World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

The Caucasus powder keg: Russia threatens military interventions

காகஸஸ் வெடிக்கும் நிலையில்: இராணுவ தலையீட்டுக்கு ரஷ்யா அச்சுறுத்தல்

By Peter Schwarz
28 September 2004

Back to screen version

பெஸ்லன் பணயக்கைதிகள் நெருக்கடிக்கான ரஷ்ய அரசாங்கத்தின் பிரதிபலிப்பு 2001 செப்டம்பர் 11தாக்குதல்களில் அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிபலிப்பை பெருமளவில் நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. உலகம் முழுவதிலும் மில்லியன்கணக்கான மக்களுக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் உருவாக்கிய பெஸ்லன் கொடூரமான சம்பவத்தை ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அரசாங்கம், ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக உள்நாட்டில் தாக்குதலை தொடுக்கவும், புதிய போர்களுக்கு தவிர்க்க முடியாத அளவிற்கு இட்டுச்செல்லும் வெளியுறவுக் கொள்கை செயற்திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் ஒரு சாக்குப்போக்காகவும் பயன்படுத்தி வருகிறது.

பெஸ்லன் சம்பவங்களுக்கான பின்னணி இன்னும் புதிராகவே இருக்கிறது அதற்கு காரணம் அதிகாரபூர்வமான கொள்கை இரகசியமாக இருப்பதும், புட்டினால் சுதந்திரமான விசாரணைக்கு மறுக்கப்படுவதுமாகும். அதே நேரத்தில் பணயவைப்பின் அழிவுகளில் இருந்து மாஸ்கோ ஆட்சி நீண்டகால விளைவுகளை கொண்ட முடிவுகளுக்கு ஏற்கனவே வந்திருகிறது. எதிர்காலத்தில், பிராந்திய ஆளுனர்கள் இனி தேர்ந்தெடுக்கப்படாது ஜனாதிபதியால் நியமிக்கப்படுவதுடன், சிறிய அரசியல் எதிர்கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வருவதற்கான உண்மையான வாய்ப்பு எதையும் பறித்துக்கொள்ளும் வகையில் தேர்தல் சட்டம் திருத்தப்படும்.

அத்தகைய நடவடிக்கைகள் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தவே பயன்படும், புட்டின் ஜனாதிபதியான பின்னர் அவரது அதிகாரங்கள் சர்வாதிகார பரிணாமங்களை பெறுகின்ற அளவிற்கு அதிகரித்துள்ளன. தற்போது ''இரும்புக்கரம் கொண்ட வலுவான அரசு'' பற்றி பேசப்பட்டுவருவதுடன், மற்றும் ஸ்ராலினின் சகாப்தத்தோடு ஒப்புநோக்கப்படுகிறது.

தற்போது நாடாளுமன்றம் ஜனாதிபதியையே நம்பியிருப்பதுடன், கிரெம்ளினால் ஊட்டிவளர்க்கின்ற அமைப்புக்களாகவே ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த நிலைமைகளின் கீழ் ஜனநாயக கட்டுபாட்டிற்கு எந்தவிதமான சாத்தியக்கூறுமில்லை. மக்களுக்கு ஒட்டுமொத்தமாகப் பார்கும்போது சில ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஜனாதிபதியை பதவியில் உறுதிப்படுத்துகின்ற வகையில் பொதுவாக்கெடுப்பில் வாக்களிக்கிற உரிமைமட்டுமே உண்டு. அவருடைய உண்மையான அதிகார அடித்தளம் புலனாய்வு படைகளிலும், இராணுவ சாதனங்களிலும் தங்கியிருக்கும்.

பெஸ்லன் பணயக்கைதிகள் நெருக்கடிக்குப் பின்னர் வெளியுறவுக்கொள்கை மாற்றத்தை ரஷ்ய ஆயுதப்படைகளின் தலைமை தளபதி அறிவித்தார். ரஷ்யா ''உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும், பயங்கரவாத அடித்தளங்களை ஒழித்துக்கட்டுவதற்கு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் '' என்று Yuri Baluievski அச்சுறுத்தியுள்ளார்.

இந்தக் கருத்தை விளக்கிய பல விமர்சகர்கள் புஷ்ஷின் கோட்பாடான ''முன்கூட்டிய போர்'' என்பதை மொழிபெயர்த்து அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு அப்படியே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர். சர்வதேச சட்டத்தை புறக்கணித்துவிட்டு இதர நாடுகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கும் உரிமையை ரஷ்யா ஏற்றுக்கொள்கிறது. சோவியத் ஒன்றியம் சிதைந்த பின்னர் முதலில் விடுதலை பெற்ற தென்ரஷ்யாவின் அருகாமையிலுள்ள அரசுகள் குறிப்பாக இதை ஒரு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன. குறிப்பாக ஜோர்ஜியாவை, அது திரும்பத்திரும்ப செச்சென்யா பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பளிப்பதாக மாஸ்கோ குற்றம் சாட்டிவருகிறது.

அமெரிக்காவிற்கும், புட்டினின் ரஷ்யாவிற்குமிடையில் உள்ள ஓரேவிதமான தன்மையை அளவிற்கு அதிகமாக கொண்டு சென்றுவிட முடியாது. அமெரிக்க ஆக்கிரமிப்பினால் உலகிற்கு தோன்றியுள்ள அச்சுறுத்தல் ஒப்பிடமுடியாத அளவிற்கு மிகப்பெரியதாகும். அமெரிக்கா பொருளாதார ரீதியாக மற்றும் இராணுவ ரீதியாக ஒரு பெரிய வல்லரசாகும், அது வெளிப்படையாக உலக மேலாதிக்கத்தை ஸ்தாபிக்க முயன்றுவருகிறது. பொருளாதார அடிப்படையில் ரஷ்யா ஒரு வளர்ச்சி குன்றியுள்ளதுடன், அதன் உற்பத்தித்திறன் ஒல்லாந்தோடு ஒப்புநோக்குகின்ற அளவிற்கே உள்ளது. அதன் இராணுவம் சிதைந்துவிட்டது, அது விரும்பினால்கூட அமெரிக்காவைப்போல் தொலைதூரத்திலுள்ள சேர்பியா, ஆப்கானிஸ்தான், மற்றும் ஈராக் மீது தாக்குதல் நடத்திவிட முடியாது. என்றாலும் ரஷ்யாவிடம் சோவியத் சகாப்தத்தில் இருந்த அணு ஆயுதங்கள் சேமிப்பு குவியல் உள்ளது. அண்மையில் Baluievski வெளியிட்ட கருத்துகளில், குறைந்தபட்சம் தற்போது அத்தகைய ஆயுதங்களை பாவிப்பதை தவிர்த்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அப்படியிருந்தாலும், Baluievski இன் அறிவிப்பினால் உலக அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை குறைந்து மதிப்பிட்டுவிடக் கூடாது. நேரடி இராணுவ நடவடிகைக்கு குறைந்த பட்சம் தடுப்பாக உள்ள சர்வதேச சட்டங்களை மீறுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாக அவர் ஒரு பக்கம் கூறிக்கொண்டிருக்கிறார். மாஸ்கோவிலுள்ள கார்னஜி இன்ஸ்டியூட்டின் (Carnegie Institute) பிரதிநிதிகளில் ஒருவர் கூறியதைப்போன்று: அமெரிக்கர்கள் நமக்கு எதை காட்டினார்களோ அது இப்போது ரஷ்யாவின் நடவடிக்கையாக மாறிவிட்டது. சீனர்களும் இந்தியர்களும்கூட அதை பின்பற்றுவார்கள்''

இதில் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சர்வதேச அபிவிருத்தி உருவாகிக்கொண்டிருப்பதை, ஏகாதிபத்திய வல்லரசுகள் அல்லது வல்லரசு அணிகள் இராணுவ மோதலில் ஈடுபட்டும் மூன்றாவது உலகப்போரின் நோக்கி சென்று கொண்டிருப்பதை மிகவும் தெளிவாக குறிக்கிறது. நிலையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இந்த வகையில், மத்திய ஆசிய மற்றும் காகஸஸ் பிராந்தியங்கள் முதல் உலகப்போரின் தொடக்கத்தில் பால்கன் அரசுகள் வகித்த பங்கை செய்து கொண்டிருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்து பக்கத்து மத்திய கிழக்கையும், சேர்த்தால் உலகின் எரிபொருள் வளங்களில் மிக அதிகமான விரிவான சேர்ம இருப்புகள் அடங்கியிருக்கும் ''மூலோபாய பூகோளம்'' என்று அழைக்கப்படும் இடம் இது.

பால்கனும் காகஸஸூம்

ஹாப்ஸ்பேர்க் இளவரசர் பிரன்ஸ் பேர்டினான்ட் சராஜேவோவில் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்துதான் முதல் உலகப்போர் தொடங்கியது அனைவரும் அறிந்ததே. என்றாலும் அந்தப் போருக்கான காரணங்கள் எங்கோ பொதிந்து கிடப்பதுடன், அவற்றை வரலாற்றின் இரண்டாவது முக்கியத்துவம் மிக்க சம்பவமாக குறைத்துவிட முடியாது.

போருக்கான மூலம் பல தசாப்தங்களாக பிரதான ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கிடையே உருவான வெடிக்கும் முரண்பாடுகளில் உள்ளடங்கியிருந்தது. இறுதி ஆய்வில், உலகப் பொருளாதார சகாப்தத்தில் தேசிய அரசுகள் இனி பொருந்தாது என்ற உண்மை நிலையிலிருந்து போர் உருவாகின்றது. குறிப்பாக, ஜேர்மனியில் ஆளும் தட்டினர் ஐரோப்பாவை தனது மேலாதிக்கத்தின் கீழ் வன்முறைமிக்க மறுசீரமைப்பினாலேயே முரண்பாடுகளை தீர்த்துவைக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தனர். அது போரை விரும்பியது.

வல்லரசு மோதல்கள் பால்கன் பகுதியில் நடைபெற்றது, இந்தப்பொறி வெடித்தது தற்செயலானதல்ல. ஏகாதிபத்திய வல்லரசுகள் மற்றும் வல்லரசு அணிகளின், போட்டி நலன்களுக்காக நேரடியாக இந்தப் பகுதியில்தான் மோதிக்கொண்டன. சர்வதேச சமநிலை சக்திகளின் மிக பலவீனமான பகுதியில்தான் கொந்தளிப்புக்கள் உடனடியாகவும், உணரக்கூடிய ஒரு வடிவத்தை எடுத்தன.

ஆஸ்திரியாவின் ஆதிக்கத்திலிருந்து பொஸ்னியா துண்டாடப்பட்டது பன்னாட்டு அரசான ஹாப்ஸ்பர்க்கின் சிதைவிற்கு வழிசெய்து சேர்பிய மற்றும் அதன் ரஷ்ய பாதுகாவலரை வலுப்படுத்தியிருக்கக்கூடும். அது ஜேர்மனியின் எதிரிகளான இங்கிலாந்து, மற்றும் பிரான்சோடு ஒப்பிடும்போது ஜேர்மனியில் கணிசமாக பலவீனப்படுத்தியிருக்கக்கூடும், ரஷ்யாவுடன் அப்போது இங்கிலாந்தும், பிரான்சும், கூட்டணி சேர்ந்திருந்தன. எனவேதான் பொஸ்னியாவின் சேர்பிய தேசியவாத அடிப்படையில் சங்கிலித்தொடர் போன்ற சம்பவங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டு ஐரோப்பா முழுவதும் நான்கு ஆண்டுகள் இரத்தக்களரியில் மூழ்கி, அது உலகளாவிய போராக வடிவெடுத்து பரந்தது.

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பால்கன் பகுதிகளுக்கும், இன்றைய தினம் மத்திய ஆசிய நாடுகளுக்குமிடையே நிலவுகின்ற ஒற்றுமை குறிப்பிடத்தக்கது. காகஸஸூம், மத்திய ஆசியாவும் ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் மோதுகின்ற நலன்களின் குவிமையமாக மட்டுமில்ல, அந்த பிராந்திய முழுவதின் எதிர்காலம் ஐரோப்பாவிற்கு குறிப்பாக ஜேர்மனிக்கு அடிப்படை முக்கியத்துவம் நிறைந்ததாகும். மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற சீனாவும், இந்தியாவிற்கும் அதே மாதிரியே பொருந்தும். மேலும் இதில் ஈரானும், துருக்கியும் சம்மந்தப்பட்டிருக்கின்றன, மத்திய ஆசியாவில் ''வல்லரசுகள் விளையாட்டில்'' புதிய பதிப்பில் இவைகளும் தங்களை சம்மந்தப்படுத்திக்கொள்ள விரும்புகின்றன. இந்த ''விளையாட்டில்'' இரண்டு ஆபத்துக்கள் உள்ளது. ஒன்று பூகோள-மூலோபாய ஆதிக்கம் மற்றொன்று எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கான வழிவகைகள், இதில் 21 நூற்றாண்டில் உலக சேர்ம இருப்புகள் (மூலவளங்கள்) சுருங்கிக்கொண்டிருப்பதால் இவை அதிகமான முக்கியத்துவமாக கருதப்படுகின்றன.

நிலைமை இன்னும் 1914இன் சராஜேவோ படுகொலை அளவிற்கு முன்னேறவில்லை. அன்றைய நிலவரத்தோடு ஒப்பிடும்போது காகஸஸ் பகுதியில் மோதிக்கொள்கின்ற நலன்கள் இன்றைய தினம் தெளிவற்ற முறையில்தான் வரையறை செய்யப்பட்டதாகும். நிலைமை கொந்தளிப்பாக உள்ளது. அவ்விடத்தில் பெரிய பேரங்கள் தொடர்ந்து மாறுபடும். பேரங்களும் முயற்சிகளும் தற்பொழுது உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பதுடன், வல்லரசு அணிகள் மற்றும் சர்வதேச சுயநல கூட்டணியில் இன்னும் இறுதியாக முடிவு செய்யப்படவில்லை. ஆனால் அதே வழியில்தான் பொதுவான அபிவிருத்தி சென்று கொண்டிருக்கிறது.

பெஸ்லன் பணயக்கைதிகள் நாடகத்திலும் அதன் விளைவுகளிலும் பேர்லினும், வாஷிங்டனும் தெரிவித்திருந்த வேறுபட்ட கருத்துக்கள் வளர்ந்து வரும் கொந்தளிப்புக்களை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. வாஷிங்டன் புட்டின் அண்மைய முன்னொழிவு நடவடிக்கைகளைத் தெளிவாக விமர்சித்திருக்கும் போது, பேர்லின் அமைதியாக வாய்மூடிக்கிடக்கிறது.

புஷ் எல்லோரும் பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தை நடத்தும் போது ''ஜனநாயகக் கொள்கைகளை'' மதிக்க வேண்டுமென்று பகிரங்கமாக புட்டினை எச்சரித்திருக்கிறார். இந்த விமர்சனத்திற்கு உடனடியாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் Sergei Lavrov வெறுப்புடன் மறுத்து குளிர்யுத்த காலத்திலிருந்து ஒரே நிலையான சூத்திரத்தைதான் கையாண்டு வருவதாக பதிலளித்தார். இந்தப் பிரச்சனை ''ரஷ்யாவின் உள்விவகாரமென்றும்'' செப்டம்பர் 11 இற்கு பின்னர் அமெரிக்காவும் சற்று கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததை நாங்கள் அறிவோம்'' என்று சுயதிருப்திகரமாக கூறியிருக்கிறார்.

ஜேர்மனி அரசாங்கம் வாஷிங்டன் விமர்சனத்தோடு தன்னை ஒன்றிணைத்துக் கொள்ள திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதற்கு மாறாக ஜேர்மன் அரசாங்கத்தின் பேச்சாளரான Béla Anda ஜேர்மன் சான்சலர் ஷ்ரோடர் ''மிக நம்பிக்கைகரமான மற்றும் தீவிரமான உரையாடல்'' புட்டினோடு நடத்திவருகிறார் என்று அறிவித்தார். ஏற்கனவே பெஸ்லன் சம்பவங்களுக்கு முன்னர், அண்மையில் மாஸ்கோ நடத்திய செச்சென்யா ஜனாதிபதி மோசடி தேர்தல்களை ஷ்ரோடர் வரவேற்றிருந்தார். வாஷிங்டன் அந்த தேர்தல்கள் நடத்தப்பட்ட விதத்தை விமர்சித்திருந்தது.

இராஜதந்திர வார்த்தைஜால மட்டத்தில் ஒருவர் நின்றுகொள்வதால், காகஸஸ் பகுதியில் நலன்கள் மோதிக்கொள்வதை புரிந்து கொள்ள முடியாது. இந்த பகுதியில் பிரதான வல்லரசுகளின் மூலோபாயங்கள் மற்றும் நலன்களை பரந்த வரலாற்று மற்றும் சர்வதேச கட்டமைப்பிற்குள் பரிசீலிப்பது அவசியமாகும். இந்தக் கட்டுரை அதனுடைய சுருக்கமான விவரங்களைத் தருகிறது.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமிடையில் மோதல்

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், அமெரிக்கா வேண்டுமென்றே திட்டமிட்டு படிப்படியாக சோவியத் யூனியனின் முன்னாள் எல்லையிலும், அதன் செல்வாக்கு வட்டத்திலும் ஊடுருவி வருகிறது. யூகோஸ்லாவியாவிற்கு எதிராக அமெரிக்கா தலைமையில் போர் நடத்தப்பட்டதன் பிரதான நோக்கங்களில் இது ஒன்றாகும், அதேபோல் நேட்டோ கிழக்கு நோக்கி விரிவாக்கப்பட்டதும், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பும் இந்த குறிக்கோளில் அடங்கும்.

ஒரு கட்டத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு சொந்தமாக இருந்த மூன்று பால்டிக் அரசுகள் இப்போது நேட்டோ உறுப்பினர்களாகவுள்ளதுடன் முன்னாள் வார்சா ஒப்பந்த அரசுகளில் பெரும்பாலானவை நேட்டோவில் சேர்ந்து கொண்டுள்ளன. மத்திய ஆசியாவில் பல முன்னாள் சோவியத் குடியரசுகளில் அமெரிக்க இராணுவ தளங்களை அமைத்திருப்பதுடன், அந்த அரசாங்கங்கள் ஆதரித்துடன், அவை வாஷிங்டனுடன் சிநேகபூர்வமான உறவுகளை அனுபவித்து வருகின்றன.

ஜோர்ஜியாவில், மாஸ்கோவிற்கு முற்றும் விரோதமாகவும், நேட்டோவில் சேரவும் விரும்பும் ஒரு அரசாங்கத்தை இருத்த அமெரிக்கா அரசியல் மற்றும் நிதி உதவிகளை வழங்கியுள்ளது. ஜோர்ஜியா இப்போது நெருக்கடியால் சூழப்பட்டுள்ள காகஸஸ் பிராந்தியத்திற்கு அருகாமையில் இருப்பதால் அது மூலோபாய முக்கியத்துவம் அதிகமுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல் காஸ்பியன் பகுதியிலிருந்து கருங்கடலுக்கு செல்லுகின்ற வழியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. மத்திய ஆசியாவிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்வதற்கான மிக முக்கியமான வழி இதுவாகும். இதைத்தவிர, இந்த நாடு தெற்கு ரஷ்யாவிற்கும் ஆசியா தீபகற்பகத்திற்கும் ஒரு பாலமாக விளங்குகிறது.

இதுவரை, ஜனாதிபதி புட்டின் வாஷிங்டனை பகிரங்கமாக விமர்சிப்பதை தவிர்து வந்தார். அமெரிக்க ஜனாதிபதியுடன் நெருக்கமான, தனிப்பட்ட மற்றும் அரசியல் உறவை நிலைநாட்டி வந்தார். வாஷிங்டனுடன் பகிரங்கமாக மோதிக்கொள்ள விரும்பினால் அதனால் வெற்றி கிடைக்காது என்று மாஸ்கோ உணர்ந்து கொண்டது அதற்கொரு காரணமாகும். அதுமட்டுமல்ல ரஷ்ய அரசின் தெற்கு முனையில் அச்சுறுத்தலாக தோன்றியுள்ள பிரிவினைவாத போராட்டங்களை மாஸ்கோ சுதந்திரமாக நடவடிக்கை எடுத்து அச்சுறுத்துவதை ஆதரிப்பதாக வாஷிங்டன் உறுதியளித்திருந்தது. செச்சென்யா பிரிவினைவாதிகள் ''சர்வதேச பயங்கரவாத்தின்'' ஒர் அங்கமென்று சித்தரித்துக்காட்ட புட்டின் தொடர்ந்து முயன்று வந்தார், அந்த பிராந்தியத்தில் ரஷ்ய இராணுவத்தின் கொடூரமான நடவடிக்கைகள் பற்றிய சர்வதேச விமர்சனங்களை திசை திருப்புவதற்காகத்தான் அவ்வாறு கூறிவந்தார்.

என்றாலும் அமெரிக்காவிலிருந்து அழுத்தங்களை அதிகரித்து வருவதாக மாஸ்கோ உணர்வது தெளிவாகத் தெரிகிறது. பெஸ்லன் படுகொலையை தொடர்ந்து தொலைக்காட்சியில் முதல் தடவையாக உரையாற்றிய புட்டின் தான் ''ரஷ்யாவிற்கு எதிராக சர்வதேச பயங்கரவாதம் நேரடியாக தலையிடுவதை'' சமாளிக்க வேண்டியிருப்பதாகக் கூறினார் இந்தப்பயங்கர செயல்களுக்கு பின்னணியில் வெளிநாடுகள் இருப்பதாக கோடிட்டுக்காட்டினார். என்றாலும் எந்த நாட்டையும் அவர் குறிப்பிட்டுச்சொல்லவில்லை. பயங்கரவாதிகள் ரஷ்யாவை குறிவைத்திருப்பதற்கு காரணம் '' உலகின் பெரிய அணுசக்தி வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யா யாரோ ஒருவருக்கு ரஷ்யா இன்றைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. அந்த அச்சுறுத்தல் நீக்கப்படவேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

ஒரு நாளைக்குப் பின்னர், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் ரஷ்ய நிபுணர்களுக்கு Novo Ogarjevo பகுதியிலுள்ள தனது வீட்டில் வழக்கத்திற்கு மாறாக நீண்ட பகிரங்க பேட்டியளித்தார். இங்கே அவர் மிகவும் தெளிவாக தனது கருத்தை வெளியிட்டார்: ''நான் மேற்கு நாடுகள் பயங்கரவாதத்தை ஆரம்பிப்பதாக கூறிவில்லை, அது அவர்களது கொள்கை என்றும் கூறவில்லை. ஆனால் நாங்கள் சம்பவங்களை கூர்ந்து கவனிக்கிறோம். அது கெடுபிடிப்போர் காலத்து மனப்பான்மையின் எதிரொலியாக அமைந்திருக்கிறது. நாங்கள் உள்நாட்டு பிரச்சனைகளிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமென்று சிலர் விரும்புகின்றார்கள். இங்கே சிலர் பொம்மலாட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள், நாங்கள் சர்வதேச அளவில் தலைநிமிர்ந்து நின்றுவிடக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்து கொண்டிருக்கிறார்கள்''

மீண்டும் புட்டின் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை, அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை திட்டவட்டமாக பாராட்டினார். அவரை ''நம்பகத்தன்மையுள்ள பங்காளி'' என்று வர்ணித்தார். நவம்பர் தேர்தல்களில் புஷ் வெற்றி பெறவேண்டுமென்று தான் விரும்புவதாகக் கூட அவர் கோடிட்டுக்காட்டினார்.

தொடர்ந்து பேட்டியளித்த புட்டின் அமெரிக்காவின் மிக நெருக்கமான ஐரோப்பிய நண்பனான பெரிய பிரித்தானியாவை பகிரங்கமாக விமர்சித்தார். செச்சன்யா பிரிவினைவாதத் தலைவரான Aslan Machadov இன் ஐரோப்பிய பிரதிநிதியான Achmed Sakajev இற்கு அரசியல் தஞ்சம் தந்திருப்பதாக அவர் லண்டனை தாக்குதல் தொடுத்தார். அவரை கைது செய்து ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வமாக கோரியுள்ளார்.

சோவியத் யூனியன் சிதைந்துவிட்டது குறித்து தாம் வருந்துவதாக புட்டின் மேற்கு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்தார். செச்சென்யா பிரிவதால் ரஷ்யாவே சிதைந்துவிடும் என்ற தமது அச்சத்தை திரும்பத்திரும்ப எடுத்துரைத்தார். இது தொடர்பாக ''சங்கிலித் தொடர்போன்ற பின்விளைவுகள்'' ஏற்படும் என்பது பற்றி பேசினார்.

அவரது அச்சங்களுக்கு அடிப்படைகள் இல்லாமல் இல்லை. ரஷ்யா எல்லையின் தெற்கில் மீண்டும் ஒரு பிரிவினை ஏற்படுமானால் நாடு முழுவதுமே சிதைந்துவிடும்---போதுமான அளவிற்கு தூண்டிவிடும் சக்திகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு நடப்பினால் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. அதனால் அலையலையாக மக்கள் வெளியேற்றப்பட்டு இன ஒழிப்பும் பிராந்திய மோதலும் உருவாகும். புதிதாக உருவாகும் அரசுகள் சுயநிர்ணய உரிமை கொண்ட அல்லது ஜனநாயக அரசுகளாக இருக்காது. மாறாக வல்லரசுகளின் சூழ்ச்சிகளில் சிக்கித்தவித்து அவர்களை சார்ந்திருக்கிற மற்றும் போட்டியாளர்கள், அரை கிரிமினல் குழுக்களை நம்யிருக்கவேண்டிய நிலைக்கு ஆளாகிவிடும். 1990களில் யூகோஸ்லாவியாவை பேரழிவிற்கு உள்ளாக்கிய சம்பவங்கள் திரும்பவும் தொடர்ந்து நடக்கும், ஆனால் இத்தடவை அதைவிட மிகப்பெருமளவில் நடக்கும்.

மேற்கு நாடுகளின் வட்டாரங்கள் அத்தகைய ஒரு நிலையை ஊக்குவிக்கும் என்ற சந்தேகம் காற்றில் கலந்து வந்த வதந்தியல்ல. ஈராக் போரில் அமெரிக்காவிற்கு ரஷ்யாவின் ஆதரவை பெறுவதற்காக வாஷிங்டன் அதிகாரபூர்வமாக, புட்டினின் செச்சென்யா கொள்கையில் தலையிடாமல் தவிர்த்து வந்தாலும், அமெரிக்க வெளியுறவு கொள்கையில் முன்னணி பங்கு வகிக்கும் நவீன-பழமைவாதிகள் என்றழைக்கப்படுபவர்கள் பகிரங்கமாக செச்சென்யா நோக்கங்களுக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஈராக் போர் முன்னேற்பாட்டிற்கு கணிசமான அளவு பிரச்சார பங்களிப்புச்செய்த அதே பிரமுகர்கள் இப்போது செச்சென்யாவின் அமைதிகாக்கும் அமெரிக்க குழு (American Committee for Peace in Chechnya-CPC) செச்சென்யா-சார்பு ஆதரவு குழுவிற்கு முன்னணி பதவிகளில் உள்ளனர்.

பிரிட்டிஷ் Helsinki குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான John Laughland பிரிட்டிஷ் கார்டியனுக்கு எழுதியுள்ள ஒரு கட்டுரையில் கீழ்கண்ட பெயர்களை தந்திருக்கிறார். ''அவர்களில் Richard Perle, இழிபுகழ்பெற்ற பென்டகனின் ஆலோசகர், ஈரான்- கான்ட்ரா புகழ் Elliott Abrams, ஈராக் மீது படையெடுத்து சென்றதும் எதிர்ப்பின்றி பிடித்துக்கொள்ளலாம் என்ற யூகத்தை கூறி ஊக்குவித்த அமெரிக்காவின் ஐ.நா தூதர் Kenneth Adelman, டொனால்ட் ரம்ஸ்பீல்ட் இன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய Midge Decter மற்றும் வலதுசாரி ஹெரிடேஜ் பவுண்டேஷனின் ஒரு இயக்குநரும், இராணுவவாத பாதுகாப்பு கொள்கை நிலையத்தைச் சேர்ந்த Frank Gaffney, அமெரிக்க இராணுவ புலனாய்வு முன்னாள் அதிகாரியான Bruce Jackson; Lockheed Martin நிறுவன துணைத் தலைவாரகவும் ஒரு காலத்தில் இருந்தவர். தற்போது நேட்டோ அமெரிக்க கமிட்டியின் தலைவர் அமெரிக்கன் எண்டர் பிரைசஸ் இன்ஸ்டியூடை சேர்ந்த Michael Ledeen அவர் இத்தாலிய பாசிசத்தின் முன்னாள் ஆதரவாளர் இப்போது ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு குரல் கொடுக்கும் முன்னணி பிரமுகர் மற்றும் முன்னாள் CIA டைரக்டர் R. James Woolsey ஆகியோர் முஸ்லீம் உலகத்தை அமெரிக்கா ஆதரவு முன்மாதிரியாக மாற்றியமைப்பற்கு ஜோர்ஜ் புஷ்ஷை பின்னால் இருந்து கொண்டு உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பவர்களில் அடங்குவர்'' (கார்டீயன் செப்டம்பர்8, 2004)

''இரண்டு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இடம்பெற்றிருக்கிற ACPC உறுப்பினர்கள் அமெரிக்க வெளியுறவு கொள்கை அமைப்பின் முதுகெலும்பாக உள்ளவர்கள், மற்றும் அவர்களது கருத்துக்கள்தான் உண்மையிலேயே அமெரிக்க நிர்வாகத்தின் கருத்துக்கள்'' என்று Laughland முடிக்கிறார்.

புட்டினின் பிரதிபலிப்பு

அமெரிக்க சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதற்கு புட்டின் தருகின்ற பதில் செச்சென்யா எதிர்ப்பை கடுமையாக அடக்குவது, ஏதேச்சதிகாரத்தை பலப்படுத்துவது, மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பது மற்றும் வெளிநாடுகளில் இராணுவ தாக்குதலை நடத்துவதாக அச்சுறுத்துவது ஆகிய நடவடிகைகள் பிற்போக்குத்தனமானவை என்பதுடன் எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியவை. புட்டின் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் சமூக வர்க்கமான, சோவியத் யூனியன் சிதைந்து விட்டபின்னர் அரசிற்குச் சொந்தமான சொத்தை சூறையாடும் புதிய ரஷ்ய செல்வந்த தட்டின் நலன்களை இது ஒத்திருப்பதுடன், இத்தட்டு பரந்த பொதுமக்களை கசக்கிப்பிழிந்து வெட்கக்கேடாக முறையில் செல்வத்தை குவித்துக் கொண்டது.

புட்டினுக்கு முந்தியவரான போரிஸ் ஜெல்சின்1991 டிசம்பரில் சோவியத் யூனியனின் முடிவை பிரகடனப்படுத்தினார். அப்போது இந்த சூறையாடல் மிகுந்த குழப்பத்தோடும் கட்டுப்பாடற்ற வகையிலும் நடைபெற்றது. பில்லியன் கணக்கில் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன், அரசிற்கு சொந்தமான நிறுவனங்கள் குறிப்பாக இலாபம் தரும் எரிபொருள் துறையின் நிறுவனங்கள் அரை-கிரிமினல் தன்மை கொண்ட நடவடிக்கைகள் மூலம் ''தனியார் மயமாக்கப்பட்டன.'' ஊழலும் கிரிமினல் நடவடிக்கைளும் பூத்துக் குலுங்கின. ரஷ்ய அரசு சிதைந்து மேற்குநாட்டு வல்லரசுகளின் கைப்பாவையாகிவிடுமோ என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டது.

ஜெல்சின் தனது வாரிசாக தனிப்பட்டமுறையில் புட்டினை தேர்ந்தெடுத்தார். புட்டின் பதவிக்கு வந்ததும் முன்னணி ஆளும் தட்டினர் ஆதரித்தனர். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தங்களது செல்வமும், அதிகாரமும் பாதுகாப்பாக இருப்பதற்கு வலுவான ஒரு அரசாங்கம் தேவை என்று செல்வந்த தட்டினர் உணர்ந்தும் அது பெரிய வல்லரசுகளுக்கிடையே சர்வதேச அளவில் பங்களிப்புச்செய்கிற, திறமைவாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த அரசாக இருக்கவேண்டுமென்று உணர்ந்தார்கள்.

புட்டின் சோவியத் இரகசிய சேவையான KGB இல் நீண்ட அனுவபம் படைத்தவர், தனது முக்கிய அரசியல் மற்றும் நிர்வாகத்தின் பதவிகளுக்கு இரகசிய சேவை முன்னாள் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். KGB ஸ்ராலினிச ஆட்சிக்காலத்தில் குறுகிய நோக்க உயர்மட்டத்தினரின் பாதுகாவலனாக செயல்பட்டுவந்தது, இந்தப் பணிக்கு அது தகுதிவாய்ந்ததாக இருந்ததற்கு காரணம், 1930 களிலும், 1940 களிலும் ஸ்ராலினால் ஊட்டி வளர்க்கப்பட்ட பெரிய ரஷ்ய பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த அமைப்பு என்பதாலாகும். KGB ஐ பொறுத்தவரை ''சோவியத் ஒன்றியத்தை பாதுகாத்து'' நிற்பது என்பது அக்டோபர் புரட்சியின் சோசலிச சாதனைகளை தற்காத்து நிற்பது என்ற பொருளில் அல்ல, ஆனால் அரசின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆதிக்கத்தை பாதுகாத்து நிற்பதாகும்.

புதிய முதலாளித்துவ தட்டினரின் அதிகாரத்தை ஒன்று சேர்த்து புட்டின் வலுப்படுத்தினார். பிராந்தியங்களைப் பொறுத்தவரை மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை வலுப்படுத்தியதுடன், போலீஸ் மற்றும் இரகசிய சேவை சாதனங்களை விரிவுபடுத்தினார். கருத்து சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தி, இறுதியாக இந்தக் கோடைகாலத்தில் சோவியத் ஒன்றிய காலங்களில் இருந்து இதுவரை இருந்துவந்த அரசாங்கம் நிதியளித்து வந்த பல்வேறு சமூக நலத்திட்டங்களை ஒழித்துக்கட்டினார். பொது மக்களிடமிருந்து கட்டுப்படுத்த முடியாத எதிர்ப்பு உருவாகும் என்று அஞ்சியதால் ஜெல்சின் அத்தகைய நடவடிக்கையை எடுக்க துணியவில்லை.

வெளியுறவுக் கொள்கையை பொறுத்தவரை ரஷ்யாவை மீண்டும் வல்லரசு நிலைக்கு கொண்டுவந்து விடவேண்டுமென்று புட்டின் நோக்கம் கொண்டார். இந்த நோக்கத்தோடு காகஸஸ் பகுதியில் பிரிவினைவாத போக்குகளுக்குகெதிராக மிகக் கொடூரமான தீவிர நடவடிக்கைகளை எடுத்தார். 1999 இறுதியில் ஜனாதிபதி பதிவியை ஏற்கும் முன்னரே அவர் இரண்டாவது செச்சென்யா போரை கட்டவிழ்த்துவிட்டார், அது இன்றைக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. செச்சென்யா பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டதுடன் அங்கு சமாதான தீர்விற்கான எந்த சாத்தியக்கூறுமில்லை. அதே நேரத்தில், இந்தப்போர் ரஷ்யாவில் சமூக நெருக்டியால் பெருகிவரும் அதிருப்தியை அடக்கி ஒடுக்குவதற்கு அரசு சாதனங்களை மேலும் பலப்படுத்துவதை நியாயப்படுத்துவதற்கு பயன்பட்டிருக்கிறது.

செச்சென்யா மோதல் வெளிநாட்டு தலையீட்டின் விளைவு என்று சித்தரித்து ஓரளவிற்கு புட்டின் வெற்றிபெற முடிந்திருக்கிறது மற்றும் ரஷ்யாவில் தேசியவாத உணர்வுகளுக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்தவகையில் அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சி தந்த ஆதரவு துணைபுரிந்திருக்கிறது.

தனது பங்கிற்கு'' ஜனநாயக'' எதிர்கட்சி என்று அழைக்கப்படுவது செச்சென்யா போரை விமர்சித்தது. ஆனால் சுதந்திர சந்தை சீர்திருத்தபோக்கை ஏற்றுக்கொண்டது. மேற்கு நாட்டு அரசுகளோடு நெருக்கமாக ஒத்துழைத்தது ஆளும்தட்டனரின் நிதியுதவி எதிர்பார்த்து உள்ளது. ரஷ்ய ''ஜனாநயகவாதிகளின்'' பலவீனத்திற்கு ஒருபகுதி காரணம் ஊடகங்கள் மீது கிரெம்ளின் கடைபிடித்துவரும் ஏகபோக ஆதிக்கமாகும். ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் அவர்கள் கடைபிடிக்கும் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் மக்களின் சமூக நலன்களுக்கு எதிரானவை என்பதே.

முன்னாள் சோவியத் கட்டுக்கோப்பிற்கு பதிலாக தளர்வான கூட்டணி அரசுகளான சுதந்திர அரசுகளின் கூட்டமைப்பை(CIS) கட்டிக்காக்கவும் புட்டின் முயன்றார். இவை ரஷ்யாவிற்கு மிக நெருக்கமான பகுதிகளாகும், இந்த அமைப்பின் மூலம் பொருளாதார இராணுவ மற்றும் இராஜதந்திர அழுத்தங்களை புட்டின் பயன்படுத்திவருகிறார். சிறப்பாக வெள்ளை ரஷ்யாவிலும், உக்ரேனிலும் இந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

காகஸஸில், மாஸ்கோ அஜர்பைஜானுக்கு எதிராக ஆர்மீனியாவை ஆதரிக்கிறது. அஜர்பைஜான் மிக வேகமாக மேற்குநாடுகளின் செல்வாக்கிற்கும் வீழ்ந்துவிட்டது. அது ஜோர்ஜியாவில் கிளர்ச்சிப் பகுதிகளில் தனது சொந்தப்படைகளை வைத்திருக்கிறது. மத்திய ஆசியாவில் மாஸ்கோ இரண்டு மிக முக்கியமான எரிபொருள் தயாரிப்பாளர்களான கசகஸ்தானையும், துர்க்மேனிஸ்தானையும் மூலோபாய கூட்டணியின் கீழ் கொண்டுவர மாஸ்கோ திட்டமிட்டு வருகிறது.

புட்டினின் பெரிய வல்லரசுத்திட்டங்களில் எரிபொருள் துறை முக்கிய பங்களிப்புச்செய்கிறது. நாட்டின் தேசிய வரிவருவாயில் 40%, ஏற்றுமதி லாபத்தில் 55% எரிபொருள் மூலம் கிடைக்கிறது. ரஷ்ய பொருளாதாரத்தில் 20% இதன் பங்களிப்பாகும். கிரெம்ளினுக்கு நெருக்கமாக உள்ள ரஷ்ய நிறுவனங்கள் உக்ரேன், ஜோர்ஜியா மற்றும் கசகஸ்தானில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

கிரெம்ளினுக்கும் ஆளும்தட்டின் ஒரு பிரிவினருக்குமிடையில் மோதல் ஏற்பட்டிருப்பது யார் கையில் எரிபொருள் இருப்பது என்பது பற்றித்தான். ரஷ்யா ஒரு வல்லரசாக திரும்ப உருவாவதற்கு எரிபொருள் துறையையே சார்ந்திருக்கிறது. அந்தத்துறை இலாப நோக்கில் மட்டுமே செயல்படுகிற குறிப்பிட்ட ஆளும்தட்டினரிடமோ அல்லது வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் கையிலோ செல்வதை ரஷ்யா அனுமதிக்காது என்று ரஷ்ய நிபுணர் அலெக்சாண்டர் Rahr கூறியிருக்கிறார். புட்டின் திரும்ப எண்ணெய் நிறுவனங்களை மீண்டும் தேசியமயமாக்க விரும்பவில்லை. 1990களில் அவை தனியாமயமாக்கப்பட்டன. அவை கிரெம்ளின் நோக்கப்படி செயல்பட்டாக வேண்டும் இல்லையென்றால் ''கிரெம்ளின் சொல்படி கேட்காவிட்டால் Yukos நிறுவனத்திற்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும். என்ன நடக்கும் என்பதற்கு அந்த நிறுவனம் ஒரு உதாரணம் என்று'' அவர் சுட்டிக்காட்டியுள்ளார் (CIS Barometer செப்படம்பர்-2004)

ரஷ்யாவிலும் மத்திய ஆசியாவிலும் கிடைக்கின்ற மகத்தான எண்ணெய் வளங்களை கட்டுப்படுத்துவது மற்றும் கிழக்கு ஐரோப்பா, காகஸஸில், மத்திய ஆசிய நாடுகள் மீது மேலாதிக்கம் செலுத்துவது போன்ற இந்த பிரதான பிரச்சனைகளிலும் மோதிக்கொள்ளும் நலன்கள் நீண்டகால அடிப்படையில் சமாதானமான முறையில் அவற்றிற்கு தீர்வுகாண முடியாது. அவை ரஷ்யா ஒரு பக்கமும், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மற்றொரு பக்கமும் திரண்டு அமெரிக்காவின் மூலோபாய நோக்கங்களுக்கும் ஐரோப்பிய அரசுகளுக்கும் மற்றும் நீண்டகால அடிப்படையில் சீனாவின் அக்கறைகளுக்குமிடையே இங்கு சமரசம் காணமுடியாத அளவிற்கு மோதல்கள் தோன்றும். இது மத்திய ஆசியாவையும் காகஸஸுயும் எதிர்கால மோதல்களுக்கான வெடிக்கும் நிலைக்குள்ளாக்கியுள்ளது.

ஐரோப்பிய நலன்கள்

ஈராக் போரைப் போன்று ரஷ்யா தொடர்பான அணுகுமுறையிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக்கொள்கை ஆழமாக பிளவுபட்டுநிற்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவாவதை பொருளாதாக் காரணங்களுக்காக ஜேர்மனியும், பிரான்சும் முன்னெடுத்து சென்றன. ஆனால் அவை இப்போது பொதுவான வெளியுறவுக்கொள்கை உருவாவதற்கு தடைக்கல்லாக உள்ளன.

ஜேர்மனியும், பிரான்சும் இத்தாலியின் ஆதரவோடு ரஷ்யாவுடன் மூலோபாய பங்காளி ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகின்றன. ஏற்கெனவே ஈராக் போரின்போது பேர்லின் பாரிஸ் மற்றும் மாஸ்கோ நெருக்கமாக ஒத்துழைத்து ஐ.நா போர் ஆதரவு தீர்மானம் தாக்கல் செய்வதைத் தடுத்தன. அதற்குப்பின்னர் புட்டின், ஜேர்மனி சான்சலர் ஷ்ரோடர், பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் ஆகியோர் அடிக்கடி சந்தித்து வருகின்றனர். பெஸ்லன் பணயக்கைதி நெருக்கடிக்கு சற்றுமுன்னர் கருங்கடல் பகுதியான Sochi இல் மூவரும் சந்தித்துப்பேசினர்.

ரஷ்யாவில் ஜேர்மனியின் நலன்களுக்கு மையமாக விளங்குவது எரிபொருளாகும். அமெரிக்க மேலாதிக்கத்திற்கெதிராக ஒரு எதிர்ப்பலத்தை உருவாக்குவதும் ரஷ்யாவின் சந்தையை பயன்படுத்திக்கொள்வதும் பேர்லினின் முக்கிய விடயமாக உள்ளது. ஜேர்மனிக்கு எரிபொருள் இருப்பு எதுவுமில்லை. அது அதிக செலவுபிடிக்கும் நிலக்கரியைதான் கொண்டுள்ளதுடன், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும், எரிவாயுவை மிகப்பெருமளவில் நம்பியிருக்கிறது. ஜேர்மனியின் எரிபொருள் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்திசெய்யும் வடகடல் எண்ணெய் வளம் தீர்ந்துவிடுமென்ற நிலை உருவாகும்போது ஜேர்மனிக்கு எரிபொருள் நெருக்கடி ஏற்படும்.

ஜேர்மனியின் இயற்கை எரிவாயு தேவைகளில் 35% இனை ஏற்கனவே ரஷ்யா வழங்கிவருகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் இது 50% இற்கும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனியின் எரிபொருள் நிறுவனங்கள் சான்சலர் அலுவலகத்தோடு தனிப்பட்ட முறையில் தொடர்புகள் கொண்டிருக்கின்றன. ரஷ்ய அரசோடு நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ள ரஷ்ய நிறுவனங்களோடு சம்மந்தப்பட்டிருகின்றன. புதிய சைபீரிய எரிவாயு கிணறுகளை அபிவிருத்தி செய்ய பில்லியன் முதலீடு செய்து கொண்டிருக்கின்றன. பால்டிக் கடல்வழியாக ரஷ்யாவிற்கும் ஜேர்மனிக்குமிடையே புதிய எரிவாயு குழாய் அமைப்பும் திட்டமிடப்பட்டு வருகிறது.

அண்மைக்காலத்தில் காகஸஸ் நெருக்கடியின்போது ஜேர்மனி அரசாங்கம் தெளிவாக புட்டினை ஆதரித்து நின்றது. செப்டம்பர் 8 ல் தமது வரவுசெலவு திட்ட உரையில் சான்சலர் ஷ்ரோடர், ரஷ்யாவின் நாட்டு ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிப்பதற்கு ஜேர்மனிக்கு அக்கரை எதுவுமில்லை என்று குறிப்பிட்டார். இரண்டு நாட்களுக்கு பின்னர் புட்டினும் ஷ்ரோடரும் பொது பிரகடனம் ஒன்றை வெளியிட்டு, அதில் பயங்கரவாதத்திற்கு எதிராக நெருக்கமாக இணைந்து போராடுவதற்கு சம்மதம் தெரிவித்தனர். செச்சென்யா தனிநாடு கோரும் முயற்சிகளை வெளியுறவு அமைச்சர் ஜொஸ்கா பிஷ்ஷரும் பகிரங்கமாக கண்டித்தார். ''அது ஒரு தீர்வாக இருக்கமுடியாது ஏனெனில் இது தொடர்ந்து ரஷ்யாவை சிதைத்துக்கொண்டே இருக்கும், அதனால் அந்த பிராந்திய முழுவதற்கும் உலக பாதுகாப்பிற்கும், பேரழிவிற்கும் விளைவுகள் ஏற்படும்'' என்று அவர் Märkische Allgemeine Zeitung தெரிவித்தார்.

ஜேர்மனியும் பிரான்சும் ரஷ்யாவுடன் பங்காளி ஒப்பந்தம் செய்து கொள்ளவதை ஏற்றுக்கொள்கையில் 1989 வரை வார்ஷா ஒப்பந்தத்தில் இணைந்திருந்த புதிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் ரஷ்யாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முயல்கின்றன. பேர்லினுக்கு மாஸ்கோவிற்குமிடையே நிலவுகின்ற நெருக்கமான உறவுகள் இன்னும் வார்ஷாவில் தீயகனவை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. வாஷிங்டனுக்கும், ரஷ்யாவிற்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருக்குமானால் இந்த அரசுகள் ஏறத்தாழ உடனடியாக தன்னிச்சையாக அமெரிக்காவுடன் சேர்ந்து கொள்கின்றன.

ஜேர்மனி, பிரான்சு மற்றும் இத்தாலியுடன், நெருக்கமான உறவுகள் வைத்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ரஷ்யாவின் உறவுகளில் விரிசல்கள் காணப்படுகின்றன. புரூஸசல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு திரும்பத்திரும்ப ரஷ்யாவை செச்சென்யா கொள்கையை கண்டித்து வருகிறது. கிழக்குநோக்கி ஐரோப்பிய ஒன்றியம் விரிவடைந்ததை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு இருதரப்பு தகராறுகள் தொடர்பாக எதிர்பாராத வகையில் மாஸ்கோவுடன் கடுமையான அணுகுமுறையை காட்டிவருகிறது.

பால்டிக் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த பின்னர் Kaliningrad ரஷ்ய மக்களின் இடையில் தங்கும் முகாமாகிவிட்டது. அங்கு ரஷ்ய குடிமக்களுக்கு புரூஸசல்ஸ் விசாக்கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு மண்டல அரசுகளுக்குள், ரஷ்யாவின் பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுபாடுகளை விதித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளை ரஷ்யா, உக்ரேன், மோல்டாவியா மற்றும் ஜோர்ஜியா தொடர்பாக மேற்கொண்டுள்ள தீவிர முயற்சிகள் குறித்து மாஸ்கோ அவநம்பிக்கையும் கொண்டிருக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள அரசுகளை ரஷ்யா தனது செல்வாக்கு வளையத்திற்கு உட்பட்டது என்று கருதுகிறது.

மாஸ்கோவுடன் மூலோபாய பங்காளி ஒப்பந்தம் செய்து கொண்டு ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெறுவதில் பேர்லினுக்கும், பாரிசிற்கும் அக்கரையிருந்தாலும் கூட காகஸஸிலும் மத்திய ஆசியாவிலும் ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு கீழ்படிந்து நடக்க தயாராக இல்லை. அமெரிக்காவுடன் ஜேர்மனியும், மத்திய ஆசியாவில் மிக முக்கியமான வர்த்தக பங்காளியாக உருவாகிவருகிறது. ஜேர்மனி அமெரிக்காவுடன் இணைந்து ஐரோப்பாவுற்கும் ஆசியநாடுகளுக்கும் இடையில் ரஷ்ய எல்லைக்கு வெளியில் ஜோர்ஜியா மற்றும் அஜர்பைஜான் வழியாக போக்குவரத்து தொடர்பை உருவாக்குவதில் அக்கறை கொண்டிருக்கிறது. எனவே அந்த பிராந்தியத்தில் அந்தப்பகுதி ஆளும் அரசுகளோடு அவற்றின் உறவுகள் மாஸ்கோவோடு விரிசல் அடைந்திருந்தாலும் தங்களது சொந்த உறவுகளை பேர்லினும், பாரிசும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

மேலும் ஷ்ரோடர், புட்டினுடன் நெருக்கமான உறவுகள் கொண்டிருப்பது ஜேர்மனியில் கருத்துவேறுபாடுகளை கிளறிவிட்டிருக்கிறது. அரசாங்கத்தரப்பு மற்றும் பழமைவாத எதிர்கட்சி தரப்புக்களை சார்ந்த ஜேர்மனி வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் பலர் பகிரங்கமாக ஆதரிக்கின்றனர். இவர்களில் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தை-CDU-) Wolfgang Schäuble, Karl Lamers(CDU), (சமூக ஜனநாயகக்கட்சியை - SPD -சேர்ந்த) Egon Bahr, (சுதந்திர ஜனநாயகக் கட்சி -FPD ஐ சேர்ந்த) முன்னாள் வெளியுறவு அமைச்சர் Hans Dietrich Genscher ஆகியோரும் அடங்குவர்.

என்றாலும் அரசியல் குழுக்களும் ஊடங்களும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்திருக்கின்றன. ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும், ஜேர்மனியின் வெளியுறவுக் கொள்கையை ஷ்ரோடர் சீர்குலைத்துவருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். செச்சென்யாவில் நடைபெறுகின்ற மனித உரிமைகள் மோதல் தொடர்பாக அவர் மெளனம் சாதித்துவருவது பொதுவான ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக்கொள்கையை கீழறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். செச்சென்யா போரில் வெற்றி பெற முடியாத நிலையில் புட்டின் முடங்கிக்கிடக்கும் சூழ்நிலையில் அவரோடு மிக நெருக்கமான உறவுகள் வைத்துக்கொண்டிருப்பது குறித்து மற்றவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜேர்மனி, பிரான்சு, மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த பிராந்தியத்தில் மிகப்பெருமளவில் வெடித்துச் சிதறும் தன்மை கொண்ட பிரச்சனையில் ஒத்துழைத்து வருகின்றன. Sochi இல் நடைபெற்ற முத்தரப்பு உச்சி மாநாட்டில் ஷ்ரோடர், சிராக் மற்றும் புட்டின் ஈரான் அணுத்திட்டத்தில் தெஹ்ரான் செறிவூட்ட யுரேனியம் தயாரிப்பதைத்தடுத்து நிறுத்த கூட்டாக சேர்ந்து நெருக்குதலை தருவதற்கு உடன்பட்டனர். ஈரானுக்கும், அமெரிக்காவிற்குமிடையே மோதல் எதுவும் ஏற்பட்டுவிடாது தடுத்து நிறுத்த அவர்கள் விரும்புகின்றனர்.

தெஹ்ரானுடன் ரஷ்யா நல்லுறவுகளை நிலைநாட்டி வருகிறது. மற்றும் ஈரானுக்கு அணு தொழில் நுட்பத்தை வழங்குகிறது. அமெரிக்காவோடு ஒப்புநோக்கும்போது ஐரோப்பிய ஒன்றியம் அந்த நாட்டின் எரிபொருள் தொழிலோடு ஒத்துழைப்பதை ஏற்றுக்கொள்கிறது.

புஷ் தேர்தலில் வெற்றிபெறுவாரானால் அமெரிக்கா ஈரான் மீது தனது அழுத்தங்களை அதிகரிக்குமென்று ஐரோப்பிய அவதானிகள் அஞ்சுகின்றனர். ஈரான் அரசாங்கம் செறிவூட்ட யுரேனியம் தயாரிப்பதை நிறுத்த மறுத்துவிட்டது. ''மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிற ஜனாதிபதி புஷ் இராணுவ தாக்குதல் அச்சுறுத்தலை நடத்துவதற்கு கூட தயங்கமாட்டார்'' என்று Der Spiegel எழுதியுள்ளது.

1981ல் ஈராக் அணு உலை மீது இஸ்ரேல் நடத்திய முற்கூட்டிய தற்காப்பு குண்டுவீசி தாக்குதலைப்போல் தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக்கூறு உண்டு என்று கருதப்படுகிறது. அண்மையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ''பங்கர்பஸ்டர்கள்'' (bunker busters) என்றழைக்கப்படும் 500 குண்டுகளை வழங்க சம்மதித்திருக்கிறது. இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்கள் தாராளமாக ஒப்புக்கொண்டிருப்பதைப்போன்று அந்த குண்டுகள் ஈரானுக்கு எதிராக அல்லது சிரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படலாம். இந்த துல்லியமான குண்டுகள் பூமிக்கடியில் ஆழமாக ஊடுருவிச்சென்று இரண்டு மீட்டர்கள் கன பரிமாணமுள்ள கான்கிரீட் சுவர்களையும் ஊடுருவிச்செல்கிற வல்லமை படைத்தது.

ஈராக் எடுத்துக்காட்டியதைப்போல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தந்திரோபாயகரமான இராணுவ கணிப்புக்கள் தவறிவிடலாம். போரைத்தடுத்து நிறுத்துவற்கு அமெரிக்காவின் ஆயுதகுறைப்பு கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் பாக்தாத் ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்தது, அதை ஏற்றுக்கொண்டு தனது ஆயுதங்களையும் ராக்கெட்டுக்களையும் பாக்தாத் அழித்திருந்தும் அமெரிக்கா, ஈராக் மீது தாக்குதல் நடத்தியது.

முடிவுகள்

காகஸஸ், மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் மோதல்கள் முற்றிக்கொண்டு வருவதால் உருவாகியுள்ள போர் ஆபத்து அச்சுறுத்தலை ஒரு ஏகாதிபத்திய குழுவிற்கெதிராக இன்னொரு ஏகாதிபத்தியக் குழுவை ஆதரிப்பதாலோ அல்லது வலுவான நாட்டிற்கெதிராக, பலவீனமான நாட்டை அல்லது ''அதிக சமாதானம்'' விரும்பும் நாட்டை அதிக ஆக்கிரமிப்பு நாட்டோடு மோத விடுவதால் எந்த வகையிலும் சமாளித்துவிட முடியாது.

உலக அரசியலில் இன்றைய தினம் மிக ஆபத்தான ஆக்கிரமிப்புமிக்க அம்சம் அமெரிக்கா ஏகாதிபத்தியம் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. அமெரிக்கா ஜனாதிபதி மாறுவதால் இது மாறிவிடாது.

என்றாலும் ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கங்கள் இந்த ஆபத்தை எதிர்த்துநிற்க முற்றிலும் இயலாமையில் உள்ளன என்பதை ஈராக் போர் ஏற்கெனவே எடுத்துக்காட்டிவிட்டது. போரை ஏற்றுக்கொள்ள மறுத்த நாடுகளே கூட அரைகுறை மனதோடுதான் அப்படிச்செய்தன. மற்றும் அதற்குப்பின்னர் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு அனுமதி வழங்கின. அமெரிக்கா உட்பட உலகம் முழுவதிலும் ஈராக் போருக்கு எதிராக உருவான சக்திவாய்ந்த இயக்கத்தை சார்ந்து நிற்க அந்த நாடுகள் திட்டமிட்டு தவிர்த்தன.

இறுதியில் ஈராக் போரை அவர்கள் நிராகரித்ததற்கான காரணம் அந்த பிராந்தியத்தில் அவர்களது சொந்த ஏகாதிபத்திய நலன்களின் உந்துதலால் தான். அவர்கள் சர்வதேச அளவில் இராணுவத் தலையீடுகளுக்கு ஏற்ற வகையில் தங்களது சொந்த இராணுவ சாதனங்களை வலுப்படுத்திக்கொண்டு அதே நேரத்தில் தங்களது சொந்த நாட்டு மக்கள் வென்றெடுத்திருக்கும் சமூக மற்றும் பொருளாதார வெற்றிகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தினார்கள். ஏனெனில் பொருளாதார மற்றும் மூலோபாய அதிகாரத்திற்கான பூகோளரீதியான போராட்டத்தில் தமது பங்கினை அடைவதற்காகவாகும். ஒரு பக்கம் பெருகிவரும் இராணுவ வாதத்திற்கும் மற்றொரு பக்கம் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கும் இடையில் பிரிக்க முடியாத தொடர்புகள் இருக்கின்றன.

இதுவே ரஷ்யாவிற்கும் பொருந்தும் அங்கே புட்டின் பெரிய வல்லரசு நோக்கத்திற்காக தொழிலாள வர்க்கம், ஜனநாயக உரிமைகளை இழந்து ஏழைகளாக்கப்பட்டு விலை செலுத்தவேண்டியிருக்கிறது.

போர் ஆபத்து மற்றும் தங்களது சொந்த அரசாங்கங்கள் உலகம் முழுவதிலும் நடத்திவருகின்ற தாக்குதல்களை எதிர்த்து நிற்பதற்கு தொழிலாள வர்க்கம் சர்வதேச சோசலிச முன்னோக்கை கையில் எடுத்துகொள்ள வேண்டும். இது ஒன்றுதான் புதியதொரு உலகப்போர் ஆபத்தை தடுக்கின்ற சரியான அடிப்படையாகும். 1914 இல் நிலவியதை போன்று இன்றையதினம் மீண்டும் ஒருமுறை, எம்முன்னுள்ள மாற்றீடு: சோசலிசமா? அல்லது ாட்டுமிராண்டித்தனமா? என்பதுதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved