World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
சீனா Chinese authors charged with libel for exposing rural crisis கிராமப்புற நெருக்கடியை அம்பலப்படுத்திய சீன நூலாசிரியர்கள் மீது அவதூறு வழக்கு By John Chan சீனாவில் தற்போது மிக விறுவிறுப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கும் சிறிய விவசாயிகளது பிரச்சினைகளைப் பற்றி அலசும் ''சீனாவின் விவசாயிகள் தொடர்பான ஒர் புலனாய்வு'' என்ற நூலின் ஆசிரியர்கள் Chen Guidi மற்றும் Wu Chuntao ஆகிய இருவர் மீதும் சென்ற மாதம் சீன நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்த அதிகாரிகளில் ஒருவர் Zhang Xide அவரது ஊழல் நடவடிக்கைகள் அந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர் அந்த நூலில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் அந்த நூலின் எதிர்பாராத செல்வாக்கினாலும் அதிர்ச்சியடைந்துள்ள சீன அதிகாரத்துவத்தின் பரந்த தட்டினரின் ஆதரவில்தான் செயல்படுகிறார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. விசாரணை அதிகாரபூர்வமாக ஆகஸ்ட் 24-ல் தொடங்கியது. வெளியீட்டாளரான மக்கள் இலக்கிய பதிப்பாளர் உடனடியாக மேலும் அந்த நூலை வெளியிடுவதற்கு தடைவிதிக்கும் கடிதத்தை நீதிமன்றம் அனுப்பியது. சட்டபூர்வமான விசாரணைகள் ஆகஸ்ட் 28-ல் முடிந்துவிட்டன என்றாலும் இன்னும் ஒரு மாதம்வரை தீர்ப்பு அறிவிக்கப்படமாட்டாதென எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நூலாசிரியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நூற்றுக்கணக்கான உள்ளூர் விவசாயிகள் நீதிமன்றத்திற்கு வெளியில் திரண்டிருந்தாக, ரேடியோ பிரீ ஆசியா தெரிவித்தது. நீதிமன்ற அறைக்குள் அவர்களில் 20-பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அந்த அறைக்குள் நூறு அல்லது அதற்கு மேற்பட்ட அரசாங்க அதிகாரிகள் நிறைந்திருந்தனர். அரசாங்க ஊடகம் அந்த வழக்கு பற்றிய செய்தி எதையும் தரக்கூடாது என மத்திய பிரச்சாரத்துறை கட்டளையிட்டது. வெளிநாட்டு பத்திரிகையாளர் எவரும் விசாணையில் குறிப்பு எடுப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஒரு சில சீன பத்திரிகையாளர்கள் தனிப்பட்டமுறையில் கலந்து கொண்டனரே தவிர அவர்கள் பணியாற்றுகின்ற, செய்தி நிறுவனங்களின் சார்பில் கலந்துகொள்ளவில்லை. Chen- ம், Wu- ம் பெரும்பாலும் கிராமப்புறங்கள் சூழ்ந்த Anhui மாகாணத்தில் மூன்றாண்டுகள் ஆய்வு செய்தனர். அந்த நூல் எளிதாகப்படிக்கின்ற முறையில் விவசாயிகளை எதிர்நோகியுள்ள துன்பங்களை, தெளிவாக விளக்குகிறது. விலைவாசிகள் வீழ்ச்சி, அடிப்படை சேவைகள் இல்லாத நிலை, சுமையான வரிவிதிப்பு மற்றும் போலீஸ் ஒடுக்குமுறை உட்பட விவசாயிகளது துன்பங்கள் அதில் விவரிக்கப்பட்டுள்ளன. இலஞ்சம், கசக்கிப்பிழிந்து பணம் வசூலிப்பது, மற்றும் இதர நடவடிக்கைகள் மூலம் ஒப்பீட்டளவில் சலுகை மிக்கவர்களாக வாழ்ந்துவரும் தனிப்பட்ட அதிகாரிகளின் ஒட்டுண்ணி நடவடிக்கைகள் பற்றியும் கூட விவரிக்கப்பட்டுள்ளன.ஆரம்பத்தில் இந்தப் புத்தகம் கடுமையான படைப்பு என்று அதிகார வட்டாரங்களால் பாராட்டப்பட்டது. அண்மைய ஆண்டுகளில் ஏழ்மைக்கு தள்ளப்பட்ட விவசாயிகளின் குறைபாடுகளை வெளியிட்ட ஒருசில நூல்களில் இது ஒன்று என்று பாராட்டப்பட்டது. பீப்பிள்ஸ் டெய்லியின் கலைப்பகுதி இயக்குநர், Guo Yunde, எடுத்துக்காட்டாக, அந்த நூலைப்பற்றி "வார்த்தை வார்த்தையாக" தான் அக்கறையுடன் வாசித்ததாக கூறி இருப்பதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் தாக்கல்செய்யப்பட்டுள்ள அறிக்கை விவரிக்கிறது. சீன சமூகவியல் விஞ்ஞான கழகத்தின் இலக்கியப் பிரிவு கட்சி செயலாளர் Bao Mingde கிராமப்புற சீனாவின் பிரச்சனைகளை விரிவாக விளக்குகின்ற ''வெள்ளையறிக்கை'' அந்த நூல் என்று பாராட்டியுள்ளார். என்றாலும் அந்த நூல் வெளியிடப்பட்டதும், அரசாங்கத்தின் அணுகுமுறை மிக வேகமாக மாறிவிட்டது. அந்தநூல் வெளிப்பட்டதும் மக்களிடையே வரலாறு காணாத வரவேற்பை பெற்றது. மாத இதழான Dangdai அதன் டிசம்பர் இதழில் அதை தொடர் கட்டுரையாக வெளியிடத் தொடங்கியது. ஒரு வாரத்திற்குள் அந்த மாத இதழ் விற்றுத்தீர்ந்துவிட்டது. அந்த நூல் வெளியிட்டு முதல் மாத்திலேயே 100000- பிரதிகள் விற்றன. விவசாயிகள் பிரச்சனை குறித்து அலையலையாக விவாதங்கள் நடத்தப்பட்டு வருவதால், கலவரமடைந்த மத்திய பிரசாரத்துறை அரசாங்கத்திற்கு சொந்தமான ஊடகங்களில் அந்த நூலைப்பற்றிய விவரங்கள் மேலும் வெளிவரக்கூடாது, மற்றும் எந்தவிவாதங்களும் நடைபெறக்கூடாது என்று தடைவிதித்தது. ஆனால் மக்களது தேவையைச் சமாளிக்க மில்லியன் கணக்கான பிரதிகள் சட்டவிரோதமாக அச்சிடப்பட்டன. ஒரு விமர்சகர் குறிப்பிட்டிருந்ததைப் போல் ''அந்த நூல் விவசாயிகளின் கண்ணீரிலும், இரத்தத்திலும் எழுதப்பட்டது." அது எண்பது இலட்சம் பிரதிகள் விற்றுவிட்டதாக ஒரு மதிப்பீடு கூறுகின்றது. உள்ளூர் அதிகாரிகள் திருப்பித் தாக்கினர். அந்த நூலாசிரியர்கள் மீது Fuyang நகர இடைநிலை மக்கள் நீதிமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கவுண்டி செயலாளர் Zhang Xide விவசாயிகள்மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடுமையான வரிவிதித்தாகவும், ஒரு குழந்தை கொள்கை என்ற குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை கட்டாயப்படுத்தி நிறைவேற்றியதாகவும், மற்றும் போலீஸ் கொடுங்கோன்மை மிக்க அதிகாரி என்றும் அவர் அந்த நூலில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறார். அந்த நூலின் ஒரு பகுதி முழுவதுமே Zhang பற்றி விவரிக்கிறது. அவர் Linquang- பகுதிக்கு பொறுப்பு வகித்தார். அப்பகுதி பெய்ஜிங்கினால் "வறுமைமிக்க கவுண்டி" என்று வகைசெய்யப்படிருக்கிறது. அப்படியிருந்தும் அவர் ஒரு சொகுசு Benz 500 காரைவாங்க முடிந்திருக்கிறது- அந்தக் காரை மாகாண கவர்னர்களும், கட்சித்தலைவர்களும், பணக்கார கடற்கரை பகுதிகளில்கூட வாங்குவதற்கு துணிச்சல் கொண்டதில்லை. 1996-ல் அவர் அந்தப் பதவியிலிருந்து விடைபெற்ற நேரத்தில் ஆவேசம் கொண்ட 3000- விவசாயிகள் அவரது முன்னாள் குடியிருப்பின் மீது படையெடுத்தனர். Zhang அவரது குற்றங்களுக்காக தண்டிக்கப்படவில்லை. அதிகாரம் படைத்த அரசாங்க ஆலோசனை அமைப்பான Fuyang நகர அரசியல் ஆலோசனை மாநாட்டின் துணைத்தலைவராக இப்போது பணியாற்றி வருகிறார். 2003- இறுதியில் அந்த நூல் வெளியிடப்பட்ட சிறிது நாட்களில் அந்த பத்திரிகையாளர்கள்மீது Zhang நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவர் கூறுகின்ற எந்த சான்றையும் தாக்கல் செய்வதற்கு ஆறுமாதங்கள் பிடித்தது.தன்னைப்பற்றி அந்த நூலில் வருகின்ற குறிப்புக்கள் ''உண்மையை கடுமையாக திரித்து'' கூறுவதாகும் என்று Zhang வலியுறுத்திக்கூறி அந்த நூலைத்திரும்ப பெற வேண்டுமென்றும் அந்த நூலாசிரியர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டுமென்றும் 200,000- யுவான்கள் (24000- அமெரிக்க டாலர்கள்) இழப்பீடு தரவேண்டுமென்றும் கோரியுள்ளார். Zhang ற்கு ஆதரவாக இதர அரசாங்க அதிகாரிகளும் மூன்று பொலீஸ்காரர்களும் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான வக்கீல் Wu Ge அந்த அறிக்கையையே "ஊழலின் ஊற்றாக" இருக்கும் உள்ளூர் அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. என்று கூறினார். Wu நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது "நிர்வாகம் நீதிவிசாரணைகளில் தலையிடுவதன் காரணமாக" விசாரணை நேர்மையாக நடைபெறுவதை ஆந்த ஆசிரியர்கள் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.Zhang ன் மகன் அதே நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக பணியாற்றி வருகிறார். விசாரணை துவங்குவதற்கு முன்னர் வழக்கு விசாரணையை வேறொரு நகருக்கு மாற்றவேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொடுத்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்நூலாசிரியர்களில் ஒருவரான சென் இந்த வழக்கில் தோல்வியடையப்போவது அவருக்கே தெரியுமென்று Zhang வெட்கங்கெட்ட முறையில் நிருபர்களிடம் பெருமையடித்துக்கொண்டார். ''ஏன் அவ்வாறு நான் சொல்கிறேன் என்பது அவருக்கே நன்றாகத்தெரியுமென்று நான் நினைக்கிறேன்" என்று நிருபர்களிடம் கூறினார்.நியூயோர்க்கிலிருந்து இயங்கிக்கொண்டுள்ள பத்திரிகையாளர் பாதுகாப்பு குழுவின் செயல் இயக்குநர் Ann Copper செப்டம்பர் 2-ல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்த விசாரணையை கண்டித்திருக்கிறார். ''சீன அரசாங்கம் தனது குடிமக்களையும், பத்திரிகையாளரையும் அரசாங்க ஊழலை அம்பலப்படுத்துமாறு ஊக்குவித்தாலும் Chen Gueidi மற்றும் Wn Chuntao ஆகியோர் போன்ற புலனாய்வு எழுத்தாளர்கள் அவர்கள் அம்பலப்படுத்த விரும்புகிற அதே ஊழல் கட்டுக்கோப்பின் தயவிற்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த அரசியலாக்கப்பட்டுவிட்ட அவதூறு குற்றச்சாட்டுக்கள் அரசு அதிகாரிகளை கண்டிப்பதற்காக பழிவாங்கும் முறையில் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கை உடனடியாகக் கைவிட வேண்டும்'' என்று அவ்வம்மையார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மட்டுப்படுத்தப்பட்ட செயற்பரப்பு எல்லை அந்த நூலில் Anhui மாகாணத்தைச் சார்ந்த பல அதிகாரிகளின் முறைகேடுகளில் Zhang ஒருவரது முறைகேடுமட்டும் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த நூலில் மிக விளக்கமாக அம்பலப்படுத்தப்பட்டிருந்தாலும் அந்த விமர்சனத்தின் செயற்பரப்பு எல்லை மிகக் குறைந்ததாகும். அந்த நூலாசிரியர்கள் தங்களது முன்னுரையில் எழுதியிருப்பதாவது: ''பலர் இப்போது பெரிய நகரங்களைவிட்டு செல்வதில்லை, மற்றும் பெய்ஜிங் மற்றும் Shanghai போன்றுதான் சீனாவில் எல்லா இடங்களிலும் உள்ளது என்று கருதுகிறார்கள். சில வெளிநாட்டவர்கள் வருகிறார்கள், பார்க்கிறார்கள், சீனா இப்படித்தான் இருக்கிறதென முடிவு செய்துவிடுகிறார்கள். உண்மையிலேயே அப்படியில்லை. நாங்கள் கற்பனைக்கும் எட்டாத வறுமையை, கற்பனைக்கும் எட்டாத குற்றங்களை, கற்பனைக்கும் எட்டாத துன்பத்தை, கற்பனைக்கும் எட்டாத உதவியற்ற நிலையை, கற்பனைக்கும் எட்டாத எதிர்ப்புணர்வை, கற்பனைக்கும் எட்டாத அமைதியை, கற்பனைக்கும் எட்டாத உணர்வுக் கொந்தளிப்பை மற்றும் கற்பனைக்கும் எட்டாத துயரத்தை பார்த்திருப்பதை சொல்ல விரும்புகிறோம்.......'' என்றாலும் இந்த அறிக்கை, அந்த மாகாணத்திலும், இதர கிராமப்பகுதிகளிலும் நடைபெற்றுள்ள அழிவுகளுக்கு மத்திய தலைமையின் பொறுப்புப்பற்றியும் பெய்ஜிங்கின் கொள்கைகள் பற்றியும் கவனம் செலுத்தப்படவில்லை. மாறாக பழி உள்ளூர் அதிகாரிகள் மீது போடப்படுகிறது. உள்ளூர் அதிகாரிகள் "விவசாயிகளது சுமையை" குறைக்க வேண்டுமென்ற பெய்ஜிங்டனுடன் கொள்கைகளை நிறைவேற்ற மறுத்துவருவதாக நூலாசிரியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். உள்ளூர் அதிகாரிகள் ஊழல் நிறைந்த கொடுங்கோலர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் ஆனால் மத்திய தலைமை அந்த பிரச்சனைகள் மீது கடுமையான கவனம் செலுத்திவருவதாக விளக்கப்பட்டிருக்கிறது. அந்தப்புத்தக முடிவில் ஆசிரியர்கள் "கிராமப்புற சீர்திருத்தம்" ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்துவிட்டதாகவும், "அதிலிருந்து பின்வாங்குவதற்கு வேறுவழியில்லை என்றும் நாம் கண்ணிவெடிகளுக்கு மேலே நின்றுகொண்டிருக்கிறோம்" என்றும் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு பின்னர் அவர்கள் ''Hu Jintao கீழ் ஒரு புதிய கட்சி தலைமையில் நாம் மற்றும் 900- மில்லியன் விவசாய நண்பர்களும் சீன வரலாற்றில் மற்றொரு புகழ் மிக்க சூரியோதய காலம் காத்திருக்கிறது. என்று நம்பிக்கையோடு இருப்பதைத்தவிர வேறுவழியில்லை'' என்று கூறியிருக்கின்றனர். Hu Jintao தலைமைமீது இத்தகைய தாராளமான பாராட்டுக்களை தருவது அபத்தமாகும். இன்றைய தினம் சீனாவைச்சேர்ந்த மில்லியன் கணக்கான விவசாயிகள் எதிர் நோக்கியுள்ள சமூக மனக்கிலி உள்ளூர் அதிகாரிகளது ஊழலால் மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல. சீன அரசாங்கத்தின் முடி முதல் அடி வரை கடுமையான வரிவிதிப்பு, அடிப்படை வசதிகள் இல்லாமை, கிராமப்புற ஏழ்மை ஆகியவற்றிற்கு பொறுப்பாகும். சந்தை உறவுகள் கிராமப்புறங்களில் திணிக்கப்பட்ட பின்னர் சமுதாய துருவமுனைப்படல் கடுமையாகி ஒரு சிலர் பணக்காரர்களாகினர், பல விவசாயிகள் கடுமையான பணநெருக்கடியில் சிக்கிக்கொண்டனர்.அந்த நூல் மிக கவனமாக உருவாக்கப்பட்டிருக்கும் தன்மைகொண்டவை என்றாலும் Chen Guidi- ம், Wu Chuntao வும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். கிராமப்புற நெருக்கடி குறித்து எந்த விவாதம் நடந்தாலும் அதனால் சமுதாய கிளர்ச்சி உருவாகுமென்று ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் எல்லா பிரிவுகளிலுமே ஆழமான அச்சங்கள் நிலவுவதை அந்த நூலை ஒடுக்குவதற்கான முயற்சி எடுத்துக்காட்டுகிறது. பெய்ஜிங்கில் தலைமை இந்த பிரச்சனைகளை மிகத் தீவிரமாக அறிந்திருக்கிறது, ஏனென்றால் இந்த ஆட்சியே விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட இராணுவத்தினால்தான் பதவிக்கு வந்தது. பல தலைமுறைகளுக்கு விவசாயிகள்தான் இந்த ஆட்சிக்கு முதுகெலும்பாக செயல்பட்டனர். மாவோவின் தேசியவாத தொழிலாள வர்க்கமல்லாத அணுகுமுறை போக்கை ஸ்ராலினிச கருத்தான ''தனி ஒரு நாட்டில் சோசலிசம்'' என்ற தத்துவம் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. விவசாயிகள் பிரச்சனைகள் என்றழைக்கப்படுவது உட்பட எல்லாத்துறைகளிலும் அந்தக்கொள்கை அழிவையே உருவாக்கியது. அந்த நூலில் பல இடங்களில் காணப்படுகின்ற குறிப்புகளில் இன்றைய கிராமப்புற பிரச்சனைகளின் ஆணிவேர் மாவோ யுகத்திலிருந்து தொடங்குகிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றன. 1949- புரட்சிக்கு பின்னர் கொண்டுவரப்பட்ட "நில சீர்திருத்தத்தின்" பலன்கள் குறுகிய காலமே நீடித்தன. தலைமையானது விவசாயிகளை புறகணித்துவிட்டு தொழில் மயமாக்க முயன்றது, இதனால் பஞ்சமும் பட்டினியும் ஏற்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் மடிந்தனர். 1970-களின் கடைசியில் Deng Xiaoping நாட்டின் பெருகி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக சீனாவில் சந்தை உறவுகளையும், வெளிநாட்டு முதலீடுகளையும் கொண்டு வருவதற்கு வழி திறந்துவிட்டார். வேளாண்மை கூட்டுப்பண்ணைகள் டெங் காலத்தில் ஒழிக்கப்பட்டதால் மாவோ காலத்தில் விவசாயிகளுக்கு கிடைத்த சிறிய பாதுகாப்புக்களும் அடிபட்டுப் போயின. 1980-களின் தொடக்கத்தில் விவசாயிகளின் வருமானம் ஆரம்பத்தில் உயர்ந்தது, ஆனால் சந்தை சக்திகளின் நடவடிக்கையால் விரைவில் எதிரான விளைவுதான் ஏற்பட்டது. இது தவிர, மக்கள் கம்யூன்களுக்குப் பதிலாக நகர - கிராம நிர்வாகங்கள் என்கிற மிகப்பெரிய அதிகாரத்துவ சாதனம் உருவாக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு அதுமிகப்பெரிய நிதிச்சுமையாக ஆகிவிட்டது. 1990-களில் நிதிக்கட்டுக்கோப்பு முறை தளர்த்தப்பட்டு அதிகாரம் பரவலாக்கப்பட்டு வந்தது, வரிவிதிப்பது, வசூலிப்பது மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தருவது தேசிய அளவிலிருந்து கிராமப்புறங்களுக்கு மாற்றப்பட்டது. இதன் விளைவாக உள்ளூர் அதிகாரிகளின் கட்டண "வசூல் வேட்டைகள்" முடிவற்று சென்று கொண்டிருந்தன மற்றும் உள்ளூர் அதிகாரிகளது தயவை நாடி வாழுகின்ற நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது. கிராமப்புறங்களில் நெருக்கடி முற்றிக்கொண்டு போனதால் மில்லியன் கணக்கான விவசாயிகள் நகரப்பகுதிகளில் வேலைதேடி குடியேறினர். இப்படி மலிவான கூலி தொழிலாளர்கள் அளவின்றி கிடைத்துக்கொண்டிருப்பதால் 1990-களில் வெளிநாட்டு முதலீடுகள் மிக அதிகமாக வந்து குவிந்தன மற்றும் மிக விரைவாக சீனா உலகின் தொழிற்பட்டறை என்றழைக்கப்படுகின்ற நிலைக்கு மிக வேகமாக வளர்ந்தது. ஆனால் இந்த பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகள் வர்க்க உறவுகளை ஆழமாக மாற்றி இருக்கின்றன, பெய்ஜிங்கிலுள்ள அதிகரித்த அளவில் தனிமைப்படுத்தப்பட்ட அதிகாரத்துவத்தை தீர்க்க முடியாத நெருக்கடிகளை எதிர்கொள்ள வைத்தன. சீனத்தலைவர்கள் கிராமப்புற பிரச்சனைகளை தீர்த்துவைக்க வேண்டிய "அவசர நெருக்கடி" குறித்து மேலெழுந்த வாரியாக அறிக்கைகளை வழமையாக விட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து உணவுதானிய உற்பத்தி குறைந்து கொண்டு வருவதை சரிக்கட்டுவதற்காக வரையறுக்கப்பட்ட வேளாண்மை மானியத்திட்டத்தை இந்த ஆண்டின் ஆரம்பத்தில், பிரதமர் Wen Jiabao நடைமுறைப்படுத்தினார், ஆனால் எந்த முன்னேற்றமும், எவ்வளவுதான் வலுவற்றதாக இருந்தாலும், விவசாயிகள் எதிர்கொள்ளும் நிலைமைகள் ஏழ்மை பீடித்த தொழிலாளர்களின் அலைநகரங்களில் குடியேறுவதை குறைக்க முடியவில்லை மற்றும் இது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையைக் கீழறுக்க அச்சுறுத்தியது. சர்வதேச பொருளாதார பத்திரிகைகள் சில கடற்கரை நகரபகுதிகளில் மலிவான கிராம கூலித் தொழிலாளர் பற்றாக்குறை குறித்து விமர்சனங்களை வெளியிடத் தொடங்கியிருக்கின்றனர். உலகிலேயே மிகப்பெருமளவிற்கு விளையாட்டு பொம்மைகளையும் ஆயத்த ஆடைகளையும் தயாரித்து வருகின்ற Pearl River Delta வில் மட்டுமே 2-மில்லியன் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு மானியம் வழங்குவது, அதன் பெரும் மலிவான கூலி உழைப்புக் களஞ்சியத்தை - சீனாவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கின்ற "அனுகூலத்தை" - பாதிக்கின்ற அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. பொருளாதார அடிப்படையில் சீனத் தலைமைக்கு மில்லியன் கணக்கான கிராமப்புற ஏழைகளை நகரங்களுக்கு கட்டாயமாக அனுப்பும் அந்தக் கொள்கையை தொடர்வதை தவிர வேறுவழியில்லை. ஆயினும், அரசியல் அடிப்படையில் அதன் நடவடிக்கைகள் ஒரு சமூக காலக் குண்டை உருவாக்கி கொண்டிருக்கிறது: ஆட்சியானது பரந்த மக்களின் அதிருப்தியை தூண்டிவிடுவதோடு மட்டுமல்லாமல் தனது பாரம்பரிய ஆதரவு அடித்தளத்தை கிராமப்பகுதிகளில் இழந்து வருகிறது மற்றும் அது கடந்த 20- ஆண்டுகளுக்கு மேலாகபெரும் திரளாய் வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தையும் எதிர்நோக்கியுள்ளது. 1927-ல் மாவோ சேதுங்கின் முதல் நூல்களில் ஒன்றான ''Hanan- விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வு அறிக்கை'' என்ற நூல் -மிக பிரபலமாக கொண்டாடப்பட்டது ஆனால் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வேலையாக இருந்தது, அது தொழிலாள வர்க்கத்தின் அடித்தளத்திலிருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை பிரித்தெடுத்து ''விவசாய சோவியத்துக்களை" உருவாக்குவதை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது. மத்திய தலைமை எந்த வகையிலும் கண்டிக்காத, ஆனால் சீனாவின் கிராமப்புற ஏழைகள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை மட்டுமே விளக்குகின்ற ஒரு புத்தகத்தின் மீது பொதுவிவாதம் எதையும் நடத்துவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது, இன்றைய தினம் பெய்ஜிங் எதிர்நோக்கியுள்ள ஆழமான நெருக்கடியை எடுத்துகாட்டுகிறது. |