World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraqi elections announced amid mass repression

வெகுஜன ஒடுக்குமுறைக்கு நடுவில் ஈராக் தேர்தல்கள் அறிவிப்பு

By James Cogan
22 November 2004

Back to screen version

பல்லூஜாவில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட படுகொலையைத் தொடர்ந்து, அமெரிக்கா நியமித்துள்ள இடைக்கால அரசாங்கம் வாரக்கடைசியில் வெளியிட்டுள்ள அறிப்பில் 2005 ஜனவரி 30-ல் தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.

தேர்தல்கள் நடைபெற்றாலும், அது சட்டபூர்வமானதாக இருக்காது. ஈராக்கின் எண்ணெய் வளங்களை அமெரிக்க பெரு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்துவிட்டு, அந்த நாட்டில் அமெரிக்க ராணுவம் காலவரையற்று நீடிப்பதற்கு உடன்படும் ஒரு விசுவாசமான அமெரிக்காவின் பொம்மை அரசாங்கம் உருவாவதில் விளைவைக் கொண்டதாக அந்தத்தேர்தல் முடிவு கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். அமெரிக்கா மற்றும் எல்லா வெளிநாட்டு துருப்புக்களையும் ஈராக்கிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டுமென்று பெரும்பாலான மக்களது கருத்தை எடுத்துவைக்கின்ற, எந்த வேட்பாளரும் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பகிரங்கமாக அமெரிக்க ஆதரவு காட்டுகின்ற ஈராக் அரசியல் அமைப்புகளான--- குர்து தேசியவாதக் கட்சிகள், இடைக்கால பிரதமர் இயத் அல்லாவியின் ஈராக்கிய தேசிய உடன்பாடு, அஹமது சலாபியின் ஈராக்கிய தேசிய காங்கிரஸ், ஈராக் இஸ்லாமிய புரட்சிக்கான ஷியாக்களின் சுப்ரீம் கவுன்சில் (SCIRI) ஆகியவை தவிர எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலில் பங்கெடுத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சென்றவாரம் 47-ஈராக் அரசியல் குழுக்களின் பிரதிநிதிகள் பாக்தாத்தில் கூடி தாங்கள் வாக்குப்பதிவை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அந்த அமைப்புக்களில் முஸ்லீம் அறிஞர்கள் (Scholars) சங்கமும் உண்டு (AMS), அவர்கள் 3000- திற்கும் மேற்பட்ட சுன்னி மசூதிகளுக்காகப் பேசும், டஜன் கணக்கான சிறிய சுன்னி கட்சிகள், துர்க்மேன் இனக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈராக்கிய துருக்கோமன் முன்னணி, ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டு முன்னணி மகளிர் அமைப்புக்கள், ஒரு கிறிஸ்தவக்கட்சி, ஷேக் ஜவாத் காலிசி தலைமையிலான அமைப்பு உட்பட 8- ஷியைட்டு கட்சிகள், 1920-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்கு தலைமை வகித்து நடத்திச்சென்ற மத போதகரின் வாரிசுதான், ஷேக் ஜவாத் காலிசி. மற்றும் நஜாப்லிருந்து செயல்படும் அயத்துல்லாஹ் காசிம் தாயி தலைமையிலான இயக்கம் ஆகியவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

தேர்தலை அமெரிக்கா ஆதரவு இடைக்கால அரசாங்கம் திணித்துள்ளது என்றும் ஈராக்கிலுள்ள தெளிவான பெரும்பான்மை அரசியல் மற்றும் மத சக்திகள் அந்தத்தேர்தலை புறக்கணிப்பதாகவும் அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டுள்ளது. AMS பேச்சாளர் செய்தியாளர் கூட்டத்தில், ''இந்த தேர்தல்கள் ஈராக் மக்களின் உண்மையான விருப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்தத் தேர்தல் முடிவுகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டவை என்று நாங்கள் உறுதியாக கருதுகிறோம். அவர்களை (அமெரிக்கர்கள்) ஆதரிப்பவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார். அந்தக் கூட்டத்தில் மொக்தாதா அல்-சதர் தலைமையில் இயங்கும், ஷியைட்டு இயக்கத்தினர் கலந்து கொள்ளவில்லை, அந்த அமைப்பும் கூட தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென்று அழைப்புவிடுத்துள்ளது.

இந்தக் கட்டத்தில், முன்னணி ஷியைட் மத போதகரான அலி அல்-சிஸ்தானி இந்த தேர்தலில் ஈராக்கின் ஷியா பெரும்பான்மையினர், பங்கெடுத்துக்கொள்ள வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை விடுத்துக்கொண்டேயிருக்கிறார். என்றாலும் இந்த நிலைப்பாட்டை அவர் நிலைநாட்ட முடியாது என்று நம்புவதற்கு சிறந்த அடிப்படைகள் உள்ளன.

பல்லூஜா மீது நடத்தப்பட்ட தாக்குதல் பல வழிகளில் அரசியல் நிலவரத்தை மாற்றிவிட்டது. ஈராக்கியர் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்ற அளவிற்கு அமெரிக்க இராணுவம் நாட்டின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றை மண் மேடாக்கிவிட்டது மற்றும் மசூதிகள் மீதும், மருத்துவ மனைகளிலும், குண்டுவீசி தாக்கியது. பல்லூஜாவினை பாதுகாப்பவர்களை ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்கப்படைகள் இரசாயன ஆயுதங்களையும், விஷ வாயு குண்டுகளையும் வீசியது என்றும், காயம்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானவர்களை மரைன்கள் சுட்டுக் கொன்றும் உள்ளனர் என்றும் ஈராக்கில் வதந்திகளும் உலவுகின்றன.

ஆக்கிரமிப்புப்படைகள் மீது ஈராக் மக்களது அணுகுமுறை எவ்வாறு உள்ளது என்பதற்கான ஒரு வெளிப்பாடு ஒரு ஈராக் இளம்பெண்ணை ஆசிரியராகக் கொண்டுள்ள ''பாக்தாத் பற்றி எரிகிறது'' என்ற வலைதளத்தில் இருக்கிறது. நவம்பர் 16-ல் அவர் எழுதினார்: ''மக்களுக்கு என்ன புரியவில்லை என்றால் இந்த அமெரிக்க இராணுவம் முழுவதையும், இந்தப் பைத்தியம் தொற்றுநோய் பீடித்துள்ளது. சென்ற ஆண்டு இந்தக் கொலைக்காரர்கள் சித்தரவதை செய்பவர்கள், மற்றும் இன வெறியர்கள் டாங்கிகளிலும், துப்பாக்கிகளை கையில் ஏந்தியும் சுற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. அது கொந்தளிப்பாக இருந்தாலும், அச்சமாக இருந்தாலும் எதிரி என்றாலும் அதைப்பற்றி கவலைப்படவில்லை..... அது கொலைதான். கொலைகாரர்களால் நாங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம்''

இந்த நாட்டின் மீதான இராணுவ பிடிப்பிற்கு கடுமையான சவால்விடுகிற நிலை தோன்றும் என்பதற்கு எல்லா வகையான அறிகுறிகளுடனும், சுன்னி முஸ்லீம்கள் பிரதானமாக இருக்கும் பிராந்தியங்களான மத்திய மற்றும் வடக்கு ஈராக்கில் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தற்போது கிளர்ச்சி நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Anbar மாகாண தலைநகரான ரமாதி நகரைச்சுற்றி இரண்டு பட்டாலியன்கள் கடற்படையின் நிலப்படைப்பிரிவு ஒரு இரத்தக்களரியான சண்டையில் ஈடுபட்டிருக்கிறது. பல்லூஜாவோடு சேர்ந்து ரமாதியும் ஈராக்கிய கிளர்ச்சியின் மையங்களுள் ஒன்றாகும். இதர மரைன் பிரிவுகள் சமாராவில் எதிர்ப்பினரை அடக்குவதற்கு முயன்று வருகின்றனர்.

ஈராக்கின் மூன்றாவது பெரிய நகரமான மோசூலில் 3,500 போலீசார் தங்களது கடமையை துறந்துவிட்டு கிளர்ச்சிக்காரர்களின் வரிசையில் சேர்ந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நகரத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் தன் கையில் எடுத்துக்கொள்வதற்கு 2500-க்கு மேற்பட்ட அமெரிக்கத்துருப்புக்கள், ஆயிரக்கணக்கான குர்திஸ் peshmerga குடிப்படைகள் ஆதரவோடு போரிட வேண்டியிருந்தது. இந்த வாரக்கடைசியில், கொரில்லாக்கள் வாக்குப்பதிவு படிவங்கள் வைக்கப்பட்டிருந்த அரசாங்க கிடங்கு ஒன்றை எரித்து தரைமட்டமாக்கியதுடன் பிடிக்கப்பட்ட ஒன்பது அரசாங்கத்துருப்புக்களையும் கொன்றனர்.

ஈராக்கின் வடபகுதி எண்ணெய்வயல்கள், கிர்குக்கிற்கு மேற்கே உள்ளன. அங்கு 6- எண்ணெய் கிணறுகளில் கிளர்ச்சிக்காரர்கள் நாசவேலைகள் மூலம் தீவைத்துவிட்டனர்.

இது போன்ற கொரில்லா தாக்குதல்களுக்கு புஷ் நிர்வாகமும், இடைக்கால அரசாங்கமும் தருகின்ற பதில் ஒடுக்குமுறையை முன்னெடுப்பதுதான். பல்லூஜா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு எதிராக உரையாற்றிய முன்னணி மதபோதகர்களை இயத் அல்லாவி கட்டளைப்படி நாடு முழுவதிலும் கைது செய்து கொண்டிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க மற்றும் அரசாங்க துருப்புக்கள் பாக்தாத்திலுள்ள அபு ஹனீபா மசூதியில் திடீரென்று புகுந்து 2- காவலர்களை கொன்றுவிட்டு அந்த மசூதியின் இமாமும், முன்னணி AMS உறுப்பினருமான மூ ஆயத் ஆதாமி உட்பட 40- க்கு மேற்பட்டோரை கைது செய்தனர். அதே நாளில் நஜாப்பில் சதர் இயக்க தலைவர்களுள் ஒருவரான ஷேக் அசிம் அபு ரஹீப் கைது செய்யப்பட்டார். சனிக்கிழமை இரவு பாக்தாத்திலுள்ள அல் முஸ்தபா மசூதியில் அமெரிக்கத்துருப்புக்கள் திடீரென்று புகுந்து மற்றொரு முன்னணி சுன்னி மதபோதகர் தவுரைத் பக்கிரியை, ஹக்லானியா நகரில் கைது செய்தனர்.

பாக்தாத் உட்பட டஜன் கணக்கான பெரிய மற்றும் சிறிய நகரங்கள் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் உள்ளன. இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறுகின்ற சண்டைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சுன்னி மசூதிகளில் துருப்புக்கள் புகுந்ததற்கு பதிலடி நடவடிக்கையாக எதிர்ப்பு போராளிகள் தலைநகர் முழுவதிலும் தாக்குதல்களை நடத்தி குறைந்த பட்சம் ஒரு அமெரிக்கப் போர்வீரரை கொன்றனர். மற்றும் பிரதான சுன்னி புறநகரான அஜாமியாவிலிருந்து அமெரிக்கப்படைகள் விலக்கப்படுகிற நிலையை உருவாக்கினர். பாக்தாத் நகரவாசி ஒருவர் AP செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும்போது ''பாக்தாத் இப்போது ஒரு போர்க்களமாகிவிட்டது மற்றும் இப்போது நாங்கள் அதன் நடுவிலிருக்கிறோம்'' என்று கூறினார்.

பிரிட்டனிலிருந்து செயல்படும் ஒரு ஆய்வாளரான Toby Dodge, அல் ஜெசீரா வலைத் தளத்திற்கு பேட்டியளித்தபோது, ''அந்நியப்படலால் கிளர்ச்சி என்பது ஒரு தேசிய இயல்நிகழ்ச்சியாக தூண்டிவிடப்பட்டுள்ளது. இந்தப் போரில் வெற்றிபெற முடியுமென்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் ஈராக் சமூகம் முழுவதிலும் ஆதரவு தளத்திலிருந்து அவர்கள் அந்நியப்பட்டிருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டார்.

ஒரு அமெரிக்க இராணுவ அறிக்கையின் சில பகுதிகள் சென்றவாரம் நியூயோர்க் டைம்ஸிற்கு இரகசியமாக தரப்பட்டன. அதில் ஈராக் நிலவரம் சீர்குலைந்து கொண்டுவருவது குறித்து அமெரிக்க ஆயுதப்படைகளிடையே பெருகிவரும் கலவர உணர்வு வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கிறது. பல்லூஜா பகுதியில் அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்கு நிறுத்தப்படா விட்டால், அந்த நகரம் மீண்டும் வேகமாக எதிர்ப்பு போராளிகளது கையில் சிக்கிவிடுமென்று அந்த அறிக்கை எச்சரித்தது. என்றாலும், பல்லூஜாவில் நிரந்தரமாக 10,000 துருப்புக்களை நிறுத்திவைக்கின்ற அளவிற்கு அமெரிக்க இராணுவத்திடம் படைபலம் இல்லை மற்றும் கிளர்ச்சி நடைபெறுகிற நகரங்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டு வருவதால் அங்கெல்லாம் நடவடிக்கைகளை எடுப்பதற்கு போதுமான துருப்புக்கள் இல்லை. அமெரிக்கப் போர்வீரர்கள் சாவு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நவம்பர் மாதம் இறுதிவரை 100- துருப்புக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் மற்றும் 800- பேர் காயம் அடைந்துள்ளனர்.

அடிக்கடி அமெரிக்க இராணுவ ஆணையகத்தின் கருத்துக்களை எடுத்துரைக்கின்ற செனட்டர் John McCain தேர்தல்களை கண்காணிப்பதற்காக ஈராக்கிற்கு மேலும் 40,000 முதல் 50,000- அமெரிக்கத் துருப்புக்கள் அனுப்பப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஏற்கனவே ஈராக்கில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான துருப்புக்கள் அடுத்த பல மாதங்களில் மீண்டும் ஈராக்கிற்கு பணியாற்றத் திரும்பவிருக்கின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved