World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

Livio Maitan, 1923-2004: a critical assessment

Part 2: Castro, Che Guevara and the armed struggle

லிவியோ மைய்ற்ரான், 1923-2004; ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு

பகுதி 2: காஸ்ட்ரோ, சேகுவராவும் ஆயுதப்போராட்டமும்
By Peter Schwarz
5 November 2004

Back to screen version

இக்கட்டுரை செப்டம்பரில் ரோம் நகரில், தனது 81வது வயதில் காலமான லிவியோ மைய்ற்ரானுடைய அரசியல் வாழ்வைப் பற்றிய மூன்று-பகுதிக் கட்டுரையில் இரண்டாம் பகுதியாகும். ஏர்னஸ்ட் மண்டேலுடன், நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலக குழுவில் நன்கு அறியப்பட்டிருந்த பிரதிநிதியாகவும் சர்வதேச திருத்தல்வாத போக்குடையவராகவும் இருந்தார். கட்டுரையின் முதல் பகுதி நவம்பர் 4 (ஆங்கிலத்தில்) வெளிவந்தது. இறுதிப்பகுதி பின்னர் வெளியிடப்படும்.

கிழக்கு ஐரோப்பாவிலும், மேற்கத்திய தொழிற்துறைமயமாக்கப்பட்ட நாடுகளிலும், ஒரு புதிய சோசலிச உந்துதல் ஸ்ராலினிசக் கட்சிகளிடம் இருந்து வரும் என்ற எதிர்பார்ப்பையும், வளர்ச்சி பெற்று வரும் நாடுகள், இலத்தீன் அமெரிக்காவில் இது குட்டிமுதலாளித்துவ தேசியவாதிகளிடமும் இருந்துவரும் என ஐக்கியச் செயலகம் நம்பிக்கையை கொண்டிருந்தது. இந்த இரண்டு நினைப்புக்களிலுமே பொதுவாக இருப்பது நான்காம் அகிலத்தின் தலைமையில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரட்டப்படவேண்டும் என்ற கருத்து ஒதுக்கப்பட்டதான். இதற்கான ஆரம்ப முயற்சிகள் மற்ற சமூக சக்திகளுக்கு விடப்பட்டன.

சீனாவில், பப்லோவாதிகள் மாவோ சேதுங்கின் விவசாயப் படைகளை பெருமைப்படுத்தினர். அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணியிற்கு (FLN) தன்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு பப்லோ 1950 களில் கூறினார், அது வெற்றி அடைந்த பின்னர், அஹ்மத் பென் பெல்லாவின் முதல் அல்ஜீரிய அரசாங்கத்தில் சேர்ந்து, ஆபிரிக்கா மற்றும் உலகெங்கிலும் இருந்த தேசிய இயக்கங்களுடன் உறவுகளை ஒருங்கிணைத்து வந்தார்.

1959ம் ஆண்டு, பிடல் காஸ்ட்ரோவின் கெரில்லா படைகள் பாடிஸ்டா சர்வாதிகாரத்தை கியூபாவில் இருந்து வெளியே விரட்டியடித்தபோது, பப்லோவாதிகள் கியூப புரட்சியின் உற்சாக ஆதரவாளர்களாக மாறினர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை 1953 ம் ஆண்டு ஸ்தாபிப்பதற்கான ஆரம்ப முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), அது பப்லோவாதிகளுடன் மீண்டும் மறுஐக்கியப்படுத்தி கொள்கின்ற அடிப்படையில் கியூபாவில் உருவாக்கப்பட்டதை தொழிலாள அரசு என்று கோரியது.

காஸ்ட்ரோ ஆட்சி தேசியமயமாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது கியூபாவை ஒரு தொழிலாள அரசாக மாற்றியுள்ளது என்று உறுதியாகக் கூறப்பட்டமை மார்க்சிச பார்வையில் சோசலிசத்துடன் முற்றிலும் பிளவுபட்ட ஒரு கருத்தைத்தான் பிரதிபலித்தது. விவசாயிகளை முக்கியமாக நம்பியிருக்கும் குட்டி முதலாளித்துவ கெரில்லாத் தலைவர்கள் தொழிலாளர் அரசை, மிக அடிப்படையான தொழிலாளர்கள் சக்தியின் துணைகூட இல்லாமல் நிறுவமுடியும் என்றால், சோசலிசப் புரட்சியில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாகவும் நனவுபூர்வமாகவும் பங்கைக் கொண்டுள்ளது என்ற மார்க்சிசத்தால் மரபுவழியில் அவற்றிற்கு அளிக்கப்பட்டிருந்த பங்கு தவறு எனப் போய்விடும்.

மேலும் மிகப் பெரிய முறையில் ட்ரொட்ஸ்கி எப்பொழும் வலியுறுத்தியிருந்த சோசலிப் புரட்சியின் சர்வதேசத்தன்மையை பப்லோவாதிகள் புறக்கணித்தனர். வரலாற்றளவில் கருதும்போது, மனித சமுதாயத்தில் சோசலிசம் முதலாளித்துவத்தை விட உயர்ந்த கட்ட அபிவிருத்தியை பிரதிநிதிதத்துவப்படுத்துகிறது. முதலாளித்துவம் ஏற்கனவே தேசிய அரசின் கட்டமைப்பிற்கு அப்பால் தன்னுடைய உற்பத்தி சக்திகளை அது வளர்த்துள்ளது, ஏற்கனவே சாதிக்கப்பட்டு விட்டதை சோசலிச சமுதாயத்தால் திரும்ப மாற்ற சாத்தியக்கூறு இல்லை. இந்தக் காரணத்தால், ஸ்ராலினிச தத்துவமான "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்பது முற்றிலும் தவறானதாகப் போய்விட்டது.

இந்த மார்க்சிச, சர்வதேசிய நிலைப்பாட்டில் இருந்து, அக்காலகட்டத்தில் மற்ற தேசிய நாடுகளினால் செயல்படுத்தப்பட்டிருந்த அதேபோன்ற நடவடிக்கைகளில் இருந்து மாறுபட்டிருக்காத தன்மையை பெற்றிருந்த காஸ்ட்ரோ ஆட்சியின் தேசியமயமாக்கும் நடவடிக்கைகள் இரண்டாந்தர முக்கியத்துவத்தைத்தான் கொண்டிருந்தன. அதைவிட முக்கியமாள கேள்வி கியூப புரட்சி சர்வதேச சோசலிசப் புரட்சியின் அபிவிருத்திக்கு ஒரு ஆரம்ப நிலையை ஏற்படுத்தியதா என்பதே ஆகும். இவ்விதத்தில், கியூபாவில் நடந்தவற்றின் விளைவுகள் பேரழிவைத் தருவதாக இருந்தன.

கியூபாவை ஒரு தொழிலாளர்களின் அரசு என்று வெறுமனே புகழ்ந்ததுடன் பப்லோவாதிகள் மனநிறைவு கொள்ளவில்லை. அனைத்து இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் செயல்படுத்தப்பட்டு வந்த கெரில்லாப் போராட்டத்தின் கிராமப்புறத்தில் இருந்து தாக்குதல் என்ற கியூப வகை மாதிரி, ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குப் மிகப் பெரிய அழிவுதரும் விளைவுகளைக் கொடுத்தது. 1965ம் ஆண்டு கியூபாவில் இருந்து பொலிவியாவிற்கு சேகுவரா, அங்கு ஒரு கொரில்லாப் போராட்டத்தை தொடக்குவதற்கு சென்றபோது, ஐக்கிய செயலகக் குழுமம் அவருக்கு எல்லா ஆதரவும் தருவதாக வாக்களித்து அதன் பொலிவியன் பிரிவு கொரில்லாக்களுடன் சேர்ந்து கொள்ளத் தயராக இருப்பதையும் பிரகடனப்படுத்தியது. 1967ம் ஆண்டு கியூபாவில் நடைபெற்ற ஒரு இலத்தீன் அமெரிக்காவின் ஒருமைப்பாடு மாநாட்டில், ஐக்கிய செயலகத்தின் பிரதிநிதியாக, "சோசலிசத்தை அடைவதற்கான பாதையில் ஆயுதமேந்திய போராட்டம் என்பது தவிர்க்க முடியாத பங்கைக் கொண்டுள்ளது" என்று கூறியிருந்த அமெரிக்க SWP இன் ஜோசப் ஹான்சன் இருந்தார்.(8)

1969ம் ஆண்டு ஐக்கிய செயலகத்தின் 9ஆவது உலக மாநாடு சிறிதும் குழப்பமற்ற வகையில் பின்வருமாறு அறிவித்தது: "இலத்தின் அமெரிக்காவிற்கு அடிப்படையான, நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரே முன்னோக்கு, பல ஆண்டுகள் நீடிக்கும் தன்மையுடைய ஆயுதமேந்திய போராட்டம்தான். இந்தக் காரணத்தால், தொழில்நுட்ப முறையில் தயாரிப்பு, புரட்சிகரப் பணியின் ஒரு கூறுபாடு என்று மட்டும் கருதப்படாமல், அடிப்படையான கூறுபாடு என்று கொள்ளப்படவேண்டும்... ஒரு ஒட்டுமொத்த காலத்திற்கும், ஆரம்பத்தில் வெளியில் இருந்து வந்தது போலத் தோன்றினாலும் அல்லது ஒருபக்கத்தன்மையை (சேயின் பொலீவியக் கொரில்லாக்களைப் போல்) கொண்டிருந்தாலும் கெரில்லாப் போராட்டம் ஓர் அடிப்படை அச்சாணிப்போல் விளங்கும்." (9)

இந்தக் கருத்து ட்ரொட்ஸ்கியுடைய நிரந்தரப் புரட்சி தத்துவத்தை, ஒரு ஆயுதமேந்திய போராட்டத்தின் பொருட்டுத் தியாகம் செய்துவிட்டு, பாட்டாளி வர்க்கத்திற்கு பதிலாக கலாஷ்நிகோவையும் கைஎறிகுண்டையும் புரட்சிகரக் காரணியில் ஒரு மாற்றாகக் கொண்டு வந்துள்ளது. இந்த முன்னோக்கு கொலைவெறிகொண்ட, தீவிரத் தன்மை கொண்டதாக தோன்றினாலும், தொழிலாள வர்க்கத்திடம் பப்லோவாதிகள் கொண்டுள்ள ஆழ்ந்த அவநம்பிக்கை தன்மையையும், இகழ்வையும் தான் உண்மையில் வெளிப்படுத்துகிறது----- அதுவும், தொழிலாள வர்க்கம் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகரித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்--- அதே வழிவகையில் தீவிரத்தன்மையையும் பெற்றுவரத் தொடங்கியபோது இது நிகழ்ந்தது.

ஐக்கிய செயலகத்தின் முன்னோக்கை கொள்ளுபவர் எவரும் நகரங்களுக்கு தங்கள் முதுகுகளை காட்டிவிட்டு, கிராமப்புறத்தில் நிகழும் கெரில்லாப் போர்களுக்கு ஆதரவு தரவேண்டியிருக்கும்; அவ்வாறு செய்தவர்கள் கடுமையான விலையை அதற்குக் கொடுத்தனர். நகர தொழிலாள வர்க்கத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, சக்திவாய்ந்த ஓர் இராணுவத்தால் எதிர்கொள்ளப்பட்டு, ஐக்கிய செயலகத்தில் நல்லெண்ணத்துடன் செயல்புரிய வந்திருந்த பல இளைஞர்கள், மிக எளிதில் இராணுவத்திற்கு இரையானார்கள்.

1970களின் ஆரம்பத்தில், ஐக்கியச் செயலகத்தின் செய்திப்பத்திரிகை பிரிவு புரட்சிகர தொழிலாளர் கட்சி (PRT-ERP) உடைய மிக ஆற்றல் நிரம்பியிருந்த, ஆயுதமேந்திய நடவடிக்கைகளை பெரிதும் பாராட்டி, இது மாவோவியிசத்திற்கு மாறியதற்கு முன்பு, இந்தப் பிரிவை அதன் அதிகாரபூர்வமான பிரிவாக அங்கீகரித்தது. முடிவில், PRT-ERP பிரிவு இராணுவத்தால் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது.

இத்தகைய அரசியலின் போக்குடைய வளர்ச்சி மற்றும் அதுபற்றிய தகவல்களை பரப்புவதிலும் லிவியோ மைய்ற்ரான் ஒரு முக்கியமான பங்கைக் கொண்டிருந்தார். ஐக்கிய செயலகத்தில் அவர் இலத்தீன் அமெரிக்கா, சீனா இவற்றைப் பற்றி ஒரு வல்லுனராகக் கருதப்பட்டு அப்பகுதிகளிலுள்ள கட்சிகளின் தீர்மானங்களை விளக்கிக் கூறுவதில் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார்.

ஐக்கிய செயலகத்துடன், இப்பிரச்சினையில் இதற்கு உடன்படாதிருந்த சீனாவின் பப்லோவாதி பெங் ஷூஷியின் கருத்தின்படி, ஐக்கிய செயலகத்தின் நிர்வாகக் குழு கெரில்லாப் போராளிகளின் புறம் செல்வதை நியாயப்படுத்திய 1968ம் ஆண்டின் ஆவணம் மைய்ற்ரானால்தான் தயாரிக்கப்பட்டிருந்தது. (10) 1969ம் ஆண்டின் உலக மாநாட்டில், மைய்ற்ரானும் மண்டேலும் கொரில்லா மூலோபாயத்தை பற்றிய முக்கியமான ஆதரவினை திரட்டுபவர்களாக இருந்தனர்; ஆயினும்கூட அக்கருத்து கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதிகளால் நிராகரிக்கப்பட்டது.

1997ம் ஆண்டு, சேகுவராவின் 30 வது ஆண்டு மறைவு பற்றி ஐக்கியச் செயலகத்தின் அதிகாரபூர்வமான ஏடான Inprecor இல் அமைப்பின் கண்ணோட்டத்தைப் பற்றி திறனாய்வு இல்லாத முறையில் சுருக்கமாக ஒரு கட்டுரையை மைய்ற்ரான் வெளியிட்டார். இக்கட்டுரை சேகுவராவைப் பற்றிய துதியை புகழாராமகச் சூட்டியது. அதிகாரபூர்வமான ஐக்கிய செயலகத்தின் வெளியீடுகளில் இருந்து பல மேற்கோள்கள் வடிவில், அவர் "தலை சிறந்த சோசலிஸ்ட்", "சோசலிசப் புரட்சியின் சர்வதேச உருவகம்" ததும்பி நின்றவர் என்றும் "ஒரு புதுதலைமுறைப் புரட்சியாளர்களின் அடையாளச் சின்னமாக இருந்தார்" என்றும் கட்டுரையில் கூறப்பட்டது.(11)

1968ம் ஆண்டும் அதன் விளைவுகளும்

இலத்தீன் அமெரிக்காவில் நடைபெற்ற கெரில்லா போராளிகளிகளுக்கான ஆதரவு இத்தாலியில் நேரடி விளைவைக் கொண்டிருந்தது. 1970 களில் இடதுசாரிச் சிந்தனையை ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த அரசியல் குழப்பத்திற்கு இது கணிசமான பங்கைக் கொடுத்ததுடன் சிலநேரம் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட ஏராளமான மாவோவாத, பெருங்குழப்பவாதிகளின் அமைப்புக்கள், நிறுவனங்கள் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நிலையின் எழுச்சியும் ஏற்பட்டது.

இத்தாலியில் இளைஞர், மற்றும் தொழிலாள வர்க்கத்தினரை தீவிரமயமாக்கும்போக்கு 1960களின் நடுப்பகுதியில் ஆரம்பித்து 1970களிலும் தொடர்ந்து அது வலதுபுறம் தீவிரமாகத் திரும்பியிருந்த, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCI) கடுமையான மோதல்களை ஏற்படுத்தியது. 1972ம் ஆண்டு, என்ரிக்கோ பெர்லிங்க்வர் (Enrico Berlinguer) கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முதலில், மாஸ்கோவில் இருந்து தனிமைப்படுத்திக்காட்டி சமூக ஜனநாயக கட்சியுடன் சமரசத்துடன் இவர் கொண்டிருந்த "ஐரோப்பியக் கம்யூனிசப்'' போக்கு ஐக்கிய செயலகத்தினால் உற்சாகத்துடன் ஆதரவு கொடுக்கப்பட்டது. ஆனால் இக்கொள்கையில் இருந்த வலதுசாரி உள்ளடக்க தன்மை ஐயத்திற்கிடமின்றித் தெரிந்தது. பெர்லிங்க்லர் "வரலாற்றுரீதியான சமரசத்தை" கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளுடன் கொண்டு அரசாங்கத்தில் சேருவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். 1976ல் இருந்து 1979வரை இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியுடைய பாராளுமன்றக் குழு, மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கவில்லை என்றாலும், அரசாங்க முகாமிற்கு ஆதரவு கொடுத்து வந்தது.

இப்படி, இந்தப் பெரும் புகழ்பெற்ற இத்தாலிய "ட்ரொட்ஸ்கிசவாதி" தன்னுடைய நம்பிக்கையை இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியை மீண்டும் உயிர்ப்பிப்பதற்குக் கொண்டிருந்த அதேநேரத்தில், மாவோ, மற்றும் சேகுவரா இவர்களைப் பற்றிய பரந்த முறையில் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்த போலிக் கனவுகளையும் வளர்த்த தன்மை, ஒரு புதிய தலைமுறையையே நான்காம் அகிலத்தின் உண்மையான மார்க்சிச முன்னோக்குடன் அரசியலில் நுழைய விடாமற் செய்துவிட்டது.

Gruppi Comunisti Rivoluzionari என்னும் மைய்ற்ரானுவைடய சொந்த அமைப்பு எப்பொழுதுமே குறிப்பிடத்தக்க வகையில் செல்வாக்கை அடைந்ததில்லை. அதன் உறுப்பினர் எண்ணிக்கை ஒருபொழுதும் 200ஐத் தாண்டியதில்லை, ஒரே ஒரு முறைதான் 1980 ல் தேர்தல்களில் அது தனித்துப் போட்டியிட்டது.

ஆயினும்கூட, மைய்ற்ரானுடைய செல்வாக்கைக் குறைமதிப்பிடக் கூடாது. பல தசாப்தங்களில், ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் GCR ஐக் கடந்து வந்துள்ளனர். அவர்களுள் 1970களின் குழப்பமான தீவிரவாத குழுக்களில் முக்கிய பங்கு கொண்டிருந்தவர்கள் பலரும், ஏதேனும் ஒரு நேரத்தில் மைய்ற்ரானுடைய கூடத்தில் பயின்றவர்களாக இருந்தவர்கள் ஆவர். 1990களில், அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் மைய்ற்ரானுடன் Rifondaazione Comunista என்னும் குடையின் கீழ் இருந்தனர்.

1968ம் ஆண்டு மாணவர் எழுச்சியின் உயர்கட்டத்தில், மைய்ற்ரான் தன்னுடைய அமைப்பின் மீது தற்காலிகாமாகக் கட்டுப்பாட்டை இழந்திருந்தார் போலும். GCR ல் பெரும்பாலானவர்கள் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அரசியல் பணியை முடிவிற்குக் கொண்டுவந்து தன்னியல்பாக இயக்கத்தினுள் தமது அமைப்பையே கலைத்துவிட்டனர். அவர்கள் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி நிலைநோக்கை நிராகரித்திருந்தது மட்டும் இல்லாமல், ட்ரொட்ஸ்கிசத்தின் ஏதாவது ஒரு அமைப்பையும் மறுத்துவிட்டனர். GCR கூட்டத்தில், ஒரு பெரும்பான்மையைச் சேர்ந்த பேச்சாளர் இத்தகைய கலைப்புவாத முறையை நியாயப்படுத்திப் பேசியதாவது: "ட்ரொட்ஸ்கிச மரபியம் இப்பொழுது எல்லா புரட்சியாளர்களுடைய பொதுச் சொத்து; அதன் பாதுகாப்பு என்பது மட்டும் ஓர் அமைப்பு நிலைநிறுத்தப்படுவதற்குக் காரணமாகி விடாது." (12)

இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருக்கும் பணியை மைய்ற்ரான் உடனடியாக விட்டுவிடத் தயாரக இல்லை, ஆனால் அவருடைய எதிர்ப்பாளர்களிடம், தேவையானால் வேறுவித நிலைநோக்கை கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். மாநாட்டில் தன்னுடைய எதிர்ப்பாளர்களுக்குப் பதில் கூறுகையில், அமைப்பை ஒரு தள்ளிவிட முடியாத வழிபாட்டுப் பொருள் என ஆக்கிவிடக் கூடாது என்றும் "புத்தம் புதிய அமைப்பு, நடைமுறைக்கேற்றவாறு" கொண்டுவரப்படுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேணடும் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: "நம்முடையதைவிட பரந்ததாக இத்தாலியில் ஒரு புரட்சிகரப் போக்கு வளர்ந்து, மக்கள் இயக்கத்தை அது முன்னின்று நடத்துமேயாயின், அது சரியென்று கொள்ளும் அளவுகோலை நாம் ஆராய்வோம். நாம்தான் முதலில் தோன்றியவர்கள் என்று வாதிடாமல், அத்தகைய இயக்கத்தின் வெற்றிக்கு நம்முடைய பங்கை ஆற்றுவோம். ஆனால் அத்தகைய நிலை இப்பொழுது இல்லை."

மைய்ற்ரான் மற்றும் அவருடைய எதிர்பாளர்கள் இருவருடைய நிலைப்பாடுமே நான்காம் அகிலத்தின் பதாகையில் சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தினுடைய இயக்கத்தின் வளர்ச்சியை ஒதுக்கி வைத்தது. இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் வாகனத்தில் இருந்து குதித்து குட்டிமுதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தின் பின் சேர்த்துச் செயல்படுவதற்கான நேரம் சரியாக உள்ளதா என்பதைப் பற்றிய தந்திரோபாயத்தை பற்றியே அவர்களுக்கிடையே பிளவு இருந்தது.

பெரும்பான்மை பிரிவு பின்னர் Avanguardia Operaia என்ற குழுவை தோற்றுவிக்க காரணமாக இருந்தது, அது வெளிப்படையாக மாவோயிசத்திற்கு தன்னுடைய ஆதரவைப் பிரகடனப்படுத்தியது. நான்காம் அகிலத்தை நிராகரித்ததற்கு, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஒன்றாக வளர்வதற்கும் "புறநிலையான தற்போதைய இடதுசாரிகளான மாவோயிசம், காஸ்ட்ரோயிசம்" போன்றவற்றுடன் இணைந்து வளரவும், அது தடையாக இருந்தது என்று நியாயப்படுத்திய முறையில் கூறியது.

பெரும்பான்மையின் மற்றொரு பிரிவு Il Manifesto குழுவுடன் சேர விழைந்தது, இக்குழு 1969ம் ஆண்டு இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் பிளவடைந்து சென்றவர்களால் அமைக்கப்பட்டிருந்தது, இவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவுஜீவிகள், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் பல்மிரோ டோக்லியட்டி (Palmiro Togliatti) இன் மரபில் கடந்த காலக் கருத்துக்கள், பிராங்க்பேர்ட் கூடம் (Frankfurt School-தொழிலாள வர்க்கத்தை நிராகரித்த குட்டிமுதலாளித்துவ பிரிவு), மாவோயிச நிலைப்பாடுகள் இவற்றின் கலவையைக் கொண்ட கருத்துக்களை முன்னெடுத்தனர். இன்று இக்குழுவில் எஞ்சியிருப்பது இதே பெயரை உடைய ஒரு நாளேடு ஒன்றுதான்.

சிறுபான்மையின் ஆதரவைக் கொண்டிருந்த மைய்ற்ரான் மீண்டும் GCR ஐ நிறுவினார், இது விரைவில் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தன்னுடைய பணியைக் கைவிட்டு, புதிதாக அமைக்கப்பட்டிருந்த தீவிரப்போக்கு அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்ற விழைந்தது. 1969ம் ஆண்டு, ஐக்கியச் செயலகத்தின் 9வது மாநாடு "பெரும்பாலான மக்களின் செல்வாக்கைக் கொண்டு புத்தம் புதிய அமைப்பை" உருவாக்கும் வகையில் பொருத்தமான சார்பு இருக்கும் என்று முடிவெடுத்தது. இதே மாநாடு தன்னுடைய ஆதரவிற்கு இலத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கும் வெளிப்படுத்தியது. சீன கலாச்சாரப் புரட்சி பற்றி ஒரு தீர்மானத்தை மைய்ற்ரான் முன்மொழிந்தார்.

ஆரம்பத்தில், மைய்ற்ரானும் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியுடைய பிளவினரான Il Manifesto உடன்நெருக்கமான ஒத்துழைப்பைக் கொள்ள வேண்டும் என்று பாடுபட்டார். "புரட்சி இடதுடன் சேர்ந்து வளருவதை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி, Il Manifesto விற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்" என்று அவர் 1972ல் எழுதினார். "Il Manifesto விற்கு உருக்கொடுத்த இயங்கியல் ஆய்வுடன் நம்மை இணைத்துக் கொள்ளும் வகையை ஆராயலாம்; அத்தகைய நிலைப்பாடு இன்னமும் தொடர்ந்துள்ளது. இதனால் மற்றைய சக்திகளை நாம் ஒதுக்கி விட்டுள்ளோம் என்ற பொருள் இல்லை..." (14)

பின்னர், 1970 களின் நடுப்பகுதியில் இருந்து, அவர் மாணவர் இயக்கத்தில் இருந்து வெளிப்பட்டிருந்த அமைப்புக்களின் பால் கவனத்தைச் செலுத்தினார். PDUP (Partito di unità proletaria), Avanguardia Operaia மற்றும் Lotta Continua ஆகியவை இக்குழுக்கள் ஏராளமானவற்றுள்ளிருந்து சாரமான திரட்டாகவும் மிகுந்த செல்வாக்கு படைத்தவையாகவும் வெளிவந்தவையாகும். இவை மாவோ, ஹோ சி மின் மற்றும் சேகுவரா ஆகியோரைப் பெரிதும் புகழ்ந்து, தன்னியல்பாக, போலிப்-புரட்சிக் கருத்துக்களின் கலவையை பிரதிபலித்தன. அவை வேலைநிறுத்தங்களையும் மற்ற "நேரடி நடவடிக்கைகளையும்" வளர்த்து அரசியல், சமுதாய மோதல்களில் மிக அதிகமான பங்கை எப்பொழுதும் கொண்டிருந்தன. மொத்தத்தில் அவை கிட்டத்தட்ட 10,000 உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொண்டிருந்தன.

1974ம் ஆண்டிற்குப் பின்னர் சமுதாயப் போராட்டங்களின் குறைவு இந்தக் குழுக்களை ஆழ்ந்த நெருக்கடியில் தள்ளியது. ஒரு சிறிய சிறுபான்மை ஆயுதமேந்திய போராட்டம், பயங்கரவாதம் இவற்றின் பால் திரும்பியது; அது கூடுதலான, விரிவான, பரந்த வடிவமைப்பை, மற்ற எந்த ஐரோப்பிய நாட்டிலும் இல்லாத முறையில் கொண்டு வந்தது. இதன் விளைவாக தொழிலாள வர்க்கத்திற்கு இன்னும் தெளிவற்ற சார்புதான் ஏற்பட்டது. எஞ்சியிருந்தவர்கள் முற்போக்கான, தீவிர போராட்ட நடவடிக்கைகளின் எத்தகைய வடிவத்தையும் கைவிட்டு, மரபு வழியிலான அரசியல் போராட்டத்திற்குத் திரும்பினர். 1976ம் ஆண்டு, மேலே கூறப்பட்ட மூன்று அமைப்புக்களும் கூட்டாக பாராளுமன்றத் தேர்தல்களில் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் (Democrazia Proletaria), என்ற பதாகையின்கீழ் போட்டியிட்டனர்.

GCR அந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்கு முழு ஆதரவு கொடுத்தது. Lotta Continua உடைய Adriano Sofri உடன் மைய்ற்ரானும், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட தேர்தல் கூட்டங்களில் பங்கு பெற்றார். ஆனால் இதன் முடிவு ஏமாற்றத்தைக் கொடுத்தது. கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் வலுவான கட்சியாகத் தொடர்ந்திருந்து, அவர்களுக்குப் பின் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி அதன் வரலாற்றிலேயே மிகச்சிறந்த வாக்குகளைப் பெற்று இருந்தது. Democrazia Proletaria கிட்டத்தட்ட அரை மில்லியன் வாக்குகளைப் பெற்று 6 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் மொத்த வாக்குகளில் 1.5 தான் அதன் சதவிகிதம் அது எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாகவே இருந்தது. CGR உடன் நெருக்கமாக ஒத்துழைத்திருந்த Lotta Continua, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தன்னையே கலைத்துக் கொண்டுவிட்டது.

தொழிலாள வர்க்கத்திற்கு செயல்படத்தக்க வகையில் ஒரு முன்னோக்கு இல்லாதது இத்தாலிய ஆளும் வர்க்கத்தையும், அதன் முக்கியமான அரசியல் ஆதரவு கொடுக்கும் அமைப்பான இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியும் 1968ல் இருந்து 1975 வரை நடந்த தீவிமான வர்க்கப் போராட்டங்களில் தப்பிப் பிழைத்து திருப்பித் தாக்குதலில் இறங்கிவிட்டன. இடது அமைப்புக்கள் ஏமாற்றத் திகைப்பை அடைந்தன, அது 1980 களில் அது தொடர்ந்திருந்தது. Democrazia Proletaria, ஆரம்பத்தில் ஒரு தேர்தல் பங்கு பெறும் கட்சி என அமைக்கப்பட்டிருந்தது, பின்னர் தொடர்ந்து செய்லபட்டு எஞ்சியிருந்த தீவிரபோக்கு அமைப்புக்களின் இணையும் கலம் ஆயிற்று.

1989ம் ஆண்டில் மைய்ற்ரானுடைய குழு (Lega Comunista Rivoluzionaria, LCR என்று வேறு பெயரிடப்பட்டது), பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்தது. இரு ஆண்டுகளுக்கு பின்னர் முழு அமைப்பும், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப்பட்ட பின்னர் வெளிவந்த ifondazione Comunista உடன் இணைந்தது.

அப்பொழுதிலிருந்து மைய்ற்ரானும் அவருடைய ஆதரவாளர்களும் தங்களுடைய அரசியல் ஆற்றல் முழுவதையும் Rifondazione உடைய அமைப்பிற்குப் பாடுபட்டனர்; பிரான்சின் பப்லோவாத Alain Krivine, மைய்ற்ரான் பற்றிய தன்னுடைய இரங்கல் செய்தியில் உறுதிபடுத்துவதாவது: "1991-ல் இருந்து, லிவியோ இந்தப் புதிய கட்சியின் தலைமையிடத்திற்கு ஒவ்வொரு மாநாட்டிலும் தேர்ந்தெடுக்கப்படார். நான்காம் அகிலத்தின் உறுப்பினர்கள், தலைமையின் கருத்தையொட்டி அதன் ஆரம்பத்தில் இருந்தே அதன் வளர்ச்சியில் முழுமையாகப் பங்குபெற முடிவு கொண்டிருந்தனர்.... நம்முடைய தோழர்கள் சிலர் செனட்டில் பொறுப்பான பதவிகளை எடுத்துக் கொண்டனர், கட்சி நிறுவனங்களிலும் அதேபோல் கொண்டனர்; மேலும் Liberazione நாளேட்டிலும் தலைமையக் கொண்டனர்." (13)

தொடரும்

Notes:
8) Quatrième Internationale, Nov/Dec. 1967
9) "Résolution du 9o Congrès Mondial sur l'Amérique Latine," Quatrième Internationale May 1969
10) "Criticisms of the Positions of the SWP (USA)" by Peng Shuzi, March 16, 1981
11) "Die Vierte Internationale, die kubanische Revolution und Che Guevara," Inprekorr no. 318
12) Bandiera Rossa, April 15 1968, quoted by Yurii Colombo, op cit.
13) Bandiera Rossa, April 1 1968, quoted by Yurii Colombo, op cit.
14) Quarta Internazionale n. 5-6, giugno 1972
15) Alain Krivine, "Ciao compagno!," Rouge 30.9.2004


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved