவப்படவேண்டும்.

ஈராக்கிய போரின் சட்டபூர்வமான வழக்குகள் இறுதியில் நடக்கும்போது -- அந்த நாள் வந்தே தீரும் -- அமெரிக்க அரசாங்கத்தின் மிக உயர்ந்த அதிகாரிகளினால், நீண்ட கால அரசியல், பொருளாதார, இராணுவ நோக்கங்களை அடைவதற்காக ஈராக்கிய போர் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பதை எடுத்துக்காட்டுவது சாத்தியமானதுடன், சில சட்டரீதியான மறைப்பை வழங்குவதற்காக புனைந்து போலியாக கூறப்பட்டுள்ள தற்காப்பு வாதங்களுடன் அதற்கு தொடர்பே இல்லை என்பதும் நிரூபணமாகும். இன்னும் பலருடன் சேர்ந்து, துணை வெளிநாட்டு அமைச்சரான பெளல் வுல்போவிட்ஸும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் எவ்வாறு அமெரிக்காவின் மூலோபாய வகையிலான ஆதிக்கத்தை உறுதிசெய்வதற்கு பலாத்காரம் ஒரு உறுதுணையாக இருக்கும் என்பதை தவிர்க்க முடியாமல் உறுதிப்படுத்தியிருக்கும் காகித ஆவணங்களை விட்டுச்சென்றுள்ளார்.

ஈராக்கை பொறுத்தவரையில், 1998 ஜனவரி 26 அன்று திரு. வுல்போவிட்சும் அவருடைய சகாக்களும், இப்பொழுது இழிவுற்றுள்ள புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான திட்டம் என்பதில், ஜனாதிபதி கிளின்டனுக்கு ஒரு கடிதம் எழுதி, சதாம் ஹுசைனை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு இராணுவ வலிமை பயன்படுத்தப் படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர்.

ஜனாதிபதி புஷ், பாதுகாப்பு மந்திரி ரம்ஸ்பெல்ட், துணைச் செயலர் வுல்போவிட்ச், ஆகியோர், அழுக்கு மலிந்து விட்ட "9/11 எல்லாவற்றையும் மாற்றிவிட்டது" என்ற வாதத்தை மேற்கொண்டு, புதிய சூழ்நிலைகள் போர் நடத்தியே தீரவேண்டும் என்பதற்கான நியாயங்களைக் கூறலாம். ஆனால் 58 ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதி ஜாக்சன் விளக்கியுள்படி, இத்தகைய கூற்றுக்களை வரலாற்றாளர்களுக்கு விட்டுவிடுவோம். அவர்கள்தான் அரசியல், மூலோபாய உந்துதல்கள் தொடர்பான கேள்விகள் பற்றி பெரும் அக்கறை கொண்டவர்கள் ஆவர். ஆனால் இவர்களுக்கு ஆக்கிரமிப்புப் போர் சட்ட விரோதமனது, அது பற்றி திட்டமிட்டு செயல்படுத்துதல் சட்டவிரோதமானது என்று அது தெளிவுபடுத்தியுள்ள சர்வதேச சட்டத்தில் பொருத்தமான இடம் இல்லை.

இந்த மன்றத்தை, இத்தீர்மானத்தை நிராகரிக்குமாறு நான் வலியுறுத்துகிறேன். நீங்கள் வழங்க இருக்கும் வாக்கு மகத்தான அரசியல், அறநெறி முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. "உயிர்வாழ்விற்கான இடம் ("Lebensraums") எனப்படும் காரணத்திற்காகோ அல்லது "தேசிய பாதுகாப்பு" என்ற பொருந்தா வாதமாயினும், மனிதகுலம் மீண்டும் ஏகாதிபத்திய முறைக் காட்டுமிராண்டித்தனத்திற்கு திரும்பிவிடக்கூடாது; அத்தகைய நிலைக்கு அமெரிக்கா ஈராக்கின்மீது மேற்கொண்டுள்ள படையெடுப்பு ஒரு தீமையின் அடையாளமேதான்.

Top of page