World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The SEP's 2004 campaign: a preparation for coming battles

சோசலிச சமத்துவக் கட்சியின் 2004 பிரச்சாரம்: எதிர்வரும் போராட்டங்களுக்கான ஒரு தயாரிப்பு

By Bill Van Auken, SEP presidential candidate
5 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

2004 தேர்தல்கள் முடிந்துவிட்டன. புஷ் நிர்வாகம் இரண்டாவது முறை வெற்றிபெற்றிருக்கிறது. இந்தக் காலத்தில் அது பூகோள அளவில் இராணுவ ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்தவும் மற்றும் அமெரிக்காவிலுள்ள உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் சமூக நிலைமைகள் மீது தாக்குதல்களையும் உக்கிரப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டிருகிறது.

ஜனநாயகக் கட்சி ஒரு அவமானகரமான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது, ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வியை தழுவியது மட்டுமல்ல செனட்டிலும் கீழ்சபையான மக்கள் பிரதிநிதிகள் சபையிலும் பெரும்பான்மை இடத்தை இழந்துவிட்டது.

நிர்வாகத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை வீழ்த்துகின்ற அரசியல் ஆயுதமாக அது செயல்பட முடியும் என்று பிரமைகளை தேக்கிவைத்துக் கொண்டிருந்த மில்லியன் கணக்கான மக்கள் முன்னே இந்தக்கட்சி செல்வாக்கிழந்து நிற்கிறது. இந்த தேர்தல்கள் தன்னை எதிர்க்கட்சி என்று வெளிவேடத்திற்கு காட்டுகின்ற கட்சி இந்தக் கொள்கைகள் எவற்றின் மீதும் கடுமையான எதிர்ப்பை உருவாக்கிக்காட்ட இயலாத நிலையில் உள்ளது என்பதை நிரூபித்துள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சியை பொறுத்தவரை ஒரு முக்கியமான வெற்றியை நிலைநாட்டியுள்ளது. எங்களது தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் முன்னெடுத்த முன்னோக்கு முற்றிலும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் போருக்கும், பிற்போக்குத்தனத்திற்கும் எதிரான போராட்டம் இரண்டு கட்சிக் கட்டுக்கோப்பிலிருந்து முறித்துக்கொள்வதன் மூலமும் இலாபமுறையை எதிர்க்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான கட்சியைக் கட்டுவதன் மூலமுமே முன்னெடுத்துச்செல்ல முடியும் என்று கூறிவந்தோம்.

எங்களது வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக்குறைவாக உள்ள அதேவேளை, இரு பெரு வர்த்தக கட்சிகளின் வெறும் சொல்லலங்காரம் மற்றும், பொய்களுடன் ஒப்புநோக்கும்போது எங்களது பிரச்சாரத்தின் அரசியல் உள்ளடக்கம் கடும் மாற்றுபாட்டைக் கொண்டிருக்கிறது. அரசியல் விவாதத்தின் தரத்தை உயர்த்தவும் மற்றும் உழைக்கும் மக்களில் மாணவர்களில் மற்றும் இளைஞர்களில் ஒரு கணிசமான பிரிவினருக்கு சமூக மற்றும் அரசியல் நெருக்கடியின் தன்மை குறித்தும் மற்றும் அதை எதிர்கொள்வதற்கு வேண்டிய சோசலிச மற்றும் சர்வதேசிய திட்டம் குறித்தும் கல்வி ஊட்டவும் பயன்பட்டிருக்கிறது.

புஷ், துணை ஜனாதிபதி செனி மற்றும் நிர்வாகத்திலுள்ள மற்றவர்கள் தேர்தல் முடிவுகள் தங்களது இராணுவவாத மற்றும் போர்க்கொள்கைகளை தொடர்வதற்கும் மற்றும் ஒவ்வொரு சமூக சீர்திருத்தத்தையும் 20ம் நூற்றாண்டில் பெருநிறுவன ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட கட்டுப்பாடுகளை ஒழித்துக்கட்டவும் உள்நாட்டில் திட்டங்களை மேற்கொள்ளவும் மக்கள் தீர்ப்பளித்திருப்பதாக கூறிக்கொள்கின்றனர்.

முதலாவதாக, அவர்கள் வரிவிதிப்பு நெறிமுறையில் "சீர்திருத்தம்" கொண்டுவர உத்தேசித்திருக்கின்றனர். அதன் பொருள், ஒட்டுமொத்தமாக வரிகளையே நீக்கிவிடாவிட்டாலும், செல்வத்தை குவிப்பதற்கு தீவிரமான வரிகுறைப்பு செய்வது, அத்துடன் தொழிலாளர்களது வருவாய்களின் மீது மிகப்பெருமளவிற்கு வரிச்சுமையை ஏற்றுவது ஆகும். "உடைமையாளர் சமூகம்" என்ற முழக்கத்தின் கீழ் சமூக பாதுகாப்புத்திட்டத்தை தனியார் உடைமையாக்க அவர்கள் வற்புறுத்திவருகின்றனர், ஓய்வுபெற்றவர்கள் குறிப்பிட்ட வரையறைக்குள் பெற்றுவருகின்ற நலன்களையும், வோல்ஸ் ஸ்ரீட் -ன் லாபங்களுக்கு கீழ்படிந்து கிடக்கச்செய்வது, மெடிகேர் போன்ற இன்னும் மிச்சமீதமிருக்கின்ற சமூக நலத்திட்டங்களையும் ஒழித்துக்கட்டும் முன்மாதிரியை ஏற்படுத்துவதற்காகும்.

புதன்கிழமையன்று தமது வெற்றிவிழா உரையில் செனி, புஷ் ''ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் இந்த நாட்டின் எதிர்கால திட்டத்தை அறிவித்தார். நாடு அவருக்கு ஒரு கட்டளையைத் தந்ததன் மூலம் பதிலளித்தது'' என்று குறிப்பிட்டார்.

இது ஒரு பொய். எங்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் என்று கூறப்படுவதை தூண்டிவிட்டதன் மூலம் குடியரசுக் கட்சிக்காரர்களின் பிரச்சாரம் அமெரிக்க மக்களை பயங்கரமாக அச்சுறுத்த முயன்றது. குறிப்பாக ஓரின திருமணம், கருக்கலைப்பு, மரபணு ஆய்வு போன்ற விஷயங்களில் மத மற்றும் பிற்போக்குத்தனங்களுக்கு விடுக்கும் வேண்டுதல்களில் ஆதரவை நம்பியிருந்தது.

இந்த குழப்பமான சூழ்நிலையில் புஷ்ஷிற்கு தரப்பட்டுள்ள வாக்கு அரசியல் கட்டளையல்ல. ஒப்பீட்டளவில் மிகக்குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் குடியரசுக் கட்சிக்காரர்கள் தேர்தல்களில் வெற்றிபெற்றிருப்பது 2000- தேர்தலை அவர்கள் களவாடியதால் ஏற்பட்ட அரசியல் முடை நாற்றத்தை போக்குகின்ற அளவுக்குப் போதுமானவையல்ல. இந்த நிர்வாகம் குற்றவியல் தன்மை மற்றும் பொய்களை அடிப்படையாகக்கொண்ட அரசாங்கமாக இருந்தது இன்னும் அப்படியே நீடித்துக்கொண்டிருக்கிறது.

புதன்கிழமையன்று புஷ் வெற்றிபெற்றுவிட்டதை ஒப்புகொண்ட ஜனநாயகக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி ''ஒரு பொதுவான முயற்சி'' வேண்டுமென வலியுறுத்தினார். "ஒற்றுமை"யின் அவசியத்தைக் குறிப்பிட்டார். ''குறுகிய நோக்கு அடிப்படையிலான பிரிவை சரிக்கட்ட'' உறுதி எடுத்துக்கொண்டார். தனது இரண்டாவது பதவிக்காலத்தில் புஷ் ''இரக்க உணர்வோடு'' நடந்து கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

ஈராக் போர், சிவில் உரிமைகள் மீது தாக்குதல் உழைக்கும் மக்களிடமிருந்து மிகப்பெருமளவில் செல்வம் நிதியாதிக்கக்குழுவிற்கு திரும்பியிருப்பது ஆகியவை புஷ்ஷின் முதல் நான்காண்டு ஆட்சியில் நடைபெற்றவை இவை தொடர்பாக மக்களின் விரிவான பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள எதிர்ப்புபற்றி கெர்ரி பேசவில்லை. மாறாக அரசியல் நிர்வாகத்தரப்பினர் தங்களுக்குள் ஒற்றுமையை நிலைநாட்டிக் கொண்டு பிளவுகளை சரிசெய்து இதே கொள்கைகளை சிறப்பாக செயல்படுத்தக் கோருகிறார்.

ஓகியோ வாக்குகளை முழுமையாக திரும்ப எண்ணவேண்டும் என்று கோருவதற்கு ஜனநாயகக்கட்சி மறுத்துவிட்டது அல்லது எண்ணப்படாத வாக்குள் தொடர்பான செய்திகளை தொடர்ந்து விசாரிக்க மறுத்தது மற்றும் இதர மாகாணங்களில் நடைபெற்ற தேர்தல் மோசடிகளை தட்டிக்கேட்க மறுத்தது. ஆகியவை ஜனநாயகக் கட்சியின் கோழைத்தனமான ஒரு வெற்று பிரச்சாரத்தின் இறுதிச்செயலாகும். குடியரசுக் கட்சி கெர்ரிக்கு பின்னால் 2- சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கிக்கொண்டிருந்திருக்குமானால் ஓகியோவில் குடியரசுக் கட்சிக்காரர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்த்தால், 2000-தில் புளோரிடாவில் செய்திருப்பதைப்போல் வக்கீல்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வலதுசாரி கும்பல்களை திரட்டி மாகாணத்தில் பதிவான வாக்குகளை முறையாகவோ அல்லது முறையற்ற வகையிலோ கைப்பற்றியிருப்பார்கள்.

மிக அடிப்படையாக பார்க்கும்போது ஜனநாயகக் கட்சிக்காரர்கள் சரணடைந்தது, அந்தக்கட்சியின் ஓர் உண்மையான சமூக அடித்தளத்தின் வெளிப்பாடுதான்- அதனுடைய அடித்தளம் உழைக்கும் மக்களிடையே இல்லை ஆனால் ஆளும் மேல்தட்டின் பிரிவினர் மற்றும் சமூகத்தில் மிகப்பெரும் சலுகைபெற்ற பிரிவினரிடையே உள்ளது. அவர்களது தந்திரோபாய வேறுபாடுகள் குடியரசுக்கட்சிக் காரர்களோடு எவ்வளவு இருந்தாலும் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அதே நிதியாதிக்க ஒருசிலவரின் மிக அடிப்படையான நலன்களை தற்காத்து நிற்கின்றன.

கெர்ரி தனது ஒற்றுமைக்கான அழைப்பில் வலியுறுத்தியிருப்பது: ''இப்போது முன்பு எப்போதையும் விட நமது போர்வீரர்கள் பாதிப்புக்களில் சிக்கியிருக்கிறார்கள். நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் மற்றும் ஈராக்கில் வெற்றிபெற வேண்டும் மேலும் பயங்கரவாதத்தின் மீதான போரில் வெற்றி பெற்றாகவேண்டும்.'' இதன் மூலம் வரவிருக்கிற இரத்தக்களறிக்கு ஜனநாயகக் கட்சியின் ஆதரவை சமிக்கை காட்டிவிட்டார்.

தனது ஈராக் மீதான குற்றத்தன்மையான போரில் இந்தத்தேர்தல் மக்களது ஆதரவை எடுத்துக்காட்டியுள்ள ஒரு பொதுவாக்கெடுப்பு என்று நிர்வாகம் தவறான முறையில் கூறுகிறது. வாக்குச்சீட்டுகள் எண்ணி முடிப்பதற்கு முன்னரே பென்டகன் மேலும் ஈராக்கியர் பலரது வாழ்வை மற்றும் அமெரிக்க போர்வீரர்கள் சாவு எண்ணிக்கையை அதிகரிக்கவும் வகைசெய்யும் ஒரு இராணுவத் தாக்குதலை ஏற்கனவே தொடங்கிவிட்டது. வியாழனன்று Ac-30 குண்டுவீச்சு விமானங்களும் எந்திரத்துப்பாக்கிகளும் பல்லூஜா மீது குண்டுவீச்சுக்களை நடத்தின. தரைப்படை தாக்குதலை அந்த நகரத்தின் மீது மேற்கொள்வதற்கு முன்னோடியாக டாங்கிகளும், சேர்ந்துக்கொண்டன. வாக்குப்பதிவில் புஷ்ஷிற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடும் என்று கருதி அந்த தாக்குதல் நடவடிக்கை தேர்தல் முடிவுவரை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

ஈராக்கிலிருந்து அனைத்து அமெரிக்க துருப்புக்களும், உடனடியாகவும், நிபந்தனை எதுவுமில்லாமலும், விலக்கிக்கொள்ளப்படவேண்டும் என்று 2004 தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் செய்தது. இந்த கோரிக்கையை பல மில்லியன் கணக்கில் அமெரிக்க மக்கள் ஆதரித்து நின்றாலும் இரண்டு கட்சி அரசியல் கட்டுக்கோப்பில் அது எதிரொரிக்கவில்லை. ஈராக் மக்களுக்கெதிராக இராணுவ ஆக்கிரமிப்பு பெருகுவதற்கு இணையாக இந்தப்போருக்கான எதிர்ப்பும் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தத் தேர்தலால் புஷ் நிர்வாகம் பெருமளவில் வறுமையை ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருந்தாலும், வரும் ஆண்டு அரசாங்கமும், அமெரிக்க மக்களும் மகத்தான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஈராக் ஆக்கிரமிப்பிற்கு பொதுமக்களது எதிர்ப்பை பல்லூஜா மீது டாங்கிகள் படையெடுத்துச் செல்வதால் நசுக்கிவிட முடியாது மாறாக ஒட்டுமொத்தமாக சிவிலியன்களை கொன்று குவிப்பது மேலும் எதிர்ப்பை தூண்டிவிடவே செய்யும். அதே நேரத்தில் மத்தியக்கிழக்கு முழுவதிலும் பொதுமக்களிடையே கொந்தளிப்பு எற்படும். ஈராக்கில் காலனி ஆட்சியை திணிப்பற்கு வாஷிங்டன் மேற்கொண்டுள்ள தாறுமாறான முயற்சிகள் இறுதியில் இழிவு தரும் வகையில் தோல்வியடைவதைத் தவிர்க்க முடியாது.

இந்த இராணுவ நடவடிக்கை மிக பெருமளவில் நடைபெற்ற கொடூரமான செயலாகும் அமெரிக்க படையெடுப்பினாலும், மற்றும் ஆக்கிரமிப்பினாலும், தற்போது 1,00000 ஈராக்கியர்வரை கொல்லப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் சிவிலியன்கள். இந்தச்சூழ்நிலைகளில் குடியரசுக் கட்சி தார்மீக நெறிமுறைகளின் மீது ஒரு தேர்தல் பிரச்சாரத்தை நடத்துவதும், அதை பின்பற்ற ஜனநாயகக்கட்சி முயல்வதும், ஒரு அருவருக்கத்தக்க செயலாகும். ஒரு நாட்டையும், அதன் எண்ணெய் வளத்தையும் பிடித்துக்கொள்வதற்கு பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவிப்பதில் என்ன தார்மீக நெறி இருக்கிறது?

ஈராக்கில் இராணுவ நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் அமெரிக்க முதலாளித்துவம் ஒரு நிதி நெருக்கடி கொந்தளிப்பில் சிக்கிக் கொள்கின்ற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. தேர்தல் முடிந்த மறுநாள் புஷ் நிர்வாகம் அமெரிக்க அரசாங்கம் திவாலாகும் விளிம்பு நிலைகே வந்துவிட்டதென்று அறிவித்தது. மேலும் நாடாளுமன்றம் கடன் உச்சவரம்பை 8.074- திரிலியன் டாலர்களை உயர்த்தவேண்டுமென்று கேட்டுக்கொண்டது. அதன் மூலம் பெருகிக்கொண்டுவரும் தனது பற்றாக்குறைகளை ஈடுகட்ட வாஷிங்டன் கடன் வாங்கிக் கொள்ள இயலும். பட்ஜெட் பற்றாக்குறைகளோடு சேர்ந்து நடப்புக்கணக்கு பற்றாக்குறைகளும், உயர்ந்து கொண்டுவரும் எண்ணெய் விலைகளும், டாலரின் மதிப்பையே வீழ்ச்சியடையச்செய்யும் அச்சுறுத்தல் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. அதன் மூலம் ஒரு உலகளவிலான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுவிடக்கூடும்.

வரவிருக்கிற வெடித்துச்சிதறும், வெகுஜன சமூக மற்றும் அரசியல் போராட்டங்களுக்கு ஆயத்தப்படுத்தும் அரசியல் பணியை நமது தேர்தல் பிரச்சாரம் உருவாக்கியிருகிறது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். சர்வதேச சோசலிச முன்னோக்கில் நமது கட்சி மிக ஆழமாக காலூன்றி நிற்பதற்கு இந்தப்பிரச்சாரம் பயன்பட்டிருக்கிறது. நமது திட்டத்திற்காக போராடுகின்ற நேரத்தில் அமெரிக்காவிலுள்ள உழைக்கும் மக்களது நலனுக்காக மட்டுமின்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ மற்றும் பொருளாதார கொள்கைகளின் விளைவுகளால் உலகம் முழுவதிலும் பாதிக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் வெகுஜன தொழிலாளர்களுக்காகவும் நாம் போராடிவருகிறோம். தனது பிரச்சாரத்தின் அச்சாணியாக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்காக நமது கட்சி போராடிவருகிறது.

தேர்தலுக்கு முந்திய இறுதி வாரங்களில் பிரிட்டனிலும், இலங்கையிலும் ஈராக் மற்றும் 2004- தேர்தலில் SEP- ன் அணுகுமுறை குறித்து தொழிலாளர்கள், மாணவர்கள், மற்றும் வாழ்க்கைத் தொழிலாக் கண்டவர்கள் திரண்டிருந்த கூட்டங்களில் பேசுகின்ற பெரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அமெரிக்காவில் ஒரு வெகுஜன சுதந்திர சோசலிசக்கட்சியை உருவாக்குவதற்கான முன்னோக்கு உலகம் தழுவிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கத்தை உருவாக்குவதன் ஓர் அம்சமாகும். இது அவ்விரு நாடுகளிலும் மிக வலுவான ஈர்ப்பு துருவமாகும். ஏகாதிபத்தியத்தின் உயிர்நாடியான பகுதிகளில் ஒரு மகத்தான சமூக சக்தி நிலவுகிறது- அதுதான் அமெரிக்கத் தொழிலாள வர்க்கம், அதன் நலன் புஷ், கெர்ரி, மற்றும் அமெரிக்க ஆளும் மேல்தட்டினர் தற்காத்து நிற்கும் நலன்களுக்கு முரணானது. உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு புரட்சிகர முக்கியத்துவம் வாய்ந்தது.

அமெரிக்காவிற்குள் ஒரு சர்வதேசிய முன்னோக்கை உருவாக்குவதற்கு நமது கட்சி நடத்திவருகின்ற போராட்டங்களுக்கு உயர்ந்த அளவிற்கு அக்கரையும் ஆதரவும் உருவாக்கியிருப்பது அமெரிக்காவில் வர்க்கப்போராட்ட நடவடிக்கை எது உருவானாலும் அது சர்வதேச அளவில் வெகுஜன கிளர்ச்சிகளாக வெடித்துச்சிதறும் என்பதற்கு கோடிட்டுக்காட்டும் அடையாளங்களாகும்.

இந்தப்பிரச்சாரத்தின் மூலம் நமது கட்சி ஒரு கணிசமான புதிய ஆதரவாளர்கள் பிரிவை பெற்றிருக்கிறது. வாக்குச்சீட்டில் நமது வேட்பாளர்களை இடம் பெறச்செய்வதற்கான SEP போராட்டத்தில் பலர் பங்கெடுத்துக் கொண்டனர், அல்லது அரசியல் ரீதியில் ஆதரித்தும் நின்றனர்- அந்தப்போராட்டத்தில் ஜனநாயக விரோத வாக்குப்பதிவு சட்டங்களையும் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய இரண்டு கட்சிகளின் அதிகாரிகளின் செப்பிடுவித்தைகளையும் எதிர்த்துப் போரிட்டோம் இந்த போராட்டம், பலருக்கு தற்போதுள்ள அரசியல் கட்டுக்கோப்பின் தன்மை அமெரிக்காவில், சமூக துருவமுனைப்பு வளர்ந்து கொண்டு வருவதில் அடிதளம் எடுத்துள்ள மகத்தான ஜனநாயக உரிமைகள் சிதைவு. ஆகியவை குறித்து படிப்பினைகள் தருவதற்கு உதவியது.

புஷ் நிர்வாகத்தின் தேர்தல் வெற்றிகள் கண்டு சோசலிச சமத்துவக் கட்சி மலைத்துவிடவில்லை. இந்த அரசாங்கத்தின் அடிப்படையாக உள்ள ஆழமான பொருளாதார சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகள் ஒரு புதிய அலை போன்ற வெகுஜன கிளர்ச்சிகளுக்கு வித்திடும் என்று நாங்கள் நம்புகிறோம். சோசலிசத்திற்கான கிளர்ச்சியில் ஒரு புதிய உழைக்கு மக்களின் வெகுஜன அரசியல் இயக்கத்தை உருவாக்குவதற்கான அரசியல் அடித்தளத்தை அமைப்பதற்காக 2004-தேர்தல்களை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம். நவம்பர் 2- வாக்குப்பதிவிற்கு பின்னர் இந்த முயற்சிகளை நாங்கள் தொடர்வோம் மற்றும் வலுப்படுத்துவோம். உலக சோசலிச வலைத் தளத்தை பயன்படுத்தி எங்களது செயல்திட்டத்தை பரவலாக அனைவரும் அறிந்துகொள்ளச்செய்வோம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளவர்க்கத்தோடு அமெரிக்க தொழிலாளர்களின் போராட்டங்களை ஒன்றுபடுத்துவோம்.

தேர்தல்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியல்ல நமது கட்சி. தேர்தல்கள் ஒரு முக்கிய பங்கை செய்கின்றன என்றாலும், நாங்கள் தலையிட்டதன் நோக்கம் ஏற்பாடு செய்வது, மக்களைத் திரட்டுவது, இதற்கெல்லாம் மேலாக கல்வியூட்டுவது. இந்தப்பணியை நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டேயிருப்போம். வரும் மாதங்களில் தேர்தல் படிப்பினைகளை தொடர்ந்து பெறுவோம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டி எழுப்பவும் தொடர்ந்து முன்னேறிச்செல்வோம். 2004- தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் எடுத்துவைத்த பணியை முன்னெடுத்துச்செல்ல நோக்கம் கொண்டுள்ளோம், எங்களது வாசகர்கள் அனைவரும் இந்த முயற்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் முன்வந்து சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து சோசலிசத்திற்கான போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

See Also :

2004 தேர்தலுக்கு பின்னர்: அரசியல் மற்றும் சமூக நெருக்கடி தீவிரமாகும்

அமெரிக்கத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி பெற்றுள்ள குறிப்பிடத்தக்க ஆதரவு

Top of page