WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
US media covers up American war crimes in Iraq
ஈராக்கில் போர்க்குற்றங்களை மூடிமறைக்கும் அமெரிக்க ஊடகங்கள்
By Barry Grey
15 September 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
பெருகிவரும் மக்களது எழுச்சியை இரத்தக்களரியில் மூழ்கடிக்கும் வகையில் ஒவ்வொரு
நாளும் திட்டமிட்டு அமெரிக்க இராணுவப் படைகள் பொதுமக்களை தாக்கி வருகிறது. ஆனால் அமெரிக்க மக்களின்
சார்பில் நடத்தப்பட்டுகின்ற இந்த கொடூரமான அட்டூழியங்கள் குறித்து பிரதான பத்திரிகைகள் மற்றும் ஒளி/
ஒலிபரப்பு சாதனங்களில் பெரிதும் தணிக்கை செய்யப்பட்ட இங்கொன்றும் அங்கொன்றுமாக சொற்ப செய்திகளை வெளியிட்டு,
அவற்றை பரப்பக்கூடிய ''செய்திகள்'' என்று கூறிக்கொள்கிறார்கள்.
ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில்
இருக்கும் அமெரிக்க ஊடகங்கள் ஈராக்கிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒட்டுமொத்தமாக படுகொலை
செய்யப்படுவதில் முக்கிய பங்களிப்பு செய்கின்றன. அத்துடன் புஷ் நிர்வாகமும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
இரண்டு பிரதான கட்சிகளும்- ஜனநாயகக் கட்சி அதன் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியும் அவர்களது குடியரசுக்கட்சி
எதிரிகளுக்கு சற்றும் குறைவில்லாத வகையில்- ஊடகங்களும் மனித இனத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றத்தில் உடந்தையாக
செயல்படுகின்றன. இந்த குற்ற செயல்களோடு ஒப்பிடும்போது அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினர் அண்மை ஆண்டுகளில்
குறிவைத்து தாக்குதல் நடத்திவரும்:
பனாமாவின் நொரியேகா,
சேர்பியாவின் மிலோசிவிக் மற்றும் சதாம் ஹூசேன் வரை புரிந்த குற்றங்கள்
மிகக்குறைந்தவை என்று கருதத்தக்க வகையில் அமெரிக்கா போர்குற்றங்களை புரிந்துவருகிறது.
24 மணிநேரமும் காலை விடிந்தது முதல் மறுநாள் காலைவரை கேபிள் செய்தி அலைவரிசைகளை
உற்றுப்பார்த்துக் கொண்டிந்தாலும், பாக்தாத்திலிருந்து பல்லூஜா, ரமாதி வரை தெற்கிலுள்ள ஹில்லா மற்றும் தல்அவார்
வரை நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்ற பேரழிவுகள் பற்றி எந்தவிதமான செய்தியும் ஒளிபரப்பப்படுவதில்லை,
வடக்கே வெகுதொலைவில் அமெரிக்கா ராக்கெட்டுக்கள், குண்டுகள், டாங்கிகளின் தாக்குல்கள் பற்றி அவை
விளைவித்த சேதங்கள் பற்றி எந்த விவரமும் தரப்படவில்லை. பிரதான மாலைநேர செய்தி அறிக்கையின் பிரதான
வலைப் பின்னல்களில் போகின்ற போக்கில் சாவுகள் மற்றும் பேரழிவுகள் பற்றி சிறிய தகவலை தந்துவிட்டு அத்துடன்
அமெரிக்க இராணுவத்தின் அபத்தமான அறிவிப்புகளை, அமெரிக்க இராணுவம் ''பயங்கரவாத'' மற்றும் ''ஈராக்கிற்கெதிரான''
இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் துல்லியமான தாக்குல் நடத்தியதாகவும் விளக்கம் தருகின்றார்கள்
அமெரிக்க பத்திரிகைகளை பொறுத்தவரை, அமெரிக்க ஹெலிகாப்டர்கள்
நிராயுதபாணிகளான பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது அல்லது நகரப்பகுதிகளில் விமானப்படை தாக்குல்
நடாத்திய முதல் பக்க செய்தியானது, மறுநாள் சமீபத்திய சூறாவளி அச்சுறுத்தல் பற்றிய செய்தி அல்லது வரும்
தேர்தல் பற்றிய கருத்துக்கணிப்பு முடிவு செய்திகளால் மறைக்கப்பட்டு வருகிறது- இந்தத் தேர்தலில் அமெரிக்கா
ஈராக்கை அடிமைப்படுத்தியிருப்பதன் சட்டபூர்வமான தன்மை குறித்து அல்லது போரை நடத்துவதற்கு
பயன்படுத்தப்பட்ட போலி நோக்கங்களுக்கு பின்னால் இருக்கின்ற உண்மையான குறிக்கோள்களைப்பற்றி
எந்தவிவாதமும் நடத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
அமெரிக்காவிலுள்ள ஊடங்களைவிட வேறு எந்த நாட்டு ஊடகங்களும் இவ்வளவு
கோழைத்தனமாக அல்லது அதிகாரபூர்வமான நிலைப்பாட்டை எந்தவிதமான கடுமையான விமர்சனம் அல்லது ஆய்வை
தவிர்த்துவிட்டு மிக கலைநயத்தோடு வெளியிட்டது கிடையாது. பிரிட்டனின் ஊடங்கள் நடுநிலையான செய்திகளை
மனசாட்சியோடு புறநிலையாக வெளியிடுவதில் முன்மாதிரி என்று எடுத்துக்கொள்வது அபத்தமானது, ஆனால்
அங்கேயும் கூட, அப்போதைக்கப்போது வெளிவரும் கட்டுரைகள் ஈராக் நிலவரத்தின் உண்மையான தன்மையை
ஓரளவிற்கு வெளிப்படுத்துகின்றன.
எடுத்துக்காட்டாக, செவ்வாய்க்கிழமையன்று கார்டீயன் செய்திப்பத்திரிகை தனது
முதல் பக்கத்தில் ஞாயிறன்று மத்திய பாக்தாத் பகுதியில் அமெரிக்க ஹெலிகாப்டர் நிராயுதபாணிகளான ஈராக்கியர்
மீது நடத்திய தாக்குதலை நேரில் கண்டவர்கள் தந்த தகவல்களை பிரசுரித்திருக்கிறது. வாஷிங்டனின் பொம்மை
அரசாங்க அலுவலகங்களும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரங்களும் இடம் பெற்றுள்ள பாக்தாத்தின் பச்சை
மண்டலத்திற்கு அருகில் ஹ்ய்வா தெருவில் முடங்கிக்கிடந்த அமெரிக்க கவசவாகனத்தை சுற்றிநின்ற ஒரு கூட்டத்தின்மீது
அமெரிக்க ஹெலிகாப்டர்கள் திரும்பதிரும்ப குண்டுவீசி தாக்குதல்களை நடத்தியதால் பதின்மூன்று ஈராக்கியர்கள்
கொல்லப்பட்டதுடன், டசின் கணக்கில் காயமடைந்தனர்.
உலகம் முழுவதிலும் உள்ள நமது வாசகர்களின் பயனுக்காக, குறிப்பாக அமெரிக்காவிலுள்ள
நமது வாசகர்களின் நலனுக்காக, இங்கே நாம் கார்டீயன் கட்டுரையாளர்
Ghaith Abdul-Ahad
தந்துள்ள உள்ளத்தை உறையவைக்கும் துயரமான விவரங்கள் சிலவற்றை
தருகிறோம், அந்த தாக்குதலைப் பற்றிய செய்தி சேகரிக்கும்போது அவரே காயமடைந்திருக்கிறார்.
அமெரிக்க ஹெலிகாப்டர்கள் நிராயுதபாணிகளான ஈராக் மக்கள் மீது குறைந்தபட்சம்
நான்கு இடங்களில் தனித்தனியாக அமெரிக்க ஹெலிகாப்டர்கள், தாக்குதல்களை நடத்தியது தொடர்பாக
Abdul Ahad
விவரிக்கிறார்--- முதலாவது ஏவுகணை தாக்குதல் நடந்ததில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை
அப்புறப்படுத்த முயன்றவர்கள் மீது ஹெலிகாப்டர்கள் பலமுறை திரும்பி வந்து தாக்குதல் நடத்தியதை அவர்
பட்டியலிட்டிருக்கிறார்.
''நான் 50 மீட்டர்களுக்கு அப்பால் நின்றபோது ஒன்றிரண்டு குண்டுகள் வெடிப்பதை
கேட்டேன் முதலில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து புகை வந்து கொண்டிருந்த தெருவிற்கு குறுக்கே
மற்றொரு புகை மூட்டம் தூசிகளோடு எழுந்தது'' என்று எழுதுகிறார் ''அலையலையாக மக்கள் என்னை நோக்கி
ஓடி வந்து கொண்டிருந்தார்கள். ஆரஞ்சு சட்டை அணிந்த ஒருவர் தெருவை பெருக்கிக்கொண்டிருந்த நேரத்தில்
மற்றவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு ஹெலிகாப்டர்கள் அப்போது வானத்தில் தலைக்குமேலே சென்று
கொண்டிருந்தன.''
அவர் தப்பிப்பதற்காக ஓடுகிறார் அப்போது: ஒரு சில நொடிகளுக்குப்பின்னர்
மக்கள் கூக்குரல் எழுப்புவதையும் கேட்டேன்--- மற்றும் நான் அந்த ஒலிகள் கேட்ட இடத்தை நோக்கி ஒரு
சுவற்றிற்கு பின்னால் மெல்ல நகர்ந்து சென்றேன். இரண்டு செய்திப்பிரிவு புகைப்படக்காரர்கள் எதிர் எதிராக
ஓடிக்கொண்டிருந்தனர், நாங்கள் கண்களால் தொடர்புகொண்டோம்.
''சுமார் 20 மீட்டர்கள் எனக்கு முன்னே, நான் அமெரிக்க பிராட்லி
கவசவாகனத்தை பார்க்க முடிந்தது, அது மிகப்பெரிய ராட்சத வாகனம் அதற்குள்ளிருந்து தீ பிழம்பு எழுந்தது.
நான் தனியாக நின்றேன், அதன் தகதவுகள் திறந்தன, தீ எரிந்து கொண்டிருந்தது. நான் ஒடுவதை நிறுத்தி ஒரு
சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு தெருவைக் கடந்து சிலர் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு சென்றேன். சிலர்
தெருவில் கிடந்தனர், மற்றவர்கள் அவர்களை சுற்றி நின்றனர். ஹெலிகாப்டர்கள் அப்போதும்
இரைந்துக்கொண்டுதான் இருந்தன, ஆனால் அப்போது சற்று தூரம் தள்ளி நின்றன.''
அந்த நிருபர் தொடர்ந்து எழுதும்போது: ''எனக்கு சங்கடம் ஏற்பட்டது, தெருவின்
நடுவில் நான் நின்றுகொண்டிருந்தேன். ஆனால் ஏராளமான பொதுமக்கள் என்னை சுற்றி நின்று கொண்டிருந்தனர்.
காயமடைந்த 5 பேரை சுற்றி டஜன் பேர் நின்று கொண்டிருந்தனர், அவர்கள் அனைவரும் துடித்துக்கொண்டும் அழுது
கொண்டும் இருந்தனர்''
இவ்வளவு நிராயுதபாணிகளான சிவிலியன்கள் நிற்கும்போது அமெரிக்கா மேலும்
தாக்குதல் நடத்தாது என்று Abdul Ahad
இன் நம்பிக்கை மிக விரைவில் சிதைந்தது ''அந்த இடத்தில் நின்று கொண்டு இரண்டு மூன்று நிமிடங்கள் படம்
பிடித்துக்கொண்டிருந்தேன், அப்போது ஹெலிகாப்டர்கள் திரும்பி வருகின்ற சத்தத்தை நாங்கள் கேட்டோம்.
ஒவ்வொருவரும் ஓடத்தொடங்கினார்கள், காயமடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நான்
திரும்பிப்பார்க்கவில்லை. அதே இடத்தை நோக்கி நாங்கள் அனைவரும் ஓடினோம். அது ஒரு தொடர் கட்டிடம்
ஒன்று இருந்தன, அது சிகரெட் புகைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறிய வட்ட வடிவ அறையை நோக்கி
ஓடினோம்..
''அந்த அறையின் மூலைக்கு நான் சென்றபோது இரண்டு குண்டுகள் வெடிப்பதை
கேட்டேன். எனது முகத்தை வெப்பக்காற்று தாக்குவதைப் போன்று இருந்தது, எனது தலை எரிவது போன்ற
உணர்வு ஏற்பட்டது. நான் நகர்ந்து அந்த அறைக்கு பின்னால் ஒளிந்துகொண்டேன். இரண்டு மீட்டர் அகலத்திற்கும்
குறைந்த இடத்தில் நாங்கள் ஆறு பேர் மிக நெருக்கமாக புகுந்து கொண்டோம். இரத்தம் ஒழுகாமல் எனது
புகைப்படக் கருவியின் லென்சை எப்படி தூய்மையாக வைத்துக்கொள்வது என்பது பற்றிதான் நான் சிந்தித்தேன்.
எனக்கருகில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அழுதுகொண்டிருந்தார். அவர் காயப்படவில்லை என்றாலும்
கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்.
''நான் மிகவும் பயந்து அந்த சுவற்றில் ஒட்டிக்கொள்ள விரும்பினேன்
ஹெலிகாப்டர்கள் எங்கள் தலைக்குமேல் எங்கள் மீது நேரடியாக அவை சுடுவதை உணர்ந்தேன்''.
ஹெலிகாப்டர்கள் நகர்ந்து சென்றன, நிருபர் தெருவில் இறங்கி ஏற்கனவே ஏற்பட்ட
நாசம் குறித்து செய்தி சேகரித்திக்கொண்டிருந்தார், காயமடைந்தவர்கள் மற்றும் இறந்து கொண்டிருப்பவர்களுக்கு
உதவினார். அப்போது ''அதிகமான சிறுவர்கள் தெருவிற்கு வந்தனர். இறந்தவர்களையும்,
காயமடைந்தவர்களையும் பார்த்துக்கொண்டு நின்றனர் அப்போது யாரோ ஒருவர் ''ஹெலிகாப்டர்கள்!'' என்று
கூச்சலிட்டார். நாங்கள் ஓடினோம். நான் திரும்பி பார்த்தபோது இரண்டு சிறிய கறுப்புநிற ஹெலிகாப்டர்களை
பார்த்தேன். பீதியடைந்து எனது பாதுகாப்பு அறையை நோக்கி ஓடினேன் அங்கே இரண்டு பெரிய குண்டுகள்
வெடிப்பதைக் கேட்டேன்..... நான் அந்தக் கட்டடத்தின் நுழைவாயிலை அடைந்தேன், அப்போது ஒருவர் எனது
கையை பிடித்திழுத்து அந்தக் கட்டடத்திற்குள் கொண்டு சென்றார். இங்கே ஒரு காயம்பட்ட மனிதர்
வந்திருக்கிறார். அவரை படம் எடுத்துக்கொள்ளுங்கள்---அமெரிக்க ஜனநாயகத்தை உலகிற்கு காட்டுங்கள்', என்று
அவர் கூறினார்''
பாக்தாத்தின் மையப்பகுதியில் ஞாயிறன்று நடைபெற்ற மிக கொடூரமான
இரத்தக்களரியை கண்டிக்கும் வகையில் கார்டீயன் வெளியிட்டுள்ள தகவலை பிரதான அமெரிக்க ஊடகங்கள்
எதுவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை, என்பதை சுட்டிக்காட்ட அவசியமில்லை. திங்களன்று பல்லூஜாவில்
அமெரிக்க விமானப்படையும், பீரங்கிகளும் நடத்திய மற்றொரு சுற்று பற்றிய செய்திகளை செவ்வாய்கிழமையன்று
மிகப்பெருபாலான செய்திப்பத்திரிகைகள் உள்பக்க செய்தியாக ஒதுக்கிவிட்டன.
20பேர் கொல்லப்பட்டதாகவும் 39 பேர் காயமடைந்ததாகவும் ஈராக் சுகாதார
அமைச்சகம் தெரிவித்தது. அல் ஜெசீரா தந்துள்ள தகவலின்படி கொல்லப்பட்டவர்களில் முதலுதவி வாகன
செலுத்துனரும், ஆறு பயணிகளும் அடங்குவர். நகரின் வடக்கு பகுதி நுழைவாயிலுக்கு அருகே இருந்த அவற்றின் மீது
ஜெட் போர்விமானம் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ''ஒவ்வொரு முறையும் நாங்கள் முதலுதவி வாகனம்
அனுப்புகின்ற நேரத்திலெல்லாம் அவை தாக்கப்படுகின்றன'' என்று பல்லூஜா மருத்துவமனை டைரக்டர் அரபு செய்தி
பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
நகரத்தின் al-Shurta
புறநகர் பகுதியில் அமெரிக்க ராக்கெட்டுகள் மூன்று வீடுகளை நொருக்கிவிட்டதாக அல் ஜெசீரா தகவல்
தந்திருக்கிறது. அமெரிக்க குண்டுகள் ஒரு சந்தையை தாக்கின அமெரிக்க டாங்கிகள் நகரத்தின் வடக்கு பகுதி
நுழைவுவாயிலுல் அருகிலுள்ள al-Jughaivi
புறநகர் பகுதியில் வீடுகளை நோக்கி சுட்டன.
வாஷிங்டன் போஸ்ட் 19 வது பக்கக்கட்டுரையில் பல்லூஜா புறநகர்களிலும்
முதலுதவி வாகனத்தில் சென்றவர்கள் இறந்தது தொடர்பாகவும் நடைபெற்ற தாக்குதல் செய்திகளை வெளியிட்டிருக்கிறதே
தவிர அதைப்பற்றி கருத்து எதையும் தரவில்லை. அதிகாரப்பூர்வமான தகவலை மட்டுமே வெளியிட்டிருக்கிறது.
Abu Musab Zarqawi இன் ஆதரவாளர்கள் பதுங்கியிருந்தார்கள்
என்று ''சந்தேகிக்கப்பட்ட இடத்தின்மீது தாக்குதல்'' நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. அது கிட்லரின் பிரச்சார
அமைச்சரான Goebbels
பாணியில் அமெரிக்க இராணுவத்தின் அறிக்கையை பின்வருமாறு வெளியிட்டிருக்கிறது. ''இந்த புலனாய்வு அறிக்கைகளின்
அடிப்படையில் ஈராக் பாதுகாப்பு படைகளும் பன்னாட்டு படைகளும் இந்த பயங்கரவாதிகளை சரியாக குறிவைத்து
பயனுள்ள வகையில் தாக்குதல் நடத்தியுள்ளன. அதே நேரத்தில் அப்பாவி பொதுமக்களின் வாழ்வை பாதுகாத்திருக்கிறார்கள்''.
நியூயார்க் டைம்ஸ் முதல்பக்கத்தில் ஒரு விமர்சன கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
அந்தக்கட்டுரை ஈராக் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துன்பத்தை குறிப்பாக எடுத்துக்காட்டவில்லை. மாறாக இராணுவம்
கிளர்ச்சி நடத்தும் நகரங்கள் மீது நடத்திவரும் தாக்குதலுக்கு எதிரான விளைவுகளை உருவாக்கும் ஆபத்து உள்ளது
என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த விமர்சனத்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில் ''கெரில்லா இயக்கங்களை
எதிர்த்து போர் புரியும் அரசாங்கங்கள் எதிர் நோக்கும் இருதலைக்கொள்ளி எறும்புபோன்ற நிலையில் இப்போது
அமெரிக்க அரசாங்கம் உள்ளது. அந்த நடவடிக்கைகளை தளர்த்தினால் எழுச்சி வளரக்கூடும், ஒடுக்கினால் மக்களது
ஆதரவை இழக்கின்ற ஆபத்து ஏற்படும்'' என்று கூறுயுள்ளது.
இந்த விளக்கமே மிகுந்த உண்மையற்ற மோசடியாகும், இதை டைம்ஸ்
நன்றாகவே அறிந்துள்ளது. அமெரிக்கா, பொதுமக்கள் மீது குறிவைத்து படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை
வாஷிங்டனும் அதன் கைக்கூலி அரசாங்கமும் மக்களது ஆதரவை இழந்துவிட்டது மக்களால் வெறுத்து ஒதுக்கப்படுகிறது
என்பதை காட்டுகிறது. ''மக்கள் ஆதரவை இழந்துவிடும் ஆபத்து பற்றிய பேச்சு'' அமெரிக்காவின் கட்டுக்கதையான,
'ஒரு சிறிய பாத்திஸ்ட் ''தீவிரவாத குழுவினர்களும்,'' வெளிநாட்டு பயங்கரவாதிகளும் இத்தகைய எதிர்ப்புக்களில்
ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை இன்னும் நிலைநாட்ட விரும்பும் முயற்சிதான். அதே போன்று ஈராக்கில் அமெரிக்க
''ஜனநாயகத்தை'' நிலைநாட்டும் என்ற கூற்றும் அபத்தமானது.
உண்மையிலேயே அமெரிக்க ஊடகங்களின் பொய் தகவல் வழங்கும் நடவடிக்கைகள் அமெரிக்க
ஜனநாயகம் சிதைந்துவிட்டதை மிகத்தெளிவாகவும், முக்கியத்துவம் மிக்கவகையிலும் எடுத்துக்காட்டுகின்றன. |