World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காAmerica's oligarchy in the mirror of the debacle in Iraq ஈராக் பேரிடர் எதிரொலிப்பில் அமெரிக்க ஒருசிலவர் ஆட்சி By Bill Van Auken பெருகிவரும் வன்முறைகளும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அமெரிக்க இராணுவ தலைமையகத்தாலும் புஷ் நிர்வாகத்தின் தலைமை அதிகாரிகளாலும் வெளியிடப்பட்டுவரும் பல்வேறு அறிக்கைகளும் அமெரிக்க ஜனாதிபதியும், அவரது பாக்தாத் பொம்மையாட்சியின், இடைக்கால பிரதமர் இயாத் அல்லாவியும், ஈராக் ஜனநாயகத்தை, விடுதலையை மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று கூறிவருவதை பொய்யாக்கி வருகின்றன. அல்லாவி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கிளிப்பிள்ளைபோல் புஷ் நிர்வாகம் கூறிவரும் ''படிப்படியான முன்னேற்றம்'' என்ற அறிக்கைக்கு பின்னர் சில நாட்கள் கழித்து, தனியார் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் ஒருவர் தயாரித்த ஒரு அறிக்கையில் கடந்த 30- நாட்களில் மட்டுமே அமெரிக்க ஆக்கிரமிப்புப்படைகள் ஈராக்கியர்களின் 2,300-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறது. சென்ற மார்ச்சில் பதிவு செய்யப்பட்ட தாக்குதல்களை விட ஏறத்தாழ நான்கு மடங்கு அதிகமான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன, நாட்டிலுள்ள மக்கள் நிறைய வாழ்கின்ற பகுதிகள் ஒவ்வொன்றிலும் நடைபெற்றுள்ளன என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சென்ற ஞாயிறன்று தொலைக்காட்சி செய்தியில் ஈராக்கில் நடைபெற்றுவருகின்ற சண்டை குறித்து கேட்கப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவல் ''நாங்கள் தீவிரமான கிளர்ச்சியை எதிர்த்து போரிட்டுவருகிறோம்..... ஆம் அது மோசமடைந்து கொண்டுவருகிறது'' என ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரமாதி, சமாரா மற்றும் பல்லூஜா நகர்களை திரும்பக் கைப்பற்றுவதற்கு பெரிய புதிய தாக்குதல்களுக்கு அமெரிக்க இராணுவம் தயாராகி வருவதாக அவர் கோடிட்டுக்காட்டினார். ஜனவரியில் தேர்தல்கள் நடைபெறும் என்று மிகுந்த நம்பிக்கையோடு தெரிவிக்கப்படும் ஊகங்களும் மறுக்கப்பட்டு வருகின்றன. மத்திய கிழக்கில் வாஷிங்டனின் மிக மோசமான கொத்தடிமை நண்பர்களில் ஒருவரான ஜோர்தான் மன்னர் அப்துல்லா பிரெஞ்சு செய்திப்பத்திரிகை Le Figaro- விற்கு அளித்த பேட்டியில் ''இன்று நாம் பார்க்கின்ற குழப்பத்தில் தகராறுக்கு இடமில்லாத தேர்தலை நடத்துவது இயலாத காரியம்'' என்று குறிப்பிட்டார். அத்தகைய சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடந்தாலும், ''தீவிரவாதிகள்தான்'' வெற்ற பெறக்கூடும் என்றும் அவர் ஊகத்தை வெளியிட்டிருக்கிறார். அமெரிக்க இராணுவ மத்திய தலைமைத் தளபதியான ஜெனரல் John Abi Zaid அமெரிக்க செனட் சபை குழுவில் ''இந்த தேர்தல்களை சண்டைக்கு நடுவில்தான் நாம் நடத்தியாக வேண்டும். இப்போது தொடங்கி தேர்தல் நடக்கும்வரை ஏராளமான வன்முறைகள் நடக்கும்'' என்று குறிப்பிட்டார். இதற்கிடையில் நாட்டின் கால்பகுதிவரை தேர்தல் நடத்தமுடியாத அளவிற்கு வன்முறை ஏற்படுமானால் ''அது இருக்கட்டும், நாம் இதர பகுதிகளில் தேர்தல் நடத்தி ஆகவேண்டும் வாழ்க்கை என்பது தவறே இல்லாதது அல்ல, எல்லாமே சரியாக நடப்பதில்லை" என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ் பீல்ட் குறிப்பிட்டார். உண்மையிலேயே அது அப்படியல்ல! அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய மாநிலங்களான -கலிபோர்னியா, டெக்ஸாஸ் மற்றும் நியூயோர்க்கை, நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இருந்து நீக்கிவிடுவது போன்றதாகும். புஷ் நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்வது தேர்தல் பற்றிய அதன் தெளிவான நிலையை உறுதிப்படுத்துகிறது: அந்தத் தேர்தல் மோசடியானது அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள பொம்மையாட்சியை உறுதிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டது. ஈராக்கில் நடைபெற்று வருகிற கிளர்ச்சி புஷ்ஷும், அல்லாவியும், கூறிவருவதைப்போல் வெளிநாட்டுப் போராளிகள் கூட்டம் கூட்டமாக அந்த நாட்டில் குவிவதை அமெரிக்கத் துருப்புக்கள் எதிர்கொண்டுவரும் கிளர்ச்சியல்ல, பூகோள ரீதியான, "பயங்கரவாதத்திற்கெதிரான போரில்" ஈராக்கில் நடைபெறும் போராட்டம் முன்னணி நிகழ்வு அல்ல என்று அமெரிக்க இராணுவ கொமாண்டர்கள் மறுத்திருக்கின்றனர். அமெரிக்க இராணுவத் தலைமை அதிகாரிகள் தருகின்ற தகவலின்படி அமெரிக்கத்துருப்புக்கள் உள்நாட்டு எதிர்ப்பு இயக்கத்தை எதிர்கொண்டுள்ளன. ஈராக்கில் வெளிநாட்டு போராளிகள் எண்ணிக்கை 1000-திற்கும் குறைவுதான் என்று ஜெனரல் Abi Zaid கூறுகிறார். பென்டகனின் மிதமான மதிப்பீடுகளின்படி செயலூக்கமான எதிர்ப்பினர் எண்ணிக்கை 20,000 தான். ''இவர்கள் எல்லையைத் தாண்டி உள்ளே நுழைந்து வன்முறை அனைத்தையும் தூண்டுவதாக அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் அப்படி நினைக்கவில்லை.'' என்று ஒரு மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்-ற்கு தெரிவித்தார். ''பிரதான அச்சுறுத்தல் என்ன? அது உள்நாட்டில் இருந்துதான் வருகிறது." சதாம் ஹூசேன் ஆட்சியை கவிழ்த்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு பன்மடங்கு பெருகியுள்ளது. இந்த ''உள்நாட்டு அச்சுறுத்தல்'' இந்தளவிற்கு வெடித்துச் சிதறும் அளவிற்கு வளர்ந்தது எப்படி என்பதை எவ்வாறு விளக்குவது? ஒரு குறிப்பிட்ட குறுகிய கால எல்லைக்குள் பெரும்பாலான ஈராக் மக்களை தனக்கெதிராக வாஷிங்டன் திருப்பிவிட்டிருக்கிறது. அமெரிக்காவிற்கெதிராக ஆயுதங்களை தாங்கி போரிடுபவர்கள் எண்ணிக்கை மட்டும் பெருகிவிடவில்லை. அமெரிக்க அதிகாரிகளோடு ஒத்துழைப்பதை வெறுத்து ஒதுக்குகின்ற மக்களில் பெரும்பாலோர் அந்த ஆயுதந்தாங்கிய போராளிகளின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இப்படி பெருகிவரும் பேரழிவிற்கு இறுதித்தீர்வு ஈராக் பாதுகாப்புப்படைகளை பயிற்றுவிக்கும் முயற்சிகள்தான் என்று கூட கூறப்பட்டது. அந்த முயற்சிகள் அடிப்படையிலேயே சீர்குலைந்து நிற்கின்றது. ஏனென்றால் ஆயுதந்தாங்கிய பலர் பயிற்றுவிக்கப்பட்டாலும், அவர்கள் இரகசியமாக போராளிகளுக்கு அனுதாபம் தெரிவிப்பவர்கள், பல சந்தர்ப்பங்களில் தீவிரமாக போராளிகளோடு ஒத்துழைப்பவர்கள், சென்ற வாரம் அமெரிக்க அதிகாரிகள் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும், ஈராக் தேசிய காவலர் படையின் மூத்த தளபதி ஒருவரை கைதுசெய்தனர். ''தெரிந்த கிளர்ச்சிக்காரர்களோடு'' அவர் தொடர்பு கொண்டிருந்தார், என்று குற்றம் சாட்டினர். ஈராக்கில் வன்முறைகள் வெடித்துச்சிதறிக் கொண்டிருப்பது, ஒரு சிறிய சிறுபான்மை குழுவினரால்தான், அவர்கள் முன்னாள் பாத்திஸ்ட் ஆட்சிமீது அனுதாபம் கொண்டவர்கள் - அவர்களின் தளகர்த்தர்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது அமெரிக்கப் படைகளால் பிடிக்கப்பட்டிருக்கின்றனர் - அல்லது, இஸ்லாமிய வெறி உணர்வால் அல்லது கிரிமினல் குற்ற நோக்கோடு அந்த உந்துதலால் செயல்பட்டு வருவதாக அமெரிக்கப் பொதுமக்களுக்கு இடைவிடாது உறுதி தரப்பட்டு வருகிறது. துணை ஜனாதிபதி செனியின் வார்த்தைகளில் சொல்வதென்றால் அமெரிக்கப்படைகளை எதிர்த்துப் போரிடுபவர்கள் ''நாகரீக உலகின் எதிரிகள்.'' ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் புதன்கிழமையன்று தந்திருக்கின்ற ஒரு செய்தியில், ''நாகரீக உலகத்தின் மீது'' நிலவுகின்ற இந்த பகை உணர்விற்கு மாறுபட்ட விளக்கத்தை தந்திருக்கிறது. ''கடுமையான இராணுவ தந்திர நடவடிக்கைகள் அமெரிக்கத் துருப்புக்கள் மீது பகை உணர்விற்கு தூபம் போட்டிருக்கிறது மற்றும் கிளர்ச்சியாளர்களின் அணியை ஊக்குவித்திருக்கிறது'' அந்தச் செய்தி பல்லூஜா வாசியான Abu-Ghmen Awuud பேட்டியை மேற்கோள் தந்திருக்கிறது. அந்த நகரத்தின் மீது நடைபெறும் தினசரி அமெரிக்க விமானப்படை தாக்குதல்களில் ஒரு நாள் அவரது மனைவியும், ஐந்து குழந்தைகளும் கொல்லப்பட்டனர். அவரது குடும்பம் முழுவதும் கொல்லப்பட்டதற்காக ரொக்க இழப்பீடு தர முன்வந்த ஒரு அமெரிக்க அதிகாரியிடம் ''இதுதான் உங்களது நாகரீகத்தின் தார்மீக முடிவா? உங்களது இந்தப் பணம் எனது குடும்பத்தை, நான் இழந்திருப்பதை எப்படி ஈடுகட்டமுடியும்? ஈராக்கிலுள்ள, உங்கள் அனைவரையும் கடவுள்' கொன்று குவிக்கும் இழப்பீட்டிற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்'' என்று கூறினார். இந்த வார்த்தைகள் ஈராக் முழுவதிலும் பரவிவிட்ட உணர்வுகளை சித்தரித்துக்காட்டுகின்றன. அமெரிக்க இராணுவ டாங்கிகள், கனரக ஆயுதங்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்களை மக்கள் நிறைந்து வாழ்கின்ற பாக்தாத்தில் சதர் நகத்திலிருந்து நஜாப் வரை, பல்லூஜா மற்றும் பிற இடங்கள்வரை தாக்குதல் நடத்திவருவதற்கு ஈராக் மக்களிடம் கடுமையான பகை உணர்வு வளர்ந்திருக்கிறது. தங்களது குடும்பங்களைச் சார்ந்தவர்களது உடல்களை நல்லடக்கம் செய்தவர்கள், எரிந்த நிலையில் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளை ஏற்கெனவே நிரம்பிவழியும் மருத்துவமனைக்கு தூக்கிச்செல்பவர்கள் வாஷிங்டன் தருகின்ற ''நாகரீகத்தை" புறக்கணித்து நிற்பதற்கு சரியான காரணங்கள் உள்ளன. மேலும் பல்லாயிரக்கணக்கானோர் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தங்களது குடும்பத்தினர், கண்முன்னால் இழிவுபடுத்தப்படுகின்றனர். அபு கிரைப் போன்ற மிக மோசமான சிறை முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அவர்களில் பலர் சித்தரவதை செய்யப்படுகின்றனர், தாக்குதல்கள் மற்றும் கற்பழிப்பிற்கு இலக்காகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் மிகப்பெரும்பாலோர் அமெரிக்க இராணுவ ரோந்து படைகளுக்கு குறுக்கே வந்தவர்கள் என்பதைத்தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை இராணுவத் தளபதிகள் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ''நாங்கள் சுதந்திரத்தோடு செழிப்பாக வாழ முடியும் என்ற நம்பிக்கைகளில் அமெரிக்கப்படைகள் எங்கள் நாட்டுக்கு வந்ததை ஆதரித்தேன். அமெரிக்கர்களை வரவேற்றதற்காக எனது வாழ்நாளில் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது நான் வருந்துகிறேன்" என்று நான்கு மாதங்கள் அபு கிறைப் சிறைச்சாலையில் இருந்துவிட்டு விடுதலை செய்யப்பட்ட ஒருவர் ராய்டர்ஸ் -இடம் தெரிவித்தார். அபு கிறைப் சிறைச்சாலையில் நடைபெற்ற சித்தரவதை மற்றும் பாலியல் முறைகேடு பற்றிய மறைமுகப்புகைப்படங்கள் ஈராக் மீது அமெரிக்கப் படையெடுப்பு விட்டுச்செல்லும் நிரந்தர பாரம்பரியமாக என்றைக்கும் விளங்கிக்கொண்டேயிருக்கும். அந்தப் புகைப்படங்கள் நிரந்தர தன்மை கொண்டவை, ஏனெனில் அவை ஒரு சிறைக் கொட்டடியில் அல்லது முகாமில் நடைபெற்ற கொடுமைகளை மட்டும் சித்தரிக்கவில்லை. ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த காலனியாதிக்க சட்டவிரோத போர் முழுவதிலும் நீக்கமற நிறைந்திருப்பது இந்தக் கொடூரத்தன்மையும் பிற்போக்குத்தனமும், இனவெறியும் தான் மற்றும் அவை ஆயுதந்தாங்கிய எதிர்ப்புப்போரை உருவாக்கிவிட்டன. அந்த நாட்டிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் அனைவரும் வெளியேறுகிறவரை, இந்த எதிர்ப்பு ஒயாது. பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி ஈராக்கை வென்றெடுப்பது என்ற முடிவு- மகத்தான லாபங்களை தருகின்ற வாய்ப்புடைய எல்லைப்பிராந்தியங்களை பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதிப்பாட்டின் உந்துதலால் நடைபெற்றது. படையெடுப்பு நடந்த ஆரம்ப நாட்களில் அமெரிக்க அதிகாரிகள் வேண்டுமென்றே பெருமளவில் சூறையாடல்கள் மற்றும் நாசவேலைகள் நடப்பதற்கு அனுமதித்தார்கள், பொருளாதாரத்தின் மீது முந்திய அரசாங்கத்தின் கட்டுக்கோப்புக்களை சீர்குலைப்பதுதான் அந்த நோக்கம், ஈராக்கை "மறுசீரமைத்தல்" என்றயை நிலையான நோக்கம் ஈராக்கின் எண்ணெய் தொழிலை தனியார் மயமாக்கி, அவற்றை அமெரிக்காவிலிருந்து இயங்கிவரும் ராட்சத எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகும். இந்த மூலோபாய வளத்தின்மீது கட்டுப்பாட்டை நிலைநாட்டிக்கொள்வது அமெரிக்க பொருளாதாரத்திற்கு தேவைப்படும் எண்ணெய் வளத்தை பாதுகாப்பாக வழங்குவதற்கு வகைசெய்வது மட்டுமல்லாமல், அதன் உண்மையான மற்றும் எதிர்கால சர்வதேச போட்டியாளர்கள் முன் வாஷிங்டனுக்கு அதிகாரத்தையும் வழங்கும் என்பதால்தான். ஈராக்கியர்களுக்கு இது நன்றாகவே தெரியும், தங்கள் நாட்டைப் பிடித்துக்கொண்டதன் மூலம் அமெரிக்கா உலகின் இரண்டாவது பெரிய பெட்ரோலிய வளங்களுக்கு மேல் அமர்ந்திருக்கிறது இந்த அறிவின் காரணமாக ஈராக் மக்களது எதிர்ப்பு மேலும் தூண்டிவிடப்படுகிறது. என்றாலும் இன்றுவரை அமெரிக்க ஊடகங்கள் இந்த தெளிவான உண்மையை மறுத்துவருகின்றன போருக்கான முதன்மை உந்துதல் இதுதான் என்ற எந்தக் கருத்தையும் ஊடகங்கள் மறுத்து வருகின்றன, தற்காலிகமாக இடையில் வந்த பிரச்சனை அது என்று கூறுகின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியம் கடைப்பிடித்துவருகின்ற புவிசார் மூலோபாய அக்கறைகளை உணர்ந்து கொள்ளாமல் ஈராக்போரின் தன்மை குறித்து எந்த தீவிரமான ஆய்வும் நடத்தமுடியாது. ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் (WMD) இல்லை என்று வாஷிங்டன் நன்கு அறியும் என்ற மட்டத்திற்கு வரை ஈராக் போரில் பேரழிவு ஆயுதங்கள் என்பது ஒரு பிரச்சினையாக இருந்தது மற்றும் அதனுடைய ஏராளமான இயற்கை வளத்தை சூறையாடுகின்ற போரை பாதுகாப்பு எதுவுமற்ற அந்த நாடு தடுத்துநிறுத்திவிட முடியாது என்பது வாஷிங்டனுக்கு நன்றாகவே தெரியும். இந்த ஆக்கிரமிப்புப்போரை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்ளும் அளவில் அவர்களுக்கு பூச்சாண்டி காட்டுவதற்காக பயங்கரவாதம் ஒரு பயனுள்ள சாக்குப்போக்காக பயன்படுத்தப்பட்டது. மத்திய கிழக்கில் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்கான போலி புனிதப்போர் தந்திருப்பதெல்லாம் ஒரு பொம்மை ஆட்சியைத்தான் அந்த ஆட்சிக்கு தலைமை தாங்குவது ஒரு கொலைக்கார குண்டர், பாத்திஸ்டுகளின் முன்னாள் தாக்குதல் தொடுக்கும் நபர் CIA வின் ஏஜெண்டான அல்லாவி ஆவார். புஷ் நிர்வாகம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் ஈராக்கை வென்றெடுப்பதற்கான திட்டம் ஏற்கனவே முன்னேறிய கட்டத்தில் இருந்தது. செப்டம்பர் 11- தாக்குதல்கள் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே, துணை ஜனாதிபதி செனி தனது ரகசிய எரிபொருள் பணிக்குழுவிற்கு கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார். அந்தப் பணிக்குழுவில் நிர்வாகத்தை சேர்ந்த உயர் அதிகாரிகளும், பிரதான அமெரிக்க எரிபொருள் கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகளும் இடம் பெற்றிருந்தனர். நீதிமன்ற கட்டளை மூலம் நிர்வாகத்திலிருந்து பெறப்பட்ட ஆவணங்களில் இந்த பணிக்குழு விவாதித்த முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ஈராக் என்று சுட்டிக்காட்டுகிறது. செனியும் அவரது எண்ணெய் தொழில் முன்னாள் சகாக்களும் ஈராக் எண்ணெய் கிணறுகளின் வரைபடங்களை ஆராய்ந்து தங்களது வெளிநாட்டு போட்டி நிறவனங்களான Royal Dutch/Shell, Total Elf Aquitaine, Lukoil மற்றும் பிறரது திட்டங்களை ஆய்வு செய்தார்கள், இந்த எண்ணெய் கிணறுகளில் துரப்பணப்பணிகளை மேற்கொள்வதற்காக சதாம் ஹூசேன் ஆட்சியிடமிருந்து சலுகைகளை பெறுவதற்கு விவாதிக்கப்பட்டது. அமெரிக்கப் படையெடுப்பின் காரணமாக இந்தத் திட்டங்கள் நிறைவேறும் கட்டத்தை எட்டவில்லை. முதலாவது அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னரே அமெரிக்கா ஈராக்கின் மிக பிரமாண்டமான பெட்ரோலிய வளத்தை பயன்படுத்துவதற்கு தனது சொந்த திட்டங்களை தயாரித்தது. 2003- பெப்ரவரியில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்பு (US-AID) ஈராக்கின் அரசாங்கத்துறையை சார்ந்த குறிப்பாக அரசு நடத்திய எண்ணெய் தொழிலை தனியார்மயமாக்குவதற்கான திட்டத்தைத் தயாரித்து முடித்துவிட்டது. ஈராக் மக்களின் எதிர்ப்புத்தான் இந்த திட்டங்களை முடக்கிவிட்டது. இராணுவ கான்ட்ராக்டர்கள் அமெரிக்காவிற்கு கூலிப்படைகளை வழங்குபவர்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கு பெட்ரோலிய பொருட்களை தந்து கொண்டிருக்கிறார்கள், அதற்கு அப்பால் எந்த அமெரிக்கக் கம்பெனியும் ஈராக்கில் செயல்படுகின்ற துணிவைப் பெறவில்லை. எண்ணெய் துறையை பொறுத்தவரை எண்ணெய் குழாய்கள் மீதும் இதர கட்டுக்கோப்புக்கள் மீதும், கிளர்ச்சிக்காரர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக்கொண்டிருப்பதால் இந்த ஆண்டு இழப்பு ஒரு பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஈராக்கில் இராணுவ ஒப்பந்தக்காரர்கள் மற்றும் மறு சீரமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட பணம் அமெரிக்க கம்பெனிகளுக்கு கிடைத்திருப்பதால் லாபம் வந்திருக்கிறது. ஈராக்கின் சீரமைப்பிற்காக அமெரிக்க நாடாளுமன்றம் ஒராண்டிற்கு முன் 18.4- பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்தது, அதில் சுமார் ஒரு பில்லியன் டாலர்கள் தான் செலவிடப்பட்டிருக்கின்றன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் 30-சதவீதத்திற்கும் குறைந்த தொகைதான் செலவிடப்பட்டது. மீதித்தொகை பாதுகாப்பிற்காக, லாபத்திற்கு மற்றும் அமெரிக்க ஊழியர்களின் ஊதியத்திற்காக வழங்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணகான மில்லியன்கள், மோசடியிலும், நிர்வாக முறைகேடுகளிலும் பாழாகி விட்டன. ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக ஊழல் மற்றும் பணத்தாசையில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு வலதுசாரி சிந்தனைகளையும், கிறிஸ்தவ அடிப்படைவாதத்தையும், சப்பைக்கட்டாக கூறி ஈராக் மக்கள்மீது நடத்தப்பட்டு வரும் கொடுமையை நியாயப்படுத்துவது வாஷிங்டன் மேற்கொண்டுவரும் கொள்கைகள் மலிவான காலனியாதிக்கம் ஆகும், குறுகியகால நோக்குகளையும், நலன்களையும், அடைவதற்கு முற்றிலும் ஈவிரக்கமற்ற கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. இதன் விளைவு பேரழிவு தருவது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக வெற்றிக்களிப்பில் இருந்தாலும் அரசியல் நிர்வாக அமைப்பிற்குள் உற்சாகம் குன்றிய உணர்வு காணப்படுகிறது. ஈராக்கில் தோல்வி ஏற்பட்டுவிட்டதென்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆளும் வட்டாரங்களுக்குள் இந்த உணர்வுகளை பயன்படுத்திக்கொள்ள அண்மை வாரங்களில் கெர்ரி பிரச்சாரம் முயன்றுவருகிறது. புஷ்ஷும் அவருக்குக்கீழ் பணியாற்றுவோரும், திறமைக்குறைவாக இருப்பதால்தான் ஈராக்கில் குழப்பமும், வன்முறையும், பெருகிவருவதாக அவர் கூறுகிறார். அதேவேளை தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் மிகுந்த ஆக்கபூர்வமான போரை வெற்றிகரமாக நடத்துவதாகவும் கெர்ரி கூறுகிறார். ஆனால் இந்த தோல்விக்கான மூலம் ஆழமாக வேரூன்றி உள்ளது. அமெரிக்க ஆளும் ஒருசிலவர் ஆட்சியின் மற்றும் அதன் நடைமுறைகளின் அருவருக்கத்தக்க தன்மை தற்போது எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும், உழைக்கும் மக்கள் மற்றும் அவர்களது உணர்வுகள், மற்றும் பிரச்சனைகளை துச்சமாக மதித்து அமெரிக்காவின் நிதியாதிக்க செல்வந்தத் தட்டினர், இழிவான அளவிற்கு சென்று பொருட்களை குவித்து வருகிறார்கள். என்பதையும் அவர்களது ஆசை வெறியையும், கிரிமினல் குற்றத்தன்மையையும், உள்ளடக்கியதாகத்தான் இந்த ஆக்கிரமிப்பு அமைந்திருக்கிறது. ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கியிருக்கிற பேரழிவு அமெரிக்காவின் ஒட்டுமொத்த சமூகக் கட்டுக்கோப்பில் புரையோடிக் கொண்டிருக்கும் சிதைவை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்க சமூகத்தை புரட்சிகரமான வழியில் மாற்றியமைப்பதற்கான போராட்டத்திற்கு வெளியில் ஈராக் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திவிட முடியாது. இதன் பொருள் என்னவென்றால் இந்த உலகம் முழுவதிலும், செல்வத்தை உருவாக்குகின்ற பில்லியன் கணக்கான மக்களது எதிர்பார்ப்புக்களையும், தேவைகளையும் நிறைவேற்றுவதற்குக் கீழாக லாபநோக்கிற்கும், தனிமனிதன் செல்வக் குவிப்பு நடவடிக்கையை வைக்கும், சமுதாயத்தை சோசலிச அடிப்படையில் மறு ஒழுங்கமைப்பதற்கு போராடும் தங்களது சொந்த சுயாதீன கட்சியில் உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டும் என்பதாகும். |