World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு US-European tensions deepen over Iran's nuclear program ஈரானின் அணுத்திட்டம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே பதட்டங்கள் ஆழமாகின்றன By Peter Symonds ஈரானின் அணுத்திட்டம் தொடர்பாக அடுத்தவாரம் நடைபெறவிருக்கும் சர்வதேச அணு சக்தி அமைப்பு (IAEA) வாரிய கவர்னர்கள் கூட்டம், அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய போட்டி நாடுகளுக்குமிடையே ஒரு பதட்டம்மிக்க ராஜியத்துறை போர்க்களமாய் அச்சுறுத்துகிறது. விரிவான பொருளாதார மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பிற்கான பேச்சுவார்த்தைகளுக்கு கைமாறாக ஈரான் அதன் யூரேனியம் செறிவூட்டத் திட்டத்தை முடக்குவதற்கு சென்ற வாரக்கடைசியில் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரிட்டன் ஆகியன ஈரானுடன் ஒரு ஆரம்ப உடன்படிக்கையை செய்து கொண்டன. இந்த முயற்சி புதிய புஷ் நிர்வாகம் முன்கூட்டி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்குவதை தடுப்பதை தெளிவான நோக்கமாகக் கொண்டதாகும், இதற்குமுன்னர் அது IAEA கூட்டத்தில், ஈரான் பிரச்சனையை பொருளாதார தடைவிதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி முடிவுசெய்வதற்காக ஐ.நா பாதுகாப்பு சபையின் முடிவிற்கு விட வலியுறுத்துமென்று கோடிட்டுக்காட்டியிருந்தது. வாஷிங்டன் இந்த உடன்படிக்கைக்கு தனது மறைக்க முடியாத அலட்சியப்போக்கை வெளிப்படுத்தியது. சில நாட்டுக்கு விஜயம் செய்யும் வழியில் புதன்கிழமையன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவல், தற்போதுள்ள கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களை பொருத்தும் வகையில் மாற்றம் செய்வதற்கு ஈரான் ''தீவிரமாக பணியாற்றிவருவதாக'' ஆத்திரமூட்டும் வகையில் ஈரான் மீது குற்றம் சாட்டினார். "எனது உள்ளத்தில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை --மற்றும் பல ஆண்டுகளாக நாங்கள் கூறிவருவதைத்தான் நேரடியாக இப்போது சொல்லிவருகிறோம்--- அவர்கள் (ஈரான்) அணு ஆயுதங்கள் பயன்பாட்டில் அக்கறை செலுத்தி வருகின்றனர், இதனுடைய பொருள் அவர்கள் அதைத் தயாரித்து முடித்து அனுப்பக் கூடிய நிலையில் உள்ளனர், அது அங்கே ஏதோ தயாரிப்பு கட்டத்தில் இல்லை'' என்று அவர் அறிவித்தார். பவல் ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை பார்த்ததாக கூறிக்கொண்டார், ஆனால் அந்த சான்றின் பலவீனமான தன்மையை உடனடியாக வாஷிங்டன் போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது. பவலின் குற்றச்சாட்டுக்கள் ''ஒரே ஒரு தணிக்கை செய்யப்படாத மூலாதாரத்தை'' அடிப்படையாகக் கொண்டது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்னர் அறிந்திராத ''எங்கிருந்தோ'' வந்த ஒரு நபர் அமெரிக்க புலனாய்வு அமைப்புக்களை அணுகி, அணு ஆயுத ஏவுகணையும் ஏவுகணை அமைப்பு பற்றிய வரைபடங்கள் உள்பட 1000- பக்கங்களுக்கு மேற்பட்ட தொழில் நுட்ப வரைபடங்கள் மற்றும் ஆவணங்களை தந்தார். இந்த ஆவணங்களின் சரியான தன்மை குறித்து CIA நிச்சயமாக எதுவும் கூற முடியவில்லை மற்றும் எப்படி அந்த ஆள்காட்டி இந்த ஆவணங்களைப் பெற்றார் என்றும் நிச்சயமில்லை என ஒரு அதிகாரி அந்த செய்திப்பத்திரிகைக்கு தெரிவித்தார். ஈரானிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள மக்கள் முஜாஹீதின் அமைப்பின் அரசியல் பிரிவான ஈரான் எதிர்ப்புப் போராட்ட தேசிய சபையால் (NCRI) இந்த வாரம் தெரிவிக்கப்பட்ட ஆதாரமற்ற கூற்றுக்கும் பவல் நம்பகத்தன்மையை தந்திருக்கிறார். தலைநகர் டெஹ்ரானுக்கு வடக்கே ஒரு ரகசிய பாதுகாப்பு அமைச்சகம் அலுவலகத்தில் ஈரான் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தைத் தயாரித்து வருகிறது மற்றும் 1990-களின் நடுவில் பாக்கிஸ்தான் விஞ்ஞானி Abdul Qadeer Khan ஒரு அணு ஆயுதத்திற்கான வடிவமைப்பை தந்தார் என்ற NCRI-ன் கூற்றை அவர் எடுத்துக்காட்டினார். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமாக எந்த சான்றையும் தரவில்லை. ஈராக் மீது அமெரிக்கா நடத்திய சட்டவிரோதமான படையெடுப்பை நியாயப்படுத்துவற்கு பயன்படுத்தப்பட்ட பொய்களோடு இணையானவை, இவை என்பது சந்தேகத்திற்கிடமில்லாதவை. 2003-பெப்ரவரியில் ஈராக்கில் பேரழிவுகரமான ஆயுதங்கள் தொடர்பாக பவல்தான் வாஷிங்டனின் கற்பனையான ஒரு வழக்கை ஐ.நா பாதுகாப்பு சபையில் எடுத்துரைத்தார்--- அவற்றில் பெரும்பகுதி தகவல் நாடு கடத்தப்பட்ட குழுக்களால் கற்பனையாக உருவாக்கப்பட்டவை. அவரது சமீபத்திய கருத்துக்கள் ஈரானின் அணு ஆயுதத்திட்டங்கள் பற்றிய அவரது குற்றச்சாட்டுக்கள் சாதாரணமாக நம்பமுடியாதது என்று அமெரிக்காவில் கவலையைத் தூண்டிவிட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் தலைமை ஆயுதங்கள் ஆய்வாளர் டேவிட் கே சென்ற ஆண்டு ஈராக்கிடம் WMD-கள் எதுவுமில்லையென்று ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார். அத்தகைய சந்தேகத்திற்குரிய புலனாய்வு தகவலை பவல் பரப்பியிருப்பது குறித்து அவர் வியப்புத்தெரிவித்தார். ''இந்த நிர்வாகத்தில் ஏதாவது ஒரு நபர் இத்தகைய ஆதாரங்களால் கையை சுட்டுக்கொண்டவராய் இருந்தால் அது பாவலாகத்தான் இருப்பார் என்று நான் நினைத்தேன்'' என்று கூறினார். ஆனால் புஷ்- நிர்வாகமும் குறிப்பாக பாவலும் ஈரானுக்கெதிராக அத்தகையதொரு குற்றச்சாட்டை கூறியிருப்பது வியப்பளிப்பதோ அல்லது ஒரு தவறோ அல்ல என்பதுதான் உண்மை. இது ஐரோப்பாவிற்கும் உலகின் மற்ற நாடுகளுக்கும் ஒரு திட்டவட்டமான அரசியல் செய்தியை தருவதை நோக்கமாகக் கொண்டது. வாஷிங்டன் தனது நலன்களை முன்னெடுத்துச்செல்வதற்கு மிக அப்பட்டமான பொய்கள் உட்பட எதையும் செய்வதற்கு தயங்காது என்பதுதான். அந்தச்செய்தி பதவியிலிருந்து வெளியேறும் பவல் மிதவாதக் குரல் கொடுப்பவர் என்று கருதப்படுபவர். அவர் கூறியுள்ள கருத்துக்கள் முந்தியதைப் போன்ற அதே ஒருதலைப்பட்சமான அணுகு முறையையும் அதே ஆக்கிரமிப்புப் போக்கையும் புதிய புஷ் நிர்வாகம் முழுமையாக முன்னெடுத்துச்செல்லக் கருதுகிறது என்பதைத்தான் தெளிவுபடுத்துகின்றன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வெள்ளை மாளிகையோ அல்லது பவலோ ஈரானுக்கெதிராக கடைசியாகக் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து பின்வாங்கிக் கொள்ளவில்லை. அமெரிக்க அரசுத்துறை பேச்சாளரான Adam Ereli, பவல் ஒரு தவறு செய்துவிட்டார் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ''வெளியுறவுத்துறை அமைச்சர் தவறாக பேசவில்லை'' என்று அவர் அறிவித்தார். வியாழனன்று சிலி நாட்டு தொலைக்காட்சியில் பேட்டியளித்த பவல், ஈரானின் அணு பேரவாக்கள் நன்றாகத் தெரிந்ததுதான் என்று வலியுறுத்திக்கூறினார். ''அவை எவருக்கும் வியப்பூட்டுவதாக இல்லை. ஒரு அணு ஆயுதத்தை நோக்கி அந்த வழியில் சென்று கொண்டிருக்கவில்லை என்று அவர்கள் சர்வதேச சமுதாயத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு ஈரான் இன்னும் அதிகமாக செயல்பட வேண்டியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்'' என்றார். வெள்ளிக்கிழமையன்று மற்றொரு குற்றச்சாட்டு வெளிக்கிளம்பியிருக்கிறது. Reuters தந்துள்ள ஒரு செய்தியின்படி, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு இராஜதந்திர வட்டாரங்கள் ஈரான் ஏராளமான அளவிற்கு யுரேனியம் hexafluoride தயாரித்து வருவதாகத் தெரிவித்தன---- அந்த வாயு யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக பயன்படுத்தப்படுவது ---- இந்தவாரம் செயல்படத் தொடங்கும் EU வுடனான ஒப்பந்தம் சென்றவாரக்கடைசியில் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர் இந்த வாயு தயாரிக்கப்பட்டது. ''இது ஒரு பயங்கரமான விவகாரம், நாம் IAEA வாரியக்கூட்டத்தை வியாழனன்று தொடங்கும்போது இந்த விவகாரம் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்'' என்று ஒரு தூதர் அந்த செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். ஈரானின் மறுப்புக்கள் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திட்டம் எதுவும் தன்னிடமில்லை என்று ஈரான் திரும்பத்திரும்ப வலியுறுத்திக்கூறிவருகிறது, தனது அணுத்திட்டங்கள் சிவிலியன் நோக்கங்களுக்காக என்றும் அவை அணு ஆயுத பவரல் தடை ஒப்பந்தவிதிகளின் படிதான் நடைபெறுவதாகவும் வலியுறுத்திக்கூறி வருகிறது. அதே நேரத்தில், தெற்கு துறைமுகமான Busheher-ல் ஒரு அணுமின்சாரத் தொழிற்கூடத்தை கட்டுகின்ற தனது நோக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த மின்சாரத்தயாரிப்பு உலைக்கான எரிபொருளை வழங்குவதற்காக யுரேனியம் செறிவூட்டலை அபிவிருந்தி செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் ஈரான் அறிவித்தது. NCRI- கூற்றுக்கள் பற்றி கருத்து தெரிவித்த ஈரானிய அணுஆயுத பேச்சுவார்த்தையாளர் ஹூசேன் மொசாவியன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், இந்தக் குற்றச்சாட்டு IAEA வாரிய கவர்னர்கள் அடுத்தக்கூட்டம் நடக்கின்ற நேரம் பார்த்து வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் கூட்டம் நடப்பதற்கு முன்னர் இதுபோன்ற வகைகளைச்சார்ந்த குற்றச்சாட்டுக்கள் அமெரிக்கா தரப்பிலிருந்தோ அல்லது பயங்கரவாதக் குழுக்களிலிருந்தோ வந்து கொண்டிருக்கிறது. மற்றும் ஒவ்வொரு முறையும் இந்தக்குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன'' என்று விளக்கினார்.செப்டம்பரில் முந்திய IAEA கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், முன்னாள் அமெரிக்க ஆயுதங்கள் ஆய்வாளர் டேவிட் ஆல்பரைட் Parchin லுள்ள ஒரு தொழிற்துறை வளாகத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டார். அவை அணு ஆயுத வெடிப்பு கருவியை இயக்குவதற்கு தேவைப்படும் உயர் வெடிப்புத்திறன் கொண்ட பாகங்களை தயாரிப்பதற்கு ''பொருத்தமான இடம்'' என்று குறிப்பிட்டார். அமெரிக்கா இந்த தெளிவற்ற கருத்தை கடுமையான நடவடிக்கைகளுக்கு உடன்பட வேண்டுமென்று IAEA உறுப்பினர்களை மிரட்டுவதற்காக ஈரானுக்கெதிரான "சான்றின்" ஒரு பகுதியாகக் காட்டியது. IAEA முடிவுகளை முழுமையாக செயல்படுத்தத்தவறுமானால் அதுபற்றி உடனடியாக ஐ.நா பாதுகாப்புசபைக்கு தெரிவிக்க வேண்டுமென்று அமெரிக்கா விடுத்தக் கோரிக்கையை செப்டம்பர் கூட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஈரான் உடனடியாக தனது யுரேனிய செறிவூட்ட திட்டத்தை நிறுத்திவிட வேண்டுமென்றும் நாட்டின் அணு நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு முழு IAEA அறிக்கை தாக்கல்செய்யப்பட வேண்டுமென்றும் ஈரானைக்கேட்டுக் கொண்டது. இந்தவாரத்தில் முடிவடைந்த இரகசிய அறிக்கை, தனது முடிவுரையில்: ''பிரகடனப்படுத்தப்பட்ட ஈரானின் எல்லா அணு சாசனங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன, எனவே அத்தகைய பொருட்கள் தடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக திருப்பிவிடப்படவில்லை'' என்று குறிப்பிட்டிருக்கிறது.என்றாலும் அந்த அறிக்கை மேலும் கூறியிருப்பதாவது: ''என்றாலும் இந்த ஏஜென்ஸி ஈரானில் அறிவிக்கப்படாத எந்த அணுப்பொருளும் இல்லையென்றோ அல்லது நடவடிக்கைகள் இல்லை என்றோ முடிவு கூறும் நிலையில் இல்லை.'' இந்தப் பிற்சேர்க்கை, ஈரான் தனது பரந்து விரிந்த எல்லைக்குள் எந்த இடத்திலும் அணு ஆயுதங்கள் இல்லையென்று ஈரானே நிரூபிக்க வேண்டுமென்று இயலாத செயலைச் செய்யுமாறு அமெரிக்கா கோரிவருகிறது என்ற உண்மையை. கோடிட்டுக்காட்டுவதாக உள்ளது. அமெரிக்காவின் போலியான குற்றச்சாட்டுக்களை பொய் என்று நிரூபிப்பதற்கு ஒவ்வொரு முறையும் டெஹ்ரான் முயற்சி செய்யும்போது மேலும் அணு வசதிகள் தொடர்பாக தொடர்ந்து போலியான கூற்றுக்களையே அது எடுத்துவைக்கிறது. வாஷிங்டனைப் பொறுத்தவரை ஈரானின் அனைத்து அணு திட்டங்களும் -----அவை சிவிலியன் நோக்கங்களைக் கொண்டவையாக இருந்தாலும், அல்லது இராணுவ நோக்குடையதாக இருந்தாலும்- அவை சட்டவிரோதமானவை மற்றும் அவை நிறுத்தப்பட வேண்டும் என்கிறது. Bushehr மின்சார அணு உலைத் திட்ட ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்று அமெரிக்கா தொடர்ந்து திரும்பத்திரும்ப ரஷ்யாவிற்கு நிர்பந்தம் கொடுத்து வருகிறது------ அந்தக்கோரிக்கைக்கு மாஸ்கோ இதுவரை மறுப்பே தெரிவித்துவருகிறது. இறுதிஆய்வில், ஈரான் ஒரு அணு ஆயுத குவியலைத் தயாரிக்க முயலுமானால், அப்படிசெய்வதற்கு அந்த நாட்டிற்கு எல்லா வகையான நியாயமும் உண்டு. 2002-ம் ஆண்டு வடகொரியா மற்றும் ஈராக்குடன் சேர்ந்து புஷ் ஈரானை ''தீய அச்சு நாடுகளின்'' ஓர் அங்கமென்று முத்திரை குத்தினார். ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும் தனது உயர் நுட்ப ஆயுதங்கள் மற்றும் மிகப்பெரும் அணு ஆயுதக்குவியல்கள் மூலம் அடிபணியச்செய்துவிட்ட பின்னர், ஈரானின் எல்லைகள் இரண்டில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை நிறுத்தியுள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடான இஸ்ரேலும் முன்கூட்டிய இராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக சுட்டிக்காட்டியுள்ளன. செப்டம்பரில் நடைபெற்ற IAEA கூட்டத்தைத் தொடர்ந்து, ஈரானிய ஆட்சி IAEA தீர்மானம் சட்டவிரோதமானது என்று அறிவித்தது மற்றும் தனது யுரேனிய செறிவூட்டத்திட்டங்களை தான் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்தது. என்றாலும் டெஹ்ரான், IAEA கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டுமென்று பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றின் தீவிர நெருக்குதலுக்கு இலக்காகி உள்ளது. சென்றவாரக்கடைசியில் அந்த மூன்று வல்லரசுகளும் அமெரிக்காவின் பக்கம் சேர்ந்து கொள்ளப்போவதாக அச்சுறுத்தின மற்றும் ஐ.நா பாதுகாப்புச்சபைக்கு இந்த விவகாரத்தை விடப்போவதாகவும் அச்சுறுத்தின, இதைத்தொடர்ந்து தயக்கத்துடன் EU- வின் பேரத்திற்கு அது இணங்கியது. இந்த உடன்படிக்கை டெஹ்ரானில் தீவிர விமர்சகர்களிடையே ஆவேசத்தைக் கிளறிவிட்டது, அவர்கள் EU- தெளிவில்லாமல் தந்திருக்கும் உறுதிமொழிக்கு கைமாறாக யுரேனிய செறிவூட்டத்திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக சுட்டிக்காட்டினர். பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனியைப் பொறுத்தவரை, IAEA கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் இந்தச்சிக்கலை நீர்த்துப்போகச்செய்வது மிக மிக அவசியமாகும். ஏனென்றால் அப்போதுதான் அமெரிக்காவின் அதிரடித்தாக்குதலை தவிர்க்க முடியும். அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய போட்டி நாடுகளுக்கிடையில் உண்மையான உந்துதல்கள் என்னவென்றால், அவை ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் என்று கூறப்படுபவற்றுள் எந்த விதமான சம்மந்தமும் இல்லாதவை. மாறாக இந்த எல்லா வல்லரசுகளுமே எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதில் பெருகிவரும் ஒரு கடுமையான போட்டியில் ஈடுபட்டிருக்கின்றன மற்றும் ஈரான் தங்களது மூலோபாயங்களுக்கு உயிர்நாடி என்றும் கருதுகின்றன. புஷ் நிர்வாகத்தைப் பொறுத்தவரை, ஈரானின் அணுதிட்டங்கள் தொடர்பாக ஒரு போர்வெறி நிலைப்பாட்டை எடுப்பது ஈரானுடன் ஐரோப்பாவின் வளர்ந்துவரும் பொருளாதார, உறவுகளை சீர்குலைக்கும் ஒரு பயனுள்ள கருவியாகும். அத்துடன், டெஹ்ரானை மிரட்டுவதன் மூலம் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு நிலவிவரும் எதிர்ப்பை குறிப்பாக ஈராக்கின் தென்பகுதி ஷியா முஸ்லீம்களின் எதிர்ப்பை ஒடுக்குவதில் ஈரானின் உதவியைப் பெறமுடியுமென்று வாஷிங்டன் நம்புகிறது. தற்போது அமெரிக்க இராணுவம் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு வரும் அதேவேளை, இந்த வாரம் நடக்கும் IAEA கூட்டம் புஷ் நிர்வாகத்திற்கு ஈரானுக்கும், ஐரோப்பாவிற்கும் சட்டத்தை விட்டுக்கொடுக்கச்செய்வதற்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது, மற்றும் அது எதிர்காலத்தில் இதைவிட மிகத்தீவிரமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுப்பதற்கும் அடிப்படையை அமைக்கவும் வாய்ப்பை வழங்குகிறது. |