World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆபிரிக்காSudan: why Powell calls Darfur violence "genocide"சூடான்: டார்புர் வன்முறையை பவல் ஏன் ''இனப்படுகொலை'' என்று கோருகிறார் By Chris Talbot சென்றவாரம் அமெரிக்க அரசுத்துறை செயலர் கொலின் பவல் டார்புரில் ''இனப்படுகொலை மேற்கொண்டதற்கு சூடான் அரசாங்கமும், Janjaweed இயக்கமும்தான் பொறுப்பாகும்'' என்று அறிவித்திருப்பது, வடக்கு ஆப்பிரிக்காவிலும், அந்தக் கண்டம் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது அதிகார கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதை சமிக்கை காட்டுவதாக அமைந்திருக்கிறது. டார்புர் சம்பவங்களை ''இனப்படுகொலை'' என்று பவல் சித்தரித்திருப்பது அமெரிக்க நாடாளுமன்றத்தின் கருத்துக்களை எதிரொலிப்பதாக உள்ளது. அத்துடன், வாஷிங்டனின் பூகோள மேலாதிக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியின் பின்னணியில் மனிதநேயக் கவலைகள் என்று வழக்கத்திலுள்ள நாடகமாடுகின்ற போக்கிற்கு இது தலைசிறந்த உதாரணமாக உள்ளது. சூடான் அரசாங்கத்தின் கிரிமினல் நடவடிக்கைகள்மீது புஷ் நிர்வாகம் விடையளிக்கிற வகையில் இல்லை. டார்புர் மக்களின் துயரம் சம்பந்தமாக எந்தவிதமான பங்களிப்பு செயல்முறையும் அதனிடம் இல்லை. ஈராக்கில் சதாம் ஹுசேனைப் போன்று, காட்டூமில்லுள்ள (Khartoum) ஆட்சியின் மீது புஷ் நிர்வாகம் குறிவைத்திருப்பது சூடானின் புவியியல், அரசியல் நிலையை கருத்தில் கொண்டே தவிர, தார்மீக கருத்தை கொண்டல்ல. மிக உயிர்நாடியான எண்ணெய் வளத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதைப்பற்றிதான் மறுபடியும் எழுந்துள்ளது. அமெரிக்காவின் உண்மையான நோக்கங்களை, மலைபோன்ற பொய்கள் மற்றும் பயனற்ற தார்மீக தத்துவங்களுக்குப் பின்னால் குந்தியிருந்து மூடிமறைப்பதில் வல்லமை படைத்தவர் முன்னாள் நிபுணர் பவல் ஆவர். அவர் மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது என்ற திட்டமிடப்பட்ட முடிவை வலுப்படுத்தும் வகையில் ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாகவும், அல் கொய்தாவுடன் தொடர்புகள் இருப்பதாகவும், தற்போது இழிவான கோரிக்கை மற்றும் பொய் என்று நீரூபிக்கப்பட்டுள்ள தகவல்களை பரப்புவதில் முன்னணியில் நின்று ஈராக் மீது படையெடுப்பது என்ற திட்டமிட்ட முடிவை நியாயப்படுத்தியவர். மேலும், ஈராக்கில் அமெரிக்கா தலையிடுவதை நியாயப்படுத்தும் வகையில் ஐ.நா-வில் அவர் வழங்கிய உரை வரலாற்றில் இடம் பெறப்போகும் பழியார்ந்த உரைகளில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர் சூடான் அரசாங்கம் இனப்படுகொலையை புரிவதாகக் கூறுவது மிகுந்த சிடுமூஞ்சித்தனத்துடன் கூடிய அரசியல் திட்டமாகும். டார்பூரில் கொடூரமான அடக்குமுறையை காட்டூம் முன்னெடுக்கிறது அல்லது ஆதரவளிக்கிறது என்பது உண்மை. ஆனால், இதற்கு முன்னர் சதாம் ஹூசேன் மற்றும் ஹிட்லரோடு ஒப்புநோக்கி கூறப்பட்டது அல்லது மிலோசேவிக் மற்றும் சேர்பியாவை பூதாகாரமாக சித்தரிப்பது ஆகியவை உடனடியாக ''ஏதாவது செய்தாக வேண்டும்'' கோரிக்கையை பலரும் அறியும்படி அவசியமான பங்கை உயர்வாக மிகைப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மனித நேயம் என்ற பெயரால் ஏகாதிபத்திய தூண்டுதல் இராணுவ தலையீட்டிற்கு வழி செய்வதாக அமைந்திருக்கிறது. இதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிற வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. சூடான் அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட எந்த முயற்சியும் மேற்கொள்ள முடியாது. ஆனால், இந்த பயங்கரங்களையொத்த அட்டூழியங்களை வாஷிங்டன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எவரும் அனுமதித்துவிடக் கூடாது. டார்பூரில் ஒரு மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தும், 50,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மதிப்பிடப்படுகிறது. அது ஒரு மனித இன பேரழிவுதான். ஆனால், 1994 ல் ரூவாண்டாவில் நடைபெற்ற சம்பங்களோடு ஒப்புநோக்குவதற்கு எந்தவிதமான நியாயமும் இல்லை. இப்போது அடிக்கடி இனப்படுகொலை என்ற தேவையான செயல் விளக்கத்தைப் பயன்படுத்தி மேற்கத்திய நாடுகளின் தலையீட்டை நியாயப்படுத்துகிறார்கள். Janjaweed இயக்கமானது பெரிய மக்கள் பிரிவினை அணித்திரட்டி ரூவாண்டாவின் ஹூட்டு ஆட்சி தூண்டிவிட்டதைப்போல் இன அடிப்படையில் படுகொலை நடவடிக்கைகளை தூண்டிவிடவில்லை. அரபு - ஆப்பிரிக்க பிளவுகள் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் விட்டுச் சென்ற பாரம்பரியமாகும். அதன்படி பல்வேறு இனங்களைச் சேர்ந்த குழுக்கள் மிக சிக்கலான முறையில் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மிகப்பரவலான மக்கள் பல்வேறு பகுதிகளில் நடைமுறையில் அரசாங்கமோ அல்லது அரச இயந்திரங்கள் இல்லாத பகுதிகளில்கூட பிற்போக்குத் தனமான வெகுஜன இயக்கங்களைப் பற்றி கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பக்கத்து நாட்டிலுள்ள சாட் அகதிகள் முகாம்களில் அமெரிக்க அரசுத்துறை விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பவல் இனப்படுகொலை பற்றிய தனது பிரகடனத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனால், அந்த அறிக்கையில் புதிதாக எதுவும் ஸ்தாபிக்கப்படவில்லை. அரசாங்க ஆதரவு பெற்ற குடிப்படை தங்களை ''அரபிகள்'' என்றழைத்துக்கொண்டு ஆப்பிரிக்க மக்களுக்கு எதிரான இனவாதத்தோடு டார்பூர் மக்கள் மீது தாக்குதல்களை தொடுத்துக் கொண்டிருக்கின்றன. கொலைகள், வல்லுறவு மற்றும் அவர்களை கிராமங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் அவை ஈடுபட்டிருக்கின்றன. இரண்டு எதிர்ப்பு டார்புர் கிளர்ச்சிக் குழுக்களிடையே சூடான் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் விளைவாக இத்தகைய தாக்குதல்கள் கடந்த ஓராண்டிற்கு மேலாக நடைபெற்று வருகின்றன. சூடான் அரசாங்கம் தனது எதிரிகளை சமாளிப்பதற்கு இந்த நடவடிக்கையைத் தான் முறையாக பயன்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் எண்ணெய் வயல் பிராந்தியங்களில் எந்தவிதமான இழப்பீடு இல்லாமல் இத்தகைய நடவடிக்கைகளை அது மேற்கொண்டு வருகிறது. ஆனால், மனித உரிமை அமைப்புக்களின் வேண்டுகோள்களுக்கு அப்பாலும், அமெரிக்கா அதைக் கண்டுகொள்ளாமல், சூடான் அரசாங்கத்தோடும், தெற்குப் பகுதி கிளர்ச்சிக்காரர்களோடும் சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் நடத்தி வருகிறது. உண்மையிலேயே டார்புரில் உள்ள கிளர்ச்சிக் குழுக்கள் சென்ற ஆண்டு தங்களது நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருப்பதற்கு காரணம் அமெரிக்கா சூடான் அரசாங்கத்திற்கு கொடுத்து வருகிற அழுத்தங்களும், தெற்குப்பகுதி கிளர்ச்சிக்காரர்கள் தன்னாட்சி உரிமை கோருவதிலும், எண்ணெய் வளத்தில் பங்கு கோருவதிலும் கிடைத்த சலுகைகளின் காரணமாகத்தான் ஆகும். தற்போது அமெரிக்கா, சூடான் மீது அழுத்தங்களை அதிகரித்திருப்பது, பிரதானமாக தனது சர்வதேச அளவிலான போட்டி நாடுகளுக்கெதிராக ஒரு ஆயுதமாக சூடானைப் பயன்படுத்திக் கொள்வதற்காகும். ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் கோரிக்கை என்னவென்றால் சூடானின் எண்ணெய் உற்பத்திக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்பதுதான். தற்போது தினசரி 320,000 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு தடைவிதித்தால் சீனாவையும், பாக்கிஸ்தானையும் அது பாதிக்கும். ஏனெனில் அவ்விரு நாடுகளும் சூடானின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. இரண்டு நாடுகளுமே ஐ.நா பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக இருப்பதுடன், இதுவரை அவ்விரு நாடுகளும் அமெரிக்காவின் ஆலோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. சூடானின் பிரதான வருவாய் எண்ணெய் மூலம் கிடைக்கிறது. அதற்குத் தடைவிதித்தால், ஏற்கனவே மிக ஏழ்மை நிலையிலுள்ள அந்த நாட்டில் மிகக் கடுமையான பாதிப்புக்கள் குறிப்பாக ஈராக்கை போன்று ஏற்படும். டார்புர் பிராந்தியத்தில் ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் தலையிட வேண்டுமென்று இதர மேற்கு நாடுகளையும் அமெரிக்கா மிரட்டிவருகிறது. இதுவரை 300 துருப்புக்கள் மட்டுமே அங்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று உயர்வாக அது கூறி வருகிறது. இந்தப் படைகள் தோற்றத்தில் ''ஆப்பிரிக்கா'' என்றிருந்தாலும், அமெரிக்காதான் நேரடியாக நடவடிக்கைகளுக்கு அடித்தளமிடும். Georgetown பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய பவல் சூடான் அரசாங்கத்தின் மீது ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் மூலம் அழுத்தம் கொடுக்கும் மூலோபாய நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை விளக்கினார் ''[சூடான் அரசாங்கத்திற்கு] ஆப்பிரிக்க ஒன்றிய சமாதான படைகள் மூலம் நாங்கள் உதவுவோம். அந்த கண்காணிப்பார்களோடு சில அமெரிக்க இராணுவ அலுவலர்களும் உள்ளனர்'' என்று பவல் கூறினார். ஆனால் அவர்களது பங்களிப்புப்பற்றியோ அல்லது பணியாற்றும் தன்மைபற்றியோ அவர் விளக்கவில்லை. என்றாலும், அமெரிக்க இராணுவத்தினர் ''சிறப்புப்படைகள்'' பணிகளில் சம்மந்தப்பட்டிருப்பதாக ஊகிக்கப்படுகின்றன. ஈராக்கில் அமெரிக்கா ஆக்கிரமிப்புச் செய்துள்ள கிரிமினல் தன்மையின் உண்மைகளுக்கு அப்பால் பவல் சூடானின் மனித நேய விடுதலை பெற்றுத்தருபவர் என்று வேடம் கட்டி ஆட முயலுவதற்குக் காரணம் பெரும்பாலும் ஊடகங்கள் அடிமைத்தனமாகவும் விமர்சனக் கண்ணோட்டமின்றி தந்து வருகிற ஆதரவாகும். ஒவ்வொரு நாளும் தலையங்கங்களிலும், தலையங்கப் பக்கத்தில் பிரசுரிக்கப்படும் கட்டுரைகளிலும் டார்புர் மக்களின் நிலை குறித்து தங்களது தார்மீக கடமைகளை வலியுறுத்துவதாகவும், ஐ.நா சமாதானப் படைகளை அனுப்பி தீர்வுகாண முடியாததை விமர்சிக்கிற வகையிலும், அமெரிக்கா மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிற வகையிலும் அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள்பற்றி மேலெழுந்த வாரியாக கூட கவனம் செலுத்தப்படவில்லை. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பிற இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற மரணங்களோடு ஒப்புநோக்கினால், சூடானில் நடைபெற்று வருகிற சம்பவங்கள் முக்கியத்துவம் இல்லாதவையாக ஆகிவிடுகின்றன. சூடானில் உள்ள அமெரிக்க எண்ணெய் பெருநிறுவனங்களின் நலன்கள் குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக சூடான் அரசாங்கத்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திவருவதன் பின்னணியில் அவைதான் முக்கியமான நோக்கமாக உள்ளன. எடுத்துக்காட்டாக வாஷிங்டன் போஸ்ட், செப்டம்பர் 13 ல் சூடான் இனப்படுகொலையில் ஈடுபட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை கூறியுள்ள பவலின் ''நேர்மையை பாராட்ட வேண்டும்'' என்று எழுதியிருக்கிறது. ''டார்புருக்குள் நடுநிலை சிவிலியன் பாதுகாப்புப் படைகளை கொண்டுவர வேண்டுமென்ற'' பவலின் முயற்சிகளை ஆதரிக்கவேண்டுமென்றும் அந்தப்பத்திரிகை கூறியுள்ளது. அமெரிக்க இராணுவம் பங்கெடுத்துக் கொள்ளும் போது அமெரிக்காவும், இதர மேற்கு நாடுகளும் அதற்காக செலவிடும் போது, அந்த ஆப்பிரிக்க ஒன்றிய படை எப்படி நடுநிலையாக செயல்பட முடியும் என்ற கண்ணோட்டம் எதுவும் செலுத்தப்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றி வாக்குகளை பெறுவதற்கு சூடானும் ஒரு பிரச்சனையாக ஆகிவிட்டது. தேசிய பாப்டிஸ்ட் மாநாட்டில் உரையாற்றிய ஜோன் கெர்ரி ''அமெரிக்கா உடனடியாக சர்வதேச படை ஒன்றை அனுப்புவதற்கு பயனுள்ள வகையில் உறுதியான நடவடிக்கை'' எடுக்கப்பட வேண்டுமென்று கூறியிருப்பதோடு, தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ''இப்படி சிலையாக உட்கார்ந்திருக்க மாட்டேன்'' என்றும் ''இப்பொழுது செயற்பட்டிருப்பேன்'' என்றும் கூறியுள்ளார். அமெரிக்கா சூடானில் முக்கிய பாத்திரத்தை இறுகப் பிடித்துக்கொண்டு, வாய்ப்பை கைவசப்படுத்திக் கொண்டதற்கு காரணம் ஐரோப்பிய வல்லரசுகளுக்கிடையே உள்ள வெளிப்படையான குழப்ப நிலையாகும். ஐரோப்பிய ஒன்றிய சார்பில் டார்புரில் விசாரணைகளை மேற்கொண்ட உண்மை அறியும் குழுவினர் சூடான் அரசாங்கம் புரிந்துள்ள அட்டூழியங்கள் இனப்படுகொலை என்று முடிவு செய்யும் தன்மை கொண்டதல்ல என்று முடிவு செய்தது. இந்த வார்த்தையைப் பயன்படுத்தி மேற்குநாடுகள் இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்தும் நிலையில் இருப்பதால், அமெரிக்க- ஆபிரிக்க யூனியன் (US-AU) அணுகுமுறையின் மாற்றுத் தொடர்பாக உடன்பாடு எதுவும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் காணப்படவில்லை என்று ஊகிக்கப்படுகிறது. பிரிட்டன் துவக்கத்தில் தனது சொந்த துருப்புக்களை அனுப்புவதற்கு தயாராக இருந்தது. சூடான் எல்லையிலுள்ள சாட்டிற்கு பிரெஞ்சு துருப்புக்கள் அனுப்பப்பட்டன. அதற்குமேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. புலனாய்வு வலைத்தளமான Stratfor.com தந்துள்ள தகவலின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் சூடான் எண்ணெய்க்குத் தடைவிதிப்பது சம்மந்தமாக உடன்பாடு ஏற்படவில்லை. பிரிட்டன், ஜேர்மனி மற்றும் தயக்கத்துடன் பிரான்ஸ் ஆகியவை தடை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தாலும், ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்ததாக வதந்திகள் உலவின. 25 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமானது ''சூடான் விவகாரத்தில் ஒருங்கிணைந்த பொது வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்க முடியாத நிலையில் உள்ளதென்று'' அந்த வலைத்தளம் கருத்து தெரிவித்துள்ளது. செப்டம்பர் 16 ல் ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தில், ஐ.நா பாதுகாப்புச்சபை சூடானுக்கு எதிராக ஆயுதங்கள் மற்றும் இதர தடைகளை விதிப்பது குறித்தும், இராணுவ தலையீட்டிற்குப் பதிலாக அரசியல் அடிப்படையில் உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. ஆனால், இப்போது டார்புரில் நடந்து கொண்டிருப்பது இனப்படுகொலைக்கு ஒப்புமையாக எடுத்துக்கொள்ள முடியாது'' என்றும் அது குறிப்பிட்டது. அந்தத் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றியத்தை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்துவதல்ல என்றாலும் அவற்றின் நிகழ்ச்சி நிரலை எந்தளவிற்கு அமெரிக்கா கட்டுப்படுத்த முடிகிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. பவலின் இனப்படுகொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் உருவான விளைவுகளில் ஒன்றுதான் சூடான் அரசாங்கத்திற்கும், டார்புர் கிளர்ச்சிக் குழுக்களுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் நிலைமுறிவாகும். அந்தக் குழுக்களில் ஒன்றான, சூடான் விடுதலை இயக்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தனது நிலைப்பாட்டை பரிசீலணை செய்து வருவதாக குறிப்பிட்டது. நீதி மற்றும் சமத்துவ என்ற இன்னுமொரு இயக்கம் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டதாக கூறியது. ஐ.நா தடைகளை விதித்து ஆபிரிக்க யூனியன் தலையிடுமானால், அதனால் சூடான் அரசாங்கம் பவ்வீனப்பட்டுவிடும் என்பதை உணர்ந்து, கிளர்ச்சிக் குழுக்கள் தங்களது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதில் எந்தப்பயனும் இல்லை என்று கருதுகின்றன. அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் மனிதநேய நாடகமாடுகின்றன என்பதை நிரூபிக்கிற வகையில் டார்புர் பிராந்தியத்தில் ஒரு மில்லியன் அல்லது அதற்குச்சற்று அதிகமான அகதிகளுக்கு போதுமான பொருளுதவியும், மருத்துவ உதவியும், தொடர்ந்தும் கிடைக்கவில்லை என்பது மேலும் தெளிவான ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. மேலே சுட்டிக்காட்டியுள்ள தலையங்கம் பிரிசுரிக்கப்பட்டுள்ள அதே நாளில் வாஷிங்டன் போஸ்ட் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதில் பாதுகாப்பு நிலைமை முன்னேற்றமடையவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. மேற்கு நாட்டு அரசாங்கங்களின் மிதமிஞ்சிய பெருந்தன்மை என்பது வெறும் கற்பனைதான். இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்கு மிகக்குறைந்த தொகைதான் தேவைப்படும் என்றாலும் அத்தகைய மனிதநேய ஆதரவு வந்து சேரவில்லை. டார்பூரில் இருந்து வெளியேறிய 1.2 மில்லியன் மக்களில் ஒவ்வொரு மாதமும் 6,000 முதல் 10000 பேர் மடிந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ''மிக எளிதாக சிகிச்சையளித்துத் தடுக்கக்கூடிய நோய்களால் ஒவ்வொரு மாதமும் ஐந்து வயதிற்கு குறைந்த குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர்'' மடிந்து கொண்டிருப்பதாக இந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் கூறியுள்ளார். மடிந்தவர்களில் 15 சதவீதம் பேர்தான் ''காயங்கள் மற்றும் வன்முறைக்கு'' பலியானவர்கள் என்றும், மற்றவர்கள் வாந்திபேதி, காய்ச்சல் மற்றும் விஷக்காய்ச்சலுக்கு பலியானவர்கள் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ''அகதிகள் முகாம்களில் கூட்ட நெரிச்சல் அதிகமாக இருக்கிறது. சுத்தமான தண்ணீர் பற்றாக்குறையில் உள்ளது, தேவையான கழிப்பிட வசதியில்லை, போதுமான அளவிற்கு சோப்புக்கள் வழங்கப்படவில்லை, மனிதனது கழிவுப்பொருட்களோடு மழைநீர் சகதியும் சேர்ந்து சிறிய கூடாரங்களில் வாழ்பவர்கள் சுகாதாரமாக வாழ முடியாத நிலையில் உள்ளனர்'' என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஐந்து வயதிற்கும் குறைந்த குழந்தைகளில் பாதிப்பேர் முதல் 75 சதவீதமான பேர் வரை வாந்திபேதி வயிற்றுப்போக்கு தொடர்பான நோய்களால் மடிவதாக அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது. ''இனப்படுகொலை'' காரணமாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சாவுகள் நடந்தனவா? என்பது குறித்து நிருபர்கள் கேட்டபோது, உலக சுகாதார அமைப்பு அதிகாரியான டேவிட் நபாரோ இந்தக் கேள்வியின் வழியில் சிந்திக்க மறுத்துவிட்டார். ''திட்டமிட்ட வன்முறை நடவடிக்கை எதனாலும் இந்த சாவு நடந்தது என்று எங்களால் சொல்ல முடியாது'' என்று அவர் கூறினார். இயற்கையாகவே, இதுபோன்ற பிரச்சனைகள் அமெரிக்க ஊடகங்களின் அணுகுமுறையை மாற்றிவிட முடியாது. ஏனென்றால் அமெரிக்க ஊடங்கள் ''மனிதநேய'' அடிப்படையில் இராணுவத் தலையீட்டை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன. |