WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
US troops begin slaughter in Fallujah
பல்லூஜாவில் அமெரிக்கத் துருப்புக்கள் படுகொலையைத் தொடக்கியுள்ளன
By James Cogan
9 November 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
பல்லூஜா மீது அமெரிக்கா தொடுத்துள்ள தாக்குதலானது, ஸ்பெயின் நகரான கோர்னிகாவில்
(Guernica)
ஹிட்லரின் நாஜி ஆட்சியை எதிர்த்தவர்கள் மீது 1937 ஏப்ரல் 27 ல் நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்றே கருத
வேண்டும்; இது சர்வதேச தொழிலாளர் வர்க்கம் முழுவதிற்கும் ஓர் எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது. ஏகாதிபத்திய
ஆக்கிரமிப்பானது ஒட்டுமொத்தமாக முறியடிக்கப்பட்டு தூக்கி எறியப்படாவிட்டால் என்ன நடக்கும் என்பதை பல்லூஜா
தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது.
10,000 திற்கும் மேற்பட்ட அமெரிக்கத் துருப்புக்கள் நேற்று பல்வேறு முனைகளிலிருந்து
பல்லூஜாவிற்குள் புகுந்தன. ஞாயிறன்று, அதற்கு முன்னோடியாக யூப்ரடிஸ் ஆற்றின் குறுக்கே மேற்கு பகுதியில் உள்ள
பாலத்தை கடந்து அதைப்பிடித்துக் கொண்டு நகரத்தின் பிரதான மருத்துவமனையை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்
கொள்வதற்கான தாக்குதல் நடந்தது. பலவாரங்கள், நகரத்தின் பாதுகாப்புக்களை பலவீனப்படுத்தும் நோக்கில்
எதிர்ப்பாளர்களை முறியடிப்பதற்காக தீவிர விமானப்படைத் தாக்குதல்களும், பீரங்கித் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு நாளும், அமெரிக்க ஜெட் போர் விமானங்கள் பல்லூஜா மீது ஆயிரம் இறாத்தல் மற்றும் 500 இறாத்தல்
குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. டாங்கிகள் மற்றும் 155 ரக பீரங்கிகள் மூலம் அந்த நகரத்தின் புற நகர்ப்
பகுதிகள் மீதும் நாசம் விளைவிக்கும் தாக்குதல்கள் நடைபெற்றன.
நேற்று தாக்குதல்கள் தொடங்கும் முன்னர், பல்லூஜாவில் உள்ள ஒரு ஈராக்கியர்,
"புறநகர்ப் பகுதிகள் பூகம்பம் தாக்கியதைப்போன்ற தோற்றித்தில் கிடக்கும் அளவுக்குத் தாக்குதல்கள் மிகக் கடுமையாக
இருந்தன" என்று லண்டன் டைம்ஸ் சிற்குத் தெரிவித்தார்.
புறநகர்ப் பகுதியிலிருந்து இந்தப் போர் பற்றிய செய்தியை
AFP நிருபர்
ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார்; "ஈராக்கிய கிளர்ச்சியாளர்களின் கோட்டையில் டாங்கிகளும், போர் விமானங்களும்,
பீரங்கிகளும் நடத்திய தாக்குதலில், பல்லூஜாவிற்கு மேலாக வானில் செம்பிழம்பு தோன்றியது. நகரத்தின் மீது,
ராக்கெட்டுகள் கண்மண் தெரியாமல் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தன. வட கிழக்கிலுள்ள அஸ்காரி (Askari)
மாவட்டத்திலும், வடமேற்கிலுள்ள ஜோலானிலும் மிகத் தீவிரமான தாக்குதல்கள் நடந்தன. அந்தப் பிரிவையே
பொசுக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஒரு உள்ளூர்வாசி சொன்னார்".
இன்னும் அந்த நகரத்தில் இருந்து கொண்டிருக்கும் ஒரு ஈராக்கிய பத்திரிகையாளர்
அல்-ஜசீரா-விற்கு தகவல் தரும்போது, ஜோலானில் போர் கடுமையாக நடந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
"அந்த நகரத்தை தற்காத்து நிற்கிற போராளிகள் தங்களது கையில் கிடைக்கிற எந்தப் பொருளையும் ஆயுதமாக
பயன்படுத்தி அமெரிக்கத் தாக்குதலுக்கு எதிர் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே இந்தப் போரில் மடிந்த ஈராக்கிய போராளிகள் மற்றும் சிவிலியன்கள்
அல்லது அமெரிக்கப் படையினர்கள் எத்தனைபேர் என்று நம்பத்தகுந்த மதிப்பீடுகள் எதுவுமில்லை. இங்கொன்றும்
அங்கொன்றுமாகவும் சில குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே தருகின்ற செய்திகளைத் தவிர, அமெரிக்க படைகளின்
நடவடிக்கை அல்லது தாக்குதல் தொடர்பாக, சுதந்திரமான நடுநிலை ஊடகத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்
போவதில்லை. ஒரு சில பத்திரிகையாளர்கள் அந்த நகருக்கு உள்ளேயும் அல்லது அருகிலும் உள்ளனர்.
பத்திரிகைகளில் அச்சிடப்படுபவை, அமெரிக்க இராணுவம் வெளியிடுகிற செய்திக் குறிப்புகள் மற்றும் அறிக்கைகள்
அல்லது அமெரிக்க இராணுவப் பிரிவுகளுடன் இணைந்திருக்கும் பத்திரிகையாளர்கள் தருகின்ற, முன்தணிக்கை
செய்யப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை. ஒளி / ஒலி பரப்பப்படும் தகவல்களில், மிகப்
பொரும்பாலானவை அமெரிக்க இராணுவம் அனுமதி கொடுத்து பதிவு செய்யப்பட்டவை அல்லது படமெடுக்கப்பட்டவை
ஆகும்.
பெரிய அளவில் இராணுவ நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னர், பல்லூஜா
மருத்துவமனையை பிடித்துக்கொண்டதன் பிரதான நோக்கம் செய்திகளை முன்தணிக்கை செய்வதற்காகும். போரில்
பாதிக்கப்பட்ட எத்தனை சிவிலியன்களுக்கு, ஈராக் டாக்டர்கள் சிகிச்சையளிக்கிறார்கள் என்பது குறித்து அவர்கள்
ஊடகங்களுக்கு தகவல் தருவதை தடுப்பதற்கு அமெரிக்க இராணுவம் மேற்கொள்ளும் முயற்சி இது.
அல் குவாடா (Al-Qaeda)
வுடன் சேர்ந்து கொண்டிருக்கிற தீவிரவாதி அபு மூஸா அல் சர்க்காவி தலைமையில் இயங்கிக் கொண்டுள்ள
"பயங்கரவாதிகள்" மற்றும் "வெளிநாட்டு போராளிகளிடமிருந்து" அந்த நகரத்தை விடுவிப்பதற்காகவே புஷ்
நிர்வாகமானது, அதன் ஈராக் இடைக்கால பொம்மை அரசாங்கத்தின் பிரதமர் அயத் அல்லாவியுடன் சேர்ந்து
கொண்டு பல்லூஜா நகர் மீது தாக்குதல் நடத்துகின்றதென்று கூறுகிறது.
இந்தக் கூற்றுக்கள் கொச்சையான அவதூறுகள் மற்றும் வெறுத்து ஒதுக்கத்தக்கவை
ஆகும். தங்களுக்கு உறுதியான தகவல் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் பலமாதங்களாக அறிவித்து வந்த
பின்னர், சர்க்காவி பல்லூஜாவில்தான் இருக்கிறாரா என்று நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க
பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்டு "எனக்கு அதுபற்றிய கருத்து எதுவும் இல்லை" என்று
பதிலளித்தார். அந்த நகரத்தில் சர்க்காவி இல்லை என்பதை ஈராக்கிய மக்கள் இடைவிடாது கூறி வருகின்றனர்.
தங்களை தற்காத்துக் கொள்வதற்காக மிகப் பெருமளவில் போராடி வரும் ஈராக்கியர்களுக்கு உதவுவதற்காகவும்,
அமெரிக்க இராணுவம் என்கிற உண்மையான வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை முறியடிப்பதற்காகவுமே பக்கத்து
அரபு நாடுகளில் இருந்து போராளிகள் பல்லூஜாவிற்கு வருகின்றனர்.
இரண்டாவது உலகப்போரின் போது ஐரோப்பாவில் நாஜிக்கள் ஆக்கிரமித்துக்கொண்ட
பகுதிகளில் "முன் உதாரண தண்டனை" என்று அழைக்கப்பட்ட, கொலை வெறிக் கொள்கையை வழி காட்டுதலாக
எடுத்துக்கொண்டு பல்லூஜா மீது அமெரிக்கத் தாக்குதல் நடந்து வருகிறது. புஷ் நிர்வாகமானது, ஜனநாயகக்
கட்சிக்காரர்கள் மற்றும் அமெரிக்க செய்தி ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்போடு அந்த நகரத்தை சிதைத்து
மண்மேடாக்கிவிட கருதுகிறது. மற்றும் அந்த நகரத்தை தற்காத்து நிற்பவர்களை கொல்ல, அல்லது கைது செய்ய
முனைகிறது. இதர எதிர்ப்புப் பகுதிகளுக்கு, ஆக்கிரமிப்பை எதிர்த்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்று
எடுத்துக்காட்டுவதற்கான ஒரு முன்மாதிரியாக, பல்லூஜாவை ஆக்குவதற்கும் கருதுகிறது.
ஈராக்கை ஒரு பொம்மை நாடாக ஆக்குவதற்கு அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு
எதிராக ஈராக் மக்களது நியாயமான எதிர்ப்பின் ஒரு சின்னமாக பல்லூஜா விளங்குகிறது. நாட்டில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள
ஒடுக்குமுறை ஆக்கிரமிப்பிற்கு ஆயுதந் தாங்கிய எதிர்ப்பை உருவாக்குவதில் அந்த நகரத்து மக்கள் முன்னணியில் நின்று
வருகின்றனர்.
ஏப்ரல் 2003 ல் பாக்தாத் வீழ்ச்சியடைந்த சில நாட்களுக்குப் பின்னர், ஒரு
நகரப் பள்ளிக் கூடத்தில் அமெரிக்கத் துருப்புக்கள் இருந்ததிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த
நிராயுதபாணிகளான பல்லூஜா இளைஞர்களை டஜன் கணக்கில் அமெரிக்க பாரசூட் படையினர் கொன்று குவித்தனர்.
பல்லூஜா மக்களில் பலர், முன்னாள் ஈராக் இராணுவத்தினால் பயிற்சி தரப்பட்டவர்கள் ஆவர். எனவே, அவர்கள்
ஒரு கொரில்லாப் போராட்டத்தின் மூலம் இதற்குப் பதிலடி கொடுத்தனர். அது இறுதியாக அமெரிக்க இராணுவம்
2003 இறுதிவாக்கில் அந்த நகரத்திலிருந்து பின்வாங்கி செல்லவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது.
இந்த ஆண்டு ஏப்ரலில் நான்கு அமெரிக்க கூலிப்படையினர் அந்த நகரத்தில்
கொல்லப்பட்டதை சாக்குப்போக்காக எடுத்துக்கொண்டு, அமெரிக்கா தனது கட்டுப்பாட்டை மீண்டும் நிறுவும்
நோக்கில் பெரும் எடுப்பிலான தாக்குதலை நடத்தியது. நகரத்தின் போராளிகளும், பொதுமக்களும்
மிகப்பெருமளவில் பயங்கரமாக பலியானார்கள். அந்தத் தாக்குதலை சமாளிக்கக்கூடிய நிலையில் அவர்கள்
அப்போது இருந்தனர். அப்போது, ஈராக் தென்பகுதியில் ஷியாக்களின் மதபோதகரான முக்ததா அல் சதார்
(Moqtada al Sadr)
தலைமையிலான எழுச்சியை அமெரிக்க இராணுவம் எதிர்கொண்டது. ஷியாக்களது கிளர்ச்சியை நசுக்குவதில்
அமெரிக்கப் படைகள் ஊன்றி கவனம் செலுத்துவதற்கு வகை செய்வதற்காக, பல்லூஜாவில் ஒரு போர்நிறுத்த
ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதன்படி போராளிகள் மற்றும் பழங்குடி மக்களின் தலைவர்கள் அடங்கிய ஒரு
குழுவிடம் அந்த நகர நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. நகருக்குள் அமெரிக்க அல்லது அதன் நட்புநாட்டுப் படைகள்
எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது என்று பழங்குடி இனத் தலைவர்கள் வலியுறுத்தினர்.
அதற்குப்பின்னர் 6 மாதங்கள் அமெரிக்க இராணுவம், ஏப்ரலில் ஏற்பட்ட
பின்னடைவிற்குப் பழிவாங்கும் முறையில் சதித் திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்தது. ஜூன் முதல் அந்த நகரத்தின்மீது
விமானப்படைத் தாக்குதல்கள் மிதப்படுத்தப்பட்டன. தெற்கில் ஷியாக்களின் எழுச்சி ஒடுக்கப்படும் வரையிலும் மற்றும்
அமெரிக்க தேர்தல்கள் முடியும் வரையிலும் பல்லுஜா மீதான தரைப்படைத் தாக்குதல்கள் தள்ளி வைக்கப்பட்டன.
ஏனெனில், தரைப்படைத் தாக்குதல்களில் அமெரிக்கத் துருப்புக்கள் பலியாவது அதிகரிக்கக் கூடும், அது புஷ்
நிர்வாகத்தின் மறு தேர்தல் மூலோபாயத்தை பாதிக்கும் என்பதினாலாகும்.
இப்போது தேர்தல் முடிந்துவிட்டதால், பல்லூஜா நகர் மீது ஒரு தாக்குதல்
நடத்தப்பட்டு வருகிறது.
ஈராக்கில் ஜனவரி இறுதியில் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர், பாக்தாத்தின்
புறநகரான ஷியாக்களின் சதார் (Sadr)
நகரம் உட்பட ஈராக்கின் 22 நகரங்களையும் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட வேண்டும்
என்பதற்கு முன்னோடியாக பல்லூஜா மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. குர்து இன மக்கள் வாழ்கின்ற மூன்று
வடக்கு பகுதி மாகாணங்கள் நீங்கலாக, ஈராக்கின் ஒவ்வொரு மாகாணத்திலும் 60 நாட்கள் வரை இராணுவச்
சட்ட (martial law)
பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது அல்லாவி ஊரடங்கு உத்தரவு
பிறப்பிப்பதற்கும், தெருக்களில் மக்களை கைது செய்வதற்கும், கிளர்ச்சி ஆதரவாளர்கள் என்று
சந்தேகிக்கப்படுபவர்கள் எவரையும் கண்டபடி கைது செய்வதற்கும் அதிகாரம் பெறுகிறார்.
அமெரிக்க தாக்குதல் மற்றும் இராணுவ சட்டத்தின் நோக்கம் ஒடுக்குமுறை சூழ்நிலை
ஒன்றில் தேர்தல்களை நடத்துவதற்கு உறுதிசெய்து தருவதாகும். ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்புக்கள்
சிதைக்கப்பட்ட பின்னர், அல்லது அச்சுறுத்திப் பணிய வைக்கப்பட்ட பின்னர், மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட
இடைக்கால அரசில் சேர்ந்து கொள்ள சம்மதித்த அமெரிக்க ஆதரவு சக்திகள் மட்டுமே வேட்பாளர்களாக
தேர்தலில் நிற்பார்கள்.
வெகுஜனக் கொலைகள்
பயங்கரவாதம் பற்றிய பிரச்சாரத்தின் பிரதான நோக்கமானது, அந்தத்
தாக்குதலின் உண்மையான நோக்கங்களில் இருந்து அமெரிக்க மக்களது கருத்துக்களை குழப்புவதை நோக்கமாக
கொண்டுள்ளது. மேலும், ஈராக்கிற்கு புதிதாக வந்துள்ள, இதற்கு முன்னர் போர்க் களத்தை சந்தித்திராத
அமெரிக்கத் துருப்புக்களுக்கு ஆதிக்க வெறி ஊட்டவும் மற்றும் அவர்களுக்கு இரத்தம் குடிக்கும் ஆவேசத்தை
உண்டாக்கவும் மற்றும் அவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கவும் இந்தப் பிரச்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடற்படை கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜோன் சாட்லர், பல்லூஜாவில் இருக்கும்
போராளிகளை மனித நேயமே இல்லாதவர்கள் என்று சித்தரித்துக் காட்டியுள்ளார். "அவர்கள் முட்டாள்கள்,
முரடர்கள், கொலைகாரர்கள் மற்றும் மிரட்டல்காரர்கள்" என்று கூறியுள்ளார். கேனல் மைக்கேல் ஷப் என்பவர்
சரணடைய முயலும் ஈராக்கியர்களை தமது துருப்புக்கள் சுட்டுத்தள்ள வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.
"ஏனென்றால், தற்கொலைக் குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் உள்ளது" என்றும் கூறியுள்ளார். இராணுவ கேனல்
பீட்டி நிவால் வெளியிட்டுள்ள பிரகடனத்தில் "நாம் நகரத்தின் ஒரு முனையிலிருந்து துவக்குகிறோம் மறுமுனைக்கு
செல்லும்வரை நாம் நிறுத்தப் போவதில்லை. இடையில் எவரையாவது விட்டுவிட்டால், அது நடந்துவிடுமானால்,
நாம் திரும்பி வந்து அந்தப் பணியை முடித்தே தீருவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடற்படை கேனல் காரி பிராடில் என்பவர், மிகப்பெருமளவில் உள்ளத்தை உறைய
வைக்கும் வெகுஜனக் கொலை அழைப்பை கிருஸ்துவ அடிப்படைவாதக் கடமை என்ற வார்த்தைகளில்
விடுத்திருக்கிறார். "எதிரிக்கு ஒரு முகம் இருக்கிறது, அவன் சாத்தான் என்று அழைக்கப்படுகிறான், அவன்
பல்லூஜாவில் இருக்கிறான், அவனை நாம் அழிக்கப் போகிறாம்" என்று தனது துருப்புகளுக்கு பிரசங்கம்
பண்ணியுள்ளார்.
தற்போது நடைபெற்று வருகின்ற போரை கடற்படை அதிகாரிகள் 1968 ல்
வியட்நாமின் ஹூ நகர (Hue city)
போரோடு நேரடியாக ஒப்பிட்டிருக்கின்றனர். அந்த ஒப்புநோக்கு மிகத்
துல்லியமானதாக இருக்கக்கூடும். 26 நாட்கள் நடைபெற்ற அந்தப் போரில் 600 க்கு மேற்பட்ட அமெரிக்க
மற்றும் நட்பு நாடுகளின் துருப்புக்கள் அங்கு கொல்லப்பட்டன. 3,164 பேர் காயமடைந்தனர். அந்த
நகருக்காக போரிட்ட 5000 வியட்நாமியர்கள் கொல்லப்பட்டனர். 10,000 திற்கும் மேற்பட்ட வீடுகள்
தரைமட்டமாக்கப்பட்டன. நகரத்தின் 40 சதவீதம் மண் மேடாயிற்று.
"அது நாகரீகமற்ற காட்டுமிராண்டித்தனமான வேலையாகும். அந்த நகரின் தெருக்கள்
முழுவதிலும் வீட்டுக்கு வீடு சண்டை நடைபெற்றது. இரண்டாவது உலகப் போருக்கு பின்னர், அமெரிக்கர்கள்
பெரும்பாலும் பார்த்திராத ஒருவகைப்போர் அது. அந்தப் போரில் அங்குலம், அங்குலமாகத்தான் வெற்றி
கிடைத்தது. நகரிலிருந்த ஒவ்வொரு கட்டடங்களையும் பிடிக்க அதிக சேதம் ஏற்பட்டது. ஒவ்வொரு சந்து
பொந்தையும் தெரு முனையையும், ஜன்னல்களையும், தோட்டத்தையும் பிடிப்பதற்கு அதிக ரத்தம் சிந்த வேண்டி
வந்தது'' என்று GlobalSecurity.org
என்ற வலைத் தளத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டார்.
("The Battle for Hue", 1968, James H.
Willbanks, PhD)
டெக்ஸாஸ் பகுதியிலிருந்து போருக்கு வந்திருக்கும் ஒரு 20 வயது இளைஞரான ஜோசேப்
பொவ்மன் (Joseph Bowman)
தெரிவித்த கருத்தானது, இளம் அமெரிக்கப் படையினர்களுக்கு ஒரு மனக்கிலி கொண்ட சாவு மற்றும் அழிவுப்
போரில் திடீரென்று ஈடுபடும்போது ஏற்படுகின்ற உள்ளத் தாக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தியது. "நாங்கள் தயாராக
இருக்கிறோம். அதை முடிப்பதற்கு ஆயத்த நிலையில் இருக்கிறோம். நான் போருக்கு சென்று மக்களை கொல்லப்போகிறேன்.
அப்போதுதான் நாங்கள் வீடு திரும்ப முடியும். அவர்களைக் கொல்ல வேண்டும் மற்றும் நாங்கள் வீடு திரும்ப
வேண்டும். அதுதான் நாங்கள் இப்போது செய்ய வேண்டியது" என்று கூறினார்.
ஜோசேப் பொவ்மானைப் போல், அமெரிக்கத் துருப்புக்களுக்கு தரப்பட்டுள்ள
போர்க்கள விதிகள் வரும் நாட்களிலும், வாரங்களிலும் மாபெரும் கொலைகளுக்கு வழிவகை செய்யும். 24 மணி நேர
''ஊரடங்கு'' உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், 15 முதல் 50 வயதிற்கு
உட்பட்ட ஆடவர் எவர் தெருவில் நடமாடினாலும் மற்றும் எந்த வாகனங்கள் தெருவில் சென்றாலும் அவர்களையும்,
அவற்றையும் நோக்கி அமெரிக்கத் துருப்புக்கள் சுடுவதற்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது என்பதாகும்.
இராணுவ மொழியில் சொல்வதென்றால் பல்லூஜா சுதந்திரமாக சுட்டுத் தள்ளுவதற்கு
ஏற்ற மண்டலமாகும். ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு அல்லது சட்டபூர்வமான அங்கீகாரம் தந்துள்ள
உலகிலுள்ள ஒவ்வொரு அரசாங்கமும் மற்றும் அமைப்புக்களும் தற்போது ஈராக்கில் நடத்தப்பட்டுவரும் போர்க் குற்றத்திற்கு
அரசியல் பொறுப்பேற்றாக வேண்டும்.
Top of page
|