World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGerman Green Party congress: a middle-class party of German imperialismஜேர்மன் பசுமைக் கட்சியின் மாநாடு: ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மத்தியதர வர்க்க கட்சி By Ulrich Rippert வடக்கு ஜேர்மன் நகரான Kiel ல் அக்டோபர் 2-3களில் நடைபெற்ற பசுமைக்கட்சின் மாநாட்டில் மிகவும் முக்கியமான கலந்துரையாடல்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்றய நெருக்கடியான சமூக பிரச்சனைகளான பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டம், சமூகத்திட்டங்களில் வெட்டுக்களாலும் பணக்காரர்களுக்கு வழங்கும் வரி சலுகைகளாலும் வளர்ச்சியடைந்துவரும் சமூக துருவமுனைப்படுத்தல், அண்மைக்கால மாகாண தேர்தல்களில் புதிய பாசிசக்கட்சிகள் பெற்றுள்ள தேர்தல் வெற்றி போன்றவற்றை ஏறத்தாழ விவாதங்களில் புறக்கணிக்கப்பட்டுவிட்டன. மாறாக, பிரதிநிதிகள் கட்சியின் தேர்தல் முடிவுகள் குறித்தும் கருத்துக்கணிப்புக்களில் அது உள்ள நிலைமை குறித்தும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டனர். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சமூக ஜனநாயகக்கட்சி அரசாங்கத்தில் சேர்ந்த பின்னர் பசுமைக்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துக்காட்டும் "நேசமான மாநாடு" என அழைக்கப்படுவதாக அது அமைந்தது. முந்திய மாநாடுகளில் "Fundis" என்றழைக்கப்படும் அடைப்படைவாதிகளுக்கும், Realos என்று கூறப்படும் நடைமுறைவாத குழுக்களுக்கிடையே நடைபெற்ற கூக்குரல் மற்றும் கண்ணீர் மல்கும் வாக்குவாதங்கள் இந்த மாநாட்டில் நடக்கவில்லை. இவை அரசியல் போக்குகளை விட மனவெழுச்சியில் அடிப்படையிலே கூட தளுவியிருந்து. எவ்வாறிருந்தபோதிலும் இவ்வாறான விவாதங்கள் சமுதாயத்தில் நிகழும் அரசியல் போக்கினை பிரதிபலித்தன. ஐந்தாண்டுகளுக்கு முன்னர்தான் பசுமைக் கட்சியின் தலைவர் ஜொஸ்கா பிஷ்ஷர் வெளியுறவு அமைச்சரின் நடவடிக்கைகள் மீது ஆத்திரமடைந்தஒரு பசுமைக் கட்சி உறுப்பினர் வீசிய சிவப்பு வண்ணம் நிரம்பிய பலூனால் தாக்கப்பட்டார். Kiel இல் பசுமையினர் தாங்கள் யார் என்ற உண்மையான உருவமான, ஓர் சுய -முக்கியத்துவம் வாய்ந்த, நடுத்தரவர்க்க முதலாளித்துவ- சார்பு கட்சி என்பதையும், தங்களது போட்டியாளர்களான தாராளவாத ஜனநாயகக் கட்சிக்காரரிடமிருந்து (FDP) எந்த வகையிலும் வேறுபட்டிருக்கவில்லை என்பதையும் வெளிக்காட்டினர்.சென்ற ஆண்டு நடைபெற்ற விசேட மாநாட்டில் பசுமையினர் ஜேர்மனி சான்சிலர் ஹெகார்ட் ஷ்ரோடரின் 2010- செயல்திட்டத்தை நிபந்தனை எதுவுமின்றி ஆதரித்தனர். அதன் மூலம் ஜேர்மன் குடியரசின் வரலாறு காணாத சமூக நல வெட்டுக்களுக்கு வழியமைத்து கொண்டுத்தனர். அதற்குப்பின்னர் Hartz-IV சட்டத்தின்படி கட்டளையிடப்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதங்களில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமூக ஜனநாயக கட்சி (SPD) பொதுமக்களது ஆத்திரத்தித்தினையும், எதிர்ப்பினையும், சந்திக்காமல் உறுதிசெய்து கொள்வதில் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திக்கொண்டே வந்தனர். சமூக நல திட்டங்கள் அழிக்கப்படுவது அதிகாரப்பூர்வமாக நலன்புரி அரசு சீர்திருத்தம் என்று கூறப்பட்டதுடன், Kiel மாநாட்டில் ஒவ்வொரு பேச்சாளருக்கு பின் பேச்சாளராக கட்சி சீர்திருத்தத்தின் ''உந்துவிசையாக'' செயல்படுவதாக பாராட்டினர். கட்சித்தலைவராக Richard Butikofer மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு மாநாடு ஆரம்பிக்கப் பட்டது. தனது முக்கிய விவாத ஆரம்ப உரையில் ''சீர்திருத்த போக்கு நீடிக்க வேண்டும்'' என்று Butikofer அழைப்புவிடுத்தார். ''சமூக மற்றும் வேலைவாய்ப்பு சந்தை சீர்திருத்தங்கள் தொடர்பான பிரதான மோதல்'' இன்னும் முடியவில்லையென்று அவர் அறிவித்தார். சீர்திருத்தங்கள் தடுத்து நிறுத்துவதனால் சமூக நீதி பெருகுமென்று நம்புவார்கள் தம்மையே பெரு வெள்ளத்தில் மூழ்கடிப்பதாக அமையும் என கூறினார். அண்மை மாதங்களில் ஜேர்மனியில் வெகுஜன கண்டன ஊர்வலம் நடைபெற்றதை தொடர்ந்து Buitikofer வேலைவாய்ப்பு சீர்திருத்தங்கள் வரும் ஆண்டுகளில் விமர்சனக் கண்ணோட்டத்தில் ஆராயப்படவேண்டும் என்றும், தேவைப்படும் இடங்களில் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இப்படி அவர் அறிவித்தது, சந்தேகத்தோடு பிரச்சனைகளை அனுகிய மாநாட்டு பிரதிநிதிகளை சமாதானப்படுத்துவதற்கு போதுமானதாகும். பசுமையினரின் இளைஞர் அமைப்புத் தலைவரான Stephan Schilling "குடிமக்களது காப்புறுதி திட்டத்திற்கான'' (citizens' insurance scheme) பிரேரணை ஒன்றை ஆலோசனையாக கூறினார். இதனை கட்சியின் பிரிவுகள் ஆதரித்தன. இப்போது நடைமுறையிலுள்ள சமூக காப்புறுதித்திட்டத்தின் கீழ் மாதம் 3,457 யூரோக்களுக்கு குறைந்த வருமானக்காரர்கள் சேர்க்கப்படுகின்றனர். குடிமக்களது காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த வருமான வரம்பு 5,150 யூரோக்களாக உயர்த்தப்படும். (தற்போது 3457 யூரோக்களுக்கு மேல் மாத ஊதியம் பெறுகின்றவர்கள் தனியார் காப்பீட்டுத்திட்டத்தில் சந்தா செலுத்துகின்றனர்.) 2010 செயல்திட்டத்தில் இடம் பெற்றுள்ள இடைவெளியை நிரப்புவதற்கு இது சிறிய தொகைதான் என்று சில பிரதிநிதிகள் சொன்னார்கள். இந்த யோசனை மாநாட்டுப் பிரதிநிதிகளின் கைதட்டல், வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த சிறிய மாற்றத்தைக்கூட பெரும்பான்மையானவர்கள் தள்ளுபடி செய்தனர். வருமான வரம்பை உயர்த்துவது வேலைவாய்ப்பு சந்தையை வெகுவாக பாதிக்கும் என்று பல கட்சிகளின் முன்னணி உறுப்பினர்கள் எச்சரிக்கை செய்தனர். சிறந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு எந்த அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அது குறைந்த ஊதியத் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மற்றும் குறைந்த ஊதியத் தொழிலாளர்கள் சிறந்த ஊதியம் பெறும் ஊழியர்களையே சார்திருக்கின்றனர் என்றும் அவர்கள் வாதிட்டனர். குடிமக்கள் காப்புறுதித்திட்டம் தொடர்பான விளக்கம் தருவதற்காக விருந்தினராக அழைக்கப் பட்ட பேராசிரியர் Karl Lauterbach ஒர் அறிக்கை வழக்கியதுடன் அவரும் அதே வழிகளில்தான் வாதிட்டார். Cologne நகர பேராசிரியரான அவர் "குடிமக்கள் காப்புறுதி திட்டத்தின் தந்தை" என்று அடிக்கடி வர்ணிக்கப்படுகிறார். அவர் சமூக ஜனநாயக கட்சிக்கு அறிவியில் ஆலோசகராக செயல்பட்டுவருகிறார். பேராசிரியர் Karl Lauterbach, சமூக ஜனநாயக கட்சித் தலைவர் Franz Muntefering மூலம் மாநாட்டிற்கு அனுப்பப் பட்டாரா? என்பது தெளிவில்லாமல் உள்ளது. Muntefering தனது சொந்த கையினால் எழுதப்பட்ட வாழ்த்துச்செய்தியை மாநாட்டிற்கு அனுப்பினார். அந்தச் செய்தி சமூக ஜனநாயக கட்சி உடன் கட்சி ஒத்துழைப்பை நீடிக்க வேண்டுமெனவும் மாநாட்டு பிரதிநிதிகள் ஜாக்கிரதையாகவும் வேறுபாதையில் செயல்பட்டுவிடக்கூடாது என்வும் அழைப்பு விடுத்தார். அதே வாரக்கடைசியில் Berliner Tagesspigel க்கு அளித்த பேட்டியில் Muntefering சிவப்பு முதன்மை வர்ணமென்றும் பச்சை இரண்டாம் நிலை வர்ணம் என்றும் கூறினார். ( அதாவது சமூக ஜனநாயக கட்சியின் கூட்டரசாங்கம் சேர்ந்திருப்பதைக் குறிக்கும்) கட்சி மாநாட்டில் ஆதரவு பெற்றுள்ள, குடிமக்களது காப்புறுதித் திட்டம் இருபக்கங்களைக் கொண்ட நாணயமாகும். அது எல்லா வகையான வருமானக்காரர்களையும் தொழில் முறை அரசு ஊழியர்கள் மற்றும் சிறுவர்த்தக மக்கள் உட்பட அனைவரையும் சேர்த்து பொதுசுகாதார காப்பீடு திட்டத்திற்கு நிதிதிரட்டும் ஒரு ஏற்பாடாகும். இதரவகைகளை சார்ந்த வருமானமான பங்குகளில் இருந்து கிடைக்கும் வட்டி மற்றும் இலாபங்கள் மூலம் சமூக காப்புறுதிசந்தாக்கள் செலுத்துவதும் குறைக்கப்படவேண்டும். எப்படியிருந்தாலும், முதலாளிகள் மருத்துவ காப்புறுதி நிறுவனங்களுக்கு செலுத்துகின்ற சந்தாக்கள் போன்ற பல்வேறு துணை ஊதிய செலவீனங்கள் குறைக்கப்படவிருக்கின்றன அல்லது இறுதியாக ரத்து செய்யப்படவுள்ளன. இறுதியில் கட்சி செயற்குழு தெரிவித்துள்ள ஆலோசனை பொதுவாக நடப்பு நடைமுறையையே நிலைநாட்ட கேட்டுக்கொண்டது. (தொழிலாளர்கள் தொழில்வழங்குனர் செலுத்துவதற்கு இணையான தொகை சந்தா செலுத்துகின்றனர்) உயர்ந்தபட்சம் ஊதியத்தில் 13சதவீதம் (ஊழியர்களுக்கு 6.5- சதவீதம்) என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. கட்சியின் இடதுசாரி பிரிவின் பிரதிநிதி என்கிற முறையில் உரையாற்ற வந்த Hans Christian Strobele வருமான வரிக்கான ஒரு ஆலோசனையை முன்வைத்தார். அதை அவர் ''கோடீஸ் வரர்களது வரி'' என்று குறிப்பிட்டார். மாநாட்டு முன்னேற்பாடுகளைத் தொடர்ந்து இந்தத்திட்டம் ஏற்கெனவே கட்சி செயற்குழுவில் தீவிரமற்ற வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு சம்மதிக்கப் பட்டது. Der Spiegel வாரசெய்திப் பத்திரிகைக்கு பேட்டியளித்த Strobele " நான் மனநிறைவடைகிறேன்'' என்று கூறியுள்ளார். இந்த பிரச்சனை விவாதத்திலிருந்து கைவிடப்படவில்லை என்பதுதான் முக்கியமானது. இந்தத்திட்டம் செயல்படுவதற்கான நல்ல அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது என்று Strobele விளக்கினார். இந்த மாநாட்டிற்கும் அடுத்த மாநாட்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு பெரிய வருமானத்தில் நிர்வாக விளைவுகள் இல்லாமல் வரி விதிக்கமுடியும் என்பதை ஒரு நிபுணர் குழு ஆராயும்.இது கட்சிக்குள் இடதுசாரி பிரிவிற்கு செல்வாக்கு உள்ளது என்பதை காட்டுவதற்கான நாடகமாகும். கட்சி பிரதிநிதிகளில் எவருமே பெரும் வருவாய்காரர்களுக்கு வரி விதிக்க கட்சி கோரும் என்பதை நம்பாததுடன், அதை அமுல்படுத்துமா என்பதையும் நம்பவில்லை. வெளியுறவு அமைச்சர் ஜொஸ்கா பிஷ்ஷர் பசுமைக்கட்சியின் சந்தர்ப்பவாத போக்கை சுருக்கமாக எடுத்துரைத்தார். கருத்து முரண்பாடுகளை வேலைத்திட்ட அடிப்படையில்தான் தீர்த்துவைக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். இந்த முரண்பாடுகளில் ஒன்று பசுமையினர் விரும்புகின்ற சமூகநல அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தேவைப்படும் நிதி வசதியில்லாமையே என ஜொஸ்கா பிஷ்ஷர் விளக்கினார். சமூக ஜனநாயக கட்சி- பசுமை கூட்டணி அரசாங்கம் மூலதனத்திற்கு மேலான வர்த்தக வரியை ஒழித்துக்கட்டியிருப்பதுடன் மிக உயர்ந்த வருமானமுள்ளவர்களுக்கு கடுமையான அளவிற்கு வரிகுறைப்பு செய்யப்பட்டிருப்பது ஏன் என்று மாநாட்டிற்கு வந்த பிரதிநிதிகளில் எவரும் கேட்பதற்கு கவலைப்படவில்லை. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வரி சீர்திருத்தத்தின் மூன்றாவது கட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. 1998 இல் சமூக ஜனநாயக கட்சி - பசுமை கட்சி அரசாங்கத்தின் ஆரம்ப ஆட்சிக்கட்டத்தில் 53% இருந்த உயர் வரி விகிதம் 42 % வீழ்ச்சியடைந்தது. ஆண்டிற்கு ஒரு மில்லியன் யூரோக்களுக்கு மேல் சம்பாதிப்பவர்கள், கூடுதலாக 1,00,000 யூரோக்களை சேமிப்பார்கள். சமூக திட்டங்களுக்கு மேலும் வெட்டுக்களை நியாயப்படுத்துவதற்கு 'கஜானாகாலி' என்று பசுமைக்கட்சி சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்திலேயே இது நடக்கிறது. சர்வதேச கொள்கை முரண்பாடுகள் பற்றி ஜொஸ்கா பிஷ்ஷர் பேசினார். அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும், பயங்கரவாத காலங்களில் தற்காப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குமிடையே ''அழுத்த விகிதம்'' என்றழைக்கப்படுவது இதில் உள்ளடங்கியுள்ளது. இந்த வார்த்தைகள்மூலம் ஜொஸ்கா பிஷ்ஷர் ரஷ்ய ஜனாதிபதி புட்டின், Beslan பணயக்கைதிகள் முற்றுகைக்கு பின்னர் அறிவித்துள்ள ஒடுக்குமுறை நடவடிக்கைகளை பாதுகாத்தது மட்டுமல்லாது அமெரிக்க அரசாங்கத்தின் வாதத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார், அந்த அரசாங்கம் ''பயங்கரவாதத்தின் மீது போர்'' என்று அழைக்கப்படுவதை, எடுத்துக்காட்டி ஜனநாயக உரிமைகள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்களை நியாயப்படுத்திவருகிறது. பசுமைக் கட்சியின் அண்மைக்கால வரலாற்றில் இத்தகைய "முரண்பாடுகள்" நிறைந்துள்ள சான்றுகளை கொண்டுள்ளன. மற்றும் அவர்களது தீர்மானத்தில் முதலும் மிக முக்கியமானது அமைதிவாதப்போக்கிலிருந்து இராணுவமயத்திற்கு பசுமையினர் எடுத்துக் கொண்ட மாற்றமாகும். இந்தக்கட்சியின் ''சமாதான முன்னேற்றம்'' என்பதிலிருந்து ''சமாதானத்திற்கான சட்டம்'' என்ற மாற்றத்தின் பின்னர் ''சமாதானத்தை அமுல்படுத்துவது'' என மாறியிருப்பது மலைப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. ஈராக்கின் இடைக்கால அரசாங்கத்திற்கு 80 இராணுவ கனரகவாகனங்கள் மற்றும் 20 Fuchs ரக டாங்கிகளை, ஏற்றுமதி செய்வதற்கான அரசாங்கத்தின் ஆயுதங்கள் ஏற்றுமதி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு தீர்மானத்தை மாநாட்டு பிரதிநிதிகள் ஆதரித்தனர். இரண்டு நாட்களுக்கு பின்னர் பசுமைக்கட்சியின் தலைமை இந்தத்தீர்மானம் பொருத்தமற்றது என்று நிராகரித்தது. பசுமைக் கட்சியின் தலைவியான கிளவ்டியா றோத் (Claudia Roth) ஈராக்கிற்கு ஆயுதங்களை அனுப்புவது என்ற அரசாங்கத்தின் முடிவு, ஆயுத ஏற்றுமதி என்ற பாரம்பரியபான நோக்கத்தில் இல்லாது அது ஒரு "ஆயுத உதவி" நடவடிக்கைதான் என்று விளக்கம் அளித்தார். கட்சி செயற்குழுவின் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது ''ஈராக்கில் போலீசாரும் இடைக்கால அரசாங்கத்தின் படையினரும் தாக்குதல் மற்றும் கொலைகளால் நிரந்தரமாக அச்சுறுத்தப்படுகின்றனர், சுட்டுவீழ்த்தப்படுகின்றனர் மற்றும் குண்டுவீசி தாக்கப்படுகின்றனர். அவர்களது அரசாங்கம் ஆயுத வாகனங்களை தருமாறு கோருவதையாரும் மறுக்க முடியுமா?'' ஈராக்கிற்கு ஜேர்மனி துருப்புக்களை அனுப்பவேண்டிய தருணம் வந்தவிட்டதென்று ஏதாவதொரு கட்டத்தில் ஜேர்மனி அரசாங்கம் முடிவு செய்யுமானால், அந்த நேரத்தில் பசுமைக் கட்சியின் தலைமை இதேபோன்ற வார்த்தை ஜாலங்களைத்தான் பயன்படுத்தும். துருப்புக்கள் போர் புரிவதற்காக அனுப்பப்படவில்லை, மாறாக சமாதானத்தை வளர்ப்பதற்காகவே அனுப்பப்படுகிறார்கள் என்று ஜொஸ்கா பிஷ்ஷர் உம், கிளவ்டியா றோத் உம் அறிவிக்கக்கூடும். ஏனென்றால் பசுமையினரின் சந்தர்ப்பவாத போக்கிற்கு எல்லையே இல்லை. பசுமைக் கட்சிக்காரர்களின் வரலாறு மற்றும் அவர்களது அடிப்படை வேலைத்திட்ட கண்ணோட்டங்கள் ஆகியவற்றின் விளைவுதான் அந்தக்கட்சியின் முடிவற்ற இடைவிடாத வலதுசாரி போக்காக உருவாகியிருக்கிறது. Kiel மாநாடு அந்தக்கட்சியின் 25 வது ஆண்டு விழாவாகும். 1960களில் நடைபெற்ற மாணவர் கண்டன இயக்கத்திலிருந்துதான் பசுமைக் கட்சியின் பல நிறுவன உறுப்பினர்கள் தோன்றினர். இந்த போராட்ட இயக்கம் ஜேர்மன் முதலாளித்துவ சமூகத்தையும், அதன் கடந்தகால நாசிசப்போக்கையும் கண்டித்தது. அது தொழிலாள வர்க்கத்தை பிற்போக்கான சக்தி என்று கருதியதுடன், அது முழுமையாக நுகர்பொருள் நாட்டத்தினால் சீரழிந்துள்ள அமைப்பினுள் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது என கருதினர். 1968இல் பிரான்சிலும் 1969 இல் ஜேர்மனியிலும் நடைபெற்ற பரந்த தொழிலாளர் போராட்டங்களில் ஏராளமான அரசியல் குழுக்கள் தோன்றின. அந்தக்குழுக்கள் தங்களை சோசலிஸ்டுகள் என்றும் புரட்சிக்காரர்கள் என்றும் கூறிக்கொண்டு அந்தக் காலத்து தீவிரவாத சின்னங்கள் என்று கருதப்பட்ட மா-ஓ, சேகுவாரா மற்றும் பிறரோடு ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இந்தத் தலைவர்களை தனிநபர் வழிபாட்டிற்கு பதிலாக இந்த நபர்களிடையே இருந்த முக்கிய பிரிவினர் தொழிலாளவர்க்க மற்றும் மார்க்சிசகண்ணோட்டங்களை நோக்கி திரும்பினர். மற்றொரு மாணவ இயக்கக் குழுவினர் சமூக ஜனநாயக கட்சியின் பக்கம் திரும்பினார்கள், கட்சித் தலைவரும் முன்னாள் சான்சிலருமான Willy Brandt இனை தங்களது தலைவராக ஏற்றுக்கொண்டனர். 1970களின் மத்தியில் சமூக ஜனநாயக கட்சி கூர்மையாக வலதுசாரிபக்கம் திரும்பியது. தொழிலாள வர்க்கம் பல்வேறு தோல்விகளை சந்தித்தது. முதலாளித்துவ வர்க்கம் சர்வதேச தாக்குதலில் இறங்கியது. ஆரம்பத்தில் மாணவர்கள் இயக்கத்தில் காணப்பட்ட உற்சாகம் பின்னர் வெறுப்பாயிற்று, இறுதியில் உற்சாகம் குன்றியது. அதைத்தொடர்ந்து ஒரு காலகட்டத்தில் முன்னர் நிலை நாட்டப்பட்டு வந்த அரசியல் முன்னோக்குகளும் கொள்கை உறுதிபாடுகளும், கவனமான மதிப்பீடு எதுவும் செய்யப்படாது தள்ளுபடி செய்யப்பட்டு தூக்கி எறியப்பட்டன. இந்தச் சூழ்நிலைகளில் 1970 களின் நடுவில் பசுமைக் கட்சி தோன்றியது. இது ஒரு சோசலிச முன்னோக்கையும், வர்க்கப் போராட்டத்தையும் மட்டும் தனியே நிராகரிக்கவில்லை. இது சமூக நலன்களை எதிரொலிக்கும் அரசியல் திட்டக்கருத்துக்களை கூட புறக்கணித்தது. தனது திட்டங்களின் உயிர்நாடியாக ஜனநாயக, சமாதான மற்றும் சுற்றுப்புற சூழல் பிரச்சனைகளை எடுத்துக்கொண்டது. இவை தற்போதுள்ள சொத்துடைமை முறையை கேள்விக்குள்ளாக்காமல் இந்த குறிக்கோள்களை முன்னெடுத்துச்செல்ல முடியுமென்று கட்சி நிலைநாட்டியது. அரசியலையும், சமூகத்தையும் "மனித நேயமாக்கும்" குறிக்கோளோடுதான் 1980 களின் ஆரம்பத்தில் ஜேர்மன் கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் ( Bundestag) அடியெடுத்துவைத்தது. Helmul kohl இன் பழைமைவாத அரசாங்கத்திற்கு, எதிர்கட்சியாக நீண்டகாலம் பசுமையினர் செயல்பட்டன. அப்போது பொருளாதார மந்தநிலை பெருகிவந்ததால் பசுமையினருக்கு கணிசமான ஆதரவு பெருகியது. ஆனால் சமுதாயத்திற்குள் நிலவுகின்ற வர்க்க வேறுபாடுகள் மிகத்தெளிவாக வெளியேவருவது பெருகியதும், ''மனிதநேயம்'' என்கிற பேச்சிற்குள் முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நலன்களுக்கு விட்டுக்கொடுக்கும் போக்கு வளர்வதை மறைத்துக்கொண்டு செயல்பட்டுவந்தனர். இக்கட்சி ஆளும் மேல்தட்டினரின் அரசியல் கருவியாக மாறிவிட்டது அத்துடன் முந்திய ஆர்ப்பாட்டம் செய்த ஓர் தலைமுறையின் பிரிவினர், அரசியல் கட்டமைப்பில் தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டனர். இதுவரை அவர்கள் சார்ந்திருக்கும் சமூக பிரிவினர் ஆழமாக பிளவுபட்டுநிற்கிறது. நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறிய பிரிவு செழிப்போடு வளர்ந்துவரும்போது மிகப்பெரும்பாலானவர்களது பொருளாதார நிலை பாதுகாப்பற்றதாகிவருவதுடன் அவர்களது வாழ்க்கைத்தரம் தேக்க நிலையைடைந்துள்ளது. இன்று பசுமைக்கட்சியினர் "வசதிபடைத்த" கட்சியாக ஆகிவிட்டனர். அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி பசுமைக் கட்சி உறுப்பினர்கள், சராசரியாக பழைமைவாத கட்சிகள் உட்பட வேறு எந்த பிரதான கட்சிகளின் உறுப்பினர்களைவிட அதிகமாக சம்பாதித்துக்கின்றனர். கட்சித்தலைவர் Reinhard Butikofer பசுமைகட்சியின் முன்மாதிரி பிரதிநிதியாக விளங்குகிறார். 1970 களின் தொடக்கத்தில் அவர் Heidelberg நகரத்தில் தத்துவத்தையும் வரலாற்றையும் படித்தார். 1974 க்கும் 1980 க்கும் இடைப்பட்ட காலத்தில் மாவோவாத கம்யூனிஸ்ட் உயர்நிலைப்பள்ளிக் குழுவின் உறுப்பினராக இருந்தார். 1982 தொடக்கத்தில் பசுமைக்கட்சியுள் ஒரு மாற்றீடான பிரிவில் தீவிரமாக இருந்தார், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பசுமையின் சார்பில் Heidelberg நகர சபை தலைவரானார். அதற்குப்பின்னர் மாகாண நாடாளுமன்ற உறுப்பினராகவும், கட்சியின் நடைமுறைவாத பிரிவின் பிரதிநியாகவும், இறுதியாக தேசிய அமைப்பாளராகவும் ஆனார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பசுமைக் கட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று Butikofer பசுமைக்கட்சியின் சுயதிருப்தி மற்றும் அசமந்தபோக்கு ஆகியவற்றை உள்ளடக்கியவராக விளங்குகிறார். ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஆலோசகராக தன்னையும், தனது கட்சியையும் பங்காளிகளாக கருதுகின்ற பல்வேறு வர்த்த அமைப்புக்களோடு நெருக்கமான உறவுகளை நிலைநாட்டிவருகிறார். |