World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan unions impose wage deal on plantation workers

இலங்கை தொழிற்சங்கங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது சம்பள உடன்படிக்கையை திணிக்கின்றன

By Shree Haran
15 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் கடந்த மாத இறுதியில் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்ட இலங்கையின் பிரதான பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் நாட்டின் லட்சக்கணக்கான தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு அற்ப சம்பள உயர்வை வழங்கியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக அமையவிருந்த, முதலாளிகளுக்கு எதிராக வெளித்தோன்றிக்கொண்டிருந்த எதிர்ப்பை தினிப்பதன் பேரில், இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னாலேயே கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (இ.தே.தோ.தொ.ச) மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகியவை அக்டோபர் 27ம் திகதி இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அரசியல் கட்சியும் தொழிற்சங்கமுமான இ.தொ.கா, அண்மையில் இடம்மாறி கூட்டணி அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டது. இ.தே.தோ.தொ.ச எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் (ஐ.தே.க) கட்டுப்பாட்டில் உள்ள அதே வேளை, பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்த சங்கங்களின் கூட்டமைப்பாகும்.

இ.தொ.கா மற்றும் ஏனைய தொழிற்சங்க தலைவர்களும் தமது சொந்த அங்கத்தவர்களிடம் அபிப்பிராயம் பெறவில்லை அல்லது ஒரு சம்பள உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது பற்றி அவர்களுக்கு அறிவிக்கக்கூட இல்லை. ஆனால், எவ்வாறேனும் தொழிலாளர்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்கு இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளால் கட்டுப்படுத்தப்படுவர்.

புதிய உடன்படிக்கையின்படி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 121 முதல் 135 ரூபா வரை (1.35 அமெரிக்க டொலர்கள்) வெறும் 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறப்பர் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பும் பெருமளவில் இதற்கு சமமானதாக 109 முதல் 125 ரூபா வரை 16 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் எமது நிருபர்களிடம் ஆத்திரத்துடன் குறிப்பிட்டது போல், இந்த அதிகரிப்பானது தரங் குறைந்த அரிசியில் --நாட்டின் பிரதான உணவுப் பொருள்-- அரைக் கிலோவைக் கூட வாங்க போதாது.

தொழிற்சங்கங்களும் பெருந்தோட்டக் கம்பனிகளும் ஒப்பந்தத்தில் மேலதிக ஊதிய அதிகரிப்பை அனுமதிக்கும் ஏனைய உட்பிரிவுகளை சுட்டிக்காட்டிய போதிலும், அவை நிபந்தனைகளுக்கு உட்பட்டவையாகும். வருகைக்கான கொடுப்பனவு நாளொன்றுக்கு 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும், கம்பனியின் தீர்மானத்தின்படி வருகை வீதம் 75 ஆக இருக்க வேண்டும். இன்னுமொரு மேலதிக கொடுப்பனவான மாறும் விலைப் பங்கு திட்டமும் தேயிலை மற்றும் இறப்பரின் உலக விலை அதிகரிப்புடன் முடிச்சுப்போடப்பட்டுள்ளது.

இ.தொ.கா தலைவர் ஆறுமுகம் தொண்டமான், இந்த எல்லா சம்பளத்தையும் ஒன்று சேர்த்தால் தேயிலைத் தொழிலாளர்கள் 198 ரூபாவையும் இறப்பர் தொழிலாளர்கள் 183 ரூபாவையும் நாள் சம்பளமாக பெறுவார்கள் என பெருமை பேசிக்கொண்டார். ஆனால், முற்றிலும் பற்றாகுறையான இந்த சம்பளங்கள் உற்பத்தி மற்றும் விலைகளுடன் முடிச்சுப் போடப்பட்டுள்ள நிலையில் ஒரு பெரும் மாயையேயாகும். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு, விசேடமாக பெண் தொழிலாளர்களுக்கு வருகைக் கொடுப்பனவை பெறுவதற்காக கோரப்பட்டுள்ள வேலை நாட்களை பூர்த்தி செய்வது நடைமுறையில் சாத்தியமற்றதாகும். ஒரு நாள் வேலையை பதிவு செய்வதற்காக தேயிலை கொழுந்து பறிக்கும் ஒருவர் 18 கிலோவை பூர்த்தி செய்யவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, முழுச் சம்பளமும் வேலை செய்த நாட்களின் தொகையிலேயே தங்கியுள்ளது. கம்பனிகள் கோரும் அறுவடையின் அளவின்படி தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களே வேலை வழங்கப்படுவதோடு அதன் மூலம் 3,000 ரூபாய்களையே மாத வருமானமாக பெறுவர். இது இலங்கையின் தரத்தில் கூட குறைந்த ஊதியமாகும். சில சமயங்களில், நிரந்தரத் தொழிலாளர்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் பேரில் அவர்களை நெருக்குவதற்காக ஓய்வுபெற்ற அல்லது இளம் தொழிலாளர்களை தற்காலிகத் தொழிலாளர்களாக கம்பனிகள் வேலைக்கு சேர்த்துக்கொள்கின்றன.

கடைசியாக 2002 ஜூனில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் இருந்து வாழ்க்கைச் செலவுப் புள்ளி செங்குத்தாக அதிகரித்துள்ளது. 2002 ஜூனின் மாதம் 3,292 ஆக இருந்த வாழ்க்கைச் செலவு சுட்டெண் 2004 அக்டோபரில் 3,572 முதல் 3,699 வரை அதிகரித்துள்ளது. எவ்வாறெனினும் அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் வேகமாக அதிகரித்துள்ளது. ஏப்பிரலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 22 முதல் 32 ரூபா வரை 45 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோ அரிசியின் விலை 28 முதல் 32 வரை 14 வீதத்தால் அதிகரித்துள்ளது.

நாட்டின் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரில் தோட்டத் தொழிலாளர்களும் அடங்குவர். பிரித்தானிய காலனித்துவ காலத்தில் இருந்தே அவர்கள் லயன் காம்பராக்கள் என்று சொல்லப்படுகின்ற வரிசை வீடுகளிலேயே --ஒரு குடும்பத்திற்கு ஒன்று அளவில் ஒவ்வொரு அறைகளாக தடுக்கப்பட்ட நீண்ட குடிசை-- வாழ்ந்து வருகின்றனர். மின்சாரம் மற்றும் குழாய் நீர் ஆகியவை பெரும்பாலும் பற்றாக்குறையாகவே உள்ளன. நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிட்டால் தோட்டங்களில் தரமான சுகாதார மற்றும் கல்விச் சேவை வழங்கப்படுவதும் குறைவாகவே இருக்கின்றது.

அதே சமயம், எவ்வாறெனினும் பெருந்தோட்டக் கம்பனிகள் அதிகரித்த இலாபத்தை பெற்றுக்கொள்கின்றன. உதாரணமாக, மஸ்கெலியா பிளான்டேசன்ஸ் 2003 மார்ச்சில் முடிவடைந்த ஓராண்டுக்கான நிகர இலாபமாக 84 மில்லியன் ரூபாய்களை சம்பாதித்துக்கொண்டுள்ளது. பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்க தலைவர் ரொஹான் பெனான்டோ, பெருந்தோட்டக் கம்பனிகள் புதிய சம்பள பட்டியலுக்காக 100 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கவேண்டியுள்ளது என ஒப்பாரி வைக்கும் அதே வேளை "தேயிலை விலை அதிகரிப்புடன் கம்பனிகள் கணிசமான இலாபத்தைப் பெற்றுள்ளன" என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இ.தொ.கா தனது அங்கத்தவர்களின் எந்தவொரு சம்பள உயர்வு பிரச்சாரத்தையும் அடக்குவதில் மூர்க்கமாக உள்ளது. நாட்டின் 450,000 பெருந்தோட்ட தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டமும், இப்போது இ.தொ.கா வும் அங்கம் வகிக்கும் சுதந்திர முன்னணி அரசாங்கம் எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளை மோசமாக்கும் என்பதில் இ.தொ.கா தலைவர்கள் கவனமாக உள்ளனர். அண்மைய மாதங்களில், கல்வி, மின்சாரம், நீர் மற்றும் புகையிரத ஊழியர்களும் சிறந்த ஊதியம் மற்றும் நிலைமைகளுக்காவும் தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் வேலை நிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட இன்னுமொரு அரசியல் கட்சியும் தொழிற்சங்கமுமான மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) சம்பள ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளதோடு ஒரு பெரும் சம்பள அதிகரிப்பையும் கோரியுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலான அதிருப்தியை சுரண்டிக்கொள்வதன் பேரில், ம.ம.மு ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து நவம்பர் முற்பகுதியில் ஹட்டனில் சில ஆயிரம்பேர் கலந்து கொண்ட ஒரு பொதுக் கூட்டம் உட்பட மட்டுப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

எவ்வாறெனினும், ம.ம.மு இத்தகைய கூட்டு ஒப்பந்தங்களை தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிப்பதை ஆதரிப்பதுடன் கடந்த காலங்களிலும் அவ்வாறே செய்தது. ம.ம.மு தலைவர் பி. சந்திரசேகரன், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் முன்னைய பொதுஜன முன்னணி அரசாங்கத்திலும் கடந்த ஏப்பிரல் வரை அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான ஒன்றியம் எனும் ஒரு குழு செப்டெம்பரில் முன்னெடுத்த ஒரு சம்பள பிரச்சாரம் பற்றி எல்லா பெருந்தோட்ட தொழிற்சங்கங்களினதும் பிரதிபலிப்புகள் அவைகளின் போக்கை அம்பலப்படுத்தியது. நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலையிலும் மற்றும் லக்சபானயிலும் உள்ள பல தோட்டங்களில் இருந்து சுமார் 2,000 தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 250 ரூபா நாள் சம்பளம் கோரி வீதிக்கிறங்கியதோடு ஒரு கூட்டத்தையும் நடத்தினர்.

இந்த போராட்டம் நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தத்தை நிராகரிக்கவும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கான சந்தாப் பணத்தை செலுத்தாமல் நிறுத்தவும் அழைப்புவிடுத்தது. லங்கசபான தொழிலாளர்களால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுமொன்று: "சம்பள உயர்வு பிரச்சினையில் எங்களுக்காக நேர்மையாக குரல் எழுப்பும் தொழிற்சங்கத்திற்கு மாத்திரமே எமது ஆதரவு தொடரும். சமுதாயத்தை காட்டிக்கொடுக்கும் தொழிற்சங்கங்கள் நிராகரிக்கப்படும்," என பிரகடன்படுத்தியிருந்தது.

இந்தப் போராட்டம் எல்லா பிரதான பெருந்தோட்ட தொழிற்சங்கங்களதும் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது. இ.தொ.கா பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், "சில அமைப்புகள் மலையகத் தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்த முயற்சிப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது. தொழிற்சங்க உறுப்பினர்கள் இதையிட்டு கவனமாக இருக்க வேண்டும்," என எச்சரித்தார். சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அதனது தொழிற்சங்க வெளியீடான ரது லங்கா பத்திரிகையின் செப்டெம்பர் வெளியீட்டில் இ.தொ.கா வைப் பாதுகாத்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என போராட்ட அமைப்பாளர்களை குற்றஞ்சாட்டியது.

உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் உரையாடிய தொழிலாளர்கள், புதிய சம்பள உடன்படிக்கை பற்றியும் தொழிற்சங்கங்கள் தங்களுடன் ஆலோசிக்காததையிட்டும் ஆத்திரமடைந்திருந்தனர். என்பீல்ட் தோட்ட தொழிலாளர்கள் தெளிவுபடுத்தும் போது, சிக்கலான உடன்படிக்கையின் காரணமாக அவர்களால் புதிய சம்பளம் எவ்வளவாக இருக்கும் என கணக்கிட முடியாமல் உள்ளது எனத் தெரிவித்தனர். "அவர்கள் எவ்வளவு வழங்கியுள்ளார்கள் என்பது எமக்குத் தெரியாது ஏனெனில் எங்களுக்கு எவ்வளவு தேவை என அவர்கள் எங்களிடம் கேட்கவில்லை. எங்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என அவர்களாகவே தீர்மானித்துக்கொண்டார்கள்," என ஒருவர் குறிப்பிட்டார்.

"அவர்கள் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட பின்னர் நாம் எவ்வாறு உடன்படாமல் இருக்க முடியும்? அத்தியாவசிய பொருட்களுக்கு நிரந்தர விலையில்லாத நிலையில், இந்த அதிகரிப்பு போதுமானதல்ல. அவர்கள் எங்களை பட்டினியில் தள்ளியுள்ளார்கள். இ.தொ.கா விற்கும் ம.ம.மு விற்கும் இடையில் நாங்கள் எந்த வேறுபாட்டையும் காணவில்லை," என இன்னுமொரு தொழிலாளி குறிப்பிட்டார்.

"நாங்கள் கடினமாக வேலை செய்கின்றோம். எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர், அவர்களை நான் படிக்கவைக்க வேண்டும். 180 ரூபா அடிப்படை சம்பளம் கூட ஈடு செய்ய போதாது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அன்றாடம் அதிகரிக்கும் அதே வேளை, எங்களது அன்றாட செலவை ஈடுசெய்ய எவ்வளவு வருமானம் போதுமானதென்று எங்களால் சொல்ல முடியாது," என ஒரு தொழிலாளி தெளிவுபடுத்தினார்.

"இல்லையெனில் என்னால் எனது குடுபத்தை கொண்டுசெலுத்த முடியாது. இன்றும் கூட எங்களிடம் அரிசி இல்லை. நான் எந்தவொரு தொழிற்சங்கத்தையோ அல்லது அரசாங்கத்தையோ ஆதரிக்க மாட்டேன். தற்போது தொழிலாளர்கள் தங்களது சங்கத்திற்கான சந்தாவாக 45 ரூபாவை செலுத்துகின்றனர். இப்போது அவர்கள் சந்தாவையும் அதிகரிக்கக் கூடும். இ.தொ.கா இலாபம் பெறக்கூடிய எந்த அரசாங்கத்திலும் இணையும் ஆனால் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை" என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹட்டனுக்கு அருகாமையில் கொட்டகலையில் டிரேட்டன் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் விளக்கும் போது, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற நிலைமைகளை நிராகரிப்பதோடு மாதாந்தம் அவர்களுக்கு வந்து சேரவேண்டியவை பற்றி மட்டுமே அக்கறைகொள்கின்றார்கள், எனக் குறிப்பிட்டனர்.

டிரேட்டன் தோட்ட தொழிலாளி ஒருவர் குறிப்பிடும் போது: "எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள். தொண்டமான் வீடமைப்பு அமைச்சராகவும் இருந்தார். ஆனால் நாங்கள் வீடு கட்டினால் எங்களது செலவிலேயே கட்ட வேண்டும். அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே செல்கின்றது? ம.ம.மு இதிலிருந்து வேறுபட்டதில்ல," எனத் தெரிவித்தார்.

Top of page