World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : இலங்கைSri Lankan government confronts deepening economic crisis இலங்கை அரசாங்கம் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றது இலங்கையின் பொருளாதாரம், உயர்ந்த உலக எண்ணெய் விலை, கடுமையான வரட்சி மற்றும் மீண்டும் யுத்தத்திற்கு திரும்பும் பீதியிலிருந்து ஊற்றெடுக்கும் அரசியல் உறுதியின்மையின் தாக்கத்தால் ஊசலாடுகிறது. இதன் விளைவாக்கங்களான விலை உயர்வு, தொழில் அழிவு, மேலதிக தனியார்மயமாக்கம் மற்றும் மறுசீரமைப்பிற்கான அழுத்தமும், வளரச்சி கண்டுவரும் சமூக அமைதியின்மைக்கு எண்ணெய் வார்ப்பதோடு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அவரது ஸ்திரமற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் முகம்கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியல் நெருக்கடியையும் அதிகரிக்கச் செய்கின்றது. இலங்கையின் முன்னணி வர்த்தக சஞ்சிகையான லங்கா மன்த்லி டைஜஸ்ட் (Lanka Monthly Digest), அதனது செப்டெம்பர் வெளியீட்டில்: "அதிக செலவிலான (மற்றும் நிச்சயமாக அரசியல் ரீதியில் தூண்டப்பட்ட) அரச மானியங்களும் கூட விலைகளைக் கட்டுப்படுத்த போதவில்லை... அரசாங்கத்தின் வரவு செலவுப் பற்றாக்குறை விரிவடைந்துள்ளது; நாட்டின் வணிகப் பற்றாக்குறை ஊதிப் பெருத்துள்ளது...; ரூபாய் பாதாளத்தில் வீழ்ந்துகிடக்கிறது...; இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கீடானது 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் சற்றே அதிகமானளவில் சுருங்கிப்போயுள்ளது...; மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னறிக்கை, ஆகக்கூடிய 7 வீதத்தில் இருந்து சாதகமான 5 வீத புள்ளிகள் வரை (மத்திய வங்கியால்) கீழிறக்கப்பட்டுள்ளது. உண்மையில், முழு நிலமையும் மங்கலானதாகும்," என தோல்விமனப்பான்மயுடன் குறிப்பிட்டுள்ளது. பொருளாதார ஆய்வாளர்கள் சில ஆபத்தான அறிகுறிகளை சுட்டிக்காட்டினர். ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஒரு பீப்பாய் சுமார் 50 டொலர்களை எட்டியிருந்த சர்வதேச எண்ணெய் விலை, பின்னர் சற்றே குறைந்திருந்த போதிலும், அதிகரித்த விலையானது நடைமுறை கணக்குப் பற்றாக்குறையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வருடாந்த எண்ணெய் இறக்குமதி செலவு 850-900 மில்லியன் டொலர்கள் என்ற அளவில் இருந்து 1,200-1,300 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது சுமார் 40 வீதமான அதிகரிப்பாகும். அமெரிக்க டொலரின் அதிகரிப்புடன், எண்ணெய் விலையை செலுத்துவதற்காக டொலர் அதிகளவில் செலவிடப்பட்டமை இலங்கை ரூபாவில் கூர்மையான மதிப்பிறக்கத்தை தோற்றுவித்தது. அமெரிக்க டொலருக்கான நாணய மாற்று வீதமானது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 97 ரூபாய்களிலும் ஏப்பிரலில் 98 ரூபாய்களிலும் இருந்து ஆகஸ்ட் 2 அன்று ஆகக் கூடிய 104 ரூபாய்களை எட்டியது. கடந்த 8 மாதங்களில் 7 வீதத்தால் சரிந்துபோன ரூபாயின் பெருமதி எல்லா இறக்குமதி பொருட்களினதும் விலைகளையும் உயர்த்தியது. மத்திய வங்கி புள்ளி விபரங்களின்படி, வர்த்தகப் பற்றாக்குறையானது இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,126 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியிலான 700 மில்லியன் டொலர் அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் இது 60 சதவீத அதிகரிப்பாகும். திறைசேரி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் படி, முழு சென்மதி நிலுவை 300 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. ஆகஸ்ட் மாத புள்ளிவிபரங்கள் சந்தேகத்திற்கிடமின்றி மேலதிக சீர்குலைவை வெளிப்படுத்தும். சுதந்திர முன்னணி, முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் அதிருப்தியை சுரண்டிக்கொண்டதன் மூலம் ஏப்பிரல் தேர்தலில் ஒரு உறுதியற்ற வெற்றியை பெற்றது. குமாரதுங்கவும் அவரது பங்காளிகளும், தனியார்மயமாக்கலை நிறுத்துவதாகவும் அரசாங்கத்துறைக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவதாகவும் விவசாய மானியங்களை மீண்டும் வழங்குவதாகவும் நலன்புரி சேவைகளை அதிகரிக்கச் செய்வதாகவும் வாக்குறுதியளித்தனர். ஆட்சிக்கு வந்த சுதந்திர முன்னணி தனது வாக்குறுதிகளை வெளிப்படையாகவே கைவிட்டுள்ளதோடு தற்போதைய பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் உழைக்கும் மக்களின் தோள்களில் ஏற்றியுள்ளது. பெற்றோல் விலை ஆகஸ்ட்டில் இரண்டு முறை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் சமையல் வாயுவின் விலையும் இருமுறை அதிகரித்ததோடு கடந்த வார இறுதியில் மீண்டும் அதிகரித்தது. மொத்தத்தில் இது 33 வீத அதிகரிப்பாகும். நாட்டின் பிரதான உணவான அரிசியின் விலை, கடந்த நான்கு மாதங்களுக்குள் ஒரு கிலோ 33 ரூபாய்களில் இருந்து 44 ரூபாய்கள் வரை 16 வீதத்தால் அதிகரித்துள்ளது. பால் மாவின் விலை குறைந்தபட்சம் 6 வீதத்தால் அதிகரித்துள்ளது. செப்டெம்பர் 1ம் திகதியில் இருந்து பேருந்துக் கட்டணம் 12.5 வீதத்திற்கும் 16 வீதத்திற்கும் இடையில் அதிகரித்துள்ளது. இலங்கை மின்சார சபை 5 வீத கட்டண அதிகரிப்புக்கான அரசாங்க அனுமதியைக் கோரியுள்ள அதே வேளை, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் இதே அளவிலான அதிகரிப்பை கோரியுள்ளது. அரசாங்கம், மானியம் வழங்குவதை நிறுத்துமாறும் அதன் மூலம் ஊதிப் பெருக்கும் வரவு செலவு பற்றாக்குறையை குறைக்குமாறும் கோரும் பெரும் வர்த்தகர்களின் அதிகரித்துவரும் அழுத்தத்திற்கு உள்ளாகிவருகின்றது. ஆகஸ்ட்டில், இலங்கை வர்த்தக சம்மேளனம், "அதிகரித்துவரும் சர்வதேச விலைக்கேற்ப நாட்டின் பெற்றோல், டீசல் விலைகளையும் மின்சாரக் கட்டணத்தையும் சீர்செய்யுமாறு" அழைப்பு விடுத்தது. வரவு செலவுத்திட்டத்தின் பெருக்கம் வட்டி வீதத்தில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட வழிவகுக்கும் என்பதையிட்டு கம்பனித் தலைவர்கள் கவலையடைந்துள்ளனர். மே மாதம் முதல், நாட்டின் 25 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் கடுமையான வரட்சியால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. ஜூன் முதல் செப்டெம்பர் வரையான பருவகாலத்தில் இலட்சக்கணக்கான ஏக்கர்களில் அரிசி மற்றும் ஏனைய பயிர்கள் விதைக்கப்பட்டிருக்கவில்லை. உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி, ஜனத்தொகையில் சுமார் 16 வீதமான பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு மற்றும் ஏனைய நிவாரணங்களை வழங்க இரண்டு பில்லியன் ரூபாய்கள் அவசியமான போதிலும், அரசாங்கம் இந்தத் தொகையில் பாதியையே வழங்கியுள்ளது. அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கின்றது. இறக்குமதி செலவு, கடன் மீள செலுத்தல் மற்றும் நிர்வாகத்தை கொண்டுசெலுத்துவதற்கான நிதிகள் வேகமாக வற்றிவருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் குமாரதுங்க தோல்வியடைந்ததால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் உதவி வழங்கும் நாடுகளும் கடன்களை கொடுக்க மறுத்துக்கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் டோக்கியோவில் நடந்த உதவி வழங்கும் மாநாட்டில் சுமார் 4.5 பில்லியன் டொலர்கள் வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், இந்த நிதி பெயரளவிலான சமாதான முன்னெடுப்பு மற்றும் நீண்ட மறுசீரமைப்பு திட்டத்தின் தொடர்ச்சியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்பிரலில், சர்வதேச நாணய நிதியம் 657 மில்லியன் டொலர்கள் கடன்களுக்கு ஒப்புதல் அளித்திருந்த போதிலும், ஒரு தவணை தொகையாக 81 மில்லியன் டொலர்களை மட்டுமே வழங்கியது. கடந்த நவம்பரில் குமாரதுங்க முன்னைய ஐ.தே.மு அரசாங்கத்திடமிருந்து மூன்று முக்கிய அமைச்சுக்களை அபகரித்து, பின்னர் பெப்பிரவரியில் அரசாங்கத்தை அடியோடு பதவி விலக்கியதை அடுத்து எஞ்சிய கடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஏப்பிரல் தேர்தலை அடுத்து, சர்வதேச நாணய நிதியம் ஐ.தே.மு வின் "புத்துயிர் பெறும் இலங்கை" போன்று சுதந்திர முன்னணியும் பொருளாதார மறுசீரமைப்புக்கான ஒரு "தெளிவான திட்டத்தை" முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தியது. மக்களின் எதிர்ப்பையிட்டு பீதியடைந்துள்ள குமாரதுங்க, இன்னமும் அதை மேற்கொள்ள முடியாதுள்ளார். நிதியமைச்சர் சரத் அமுனுகம, அக்டோபர் 2-3ம் திகதிகளில் நியூ யோர்க்கில் நடைபெறவுள்ள வருடாந்த நிதி மாநாட்டின்போது சர்வதேச நாணய நிதிய அலுவலர்களை சந்திக்கக்கூடும். சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நிதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறுகியதாக இருப்பதால், அரசாங்கம் அமுனுகமவையும் சிரேஷ்ட அலுவலர்களில் ஒருவரான ஜயந்த தனபாலவையும் வியானாவில் ஓபெக் (OPEC) அலுவலர்களை சந்திப்பதற்காக கடந்த வாரம் அனுப்பிவைத்தது. 844 பில்லியன் ரூபாய்கள் வெளிநாட்டு கடன்களுக்கும் மேலதிகமாக, இலங்கை ஒபெக் நாடுகளுக்கு 538 பில்லியன் ரூபாய்கள் கடன்பட்டிருக்கிறது. குமாரதுங்கவும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்துக்கொள்ள நெருக்குவதன் பேரில் அரசியல் உதவியைப் பெறவும் நிதி உதவிக்காக கெஞ்சவும் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை டோக்கியோவிற்கு அனுப்பிவைத்துள்ளார். "உதவிகளை வழங்குவதற்கான வழிவகைகளையிட்டு டோக்கியோ செயற்பட முயற்சிக்கும்" என கதிர்காமர் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார் என அசாகி ஷிம்பன் (Asahi Shimbun) கடந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது. நவம்பர் 10 வரவு செலவுத் திட்டங்கள் ஆரம்பமாகியுள்தோடு சுதந்திர முன்னணி அரசாங்கம் நிதி நெருக்கடியில் உள்ளது. அது தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான யூரியா உர மானியத்தை மீண்டும் வழங்குவதை மட்டுமே அமுல்படுத்தியுள்ளது. சுதந்திர முன்னணி வேலையற்ற பல்கலைக்கழக மற்றும் உயர்தர பாடசாலை பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளது. ஆயினும் சுமார் 60,000 பட்டதாரிகளில் 17,000 பேருக்கு மட்டுமே பயிற்சிக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அராங்க ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்கும் வாக்குறுதியிலிருந்தும் சுதந்திர முன்னணி பின்வாங்குகிறது. திறைசேரி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர சண்டே லீடர் பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய பேட்டியில்: "எனக்குத் தெரிந்தளவில் அரசாங்கம் 70 வீத சம்பள அதிகரிப்பு பற்றி பேசவில்லை... சிலர் அரசியல் மேடைகளில் பலவிதமான தொகையைக் குறிப்பிடுகின்றனர்," எனப் பிரகடனம் செய்தார். "தற்போது டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு செலவுமிக்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்களுக்கு நாம் பிரதிபலிக்காவிடில் அது நிச்சயமாக பொருளாதாரத்தின் மீது ஒரு கசிவை ஏற்படுத்தும்," எனக் கூறியதன் மூலம் அவர் மேலதிக மானிய வெட்டுக்களையிட்டு சமிக்ஞை செய்தார். ஆகஸ்ட் 29 அன்று, சேவை வங்கியாளர்கள் சங்கத்தில் உரையாற்றிய அமுனுகம, கடுமையான நகர்வுகளைப் பற்றி எச்சரிக்கை செய்தார். "இது எமக்கு ஒரு நெருக்கடியான காலம். நாம் ஒரு எண்ணெய் அதிர்ச்சிக்கும் கடுமையான வரட்சிக்கும் முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். நான் இதை 'இரட்டை ஆச்சரியம்' என வர்ணிப்பேன்," என அவர் குறிப்பிட்டார். "இது உறுதியானதும் பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறானதுமான முடிவுகளைக் கோருவதோடு, மிக நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அத்தகைய முடிவுகளை எடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்," எனக் குறிப்பிட்ட அவர் விவகாரங்களை சரிசெய்வதற்காக ஒரு திட்டத்தை அமைக்கவும் வாக்குறுதியளித்தார். வரவு செலவுத் திட்டத்திலான இந்த உறுதியானதும் கடுமையானதுமான நகர்வுகளுக்கான முன்னறிவித்தலானது, மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி) ஒரு தர்மசங்கடத்துடன் எதிர்கொள்கிறது. சுதந்திர முன்னணியின் ஒரு பங்காளியாக முதற்தடவையாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி யின் மக்கள் நலன் சார்ந்த வெற்று வாய்வீச்சுக்கள் பெறுமதியற்றவை என்பது வெகு விரைவாக அம்பலத்திற்கு வந்துள்ளது. பல சமயங்களில் "சோசலிஸ்டுகள்" மற்றும் "மார்க்சிஸ்டுகள்" என சொல்லிக்கொண்ட ஜே.வி.பி, பழியை பிரபல்யமற்ற எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது சுமத்த முட்டாள்தனமாக முயற்சிக்கின்றது. ஜே.வி.பி யின் படி, இது ரூபாயின் பெறுமதியை கீழறுத்த பூகோள முதலாளித்துவத்தின் புறவளர்ச்சியல்ல, மாறாக "மத்தியவங்கியிலும் அரசாங்கத்திலும் உள்ள ஐ.தே.மு சார்பு அதிகாரிகளின் சதித்திட்டமாகும்." அதே சமயம், ஜே.வி.பி தனது சொந்த வங்குரோத்தடைந்த கொள்கைகளில் இருந்து அவதானத்தை திசைதிருப்பும் இன்னுமொரு வழிமுறையாக சிங்களப் பேரினவாதத்தை தூண்டிவருகிறது. அக்டோபர் இறுதியில், ஜே.வி.பி உடன் சம்பந்தப்பட்ட பெளத்த பிக்குகளின் குழு ஒன்றுக்கு மத்தியில் உரையாற்றிய பேராசிரியர் அத்தன்கனே ரட்னசார தேரர், அரசாங்கம் ஆட்சியில் இருப்பது "தாயகத்தை பாதுகாக்கவேயன்றி" வாழ்க்கை நிலைமைகளை பாதுகாக்க அல்ல. "சுதந்திர முன்னணி ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டது நாடு பிளவுபடுவதை நிறுத்தவே அன்றி... தொழில் வழங்கவோ பொருட்களின் விலைகளைக் குறைக்கவோ அல்ல," என வலியுறுத்தினார். பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதைத் தவிர சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு வேறு பதிலீடு இல்லை என்பதையே ஜே.வி.பி யின் பிரதிபலிப்புகள் வெளிப்படுத்துகின்றன. அது "ஐ.தே.மு அனுதாபிகள்" என உழைக்கும் மக்கள் மீது பழிசுமத்துவதன் மூலமும் பிரிவினையான இனவாத பகைமையை கிளறிவிடுவதன் மூலமுமே எந்தவொரு எதிர்ப்பையும் அடக்கியாளும். இந்த அனைத்தும் தோல்வியடைந்தால், ஜே.வி.பி யும் அரசாங்கமும் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புக்களையும் நசுக்குவதற்கு மிருகத்தனமான சக்திகளை பயன்படுத்தத் தயங்கப்போவதில்லை. |