World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

The ideology and politics of the Australian Greens

ஆஸ்திரேலிய பசுமைக் கட்சியினரின் கருத்தியலும் அரசியலும்

பகுதி 1 | பகுதி 2

By Nick Beams, SEP candidate for the Senate in NSW
17 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

இது, ஆஸ்திரேலிய பசுமை கட்சியினரை பற்றிய இருகட்டுரைத் தொடரின் இரண்டாம் பகுதியாகும்.

பசுமை கட்சியினர் முதலாளித்துவ முறையை பாதுகாப்பது இரண்டு பெரிய கட்சிகளின் அரசாங்கங்களை உறுதிப்படுத்தும் விருப்பத்தை விடக் கூடுதலாக உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. அதாவது எல்லாவற்றிற்கும் மேலாக அது தத்துவார்த்த மட்டத்தில் நிகழ்கின்றது. இங்கு, இடது நோக்கிய அரசியல் இயக்கம் எதுவும், குறிப்பாக இளைஞர்கள் இடையே ஒரு மட்டத்தைவிட கூடுதலாக சென்றுவிடாது, அதாவது, சமுதாயத்தை சோசலிச மாற்றத்திற்குட்படும் ஒரு முன்னோக்கு தொடர்பாகவும் மற்றும் மார்க்சிசம் தொடர்பாகவும் கவனமான ஆய்வு இடம்பெறக்கூடாது என்ற நோக்கத்திற்காக பசுமைகள் இயங்குகின்றனர். அவர்களுடைய வெகு சுருக்கமான வரலாற்றுப் பின்னணி நிரூபிப்பதுபோல், பசுமைகள் அத்தகைய முன்னோக்கிற்கு எதிரானவகையில் உருவாக்கப்பட்டவர்களாவர்.

1960 களின் நடுப்பகுதியில் இருந்து 1970 களின் முதல் ஆண்டுகள் வரை படர்ந்திருந்த அரசியல் தீவிரப்போக்கின் இறுதி பெரும் காலகட்டத்திற்கு பின்புதான் பசுமைகளுடைய அரசியல் தத்துவார்த்த சிந்தனை உருவாக்கப்பட்டது.

உழைக்கும் மக்களின் சர்வதேச இயக்கம், உதாரணத்திற்கு 1968ல் மே-ஜூன் மாதங்களில் நடந்த பிரெஞ்சுப் பொது வேலைநிறுத்தம், 1969 சூடான இலையுதிர்காலத்தில் இத்தாலிப் போராட்டம், பிரிட்டனில் டோரி அரசாங்கத்திற்கெதிரான பாரிய போராட்டங்கள், 1970-73 காலத்தில் சிலியில் எழுச்சியுற்ற புரட்சி நிலை போன்றவை, அவற்றின் தலைமைகளின் காட்டிக் கொடுப்பினாலும், சமூக ஜனநாயக, தொழிற்கட்சிகளினாலும், பல நாடுகளில் இருந்த கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிக் கொடுப்பினாலும் பின் தள்ளப்பட்டு தோல்வியில் முடிவடைந்தன.

இந்த தலைமையினர், சோசலிசம், மார்க்சிசம் இவற்றிற்கு ஆதரவு என்ற பிரகடனத்தை கூறிக்கொண்ட பலவித மத்தியதரவர்க்க தீவிரவாத போக்குகளினால் உதவியும், ஆதரவும் வழங்கப்பட்டு, சோசலிசத்தினதும் மார்க்சிசத்தினதும் அடிப்படைக் கொள்கையான உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிராகரித்தனர். மாறாக, அவை தேசிய நபர்களான காஸ்டரோ, மாவோ, சே குவாரா ஆகியவர்களின் புரட்சிகர திறமை என்று கூறப்பட்டதை புகழ்ந்துரைத்தனர்.

உழைக்கும் வர்க்கம் அடைந்த பாரிய தோல்விகள் அனைத்திற்கும் பாரிய விலையை செலுத்தவேண்டியிருந்தது. இது தத்துவார்த்த துறையிலும் குறைந்ததாக இருக்கவில்லை. 1968-75 ல் எழுச்சியின் தோல்வியை அடுத்து இருந்த முதலாளித்துவ மறுஉறுதிப்பாடு விதிவிலக்கானதல்ல. ஏமாற்றம் அடைந்த அறிவுஜிவிகள், ஊக்கமற்றிருந்த முற்போக்கு கருத்தாளர்கள் அனைவரும் புதிய கோட்பாடுகளை "அடையாள அரசியல்", (Identity politics) "பின்நவீன கருத்துக்கள்'' (Post-modernism) என்ற பெயரில் வளர்த்து, முதலாளித்துவ உற்பத்தி முறையில் இருந்த வரலாற்று முரண்பாடுகளை ஆராய்வதை "அடிப்படைவாதம்" என்று நிராகரித்தனர். இதன்மூலம் மார்க்சிசம் தாக்குதலுக்குள்ளானது. பசுமைகளின் இயக்கத்தின் தத்துவார்த்தமும் இப்போக்கின் ஒரு பகுதியாக தான் இருந்தது.

பசுமைகளுடைய நோக்கின்படி, உலகச் சமுதாயத்தின் பெருகிய நெருக்கடி, முதலாளித்துவத்தின் சமூக உறவுகளினலோ, தனியார் உடைமை, இலாப முறை இவற்றை அடிப்படையாக கொண்டிருந்ததில் இருந்து வெளிப்படாமல் இன்னும் அடிப்படையான இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் இடையே உள்ள உறவில் இருந்து தோன்றியது எனப்படுகிறது. அவர்களின் கருத்தின்படி மாசுபடிதலும், இயற்கைச் சுற்றுச்சூழல் இலாபமுறையினால் இல்லாமல் தொழில்நுட்பத்தினால் தோன்றுபவை. இதன் விளைவாக, மனித குலத்தின் அறிவியல், உற்பத்திதிறன் வளர்ச்சிகளை வலியுறுத்திய மார்க்சிசம், ஒரு உயர்ந்த வகையில் ஆன சமுதாய அமைப்பிற்கான சடத்துவ அஸ்திவாரத்தை தோற்றுவித்து, அதன் மூலம் உண்மையான மனித சுதந்திரம் அடைதல் என்பது சிக்கலின் ஒரு பகுதி எனக் கூறப்பட்டது. அது சுற்றுசூழல் பற்றிய பிரச்சினைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று வலியுறுத்திய பசுமைகள், அவை வர்க்கப் போராட்டத்தை விட மிக அடிப்படையானவை என்று கூறுகின்றனர்.

தேசிய செய்திக் கூட்டத்தில் (National Press Club) பிரெளன் ஆற்றிய உரையில் இந்த நிலைப்பாடுகள் வெளியாயின. துணைப் பிரதம மந்திரி ஜோன் ஆண்டர்சன் இவரைப் பற்றி "ஒரு கம்யூனிஸ்ட்" என்று கூறியதற்கும் அவ்வார்த்தையின் அர்த்தத்துடன் உடன்படுகின்றாரா என்ற கேள்விக்கு, தங்கள் வாழ்வு முழுவதும் கம்யூனிஸ்டுகளாக இருந்த சில அரிய மக்களைத் தாம் அறிந்துள்ளதாகவும், அந்தச் சிந்தனை, சமூக அளவில் பங்கிட்டுக்கொள்ளுதல் என்ற அடிப்படையில் இருந்தல் என்பது சிறந்ததொன்றாகும் என பிரெளன் விடையளித்தார்.

"என்னை ஒரு சமூகஜனநாயகவாதி என்று அழையுங்கள். ஏனெனில் ...கடந்த காலத்தின் சிந்தனையை சர்வாதிகாரமும், இரக்கமற்ற தன்மையும் இகழ்விற்கு உட்படுத்திவிட்டன. ஆனால் உண்மையில், கடந்த காலம் பற்றிய இச்சிந்தனைகளைவிட நாம் வேறு ஏதேனும் முயற்சியில் ஈடுபடலாம். பசுமைகள் என்றும் ஒரு புதிய மனிதாபிமான அல்லது சுற்றுச் சூழல் பற்றிய வருங்காலத்தை தோற்றுவிக்க விரும்புகின்றார்கள். கார்ல் மார்க்சின் எழுத்துக்களில் சுற்றுப்புறச்சூழல் உயர்ந்த இடத்தைக் கொண்டிருக்கவில்லை; நான் அவற்றைப் படித்ததில்லை, ஆனால் அதிகம் கூறப்படவில்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாம் இப்பொழுது வேறு உலகில் இருக்கிறோம். அதிலிருந்து நாம் நகர வேண்டும்."

பிரெளன் ஒரு வைத்திய அறிஞராவார். இத்துறையில் எவரேனும் அறியாமையில் இருந்தால், அவர் உறுதியாகப் பாம்பு எண்ணையை விற்கும் போலி என்று உதறித் தள்ளி இருப்பார். ஆனால் அரசியல் துறையில், இவர் சரியாக அத்தகைய வகையைத்தான் கையாள்கிறார்.

மார்க்சும், ஏங்கல்சும் சுற்றுச்சூழல் பற்றி புரிந்துகொள்ளவோ, ஆர்வத்தையோ காட்டவில்லை என்ற கூற்றும், மனிதகுலம் இயற்கையின் மற்ற பிரிவுகளைப் பற்றிய உறவைப் பற்றி அக்கறை காட்டவில்லை என்ற கூற்றும், அவர்கள் எழுதியுள்ளதை படித்தால் எளிதில் தள்ளிவிட இயலும். அவர்களைப் பொறுத்தவரையில் எதிர்கால சந்ததியினரின் உலகத்தை பாதுகாப்பது என்பது உடைமை உரிமைப் பிரச்சினையில் இருந்து பிரிக்கவே முடியாததாக இருந்தது.

1844ம் ஆண்டு, இளம்வயதினரான ஏங்கல்ஸ் நிலத்தைப் "பங்கு போட்டு உரிமை கொள்ளுதலை"க் கண்டித்து, அது "நம் அனைவருடையது, நாம் வாழ்வதற்கு முதற் பொருள்" என்று குறிப்பிட்டு, நிலத்தை சிலர் ஏகபோக உரிமையாக்குதலும், தங்கள் இடத்தில் இருந்து அவர்களுடைய வாழ்விற்கு தேவை என்ற நிலையிலுள்ள மற்றவர்களை "ஒதுக்கிவிடுதலும்" அறநெறி பிறழ்ந்தது என்று கூறியுள்ளார்.

தன்னுடைய கடைசி பெரிய படைப்புக்கள் ஒன்றில், முதிர்ச்சி அடைந்திருந்த ஏங்கல்ஸ், விலங்கினங்கள் சுற்றுச் சூழலை வெறுமே பயன்படுத்தும் நிலையில் இருக்கும்போது, மனிதன் அதை மாற்றி, அதன் மீது கட்டுப்பாடு கொண்ட முறையில், அதிலுள்ள முரண்பாடுகளை ஆராய்ந்து கூறியிருக்கிறார்.

"இயற்கை மீது மனிதகுலம் அடைந்துள்ள வெற்றிகளைக் கண்டு நாம் ஒன்றும் தற்புகழ்ச்சி கொள்ளவேண்டிய தேவையில்லை. அத்தகைய ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஆரம்பத்தில் நாம் எதிர்பார்த்த விளைவுகளைத்தான் ஒவ்வொரு வெற்றியும் கொண்டு வந்துள்ளது என்பது உண்மைதான்; ஆனால் இரண்டாவது, மூன்றாவது வெற்றிகள் முற்றிலும் மாறுபாட்டைக் கொண்டு, எதிர்பாராத விளைவுகளைக் கொடுத்து, ஆரம்பத்தில் பெற்றிருந்த வெற்றியையும் அழித்து விடுகின்றன. ...இவ்வாறு ஒரு வெற்றியாளர் வெளிநாட்டு மக்கள்மீது கொண்ட வெற்றியில் களித்து நிற்பது போல், இயற்கைமீது கொண்ட வெற்றியில், அதில் இருந்து தனித்து நின்று காணமுடியாது என்பதை ஒவ்வொரு தப்பின் அடியிலும் காணக்கூடும். ஆனால், நாம் சதை, குருதி, மூளை இவற்றுடன் இயற்கைக்கு சொந்தமாகவுள்ளோம், அதனிடையே வாழ்கிறோம், அதன்மீது நம் வெற்றி என்பது நாங்கள் மற்ற உயிரினங்களைவிட அதன் விதிகளைப் புரிந்து கொண்டு அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தும் முன்னுரிமையை கொண்டுள்ளோம் என்பதாகும்." [Engels, The Dialectics of Nature, p.180]

இன்று மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவில் மையப் பிரச்சினையே, தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் இயற்கையை மனிதன் மாற்றுகிறான் என்பது அல்ல; அது மனித வாழ்வின் அடிப்படை நிலை; மாறாக, சுற்றுச்சூழல் நெருக்கடியின் வேர்கள், இயற்கையின் விதிகளை சரியான முறையில் இத்தொழில்நுட்பத்தில் பயன்படுத்த முடியாதுள்ளது என்பதுதான்; ஏனெனில் உற்பத்திமுறைமீதான தனியார் உரிமையில் இருந்து எழும் முதலாளித்துவ முறையின் இலாபக்குவிப்பு முறையின் தவிர்க்கமுடியாத தர்க்கவியல் சூழ்நிலை இதனை செய்யவிடாதுள்ளது.

"மூலதனம்" நூலில் மார்க்ஸ் விளக்கினார்: "முதலாளித்துவ முறையின் விவசாயத்தில் அனைத்து வெற்றிகளும், தொழிலாளரை மட்டும் கொள்ளையடிக்கும் கலையில் ஒரு வெற்றி என்று மட்டும் இல்லாமல், மண்ணை கொள்ளையடிப்பதுமாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மண்ணின் வளத்தை பெருக்குவதற்கான சகல வெற்றிகளும் அச்செழிப்பின் நீண்டகால ஆதாரத்தை அழிப்பது என்பதற்கு ஒப்பாகும். தன்னுடைய வளர்ச்சிப் பின்னணியில் ஒரு நாடு, அமெரிக்கா போல், பெரிய முறையில் விரைவாக தொழில்துறை வளர்ச்சியைக் காண விழையுமேயாகில், இன்னும் விரைவான வகையில் அதன் அழிவு ஏற்பட்டு விடும். அதனால், உற்பத்தியின் சமூக போக்கின் அளவையும் அதற்கானதான தொழில்நுட்பத்தை மட்டும் அபிவிருத்திசெய்யும் முதலாளித்துவ உற்பத்தி முறை, ஒரே நேரத்தில் அனைத்துச் செல்வத்திற்கும் ஆதாரமாக இருக்கும் மண்ணையும், தொழிலாளரையும் இல்லாதொழிக்கும்." [Capital, Volume I, Penguin Edition, p.638]

அரசியல் காட்சியில் பசுமைகள் தோன்றுவதற்கு நீண்ட காலம் முன்னரே, "சுற்றுச்சூழல்" என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுவதற்கு முன்பே, மார்க்ஸ் இயற்கையிடம் மனிதன் கொள்ள வேண்டிய தொடர்பு பகுத்தறிவுக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் அதை ஒட்டி தனியார் உடைமை அகற்றப்படவேண்டும் என்றும் விளக்கியிருந்தார்.

"ஒரு உயர்ந்த சமூக பொருளாதார அமைப்பின் பார்வையில், நிலத்தின் மீதான ஒரு சிலரின் தனி உரிமை என்பது மற்றவர்களை ஒருவன் தனி உடைமையாகக் கருதுவதில் உள்ள மடமைக்கு ஒப்பானதாக தோன்றும். ஒரு முழு சமுதாயம், ஒரு நாடு, அல்லது அனைத்து இருக்கும் சமூகங்களையும் ஒன்றாகக் கொண்டாலும், அவர்கள் நிலத்தின் சொந்தக்காராக முடியாது. அவர்கள் அதன் தற்காலிக உடமையாளராக, அதிலிருந்து இலாபத்தை பெறுபவராகவும், மற்றும் எதிர்கால சந்ததிக்கு ஒரு முன்னேற்றமடைந்த நிலைமையில் விட்டுசெல்லவேண்டியுள்ள, ஒரு இல்லத்தில் நல்ல தலைமைகள் போலுள்ளனர்." [Capital, Volume III, p.911]

அறியாமையில் பிரெளன் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு மாறாக, மிக நவீன எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களில் மத்தியில் மார்க்ஸ் உள்ளார்; ஏனென்றால் அவர் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திவரும் உபரிமதிப்பின் குவிதலை அடிப்படையாகக் கொண்டிருந்த முதலாளித்துவ சமுதாயத்தின் இயக்கவிதியை கண்டுபிடித்திருந்தார்.

இயற்கை வளங்களை பறித்துக் கொள்ளுவதற்காக வெடித்திருந்த ஏகாதிபத்தியப் போர்கள்; பெரு வங்கிகள், நிதிய அமைப்புக்கள் கட்டளையின் பேரில் "கட்டுமான மாற்றுதல்" திட்டங்களின் வளைவாக பரந்த மக்கட்தொகுப்பை பொருளாதார அழிவிற்கு உட்படுத்துதல், உழைக்கும் வர்க்கத்தின் சமூக நிலைமீதான ஆழ்ந்த தாக்குதல்கள், விளைவுகளை பற்றிக் கவலைப்படாமல் இயற்கைச் சூழலை தொடர்ந்து சூறையாடுதல், இவை அனைத்தும் இந்த விதிகளின்படி அறிந்து கொள்ளமுடியும்; முதலாளித்துவ முறையின் உற்பத்தி முறை எவ்வாறு தீர்க்க இயலாத முரண்பாடுகளைக் கொண்டு இவற்றிற்கு இடமளித்துள்ளது என்பதையும் அறிந்துகொள்லாம்.

இன்று, மூலதன ஓநாயின் பெருந்தீனிக்கான உந்துதல் புதிய உபரிமதிப்பிற்காக அலையும் தன்மை மனிதகுலத்திற்கே பெரும் அபாயத்தை தோற்றுவித்துள்ளது. இதன் விளைவாக, அரசியல் சிந்தனை உண்மையில் பாதுகாப்பான வருங்காலத்திற்கு வழிவகை செய்யவேண்டும் என்றால், மார்க்சின் சிந்தனையை விட்டு அகலுவோம் என்று பிரெளன் வாதிடுவதற்குப் பதிலாக அவர் கண்டிருந்த தத்துவார்த்த வெற்றிகளை பற்றிக்கொண்டு அதன்மீது கட்டியெழுப்பவேண்டும்.

இந்தக் கருத்துத்தான், சர்வதேச உழைக்கும் வர்க்கத்திற்கு வழிகாட்டும் முன்னோக்கை கொண்டுள்ள மார்க்சிசத்தை மறுபடியும் நிறுவும் போராட்டத்தில் அடங்கியுள்ள நிலைப்பாடுதான், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, மற்றும் உலக சோசலிச வலைத் தளம் இவற்றின் பணிகளை உயிரூட்டமானதாக்குகின்றது. 2004ம் ஆண்டு ஆஸ்திரேலிய தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி மேற்கொண்டுள்ள பிரச்சாரத்திற்கும் இதுதான் அடித்தளமாக உள்ளது.

Top of page