World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம் US debt ceiling to be lifted அமெரிக்க அரசாங்கத்தின் கடன் உச்சவரம்பு தளர்த்தப்பட உள்ளது By Nick Beams இனி வரவிருக்கும் நிதிக் கொந்தளிப்பைக் காட்டும் வகையில், ஜனாதிபதி தேர்தல் நடந்த மறுதினம் புஷ் நிர்வாகம், தான் தேசிய சட்ட மன்றத்தை கடன் உச்சவரம்பை உயர்த்தக் கோரப்போகதாகவும், அதையொட்டி அரசாங்கம் தன்னுடைய மிக அதிக கடன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளமுடியும் என்றும் அறிவித்தது. தற்போதுள்ள உச்சக் கடன் வரம்பான 7.384 டிரில்லியன் டாலர் அக்டோபர் 14ம் தேதியே அடையப்பட்டுவிட்டது; ஆனால் தேர்தல்களுக்கு முன்பு தேசியக் கடனை அதிகரிப்பதை ஒட்டி ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகளைக் கருத்திற்கொண்டு, நிர்வாகம் பலவித தந்திர உபாயங்களைக் கையாண்டு அரசாங்கச் செயற்பாடுகளை நடத்த கடன் உச்சவரம்பின் விதிகளை மீறாமல் பார்த்துக்கொண்டது. ஆனால் இந்த நடவடிக்கைகள் இம்மாத நடுப்பகுதிவரைதான் தொடரப்படமுடியும்; அதன் பின்னர் தேசிய சட்ட மன்றத்தின் புதிய ஒப்புதல் கட்டாயமாக தேவைப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக காணப்படும் மிக உயர்ந்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக் குறையை ஒட்டி கடன் அளவின் உச்சவரம்பை உயர்த்தவேண்டும் என்ற தேவை ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த 2004 நிதியாண்டில் வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை 413 பில்லியன் டாலராகவும், 2003 நிதியாண்டுப் பற்றாக்குறை 377 பில்லியன் டாலராகவும் இருந்தன. அமெரிக்க நிதி நிலைமையில், பெருகிவரும் சமநிலையற்ற தன்மைகளின் அடையாளங்கள் பலவற்றுள் அதிகமாகியுள்ள நிதிக் கடனும் ஒன்று ஆகும். கடன் திருப்பியளித்தல் பற்றாக்குறையில் உள்ள மற்றொரு சமச்சீரற்ற நிலைமை இப்பொழுது ஆண்டு ஒன்றிற்கு 600 பில்லியன் டாலருக்குக் கீழ் அல்லது கிட்டத்தட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதமாக இருப்பது ஆகும். தேர்தல்களுக்கு சற்றே முன்பு வெளிவந்த ஆய்வு அறிக்கை ஒன்றில், புகழ்வாய்ந்த பொருளாதார நிபுணர்களான Maufice Obstfeld, மற்றும் Kenneth Rogoff உம் "நடப்புக் கணக்குச் சரிவு" என்று அவர்கள் அழைத்துள்ள ஆபத்து, சர்வதேச முதலீட்டாளர்கள் நிதியத்தைத் திரும்பிப்பெறுவதால் விளைவது என்றும், "இப்பிரச்சினை புதிய ஜனாதிபதியின் சர்வதேச நிதிச்செயற்பட்டியலில் முதலாவதாக உள்ளது" என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். "பிரச்சினை ஏதும் இல்லை என்று திருத்தல்வாதிகள் பலவிதமான கூற்றுக்களை விளக்குவதால்" உண்மையில் அவ்வாறு இருக்குமா என்ற ஐயப்பாட்டையும் தெரிவித்துள்ளனர். இக்கருத்தின்படி, அமெரிக்க சர்வதேசக்கடன் உண்மையில் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை; ஏனெனில் அயல்நாட்டு முதலீட்டாளர்கள், அதுவும் குறிப்பாக, அதிகாரபூர்வமான மத்திய வங்கிகள் இதற்கு தொடர்ந்து நிதி வரவைக் கொடுத்து வரும் என்றும், டாலரின் மதிப்பு வியத்தகு அளவில் குறைந்தாலும், விளைவுகள் கடுமையாக இராது என்றும் கூறப்படுகிறது. அப்ஸ்ட்பெல்டும், ரோகோப்பும் Financial Times கட்டுரையில் எழுதியுள்ளதாவது: "அமெரிக்க இரட்டைப் பற்றாக்குறைகள் (நடப்பு நிதி, மற்றும் பொது நிதி) தடையற்ற பாதுகாப்பு செலவினங்கள், புவிசார் அரசியல் அழுத்தங்கள், உயர்ந்து வரும் முதியோர் ஓய்வுதியத் தொகைகள், கூடுதலான மின்வசதிச் செலவினங்கள், மிகப்பெரிய பொருளாதாராக் கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் ஆகியவற்றின் பின்னணியில், நன்கு ஆராய்ந்தால், 1970களின் ஆரம்பங்கள், மற்றும் 1980களின் கடைசி ஆண்டுகள் இவற்றுடனான இணைநிலையை வலுவாகக் காண்கிறோம். ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் 1972ல் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டது டாலருக்கோ அல்லது கடினமாக இருந்த உலகப் பொருளாதாரத்திற்கோ உகந்ததாக விளங்கவில்லை. தற்போதைய நடப்புக் கணக்குகள் கடினமான பொருளாதாரப் பின்னனியில் சமநிலைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டால், அதன் விளவுகள் நிதிய நெருக்கடிகள், உயர்ந்த வட்டிவிகிதங்கள், உலக உற்பத்தியில் பெரும் குறைப்பு ஆகிய விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்." உலக நிதியச் சமநிலை சீர்குலைந்துள்ள தன்மையை தொடர்ச்சியாக ஏற்படுத்தியுள்ள பலவழிவகைகளின் மையத்தில் அமெரிக்க டாலர் இருக்கிறது. ஒருபுறத்தில், அயல்நாடுகளுக்கு அமெரிக்கா கொடுக்கவேண்டிய கடன்தொகையின் பெருக்கம் டாலரின் மதிப்பில் ஒரு சரிவைக் கொண்டுவரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறத்தில், திருப்பிக் கொடுக்கவேண்டிய தொகைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உலக பொருளாதாரப் பின்னடைவு நிலைக்கு வழிவகை செய்யக்கூடும்; ஏனென்றால் அமெரிக்காதான், அமெரிக்கவைத் தளமாகக் கொண்டுள்ள சீனா, மற்றும் பல கிழக்கு ஆசிய நாடுகளுடைய ஏற்றுமதித் தொழில்துறைக்கான முக்கியச் சந்தையாகும். இதுவரை, தங்களுடைய சொந்த நாணயத்தையே விற்று அமெரிக்க நிதியச் சொத்துக்களை, அதுவும் பெருகிவரும் அரசாங்கக் கடன்பத்திரங்களை வாங்கி வரும் ஆசிய மைய வங்கிகளின் தலையீடு, டாலர் மதிப்பில் ஒரு முன்கூட்டியே ஏற்படும் அபாயகரமான சரிவைத் தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனால் அவை தொடர்ந்து கிட்டத்தட்ட நாள் ஒன்றிற்கு 2 பில்லியன் டாலர் வேண்டும் என்ற நிலையில் உள்ள அமெரிக்க தேவைக்கு நிதி வரத்து கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளன. இந்தத் தொகை ஒன்றும் சிறிய அளவானது அல்ல. 2003ம் ஆண்டில் வெளிநாடுகளின் மத்திய வங்கிகள் வாங்கியிருந்த அமெரிக்க டாலர்கள் 616.6 பில்லியன் டாலராகும்; இது, இதற்கு முந்தைய ஆண்டு வாங்கப்பட்டிருந்த 351.9 டாலருடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படவேண்டும். மார்ச் 2004 உடன் முடிவடைந்த ஆண்டில் "எழுச்சியுறும் ஆசியா" என்று அழைக்கப்படும் நாடுகளின் மொத்த இருப்புக்கள் 350 பில்லியன் டாலராகும் மேலாக, உயர்ந்தது; இதில் சீனாவின் மைய வங்கி அமெரிக்க டாலர் சொத்துக்களை மிகப் பெரிய அளவில் வாங்கியுள்ளது. இத்தகைய "மறுசுழற்சி முறை" காலவரையற்றுச் சென்றுகொண்டிருக்கலாம் என்று சில பொருளாதார நிபுணர்கள் வாதிட்டுள்ள போதிலும், இதற்குச் சில புறநிலை வரம்புகள் இருக்கின்றன. உதாரணமாக, சீனாவின் மத்திய வங்கியால் டாலர்கள் தொடர்ச்சியாக வாங்கப்படுவது சொத்துச் சந்தையில் நிதிக்குமிழியை முடுக்கிவிடவும், பொருளாதாரம் முழுவதிலும் ஒரு நிதிய ஊகத்தை தோற்றுவிக்கும் வகையிலும் உதவி வருகிறது. இதுவரை சீன அதிகாரிகள் கடன் கொடுத்தல் விரிவைத் தடுப்பதற்கு நிர்வாக நடவடிக்கைகள் என்று கூறப்படும் வகையைக் கையாள்கின்றனர்; ஆனால் சமீபத்திய முடிவான வட்டிவிகிதத்தை உயர்த்துதல் அத்தகைய நடவடிக்கைகள் சரியான முடிவுகளைக் கொடுக்கவில்லை என்றும், வலுவான நடவடிக்கை தேவை என்பதையும் உணர்த்தியுள்ளன. ஆனால் இக்குமிழியை உடைக்கும் நடவடிக்கை சீனாவில் நிதிய நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய அபயாத்தையும், அதையொட்டி அமெரிக்காவில் இருந்து நிதியங்களை நாட்டின் வங்கி முறைக்கு முட்டுக் கொடுப்பதற்காகத் திருப்பிப் பெறும் நிலையும் ஏற்படலாம். இந்த "மறு சுழற்சி முறை" க்கும், அமெரிக்காவைப் பொறுத்தவரையில், சில புறநிலை வரம்புகள் இருக்கின்றன. தொடர்ச்சியான வெளிநாட்டு நிதியின் வரத்து அமெரிக்க நிதிய அதிகாரிகளை ஒரு குறைந்த-வட்டி ஆட்சிவகையை கையாள அனுமதித்துள்ளது. இதில் இருந்து ஒரு விளைவாக வீடுகள் சந்தையில் உயர்வு ஏற்பட்டு, அதன் விளைவாக நுகர்வோர் கடனில் விரிவு ஏற்பட்டு, அது அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி அளித்துள்ளது. ஆனால், வருமானங்கள் மெதுவாக வளரும்போது, இந்த வழிவகை தொடர்ந்து நீடிக்க இயலாது. அமெரிக்கப் பொருளாதாரம் எதிர்பார்த்த 3.7 சதவிகிதத்தை விட மூன்றாம் காலாண்டில் குறைந்துவிட்டதாகத்தான் தேசியக் கணக்குகளின் புள்ளியியல் தெரிவிக்கிறது; அதேநேரத்தில் 4 சதவிகித உயர்வு ஒரு பொருளாதாரத்தில் வேலை எண்ணிக்கைகள் பெருவதற்குத் தேவை என்று கருதப்படுகிறது. ஆனால், நுகர்வோர்கள் செலவழித்தலை 4.6 என்ற சதவிகிதத்தில் அதிகமாக, வரிவிதிப்பிற்கு பின்னர் தனி வருமானத்தில் 1.4 சதவிகிதம் என்பதற்கு மேலாகக் கொண்டுள்ளனர். கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்தப் போக்கு நுகர்வுச் செலவு 3.2 சதவிகிதம் அதிகமாகி வருவதுடனும் அதேவேளை வரி விதிப்பிற்கு முந்தைய வருமானமோ 1.3 சதவிகிதம்தான் உயர்ந்துள்ளது; வருமான வரிகளுக்குப் பின்னர் அது 2.6 ஆக உள்ளது. இந்தப் போக்குகளின் விளைவு வருமானத்திற்கு வீட்டுக்கடன்களின் உயர்ந்த விகிதாச்சாரம் ஏற்பட்டுள்ளது. ஒரு சமீபத்திய உரையில் Federal Reserve Board இன் தலைவர் அலன் கிரீன்ஸ்பான், இந்த வழிவகையை சுட்டிக் காட்டி, வருமானத்திற்கு வீட்டுக்கடனின் விகிதம் உயர்ந்துவிட்டது, "அதிலும் மிக அதிகமாக கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்து 1.2 என்ற நிலையில் மிக அதிகமாக உள்ளது" என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் "வீட்டுக் கடன்களை பற்றிய அழுத்தங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் ... அதிக கவலை அளிப்பாதாகத் தோன்றவில்லை" என்று அவர் முடித்துள்ளார். சொத்து மதிப்புக்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் கடன்கள் பெருகிய முறையில் நிதிச் சுமையாக இருக்காது என்ற மதிப்பீட்டை கிரீன்ஸ்பான் கொண்டுள்ளார். வேறுவிதமாகக் கூறினால், இந்த வகை பணம் தொடர்ந்து சொத்துச் சந்தைக்கு வந்து கொண்டிருக்கும் வகையில் இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆனால் அமெரிக்கா தொடர்ந்து போதுமான அளவு வெளிநாட்டு நிதிய வரத்துக்களை ஈர்க்க இயலுமா என்பதைப் பொறுத்துத்தான் அவ்வகை செயல்படுத்தப்படமுடியும். Morgan Stanley இன் தலைமைப் பொருளாதார நிபுணர் Stephen Roach உடைய கருத்தின்படி, கிரீன்ஸ்பானுடைய வாதம் வட்ட அல்லது சுற்றுச் சிந்தனையைத்தான் பிரதிபலிக்கிறது என்றும் இத்தகைய சிந்தனை இப்பொழுது நிதியச் சந்தைகளில் அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் கிரீன்ஸ்பானுடைய மதிப்பீடு, "முக்கியமான அபாயக் காரணியான வட்டி விகிதங்களைக் கருத்திற்கொள்ளவில்லை" என்றும் "வட்டிவிகிதங்கள் எப்பொழுதும் குறைவாக இருந்து, அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பதற்கு மட்டும் மிகப்பெரிய அளவில் நடப்புக் கணக்கையும், வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறைகளையும் நீடித்துக் கொண்டிருக்க முடியுமா" என்றும் கேட்டுள்ளார்.வீட்டுவசதிக் கடன் பொறுப்புக்கள் 2000-03 காலத்தில் பெருகியது 65 சதவிகிதம், இதே காலக்கட்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டு, "செயற்கை முறையில் வலியை மறக்கச் செய்யும் வட்டிவிகிதங்கள், கடன் கொடுத்தலுக்கான செலவினங்கள் ஆகியவை மேலும் மேலும் மெல்லியதாக இருக்கும் ஒரு சூழ்நிலையில் அமெரிக்காவின் நுகர்வோர் கடன் குண்டு இப்பொழுது டிக் டிக் என அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது " என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். |