:
ஆசியா
:
இலங்கை
Following the SEP meetings in Colombo and Kandy
Sri Lankans speak about the Iraq war, the US
election and internationalism
கொழும்பு மற்றும் கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டங்களை அடுத்து
ஈராக் போர், அமெரிக்கத் தேர்தல் மற்றும் சர்வதேசியம் பற்றி இலங்கையர் பேச்சு
By our reporters
28 October 2004
Back to screen version
அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பில்வான் ஒகென் இலங்கையில் பேசிய
இரு கூட்டங்களை தொடர்ந்து அதில் பங்கேற்றோர் மத்தியில் உயிர்ப்புள்ள கலந்துரையாடல் இடம்பெற்றது. கூட்டத்திற்கு
வருகை தந்தோர் வான் ஒகெனைச் சுற்றி கூடி நின்று, சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுடன் பேசுவதற்கும்
தங்களுக்குள் பேசிக் கொள்ளவும் வெளியீடுகள் விற்பனைக்கு இருந்த மேசைக்கு அருகில் திரண்டிருந்தனர். தமிழ், சிங்களம்
மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல்கள் கூட்ட அரங்கு மூடப்பட்டபொழுதுதான் இறுதியில் முடிவுற்றன.
வருகை தந்திருந்த பலரைப் பொறுத்த அளவில், அமெரிக்காவில் அரசியல் நிலைமைகள்
மற்றும் அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் நிலைமைகள் பற்றிய விவரங்களை அறியக்கூடியதாக இருந்தது.
ஆனால் உரையில் முன்வைக்கப்பட்ட சர்வதேச முன்னோக்கு, அதுவும் கூட கூட்டத்தின் தன்மையை அறிவிப்பதாக இருந்தது,
பெரும்பான்மையான கருத்துக்களை ஈர்த்ததாக இருந்தது. இனவாத இரத்தக்களரியாலும் பல பத்தாண்டுகால யுத்தத்ததினாலும்
சீரழிக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டில், அது உணர்வைத் தட்டி எழுப்புவதாக இருந்தது. வான் ஒகென் பேச்சைக் கேட்க
வந்திருந்த ஒரு பெண், கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர், கூறினார்:
"இதுதான் இங்கு எமக்குத்தேவை - சர்வதேசியம்."
உலக சோசலிச வலைத் தளத்தில் இருந்து செய்தியாளர்கள் கொழும்பிலும் கண்டியிலும்
நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டோரிடம் பேசினர்.
சனக்கா, எனும் பெயருடைய இளம் மாணவர் விளக்கினார்: "அமெரிக்கா பற்றி
எனக்கு உயர்ந்த கருத்துக்கள் இருந்தன. எனது நண்பர்களுக்கும் கூடத்தான். அமெரிக்காவில் மக்களுக்கு ஜனநாயகம்
இருக்கிறது மற்றும் அது ஒரு வளமான நாடு என்று நாங்கள் நினைத்தோம். இன்று அது அப்படி அல்ல என்று என்று
அறியவந்தேன். அவ்வாறான ஜனநாயகம் அங்கு இல்லை. மற்றும் மக்கள் மிக ஏழ்மையாய் இருக்கிறார்கள்.
"கெர்ரியும் கூட. கெர்ரி உண்மையிலேயே புஷ்-ஐ எதிர்க்கிறார் என்ற கருத்தை நாம்
கொண்டிருந்தோம். இவ்வனைத்துக் கருத்துக்களும் இங்குள்ள பரந்த செய்தி ஊடகங்களால் உருவாக்கப்பட்டது என்று நான்
நினைக்கிறேன். அமெரிக்காவில் இரண்டு கட்சி ஆட்சிமுறை எவ்வாறு இந்த அமைப்பை பராமரிக்கிறது என்று நான்
அறிந்துகொண்டேன். இங்கு இலங்கையில் அதேபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. ஒரு சமயம் ஐக்கிய தேசிய முன்னணி (UNF)
அதிகாரத்தில் இருந்தது மற்றும் இன்னொருமுறை இந்த அரசாங்கம் இருக்கிறது (UPA).
"நாங்கள் செய்தி ஊடகத்திலிருந்து ஈராக் பற்றி சிலவற்றை அறிந்து கொண்டோம். ஆனால்
அவை விமர்சன ரீதியானதாக இல்லை. இன்றைய சொற்பொழிவை நான் கேட்கும்பொழுது ஏன் அமெரிக்கா இப்போரை
தொடுத்தது என்று என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. அது அதன் நலன்களுக்காகவாகும்."
"கொழும்பில் இருந்து வந்த இளம் பள்ளி மாணவன்: "பார்வையாளர்களில் நான்
அமர்ந்திருந்தபொழுது முதல்முறையாக உண்மையான சர்வதேச தொழிலாள வர்க்க நிகழ்ச்சியில் நான் பங்கேற்றுக்
கொண்டிருந்ததாக உணர்ந்தேன். மற்றவர்களும் இது போன்று உணர்ந்திருப்பர் என்றும் நான் நினைக்கிறேன். அதே
நேரத்தில், கடந்தவாரம் வான் ஒகெனால் உரையாற்றப்பட்ட கூட்டம் பற்றி நான் சிந்தித்தேன். லண்டன் கூட்டத்திற்கு
வருகை தந்தோரும் இதையே உணர்ந்திருப்பர் என்பதில் எந்த ஐயமுமில்லை. எங்களைப் போன்றே அவர்களும் உலகம்
முழுவதும் உள்ள தொழிலாளர்களுடன் ஒரே மாதிரி இருக்கின்றனர் என்று அவர்கள் எண்ணக் கூடும். ஒரு பொது வேலைத்
திட்டத்தில் தொழிலாளர்களை சர்வதேச ரீதியாக நாம் ஒன்றிணைக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது"
எனக் கூறினான்.
கொழும்பில் சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்தில் செய்தி சேகரிக்க அனுப்பப்பட்ட ஒரு
பத்திரிகையாளர், உலக சோசலிச வலைத் தளத்திடம் விவரித்தார்: "ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில்
இந்தவகையான செய்திப் படம்பிடிக்கும் என் தொழிலில் ஒரு சர்வதேசிய கூட்டத்தை படம்பிடித்தது இதுதான்
முதலாவதாகும். சர்வதேசியம் என்று அழைக்கப்படுகிற பல கூட்டங்களுக்கு நான் சென்றுள்ளேன், ஆனால் அக்கூட்டத்தில்
உள்ள ஒவ்வொரு பேச்சாளரும் தாங்கள் சார்ந்துள்ள நாட்டின் மற்றும் அரசாங்கத்தின் சார்பில் பேசுவர். ஆனால் பில்
வான் ஒகென் அமெரிக்கா சார்பில் உரையாற்றவில்லை. அவர் தொழிலாள வர்க்கத்தின் சார்பில், சர்வதேசத்
தொழிலாள வர்க்கத்தின் சார்பில் பேசுகிறார்.
இச்சொற்பொழிவின்பொழுது, பல முறை எனது வேலையை மறந்துவிட்டேன் மற்றும் வீடியோ
கேமராவை முறையாக நான் இயக்க முடியவில்லை ஏனெனில் பில் வானின் அற்புதமான கருத்துக்களால் ஈர்க்கப்பட்டேன்.
நான் கேமராவை மூன்றுகால் தாங்கியில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் நிலையாகப் பொருத்திவிட்டு சொற்பொழிவைக்
கேட்பதற்காக பார்வையாளராக அமர்ந்துவிட்டேன். செய்தி ஊடகம் கொடுக்கும் அமெரிக்க சமுதாயத்தைப் பற்றிய
படம் முற்றிலும் வேறுபட்டதாகும். அமெரிக்காவில் உள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை
அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகளுடன் விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்வதை நான் உண்மையில்
பாராட்டுகிறேன். இலங்கையில் ஏனைய கூட்டங்களில் பொதுவாக அவர்கள் எந்தவிதான விஞ்ஞான அணுகுமுறையுமின்றி
வெற்றுவிவாதங்களுடன் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொள்வர். ஆம், இதுதான் உண்மையான சர்வதேசியம்."
சுனில் என்னும் மாத்தறையிலிருந்து வரும் தொழில்முறை நிழற்படப் பிடிப்பாளர்,
கூட்டத்திற்கு வருகை தந்தோர், ஆங்கிலத்தில் ஆற்றப்பட்ட வான் ஒகெனின் உரையை சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்ப்பு
செய்ய பொறுமையுடன் கேட்டது பற்றி கருத்துரைத்தார். "பார்வையாளர்கள் நான்கு மணிநேரங்களாக எப்படி
ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருப்பர் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை, ஆனால் நான் சுற்றிலும்
பார்த்தேன், எவ்வளவு அக்கறையுடன் அவர்கள் கவனித்தனர் என்று.
"இந்த அசாதாரணமான கவனிப்பின் இரகசியம் பில்வான் ஒகெனால் வழங்கப்படும்
கருத்துக்களின் ஆற்றலாகும். நீங்கள் உண்மையைப் பேசினால் அது மிகவும் சக்திமிக்கதாகும். அமெரிக்காவிலிருந்து வந்த
வான் ஒகென், அவரது நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கையை உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களுடன்
பேசுகிறார். ஈராக்கில் அமெரிக்காவால் நடத்தப்படும் படுகொலைக்கு எதிராக ஒரு அமெரிக்கர் பேசினால், அது
இதயத்தைத் தொடுகிறது மற்றும் அது சிந்தனையைத் தூண்டிவிடுகிறது."
ஜயதிலக, இலங்கை பெட்ரோலியம் கார்ப்பொரேஷனில் தனியார்மயமாக்கலுக்கு
எதிராக நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள தொழிற்சங்கத்தின் கிளைத் தலைவர் ஆவார்.
இச்சங்கமானது சிங்கள இனவாதம் மற்றும் ஜனரஞ்சக வாய்ச்சவடால் இவற்றின் ஒரு கலவையை அடிப்படையாகக்
கொண்ட, தற்போதைய ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியுமான ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) ஆல்
கட்டுப்படுத்தப்படுகிறது.
"சொற்பொழிவின் பொழுது ஈராக் ஆக்கிரமிப்பு பற்றி ஜேவிபி ஏன் முற்றிலும் மெளனமாக
இருக்கிறது என்று நான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுக்கு தலைவணங்கி விட்டார்கள்,
சிறப்பாக அமெரிக்காவிற்கு. இப்பொழுது அவர்களின் அரசாங்கத்தின் கீழ், இலங்கை ஆயுதப்படைகள் கூட்டுப் பயிற்சி
நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. அவர்கள் எல்டிடி-க்கு எதிராக அமெரிக்காவிலிருந்து இராணுவ ஆதரவைப் பெற
விரும்புகிறார்கள். எந்த இயக்கமும் தேசியவாத வேலைத் திட்டத்துடன் இந்தப் பூகோள அரங்கில் அதிகம் செல்ல
முடியாது என்று வான் ஒகென் கூறினார். இதுதான் ஜேவிபி-க்கு நிகழ்ந்துள்ளது."
மக்கள் நல அலுவலர் சம்பத் பெரேரா விளக்கினார்: "புஷ் மற்றும் கெர்ரி
ஆகிய இரு வேட்பாளர்கள் மட்டுமே இருக்கின்றனர் என்றுதான், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றி நாம் அறிந்திருந்தோம்.
அங்கு அவர்கள் இருவரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ஆவர். இத்த பிரச்சாரத்தின் மூலம், இப்பொழுது வேறு
வேட்பாளர்களும், சிறப்பாக சோசலிஸ்டுகளும் இருக்கின்றனர் என்று அறிகிறோம். அது மிக முக்கியமானது."
உண்மையில் உலக நிலைமை சர்வதேசிய மயமாக்கப்பட்டுள்ளது. ஈராக் யுத்தம் ஒரு
சர்வதேசிய பிரச்சினை ஆகும். அமெரிக்காவானது உலகின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டப் போகிறது மற்றும்
ஈராக் ஆக்கிரமிப்பானது அவர்களின் காலனித்துவ முயற்சியில் ஒரு தொடக்க நடவடிக்கை ஆகும். அந்த அர்த்தத்தில்,
நீங்கள் தோற்கடிக்க விரும்பினால், சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் ஒரு சர்வதேச இயக்கத்தை நீங்கள் ஒழுங்கு
செய்தாக வேண்டும். இதுதான் நான் இச்சொற்பொழிவினூடாக உள்வாங்கிக் கொண்டது."
எ.பெரேரா கூறினார்: "இன்று அமெரிக்காவின் நேரடி அனுபவத்தை உணர்ந்தேன்.
அமெரிக்க தொழிலாள வர்க்கம் சலுகை மிக்க மற்றும் ஆடம்பரமான வாழ்க்கைகளை அனுபவிக்கிறது என நான் முன்னர்
நினைத்தேன். பில்வான் ஒகென் இந்தப் படத்தை அழித்து ஒரு புதிய படத்தை கொடுத்துள்ளார், அது தங்களின்
வேலைகளை இழந்துள்ள, சமூக நிலைமைகளை மற்றும் ஜனநாயக உரிமைகளை இழந்துள்ள அமெரிக்கத் தொழிலாளர்களால்
உணரப்படும் உண்மையான நிலைமையை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள்
அனைவரும் ஒரேமாதிரியான பிரச்சினைகளையே எதிர்கொள்கின்றனர் என்று அறிகிறோம்.
கலைத்துறை மாணவி கே.சபாஷினி கூறினார்: "இந்தக் கூட்டத்திலிருந்து
அமெரிக்க அரசியல் நிலைமைகளைப் பற்றியும் ஈராக் போர் பற்றியும் உண்மையான கருத்தைப் பெற்றுக் கொண்டேன்.
அமெரிக்காவில் நிலைநாட்டப்பட்டுள்ள இரு கட்சிகளுக்கும் எதிரான வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன என்பதை
இப்பொழுதுதான் முதல் தடவையாக நான் கேள்விப்படுகிறேன். ஆனால் இருகட்சிகள் (ஜனநாயகக் கட்சியினர் மற்றும்
குடியரசுக் கட்சியினர்) மட்டும்தான் தங்களின் கருத்தை பகிரங்கமாக வைக்க அனுமதிக்கப்படுகின்றனர்; ஏனையோருக்கு
அத்தகைய வாய்ப்பில்லை. அது நேர்மையற்றது மற்றும் மாற்றப்பட வேண்டியது.
"அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தையும் உலகத் தொழிலாள வர்க்கத்தையும்
ஒன்றிணைக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத் திட்டம் மிக முக்கியமானது. ஈராக்கிற்குள், அமெரிக்க
ஆக்கிரமிப்பின் காரணமாக பல அப்பாவி மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். ஈராக்கிலிருந்து அனைத்து அந்நிய
துருப்புக்களையும் விலக்குவதற்கு உலக மக்கள் அனைவரும் போராட வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். அனைத்து
ஒடுக்கப்பட்ட மக்களும் சமத்துவத்தை நிலைநாட்ட அவர்களின் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட வேண்டும்."
உலக சோசலிச வலைத் தளத்தைத் தொடர்ச்சியாக வாசிக்கும் அச்சுத் தொழிலாளி
தன்கொட்டுவ விவரித்தார்: "நான் ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தை எதிர்ப்பதன் காரணமாக இந்தக் கூட்டத்திற்கு
வந்திருக்கிறேன். அமெரிக்கத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியின் பாத்திரம் பற்றி இக்கூட்டத்திலிருந்து தான் அறிந்து
கொண்டேன். யுத்தமானது மிகவும் திறமான வகையில் ஒழுங்கு செய்யப்பட வேண்டியிருக்கிறது என கெர்ரி
குறிப்பிடுகின்றார். அது புஷ்ஷிலிருந்து வேறுபட்டதல்ல.
உலகப் பொருளாதாரமானது மிகச் சிறிய அளவிலான பெரு வர்த்தகர்களால் மேலாதிக்கம்
செய்யப்படுகிறது. உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை இழந்து கொண்டிருக்கிறார்கள். ஈராக்
போரின் விளைவாக, எண்ணெய் விலைகள் ஏறுகின்றன. அது இலங்கை போன்ற வளர்ச்சி அடையா நாடுகளைப் பெரிதும்
பாதிக்கின்றது. இலாப அமைப்புமுறை ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் அப்பொழுதுதான் மக்கள் தங்களின் உரிமைகளை
வென்றெடுக்க முடியும்."
நுவான் எனும் ஆடை தைக்கும் நிறுவன தொழிலாளி கூறினார்: "ஒடுக்கப்பட்ட
மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அமெரிக்கத் தேர்தல்களில் ஒரு வேட்பாளர் இருக்கிறார் என்பதை அறிய மிக ஆர்வமாக
உள்ளது. இலங்கைக்குள்ளே ஒட்டுமொத்த செய்தி ஊடகமும் உண்மையான நிலையை மூடி மறைக்கின்றன. ஆகையால்
உண்மையை வெளியிடுவதில் இந்தக் கூட்டமானது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
"நான் ஈராக் போரை எதிர்க்கிறேன். இலங்கையில் உள்ள அனைத்து செய்தி ஊடகங்களும்
உலகில் என்ன நடக்கின்றது என்பதை மூடிமறைக்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் ஊடகங்களில் மேலாதிக்கம் செய்கின்றது.
என்ன நடக்கின்றது என்பதை அம்பலப்படுத்துவதில் உங்களது கட்சி மிக முக்கியப் பாத்திரம் வகிக்கின்றது என்று
நினைக்கின்றேன். சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகளை பற்றி அதிகம் எனக்குத்தெரியாது ஆனால் நான்
அவற்றைப் படிக்க விரும்புகிறேன்."
மகேஷ் எனும் சிலோன் ஒக்சிஜன் நிறுவன தொழிலாளி கூறினார்: "இந்த நாடான
அமெரிக்காவிற்கும் உலகிற்கும் என்ன நேர்ந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானது. போர் பற்றியும்
அமெரிக்க நிலை பற்றியும் நிறையவே நான் தெரிந்து கொண்டேன். ஈராக் மீதான போர் எண்ணெய்க்கான போர்
மற்றும் கொள்ளையிடும் போர் ஆகும். எமது வேலைத் தளத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஈராக் மீதான யுத்தத்திற்கு
எதிரானவர்கள் ஆவர்.
"சர்வதேச ரீதியாக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலம் மட்டுமே நாம்
இந்தப் போரை நிறுத்த முடியும். இந்தக் கூட்டத்திற்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் ஆகியோர்
வருகை தந்திருப்பது அத்தகைய ஒரு இயக்கத்திற்கான ஒரு நல்ல அறிகுறி ஆகும். அமெரிக்காவிலும், இலங்கையிலும் மற்றும்
ஏனைய நாடுகளிலும் ஒரு புரட்சி நடக்க வேண்டும். இலங்கையில் பல முதலாளித்துவ வர்க்க மற்றும் குட்டி முதலாளித்துவ
கட்சிகளை நாம் காண்கிறோம். ஆனால் ஒரு உண்மையான இடது கட்சியைக் கட்ட வேண்டும்."
எஸ்.சிறீகாந்த், சிலாபத்திலிருந்து வந்த ஒரு பள்ளி மாணவர், சில மாதங்களின்
முன்னர் சோசலிச சமத்துவக் கட்சியை சந்தித்தார். "அமெரிக்கத் தேர்தல் உலகம் முழுவதிலும் தாக்கத்தைக்
கொண்டிருக்கிறது. இலங்கை உள்பட, ஏனய நாடுகளின் அரசாங்கங்கள் அமெரிக்க நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட
முடிவுகளின்படியே தொழிற்படுகின்றன. இதற்கிடையில், இலங்கை ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிகளை
எதிர்கொள்கின்றது. ஆகையால் சோசலிசம் என்ன தீர்வை முன்மொழிகிறது என்பதைக் காண்பதற்கு நான் இங்கு வந்தேன்.
"பெருகி வரும் ஏழை மக்களின் பிரச்சினை வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு மட்டுமே
உரித்தானதாக நாம் நினைத்தோம். அமெரிக்காவில் உள்ள சிறிய குழு செல்வத்தின் பெரும் பங்கை எடுக்கின்றது மற்றும்
பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்று இப்பொழுது நாம் புரிந்துகொள்கிறோம்.
"எமது பள்ளித் தோழர்களில் சிலர் நாம் அரசியல் பற்றிப் பேசும்பொழுது கேலி செய்வர்,
ஆனால் அங்கு முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன என்று நாம் விளக்குவோம். நாம் எமது கல்வியை முடித்தாலும் கூட எமக்கு
எந்தவித முன்னேற்றமும் இல்லை. முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தின் காரணமாக, எமக்கு எதிர்காலத்திற்கான வாய்ப்பு
இல்லை.
"இரு கட்சிகளும் இலங்கையை 50 ஆண்டுகளாக ஆண்டு வருகின்றன. இரு கட்சிகளுமே ஒரே
விஷயத்தை செய்கின்றன. அவை சில செல்வந்தர்களின் நலனை நிறைவேற்றுகின்றன. பெரும்பான்மை மக்கள் ஒன்றையும்
பெறுவதில்லை. சோசலிசத்தைக் கட்டுவதன் மூலம் மட்டுமே பெரும்பான்மை மக்கள் தங்களின் தேவைகள் நிறைவு
செய்யப்பட முடியும்.
பி. சிவாகரன் எனும் முதலாம் ஆண்டு கலைப்புல மாணவர் விவரித்தார்: "முன்னளாள்
ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசேனுக்கு அவரது சொந்த மக்களுக்கு எதிராக இழைத்த அவரது குற்றங்களுக்காக மரண
தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறுகின்றது. அவர் அட்டூழியங்கள் புரிந்தார்தான், ஆனால் அமெரிக்கா
இந்த அழிவுகர யுத்தத்தின் மூலம் நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறது.
"பூகோளமயமாக்கலின் கீழ், அமெரிக்க பெரு நிறுவனங்கள் பின்தங்கியநாடுகளின்
வளங்களையும் மலிவான கூலி உழைப்பையும் சுரண்டுகிற அதேவேளை, அமெரிக்க இராணுவம் இந்த நாடுகளை ஈராக்கைப்
போலவே ஆக்கிரமிக்கின்றது. ஐ.நா பாதுகாப்புச்சபையில் அதன் போருக்கு ஆதரவாக அமெரிக்கா அதன் இரத்து
அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. ஒரு உண்மையான ஜனநாயக நாட்டிற்கு ஒரு இரத்து அதிகாரம் தேவை இல்லை."
அதீசா பெரேரா, எனும் 16 வயது மாணவர், அவரது தந்தை சோசலிச
சமத்துவக் கட்சியின் துண்டறிக்கையை வீட்டிற்கு கொண்டு வந்த பின்னர், கொழும்பு கூட்டத்திற்கு வருகை தந்தார்.
அமெரிக்காவில் என்ன நடக்கின்றது என்று தான் அறிய விரும்புவதாக விளக்கினார். "அமெரிக்கா ஒரு சிறந்த நாடு என்று
எங்களுக்குக் கூறப்பட்டது ஆனால் பில் வான் ஒகென் விளக்கியவாறு அமெரிக்காவில் இரு கட்சி ஏகபோகம் உள்ளது.
அங்குள்ள ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களின் கருத்துப்படி செயல்படுவதில்லை. அங்கு மிக செல்வம் படைத்தோரால்
நடத்தப்படும் ஆட்சி உள்ளது. இலங்கையைப் போல இரு முதலாளித்துவக் கட்சிகளும் நாட்டை ஆளுகின்றன."
CNN மூலம் உலக நிகழ்ச்சிகளை மிக
நெருக்கமாகத் தான் கவனித்து வருவதாக பெரேரா குறிப்பிட்டார். "அண்மையில் புஷ் கெர்ரி விவாதம், ஈராக் போர்
மற்றும் ஏனைய அமெரிக்க சர்வதேசியத் தலையீடுகள் ஆகியவற்றில் நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன். நான் புஷ்-கெர்ரி
விவாதத்தையும் கவனித்தேன். இருவரும் சேற்றை வாரி வீசுவதில் ஈடுபட்டனர் மற்றும் ஈராக் போரை
நியாயப்படுத்தினர். ஈராக் போருக்கு வாக்களித்துவிட்டு, இப்பொழுது கெர்ரி போரை விமர்சிக்கிறார்.
உலக மக்களின் 80
சதவீதம் பேர் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 14 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றனர். உலகின் மக்கள்
தொகையில், பாதிக்கும் மேற்பட்டோர் வறுமையில் வாழ்கின்றனர். இந்த சூழ்நிலைமையில் உலகின் வல்லரசால்
மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் முழு உலகிற்குமான விளைபயன்களைக் கொண்டிருக்கிறது. அவை இலங்கையின்
பிரச்சினைகளில் செல்வாக்கு செலுத்த முடியும். அமெரிக்காவில் உள்ள முதலாளித்துவக் கட்சிகள் இங்கு உள்ள
முதலாளித்துவக் கட்சிகளையே ஆதரிக்கின்றன. உலகம் முழுவமையும் முதலாளித்துவக் கட்சிகள் ஆளுகின்றன."
|