World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Great power rivalries erupt over disputed election in Ukraine

உக்ரைனில் பூசலுக்குட்பட்ட தேர்தலையொட்டி பெரும் சக்திகளின் போட்டிகள் வெடிக்கின்றன

By Peter Schwarz
25 November 2004

Back to screen version

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற உக்ரைன் ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான விக்டர் யானுகோவிச், எதிர்க்கட்சித் தலைவர் விக்டர் யுஷ்செங்கோ என்ற இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையே அதிகாரத்துக்கான போராட்டம் வெடித்துள்ளது. அதிகாரபூர்வமான தேர்தல் ஆணையம் யானுகோவிச் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்தது என்றாலும், இதை எதிர்க்கட்சி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. தேர்தல் முடிவுகள் திரிக்கப்பட்டுவிட்டன என்றும் யுஷ்செங்கோதான் சட்ட நெறிப்படி வெற்றி பெற்றுள்ளார் என்பதும் எதிர்க்கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

திங்களன்று, கீவ் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் தன்னை ஜனாதிபதி என்று பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கு, யுஷ்செங்கோ உடன்பட்டுவிட்டார். அதே நேரத்தில், 200,000 பேர் அடங்கிய கூட்டத்தினர், கீவ் நகரத்தின் மையத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்ததோடு, அவர்களில் பலரும் தெருக்களிலேயே முகாமிட்டிருந்தனர். ஓர் ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரத்தை நடத்தி, அவர்கள் யுஷ்செங்கோதான் ஜனாதிபதியாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்று கோரிவருகின்றனர். ஜோர்ஜியாவின் ஷெவர்ட்நட்சேயை அகற்றிய ஓராண்டிற்கு முன்பு "ரோஜாப் புரட்சி" என்று அழைக்கப்பட்டிருந்த இயக்கத்தையும், சேர்பியாவில் மிலோசெவிக்கை கவிழ்த்த நிகழ்வுகளையும் இவர்கள் முன் மாதிரியாகக் கொண்டுள்ளனர்.

மேலைச் செய்தி ஊடகங்களில், இந்த அதிகாரப் போராட்டம் சர்வாதிகார மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் இடையே உள்ள, ஒரு சர்வாதிகார ஆட்சி, மற்றும் ஜனநாயக எதிர்ப்பு என்ற சக்திகளுக்கு இடையேயான பூசல் போல் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இதைப்பற்றிய கவனமான ஆய்வோ, முற்றிலும் மாறான நிலையைச் சித்தரித்துக்காட்டுகிறது. சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்குப் பின், இந்நாட்டு செல்வத்தை தமக்குள் பங்கிட்டுக் கொண்ட புதிய உயர்தட்டினரிடம்தான் யுஷ்செங்கோ, யானுகோவிச் இருவரும் ஆழ்ந்து வேரூன்றியுள்ளனர். இருதரப்பினரிடையேயும் எழுந்துள்ள வேறுபாடுகள் சமீபத்தில் தோன்றியவைதான்.

யுஷ்செங்கோ1993ல் இருந்து 1999 வரை உக்ரைனுடைய மத்திய வங்கியின் தலைவராகவும், பின்பு 1999ல் இருந்து ஏப்ரல் 2001 வரை பிரதம மந்திரியாகவும், யானுகோவிச்சிக்கு பின்பலமாக கருதப்படும், ஜனாதிபதி லியோனிட் குச்மாவின் கீழேயும் பணி புரிந்துள்ளார். மத்திய வங்கியின் தலைவராகவும், நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தபோது, பேரழிவுச் சமுதாய விளைவுகளை ஏற்படுத்திய பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கை ஆகியவற்றிற்கும் மிக முக்கியமாகப் பாடுபட்டவர்களில் ஒருவராக யுஷ்செங்கோ இருந்தார். சராசரி மாத வருமானம் 65 யூரோக்கள் என்றுள்ள நிலையில், ஐரோப்பாவின் மிக வறிய நாடுகளில் உக்ரைனும் ஒன்றாகும்; ஆனால் இந்நாட்டின் செல்வத்தை ஒரு மிகச் சிறிய புதிய செல்வந்தர் அடுக்கு குவித்து அனுபவித்து வருகிறது.

ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுவதா அல்லது மேற்கு முதலாளித்துவ நலன்களை இன்னும் கூடிய முறையில் பெறும் வகையில் நடந்துகொள்ளுவதா என்ற பிரச்சினையை ஒட்டித்தான் இந்தப் புதிய செல்வந்தத் தட்டினரிடையே காணப்படும் பூசலின் தன்மை சுழன்று வருகிறது.

1994ம் ஆண்டு பதவிக்கு வந்து, இப்பொழுது அதைத் துறக்கும் தறுவாயில் உள்ள ஜனாதிபதி குச்மா, மிகுந்த கவனத்துடன் சமநிலையை நிறுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஒருபுறத்தே அவர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் நெருங்கிய ஒத்துழைப்பைக் கொள்ள அரும்பாடுபடுகிறார். இந்த இலக்கை கருத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் பல உடன்பாடுகளை அவர் கொண்டுள்ளார்: ஆனால் NATOவில் இடம் பெறுவதற்கும், ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு அமெரிக்காவிற்கு உதவும் வகையில் 1,500 வீரர்களை அனுப்பி வைத்தும்கூட, அவருடைய எண்ணங்கள் வெற்றி பெறவில்லை. மறுபுறத்திலோ, அவர் ரஷ்யாவுடனும் அதன் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனும் நெருங்கிய தொடர்புகளை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இத்தகைய நிலைப்பாட்டை தக்கவைத்துக் கொள்ளுவது இனியும் இயலாது. ஒரு புறத்தில் ரஷ்யாவும், மற்றொரு புறத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்று இருபுறத்து தீவிரப் போட்டிகளுக்கிடையே, உக்ரைன் திடீரென்று குவியப் புள்ளியாக ஆகியுள்ளது. இரு தரப்பினருமே தேர்தல் பிரச்சாரத்தில் மிகப் பெரிய முறையில், சிறிதும் மனச்சாட்சியின்றி, தத்தமக்கு தேவையானவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தலையீடு செய்துள்ளர்; ரஷ்யா, யானுகோவிச்சையும், மேலை சக்திகள் யுஷ்செங்கோவையும் ஆதரித்தன. இருதரப்பினரும் அவர்களுடைய சொந்த பொருளாதார, புவியியல்-அரசியல் நலன்களைத்தான் தொடர்கின்றனர்.

பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் NATO விற்கும் இடையே உள்ள ஒப்பந்தங்கள், மற்றும் மத்திய ஆசியாவிலுள்ள முந்தைய சோவியத் குடியரசுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள், ஆகியவற்றை பார்க்கும்போது, மேற்கு சக்தியின் செல்வாக்கு மண்டலத்திற்குள் உக்ரைன் விழுந்துவிடக்கூடாது என்பதில் புட்டின் உறுதியாக உள்ளார். சில காலமாகவே, முந்தைய சோவியத் குடியரசுகளை பொருளாதார, அரசியல் உறவுகளில் ரஷ்யாவுடன் கூடுதலான முறையில் பிணைத்துக் கொள்ளும் வகையிலான கொள்கையைத்தான் அவர் தொடர்ந்து வருகிறார்.

அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், குறிப்பாக ஜேர்மனிக்கும், ஏறத்தாழ 50 மில்லியன் மக்களையும், மூலோபாயத்திற்கு உகந்த இடத்தையும் பெற்றிருக்கும் உக்ரைன், பெருமளவு லாபம் ஈட்டுவதற்குச் சிறந்த சந்தை என்ற திறனைக் கொண்டிருப்பதோடு, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை எடுத்துச் செல்லுவதற்கும், மிக முக்கியமான பாதையாகவும் இருக்கிறது. மேற்கு ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் ரஷ்ய இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் உக்ரைன் வழியே செல்லுகிறது.

ஜேர்மனிய நலன்களை தொகுத்துக் கூறும் வகையில் ஜேர்மன் நிதிய நாளேடான Handelsblatt, தன்னுடைய நவம்பர் 23ம் தேதி பதிப்பில் தெரிவிக்கிறது: "ரஷ்ய எரிவாயு, எண்ணெய் இருப்புக்கள் மற்றும் காஸ்பியன் கடற்பகுதியில் உள்ள இருப்புக்கள் இரண்டையுமே தன்பகுதிவழியே கடக்க வழி கொண்டுள்ள உக்ரைன் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகையால், அது கிரெம்ளினுடைய ஒரு விளையாட்டுப்பாவையாகி விடுவதற்கு, அனுமதித்துவிடக் கூடாது."

ரஷ்ய மற்றும் மேலை சக்திகளின் நலன்கள் உக்ரைனில் மோதிக்கொள்ளும் கடுந்தீவிரம், பனிப்போரின் மிக இருண்ட நாட்களை நினைவூட்டுகிறது. பெரிய நாடுகளுக்கு இடையே உறவுகள் எந்த அளவிற்கு நலிந்து, வெடிப்பூட்டும் தன்மையுடையதாகி விட்டது என்பதையும் இது புலப்படுத்துகிறது.

மூன்று வாரங்களுகு முன்பு, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு புஷ்ஷை முதலில் பாராட்டியது ரஷ்ய ஜனாதிபதி புட்டின்தான். இப்பொழுது வாஷிங்டனும், மாஸ்கோவும் ஒன்றையொன்று சமரசத்திற்கிடமில்லாத எதிரிகளாக உக்ரைனின் எதிர்கால ஜனாதிபதி பிரச்சினையில் இருக்கின்றனர். விரைவில் இந்தப் பூசல் தீர்வுகாணப்படவில்லை என்றால், வேறுபாடுகள் இன்னும் தீவிரமடையும் என்ற அச்சம் உள்ளது. 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் இருந்தது போலவே, செல்வாக்கு, சந்தைகள், மற்றும் மூலப்பொருட்களுகான போராட்டம் மீண்டும் வல்லரசுகளுக்கு இடையே ஆயுதமேந்திய பூசல்களுக்கு இட்டுச்செல்லும் நிலையை அச்சுறுத்தியுள்ளன.

உக்ரைனுடைய தேர்தல் பிரச்சாரத்தில், Dnepropetrovsk நகரம், டோனேட்ஸ்க் தேக்கம் இவற்றில் உள்ள நிலக்கரி, எஃகு உற்பத்தித் தொழிற்பகுதியை தளமாகக் கொண்டுள்ள, யானுகோவிச்சை புட்டின் ஆதரித்தார். டோனேட்ஸ்க்கின் மிகப்பெரிய தொழிலதிபரான ரினட் அஷ்மேடொவ், அவருடைய ஒரு முக்கிய ஆதரவாளராகக் கருதப்படுகிறார். கனரகத் தொழிலில் ஆளுமை செய்யும் குழுவினர் மேற்கத்திய போட்டியை கண்டு அச்சமுற்று, ரஷ்யாவின் ஆதரவை எதிர்நோக்குகின்றனர். மேலும், உக்ரைனுக்கு கிழக்கில் உள்ள பகுதியில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் ஏராளமாள உள்ளனர். யானுகோவிச் ரஷிய மொழியை தாய்மொழியாகக் கொண்டவர் ஆவார்.

மேலைச் செய்தி ஊடகம், உக்ரைன் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டினுடைய தலையீடுபற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலுக்கு முன்பு இருமுறை கீவிற்கு அவர் வருகை புரிந்திருந்தார். 1991க்கு முன்பு ரஷ்யாவும், உக்ரைனும் பல நூற்றாண்டுகளாக ஒரே நாட்டின் பகுதிகளாக இருந்ததையும், ரஷ்ய மொழிபேசுபவர்களாக பெரும்பாலான மக்கள் இருப்பதையும் கருத்திற்கொள்ளும்போது, இது ஒன்றும் அசாதாரணமானது அல்ல.

யுஷ்செங்கொவிற்கு ஆதரவாக பல மேலை அரசுகளும் நிறுவனங்களும் கணிசமாக தலையிட்டிருப்பது, முற்றிலும் சாதாரண நிகழ்வாக சித்தரிக்கப்பட்டதுடன், மேலும் "மேற்கு நாடுகளுக்கு திறந்துவிடும்" வகையில், (அதாவது மேற்கு முதலாளித்துவ நலன்களுக்கு திறந்துவிடும் வகையில்) வசதியளிக்கவும், "சீர்திருத்த வழிவகைகள் தொடர்வதற்கும்", (அதாவது பொருளாதாரத்தை "சுதந்திர சந்தை" முறையில் தாராளமயமாக்குதல்" என்று கூறியும் நியாயப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சார்பைக் கூடுதலாக உடையதும், உக்ரைனிய தேசியத்தின் மையத்தானமாகவும் நீண்ட காலமாக இருக்கும் மேற்கு உக்ரைனில்தான் யுஷ்செங்கோவின் வலுவான தளம் அமைந்துள்ளது. மேலை வல்லரசுகளின் இளைய பங்காளிகள் என்று தங்களுடைய எதிர்காலத்தைக் கொள்ள விரும்பும் போலந்து, ஹங்கேரி மற்றும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இப்பொழுது புதிதாக ஆதிக்கம் பெற்றுள்ள தட்டுக்களுக்கு ஒப்பாகத்தான் இவருடைய நிலைப்பாடு ஒத்திருக்கிறது.

யுஷ்செங்கோ, அவருடைய பிரச்சாரம் மற்றும் நிதியீட்டங்களுக்கு, வெளியிடத்து ஆலோசகர்களுடைய ஆதரவைப் பெற்றுள்ளார். ஐரோப்பிய அமெரிக்க அரசியல் வாதிகள் அவரைத் தொடர்ந்து புகழ்ந்து முன்மாதிரி ஜனநாயகவாதி என்று விவரித்துள்ளனர். வாக்களிப்பு முடிந்த உடனேயே அவர்கள் மோசடியான தேர்தல் என்ற குற்றச்சாட்டுக்களை எழுப்பினர்.

தேர்தல் பார்வையாளராக கீவில் இருந்திருந்த அமெரிக்க செனட்டு உறுப்பினரான ரிச்சர்ட் லுகர், "தேர்தல் தினத்தன்று மோசடி, பெருந்தவறுகள் நிறைந்த, அடர்த்தியான, சக்திவாய்ந்த திட்டம்" பற்றிப் பேசனார். ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியின் (PSD) வெளியுறவுக் கொள்கை செய்தித் தொடர்பாளரான Gert Weifikirchen, யுஷ்செங்கோதான் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்தார். உக்ரைனில் உள்ள ஆளும் சக்திகள், தங்களை மாற்றிக்கொண்டு, இந்த எதிரணி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒப்புக் கொள்ளாவிட்டால் அங்கீகாரம் அளிக்காவிட்டால், சர்வதேச முறையில் எதிரடிகள் கொடுக்கப்படவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

வாஷிங்டன் மற்றும் பேர்லினில் உள்ள அரசாங்கங்கள் தேர்வு முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும் இல்லாவிடில் பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளன. ஐரோப்பிய பாதுகாப்பு, மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் (Organization for Security and Cooperation in Europe) கீழ் மறுபடியும் வாக்குகள் எண்ணப்படவேண்டும் என்று அமெரிக்க வெளிநாட்டு மந்திரி கொலின் பவலுடன், ஜேர்மனிய வெளியுறவு மந்திரியான ஜோஷ்கா பிஷ்ஷரும் கோரியுள்ளார்.

உக்ரேனியத் தேர்தலில் கணிசமான மோசடி நடந்துள்ளது எனக் கூறமுடியும்; அநேகமாக நடந்தும் இருக்கலாம். சர்வாதிகார வகைகளை கையாண்டு, ஊழல் மிகுந்த ஆட்சியை நடத்திவரும், குஷ்மா மற்றும் புட்டின் இருவராலும் பொறுக்கி எடுக்கப்பட்டுள்ள வேட்பாளர் இத்தகைய உத்திகளை முற்றிலும் கையாளும் திறன் படைத்தவர்தான். யானுகோவிச்-எதிர்ப்பு ஆர்பாட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான ஜனநாயக அக்கறைகளினால் உந்துதல் பெற்றவர்கள்தான்.

ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஜனநாயக நிலைப்பாடு. போலியானது என்பதோடு முற்றிலும் பாசாங்குத்தனமானதும் ஆகும். இப்பொழுது மத்திய ஆசியாவில் இருப்பது போல், மேற்கு சார்பு ஆட்சிகள் தங்கள் அதிகாரத்தை சர்வாதிகார முறையில் காத்துக்கொள்ளும்போது, வாஷிங்டன், பேர்லின் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இதைக் கருத்திற்கொள்ளுவது இல்லை. ஈராக்கில் அவை மிகக் கடுமையான முறையில் சாதாரண மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்திக் கொண்டு, பொம்மை ஆட்சியை "ஜனநாயக" ரீதியில் தேர்ந்தெடுக்க தயார் செய்வதாகக் கூறுகின்றனர்.

யானுகோவிச்சிற்கும், யுஷ்செங்கோவிற்கும் இடையே உள்ள அதிகாரப் போராட்டத்தில், திரைக்குப் பின்னால் உள்ள பெரும் சக்திகள் நூலைப் பிடித்து இழுக்கும் பொம்மலாட்டப் பாவைகளாக உக்ரேனிய மக்கள் மாறிவிட்டனர். ஆயினும் கூட, வாக்காளர்களை உண்மையான சமுதாய அக்கறைகள் மற்றும் அச்சங்கள் பற்றிய உணர்வு உந்தித்தள்ளுகிறது.

எதிரணியினரின் கூற்று ஒரு புறம் இருக்க, அரசாங்கத்தின் வேட்பாளருக்கு வாக்களித்தவர் அனைவருமே, அதிகாரபூர்வமான உக்ரைன் ஊடகத்தினால் ஊக்கம் பெற்று வாக்களித்துவிடவில்லை. கனரகத் தொழிற்றுறையில் உள்ள தொழிலாளர்கள் போலந்திலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடந்தது போல், உக்ரைனில் ஐரோப்பியருக்கு இடம் கொடுப்பது தொடர்ந்து நடந்தால், தங்களுடைய வேலைகளை இழந்து விடுவோமோ என்ற நியாயமான அச்சத்தை கொண்டுள்ளனர். மேலும், ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினர் உக்ரேனிய தேசியம் வெற்றிபெற்றால் தாங்கள் பிரிவுமுறைக்கு உட்படுத்தக் கூடும் என்ற அச்சத்தையும் கொண்டுள்ளனர். இவ்விதத்தில் பால்டிக் நாடுகள் எப்படித் தவறுகள் நடக்கும் என்பதற்கு கொடூரமான உதாரணங்களாக இருக்கின்றன.

இதற்கு மறுபுறத்தே, யுஷ்செங்கோவின் ஆதரவாளர்களுள் பல இளைஞர்களும் மாணவர்களும் பேச்சு சுதந்திரம், அரசியலை வெளிப்படுத்தும் உரிமை இவற்றின்மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் பற்றி நியாயமான வகையில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தாங்கள் சந்தேகத்திற்குரிய பாதிரிகள், தேசியவாதிகள் இவர்களுடன் இருப்பதை அறிந்துள்ளனர்; அவர்களுடைய மரபோ, எவ்வளவு நயமாகக் கூறினாலும் ஜனாநாயகவாத நம்பிக்கைகளைக் கொண்டிருக்கவில்லை. செமிட்டிய எதிர்ப்பு உணர்வு உக்ரைனுடைய தேசிய வட்டங்களில் நீண்ட காலம் பொதுவாக இருந்தது; இவர்களது நாட்டை ஜேர்மானியர் ஆக்கிரமித்தபோது துணை நிற்பவர்களை தேர்ந்தெடுக்கவும் நாஜிக்களுக்கு அந்த வட்டாரம் உதவியது.

இதுவரை, உக்ரைனில் உள்ள அதிகாரப் போராட்டம் அமைதியான முறையில்தான் பெரும்பாலும் இருந்துள்ளது. ஆனால் இப்பொழுது நிலைமை மிகவும் அழுத்தத் தன்மையை பெற்றுள்ளது. அரசாங்க முகாமினால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை நடப்பதற்கில்லை எனக் கூற முடியாது. பூசல் பெருகினால், நாடு உள்நாட்டுப் போரை சந்திக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது; கடந்த தசாப்தத்தில் பால்கன் பகுதிகளை சூழ்ந்திருந்த்தைப் போன்ற அபாயங்கள் இங்கும் தோன்றக் கூடும்.

இரண்டிலுமே, முதலில் இதற்கான பொறுப்பு அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களில்தான் உள்ளது; இவை உள்நாட்டு பதட்டங்கள் இந்நாடுகளில் இருப்பதைத் தங்கள் கொள்ளை இலக்குகளுக்காகப் பயன்படுத்துகின்றன. தன்னுடைய பங்கிற்கு புட்டின் ரஷ்யாவில், தனக்கென ஏகாதிபத்திய பேரவாக்களைக் கொண்டுள்ள, தேசிய முதலாளித்துவ செல்வந்தத்தட்டின் நலன்களுக்காக நடந்து கொள்ளுகிறார்.

உள்நாட்டுப் போர் மற்றும் வாழ்க்கைத் தரம், ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல் பற்றிய ஆபத்து ஆகியவை யுஷ்செங்கோ அல்லது யானுகோவிச்சிற்கு ஆதரவு கொடுப்பதால் மட்டும் தவிர்க்கப்பட்டுவிடமுடியாது. அதற்கு, உக்ரைனில் மட்டும் இல்லாமல், ஐரோப்பா முழுவதும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட உழைக்கும் பரந்துபட்ட மக்களின் சுயாதீமான அரசியல் இயக்கம் தேவைப்படுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved