World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Afghanistan's presidential election: a mockery of democracy

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயகத்தின் ஒரு கேலிக்கூத்து

By Peter Symonds
2 October 2004

Back to screen version

ஈராக்கில் ஆழமாகிக்கொண்டுவரும் பேரழிவை எதிர்கொண்டுள்ள புஷ் நிர்வாகம் மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காக ஆப்கானிஸ்தானையும், அங்கு அக்டோபர் 9-ந்தேதி நடைபெறவிருக்கிற ஜனாதிபதி வாக்குப்பதிவையும் ஒரு ஒளிவிளக்காக காட்டிக்கொண்டிருக்கிறது. புஷ்ஷின் விசுவாச ஆஸ்திரேலிய நண்பரான ஜோன் ஹோவார்ட் அதே நாளில் மறுதேர்தலுக்கு போட்டியிடுகிறார், அவரும் ஆப்கானிஸ்தான் வாக்குப்பதிவு ஒரு வெற்றிகரமான சம்பவம் என்று பாராட்டி, அமெரிக்கா தலைமையிலான தலையீடு, அந்த நாட்டிற்கு ''ஜனநாயகத்தை'' கொண்டுவந்திருப்பதாக எடுத்துக்காட்டியுள்ளதென்று கூறியுள்ளார்.

என்றாலும், இந்த வெறும் கூற்றுக்களை ஆராய வேண்டியதில்லை. தேர்தலின் ஒவ்வொரு அம்சமும் லஞ்ச, அச்சுறுத்தல்கள் மற்றும் குண்டர்களது நடவடிக்கைகளால் களங்கப்படுத்தப்பட்டிருக்கிறது ----இதை செய்பவர்களில் வெளியேற்றப்பட்டுள்ள, தாலிபான் ஆட்சியின் ஆதரவாளர்கள் அதிகமில்லை, ஆனால் அமெரிக்க ஆதரவு பெற்ற போர் பிரபுக்கள், மலைவாழ் இனத் தலைவர்கள், நடப்பு காபூல் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டுவரும் குடிப்படை தளபதிகள் மற்றும் சில சந்தர்பங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களே இதைத்செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நடைபெறவிருக்கின்ற ஆப்கான் வாக்குப்பதிவை ''ஜனநாயகம்'' என்று சொல்வது ஓர் அப்பட்டமான மோசடியாகும்.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் போர்பிரபுக்களும், அவர்களது குடிப்படைகளும் ஜனநாயக உரிமைகளை மிகப்பரவலாக மீறி வருவது குறித்து அமெரிக்காவிலிருந்து செயல்பட்டுவரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRW) இந்த வாரம் ஒரு அறிக்கையில் விரிவாக விவரித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் பல மாதங்கள் நடாத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை, திட்டமிட்டு அரசியல் எதிரிகள், பத்திரிகையாளர்கள், தேர்தல் அமைப்பாளர்கள் மிரட்டப்பட்டு வருவதையும், சாதாரண வாக்காளர்களின் ஆதரவை உறுதிசெய்து தருவதற்காக பலாத்கார முறைகள் கையாளப்பட்டு வருவதையும் கோடிட்டுக்காட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரும்பாலான பகுதிகளில் ''மிகப்பெருமளவிற்கு அரசியல் அடக்குமுறை கையாளப்பட்டு வருகிறது, ஒவ்வொரு பிராந்தியத்தை சார்ந்த அரசியலில் தீவிர பங்கெடுத்துக்கொள்ளும், ஆப்கானியர் இடைவிடாது தங்களைத் தாங்களே தணிக்கை செய்து கொண்டு செயல்பட்டு வருவதாக கூறியிருக்கின்றனர், கன்னைவாத தலைவர்களது வன்முறை அல்லது அச்சுறுத்தலுக்கு இலக்காகக்கூடும் என்ற பயத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். சில தெற்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் தாலிபான் மற்றும் இதர கிளர்ச்சிக்குழுக்கள் இன்னமும் கடுமையான அச்சுறுத்தலாகவே கருதப்படுகின்றன, ஆனால் மிகப்பெரும்பாலான ஆப்கானியர் பிரதானமாக உள்ளூர் ஆயுதந்தாங்கிய குழுக்கள் மற்றும் குடிப்படைகளின் வன்முறைக்கும், அச்சுறுத்தலுக்கும் பயப்படுவதாகவும் தாலிபானுக்கு பயப்படவில்லை என்றும் மனித உரிமை கண்காணிப்பிடம் தெரிவித்தனர்'' என்று அந்த அறிக்கை முடிவடைகிறது.

எடுத்துக்காட்டாக கிழக்குப்பகுதிகளில் ஹஜரத் அலி மற்றும் ஹாஜி ஜாஹிர் ஆகிய இரண்டு குடிப்படைத்தளபதிகளும் அங்கு வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர். நிலத்தை அபகரிப்பது, கொள்ளையடிப்பது, ஆட்களை கடத்துவது, மிரட்டிபணம் பறிப்பது, உட்பட பல்வேறு வகைப்பட்ட கிரிமினல் நடவடிக்கைகளிலும் முறைக்கேடுகளிலும் இந்த கும்பல்களை சேர்ந்தவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம். அப்படியிருந்தும் ஹாஜி ஜாஹிருடன் இன்றைய ஜனாதிபதி ஹமீத் கர்சாயோ கூட்டணியாக செயல்படுகிறார், மற்றும் ஹஜரத் அலி அமெரிக்க இராணுவப்படைகளோடு நெருக்கமாக செயல்பட்டு வருகிறார். தற்போது அவர்கள் இருவரும் வாக்காளர்களை அச்சுறுத்துவதில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் ஐ.நா உதவிக்குழுவில் (UNAMA) பணியாற்றிக் கொண்டுள்ள ஒரு அதிகாரி HRW-விடம் கூறினார்: ''இந்தச் சூழ்நிலை நீடித்துக்கொண்டிருக்குமானால் மற்றும் ஹஜரத் அலி போன்ற இங்குள்ள போர்பிரபுக்களின் அதிகாரங்கள், வெட்டப்படவில்லையென்றால் தேர்தல்கள் ஒன்றுக்கும், பயனற்றதாகிவிடும். தற்போதுள்ள அதிகார ஏற்பாடுகளை அப்படியே நீடிப்பதற்கான ஒரு முயற்சிதான் என்றும் தற்போது பதவியிலுள்ள சில கெட்டவர்களை ஒழித்துக்கட்டுவதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு அல்லவென்றும் இந்த தேர்தலை மக்கள் கருதுவார்கள். இன்றைய தினம் இங்கே துப்பாக்கி ஏந்திய நபர்கள், விரும்புவதுதான் இறுதியில் நடக்கிறது. இது என்ன ஜனநாயகமென்று எங்களுக்குத்தெரியவில்லை''

அதே அதிகாரி குறிப்பிட்டதாவது: ''ஹஜரத் அலிக்கும் அவரது குழுவிற்கும் மிகப்பெரிய அதிகார வளங்களில் ஒன்று அவர் அமெரிக்க இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்போடு நெருக்கமான உறவுகளை வைத்துக்கொண்டிருப்பதாகும். இந்த உறவை அவர் மிக வெற்றிகரமாக தனது அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவும், அவர்களுக்கு தீங்கு செய்யவும், வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறார். அவர் மக்களை கைது செய்திருக்கிறார் மற்றும் குவாண்டநாமோவிற்கு அனுப்பப் போவதாக அவர்களை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்''

Mazar-e-Sharif-வை சுற்றியுள்ள வடக்கு பிராந்தியத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது, மூன்று குடிப்படை தளபதிகள் அங்கு ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்: உஸ்பெக் போர்பிரபு ஜெனரல் ரஷீத் தோஸ்தும், ஹசாரா இனக்குழுவிற்கு தலைமை தாங்கி நடத்திவரும் முஹமத் முஹாகிக் மற்றும் தாஜிக் குடிப்படைக்கு தலைமை வகித்து நடத்திவரும் அட்டா முஹமத். முதல் இருவர் ஜனாதிபதி தேர்தலில் கர்சாயிக்கு எதிராக போட்டியிடுகின்றனர். வடக்கு கூட்டணி பிரிவைச்சார்ந்த Jamiat-e-Islami-யோடு அட்டா முஹமத் கூட்டணி சேர்ந்திருக்கிறார். கர்சாயின் பிரதான எதிரியாகக் கருதப்படும் Yunis Qanooni-யை அந்தக்குழு ஆதரிக்கிறது.

இந்த வாரம், குறைவாகவே நடந்த தேர்தல் பிரச்சார பேரணிகளில் ஒன்றை டோஸ்ரம் நடத்தினார். வடக்கு நகரான Shiberghan-ல் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில் 30,000 ஆதரவாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர், அதில் வேட்பாளர் ஜனநாயக உரிமைகளை காப்பது என்ற அபத்தமான உறுதிமொழி உட்பட பல உறுதிமொழிகளை வழங்கினார். டோஸ்ரம் தனது கொடூரமான செயல்களின் மூலம் நாடு முழுவதிலும் இழிவுபுகழ்பெற்றவர் என்று கருதப்படுபவர், 2001- தாலிபான் ஆட்சி வீழ்ச்சியடைந்தை தொடர்ந்து உடனடியாக நிராயுதபாணிகளான தாலிபான் கைதிகளில் நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்தது உட்பட பல்வேறு கொடூரச்செயல்களை செய்தவர். அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது என்ற அறிவிப்பை வெளியிடும் முன்னர்வரை, கர்சாயின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

அமெரிக்க ஆதரவு பெற்ற கர்சாய் தெற்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த பஸ்தூன் இனத்தை சார்ந்தவர், அவர் அதே நடைமுறைகளை கையாண்டு வருகிறார். இந்தப் பகுதிகளில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் அமெரிக்காவிற்கெதிரான ஆயுதந்தாங்கிய கிளர்ச்சிகளை சந்தித்து சமாளிக்க வேண்டியுள்ளது. பிரதான அச்சுறுத்தல் உள்ளூர் குடிப்படையிலிருந்து வருகிறது. ''Karzai ஆதரிக்காத அரசியல் கட்சிகளையும், அமைப்பாளர்களையும், உள்ளூர் தளபதிகளும், இராணுவத் தலைவர்களும் மிரட்டுகின்றனர், அல்லது அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அரசியல் கட்சித்தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் ஐ.நா- மற்றும் ஆப்கன் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் உட்பட தனித்தனி பல்வேறு வட்டாரங்கள் காந்தகரில் தெரிவித்தன'' என்று HRW- அறிக்கை கூறுகிறது.

வாக்காளர்களை கட்டாயப்படுத்தும் நடைமுறை ஒன்று சென்றவாரம் தெரிவாக வெளிவந்தது. Paktia மாகாணத்தை சார்ந்த Terezai இனத்தைச்சேர்ந்த 300- தலைவர்கள் Karzai-க்கு ஆதரவு தருவதாக முடிவு செய்தனர், அவர்கள் ஒரு வானொலி ஒலிப்பரப்பை வெளியிட்டனர். ''எல்லா Terezai- இன மக்களும் ஹமீத் கர்சாயிக்கு வாக்களிக்க வேண்டும்..... Terezai மக்களில் எவராவது இதர வேட்பாளர்களுக்கு வாக்களிப்பாரானால் அப்படி வாக்களிப்பவர்களது வீடுகள் கொளுத்தப்படும்'' என்று அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவர்களது ஆதரவை கரசாய் வரவேற்றார், காபூலுக்கு வருமாறு அந்த இனத்தலைவர்களுக்கு அழைப்புவிடுத்தார். வானொலி எச்சரிக்கை தொடர்பான விமர்சனங்களை, அவர் புறக்கணித்தார், அத்தகைய எச்சரிக்கைகள் கடுமையான அச்சுறுத்தல்கள் அல்ல, வழக்கமான பாரம்பரியமுறையில் வெளியிடப்படும் அறிவிப்புக்கள்தான் என்று அவர் குறிப்பிட்டார்.

இப்படி பரவலாக நிலவுகின்ற வாக்காளர்களை அச்சுறுத்தும், நடவடிக்கைகளும் இதர ஊழல் நடைமுறைகளையும் அதிகரிக்கின்ற வகையில், முறையான தேர்தல் நடைமுறைகள் மற்றும் ஏற்பாடுகள் போதுமான அளவிற்கு இல்லை. நாட்டிலுள்ள 5000- வாக்குச்சாவடிகளிலும், பணியாற்றுவதற்கு 125,000- ஊழியர்கள் தேவை என்று ஐ.நா மற்றும் ஆப்கான் அதிகாரிகள் மதிப்பீடு செய்திருக்கின்றனர். செப்டம்பர் தொடக்கத்திலேயே 1,00000 ஊழியர் பற்றாக்குறை நிலவியதாகவும், புதிதாக போதுமான ஊழியர்களை நியமித்து முறையாக பயிற்சி தருவது இயலாத காரியம் என்றும் HRW அறிக்கை சுட்டிக்காட்டியது. ஏற்கனவே பல இடங்களில் வாக்காளர் பதிவு நடந்திருப்பது, போன்ற இரட்டிப்பு பரவலாக நடைபெற்றிருக்கிறது. 10- மில்லியனுக்கு மேல் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்களில் 5-முதல் 7-மில்லியன் வாக்காளர்கள்தான் உண்மையான வாக்காளர்கள் என்றும் தேர்தல் அதிகாரிகள் HRW விடம் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பலாத்காரம்

என்றாலும் பல வழிகளில் ஆப்கான் போர் பிரபுக்கள் இனத்தலைவர்கள் முரட்டுத்தனங்களை எல்லாம் மங்கச்செய்கின்ற வகையில் அவர்களுக்கெல்லாம் மேலான மிகப்பெரிய சக்திவாய்ந்த கும்பலாக புஷ் நிர்வாகம் உள்ளது. இந்த உள்ளூர் சர்வாதிகாரிகளைப் போல் அமெரிக்காவும், தனது இராணுவப்படைகளை பயன்படுத்த தயங்கவில்லை. ஆப்கானிஸ்தான் முழுவதிலும் விரிவான அடிப்படையில் தனது கட்டளைகளை செயல்படுத்துவதற்கு அமெரிக்க இராணுவம் அரசாங்கத்தின் நிதியை தன் கட்டளைப்படி செலவிட வகைசெய்திருக்கிறது.

அமெரிக்க நிர்வாகம் ஐ.நா உதவியோடு அதன் ஐரோப்பிய கூட்டணிகள் ஒப்புதலோடு தேர்தலில் ஒவ்வொரு அம்சத்திலும் ஆப்கான் அரசியல் சட்டம் உருவாக்கப்படதிலிருந்து தனது அதிகாரத்தை செலுத்தி வருகிறது. ஆப்கான் மக்களுக்கு இந்த நிகழ்வுகளில் எதையும் சொல்வதற்கு இல்லை.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்திற்கு இரு தேர்தல்கள் ஜூனில் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் அவை இரண்டுமுறை தள்ளிவைக்கப்பட்டன. ஆனால் தற்போது ஜனாதிபதி தேர்தல் மட்டுமே அக்டோபர் 9-ல் நடைபெறுகிறது-- புஷ் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிகமான அளவிற்கு அனுகூலம் ஏற்படுகின்ற வகையில் தேர்தல் தேதி நிர்ணயிக்கப்பட்டிக்கிறது. இதில் முக்கியத்துவம் என்னவென்றால் கர்சாய் அவரது பல போட்டி வேட்பாளர்கள் மேலும் தள்ளிவைக்க வேண்டும் என்றுவிடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை, அதிகாரபூர்வமான தேர்தல் பிரச்சாரத்திற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது என்றும் பகிரங்கமாக அரசியல் விவாதங்களை நடத்துவதற்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பது கடுமையான தடைக்கல்லாக உள்ளது என்றும் எதிர்கட்சி வேட்பாளர்கள் பலர் குறிப்பிட்டனர்.

ஏப்ரல் வரை நாடாளுமன்ற தேர்தல்கள் தாமதமாவது இன்னும் மிக அதிகமான ஆபத்தாகும். ஏனென்றால் அமெரிக்கா மற்றும் ஐ.நா- அதிகாரிகள் மேற்பார்வையில் loya jirga (இன தலைவர்கள் கூட்டம்) -வில் கைபொம்மைப்போல் உருவாக்கப்பட்டு அங்கீகாரம் தரப்பட்ட அரசியல் சட்டத்தில் ஜனாதிபதிக்கு சர்வாதிகாரங்கள் நீட்டிக்கப்படும்: அமைச்சரவையை, இராணுவ அதிகாரிகளை, தூதர்களை, மற்றும் இதர தலைமை அதிகாரிகளை நியமிக்கவும் முடியும், நீக்கவும் முடியும். நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதியை கட்டுப்படுத்த ஓரளவிற்கு அதிகாரம் உண்டு, குறைந்த பட்சம் இன்னும் 6- மாதங்களுக்கு நாடாளுமன்றம் அமைய முடியாது.

சம்பிரதாயத்திற்காக வாஷிங்டன் தேர்தலில் நடுநிலை வகிப்பதாக கூறிக்கொண்டாலும், தேர்ந்தெடுப்பவர் அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படுவர். 2002-ல் அமெரிக்க ஆதரவோடு பதவியில் அமர்த்தப்பட்ட கர்சாய்யை வாஷிங்டன் ஆதரிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது அமெரிக்க ஆதரவாளர்களுக்கு முழுமையாக கீழ்படிந்து நடப்பதை அவர் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனமான, Dyncorp அவருக்கு மெய்காவலர்களை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் அவர் அமெரிக்க இராணுவ விமானங்களில் சுற்று பயணம் செய்கிறார்----- அந்த சலுகை அவரது அரசியல் எதிரிகள் எவருக்கும் வழங்கப்படவில்லை.

சென்றவாரம் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் ஆப்கான் தேர்தலை தன்விருப்பப்படி இயக்குவதற்கு அமெரிக்கா தீவிரமாக முயன்றுவருகிறது என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான Mohammed Mohaqqiq அந்த நாளிதழுக்கு பேட்டியளிக்கும்போது அமெரிக்க தூதர் Zalmay Khalilzad தனது அலுவலகத்திற்கு வந்து ஒருமணி நேரம் விவாதித்ததாகவும், தனது வேட்புமனுவை திரும்ப பெறுவது பற்றி பேச முயன்றதாகவும் குறிப்பிட்டார். ''தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு என்னிடம் கூறினார், என்னை நிர்பந்திக்கும் வகையில் அவர் அதைக்கூறவில்லை, அது ஒரு வேண்டுகோள் போன்று இருந்தது'' என்று Mahaqqiq கூறினார்.

''அந்த வேண்டுகோள்'' பல ஆலோசனைகளோடு வந்தது, அவற்றை Mahaqqiq தள்ளுபடி செய்தார். ஏனெனில் அவை போதுமானவை அல்ல என்று அவர் கருதினார். அவரது பதிலில் மனநிறைவு அடையாத Khalilzad அந்த Hazara போர் பிரபுவின் ஆதரவாளர்களை அணுகினார். அந்த சந்திப்புப்பற்றி Mahaqqiq விளக்கினார்: ''அவர் சென்றதும், எனது மிகுந்த நம்பிக்கைக்குரிய, மனிதர்களை எனது கட்சியில் அல்லது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மிக அதிக அளவிற்கு கல்விபயின்ற எனது ஆதரவாளர்களை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து என்னை வேட்புமனுவை திரும்பப்பெறுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும், அவ்வாறு செய்ய நிர்பந்திக்கவில்லையென்றும் கேட்டுக்கொண்டார். எனது ஆதரவாளர்களிடம் அதற்கு கைமாறாக எனக்கு என்ன வேண்டுமென்று என்னை கேட்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்''

இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல ''என்னை மட்டுமல்ல, எல்லா வேட்பாளர்களிடமும், அவர்கள் இதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் Khalilzad மட்டும் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அமெரிக்க அரசாங்கமே இப்படித்தான் செயல்படுகிறது என்று அனைவரும் நினைக்கின்றனர், அவர்கள் அனைவரும் கர்சாய் வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகின்றனர், இந்தத் தேர்தல் வெறும் நாடகம்தான்.

என்றாலும் தேர்தல்களில் எந்த வகையிலும் தலையிடவில்லை என்று Khalilzad மறுத்திருக்கிறார். ஆனால் Mahaqqiq -இன் கருத்துக்களை ஆதரிக்கின்ற வகையில் இதர வேட்பாளர்கள் சென்ற வாரம் இந்தப் பிரச்சனையை குறித்து விவாதிக்க நடத்திய கூட்டத்தில் கருத்துக் தெரிவித்துள்ளனர். Yunis Qanooni-க்கு பிரச்சார மேலாளராகப் பணியாற்றிவரும் Sadat Ophyani அந்த செய்தி பத்திரிகைக்கு பேட்டியளித்த போது ''எங்களது இதயம் வெடித்துவிட்டது ஏனென்றால் நாங்கள் நினைக்கிறோம் கர்சாய் உண்மையான தேர்தலை நடத்தவில்லையென்றால் நாங்கள் தோல்வியடைவோம். ஆனால் இது நடக்காது. கர்சாய் எங்களுக்கு ஏராளமான நிர்பந்தங்களை கொடுக்கிறார், முறையான தேர்தல் பிரச்சாரத்தை நடத்த அனுமதியில்லை, எனவே இது உண்மையான தேர்தல் அல்ல'' என்று கூறினார்.

Ophyani-ன் கருத்துக்களில் அடங்கியுள்ள பிரதிபலிப்பு நாட்டின் அதிகார தரகர்கள், குடிப்படைத் தளபதிகள், மலைவாழ் இன தலைவர்கள், ஆகியோர் அனைவரும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தில் இயங்கிவருகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. இது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அவர்களது அரசாங்கப் பதவிகள், பட்டங்கள், மற்றும் தங்களது பிராந்தியங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆகிய அனைதுமே முறைப்படி Karzai க்கு ஆதரவானவை---- ஆனால் உண்மையில் அமெரிக்காவின் ஆதரவை நம்பியே இருக்கிறது. 2001-ல் தலிபான் ஆட்சி வீழ்ச்சிக்குபின்னர் Khalilzad ஆப்கானிஸ்தானிலுள்ள வாஷிங்டனின் பிரதிநிதியாவார். முதலில் அவர் புஷ்ஷின் சிறப்பு தூதராகவும், பின்னர் தற்போது அமெரிக்க தூதராகவும் பணியாற்றி வருகிறார். போர்ப்பிரபுக்களை தனது வழிக்குக்கொண்டு வருவதிலும், அரசியல் நிலையை அமெரிக்காவிற்கு ஆதரவாக திருப்புவதிலும் அடிவருடியாக ஈடுபட்டுள்ளார்.

செப்டம்பர் மத்தியில் மேற்குப்பகுதியிலுள்ள Herat நகரில் கன்னைவாத போர்களுக்கு நடுவில் Karzai- தலையிட்டு Ismail Khan-ஐ கவர்னர் பதவியிலிருந்து நீக்கினார். Khan- ஆதரவாளர்களிடையே இந்த நடவடிக்கை ஆத்திரத்தை கிளறிவிட்டது, இந்த திடீர் முடிவிற்கு எதிராக நகரிலுள்ள ஐ.நா வளாளகத்திற்கு வெளியில் கண்டனப் பேரணிகளை நடத்தினர். அமெரிக்கா மற்றும் ஆப்கான் துருப்புக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை பலாத்கார முறையில் வெளியேற்றியதில் 7-பேர் கொல்லப்பட்டனர், 20-பேர் காயமடைந்தனர். Karzai- கலைந்து செல்லும் கட்டளையை பிறப்பித்தாலும் யார் பின்னாலிருந்து கொண்டு அவரை இயக்கினார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. கலவரம் கட்டுமீறச் சென்றுவிடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக கண்டனம் நடத்தியவர்களை அமைதிப்படுத்த வேண்டுமென Khalilzad வலியுறுத்தியதை தொடர்ந்து, உள்ளூர் தொலைக்காட்சியில் தோன்றி பேரணி நடத்தியவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.

Khan கவர்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆப்கானிஸ்தானில் போர்பிரபுக்களின் ''முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டதாக'' Khalilzad இந்த வாரம் பெருமையடித்துக் கொண்டார். உண்மையிலேயே Khan கவர்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால் அவரது செல்வாக்கும், அதிகாரமும் Herat பிராந்தியத்திற்குள் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. அவரிடம் நாட்டிலேயே மிகப்பெரிய குடிப்படை ஒன்று உள்ளது. பக்கத்திலுள்ள ஈரானோடு நடைபெறுகின்ற எல்லைத்தாண்டிய வர்த்தகத்தின் மூலம் அவரிடம் கணிசமான அளவிற்கு நிதி வளங்கள் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா நம்பியிருந்த Khan போன்ற போர் பிரபுக்களை அமெரிக்கா சர்வ சாதாரணமாக தூக்கி எறிந்துவிட முடியாது, என்பது Khalilzad க்கு நன்றாகவேத் தெரியும். என்றாலும் Khan பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அந்த நாட்டின் சர்வாதிகாரிகள் அனைவருக்கும் தக்க நேரத்தில் தரப்பட்டிருக்கும் நினைவூட்டல் எச்சரிக்கையாகும், அமெரிக்கா சகித்துக் கொண்டிருக்கும் வரைதான் போர் பிரபுக்களின் ஆதிக்கம் நீடிக்க முடியுமென்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையில் கவர்னர் பதவியிலிருந்து Khan நீக்கப்பட்டிருக்கிறார்.

அக்டோபர் 9-ல் நடைபெறவிருக்கும், தேர்தல் முடிவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்ட ஒன்றுதான். என்றாலும் கர்சாய் இரண்டாவது சுற்றுக்கு வருகின்ற அசாத்தியமான ஒரு நிலை உருவாகி அவர் தோற்கடிக்கப்பட்டுவிட்டாலும் கூட அவருக்கு பின்னால் பதவிக்கு வருபவர், வாஷிங்டன் கட்டளைப்படி செயல்படுவதைத்தவிர வேறு வழியில்லை. தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும், ஆப்கான் மக்களின் சுதந்திரமான தேர்தல் முடிவாக அது இருக்காது. அப்படியிருந்தும் இந்தத் தேர்தல் நாடகம் ஐ.நா-வின் வாழ்த்துக்களை பெறும் என்பதிலும், புஷ் நிர்வாகம் தனது கிரிமினல் கொள்கைள் நிலைநாட்டுப்பட்டுவிட்டது என்று அதை பாராட்டி வெற்றி சூடும் என்பதிலும் சந்தேகமில்லை


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved