World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The international crisis of capitalism and the bankruptcy of the "social market economy"

முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடியும் "சமுதாயச் சந்தைப் பொருளாதாரத்தின்" திவாலும்

By Partei für Soziale Gleichheit
5 October 2004

Back to screen version

ஹார்ட்ஸ் IV சட்டங்களுக்கு எதிராக பேர்லின் தேசிய ஆர்ப்பாட்டம் அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றபோது, கீழே பிரசுரிக்கப்பட்டுள்ள கருத்துரை அங்கு விநியோகிக்கப்பட்டது.

ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு (GDR) சரிந்து, பேர்லின் சுவர் தகர்க்கப்பட்டபின், பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர், "முதலாளித்தவத்தின் வெற்றி" என்று அப்பொழுது பறைசாற்றப்பட்ட சேர்ந்திசை முழக்கம் இப்பொழுது அதிகமாகக் கேட்பதில்லை. மாறாக முதலாளித்துவத்தின் பொருளாதார, சமுதாய மற்றும் அரசியல் நெருக்கடிகள் இன்னும் தீவிரமான வடிவங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த சில வாரங்களாக நடைபெற்ற பொதுநலனுக்கு எதிரான ஹார்ட்ஸ் IV நடவடிக்கைகளுக்கு எதிரான, புதுப்பிக்கப்பட்ட எதிர்ப்புக்களும், வாடிக்கையான திங்கட்கிழமை ஆர்ப்பாட்டங்களும் அரசாங்கத்திற்கு தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளப் போதுமான அழுத்தம் கொடுக்கும் என்று எவரேனும் நினைத்திருந்தால், வேறு கருத்தைத்தான் உணர்ந்துள்ளனர். தேர்தல் தோல்விகளோ, எதிர்ப்பு அணிகளோ, ஜேர்மனிய சமுதாய மற்றும் பொதுநலக் கருத்துக்களுக்கான செலவினங்களைக் குறைப்பதற்காக அது கொண்டுள்ள 2010 செயல் பட்டியல், மற்றும் நான்காம் ஹார்ட்ஸ் சட்டங்களில், எந்தவித மாற்றத்தையும் கொள்ளுவதற்கு அரசாங்கத்தை திருப்ப முடியவில்லை. ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) பசுமைக் கட்சி இவற்றின் கூட்டணி அரசாங்கம், கடந்த சில வாரங்களாக முற்றிலும் இவற்றை தெளிவு படுத்தியுள்ளது.

இந்த அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு ஒரு ஒற்றுமையான அணி உள்ளது: இதில் SPD, பசுமைகள் இவற்றில் இருந்து கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் (CDU/CSU), தாராண்மை சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP), வணிக அமைப்புக்கள், வர்த்தகச் சங்கங்கள், திருச்சபைகள், மற்றும் செய்தி ஊடகத்தில் பரந்த பிரிவுகள் அனைத்தும் அடங்கியுள்ளன. ஜேர்மனிய ஜனாதிபதி ஹார்ச்ட் கோஹ்லர் (Horst Köhler) சமீபத்தில், அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட அனைத்து உறுதி மொழிகளுக்கும் முடிவு கட்டி, சமூக சமத்துவமின்மை இனி மறைக்கப்பட மாட்டாது என்றும், ஏற்கப்பட்டுவிட்ட கருத்தாகத்தான் இருக்கும் என்றும் அறிவித்த வகையில், இந்தத் தொகுப்பு முழுவதற்கும் சார்பாகத்தான் அவர் அவ்வாறு உரைத்தார். ஸ்ராலின் காலத்திற்குப் பிந்தைய ஜனநாயக சோசலிசக் கட்சி (PDS) இந்த முன்னணியில் இருந்து தனியே நிற்பது போல் தோன்றும். உண்மையில் இந்தக் கட்சி அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு தன்னுடைய உடன்பாட்டுணர்வை கொடுப்பதாக அறிவித்தாலும், எந்தப் பகுதிகளில் எல்லாம் அரசாங்கத்தில் அது சேர்ந்துள்ளதோ, அங்கெல்லாம் அது ஹார்ட்ஸ் IV சட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்திவருவதுடன், நலன்புரி அரசு என்ற கருத்தை தகர்க்கும் இலக்குடைய மற்ற நடவடிக்கைகளையும் அது செயல்படுத்துகிறது.

தொழிற்சங்கங்களும், பூகோளமயமாக்கல் எதிர்ப்பு இயக்கமான Attac உம் முற்றிலும் சந்தேகத்திற்கு உரிய பங்கைத்தான் கொண்டிருக்கின்றன. இரண்டுமே அரசாங்கத்தை விமர்சித்தாலும், தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மக்களுடைய எதிர்ப்பு மிகக் குறைந்த அரசியல் தன்மை உடையதாக செய்துவிடுகின்றன. இதன் விளைவாக, ஆர்ப்பாட்டங்கள் குவிப்பு இல்லாமல் சிதைவிற்குட்படுகின்றன. ஜேர்மனியின் IG Metall மற்றும் Ver.di trade என்னும் பெரிய தொழிற்சங்கங்கள், ஜேர்மனியின் சான்ஸ்லர் ஷ்ரோடரின் கருத்தான செயற்பட்டியல் 2010, மற்றும் ஹார்ட்ஸ் IV இரண்டிற்கும் மாற்று இல்லை என்பதற்கு உடன்படுவதோடு, இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை திறமையுடன் நாசத்திற்குட்படுத்தவும் இயன்றதைச் செய்துள்ளன.

சமுதாய இழிநிலை மற்றும் சரிவு அன்றாட வாடிக்கையாகவே சீர்குலைந்து வருவதுடன், பெருகிய நிலையின் சீற்றத்திற்கு வழிவகுத்து, அரசியல் சமக் கணக்கை சீராக்கும் தேவையை உருவாக்கியுள்ளன. இவ்விதத்தில், உண்மையை எதிர்நோக்குதல் இன்றியமையாததாகும்.

பூகோளமயமாக்கத்தின் விளைவுகள்

முதலில், தற்போதைய நெருக்கடி தேசிய நாடு, மற்றும் முதலாளித்துவ சமுதாயம் என்ற வடிவமைப்பிற்குள் தீர்க்கப்பட இயலாது என்ற உண்மையை எதிர்கொள்ளுதல் வேண்டும்.

1970களில் சமூக ஜனநாயகக் கட்சி அதிபராக இருந்த, வில்லி பிராண்ட் காலத்திய தொடர்புடைய சீர்திருத்தங்கள் போன்றவற்றில் மறுபடியும் ஈடுபட்டால், சமுதாய வீழ்ச்சி தடுக்கப்படும் என்று கருதினால், அவர் ஒன்றில் முற்றிலும் ஒன்றும் தெரியாதவராக இருக்கவேண்டும் அல்லது வேண்டுமென்றே பொய்கூறுபவராக இருக்கவேண்டும். ஆனால் இதுதான், Oscar Lafontaine (SPD), PDS, Attac இன் "ஆரம்ப பணியும், சமூக நீதியும்" என்று அழைக்கப்படும் கருத்து, மற்ற தொழிற்சங்கங்கள் அனைத்தினாலும் கூட்டாக முன்மொழியப்படும் திட்டவட்டமான அரசியல் மருந்துக் குறிப்பு சீட்டாகும்.

கடந்த முப்பது ஆண்டுகளில் உலகம் அடிப்படையிலேயே மாறியுள்ளது. எழுபதுகளில், பொருளாதார நெருக்கடி, போர்க்குணம் மிக்க தொழிலாளர்கள் போராட்டம் இவற்றைச் சமாளிக்கும் வகையில் ஆளும் வர்க்கம் தேசியக் கட்டுப்பாட்டுகள், சுங்கங்கள், வணிகத் தடைகள் போன்றவற்றை அகற்றி, அதன் விளைவாக குறைவூதிய தொழிலாளர் சந்தைகள், மூலப் பொருட்கள், சர்வதேச நிதிச் சந்தைகள் ஆகிவற்றை அடைவதற்கு எளிதான வாய்ப்புக்களை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், தொழிலாளர்கள் இயக்கங்களுடைய சமுதாய வெற்றிகள், உரிமைகள் இவற்றிற்கெதிரான தொடர்ந்த தாக்குதல்களையும் தொடங்கியது.

உற்பத்தி மற்றும் நிதிச்சந்தைகளின் பூகோளமயமாக்கல் தேசியச் சீர்திருந்தக் கொள்கைகளுக்கான அடிப்படையை அழித்துவிட்டன. இதுதான் சோவியத் ஒன்றியம் மற்றும் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு, ஆகியவை பொறிந்ததற்கு பிரதான காரணமாகும். சோசலிசம் தோற்றுவிடவில்லை, ஸ்ராலினிசம்தான் தோற்றது -- அதாவது ஒரு தேசிய வடிவமைப்பிற்குள் அரசாங்கம் இயக்கும் உற்பத்திமுறையை ஒரு சலுகை பெற்ற அதிகாரத்துவம் நிறுவ முற்பட்ட முயற்சிதான் தோல்வியுற்றது. இந்த நாடுகளின் தனிமைப்பட்டிருந்த பொருளாதாரங்கள் உலகச் சந்தையில் பெருகிவந்த அழுத்தங்களை எதிர்கொள்ள இயலாத நிலையில் இருந்தன. ஒரு சர்வதேச அடிப்படையில்தான் சோசலிச சமுதாயம் அமைக்கப்பட முடியும்.

பூகோளமயமாக்கலானது சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்கங்கள் இவற்றின் சீர்திருத்த மருந்துக்குறிப்புக்களை திவாலாக்கியும் கூட காட்டிவிட்டது. பொருளாதாரப் பிரிவுகளான தகவல் தொழில் நுட்பத்துறை, மோட்டார் தொழிற்துறை, பெருநிறுவனங்களின் கணக்கு, மற்றும் பல பணிவகைகள், குறைந்த செலவுடைய குறைந்த கூலியுழைப்பு உடைய நாடுகளுக்கு மாற்றப்பட முடியும். அப்பகுதியில் உறுதியாக நின்றிருந்த வணிகப் பிரிவுகள்கூட, பூகோளப் போட்டியினால் விளையும் அழுத்தங்களை எதிர் கொள்ளுகின்றன. சில கிலோமீற்றர்கள் தள்ளியிருக்கும், போலந்திலும், செக் குடியரசிலும் அதே வேலை ஜேர்மனிய ஊதிய விகிதத்தில் ஐந்தில் ஒரு பங்கில் முடிக்கப்பட்டுவிடும் என்றால், உயர் ஊதியங்களுக்காக வேலை நிறுத்தம் என்பது பயனற்ற கருவியாகிவிடுகிறது; சீனா, இந்தியா போன்ற நாடுகளின் ஊதியங்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு டாலர்கள்தான் என்று இருக்கின்றன. பொதுப் பணிகளும், பிராந்தியங்கள் மிகக்குறைந்த வரி வரம்பிற்குப் போட்டியிடும்போது, பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றன.

நாட்டின் கிழக்குப் பகுதிக்கு மட்டும் ஹார்ட்ஸ் IV ஒரு பிரச்சினை அல்ல. நீண்டகால வேலையின்மை, சீமென்ஸ், டைம்லெர், ஜெனரல் மோட்டார்ஸ், VW மற்றும் Karstadt/Quelle போன்ற பெரு நிறுவனங்களுக்கும் எதிராகத் தாக்குல்கள் தொடக்கத்தில் உண்மையில் தொடங்கின என்றாலும், இப்பொழுது அவை இத்தாக்குதல்களை ஆழப்படுத்தி, தொழிலாளர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, கிரேட் பிரட்டன் இவற்றோடு ஒப்பிடும்போது, ஜேர்மனியில் இப்பொழுது வந்துள்ள ஊதியங்கள், சமுதாய நலன்கள் ஆகியவற்றின்மீதான தீமை நிறைந்த தாக்குதல்கள் கால தாமதப்பட்டு வந்துள்ளவையாகும்; அதன் விளைவாக அவை இன்னும் கடுமையான வடிவில் வந்துள்ளன. பூகோளமயமாக்கல் வெறும் பிரச்சாரம்தான் என்று எவரேனும் இப்பொழுது கூறினால், அவர் தன்னுடைய தலையை மண்ணிற்குள் புதைத்துக் கொண்டு உண்மையை அறிய மறுக்கிறார் என்பதுதான் பொருள்.

நெருக்கடிக் காலங்களில் எப்பொழுதும் அது எதிர்கொள்ளும் முறையைப் போல்தான் இப்பொழுதும் SPD இந்த மாறுதல்களுக்குத் விடையிறுக்கிறது. ஜேர்மனியில் ஏழைக்கும் பணக்காரருக்கும் இடையே உள்ள வேறுபாடு இப்பொழுதைய SPD-பசுமைகள் அரசாங்கத்தின்கீழ் வியத்தகு அளவில் பெருகியுள்ளது. ஜேர்மன் கூட்டரசு வங்கி கொடுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, மிக உயர்ந்த செல்வம் படைத்த 10 சதவிகிதத்தினரின் சராசரி வருமானம் நாட்டின் மேற்குப் பகுதியில் 40 சதவிகிதமும், 100 சதவிகிதம் கிழக்குப் பகுதியிலும் உயர்ந்துள்ளது. இதே காலக் கட்டத்தில் சாதாரண மக்களில் மிக வறிய நிலையில் உள்ள அடிமட்ட 25 சதவிகிதத்தினரின் சொத்துக்கள் வியத்தகு அளவில் சரிந்துள்ளன.

முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடி

பெருகிவரும் சர்வதேசப் போட்டி, இருபதாம் நூற்றாண்டில் வெடித்திருந்த வரலாற்றுப் பிரச்சினைகளை மீண்டும் எழுச்சியடையச் செய்துள்ளதுடன், அவை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. ஏதோ இரு உலகப் போர்கள் நடக்கவில்லை என்பது போல், பெரிய வல்லரசுகள் மீண்டும் மிக முக்கியமான ஆற்றல் இருப்புக்களை மேலாதிக்கம் செய்வதிலும், மூலப் பொருட்கள் மற்றும் ஏற்றுமதிச் சந்தைகள் இவற்றைக் கட்டுப்பாட்டில் எடுப்பதிலும் மீண்டும் சச்சரவில் ஈடுபட்டுள்ளன.

மேலை வல்லரசுகளிடையே மிகப் பெரிதும், செல்வாக்கு மிகுந்ததுமான அமெரிக்கா, சர்வதேச அரங்கில் ஒர் உறுதித்தன்மையை ஏற்படுத்தியிருந்த காரணி என்பதிலிருந்து, உறுதியற்ற தன்மைக்கான மிகவும் குறிப்பிடத்தகுந்த காரணியாக மாறிவிட்டது என்பதை ஈராக்கியப் போர் தெளிவாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் எண்ணெய் வளங்கள் அமெரிக்க ஆதிக்கத்திற்கு உட்பட்டிருத்தலை உறுதிப்படுத்த வேண்டும், மற்றும் உலகத்தின் மீதான அதன் தடையற்ற ஆதிக்கத்தைக் காக்கவேண்டும் என்பதுதான் போரின் நோக்கமாகும். ஆனால் போரின் யதார்த்தம் அமெரிக்காவிற்கு வியட்னாமில் அது அடைந்த தோல்வியையும் விட மேலோங்கிய வகையில் ஒரு பேரழிவாய் வெளிப்பட்டுள்ளது.

இத்தகைய மாற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையில், ஐரோப்பிய அரசாங்கங்கள் மீண்டும் தங்களுடைய ஆயுத வலிமையைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன; இதையொட்டி அவர்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களைத் தங்களுடைய தடுப்புப் போர்களின் மூலம் எதிர்கொள்ளுவதற்கு தயாராகின்றனர். பொருட்கள் அளிவிலும், பண அளவிலும் இத்தகைய நடவடிக்கைகளின் செலவினங்களை சாதாரண மக்கள்தான் செலுத்தித் தீர வேண்டும்.

ஊதியங்கள், சமுதாய வெற்றிகள் மற்றும் சமுதாய நன்மையின் பல வடிவங்கள் இவற்றின் மீதான இடையறாக் குண்டுமயைத் தாக்குதல்களின் உண்மையான வேர்கள், முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியில்தான் உள்ளன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு ஜேர்மனி பொறிவுற்றபொழுது, விடுதலை, ஜனநாயகம் இவற்றை பெருகி வரும் சமுதாயச் செல்வத்தோடு இயைந்து வரச்செய்யும் தன்மையுடையது ஆகையால், முதலாளித்துவம் ஓர் உயர்ந்த முறை என்று கூறப்பட்டது. ஆனால், பூகோள உற்பத்தி முறை, மற்றும் உலகெங்கிலும் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, அதையொட்டி ஸ்ராலினிச ஆட்சிகள் கீழறுக்கப்பட்டு, பொறிவிற்கு தள்ளப்பட்ட நிலை, "சமுதாயச் சந்தைப் பொருளாதாரத்தின்" முடிவிற்கும்தான் குறி சொல்கிறது.

இந்த உண்மையை எதிர்கொண்டு, அதிலிருந்து தக்க அரசியல் முடிவுரைகளை எடுத்துக்கொள்ளுதல் இன்றியமையாததாகும்.

சோசலிச முன்னோக்கு கருத்துக்கள்

தங்களுடைய அடிப்படை நலன்களுக்கும் முழு அரசியல் மற்றும் சமூக முறைக்கும் இடையே உள்ள சமரசப்படுத்த முடியாத பூசலைப் பற்றித் தொழிலாளர்கள் முழு நனவு உடையவராக கட்டாயம் இருக்கவேண்டும். கடந்த நூற்றாண்டில் இருந்து படிப்பினைகளை அவர்கள் கற்றுக் கொண்டு, ஸ்ராலினிசத்தாலும், சமூக ஜனநாயகத்தாலும் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்ட, பொய்மைப்படுத்தப்பட்டுவிட்ட சோசலிச நம்பிக்கைகளுக்கு மீண்டும் திரும்பவேண்டும். தாங்கள் உடன்பாட்டுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை தீர்க்க இயலும், ஒரு சர்வதேச வர்க்கத்தின் பகுதி என்று அவர்கள் உணர வேண்டும்; இத்தகைய உணர்வுதான் உழைக்கும் மக்கள் தங்களை பழைய, திவாலான அமைப்புக்களின் முடக்கும் செல்வாக்கில் இருந்து விடுவித்துக் கொண்டு, அரசியல் வாழ்வில் சுதந்திரமான சக்தியாகத் தலையிடவைக்க உதவும்.

எல்லாவற்றிகும் மேலாக, இதற்கு சர்வதேச சோலிச கட்சி ஒன்றை அமைப்பது தேவையாகிறது. இதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மனியப் பகுதியான, சோசலிச சமத்துவக் கட்சியின் நோக்கமாகும். அது மிக சக்தி வாய்ந்த புறநிலை சக்திகளின் மீது தன்னை தளப்படுத்தி இருக்கிறது. உலகப் பொருளாதாரம் பூகோளமயமாக்கப்பட்டது, ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவிற்கு வழிவகுத்தது மட்டுமல்லாது "சமுதாயச் சந்தைப் பொருளாதாரம்" என்பதற்கான அடிப்படையும் அகற்றியுள்ளது, மேலும் இது தொழிலாள வர்க்கம் உலகெங்கிலும் ஒரு சக்திவாய்ந்த முறையில் வளர்வதற்கும் உதவியுள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனா வரை, ரஷ்யாவில் இருந்து போலந்து, பிரான்ஸ் வரை, வர்க்கங்களின் முரண்பாடுகள் பெரும் கொதிநிலையை அடைந்துள்ளன. இது தவிர்க்கமுடியாமல் உலக அளவில் வர்க்கப் போராட்டங்களைப் புரட்சித்தன்மையில் பெருகச் செய்யும்.

இந்த நிலைமைகளின் கீழ், "ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம்" எனும் முன்னோக்கு மிகப் பெரிய முக்கியத்துவத்தை அடைகிறது. ஐரோப்பிய நாடுகளில் எல்லைகள் கடக்கப்பட்டது, மிகப் பெரிய தொழில் நுட்பங்கள், பண்பாட்டுக் கூறுபாடுகள், கண்டத்தின் பொருள்சார் செல்வங்கள் இவை பொது நலனுக்கும் பயன்படுத்தப்படுவது, வறுமை, பிற்போக்குத்தனம் இவற்றை அகற்றி, ஐரோப்பா முழுவதும் வாழ்க்கைத் தரம் பெரிய முன்னேற்றம் அடைவதற்கு வழிவகுத்து விடும். ஒன்றிணைக்கும் செயல்முறை பெருவணிகத்தின் இலாபமுறையினால் நிர்ணயிக்கப்படும் வரை இது அடைய முடியாதது ஆகும். ஐரோப்பாவின் ஒரு முற்போக்கான ஐக்கியத்திற்கு தொழிலாள வர்க்கம் அரசியல் அளவில் ஒன்றுபடுதல் தேவைப்படுகிறது. கிழக்கு ஐரோப்பா மற்றும் துருக்கியில் உள்ள உழைக்கும் மக்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கை நிர்ணயிக்கும், இந்த பெரு வணிக நலன்களுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான கூட்டாளிகள் ஆவர்.

உலக சோசலிச வலைத் தளம் உடன், நான்காம் அகிலம் ஒரு சர்வதேச மார்க்சிச கட்சியை வளர்ப்பதற்கு ஒரு சக்தி வாய்ந்த கருவியை உருவாக்கியுள்ளது. இதில் அக்கறை கொண்டுள்ள அனைவரையும், நம்முடைய பகுப்பாய்வுகள், அறிக்கைகள் இவற்றை ஆராயுமாறும், வாசகர் வட்டங்களை அமைக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும் அழைப்பு விடுக்கிறோம். அக்டோபர் 10ம் தேதி கூட்டத்திற்கு வாருங்கள்; டேவிட் நோர்த் அதில் முக்கிய பங்கேற்கிறார்; ஈராக்கில் பேரழிவுகரமான அமெரிக்க கொள்கை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களின் முக்கியத்துவம் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பணிகள் பற்றி, உலக சோசலிச வலை தளத்தின் ஆசிரியருடன் கலந்துரையாடுங்கள்.

PSG/WSWS Meeting
Sunday, October 10, 3:00pm in BERLIN
Rathaus Schöneberg,
John-F.-Kennedy-Platz,
Raum 195/Forum


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved