World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: மத்திய கிழக்கு : ஈராக்Iraq veteran Jimmy Massey speaks to the WSWS "We're committing genocide in Iraq"ஈராக் மூத்த இராணுவ சிப்பாய் ஜிம்மி மசி WSWS உடன் பேசுகிறார் ''ஈராக்கில் நாம் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறோம்'' By Jeff Riedel பன்னிரெண்டாண்டு கடற்படையில் இருந்த மூத்த அலுவலர் சார்ஜன்ட் ஜிம்மி மசி (Jimmy Massey) வடக்கு கரோலினாவில் உள்ள Waynesville ல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த சிறிய நகரமானது, மலைப்பகுதிகள் உள்ள Ashville நகருக்கு வெளியிலுள்ளது. அங்கு அவர் உலக சோசலிச வலைதளத்திடம் பேசினார். இது, ஈராக்கிலிருந்து திரும்பி வந்துகொண்டிருக்கும் அமெரிக்க படையினர்களில் வெளிப்படையாக போரை எதிர்ப்பவர்கள் பெருகிக்கொண்டு வருவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. 2003 மார்ச்சில், அமெரிக்க ஆக்கிரமிப்பின் தொடக்கத்தில் அதன் ஓர் அங்கமாக ஜிம்மி மசி ஈராக்கில் நுழைந்தார். அங்கு, அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதை அவர் நேரில் கண்டார். மற்றும் சில சம்பவங்களில் அவர் பங்கெடுத்தும் கொண்டார். ஒரு 48 மணிநேரத்தின் போது நெடுஞ்சாலை சோதனைச் சாவடிகளில் 30 மக்கள் அமெரிக்கத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானதை தான் பார்த்ததாக அவர் கூறுகிறார். ஈராக் மக்களிடையே வளர்ந்து வரும் எதிர்ப்பை முறியடிப்பதற்காக அமெரிக்க இராணுவம் மேற்கொண்டுள்ள கொடூரமான நடவடிக்கைகள் ஆக்கிரமிப்புப்பற்றிய அவரது கருத்தில் மாற்றத்தை உருவாக்கி அவரது வாழ்வையே மாற்றியமைத்துவிட்டது. பேரச்சம் மற்றும் கலவர உணர்விற்கு ஆட்பட்ட ஜிம்மி மசி, தன்னால் அந்த நிலையை சகித்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது குறித்து மேல் அதிகாரிகளிடம் பேசத் தொடங்கினார். இறுதியாக அவர் மருத்துவக் காரணங்களுக்காக ஈராக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு மன அழுத்தம் இருப்பதாகவும், அதிர்ச்சியின் விளைவுகளால் ஏற்பட்ட மனக்குழப்பம் என்றும் கூறப்பட்டது. அவருக்கு மனசாட்சிப்படி நடக்கும் எதிர்ப்பாளர் என்று அவரது தளபதிகளால் முத்திரை குத்தப்பட்டது. அவரது வக்கீல்களை கலந்து நடவடிக்கை எடுத்து 2003 டிசம்பரில் இராணுவத்திலிருந்து கெளரவ பணிபூர்த்தி சான்றிதழைப் பெற்றார். வடக்கு கரோலினா மேற்குமலைத் தொடர் பகுதிகளில் ஜிம்மி மசி வளர்ந்தார். அவர் 19 வயதிற்கு உட்பட்ட இளைஞனாக இருக்கும்போது, டிரக் டிரைவராக இருந்த அவரது தந்தை புளோரிடா மாநில போலீசாருடன் நடந்த ஒரு மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப்பின்னர் அவரது தாயாருடன் டெக்ஸாசிற்கு இடம் பெயர்ந்தார். அங்கு, அவரது தாயார் டெக்ஸாஸ் சிறுவர் சீர்திருத்தவாரியத்தில் ஒரு வேலையில் சேர்ந்தார். அப்போது, அவருக்கு வீட்டில் சில நேரங்களில் பணமே இல்லாமல் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் போய்விடுவதுண்டு. இறுதியில் அவர் கடற்படையில் சேரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். 1990 களின் கடைசியில் அவரே ஒரு கடற்படை நியமன அதிகாரியாகவும் பணியாற்றினார். ஈராக் மீதான ஆக்கிரமிப்பை நடத்துவதற்கான முன்னேற்பாடாக 2002 டிசம்பரில் அவர் குவைத்திற்கு அனுப்பப்பட்டார். இராணுவத்தில் ஒரு ஆள் சேர்ப்பு பணியாளராக இருந்த போதுதான் ஜிம்மி மசிக்கு இராணுவம் தொடர்பான விரக்தி ஏற்பட்டது. பொருளாதார அடிப்படையில் ஒடுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இளைஞர்கள் கடற்படையில் சேர்க்கப்படுவதிலும், அவர்கள் நியமிக்கப்படும் முறை குறித்தும் அவர் ஆட்சேபிக்கத் தொடங்கினார். அவரது இந்த உணர்வுகள் அவரது ஈராக் அனுபவத்தினால் மேலும் ஆழமடைந்தன. ''ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, உண்மையிலேயே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து நான் கேள்வி கேட்கத் தொடங்கினேன். கடற்படை பிரிவிற்கு ஆட்களைச் சேர்ப்பது அத்தனையும் ஒட்டுமொத்த பொய் என்று சொல்லவில்லை. ஆனால், நாம் படையினர்களை சேர்க்கின்ற முறை தவறான கண்ணோட்டத்தில் அமைந்தது. ஏராளமான இளைஞர்கள் அப்பலாச்சியன் மலைத் தொடர்களைச் சேர்ந்த ஏழ்மை நிறைந்த பகுதிகளில் இருந்து இராணுவத்தில் சேருகிறார்கள். அப்பலாச்சியா நாட்டிலேயே வறுமைமிக்க பகுதிகள் சிலவற்றை உள்ளடக்கியுள்ளது. எனவே, அவர்களுக்கு இந்த வேலையை மேற்கொள்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது'' என்று அவர் கூறினார். ''இந்த இளைஞர்கள் ஏதோ ஒருவகை சுகாதார காப்பீடு கிடைத்தது என்பதற்கு மிகுந்த நன்றி உணர்வுமிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்----அவர்களில் மிகப்பெரும்பாலோர் முதல் தடவையாக கடற்படைப் பிரிவில் சேர்ந்ததும், முதல் தடவையாக ஒரு பல் மருத்துவரிடம் செல்கின்றனர். அதற்குப்பின்னர் அவர்களுக்கு தேசபக்தி, புலனறிவுக்கு அப்பாற்பட்ட தன்னம்பிக்கை மற்றும் எத்தனையோ வகையான குணங்கள் போன்றவை ஒரு சித்தாந்த வழியில் போதிக்கப்படுகின்றன. ''அடிப்படை முகாம் (Boot
camp) இந்த இளைஞர்களை மனித நேயமற்றவர்களாக ஆக்குவதற்கும்
வன்முறை தொடர்பான உணர்வே இல்லாதவர்களாக ஆக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நான் இதுபோன்ற ஒரு
முகாமில் இரண்டரை ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்தேன். மற்றும் இளைஞர்களை அவர்களது இயல்புகளை அடியோடு மாற்றி
அவர்களைத் திரும்ப உருவாக்குவதையும் இந்த முகாம் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த முகாம் என்பது எனக்கு
தெரியும். இந்தப் பிரிவுகளின் ஒரே நோக்கம் போர்க்களத்தில் எதிரிகளை சந்தித்து அவர்களை அழிப்பதுதான்' 'என்று
மசி தெரிவித்தார். தற்போது அமெரிக்காவின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இளம் அமெரிக்கர்கள் ஒரு பொருளாதார நிர்பந்தக் கட்டாய இராணுவ சேவையில் சேரவேண்டிய அளவிற்கு தள்ளப்படுகின்றனர் என்று அவர் வலியுறுத்திக் கூறினார். ''இதுதான் இன்றைய அமெரிக்க நிலவரம். இன்றைய பிரச்சனை என்னவென்றால், மிகப்பெருமளவில் இராணுவவாதம் அதிகரித்து கொண்டுவரும் ஒரு சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான். ஏழை மக்கள் ஒப்பந்தத்தில் கையெடுத்திட்டுவிட்டு போர்க்களத்தில் முன்னணியில் நிற்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்''. ''இந்த நாட்டின் வளர்ச்சி என்று கூறப்படுபவற்றுள் பெரும்பகுதி இராணுவத்தோடு சம்மந்தப்பட்டதாகும். இதில் அடித்தள நிலைப்பாடு என்னவென்றால் ஹாலிபர்டன்களுக்கும், என்ரோன்களுக்கும்தான் (Halliburtons and Enrons) போர் நல்லதாக இருக்கிறது. ஆனால், ஏழைகளுக்கும், வீடு திரும்பிக் கொண்டிருக்கிற படையினர்களுக்கும், விசேடமாக காயமடைந்து வீடு திரும்பிக் கொண்டிருப்போருக்கும் நல்லதொரு எதிர்காலம் இல்லை. ஆனால் மேல்நிலைப்பள்ளியில், கல்லூரியில் படித்துத் தேறவேண்டுமென்று எதிர்பார்ப்போடு இருக்கின்ற ஏராளமான இளைஞர்களுக்கு இராணுவ சேவை சிறப்பாக தோன்றுகிறது. ஏனென்றால் அவர்களை கல்லூரிகளுக்கு அனுப்புகின்ற அளவிற்கு அவர்களது குடும்பத்திடம் பணவசதி இல்லை'' என்று அவர் தெரிவித்தார். ஜிம்மி மசி, தனது தலைமை அதிகாரிகளுக்கு எழுதிய ஒரு குறிக்கோள் அறிக்கையைத் தொடர்ந்துதான், ஆள் சேர்ப்பு அதிகாரியாக இருந்த அவரது பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவர் அந்த அறிக்கையில் ஆள்சேர்ப்பது தொடர்பான தனது சொந்த கவலைகளை வெளியிட்டிருந்தார். இப்படி தனது சொந்தக் கருத்தை வெளிப்படையாக கூறுகின்ற தருணம் கிடைப்பதற்கான வழி எளிதாக கிடைத்துவிடவில்லை என்றும் அவர் நினைவு கூர்ந்தார். ''உங்களிடம் நேர்மையாக ஒப்புக்கொள்வதென்றால், இப்போது இராணுவத்தில் இருப்பதானது ஒரு மாபியா (குடும்பத்தில்) கும்பலில் சேர்ந்திருப்பதை போன்றுதான் பெரும்பாலும் உள்ளது. அந்த கும்பலுக்கு வெளியில் அடியெடுத்து வைக்க முடியாது. மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலை அது. நான் சொல்வது என்னவென்றால் கவனிப்பு நன்றாக இருக்கும். முதல் தேதியும் பதினைந்தாம் தேதியும் உறுதியாக உங்களது ஊதியக் காசோலை கிடைத்துவிடும். நீங்கள் ஒரு கடற்படை தளத்தில் வாழ்வது, கற்பனையான ஒரு சொர்க்கத்தில் வாழ்வது போன்றதாகும். ஏனென்றால் அந்தக் கற்பனை உலக வாழ்வில் அந்த சிந்தனைக்கு இணங்கி நீங்கள் நீடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள். அந்தக் குடும்பத்திலிருந்து நீங்கள் பிரிந்து விடுவீர்களானால் உங்களது வாயை அடக்குவதற்கு எதையும் செய்வார்கள். ''அங்கிருந்து முறித்துக்கொண்டு வருவது மிகக்கடினமானது--- உங்களது உள்ளத்தில்
தோன்றுகின்ற கேள்விகளுக்கு ஆழமான உங்களது ஆன்மாவைத்தொட்டு விடைகான வேண்டும். எனக்கு என்ன
நேர்ந்ததென்றால், நான் இராணுவ ஆள் சேர்ப்புப் பணியில் இருக்கும்போது போர்ப்பணி எதிர்பாளர் கழகம் போன்ற
குழுக்களோடு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் இராணுவத்தில் சேர வேண்டாமென்று பிரச்சாரம்
செய்துகொண்டிருந்தார்கள். நான் அவர்களது வெளியீடுகள் சிலவற்றை உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து அவர்கள் வெளியேறிக்
கொண்டிருக்கும்போது படித்தேன். எனக்கு ஆர்வம் அதிகமாயிற்று. எனது சொந்த ஆய்வுகளையும் மேற்கொண்டேன். இதர
நாடுகளில் அமெரிக்கா தலையீடு தொடர்பான சில தகவல்களையும் தெரிந்து கொண்டேன்'' என்று அவர் குறிப்பிட்டார். ஈராக்கில் ஜிம்மி மசி நேருக்குநேராக இந்தத் தலையீட்டைக் கண்டார். ஆரம்பத்தில் இந்த ஆக்கிரமிப்பு ஒருதரப்பு படுகொலைத் தன்மை கொண்டதாக அமைந்திருந்தது. ஒரு பக்கம் உலகிலேயே மிக வலிமையான, மிக அதி நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான ஆயுதங்களைக் கொண்ட இராணுவமும், மற்றொரு பக்கம் ஒரு ஆயுதமில்லாத பாதுகாப்பு எதுவுமில்லாத இராணுவமும் இருந்தது. அத்தோடு, இந்த நாடு ஏற்கெனவே ஒரு தசாப்தம் பொருளாதாரத் தடைகளால் சீர்குலைந்தும் இருந்தது. ''இந்த நடவடிக்கையில் ஒட்டுமொத்த குறிக்கோள் என்ன என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். குவைத்திலிருந்து நாங்கள் புறப்படுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னரே கடற்படையினர்களுக்கு Ar.Rumaylah எண்ணெய் வயல்களை மூடிவிட்டு அவற்றை எப்படி மீண்டும் கையகப்படுத்துவது என்பது சம்பந்தமான பயிற்சி தரப்பட்டது. எல்லா எண்ணெய் வயல்கள் தொடர்பாகவும், பாஸ்ராவிற்கு வெளியிலுள்ள எண்ணெய் வயல்களையும் கைப்பற்றுவதற்கு பரந்த மற்றும் திட்டம் ஒன்று தீட்டப்பட்டது. இவை கட்டுப்பாட்டில் வந்துவிடுமானால், மீதமிருப்பது ஒரே ஒரு பணிதான் அது பாக்தாத் மீது படையெடுத்துச் செல்வதாக இருந்தது. ''நாங்கள் அனைவரும் மந்தை மேய்ப்பவர்கள்போல் (cowboys) நகருக்குள் நுழைந்தோம். கண்டபடி அந்த இடத்தை சுட்டுக்கொண்டிருந்தோம். வாகனங்களில் கருகிக்கிடந்த உடல்களை பார்த்து அவை இராணுவ வாகனங்கள் அல்ல என்பது தெளிவாகத் தெரிந்தது. சிவிலியன் உடுப்பில் சாலையோரத்தில் மடிந்து கிடந்தவர்களைப் பார்த்தேன். அந்த சம்பவம் உண்மை, அந்த நடவடிக்கை காலம் முழுவதிலும் இராணுவ சீருடையில் மடிந்தவர்கள் ஒரு சிலரைத்தான் என்னால் பார்க்க முடிந்தது. ''நேரடி சண்டை என்று சொல்கிற அளவிற்கு எதுவும் நடக்கவில்லை. ஏதோ ஒரு வகையில் தற்காப்பு நடவடிக்கைகள் தான் அவர்களால் எடுக்கப்பட்டன. எனது வாகனத்தின் பக்கவாட்டில் துப்பாக்கி ரவைகள் துளைத்திருந்தன. அவை பெரிய போரில் ஏற்பட்ட சேதமல்ல. பாக்தாத்வரை நெடுஞ்சாலையில் சென்றோம். அங்கே தரைப்படை எதுவுமில்லை, விமானப்படை ஆதரவு எதுவுமில்லை, அந்த அளவிற்கு ஈராக் பொருளாதாரத் தடைகளால் பலவீனப்பட்டிருந்தது. அவர்களது உபகரணங்கள் எல்லாம் மிக மோசமாக இருந்தன. அவர்களது தளவாடங்களில் பெரும்பகுதி ஈரானுக்கெதிரான போரில் மிச்சமிருந்தவை. மேலும், முதலாவது வளைகுடாப்போர் அவற்றை மேலும் நாசப்படுத்திவிட்டது. போரிடுவதற்கான வாய்ப்போ அல்லது உறுதிப்பாடோ அவர்களிடம் இருந்ததாக நான் நினைக்கவில்லை'' என்று அவர் குறிப்பிட்டார். ஈராக் மக்கள் அனைவருக்கும் எதிராக அமெரிக்கத் துருப்புக்கள் பயன்படுத்திய கொடூரமான நடவடிக்கைகளுக்கு நேரடியாக பதிலளிக்கின்ற வகையில், தான் அங்கு சென்ற நேரத்தில் அமெரிக்க இராணுவம் அங்கு இருப்பதற்கு மக்களிடையே வெறுப்பு பன்மடங்கு பெருகிவிட்டதாக ஜிம்மி மசி கூறினார். ''அப்பாவி மக்களை கொன்று தள்ளியதை என்னைப் பொறுத்தவரை நான் கவலைகொண்டேன். அமெரிக்கப் படைகள் தங்களது அன்பிற்குரியவர்களை கொல்வதை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னுடைய குழந்தை சுடப்படுவதை அல்லது தனது கணவன் அல்லது பாட்டி சுடப்படுவதை பார்த்துக்கொண்டிருக்கிற மக்களிடம் உங்களை விடுவிக்க வந்திருக்கிறோம் என்று சொல்வது மிகக்கடினமானது'' என்று அவர் கூறினார். ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பல மாதங்கள் ஈராக் நெடுஞ்சாலைகளில் பல அமெரிக்க இராணுவ சோதனைச் சாவடிகளில் ஜிம்மி மசி பணியாற்றியுள்ளார். சோதனைச்சாவடிகளில் கார்கள் நிற்கத்தவறும் போது குழப்பத்தினாலோ அல்லது வேறு வகையிலோ அது நடந்துவிட்டாலும் அந்தக் காரை நோக்கி சுடவேண்டும் என்பது கட்டளை. இப்படி சோதனைச்சாவடி ஒன்றில் அவர் பணியாற்றிக்கொண்டிருக்கும் போதுதான் போர் தொடர்பான அவரது அணுகுமுறையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ''ஒரு காரை நிறுத்துமாறு சமிக்கை காட்டினோம், அது நிற்கவில்லை. நாங்கள் அந்தக்காரை நோக்கி சுட்டோம். அதில் அப்பாவி சிவிலியன்கள் இருந்தனர். அதில் ஆயுதங்கள், வெடிமருந்துகள்---- எதுவுமில்லை. இது எப்படி நடந்திருக்குமென்று எனக்கு அப்போது எதுவும் தோன்றவில்லை. ஆனால் காரிலிருந்து ஒருவர் வெளியில் வந்தார். அவருக்கு கடுமையான காயமில்லை காருக்குள் உயிர் பிரியுமளவிற்கு ரத்தம் சித்திக் கொண்டிருந்த ஒருவரின் சகோதரர் அவர். அவர் என்னைப்பார்த்து 'எனது சகோதரரை ஏன் கொன்றீர்கள். அவர் உங்களுக்கு என்ன செய்தார்?'' என்று கேட்டார். இந்த சோதனைச் சாவடிகளில் இதுபோன்ற 30 க்கும் அதிகமான சிவிலியன்கள் இரண்டு நாட்களில் கொல்லப்பட்டார்கள்'' என்று அவர் கூறினார். சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளின் குழப்ப மற்றும் கவனக்குறைவான தன்மை குறித்து மசி விளக்கினார். அந்த மக்களது கலாச்சாரத்தின் மீது இராணுவத் தலைமை அலட்சியப்போக்கில் நடந்து கொண்டதையும், அதே மக்களுக்கு உதவுவதற்காக வந்ததாக இராணுவத் தலைமை கூறிக்கொண்டதையும் அவர் விவரித்தார். ''தலைக்குமேல் கையை உயர்த்தி முட்டியை இறுக மூடிக்கொண்டு நின்றால் படையினர்களைப் பொறுத்தவரை நிற்கவேண்டுமென்று சமிக்கைகாட்டுவதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், பின்னர் நாங்கள் அறிந்துகொண்டபடி, அப்படிக் காட்டுவது சர்வதேச அளவில் ஒற்றுமையைக் காட்டுவதாகும். ஈராக் மக்களுக்கு அது முற்றிலும் மாறுபட்ட சமிக்கையாகும். ஹலோ என்று நாம் குசலம் விசாரிப்பதைப் போன்ற பொருளில்தான், அந்த சமிக்கையை ஈராக் மக்கள் எடுத்துக்கொள்கின்றனர். மற்றும் இது எங்களுக்கும் ஈராக் மக்களுக்குமிடையில் நிலவுகின்ற கலாச்சார வேறுபாடுகளை முறையாகப் புரிந்து கொள்கிற அளவிற்கு எங்களுக்கு முறையான பயிற்சி தரப்படவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். ''இதில் வலியுறுத்திக்கூற வேண்டியது [இராணுவ ஆணை] என்னவென்றால் கொல்வதற்கென்றே ஒரே குறிக்கோளில் அனுப்பப்பட்ட எங்களுக்கு கலாச்சாரத்தையும், மனித நேயத்தையும் கற்றுக்கொடுப்பது அவசியமென்று இராணுவத் தலைமை கருதவில்லை. இது கலாச்சார முறைகேட்டு நடவடிக்கைகளில் ஒன்று. இதற்கு இராணுவத் தலைமை மீதுதான் நான் பழிபோடுகிறேன். ஜனாதிபதியில் தொடங்கி, [அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் முன்னாள் தலைமை தளபதி] டொமி பிராங்ஸ் மற்றும் [முதலாவது கடற்படை பிரிவு தளபதி] ஜெனரல் ஜேம்ஸ் மாத்திஸ் வரை நான் பழிபோடுகிறேன். இஸ்லாமிய கலாச்சார மற்றும் ஒரு வெளிநாட்டில் நடவடிக்கை எடுக்கும்போது இராணுவம் அதற்கு முறையாக பயிற்றுவிக்கப்படவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் அங்கு நாங்கள் இருந்தது அந்த நோக்கத்திற்காக அல்ல'' என்று அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் பரவலாக கொல்லப்பட்டு வந்ததற்கிடையில், இராணுவத் தலைமையின் இரக்கமற்ற போக்கும் ஈராக் மக்களுக்கு மனிதநேய உதவியை அளிக்க மறுத்ததும் ஜிம்மி மசிக்கு திகிலூட்டியது. இதன்மூலம் போரின் உண்மையான நோக்கம் குறித்து அவரது சந்தேகங்கள் மேலும் அதிகரித்தன. ''குவைத்திலேயே எல்லா மனிதநேய MRE [Meals Ready to Eat] க்களையும் விட்டுவிட்டு வந்துவிட்டோம்'' என்பதை அவர் நினைவு கூர்ந்தார்: ''MRE என்பது தயாரிக்கப்பட்ட உணவு பொட்டலத்தை நிவாரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாகும், அந்த பொட்டலங்களை குவைத்திலேயே விட்டுவிட்டோம். அது வெறும் நாடகம் தான். முகாம்களுக்கு படப்பிடிப்புக் குழுக்கள் வரும்போது அவர்களுக்கு காட்டுவதற்காக அந்தப் பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதேபோன்று ஈராக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக என்று மருந்துகளையும் பெரும் வேடிக்கை காட்டினோம். ''ஆனால், நாங்கள் உண்மையிலேயே என்ன செய்தோம் என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். பொதுமக்களினுடைய காரை நாங்கள் சுட்டதும், எனது படையினர்களிடம் ஸ்டெச்சர்களை கொண்டு வருமாறு அழைத்தேன். அவர்கள் அதனைக் கொண்டு வந்தனர். காயம்பட்ட இரண்டு பேரை அதில் கிடத்தினோம். பின்னர், அவர்கள் உயிரோடு இருந்த அந்த இரண்டு பேர்களையும் சாலையோரத்தில் வீசிவிட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து ஸ்டெச்சர்களை திரும்பக் கொண்டு வந்தனர். அப்போதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த வேதனையில் அந்த இருவரும் துடித்துக்கொண்டிருந்தனர்-- அதில் ஒருவர் துப்பாக்கி சூட்டு வலிதாங்க முடியாமல் சாலையோரத்தில் உருண்டு கொண்டிருந்தார்'' என்று அவர் குறிப்பிட்டார். அந்த நேரத்தில் கிளர்ச்சிக்காரர்களும், போராட்டம் நடத்துபவர்களும் ஆம்புலன்ஸ் மற்றும் பொதுமக்களின் கார்களை ஓட்டிக் கொண்டிருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் வந்து கொண்டிருந்தன. அமெரிக்க இராணுவத்திற்குள் பீதி வளர்ந்திருந்த சூழ்நிலையில் ஈராக் மக்கள் முழுவதுமே எதிரிகளாக கருதப்பட்டு வந்தனர். ஒவ்வொருவரும் ஒரு பயங்கரவாதி என்று நாங்கள் நினைத்தோம் என்று மசி நினைவுபடுத்தினார். ''இங்கே எங்களுக்கு தூக்கமில்லை. குடியரசுப் படையினரின் தற்கொலை தாக்குதல்கள் குறித்து, இடது வலது தரப்பிலிருந்து எங்களுக்கு உளவு அறிக்கைகள் வந்து கொண்டேயிருந்தன. அமெரிக்கப் படைகளுக்கெதிராக தாக்குதல்கள் நடப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவித்தன. எனவே எங்களது சோதனை சாவடிகளைத் தாண்டி கார்கள் செல்லும்போது அவற்றை பொசுக்கிவிட வேண்டும் என்று எங்களுக்கு கட்டளையிடப்பட்டது. அதுபற்றி மிகவும் வியப்பூட்டும் சம்பவம் என்னவென்றால், ஈராக் மக்களுக்கு அதற்கு நேர்மாறான தகவல்களை சொல்லிக் கொண்டிருந்தோம். அவர்களது பள்ளிக்கூடங்களை திறந்து வைக்க வேண்டுமென்றும், மருத்துவ மனைகள் திறந்திருக்க வேண்டுமென்றும், வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் - 'உங்களுக்கு தீங்கு செய்வதற்காக நாங்கள் இங்கே வரவில்லை, சதாம் ஹூசேனைக் கவிழ்பதற்காகத்தான் வந்திருக்கிறோம்' என்று கூறிக்கொண்டேயிருந்தோம். ஆக, தங்களது வழக்கமான பணிகளை செய்து கொண்டிருக்கிற அவர்களை சுட்டு நொருக்கிவிட்டோம்'' என்று அவர் இதனை நினைவு கூர்ந்தார். 2003 மார்ச்சில் படையெடுப்பு தொடங்கியது முதல் இதுவரை சுமார் 100,000 ஈராக்கியர்கள் மடிந்திருப்பர் என்று அண்மையில் ஓர் ஆய்வு மதிப்பீடு செய்திருக்கிறது. இந்த எண்ணிக்கை துல்லியமானதாக தோன்றுகிறதா? என்று மசியிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்: ''ஆம், ஆனால் மருத்துவ உதவிகள், குடிதண்ணீர் அல்லது முறையான சுகாதார வசதிகள்
கிடைக்காததால் நோய்நொடிகளால் இறந்துபோன ஈராக் மக்கள் இந்தப்புள்ளி விவரங்களில் சேர்த்துக்
கொள்ளப்படவில்லை. போர் தொடங்குவதற்கு முன்னரே ஈராக் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளால்
மடிந்துவிட்ட ஆயிரக்கணக்கான ஈராக் மக்கள் இந்த மதிப்பீடுகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. நாம் ஈராக்கில்
இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறோம். அதுதான் நோக்கம்'' என்று அவர் தெரிவித்தார். ஈராக் மீது எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல் போர் தொடக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்த திரிக்கப்பட்ட புலனாய்வு மற்றும் பொய் மோசடிகள் என்பன நன்றாக இப்போது ஸ்தாபித்து காட்டப்பட்டுள்ளது. தனது போர் முயற்சிக்கு புஷ் நிர்வாகம் செப்டம்பர் 11 தாக்குதல்கள் மிக மோசடியான முறையில் நாடு முழுவதிலும் பீதியைப் பரப்புவதற்காக பயன்படுத்திக்கொண்டது. மசி குறிப்பிட்டிருப்பதைப்போல் அந்தப் பிரச்சாரம் தென்பகுதியில் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏனெனில், தென் பகுதியில் இருந்து தான் மசி வந்திருந்தார். ''இது நிக்சன் காலத்தில் தொடங்கியது. தென்பகுதி பிரதானமாக எப்போதுமே ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான பகுதியாகும். ஆனால், நிக்சன் தென்பகுதியில் உணர்வு பூர்வமாக குடியரசுக் கட்சி மனப்பான்மைக்கு திருப்புவதற்காகக இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் தென்பகுதி மக்களின் மத நிலைநோக்கை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு அதை வெற்றிகரமாக செய்தார்----- தெற்கு பாப்டிஸ்டுகள் போன்ற தரப்பினரிடையே அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. புஷ் இந்த மத அடிப்படைக்குள் புகுந்து கிருஸ்துவ மதத்தை பயன்படுத்தி தென்பகுதி மக்களை ஆக்கிரமித்துக் கொண்டார். தென்பகுதியில் அவர் சொல்வதையெல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கின்றனர். ''இந்த செல்வாக்கை ஓர் அங்கமாக்கி ஈராக் மீதான போரை அச்சத்தின் அடிப்படையில் அந்த மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்தார். ஆனால், இப்போது அந்த அலை திருப்பி அடிக்கிறது. தென்பகுதியைச் சேர்ந்த பலர் இது போதும், இது போதும்--- ஈராக்கிலிருந்து விலகுவதற்கு இதுதான் தருணம் என்று கூற ஆரம்பித்துவிட்டனர். Mountaineer என்ற ஒரு சிறிய உள்ளூர் பத்திரிகையின் ஆசிரியருக்கு வந்த கடிதம் ஒன்றை நான் படித்தேன். அந்த பத்திரிகையின் முதல் பக்க தலைப்புக் கட்டுரை ஒரு உயர் நிலைப்பள்ளி கால்பந்து விளையாட்டைப் பற்றியது. அந்த பத்திரிகையில் வந்த வாசகர் கடிதத்தின் தலைப்பு 'ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டியது நாட்டிற்கு தேவை'' என்பதாக இருந்தது. அந்தத் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ''பின்புலமாக பார்க்கும்போது அது 20/20 ஆக இருக்கிறது. மற்றும் அந்த ஒரு போரை நாம் நடத்தியிருக்கவே கூடாது. ஒரு முன்னாள் கடற்படை சிப்பாய் என்ற முறையில் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எனது இராணுவ சேவை அடிப்படையில், நமதுநாட்டை தற்காத்து நிற்பதற்கு நான்தான் முதல் அடி எடுத்து வைத்திருப்பேன். இங்கே அது அல்ல பிரச்சனை--- ஜனாதிபதி புஷ் தனிப்பட்ட முறையில் ஒரு நிகழ்ச்சி நிரலை வகுத்திருக்கிறார். எந்த ஒரு அமெரிக்கனது வாழ்விற்கும் அரபு எண்ணெய் மதிப்பாகாது. இப்போது நமது துருப்புக்களை விலக்கிக்கொள்வது அவசியமாகும். நமது ஆற்றல்களை மாற்று எரிசக்தி வளங்களை கண்டுபிடிப்பதற்கு நாம் திருப்பிவிட வேண்டும்'' என்று அக்கடிதத்தில் வாசகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மன அழுத்தம் மற்றும் மனக்கோளாறு என்று மருத்துவர்கள் சான்றைக் காரணம்காட்டி ஜிம்மி மசி மிக இழிவான முறையில் இராணுவப் பணியிலிருந்து நீக்கப்பட்டு, 2003 கோடைக்காலத்தில் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். ''நான் அப்பாவி சிவிலியன்களை கொல்ல விரும்பவில்லை என்பதற்காக, அவ்வாறு ஒரு மனசாட்சி உறுத்தல் எதிர்ப்பாளர் என்று எனக்கு முத்திரை குத்த நீங்கள் விரும்பினால், அப்போது நான் உங்களை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று நான் அவர்களிடம் கூறினேன். நான் சந்திக்கச்சென்ற மனோதத்துவ மருத்துவர் இதுபற்றி சிகிச்சை அளிக்காமல், இராணுவப் படையில் பணிபுரியும் மதகுருவைத் தான் நீங்கள் சந்திக்க வேண்டும் என்று கூறிவிட்டார். அடுத்த நாள் 4,000 ம் கடற்படையினர்களுக்கு பொறுப்பான ஒரு உயர் அதிகாரியாக இருக்கும் இராணுவ ரெஜிமென்ட் சார்ஜன்ட் மேஜரை நான் சந்தித்தேன். ''அவரது அலுவலகத்தில் ஒரு இருக்கை தரப்பட்டது. ஈராக்கிலுள்ள சார்ஜன்ட் மேஜர் ஒருவர், மின்னஞ்சலில் என்னைப்பற்றிய எல்லா விவரங்களையும் தந்திருப்பதாகவும், கவலையை விட்டுவிடுமாறும் அனைத்தையும் தான் முடிவு செய்யப் போவதாகவும், அனைத்தும் சரியாகி விடுமென்றும் அவர் கூறினார். ஆனால், நான் பேச ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் அவர் தனது மேசை இலாச்சிக்குள் இருந்த டேப்ரெக்காடரில் பதிவுசெய்யும் பொத்தானை அழுத்தினார். அதற்குப்பின்னர் அவர் வேகமாக இலாச்சியை இழுத்து மூடிவிட்டு ஒன்றும் நடக்காதது போல் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டார். என்னை நீ சிக்கவைத்துவிட வேண்டுமென்று முயன்றால் சற்று நலினமாக அதை மறைத்து செய்திருக்க வேண்டும் என்று அப்போது நான் நினைத்தேன். ''எனவே எதுவும் சொல்லாமல் அங்கு நான் உட்கார்ந்திருந்தேன். இறுதியாக அவர் கூறினார்; ''உனக்கு இன்னும் 7 ஆண்டுகளே சேவை இருக்கிறது என்பது தெரியும். நாங்கள் உன்னை ஒரு நேர்த்தியான அலுவலகத்திற்கு அல்லது கூடைப்பந்து குழுவிற்கு அல்லது அதுபோன்ற ஏதாவதொரு பணிக்கு அனுப்பப் போகிறோம்.... உனக்கு கடற்படைப் பிரிவில் நிறைந்த அக்கறையுண்டு. எனவே, நீ ஓய்வு பெறுவதுபற்றி சிந்திக்க வேண்டும்'' என்று அவர் கூறினார். ''நான் எழுந்து நின்று கூறினேன், நல்லது 'சார்ஜன்ட் மேஜர்' உங்களது ஓய்வு எனக்கு வேண்டாம். உங்களது சலுகைகள் எனக்கு வேண்டாம். அப்பாவி சிவிலியன்களை நாம் கொன்றிருக்கிறோம். அதற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே, என்ன நடந்தது என்பதை அனைவருக்கும் நான் சொல்லப்போகிறேன். இப்படி நான் சொல்லியதும் அவரது முகம் கோபத்தில் சிவப்பானது. அந்த முடிவினால் சட்ட விளைவுகள் வரவிருக்கின்றன என்று அவர் கூறினார். அதைவிடக் குறைவாக கடற்படைப் பிரிவிலிருந்து எதையும் நான் எதிர்பார்க்கவில்லை என்று அவருக்கு கூறினேன்''. அந்த சந்திப்பு முடிந்த பின்னர், நேரடியாக அந்த முகாம் அலுவலகத்திற்கு வந்த ஜிம்மி மசி அங்கிருந்த Marine Corps Times பிரதி ஒன்றை எடுத்து, அதன் பின்பகுதியில் அச்சிடப்பட்டிருந்த ஒரு வக்கீலை தொலைபேசியில் தொடர்பு கொண்டதை நினைவுபடுத்தினார். காரி மேயர் (Gary Meyers) என்ற அந்த வக்கீல், வியட்நாம் போரின்போது மைலாய் விசாரணைகளில் பங்கெடுத்துக் கொண்டதிலிருந்து நீண்ட அனுபவம் படைத்தவர். மசிக்கு விசாரணை எதுவும் நடைபெறவில்லை. இறுதியில் கடற்படை பிரிவு பின்வாங்கி அவருக்கு கண்ணியமான பதவி ஓய்வு தர சம்மதித்தது. மசி தற்போது ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். அதிலிருந்து கிடைக்கின்ற பணத்தை போர்க்கள மன நோயாளிகள் அறக்கட்டளைக்கு தருவதற்கு முடிவு செய்திருக்கிறார். ''இன்றைய பொருளாதார நிலையில் வேலைவாய்ப்புக்கள் எதுவுமில்லாமல், இப்போது போர்க்களத்தில் அப்பாவி சிவிலியன்களை கொன்று பணியை முடித்துவிட்டு திரும்பிவரும் இளைஞனுக்கு நீங்கள் சொல்லப்போவது என்ன? அவனது அரசாங்கம் ஜெனீவா ஒப்பந்தங்களின் கீழ் உள்ள ஒவ்வொரு சட்டத்தையும் மீறியிருக்கிறது. ''அவன் அமெரிக்காவிற்கு திரும்பி வந்து பயனுள்ள ஒரு குடிமகனாக செயல்பட முடியுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை, எனது பாட்டனார் கூறுவதைப்போல், ''உண்மை உன்னை சுதந்திரப் பறவையாக சிறகடித்துப் பறக்க வைக்கும்'' என்ற சொல்லை விடாப்பிடியாக கடைப்பிடித்து வருகிறேன். ''மக்கள் செவிகொடுத்து கேட்கின்ற வரை நான் அந்த உண்மைகளை சொல்லிக்கொண்டே இருப்பேன்'' என்று ஜிம்மி மசி குறிப்பிட்டார். |