World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

Livio Maitan, 1923-2004: a critical assessment
Part 1: A "Trotskyist" in the Communist Party

லிவியோ மைய்ற்ரான், 1923-2004: ஒரு விமர்சன ரீதியான மதிப்பீடு

பகுதி 1 : கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு "ட்ரொட்ஸ்கிஸ்ட்"

By Peter Schwarz
4 November 2004

Back to screen version

செப்டம்பர் மாதம் ரோமில் காலமான லிவியோ மைய்ரானுடைய அரசியல் வாழ்வு பற்றிய ஒரு மூன்று-பகுதி கட்டுரைத் தொடரின் முதல் பகுதியைக் கீழே வெளியிடுகிறோம். இரண்டு, மூன்றாம் பகுதிகளை இந்த வாரத்தில் பின்னர் வெளியிட உள்ளோம்.

செப்டம்பர் 16ம் தேதி, லிவியோ மைய்ற்ரான் தன்னுடைய 81 வயதில் ரோம் நகரில் காலமானார். மிசேல் பப்லோ (1911-1996). ஏர்னெஸ்ட் மண்டெல் (1923-1995) மற்றும் பீயர் பிராங்க் (1906-1984) ஆகியோருக்கு அடுத்து ஐக்கிய செயலகத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதியாக இவர் இருந்தார். அதன் தலைமையில் 53 ஆண்டுகள் அவர் உறுப்பினராக இருந்து அதன் அரசியல் போக்கை வளர்ப்பதில் மிகவும் முக்கியமான பங்கினை ஆற்றினார்.

இக்கட்டுரைகளின் ஆசிரியர், நான்காம் அகிலத்தில் பப்லோ அறிமுகப்படுத்தயிருந்த திருத்தல்வாத அரசியலை எதிர்த்து, மரபு வழியிலான ட்ரொட்ஸ்கிசத்தை காப்பதற்காக 1953ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டிருந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உறுப்பினர் ஆவார். அப்பொழுதிலிருந்து அனைத்துலகக்குழு, ஐக்கிய செயலகம் அபிவிருத்தி செய்த ஒவ்வொரு முக்கியமான அரசியல் பிரச்சினையிலும் பப்லோ, மண்டெல் மற்றும் மைய்ற்ரான் தலைமையில் வழிநடத்தப்பட்ட போக்கிற்கு உறுதியான எதிரியாக இருந்தது.

1953 இன் பிளவை சுயமாகவே கண்டறிந்த ஐக்கிய செயலகத்தின் கடைசி முக்கியத் தலைவராக இருந்தவரின் மறைவு ஒரு அரசியல் கணக்கெடுப்பை வரைவதற்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது. அவ்வாறு செய்தல், மைய்ற்ரானுடைய தனிப்பட்ட நேர்மை அல்லது அவருடைய சோசலிச நம்பிக்கைகளின் முக்கியத்துவம் பற்றி ஐயம் எழுப்புதல் என்ற பொருள் ஆகிவிடாது. மாறாக, இன்றைய சூழ்நிலையில் ஓர் அரசியல் நிலைநோக்கை வளர்ப்பதற்குத் தேவையான முக்கியமான படிப்பனைகளை, வரலாற்றின் அனுபவங்களில் இருந்து எடுத்துக் கொள்ளுவதைப் பற்றி உதவும் வகையில் அது அமையும்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கியச் செயலகத்தை பாதுகாத்து வந்த அரசியல் கருத்துருக்களின் தர்க்கரீதியான வளைவரைவுபோக்கைத்தான் (Trajectory) மைய்ற்ரானுடைய வாழ்வு விவரித்துக் காட்டுகிறது. அத்தகைய கருத்துருக்களின் இதயதானத்தில், சோசலிச முறையில் சமுதாயத்தை மறுசீரமப்பைதற்கு தன்னுடைய வரலாற்றுப் பணிகளை நனவுபூர்வமாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான சுயாதீனமான அரசியல் இயக்கம் தேவையில்லை என்ற எண்ணம் இருந்தது. மாறாக புறநிலை சம்பவங்களின் அழுத்தத்தின் விளைவாக இடது புறம் தள்ளக்கூடிய, ஏனைய சமூக அரசியல் சக்திகள் மூலம் அது நடைமுறைப்படுத்தமுடியும் என்ற கருத்து இருந்தது.

ஸ்ராலினிசக் கட்சிகள், மாவோயிச விவசாயிகளின் படைகள், குட்டி முதலாளிகளின் கெரில்லாக்கள் போன்ற---- தொழிலாள வர்க்கத்தைத் தளமாக கொண்டிராத, "கூர்மையற்ற கருவிகள்" புறநிலை சம்பவங்களின் அழுத்தத்தால் ஒரு புரட்சிப்பாதையை நோக்கி நகர்ந்து சோசலித்திற்குத் தயார் செய்யும் என்ற கருத்தை பப்லோயிசம் கொண்டிருந்தனர். அத்தகைய நிலைப்பாட்டில் இருந்து வெளிவந்த தர்க்க ரீதியான முடிவு, நான்காம் அகிலத்தை கலைத்துவிட்டு அல்லது------ஐக்கிய செயலகம் பெயரளவிற்கு அந்தப் பெயரில் ஓர் அமைப்பை பராமரித்தளவில்---- அதன் அரசியல் பணிகளுக்கு முற்றிலும் புதியதொரு வரையறையை வழங்குதல் ஆகும்.

நான்காம் அகிலம், 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது ஏனெனில் இந்தக்கட்சி ஒன்றுதான் மார்க்சிசத்தின் தொடர்ச்சியைப் பாதுகாத்து, தொழிலாள வர்க்கத்தை எதிர்காலப் போராட்டங்களுக்குத் தயார் செய்திருக்க முடியும். 1930களில் சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவமும், ஸ்ராலினிச அதிகாரத்திலிருந்த மூன்றாம் அகிலமும் முற்றிலுமாக எதிர்ப்புரட்சி முகாமில் சேர்ந்து விட்டிருந்தன. சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே, பொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்கு, அதிகாரத்துவத்தின் சலுகையை காத்தலும், தொழிலாளர்களின் ஜனநாயகத்தை அடக்குதலும்தான் மிக முக்கியமான தடைகளாயின. சர்வதேச அளவில், கிரெம்ளின் உலகெங்கிலும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளை, ஏகாதிபத்திய சக்திகளுடனான இராஜதந்திர திட்டங்களுக்கான பகடைக்காய்களைப் போல் பயன்படுத்தியது, இக்கொள்கை பேரழிவான தோல்விகளை ஜேர்மனியில் 1933 இலும், ஸ்பெயினில் 1938 இலும் வழங்கியது.

தொழிலாள வர்க்கத்தின் மிக மோசமான தோல்விகளில் கூட, முதலாளித்துவ அமைப்பின் புறநிலை முரண்பாடுகள் மீண்டும் வர்க்கப் போராட்ட வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை ட்ரொட்ஸ்கி ஒருபோதும் இழந்ததில்லை. இத்தகைய போராட்டங்களுக்குத் தயார் செய்வதற்காக நான்காம் அகிலத்தை அமைப்பது தேவையாகும். அதன் உறுப்பினர்களுடைய எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால், அது வர்க்கப்போராட்டத்தின் பல தசாப்தங்களின் அனுபவங்களையும், படிப்பினைகளையும் உள்ளடக்கியுள்ளது. சமூக ஜனநாயக அல்லது ஸ்ராலினிசக் கட்சிகள் மீண்டும் ஒரு புரட்சிப் பாதைக்குத் திரும்பும் என்ற கருத்தை ட்ரொட்ஸ்கி அழுத்தம் திருத்தமாக மறுத்து விட்டார். அவற்றில் தொழிலாளர்கள் அதிகமாக இருந்தபோதிலும், இக்கட்சிகள் ஏனைய சமூக நலன்கள், சக்திகள் ஆகியவற்றின் கருவிகளாக மாற்றப்பட்டு விட்டன.

1953 முதல் ஐக்கிய செயலகம் வலியுறுத்தியிருந்த வருங்காலம் பற்றிய கணிப்புக்கள், நிலைப்பாடுகள் ஆகியவை, வரலாற்று அனுபவங்களில், இன்று முடிவான மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட முடியும். ஒரு புதிய புரட்சிகர முன்னிலை, சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு மாற்று என்று அவர்களால் கூறப்பட்ட அரசியல், சமூகசக்திகளில் ஒன்றுகூட, அவர்களுடைய எதிர்பார்ப்புக்களில் எதையும் நிறைவேற்றிவிட முடியவில்லை.

மக்கள் கொடுக்கும் அழுத்தத்தில், ஸ்ராலினிசம் ஒரு புரட்சிகர பங்கை வகிக்கும் என்றும், இரண்டாம் உலகப் போருக்குப் பின் கிழக்கு ஐரோப்பாவில் தோற்றுவிக்கப்பட்ட உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள் சோசலிசத்திற்கான பாதையில் பல தசாப்தங்களையும் கடக்கவேண்டியிருக்கும் என்றும் பப்லோ முன்கணிப்பாகக் கூறினார். இந்த முன்கணிப்பு இந்த நாடுகளின் சரிவு, மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சரிவினாலும் மறுக்கப்பட்டுவிட்டது. ஸ்ராலினிச அதிகாரத்துவம், ட்ரொட்ஸ்கி முன்னரே கூறியபடி அக்டோபர் புரட்சிக்கு சவக்குழி தோண்டும் அமைப்பாகிவிட்டது.

மூன்றாம் உலகத்தின் சிறந்த முன்னுதாரணமாக இருக்கப் போகும் அமைப்புக்கள், தங்களையும் அறியாமல் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை தகர்த்துவிடப்போகும் தன்மையுடையவை என்று பப்லோவாதிகள் புகழாரம் சூட்டியிருந்த, மாவோவாத விவசாயப் படைகள் ஒரு சோசலிச வருங்காலத்திற்கு வழிவகுக்கவில்லை. மாறாக மிகக் கொடூரமான முதலாளித்தவத்திற்குதான் வடிவமைப்புக் கொடுத்துள்ளன. இன்று சீன தொழிலாள வர்க்கம் உலகெங்கிலும் காணப்படாத மிக மோசமான நிலையில், சர்வதேச நிறுவனங்களால் ஊதியங்கள், வேலைநிலைமைகள் நிர்ணயிக்கப்படுவதைதான் மாவோ இன் வாரிசுகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

ஐக்கிய செயலகம் தேசிய விடுதலை இயக்கங்களையும் அவற்றின் "ஆயுதமேந்திய போரட்டங்கள்" என்ற செயற்பாட்டையும் பெரிதும் உயர்த்திவைத்திருந்தாலும், அவை எதுவுமே ஏகாதிபத்தியத்தில் இருந்து உண்மையான வகையில் சுதந்திரத்தை சாதிக்க முடியவில்லை. அவை அனைத்துமே ட்ரொட்ஸ்கியின் கணிப்பை எதிர்மறையில்தான் உறுதிப்படுத்தியள்ளன; அதாவது, "ஒரு பின்தங்கிய முதலாளித்துவ அபிவிருத்தியடைந்த ஒரு நாட்டின் ஜனநாயகம், தேசியச் சுதந்திரம் என்பவற்றிற்கான முழுமையான, உண்மையான தீர்வு, வெற்றிகொண்ட நாட்டினதும், எல்லாவற்றிற்றுகும் மேலாக அதன் விவசாயிகளின் தலைவன் என்றவகையில் தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின் கீழ்தான் அடையமுடியும்" (1).

ஐக்கிய செயலகத்தின் அரசியல் கருத்துருக்கள் தவறானவை என்பது மட்டுமில்லாமல், முதலாளித்துவத்திற்கு 1960களிலும், 1970களிலும் பாரிய சமூக இயக்கத்தில் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றினை தேடிய உலகெங்கிலும் இருந்த இளைஞர்களையும், தொழிலாளர்களையும் குழப்புவதில் ஒரு பெரும் பங்கைக் கொண்டிருந்தன.

ஸ்ராலினிசம், குட்டி முதலாளித்துவ தேசியவாதங்கள் இவற்றின் அடிப்படையில் ஐக்கிய செயலகத்தின் நம்பிக்கைகள் இறுதியில் போலித்தோற்றமானவை என்று கண்டறியப்பட்டு விட்டதால், அந்த இமைப்பு இன்னும் கூடுதலாக வலதுசாரிப் புறம் நகர்ந்து முதலாளித்துவ அரசின் அதிகார கோளத்திற்குள் பின்வாங்கிவிட்டது. ரோமனோ போடி மற்றும் மாசிமோ டி அலிமா ஆகியோரின் மத்திய-இடது அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்து நிறுத்தும் ஒரு கட்சியின் முக்கியமானவர்களின் வரிசையில், மைய்ற்ரானுடைய அரசியல் வாழ்வின் கடைசி 13 ஆண்டுகள் செலவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 1991ல் இருந்து 2001 வரை அவர் Rifondazione Comunista (கம்யூனிச மறுசீரமைப்பு) என்னும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பின்தோன்றல்கள் அமைப்புக்களுள் ஒன்றில் நிர்வாகப் பணியாளராக இருந்தார்.

கடைசியாக அவர் சர்வதேச அரங்கில் தோன்றியது, பெப்ரவரி 2003இல் ஐக்கியச் செயலகத்தின் 15ம் உலகக் காங்கிரஸ் கூட்டத்தில், அப்பொழுது அவர் ஐக்கியச் செயலகத்தின் ஒரு பிரேசில் நாட்டு உறுப்பினரை, ஜனாதிபதி மிஸீஊநீவீஷீ "லிuறீணீ" பீணீ ஷிவீறீஸ்ணீ உடைய முதலாளித்தவ அரசாங்கத்தில் பணிபுரிந்து வந்ததற்காகப் பாராட்டினார்.

மைய்ற்ரான் நான்காம் அகிலத்தில் சேர்கிறார்

முசோலினி ஆட்சியைக் கைப்பற்றிய ஆறு மாதங்களுக்குப் பின்னர், 1923ம் ஆண்டில் வெனிசில் லிவியோ மைய்ற்ரான் பிறந்தார். பாசிச இத்தாலியில் வளர்ந்த அவர் படோவா பல்கலைக் கழகத்தில் தொல்சீர் இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். போரின் கடைசி ஆண்டுகளில், அவர் நாஜி ஆக்கிரமிப்பிற்கு எதிரான சோசலிச இயக்கத்தில் சேர்ந்து, இறுதியில் ஸ்விட்சர்லாந்துக்கு ஓடிப்போக நேரிட்டது, அங்கு போரின் முடிவைக் கண்டதோடு கைதிகள் முகாமிலும் இருக்க நேர்ந்தது. பின்னர் சோசலிச இளைஞர் இயக்கத்தில் ஓர் அமைப்பாளராக அவர் விளங்கினார். 1947ம் ஆண்டு, பாரிசில் நடைபெற்ற ஒரு சோசலிச மாநாட்டில் அவர் ஏர்னெஸ்ட் மண்டெலைச் சந்ததித்து நான்காம் அகிலத்தில் சேர்ந்தார்.

இந்தக் காலக் கட்டத்தில்தான் நான்காம் அகிலத்தின் தலைமையிடப் பிரிவுகள் சில ட்ரொட்ஸ்கியின் கருத்துருக்களை கேள்விக்குட்படுத்தினர். 1951ம் ஆண்டு நான்காம் அகிலத்தின் முக்கிய பிரிவில் அவர் சேர்ந்தபொழுது, அப்பொழுது அமைப்பின் செயலாளராக இருந்த பப்லோ தன்னுடைய திருத்தல்வாத நிலைப்பாட்டை முற்றிலும் வடிவமைத்திருந்தார்; அது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஒரு பிளவிற்கு வழிவகுத்தது. இந்த ஆண்டில்தான் பப்லோவின் ஆவணமான, "நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்?" என்பது வெளியிடப்பட்டது. அதில் சமூக யதார்த்தம் ''முதலாளித்துவ ஆட்சி, ஸ்ராலினிச உலகம் என்ற இரு பிரிவுகளை இன்றியமையாததாகக் கொண்டுள்ளது" என்றும் "முதலாளித்துவத்தை எதிர்க்கும் பெரும்பாலான சக்திகள் இப்பொழுது சோவியத் அதிகாரத்துவத்தின் தலைமையிலோ அல்லது செல்வாக்கின்கீழோ உள்ளது" (2) என்று பப்லோ கூறினார்.

பனிப்போர் அப்பொழுதுதான் தொடங்கிய நேரத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தக் கருத்துரு, தொழிலாள வர்க்கத்தை புறக்கணித்துவிட்டு, வர்க்கப் போராட்டத்தை சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயான இரு முகாம்களிலும் நடந்து கொண்டிருந்த மோதலால் பிரதியீடு செய்தது. சோசலிசப் புரட்சி, சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு போர் முறையில் ஆரம்பிக்கும் என்றும், அதில் சோவியத் அதிகாரத்துவம், "முதலாளித்துவத்தை எதிர்க்கும் சக்திகளிடையே" ஒரு முக்கிய பங்கைக் கொள்ளும் என்றும் குறிப்பிட்டார். இத்தகைய நிலைமையில், நான்காம் அகிலத்திற்கு ஸ்ராலினிசக் கட்சிகளில் சேருவதைத் தவிர, "உண்மையான வெகுஜன இயக்கத்தில் ஒருங்கிணைந்து நிற்பதைத் தவிர" வேறு எதுவும் இல்லை என்றும் பப்லோ கூறினார்.

1953-ம் அண்டில், அமெரிக்காவின் சோசலிசத் தொழிலாளர்கள் கட்சி தன்னுடைய "பகிரங்கக் கடிதம்" ஒன்றை வெளியிட்டு, பப்லோவின் நிலைப்பாடுகளை நிராகரித்து அனைத்துலகக் குழு அமைப்பதற்கு அழைப்பு விடுத்தது, இதில் பிரிட்னும், மற்றும் பெரும்பாலான பிரெஞ்சுப் பிரிவுகள் மற்றவற்றுடன் சேர்ந்து கொண்டன.

இந்த மோதலின்போது மைய்ற்ரான் பப்லோ, மண்டெல் மற்றும் பிரான்சின் சிறுபான்மைப் பிரிவின் தலைவர் பிராங்க் ஆகியோரின் பக்கம் நின்று தன்னுடைய வாழ்நாளின் எஞ்சிய பகுதி முழுவதும் ஐக்கிய செயலகத்தின் தீவிர உறுப்பினராகச் செயல்பட்டார். அவர் Antonio Gramsci, லியோன் ட்ரொட்ஸ்கி, இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சி, சீனப்புரட்சி, சீனப் கலாச்சாரப் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் முடிவு ஆகியவை பற்றி ஏராளமான நூல்களை எழுதினார்; அவற்றில் சில நூல்களே பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. ஐக்கியச் செயலகத்திற்காகவும் தொடர்ச்சியாக பல நூல்களை எழுதி, ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களை இத்தாலியில் மொழிபெயர்த்துத் தனக்கென ஒரு புகழான பெயரை ஈட்டிக் கொண்டார்.

இத்தாலியில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கியச் செயலகத்தின் இத்தாலிய பிரிவிற்கு வெளியில் நன்கு அறியப்பட்ட பிரமுகராகத்தான் மைய்ற்ரான் இருந்தார்.

மைய்ற்ரானும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியும்

ஸ்ராலினிசத்திற்கேற்றவாறு பப்லோவாதிகள் கொள்கைகளை மாற்றிக்கொண்டது, இத்தாலியில் நீண்டகால தாக்கங்களை கொண்ட விளைவுகளை ஏற்படுத்தியது. பிரான்சை தவிர வேறு எந்த தொழிற்துறையில் முன்னேறியிருந்த நாட்டிலும், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி இத்தாலியில் பெற்றிருந்தது போன்ற பரந்த செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை.

இது அந்நாட்டில் வினோதமான வரலாற்றுடன் பிணைந்திருந்த செயலாகும். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCI) தன்னுடைய இருப்பின் பெரும்பகுதியை தடைசெய்யப்பட்டும், முசோலினி ஆட்சிக்கு எதிரான போராட்டத்திலும் கொண்டிருந்தது. அன்டோனியோ கிராம்ஸ்கி போன்ற புகழ் பெற்ற தலைவர்கள்கூட பாசிசத்தால் பாதிப்பிற்கு உட்பட்டிருந்தனர். ஜேர்மனிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான, Resistenza (எதிர்ப்பு) இயக்கத்திலும், கூட்டு நாடுகள் படையெடுப்பிற்குப் பின் முசோலினி ஆட்சிக்குப் பின் எஞ்சியிருந்த இத்தாலியில், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முக்கியமான சக்தியாக இருந்தது. மக்களிடம் பெரிதும் வலுவான வேரூன்றுவதற்கு இது உதவியது. எதிர்ப்பு இயக்கத்தின் போராட்டத்தால் ஏராளமான குடும்பங்கள் தங்களுடைய உறுப்பினர்களை இழந்திருந்த வட இத்தாலி, ரொஸ்கனாப் பிராந்தியங்கள் பலவற்றில் மற்றவற்றைவிட இதுதான் ஆதிக்கம் மிகுந்த சக்தியாக இருந்தது. ஆனால், இக்கட்சியின் தலைமை, Palmiro Togliatti இன் கீழ், மாஸ்கோவிற்குப் பெரிதும் விசுவாசம் காட்டிய ஊழியர்களைக் கொண்டிருந்தது. பல தலைவர்களும் பாசிசத்தில் இருந்து சோவியத் ஒன்றியத்தில் இருந்ததால் உயிர் தப்பியதால் அவர்கள் ஸ்ராலினிசத்தின் மோசமான குற்றங்களிலும் ஆழ்ந்த தொடர்பைக் கொண்டிருந்தனர்.

ஸ்ராலினிசப் போக்கை ஒட்டியே, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற முறையில் சரணடைந்து முதலாளித்துவ ஆட்சியை, முசோலினியின் வீழ்ச்சிக்குப் பின் பாதுகாத்து வந்தது. 1944-ம் ஆண்டு, சர்வாதிகாரியின் வீழ்ச்சி நிகழ்ந்து ஒரு சில மாதங்களுக்குள் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி, மார்ஸல் பீட்ரோ படோக்லியோவின் (Marshal Pietro Badoglio) அரசாங்கத்தில் சேர்ந்தது; இதனால் பாசிசக் கடந்த காலத்துடன் தீவிர முறிவு தவிர்க்கப்பட்டதுடன், அரசியல் வாழ்வில் ஒரு புரட்சிச் சீரமைப்பும் தடைசெய்யப்பட்டுவிட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், சமூக செல்வந்த தட்டினராக முசோலினியின் ஆட்சியில் இருந்தவர்கள் இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சி இன் செல்வாக்கினால்தான் அவருடைய வீழ்ச்சிக்குப் பின்னர் ஆபத்துக்கள் ஏதும் இன்றி தப்பிக்க முடிந்தது.

ஆயினும் கூட அடுத்த 50 ஆண்டுகளில், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி இத்தாலியில் முதலாளித்துவ அமைப்பிற்கு மிகவும் உற்ற துணையாக இருந்தது. மிகைமதிப்பிடாது கூறினால், முதலாளித்துவத்தின் முதுகெலும்பாகக் கூட அது இருந்தது. நாட்டில் பரந்த மக்கள் தளத்தைப் பெரிதும் கொண்டிருந்த, பரந்த அளவில் வேரூன்றியிருந்த, மத்திய நிறுவன அமைப்பு முறையைக் கொண்டிருந்த ஒரே அரசியல் கட்சியாக அது இருந்தது. அரசாங்கத்தின் நிரந்தரக் கட்சிகளில் ஒன்றான கிறிஸ்தவ ஜனநாயவாதிகளில் சில முக்கியமான பூசல்களை உடைய சிறுகுழுக்கள் இருந்தன; தேர்தல் முடிவுகளில் அவற்றிற்கு பெரிதும் உதவியது செல்வாக்குப் படைத்திருந்த கத்தோலிக்க திருச்சபையாகும். சோசலிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள், தீவிரவாதிகள், தாராளவாதிகள் என்ற சிறிய கட்சிகள் அனைத்தும் பல செல்வாக்குக் குழுக்களின் பிரதிநிதிகளை கொண்டிருந்தனவே ஒழிய, பெரும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை.

இத்தாலியில், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி, ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சி (SPD) கொண்டிருந்தது போலவும், இங்கிலாந்தில் தொழிற்கட்சியை போலவும் ஓர் அரசியல் பங்கை வகித்தது. போருக்குப் பின்னர் ஏற்பட்ட உயர் பொருளாதார மேம்பாட்டு நிலையில், வர்க்கங்களுக்கு இடையேயான மோதலில் அது தலையிட்டுச் சமாதானத்தைக் கொண்டுவந்தது; குறிப்பாக விவசாயிகள், ஏழைகள் இவர்களுக்கு இடையே நிகழ்ந்தவற்றில் அதன் செல்வாக்கு மிகுந்திருந்தது; ஆனால் வடக்கே இருந்த தொழிற்துறை முன்னேற்றம் கண்ட பகுதியை தவிர நாட்டிலும் விரைவான தொழில்முறை பரவி வாழ்க்கைத் தரம் குறிப்பிடத்தகுந்த வகையில் உயர்ந்திருந்த நேரம் அது. முதல் தடைவையாக, குடும்பங்கள் ஒரு தொலைக்காட்சி, கார், விடுமுறை, பிற வசதிகள் என இதற்கு முன் அனுபவித்திராத நலன்களைப் பெற்றன. இக்காலக்கட்டத்தில், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகளின் விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது, போருக்குப் பின் நடந்த முதல் தேர்தலில் 20 சதவிகிதம் இருந்த நிலைமையில் இருந்து, பொருளாதார செழுமையின் உச்சக்கட்டமாக 1970 ன் நடுப்பகுதிகளில் 34 சதவிகிதமாக இது உயர்ந்தது.

இதன்பின்னர், சமூகப் பிரச்சினைகள் பெரிதும் அதிகரிக்கவே, ஒவ்வொரு தேர்தலிலும் அது வாக்குகளை இழக்கலாயிற்று.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், ஒரு புரட்சிகரமான சோசலிச மூலோபாயம் தொழிலாள வர்க்கத்தை இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து தவிர்க்கவியலாத முறிவிற்கு தயாரித்திருக்கும். பிரச்சாரமும், தந்திரபோய முயற்சிகளும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியை அம்பலப்படுத்த உதவியிருக்கும்; அதாவது உழைக்கும் மக்களின் நீண்ட கால நலன்களுக்கும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி அரசியலுக்கும் இடையில் சமரசப்படுத்த முடியாத முரண்பாடுகள் இருப்பது பற்றி நனவு ஊட்டியிருக்கும். இந்த அடிப்படையில் அரசியலில் நனவு கொண்டிருக்கும் உறுப்பினர்கள் அபிவிருத்தியடைந்திருப்பர்.

அத்தகைய மூலோபாயத்தின் ஆரம்பகட்டமாக, ஸ்ராலினிசத்தின் எதிர்-புரட்சிகர பங்கைப் பற்றிய உணர்தல் தோன்றியிருக்கும்.

ஆனால் முற்றிலும் வேறுவிதமான முன்னோக்கிற்காக மைய்ற்ரானின் விருப்பம் இருந்தது. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முதலாளித்துவத்தை நிலைநிறுத்தும் அமைப்பாக அவர் கருதாமல், அதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் வளர்ச்சியுறும் என்ற கருத்தை கொண்டிருந்தார். முதலில் 1959 வெளிவந்த இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவம், நடைமுறை அரசியல் பற்றிய அவருடைய 200 பக்க புத்தகத்திலும் பின்னர் 1969ல் மறுபதிப்பு செய்யப்பட்ட நூலில் அவர் பின்வருமாறு எழுதினார்:

"போருக்குப் பிந்தைய தொழிலாளர், விவசாய வெகுஜன இயக்கத்தின் அரசியல் அமைப்புமுறையின் வடிவம்தான் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியாக இத்தாலியில் வெளிப்பட்டுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், இந்த அமைப்பிற்குள்ளாகத்தான், மற்றும் இதன் தலையீட்டின் மூலம்தான் முடிவெடுக்கக் கூடிய சமூகசக்திகள், இப்பொழுது முற்போக்கான முறையில் இருக்கும் சமுதாய அமைப்பை சீரமைக்கவேண்டும் எனப் போரிடுவோர் தங்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி தான் கொண்டுள்ள வெகுஜனத்தின் மீதான செல்வாக்கை சற்றே சிதைந்த வகையென்றாலும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அதன் தலைமை, இது ஆழ்ந்துள்ள வர்க்கப் போராட்டத்தின் உண்மை நிலையைப் பற்றி நன்கு எடுத்துரைக்க வேண்டும்."

மைய்ற்ரானுடைய கருத்தின்படி, "இந்த முக்கியமான சமூகக் காரணி கம்யூனிஸ்ட் கட்சியில் உண்மை நிலைப்பாடு பற்றிய உண்மையை இது விளக்குகிறது; ஏன் பல்லாயிரக் கணக்கான பாட்டாளி வர்க்க காரியாளர் அதற்கு விசுவாசமாக உள்ளது என்பதை இது விளக்குகிறது; தலைமையின் நல்லறிவு, தவறு செய்யாத தன்மை இவற்றைப் பற்றிய பொய்த்தோற்றங்களை அது முன்னரே நன்கு அறிந்த போதிலும், இந்நிலைதான் உள்ளது."

இங்கு யதார்த்தம் தலைகீழாக்கப்பட்டுள்ளது. போருக்குப் பின் தொழிலாள வர்க்கம் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு முக்கியமான தடையாக இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தபோதிலும், தன்னுடைய செல்வாக்கை தொழிலாளர்கள் இயக்கத்தின் மீது போருக்குப் பிந்தைய சமூக சலுகைகள் வழங்கப்பட்டதன் மூலம்தான் தக்கவைத்துக்கொள்ள அதனால் முடிந்தது என்றாலும், மைய்ற்ரான் தொழிலாளர்கள் இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியில் விசுவாசமாக இருந்ததற்கு காரணம் அக்கட்சி அவர்களுடைய புரட்சிகரப் பேரவாக்களை நிறைவாகக் கொண்டிருந்தது, "அதுதான் வர்க்கப் போராட்டத்தின் யதார்த்தத்தை" தெளிவாகக் கூறியது என்று கூறுகிறார்.

முதலாளித்துவ அரசாங்கத்திற்குக் கொடுத்த ஆதரவையும் அதன் தலைமையின் அதிகாரத்துவ தன்மை பற்றியும் மைய்ற்ரான் முற்றிலும் புறக்கணிக்க முடியவில்லை. எனவே கட்சி இரு தன்மைகள் நிரம்பிய நிலையில் இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். "இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் முரண்பாடு அது இனியும் ஒரு புரட்சிகரக் கட்சி அல்ல என்பதிலும், வெளிப்படையாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான புரட்சிகர முன்னோக்கை நிராகரித்திருந்துடன், அதன் ஆரம்பத் தோற்றத்தினாலும், தன்மையையினாலும் உண்மையான சீர்திருத்தக் கட்சியாக மாற முடியவில்லை." (4)

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி ஓர் "உண்மையான சீர்திருத்தக் கட்சியாக" மாற்றப்பட இயலாத தன்மையைக் கொண்டுள்ளது என்ற கருத்தை நியாயப்படுத்தவதற்காக, "அதன் நவீன-அதிகாரத்துவ திருத்தல்வாதம் அல்லது முதலாளித்துவ அல்லது ஏகாபத்தியத்தின் சமூகசெல்வாக்கு எவ்வாறு தொழிலாளர் இயக்கத்தில் படர்ந்துள்ளது என்பதை வெளிப்படுத்தவில்லை என்றும், மாறாக சோவியத் ஒன்றியத்தின் அதிகாரகத்துவ சாதியின் செல்வாக்கை வெளிப்படுத்துகிறது என்றும் அப்படி இருந்தும் இது ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு சக்தியாகும்" எனக் கூறினார். (5) இந்தக் கருத்துரு ட்ரொட்ஸ்கியின் கருத்திற்கு முற்றிலும் விரோதமானது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் "உலக முதலாளித்துவத்தின் கருவியாக தொழிலாளர்களின் இயக்கத்தினுள் செயல்படுகிறது" என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியிருந்தார். (6) எனவே சோவியத் ஒன்றியம் மற்றும் சர்வதேச அரங்கில், ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு பங்கைக் கொண்டிராமல், எதிர்புரட்சிகர பங்கைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மைய்ற்ரானுடைய இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய அரசியல் முடிவுகளின் கருத்துருக்கள், இத்தாலிய பப்லோவாதிகளின் நூல்கள் முழுவதும் இழையோடுகிறது.

1951ம் ஆண்டிலேயே, மைய்ற்ரானுடைய Gruppi Comunisti Rivoluzionari (GCR) எனும் அமைப்பின் உறுப்பினர்கள் பப்லோவாத பரிந்துரைகளைப் பின்பற்றி இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருந்தனர். ஒரு சிறிய நிர்வாக அமைப்பின் கருத்தளமும் Bandiera Rossa என்ற செய்தித் தாளும் இருந்தபோதிலும், பெரும்பாலான உறுப்பினர்கள் 1969ம் ஆண்டு வரை ஸ்ராலினிஸ்டுகளுடன் உழைத்து வந்தனர். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் அவர்கள் வெளிப்படியாக வேலை செய்ய முடியவில்லை. "நாங்கள் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் துறவியர் போல் வாழ்ந்தோம்; நாங்கள் எங்கள் கருத்து வேறுபாடுகளை தெரிவிக்கவில்லை. நிலைமை கனியும் வரை காத்திருந்தோம்" என்று வரலாற்றாளர் ஒருவரிடம் ஓர் உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கிற்கு இத்தாலிய தொழிலாள வர்க்கத்தின் பெரும்பகுதியினர் உட்பட்டிருந்தனர் என்பது அதற்குள் நடந்த செயற்பாடுகள் முக்கியத்துவம் அற்றவை என ஒதுக்குவதற்கில்லை என்பதைப் புலப்படுத்துகிறது. இதேபோன்ற சூழ்நிலையில்தான் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஜெரி ஹீலியின் தலைமையில் தொழிலாளர் கட்சியில் 1947ல் இருந்து 1959 வரை பணியாற்றியிருந்தனர். ஆனால் நுழைதல் முறை (entryism) என பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் கொண்டிருந்த முறை, லிவியோ மைய்ற்ரானின் தலைமையில் GCR கொண்டிருந்த முன்னோக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு தொழிற்கட்சியின் எதிர்புரட்சிகர தன்மைபற்றி மிகவும் தெளிவாக இருந்தனர். எனவே, அவர்களுடைய பணி தொழிலாள வர்க்கம் தவிர்க்க இயலாமல் தொழிலாளர் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு வகைசெய்யும் முறையில் இயக்கப்பட்டது. அவர்கள் கட்சி அதிகாரத்துவத்திற்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை நடத்தினர்; இந்த அடிப்படையில் அவர்கள் ஒரு மார்க்சிச போராளர் குழுவை வெற்றியுடன் உருவாக்க முடிந்தது. 1963ம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் இளைஞர் இயக்கமான இளம் சோசலிஸ்டுகள் (Young Socialists) பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கமான சோசலிச தொழிலாளர் கழகத்துடன் சேர்ந்தது.

மைற்றானுடைய பப்பலோவாத முன்னோக்கு முற்றிலும் மாறுபட்ட விளைவுகளைக் கொடுத்தது. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி "அரசியல் நிறுவன அமைப்பின் வடிவத்தில்" இருந்து, "அதில் தொழிலாளர், விவசாய வெகுஜனங்களின் வெளிப்பாடு இருந்தது" என்று கூறினால், தன்னுடைய செல்வாக்கை இழக்காமல் இருக்கும்பொருட்டு "வர்க்கப் போராட்டத்தின் உண்மையை இயம்ப வற்புறுத்தப்பட்டது" என்று கூறினால், ட்ராட்ஸ்கிஸ்டுகளுடைய பணி இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி இலிருந்த தொழிலாளர்களை முறிக்காமல் அவ்வமைப்பிலேயே விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதாக இருந்தது. அத்தகைய முன்னோக்கு GCR ஸ்ராலினிசத்திற்கான ஓர் இடது மறைப்பு என்பதைத்தான் காட்டுகின்றது. கட்சியின் தலைமையை பல பிரச்சினைகளிலும் விமர்சித்தாலும், சாராம்சத்தில் அவர்கள் அதை ஆதரித்து, ஒரு புரட்சி திசையை நோக்கிச் செல்லும் என்ற நப்பாசையை வளர்த்தனர்.

அதே நேரத்தில், இத்தகைய சார்பு இத்தாலிய தொழிலாள வர்க்கத்தை நான்காம் அகிலத்தின் பார்வையில் இருந்து ஒதுக்கிவைத்தது. அனைத்துலகக் குழுவின் பிரிவு இத்தாலியில் எப்பொழுதுமே இருந்திராத நிலையில், மிக நன்கு அறியப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கிச வாதியான லிவியோ மைய்ற்ரான் இத்தாலியக் கம்யூனிசக் கட்சியை ஆதரித்தது, 1960 களிலும் 1970 களிலும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தீவிர மோதல்கள் கொண்டிருந்த பல தொழிலாளர்களையும் இளைஞரையும் வெளியேறச் செய்தது. இந்த ஆண்டுகளில் நிகழ்ந்த முற்போக்குத் தன்மை நான்காம் அகிலத்திற்கு எந்த நன்மையையும் தரவில்லை; ஆனால் அவை மாவோயிசம், அராஜாகவாதம் அல்லது "ஆயுதமேந்திய போராட்டம்", பயங்கரவாதம் என்ற மேலேசெல்லமுடியாத பாதை இவற்றிற்கு இட்டுச் சென்றன. 1970 களின் இறுதியில் கடைசியாகக் கூறப்பட்டது கணிசமான அளவு வளர்ந்து இத்தாலிய இடதுசாரிகள் மத்தியில் ஆழ்ந்த நெருக்கடியை உருவாக்கிவிட்டது.

இந்த வளர்ச்சிக்கு இருவகையில் மைய்ற்ரானின் பங்களிப்பு இருந்தது. முதலாவதாக அவர் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை போற்றிவந்திருந்தார்; 1968ம் ஆண்டு கூட அவருடைய அமைப்பிலேயே பெரும்பாலானவர்கள் வேறு நிலையைக் கொண்டிருந்தனர்; இதன் விளைவாக GCR ஒரு பிளவைக் கண்டது. மற்றொரு புறத்தில், ஐக்கிய செயலகத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளதுபோல் மைய்ற்ரான் மாவோயிசம் மற்றும் "ஆயுதமேந்திய போராட்டம்" பற்றிய பொய்த்தோற்றத்தை வளர்த்தார்; அவைதான் எதிர்வரவிருக்கின்ற ஆண்டுகளில் போர்க்குணமிக்க இயக்கத்தின் சீரழிவிற்கு காரணமாகின.

தொடரும்....


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved