World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

US SEP presidential candidate addresses Sri Lanka meetings

"Our campaign fights to unify workers internationally"

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் இலங்கை கூட்டங்களில் உரை

''சர்வதேச ரீதியில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த எங்களது பிரச்சாரம் முன்னிற்கின்றது''

By Bill Van Auken
29 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (SEP) கொழும்பிலும், கண்டியிலும் சென்ற வார கடைசியில் இரண்டு வெற்றிகரமான கூட்டங்களை நடத்தியது. அவற்றில் சோசலிச சமத்துவக் கட்சியின் தோழமை கட்சியான அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பில்வான் ஒகென், ஈராக் போர் மற்றும் அமெரிக்கத் தேர்தல் குறித்து உரையாற்றினார். பில்வான் ஓகென் உரையின் முழுவிவரம் வருமாறு:

அமெரிக்காவில் நடைபெறவிருக்கிற ஜனாதிபதி தேர்தல் பற்றியும் ஈராக் போர் பற்றியும் இங்கே இலங்கையில் பேசுவதற்கு வாய்ப்பு தரப்பட்டதற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையிலும், அமெரிக்காவிலும்கூட சோசலிச சமத்துவக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை அமெரிக்காவின் வாக்குப்பதிவு நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ஐரோப்பாவிலும் தெற்கு ஆசியாவிலும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிப்பதற்கு ஏன் முடிவு செய்தது என்ற கேள்வி எழக்கூடும் என்பதை நான் அறிவேன்.

கொழும்பு ஊடக நிபுணர் ஒருவர் இங்கே பத்திரிகைகள் மூலம் நான் அதிக அளவிற்கு விளம்பரப்படுத்தப்படுவேன் என்று கூறியிருக்கிறார். இதில் ஒரு தெளிவான கேள்வி தொக்கி நிற்கிறது. ஒரு அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் இலங்கை ஊடகங்களில் தனக்கு அதிக விளம்பரம் கிடைக்கும் என்று ஏன் எதிர்பார்க்கவேண்டும்? இங்கே நான் பேசுவதால் எனக்கு கூடுதலாக வாக்குகள் எதுவும் கிடைக்கப்போவதில்லை.

அது காரணமல்ல, எனது கட்சியின் சர்வதேசிய முன்னோக்கிலிருந்துதான் நான் வெளிநாடுகளில் சென்று பேசவேண்டும் என்ற முடிவு வந்திருக்கிறது. 2004 தேர்தலில் எங்களது பிரச்சாரத்தின் மிக முக்கியமான பணியே தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு போராடுவது மற்றும் அந்த பிரச்சாரத்தில் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களது நலன்களை முன்னிலைப்படுத்துவது.

சோசலிச சமத்துவக்கட்சியின் தேர்தல் முன்னோக்கு குறிப்பிட்டிருப்பதைப்போல்:

''அமெரிக்காவின் பூகோளரீதியான தாக்கத்தை கருத்தில் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு நாட்டின் குடிமக்களையும், பங்கெடுத்துக்கொள்ள அனுமதிப்பது முற்றிலும் பொருத்தமானதாகவே இருக்கும்''.

உலகம் முழுவதிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களுக்கு ஏகாதிபத்தியம் செல்லும் பாதையும் மற்றும் அமெரிக்கா ஜனாதிபதிகள் எடுக்கின்ற முடிவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் உண்மையிலேயே வாழ்வா? சாவா? என்ற நிலையைத்தான் முன்னிறுத்துகிறது. அதன் சர்வதேச ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்று கூறப்படுவதன் மூலம் அமெரிக்கா உலகிலேயே மிகவும் உறுதியற்ற நிலையை விளைவிக்கும் சக்தியாக மாறிவிட்டது. ஈராக்கில் அமெரிக்க அரசாங்கம் நடத்திவருகின்ற போர் அப்பட்டமான காலனித்துவ நாட்களை விட படுமோசமாக போய்கொண்டிருக்கிறது. அதேபோன்று தற்காப்பு போர்களை நடத்துவதற்கு தனக்கு உரிமையுண்டு என்று வலியுறுத்தி வருகிறது. தற்காப்பு போர்கள் என்றால் ஆத்திரமூட்டல் எதுவுமில்லாமல் எங்கே விரும்புகிறதோ அங்கு போர் தொடுக்கலாம் இது முன்னாள் காலனித்துவ நாடுகள் அனைத்திலும் மற்றும் உண்மையிலேயே உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு நேரடியான அச்சுறுத்தலாகும்.

ஏற்கனவே இதன் தாக்கங்கள் மிகப்பரவலாக உணரப்படுகின்றன. எண்ணெய் விலைகள் மிக வேகமாக உயர்ந்து கொண்டிருப்பதால் திடீரென்று மக்களை வாட்டுகின்ற வகையில் இங்கே இலங்கையிலும், பிற நாடுகளிலும் வாழ்க்கைச்செலவு உயர்ந்துகொண்டு வருகிறது. இது அமெரிக்க அரசாங்கம் பாரசீக வளைகுடாவில் கண்மூடித்தனமாக மேற்கொண்டிருக்கும் இராணுவமயமாதல் நடவடிக்கைகளோடு நேரடியாக இணைந்துள்ளது.

அமெரிக்க அரசாங்கமும் அது ஆதிக்கம் செலுத்தும் சர்வதேச அமைப்புகளான சர்வதேச நாணய நிதியமும் மற்றும் உலக வங்கி ஆகிய இரண்டு தரப்பினரும் கட்டளையிடுகின்ற பொருளாதார சிக்கன கொள்கைகளுக்கு இலங்கை போன்ற நாடுகளின் அரசாங்கங்கள் கட்டுப்படுகின்றன. அரசாங்கம் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறினாலும் அந்த சிக்கன நடவடிக்கை தொடர்ந்து நீடிக்கின்றன. ஏனென்றால் அதனுடைய விளைவுகள் வேறு எங்கோ எடுக்கப்பட்ட அரசியல் முடிவினால் பிரதானமாக வாஷிங்டனில் எடுக்கப்பட்ட முடிவினால் நீடித்துக்கொண்டிருக்கின்றன.

எனவே நாங்கள் இந்த தேர்தலில் உங்களுக்கு ஒரு வாக்கு வேண்டும் என்று சொல்வது மற்றும் ஒரு வேட்பாளராகிய நானே உங்களது ஆதரவிற்கு கோரிக்கை விடுப்பது அதன் பயன்கருதியல்ல. எங்களது கட்சியின் சர்வதேசியவாதம் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் உண்மையான நிலைமையிலும் மற்றும் உலக அரசியலிலும் மற்றும் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள பொதுப்பிரச்சனைகளிலும் அடித்தளமாக கொண்டுள்ளது.

அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கோ அல்லது உலகின் பிறபகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கோ தேசிய தீர்வு என்பது இல்லை. பன்னாட்டு பெரிய நிறுவனங்கள் சர்வதேச அளவில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதிலும் மிக மலிவான கூலித்தொழிலாளர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இங்கே இலங்கையிலுள்ள சுதந்திர வர்த்தக வலையங்களில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களை போன்று அமெரிக்காவிலுள்ள தொழிலாளர்களுக்கும் கூறப்படுவது என்னவென்றால்: நாங்கள் தருகின்ற ஊதியங்களையும், மற்றும் வேலைநிலைமைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் எங்களது உற்பத்தியை வேறு இடங்களுக்கு மாற்றிவிடுவோம். இதன் விளைவு சர்வதேச அளவில் உழைக்கும் வெகுஜனங்களின் வாழ்க்கைத்தரங்கள் பின்னோக்கி போய்க்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் தேசிய எல்லைகளைக் கடந்து ஒன்றுபட்டு போராட்டங்களை நடத்துவதன் மூலம் மட்டுமே முதலாளித்துவத்தை தோற்கடிக்கமுடியும். ஏகாதிபத்தியத்தின் இதயத்திற்குள்ளேயே ஏகாதிபத்தியத்தை எதிர்க்கின்ற ஒரு சக்தி உள்ளது. அதுதான் அமெரிக்க உழைக்கும் வர்க்கமாகும். ஆனால் சோசலிசத்திற்கான ஒரு பொதுவான சர்வதேச போராட்டம் நடத்தாமல் ஏகாதிபத்தியத்தை வெற்றியடைய முடியாது.

நான் இந்த நாட்டில் உரையாற்றுவது இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அழைத்திருப்பதால்தான். இலங்கையில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் நடத்திய போராட்டம் எங்களது கட்சியின் அடிப்படை சர்வதேச சோசலிச முன்னோக்கு ஆகியவற்றிற்கிடையே நீண்டமகத்தான உறவு நிலவுகிறது.

அமெரிக்க ட்ரொட்ஸ்கிசமும் இலங்கையும்

இந்த ஆண்டு இலங்கையில் நமது உலக இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அடிப்படையாக இருந்த புரட்சிகர சர்வதேச சோசலிச முன்னோக்கை நிராகரித்து லங்கா சமசமாஜ கட்சி (LSSP) 1964ம் ஆண்டு திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தினுள் நுழைந்த வரலாற்றுக்காட்டிக் கொடுப்பின் 40வது ஆண்டு நிறைவை குறிக்கிறது.

சோசலிச தொழிலாளர் கட்சி (Socialist Workers Party) அப்போது அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கமாக இருந்தது அதில் ஒரு சிறுபான்மை குழு அன்றைய அமெரிக்க அரசியல் போக்கின் அடிப்படையில் நமது கட்சியை உருவாக்கிற்று. அந்த நேரத்தில் அந்தக் கட்சித்தலைமை லங்கா சமசமாஜ கட்சி போன்ற அதே திசைவழியில் சென்றதுடன் சர்வதேச வாதத்தையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் நிராகரித்து, காஸ்ட்ரோயிசம், கெரில்லாயிசம் மற்றும் இதர தொழிலாள வர்க்கம் சாராத சக்திகள் போன்றவற்றில் மாற்றை தேடியது.

1964ல் லங்கா சமசமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு சர்வதேச அளவில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும். வரலாற்று அடிப்படையில் நான்காம் அகிலத்தோடு சம்மந்தப்பட்டிருந்த ஒரு கட்சி முதல் தடவையாக ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்தது. திரிபுவாதம் ஏகாதிபத்தியத்தின் நேரடி ஊன்றுகோலானது பகிரங்கமாக அம்பலத்திற்கு வந்தது.

அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியுள் எங்களது அரசியல் போக்கு இந்த சம்பவம் குறித்தும் சர்வதேச இயக்கத்தில் அதன் தாக்கங்கள் குறித்தும் விவாதம் நடத்தக்கோரியது. அமெரிக்க கட்சியின் தலைமை ஒரு விவாதத்திற்கு கோரிக்கை விடுத்தவர்களை கட்சியிலிருந்து தூக்கி வீசி பதில் தந்தது. அப்படி தூக்கி வீசப்பட்டவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் வரலாற்று அடிப்படையில் நீடித்திருப்பதற்கு பேணிக்காக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

ஆக இலங்கையில் ட்ரொஸ்கிச போராட்டத்தின் கசப்பான படிப்பினைகளோடு உறுதியான அடித்தளத்தில் அரசியல் சுயாதீனத்திற்கும் தொழிலாள வர்க்க சர்வதேச ஒற்றுமைக்கும் நாங்கள் நடத்துகின்ற ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் ஆற்றல் பிரிக்கமுடியாத அளவிற்கு பின்னிப்பிணைந்து கிடக்கிறது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எமது கட்சிகளுக்கிடையே நிலவுகின்ற நெருக்கமான அரசியல் ஒத்துழைப்பு நமது முன்னோக்கை அளப்பரிய முறையில் வலுப்படுத்தியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் ஈராக்கில் நடைபெற்றுவருகின்ற போர்ப்பின்னணியில் நடந்துவருகிறது. ஆக அமெரிக்க அரசியல் சர்வதேச சம்பவங்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. அப்படியிருந்தும் ஈராக் மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் வெகுஜன கொலைகள் மற்றும் பாரிய மனத்துயரங்கள் இரண்டு பெரிய வர்த்தகக் கட்சிகளான ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கிடையில் நடைபெறுகின்ற கலந்துரையாடல்களில் இடம்பெறுகின்ற தகுதியைப் பெறவில்லை.

அண்மை வாரங்களில் அமெரிக்கா ஈராக்கிய நகரமான பல்லூஜாவிலும் இதர பகுதிகளிலும் தினசரி குண்டுவீச்சுக்களை நடத்துக்கொண்டிருக்கிறது. புறநகர்களை அழிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த குடும்பங்களை அழித்து ஒழித்துவிடுகிறது. பென்டகன் இடைவிடாது அது கொல்வது 'பயங்கரவாதிகள்' என்றும் ஈராக்கிற்கு அது ஸ்திரத்தன்மையை கொண்வருவதாகவும் வலியுறுத்தி கூறிக்கொண்டு வருகிறது.

ஜோர்ஜ் W. புஷ் நிர்வாகத்தில் மற்றும் அமெரிக்க இராணுவத்தில் இடம்பெற்றுள்ள பெருமளவு உண்மையை ஒப்புக்கொள்கின்ற அதிகாரிகள் இந்த தாக்குதல்களின் உண்மையான இலக்குகள் சிவிலியன்கள் தான் என்று ஒப்புக்கொள்கின்றனர். ஈராக் எதிர்ப்புப்போராளிகளை கையளிக்க வேண்டும் அல்லது மடிய வேண்டும் என்று அவர்களுக்கு கூறப்படுகிறது. இந்த தந்திரோபாயம் 1940களில் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் நாஜிக்கள் கிளர்ச்சிக்காரர்களை நசுக்குவதற்கு பயன்படுத்திய கூட்டுத்தண்டனை முறையை நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. 1949ல் இயற்றப்பட்ட நான்காவது ஜெனீவா ஒப்பந்தம் அந்த நடவடிக்கையை போர்குற்றம் என்று அறிவித்துள்ளது.

இதைவிட மோசமான இரத்தக்களரி குற்றங்கள் தொடரவுள்ளன. ஏராளமான அமெரிக்க இறப்புகள் புஷ்ஷை தேர்தலில் பாதிக்கும் என்பதால் வாக்குப்பதிவு தினம்வரை ஈராக் நகரங்கள் மீது முழுவீச்சில் நடத்தப்படவிருக்கின்ற தரைப்படை தாக்குதல்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன என்று நிர்வாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதற்கு ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் வேட்பாளர் ஜோன் கெர்ரியின் பதில் என்ன? அவர்கள் இந்த தாமதத்தைக் கண்டிக்கின்றனர். மற்றும் போருடன் அரசியல் குறுக்கிடுவதற்கு புஷ் அனுமதிக்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர். இதன் பொருள் உடனடியாக இரத்தக்களரி தொடங்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர்.

இந்தப்போர் அமெரிக்க முதாலளித்துவத்தின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவும் அமெரிக்க ஜனநாயகத்தின் ஒரு வரலாற்று தோல்வியுமாகும். போருக்காக தரப்பட்ட இரண்டு சாக்குப்போக்குகளான ஈராக்கிடம் பேரழிவிற்குரிய ஆயுதங்கள் உள்ளன மற்றும் ஈராக் ஆட்சிக்கும் அல் கொய்தாவிற்குமிடையில் தொடர்பு இருக்கிறது என்ற இரண்டும் பொய் என்பதை புஷ் மற்றும் அவரது துணை ஜனாதிபதி டிக் செனி ஆகியோர் தவிர தற்போது மற்ற அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அமெரிக்க அரசாங்கத்தின் சொந்த அறிக்கைகளே இதை நிரூபிக்கின்றன.

போர் தொடங்குவதற்கு முன்னரே இவை அனைத்தும் தெளிவாக தெரிந்தது. நிச்சயமாக நமது இயக்கம் திரும்பத்திரும்ப அவ்வாறு கூறியதுடன் நமது வலைத் தளமான உலக சோசலிச வலைத் தளத்தின் அறிக்கைகள் இதை நிரூபிக்கும். நாம் மட்டுமல்லாது பல சுதந்திர ஆய்வாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஆயுத ஆய்வாளர்களேகூட போர் தொடங்குவதற்கு முன்னரே அமெரிக்காவின் நியாயப்படுத்தல் தவறானவை என்று கூறினர்.

புஷ் நிர்வாகத்தின் அரசியல் எதிர்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் ஜனநாயகக் கட்சியோ அல்லது அமெரிக்க ஊடகங்களோ தவறான கருத்துக்களை ஆட்சேபிக்கவில்லை அல்லது அடிப்படை உண்மையை ஆராய்வதற்கு முயலவில்லை. மாறாக புஷ்ஷின் பொய்களை திரும்பச்சொல்வதோடு மனநிறைவடைந்தனர். இந்தப் பொய்களை கிளிப்பிள்ளைகள் போல் சொல்லிக் கொண்டிருப்பவர்களின் முன்னணியில் இருந்தவர் ஜோன் கெர்ரி, அந்த மனிதர் இப்போது புஷ்ஷிற்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிற்கிறார்.

பிரதான கட்சிகள் நாடாளுமன்றம், ஊடகங்கள், அமெரிக்க நிறுவனங்கள் சுருக்கமாக சொல்வதென்றால் ஒட்டுமொத்த ஆளும் அமைப்புமுறையும் இந்த மோசடியில் உடந்தையாக இருப்பது ஒரே ஒரு உண்மையின் மூலம் விளக்கமுடியும், அது அமெரிக்க ஆளும் மேல்தட்டினர் கணிசமான அளவிற்கு உடன்பாடு கொண்டுள்ள ஒரு மூலோபாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பயன்படுகிறது. இந்த மூலோபாயம் அமெரிக்க இராணுவவலிமையை பயன்படுத்தி உலகின் கேந்திர எண்ணெய், மற்றும் எரிவாயு உற்பத்தி செய்கிற மண்டலங்களில் அமெரிக்க கட்டுப்பாட்டை நிலைநாட்ட வகைசெய்வதாகும். இது அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி சூழ்நிலைகளில் வாஷிங்டனின் மேலாதிக்கத்திற்கு உறுதிசெய்துதருகின்ற நெருக்கடியான முயற்சியாகும்.

எரிபொருள் தேவைகள் பெருகிகொண்டு வருவதாலும், கையிருப்புக்கள் குறைந்துகொண்டு வருவதாலும் எழுந்துள்ள சூழ்நிலைகளில் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு தேவைப்படுகின்ற எண்ணெய் விநியோகத்தை பாதுகாப்பாக வழங்குகின்ற வகையில் பாரசீகவளைகுடா மற்றும் காஸ்பியன் பகுதிகளின் எண்ணெய் இயற்கை எரிவாயு தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று காரணம் கூறப்பட்டது. அதே நேரத்தில் இப்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் உருவாகின்ற போட்டி நாடுகள் மீது எரிபொருள் பங்கீடுகளை வாஷிங்டன் ஆதிக்கம் செலுத்துகின்ற சூழ்நிலைகளை உருவாக்கும்.

இதன் விளைவு இரண்டாம் உலக போருக்கு பின்னர் வரலாறு காணாத ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புச்செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மனித இனத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியில் அபு கிரைபில் ஈராக் கைதிகளை அமெரிக்கத் துருப்புக்கள் சித்திரவதை செய்கின்ற அருவருக்கத்தக்க காட்சிகளும், அமெரிக்க குண்டுகளாலும், ராக்கெடுட்டுகளாலும் சிதைந்துவிட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கிடையில் இருந்த ஈராக்கியர் உடல்களை மீட்கின்ற காட்சிகளும் நிழலாடுகின்றன என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

கொடூரத்தன்மை மட்டுமல்ல ஊழல் மற்றும் அப்பட்டமான தகமைக்குறைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தலையீடு நடந்திருக்கிறது. அந்த நாட்டை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த 18 மாதங்களுக்கு பின்னரும், அமெரிக்க அதிகாரிகள் பாத்காத் நகரின் மையப்பகுதியையே கூட தங்கள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை. அது கெரில்லா தாக்குதல்கள் நடைபெறும் காட்சியாகவே நீடிக்கிறது. பெரிய நகரங்களுக்கு பாதிமின்சாரத்தைகூட பகுதிநேர மின்தடை கட்டுப்பாட்டோடு வழங்க முடியவில்லை, பொருளாதார உற்பத்தி அடிப்படை சுகாதார வசதிகள், நீர் நிலைய வசதிகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கை நடத்துவது இயலாத காரியமாக ஆகிவிட்டது.

அமெரிக்க படையெடுப்பை தொடர்ந்து சென்ற ஆண்டு வெகுஜன சூறையாடல்கள் நடைபெற்றதை தொடர்ந்து மிக அடிப்படையான தேவைகளான மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் பெரும்பாலும் சிதைந்து கிடக்கின்றன. இதற்கிடையில் அரசியல் அடிப்படையில் தொடர்புடைய பெரிய நிறுவனங்கள் திடீரென்று வருகின்ற அதிருஷ்ட இலாபங்களில் மூழ்கித்திளைக்கின்றன. பெரும்பாலும் ஈராக் சீரமைப்பிற்கென்று கூறப்பட்ட பணத்தை அவர்களே கபளீகரம் செய்து கொள்கிறார்கள்.

ஒரு குறிப்பிடத்தக்க குறுகியகாலத்திற்குள் ஈராக் மக்கள் அனைவரது விரோதத்திற்கும் வாஷிங்டன் இலக்காகி உள்ளது. இது வளர்ந்து கொண்டுவருகிற கிளர்ச்சியை சந்திக்கிறது. ஒவ்வொரு அமெரிக்க போர் பிரிவும் ஈராக்கில் ஏற்கெனவே உள்ளன, அண்மையில் ஈராக் திரும்பியுள்ளன, அல்லது மீண்டும் அங்கே அனுப்பப்படுவதற்கு தயாராகி கொண்டிருக்கின்றன. அதுதான் இன்றைய நிலவரம் அமெரிக்க இராணுவ இயந்திரம் உலகத்திலேயே உயர் வலிமைகொண்ட படை என்று கருதப்படுகிறது. 26 மில்லியன் மக்களைக்கொண்ட ஒரு வறுமைமிக்க நாட்டில் ஒரு தலையீட்டின் மூலம் அந்த இராணுவ இயந்திரம் நொறுங்கும் நிலைக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது.

கெர்ரியும் ஈராக் போரும்

அமெரிக்க அரசியல் அமைப்பின் எந்தப்பிரிவும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறவில்லை. ஜனநாயகக் கட்சிக்காரர் கெர்ரி 2002ல் போருக்கு ஆதரவாக வாக்களித்தார். அதற்குப்பின்னர் ஜனநாயகக் கட்சிக்குள் தனக்கு ஆதரவை வென்றெடுப்பதற்காக, இந்த முதலாளித்துவக் கட்சியை ஏகாதிபத்தியத்தை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக மாற்றிவிட முடியும் என்று தவறான அடிப்படையில் நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு போர் எதிர்பாளராக பாவனை காட்டினார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நியமனத்தை வெற்றெடுத்தபின்னர் எதிர்ப்பு நடிப்பை கைவிட்டுவிட்டார்.

ஆகஸ்டில், ''இப்போது நாம் அறிந்திருப்பதை, அப்போதே நான் தெரிந்துகொண்டிருந்தால் கூட''- அதாவது பேரழிவிற்குரிய ஆயுதங்கள் இல்லை அல்லது பயங்கரவாதி தொடர்புகள் இல்லை என்றாலும் தான் புஷ்ஷிற்கு ஈராக் மீது படையெடுக்கும் அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை ஆதரித்திருப்பேன் என்று அவர் அறிவித்தார். இப்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை ஆழமாக ஆராய வேண்டும். அதற்கு தகுதியுள்ளது தான் அந்த அறிக்கை. புஷ்ஷிற்கு போர் புரிவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதே அத்தகைய ஆயுதங்கள், அத்தகைய தொடர்புகள் இருக்கின்றன என்ற தெளிவான அடிப்படையில் தான்.

இதில் தெளிவான ஒன்றுக்கொன்று தொடர்புடைய அரசியல் நிலைப்பாடு என்னவென்றால் இரண்டு பெரிய முதலாளித்துவக் கட்சிகளும் அப்போதும் மற்றும் இப்போதும் இந்தக் கூற்றுக்கள் பொய்யானவை, முடிவற்ற பயங்கரவாதத்தின் மீதான போரைப்போன்று அமெரிக்க மக்களை அச்சுறுத்தி, மிரட்டி ஏகாதிபத்திய போர் முயற்சிக்கு அடிபணியச்செய்வதற்கு சாக்குப்போக்காக வடிவமைக்கப்பட்டவை என்பதை அறிந்தே இருக்கின்றன.

கெர்ரியின் பிரச்சாரம் போரை எதிர்ப்பதற்கு ஒரு வழியை காட்டும் என்று அப்பாவித்தனமாக நம்பியவர்களிடையே அவரது அறிக்கை அதிர்ச்சியை உருவாக்கியது. சென்றமாதம் தனது போக்கை மீண்டும் ஒருமுறை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் கெர்ரிக்கு ஏற்பட்டது. மேலும் போருக்கு செல்லவேண்டும் என்ற முடிவை கண்டித்தார். வெறும் தேர்தல் கண்ணோட்டம் என்ற ஒரு அடிப்படையில் பார்த்தால் கூட புஷ் நிர்வாகத்தின் ஈராக் கொள்கைகளுக்கு அறைகூவல் விடுக்கின்ற முயற்சி இல்லாமல் நடத்தப்படுகின்ற தேர்தல் பிரச்சாரம் ஒருவகை அரசியல் தற்கொலையாக ஆகும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கருத்துக்கணிப்பில் கெர்ரியின் செல்வாக்கு அதாள பாதளத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதில் மிகக்கடுமையான வீழ்ச்சி ஜனநாயகக் கட்சி வேட்பாளரை வலுவாக ஆதிரிக்கிறோம் என்ற உறுதிப்பாட்டோடு நின்ற மக்களிடையே கெர்ரியின் செல்வாக்கு வீழ்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

என்றாலும் இதில் மிக அடிப்படையான உண்மை என்னவென்றால் ஆளும் மேல்தட்டிற்குள்ளேயே புஷ் நிர்வாகம் ஈராக் போரை கையாளும் விதம் குறித்து கருத்துவேறுபாடுகள் தோன்றிவிட்டன. புஷ் போர் நடத்துகிற முறை அமெரிக்க ஏகாதிப்பத்தியத்தை ஒரு பேரழிவிற்கு இட்டுச்செல்கிறது என்று ஆளும் வர்க்கத்தில் அச்சுகின்ற பிரிவுகளின் கருத்துக்களை கெர்ரியின் தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது. அப்போதைக்கப்போது புஷ் நிர்வாகம் நாட்டை தவறான அடிப்படையில் போருக்கு இட்டுச்சென்றுவிட்டது என்று கண்டிப்பதுடன் அவருக்கெதிராக தெரிவிக்கப்படும் கண்டனங்கள் புஷ் தேவையான முன்னேற்பாடுகளை இராணுவ அடிப்படையில் அல்லது இராஜதந்திரரீதியாக செய்யத்தவறிவிட்டார் என்பதை மையப்படுத்துவதாக அமைந்திருப்பதுடன் புஷ் -நிர்வாகம் ஆக்கிரமிப்பில் தவறாக நடந்துவிட்டது என்பதையும் மையப்படுத்துவதாக உள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் கெர்ரி போர் தேவையற்றது என்று கூறியிருக்கிறார். மற்றும் நிர்வாகம் அமெரிக்க மக்களுக்கு பொய்சொல்லிவிட்டதென்றும் சொல்லியிருக்கிறார். சர்வதேச சட்டத்தின் தெளிவான வரையறையினுள் தவறான சாக்குப்போக்குகள் அடிப்படையில் தொடுக்கப்படுகிற ஒரு தேவையற்ற போர் ஒரு போர் குற்றம்தான். அத்தகைய ஒரு ஆக்கிரமிப்புப்போர் தொடக்கப்பட்டது ஒரு முதன்மை அடிப்படை என்ற வகையில் ஜேர்மன் நாஜிக்கள் மீது நூரம்பேர்க்கில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் தூக்கில் இடப்பட்டார்கள்.

கெர்ரி அத்தகைய முடிவிற்கு வரவில்லை மற்றும் அத்தகைய ஒப்புநோக்கு எதையும் செய்யவில்லை. மாறாக தான் மிகப்பயனுள்ள வகையில் போர்புரிய முடியும் என்ற அடிப்படையில் அவர் தனது கண்டனங்களை தெரிவிக்கிறார். ''வெளியேறுவது பற்றி நான் பேசவில்லை, வெற்றி பெறுவது பற்றி நான் பேசுகிறேன்'' என்று அவர் புஷ் உடன் நடந்த கலந்துரையாடலில் சொன்னார். தனது பதவிக் காலத்தில் முதல் நான்காண்டு பதவிக்காலம் முழுவதும் அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கில் இருக்கும் என்று அவர் கோடிட்டுக்காட்டினார். அதே நேரத்தில் அமெரிக்க இராணுவத்திற்கு மேலும் 40,000 துருப்புக்களை சேர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க இராணுவத்தின் மிக உயர்ந்த கொலைப்படைகளான சிறப்புப்படைகளின் அளவை இரட்டிப்பாக்கப்போவதாகவும் கூறினார்.

ஈராக் போர் தொடர்பாக கெர்ரியின் விருப்பமான கோரிக்கைகளில் ஒன்று ''தோல்வி என்பது ஓர் மாற்றீடல்ல'' என்பதாகும். அது மாற்றீடல்ல என்பதை ஒத்துக்கொள்கின்றோம். ஆனால் எவ்வளவிற்கு விரைவாக வருகின்றதோ அவ்வளவிற்கு நல்லது. நாளை, ஈராக்கில் அமெரிக்காவின் கட்டுப்பாடு நிலை நிறுத்தப்படுமானால் அமெரிக்காவிலும், சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்திற்கு படுமோசமான விளைவுகள் ஏற்படும் அத்தகைய ஒரு வெற்றி அதைவிட மோசமான இரத்தக்களரி தலையீடுகளுக்குத்தான் பாதை அமைத்துத்தரும். இறுதியாக புதிய ஒரு உலகப்போரில் முடிந்துவிடும்.

சோசலிச சமத்துவக் கட்சி விடாப்பிடியாக இந்தப்போருக்கெதிராக பிரச்சாரம் செய்துவருகிறது. ஈராக்கிலிருந்து அனைத்து அமெரிக்க துருப்புக்களும் உடனடியாகவும், நிபந்தனை இன்றியும் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்று எங்களது வேட்பாளர்கள் மட்டுமே கோருகின்றனர்.

ஒவ்வொரு மாகாணத்திலும் எங்களது வேட்பாளர்கள் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்கு நாங்கள் போரிட்டோம் இந்தக் கோரிக்கைக்கு வலுவான ஆதரவை நாங்கள் வென்றெடுத்திருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களது கையெழுத்துக்களை சட்டத்தின் தேவைகளை ஒட்டி திரட்டியதன் மூலம் ஈராக்கில் தங்களது உறவினர்களை போர்வீரர்களாக அனுப்பியிருப்பவர்கள் இந்தப்போரை முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என்று கூற மற்றும் அதற்காக எங்களை ஆதரிக்க வேண்டுமென்று கூறுகின்ற நிலையை உருவாக்கியிருக்கிறோம்.

சில கருத்துக்ணிப்புக்கள் அமெரிக்க மக்களில் பாதிப்பேர் படைவிலக்கத்தை ஆதரிக்கிறார்கள் என்று கோடிட்டுக்காட்டியுள்ளன. அதே நேரத்தில் இரண்டு பெரிய முதலாளித்துவக் கட்சிகளில் எதுவும் அல்லது வெகுஜன ஊடகங்களில் எந்தக்குரலும் அத்தகைய ஆலோசனையை கூறவில்லை. போருக்கு எதிராக நிலவுகின்ற இந்த பரவலான எதிர்ப்பு இப்போது அமெரிக்காவில் நிலவுகின்ற இருகட்சி கட்டமைப்பினுள் எதிரொலிக்கவில்லை என்பதுதான் நடப்புத் தேர்தலில் தெளிவாக எடுத்து வைக்கப்படும் அம்சங்களில் ஒன்றாகும்.

நாங்கள் பிரச்சாரம் செய்கின்ற ஒவ்வொரு பகுதியிலும் இந்த அரசியல் கட்டமைப்பின்மீது ஆழமான விரக்தி உணர்வை நாங்கள் சந்திக்கிறோம். மிகப்பெரும்பாலான மக்களது உணர்வுகள் அந்தக் கட்டமைப்பினுள் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மற்றும் ஏறத்தாழ ஒவ்வொரு பிரச்சனையிலும் அடிப்படையில் உடன்படுகின்ற இரண்டு கட்சிகள் மிகக்கடுமையாக மேலாதிக்கம் செலுத்துகின்றன.

இங்கே இலங்கையில் 20 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள், நாடாளுமன்றத்தில் ஏறத்தாழ ஒரு டஜன் கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருக்கின்றனர். இந்த உண்மையை ஆராய்வது பயனுள்ளது. அப்படியிருந்தும் அமெரிக்காவில் ஏறத்தாழ 300 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள் இரண்டு கட்சிகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளன.

இதனுடைய விளைவு அரசியல் கட்டமைப்பிலிருந்து பொதுமக்கள் மிக ஆழமாக விலகி நிற்கின்றனர். 2000ல் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுள்ளவர்களில் 50 சதவீதத்திற்கும் குறைந்தவர்கள்தான் வாக்குச்சாவடிக்கு சென்றனர். பொதுமக்கள் தேர்தல்களில் பங்கெடுத்துக்கொள்வது ஒரு நாட்டின் சமூக மற்றும் அரசியல் ஆரோகியத்திற்கு ஒரு அளவுகோலாகும். அந்த அளவுகோலின்படி பார்த்தால் அமெரிக்கா உலகிலேயே 136 ஆவது இடத்தில் இருக்கிறது. வறுமையில் வாடுகின்ற ஆபிரிக்க நாடுகளான Chad மற்றும் Botswana நாடுகளுக்கு நடுவில் அமெரிக்காவின் தரம் வருகிறது.

2000 தேர்தலில் வாக்குச்சாவடிகளுக்கு சென்ற 50 சதவீத வாக்காளர்களில் பாதிக்கும் குறைவானவர்கள்தான் புஷ்ஷிற்கு வாக்களித்தனர். அமெரிக்க அரசியல் கட்டமைப்பின் மிக கொடூரமான ஒரு அம்சம் என்னவென்றால் இப்போது பொதுமக்களது வாக்களிப்பில் தோல்வியடைந்த ஒரு வேட்பாளர் வெற்றிபெறுவதுதான். இது 2004 தேல்தலிலும் திரும்ப நடக்கலாம்.

2000 தேர்தலில் அமெரிக்க உச்சநீதிமன்றம் இந்தக் கட்டுக்கோப்பிற்கு பாதுகாப்பளிக்கின்ற வகையில் வந்தது. அது அமெரிக்க மக்கள் தங்களது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு அரசியல் சட்டப்படி எந்தவிதமான உரிமையும் படைத்தவர்கள் அல்ல. அமெரிக்க மாகாணங்களின் சட்டப்பேரவைகள்தான் அந்த மக்களுக்காக முடிவு செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. அந்த நேரத்தில் நாங்கள் பகிரங்கமாக ஒரு தேர்தல் களவாடப்பட்டதற்கு எதிராக அமெரிக்க அரசியல் கட்டமைப்பினுள் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவும் ஜனநாயக உரிமைகளை தற்காத்து நிற்பதற்கு தவறிவிட்டது மற்றும் இது அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை குறிப்பதாகும் என்று கூறியிருந்தோம்.

அதனுடைய விளைவு மூன்றரை ஆண்டுகள் இடைவெளியில் ஒரு அரசாங்கம் இரண்டு ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தியது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகக் கடுமையான தீவிரமாக சிவில் உரிமைகள் மீது அந்த அரசாங்கம்தான் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லாமல் விசாரணைகள் நடத்தாமல் நீதிமன்ற விசாரணைகள் இல்லாமல் அல்லது வக்கீல்களை வைத்துக்கொள்ளும் உரிமை இல்லாமல் அமெரிக்க ஜனாதிபதி அவர்கள் 'எதிரி போராளிகள்' என்று தீர்ப்பளிக்கின்ற அடிப்படையிலே மட்டும் -எதிரிப் போராளிகள் என்ற சொல் சர்வதேச சட்டத்தில் பொருளற்றது- அமெரிக்க குடிமக்களையும் குடிமக்கள் அல்லாதவர்களையும் சிறையில் அடைக்க உரிமையை எடுத்துக்கொண்ட அகந்தையான போக்கு உட்பட இந்தத் தாக்குதல்களில் அடங்கும்.

இந்த அரசாங்கம் இஸ்லாமிய அரபுநாடுகள் மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து குடியேறிய தொழிலாளர்களை கொடூரமாக பழிவாங்குகிற முறையில் எந்தவிதமான சான்றும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்தது. சிறிய குடியேற்ற சட்ட குற்றங்களுக்காக சிலரை நீண்டகாலத்திற்கு சிறையில் அடைத்தது. மற்றவர்கள் போக்குவரத்து விதிகளை மீறினார்கள் என்பதற்காகவே சிறையில் அடைத்தது. பல வழக்குகளில் ஆறுமாதங்கள் அல்லது அதற்கு மேல் அவர்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. அது சட்டத்தை பகிரங்கமாக மீறுகின்ற நடவடிக்கையாகும். அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி நாடுகடத்தப்படும் முன்னர் சிறைகளில் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

எங்களது கட்சி இந்த அலையலையாக நடத்தப்பட்ட வழக்குகளை கண்டித்தது. அம்பலப்படுத்தப் பணியாற்றியது, குடியேற்றவாசிகளின் உரிமைகளை பாதுகாத்தது. அந்த நேரத்தில் இன்றைக்கும் குடியேற்றவாசிகளுக்கு எதிராக எடுக்கின்ற அதே நடவடிக்கைகளை நாளை ஒட்டுமொத்த தொழிலாள வர்கத்திற்கும் எதிராகவே அரசாங்கம் எடுக்கும் என்று எச்சரித்தோம். உண்மையிலேயே இரண்டு அமெரிக்க குடிமக்கள் ஏற்கெனவே எதிரிப்போராளிகள் என்று கருதப்பட்டு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

களவாடப்பட்ட தேர்தல் அமெரிக்க மக்களில் மிகப்பெரும் பணக்காரர்களாக இருக்கிற ஒரு சதவீத மக்களுகாக மிகப்பெரும்பாலான ஏனையோருக்கு விரோதமாக வெட்கக்கேடான முறையில் அந்த ஒரு சதவீத செல்வந்ததட்டின் நன்மைக்காக பணியாற்றுகின்ற ஒரு அரசாங்கத்தை உருவாக்கியிருக்கிறது. இது செல்வந்தர்களுக்காக செல்வந்தர்களால் உருவாக்கப்பட்ட முதலாளித்துவ அரசாங்கம்தான். இந்த அரசாங்கம் வங்கிகள், நிறுவனங்கள், மற்றும் பணக்கார மேல்தட்டினர் ஆகியோருக்கு ஒரு வகையான நலன்களை வழங்குகிறது. அதே நேரத்தில் மிகப்பெரும்பாலான உழைக்கும் மக்களை முதலாளித்துவ சுதந்திர சந்தை சூறையாடல்களுக்கு இரையாகிவிட்டது.

வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் கூட அதன் அமெரிக்க நிதியாதிக்க குழுவின் இரும்புப்பிடி சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக உள்ளது. கெர்ரி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அமெரிக்காவின் மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர் அவருடைய அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 750 மில்லியன் டொலர்களுக்குமேலாகும். ஒப்புநோக்கும்போது புஷ் ஏழைதான், அவரது சொத்து மதிப்பு 18 மில்லியன் டொலர்கள்தான். இரண்டு கட்சிகளின் பிரச்சாரத்திற்கும் நிதியளிக்கும் அதே நிதிநலன்களை கொண்ட நிறுவனங்கள் தான் கெர்ரி மற்றும் புஷ்ஷிற்கு நன்கொடைகளை தருகின்ற நிறுவனங்களாகும். அப்பட்டியலில் முதன்மை இடத்தை பெற்றுள்ள பத்து நிறுவனங்களும் நன்கொடையாளர்களில் நான்கு மிகப்பெரிய அமெரிக்க நிதி நிறுவனங்களான சிட்டிகுரூப், கோல்ட்மேன்சாச், மார்கன்ஸ்டான்லி மற்றும் யு.பி.எஸ்- ஏ.ஜி நிறுவனம் (Citigroup, Goldman Sachs, Morgan Stanley, UBS-AG) ஆகும்.

அமெரிக்காவில் சமூக துருவப்படுத்தல்

அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இடையீடு எதுவுமில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கின்ற தீவர சமூக துருவப்படுத்தலின் அரசியல் எதிரொலிதான் அத்தகைய வேட்பாளர்கள் தேர்வும் அவர்களுக்கு அதே வால்ஸ்ரீட் நிதிஆதிக்கத்தினர் ஆதரவு தருவதும் ஆகும். இன்றைய தினம் நிறுவனங்களின் இலாபங்கள் தேசிய பொருளாதாராத்தில் மிக உயர்ந்த பங்கை பெறுகின்றன. 1929ல் நடைபெற்ற பாரிய பொருளாதார சரிவு காலத்திலிருந்து அரசாங்கம் பதிவு செய்துள்ள புள்ளிவிவரங்களின் படி ஊழியர்கள் வீட்டுக்கு கொண்டு செல்லும் ஊதியத்தின் அளவு தற்போது படுமோசமாக வீழ்ச்ச்சியடைந்திருக்கிறது.

அண்மையில் Forbes சஞ்சிகை குறிப்பிட்டிருப்பதைப்போல் அந்த சஞ்சிகை வெளியிட்டுள்ள 400 மிகப்பெரிய பணக்கார அமெரிக்கர்கள் பட்டியலில் பில்லியனர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றனர். 750 மில்லியன் டொலர்களுக்கும் குறைந்த சொத்து உள்ளவர்கள் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இவர்கள் அனைவரையும் சேர்த்து கணக்கிட்டால் அவர்களது ஒட்டுமொத்த சொத்துகளின் மதிப்பு ஒரு திரில்லியன் டாலர்களாகும். இது கனடாவின் மொத்த தேசிய உற்பத்தியை விட அதிகமாகும்.

இதற்கிடையில் ஏறத்தாழ 450 மில்லியன் அமெரிக்கர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் அமெரிக்க உழைக்கும் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் ஏறத்தாழ கால்வாசிப்பேர். இந்தப்பிரிவு மிக வேகமாக வளர்ந்து கொண்டுவருகிறது. புஷ் நிர்வாகத்தின் கீழ் 1.6 மில்லியன் வேலைவாய்ப்புக்கள் பறிபோய்விட்டன. நீண்டகாலமாக வேலையில்லா திண்டாட்டத்தில் வாடுவோர், வேலையற்றோருக்கான அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி முடிந்துவிட்டவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிட்டது. அரசாங்க பணியை விரும்பாத ஊழியர்கள் என்று வர்ணிக்கின்ற கண்ணியமான ஊதியம் தருகின்ற எந்தவேலையும் கிடைக்கவில்லையென்று முயற்சியை கைவிட்டு விட்டவர்கள் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புக்கள் ஏற்கனவே ஒழித்துக்கட்டப்பட்டுவிட்ட வேலை வாய்ப்புக்களை விட குறைந்த ஊதியம் தருபவை 90 சதவீதமான இத்தகைய வேலைள் குறைந்த ஊதிய தொழில்களை சார்ந்தவை. அவற்றில் 1/3 பங்கு காவலர்கள், தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் விரைவு உணவகங்களில் பணியாளர்கள் ஆகும்.

மேலும் 45 மில்லியன் மக்களுக்கு தனியார் சுகாதார காப்பீடு இல்லை. அமெரிக்காவில் இது அவசிய தேவையாகும் ஏனெனில் அரசு மருத்துவமனை முறை ஏறத்தாழ அமெரிக்காவில் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது.

இந்த வகையில் ஜனநாயகக்கட்சி புஷ்ஷிற்கு மாற்று எதையும் தரவில்லை. கெர்ரி முகாம் அடையாளபூர்வமாக சுற்றுக்கு விட்ட சுகாதார சேவை, கல்வி மற்றும் இதர சீர்திருத்தங்கள் எல்லாம் மாயை தான். ஜனநாயகக் கட்சி நிதிநிர்வாக சிக்கனத்தில் உறுதியாக உள்ளது. அவர்கள் ஏற்கனவே 400 பில்லியன் டொலர்களுக்குமேல் சென்று கொண்டிருக்கின்ற அரசாங்க நிதிப்பற்றாக்குறையை நான்கு ஆண்டுகளுக்குள் பாதியாக குறைத்துவிட உறுதிமொழி தந்திருக்கின்றனர். அண்மையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் ஒரு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஒரு ஜனநாயககக்கட்சி நிர்வாகம் தந்துள்ள ஏதாவதொரு உறுதிமொழி பற்றாக்குறை குறைப்பு நடவடிக்கையோடு மோதுகின்ற முறையில் அமையுமானால் அந்த உறுதிமொழிகளை கைவிட்டு விடுமென்று அறிவித்தார்.

அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும், உழைக்கும் மக்களை பீடித்துக்கொண்டுள்ள பாரிய பிரச்சனைகளில் எதையும் சமூக ஏற்றத்தாழ்வுகள் எதிர்நோக்கியுள்ள வரம்பிற்கு அப்பால் தீர்த்துவைக்க முடியாது. அந்தசமூக ஏற்றத்தாழ்வுகள் மிக முக்கியமான ஓர் அம்சமாகும். அதில் அமெரிக்க நிதி ஆதிக்க மேல்தட்டினர் மிகப்பெருமளவில் செல்வம் குவிப்பதும், உலக பொருளாதாரத்தை தனது நிதி நலன்களுக்கு அடிபணிந்து செல்ல செய்வதும் அடங்கியிருக்கின்றது.

எனவேதான் தொழிலாள வர்க்கத்திற்கு சமூகத்தை புரட்சிகர சோசலிச மாற்றத்திற்கு உள்ளாக்கும் ஓர் திட்டத்தை கையில் ஏந்தி சுயாதீனமான ஓர் அரசியல் இயக்கத்தை உருவாக்குவதற்காக நாங்கள் போராடி வருகிறோம்.

நாங்கள் எட்டு மாகாணங்களில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்களிக்கும் தகுதியுடைய மக்களின் ஆதரவை கணிசமாக வெற்றெடுத்திருக்கிறோம் எங்களது வேட்பாளர்களை வாக்குச்சீட்டில் சேர்த்திருக்கிறோம். ஆரம்பத்திலிருந்தே எங்களது பிரச்சாரத்தில் இந்த தேர்தலில் நாங்கள் பெறுகின்ற வாக்கு குறித்து நிதர்சனமான உண்மைகளை கூறிவருகிறோம். நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் கண்டிப்பாக குடியரசுக் கட்சிக்காரர்கள், ஜனநாயகக் கட்சிக்காரர்களை தவிர்ந்த எந்த வேறு வேட்பாளரையும் விலக்கி வைத்துக்கொண்டேயிருக்கின்றன. எங்களிடம் குறைந்தளவிற்கே நிதியாதாரங்கள் உள்ளன. குறிப்பாக இரண்டு பெரிய வர்த்தக் கட்சிகளும் மிகப்பெரும் எடுப்பிலான விளம்பர பிரச்சாரங்கள் மூலம் அரசியல் சூழ்நிலை நச்சுத்தன்மையுள்ளதாக்குவதற்கு பில்லியன் கணக்கான டொலர்களை செலவிட்டுக் கொண்டிருக்கின்றன.

அப்படியிருந்தாலும் இந்த இரண்டு கட்சிகளும் எங்களது பிரச்சாரத்தை மிகக்கடுமையாக எடுத்துக்கொள்கின்றன. குறிப்பாக ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இடதுசாரி தரப்பிலிருந்து அமெரிக்காவில் நியாயமான சோசலிச மாற்று உருவாவது ஒருபக்கமிருந்தாலும் எந்த சவாலுக்கும் மிகத்தீவிரமான அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்.

எங்களது தோழர் ரொம் மக்கமன் மேற்கொண்டுள்ள பிரச்சாரம் படிப்பினையூட்டும் ஒரு உதாரணமாகும். அவர் மாகாண சட்டசபைக்கு போட்டியிடுகிறார். அது துவக்கநிலை அரசியல் பதவி என்றுதான் வர்ணிக்க முடியும். ஒரு மாநிலத்தில், ஒரு மாவட்டத்தில் பதவியில் இருக்கிற ஜனநாயகக் கட்சி உறுப்பினருக்கு எதிராக போட்டியிடுகிறார். இதற்கு ஜனநாயகக் கட்சிக்காரர்கள் முழுவீச்சில் அவரை வாக்குச்சீட்டிலிருந்து நீக்குவதற்கு முயன்றார்கள் எங்களது நியமன மனுக்களை ஆட்சேபிப்பதற்காக தலைநகரிலிருந்து மாகாண ஊழியர்களை பல நாட்கள் பிராந்தியத்திற்கு அனுப்பினார்கள்.

எங்களது கட்சி வாக்குப்பதிவு பட்டியலில் இடம்பெறவேண்டும் என்று கோரி மனுக்களில் கையெழுத்திட்ட வாக்காளர்களில் நூற்றுக்கணக்கான கையெழுத்துக்களை அவர்கள் ஆட்சேபித்தனர். தேர்தல் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அலுவலக செயலாளர் ஒருவரது கையெழுத்தே ஆட்சேபிக்கப்பட்ட கையெழுத்துகளில் இடம்பெற்றிருப்பதை அவர் பார்த்து அதை சரிபார்த்து அவரே கையெழுத்திட்டதாக கூறிய பின்னரும் ஜனநாயகக் கட்சி அதிகாரி அதைப்பற்றி தான் கவலைப்படவில்லை என்றும் அந்த அதிகாரியின் கையெழுத்தையே ஆட்சேபிப்பதாகவும் கூறினார்.

இல்லினோய் வாக்களார்கள் ஆதரவினாலும், உலகம் முழுவதிலும் இருந்து தெரிவிக்கப்பட்ட சகோதரத்துவ உணர்வுகளாலும் இந்த ஜனநாயக விரோத ஆணவ நடவடிக்கையை முறியடித்தோம். ஆனால் இன்னமும் ஓகியோவில் வாக்குப்பதிவு பட்டியலில் இருந்து எங்களது வேட்பாளரை நீக்குவதற்கு அதே போன்ற முயற்சி நடப்பதை எதிர்த்துப்போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஓகியோ மிகக்கடுமையான போட்டி நடக்கின்ற மாகாணங்களில் ஒன்று.

எங்களை பொறுத்தவரை இந்த ஆவேசமான எதிர்ப்பு வரவிருக்கிற சம்பவங்களுக்கு ஒரு சமிக்கையாகும். ஆளும் மேல்தட்டினர் தங்களது சொத்த அரசியல் கட்டுக்கோப்பின் மீதே நம்பிக்கையை இழந்து வருகின்றனர். தாங்கள் கால் பதித்துள்ள அரசியல் அடித்தளம் ஆடிக்கொண்டிருப்பதாக உணர்கின்றனர். ஒரு அரசியல் மாற்று உருவாவதை தடுத்து நிறுத்துவதற்கு தீவிரமாக முயன்றுவருகின்றனர்.

எங்களது பிரச்சாரம் அமெரிக்காவில் இடதுசாரிகள் என்றழைக்கப்படுகிற சக்திகளிடமிருந்தும் கூட எதிர்ப்பை சந்திக்கிறது. அவர்கள் புஷ்ஷை தவிர வேறு எவருமாக இருந்துவிட்டு போகட்டும் என்ற கோழைத்தனமான முழக்கத்தின் கீழ் தங்களை ஜனநாயகக் கட்சிக்கும், கெர்ரிக்கும் அடிபணிந்து நடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். அவர்கள் நவம்பர் 2 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவற்காக எல்லா அரசியல் பிரச்சனைகளையும் ஒதுக்கிவைத்துவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கூறுகின்றனர்.

இந்த இடதுசாரிகள் எவரும் கெர்ரியின் திட்டத்தை ஒரு கடுமையான ஆய்விற்கு உட்படுத்தவில்லை. அவரோடு ஆட்சியில் யார்? துன்பத்தை குறைவாக அனுபவிக்கப்போகிறார்கள்? அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்பது பற்றி அவர்கள் அக்கறைப்படவில்லை. மாறாக, அங்குள்ள பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுபவர்களை தானே வெற்றிகொள்ளப்போவதாக கெர்ரி உறுதிமொழியளித்திருக்கிறார்.

அதனால் பாலஸ்தீன மக்களுகெதிரான இஸ்ரேலின் கொடூரமாக ஒடுக்குமுறைக்கு அமெரிக்க ஆதரவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? ஷரோன் அரசாங்கம் பாலஸ்தீன மக்கள் மீது எத்தகைய வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டாலும் அதை எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் ஆதரிப்பதாக கெர்ரி அறிவித்துள்ளார்.

வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிப்போருக்கான வேலைவாய்ப்பு, அல்லது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தர மேம்பாடு ஆகியவற்றின் நிலை என்ன? இவற்றில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் எதிர்பார்ப்பதற்கான எந்தவித அடிப்படையும் இரண்டு வகைகளிலும் இல்லை.

கெர்ரி தேர்ந்தெடுக்கப்படுவாரானால் அது பெரும்பாலும் ஆளும் மேல்பட்டினர் புஷ் நிர்வாகம் மீளமுடியாத அளவிற்கு செல்வாக்கை இழந்துவிட்டது, போரை நடத்துவதற்கு அதிக திறமையுள்ள ஒரு புதிய தளபதி தலைமைக்கு தேவை என்பதாலும், அதன் பிற்போக்குத்தனமான கொள்கைகளை தொழிலாள வர்க்கத்திற்கெதிராக கொண்டு செலுத்துவார் என்ற ஆளும் மேல்தட்டினரின் நம்பிக்கையாலும்தான்.

ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தை எதிர்நோக்கியுள்ள இன்றைய நெருக்கடியை கருத்தில் கொண்டு பார்க்கும்போது மீண்டும் கட்டாய இராணுவ சேவையை கொண்டுவருவது குறித்து கடுமையான ஆலோசனை நடந்துவருகிறது என்பதற்கான சமிக்கைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அத்தகைய பரவலான மக்கள் எதிர்ப்பிற்கு இலக்காகும் நடவடிக்கை எடுக்கப்படுமானால் வியட்நாம் போரின் ஒரு முன்னாள் வீரர் என்று தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட கெர்ரி, புஷ்ஷைவிட அத்தகைய ஒரு நிலையை கொண்டு வருவதற்கு சிறந்த மனிதர் என்று கருதப்படக்கூடும்.

இறுதியாகப்பார்க்கும்போது இடதுசாரிகள் என்று சொல்லிக்கொள்பவர்களின் வாதங்கள் இருகட்சி கட்டுக்கோப்பு மற்றும், முதலாளித்துவ கட்டமைப்பினுள்ளேயே சுற்றிக்கொண்டு வருவதுதான் அவர்களது அரசியல் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஏகாதிபத்தியத்தைவிட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குள்ளே நிலவுகின்ற முரண்பாடுகள் மிக வலுவானவை என்பதை புரிந்து கொள்கிற வல்லமை இல்லாத அவர்கள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பங்கு பற்றிய விஞ்ஞானபூர்வமான விளக்கத்தை புரிந்து கொள்ள அவர்கள் மறுக்கின்றனர். இன்றைய தினம் சர்வதேச அளவில் நடைபெற்றுவருகின்ற உற்பத்தி முறைகளால் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திடையே ஓர் அங்மாககத்தான் இன்றைய தினம் அமெரிக்க தொழிலாளர்களின் போராட்டங்கள் வெளிப்படுகின்றன என்பதை அவர்கள் காணமுடிவதில்லை.

இன்றைய அரசியல் கட்டுக்கோப்பை எதிர்ப்பதாக கூறிகொள்கிற தீவிரவாதிகள் என்றழைக்கப்படுபவர்களைவிட ஆளும் மேல்தட்டினரின் மிக விழிப்புணர்வு கொண்ட பிரதிநிதிகள் தங்களது கட்டுக்கோப்பிலேயே நம்பிக்கையை இழந்துகொண்டு வருகின்றனர்.

இந்தக்கட்டமைப்பின் நெருக்கடிகள் ஒரு சங்கமத்தை எதிர்கொண்டிருக்கிறது. அதன் நடப்புக்கணக்குகள் பற்றாக்குறை ஆண்டிற்கு 600 பில்லியன் டொலர்களுக்கு மேல் உயர்ந்துகொண்டே போகிறது. இந்தப் பற்றாக்குறைகளை சரிகட்டுவதற்காக புஷ் நிர்வாகத்தின் தனித்தன்மை போக்குகள் சர்வதேச பொதுக்கருத்துக்களுக்கு எதிரான எள்ளி நகையாடல்கள் ஆகியவற்றிற்கப்பால், அமெரிக்க பொருளாதாரம் தினசரி 2 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகள் வருவதை நம்பியிருக்கிறது.

இந்த மொத்த ஏற்றத்தாழ்வுகள் நீடித்து நிலைநாட்ட முடியாதவை. பாரிய உலக பொருளாதார குழப்பம் உருவாக்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. உலக ஏகாதிபத்தியத்தின் நடு நாயகமான அமெரிக்கா உட்பட சர்வதேச அளவில் புதிய புரட்சி கிளர்ச்சிகள் அலையொன்றும் உருவாகிக்கொண்டிருக்கிறது.

இலங்கையிலும் இதர வளர்முக நாடுகள் என்று கூறப்படுபவற்றிலும் அமெரிக்கா என்பது ஒரு பெரிய செல்வந்த நாடு என்றும் அரசியல் சக்தி என்றும் ஒரு கருத்து நிலவுவதை நான் அறிவேன். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெகுசில சமூக பிரச்சனைகள் உள்ள மக்களைத்தான் சித்தரித்துக்காட்டுகின்றன. எனவேதான் அவைகள் வறுமையின் சமூக உண்மையை மறைக்கின்றன. மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை எதிர்நோக்கியுள்ள கடன்சுமை மற்றும் வேலையில்லா திண்டாடத்தை மறைக்கின்றன.

அமெரிக்காவின் புரட்சிகர பாரம்பரியங்கள்

வெளிநாடுகளில் அமெரிக்க வரலாற்றையே கூட மறைக்கின்ற அளவில் பொதுமக்களுக்கு அமெரிக்காவைப்பற்றி சித்தரித்துக்காட்டுகிறார்கள். இன்றையதினம் நடைபெற்றுவருகின்ற ஆக்கிரமிப்புப்போர்கள் உலகம் தழுவிய இராணுவமயம் அமெரிக்க அரசாங்கம் நடத்துகின்ற அரசியல் ஒடுக்குமுறை மற்றும் இன்றையதினம் அமெரிக்காவில் நிலவுகின்ற தீவிர சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவை அமெரிக்காவில் இருக்கின்ற மகத்தான வரலாற்று பாரம்பரியங்களோடு நேரடியாக முரண்பட்டு நிற்பவை என்பதும் மறைக்கப்பட்டு விடுகிறது.

இந்த ஆண்டு கான்சாஸ்- நெப்ராஸ்கா சட்டம் (Kansas-Nebraska Act) என்று சொல்லப்படுகிற ஒரு பிற்போக்குத்தனமான சட்டம் அமெரிக்க செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட 150 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கிறது. அந்த சட்டம் தான் அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் புதிய எல்லைகளில் அடிமைகளை வைத்துக்கொள்வதற்கு வழிதிறந்துவிட்ட சட்டமாகும். அந்த நடவடிக்கை நாட்டின் பெரும்பகுதியை தீவிரமாக்கியது. சுதந்திர குடியிருப்பாளர்கள் மடைதிறந்த வெள்ளம் போல் அங்கு குடியேறினார்கள். புகழ்பெற்ற அடிமை ஒழிப்பு தியாகி ஜோன் பிரெளன் உட்பட பலர் கான்சாசிற்கு குடியேறினார்கள். அங்கே அவர்கள் அடிமைகள் இருக்க வேண்டும் என்று கூறிய சக்திகளோடு இரத்தக்களரி கொரில்லாபோர் புரிந்தார்கள். அந்த சட்டம்தான் ஆப்ரஹாம் லிங்கனுக்கு உந்துவிசையாகி அவரை தேசிய அரசியலுக்கு இட்டுவந்தது. குடியரசுக் கட்சி நிறுவப்படுவதற்கு வழி அமைத்தது. அமெரிக்காவின் உள்நாட்டுக்போருக்கு வித்திட்ட தென்பகுதி பிரிவினை நடைபெற்றது.

கார்ல் மார்க்ஸ் இந்தப்போரின் முன்னேற்றத்தை தீவிர அக்கறையோடு கவனித்தார். அடிமைகள் உடைமை ஆதிக்கக்குழுவிற்கெதிராக நடைபெற்ற கிளர்ச்சி ''உலகை மாற்றவல்ல புரட்சி இயக்கமென்று'' வர்ணித்தார். மிகத்துல்லியமாக ஊகித்து அந்தக் கிளர்ச்சி சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு அரசியல் தாக்குதலை தொடுப்பதற்கு முன்னோடியாக இருக்குமென்று அறிவித்தார்.

நாட்டின் மூன்றில் ஒரு பகுதி முதன்மை சொத்தாக கருதப்பட்ட நான்கு மில்லியன் கறுப்பு இன அடிமைகள் எந்தவித இழப்பீடும் தரப்படாமல் விடுவிக்கப்பட்டார்கள். அந்த மனித வள முதலீடு, இன்றைய நாணய மதிப்பில் கணக்கிட்டால் அது 3 -திரிலியன் டாலர்களாகும்.

முதலாவது அமெரிக்கப் புரட்சியில் தீர்த்துவைக்கப்படாமல் நின்ற முரண்பாடுகள் மீது அந்தப் போரின் கவனம் திரும்பியது. முதலாவது அமெரிக்கப் புரட்சி அடித்தளமாக கொண்ட சுதந்திர பிரகடனம் 1776ல் வெளியிடப்பட்ட ஒரு ஆவணமாகும். அந்த ஆவணத்தில் ''எல்லா மனிதர்களும் சமமாக படைக்கப்பட்டிருக்கிறார்கள்'' அவர்கள் அனைவருக்கும், ''வாழும் உரிமை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியை நாடுவதற்கான உரிமைபடைக்கப்பட்டவர்கள் என்றும் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்படியிருந்தும் தென்பகுதியில் அடிமைகளை சொந்தமாக வைத்திருந்தவர்கள் சமத்துவம் என்பது வெள்ளையர் இனத்திற்கு மட்டுமே என்றும் மகிழ்வை நாடுவது என்பது பிற மனிதர்களை அடிமைகளாக வைத்திருப்பதையும் உள்ளடக்கியிருப்பது என்றும் கூறினார்கள்.

உள்நாட்டுப்போருக்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் அடிமைகளை வைத்திருப்பதற்கு ஆதரவாக இருந்த ஜனநாயகக் கட்சியை லிங்கன் கண்டித்தார். ஜனநாயகக் கட்சி நிறுவனர் தோமஸ் ஜெபர்சனுக்கும் அதற்கும் சம்மந்தமில்லையென்றும் அவர் சுதந்திர பிரகடனத்தின் முதன்மை ஆசிரியர்களில் ஒருவர் என்றும் லிங்கன் அறிவித்தார். மாறாக அக்கட்சி ''ஒரு மனிதனது சொத்துரிமையுடன் இன்னொரு மனிதனது சொத்துரிமை மோதுகின்ற நிலை இருக்குமானால் ''ஒரு மனிதனது சுதந்திரம் என்பது ஒன்றுக்கும் பயனற்றது '' என்று கருதியதாக லிங்கன் குறிப்பிட்டார்.

உள்நாட்டுப்போர் அடிமைகளை அசையும் சொத்துக்களாக வைத்திருப்பதை ஒழித்துக்கட்டியது. ஆனால் சுதந்திரத்திற்கும் சொத்துடைமைக்கும் இடையிலான அடிப்படை முரண்பாட்டை அது தீர்த்துவைக்கவில்லை. அது அமெரிக்க வரலாறு முழுவதிலும் ஏன் உலக வரலாற்றிலும் கூட பொதுவான இழையாக ஓடிக்கொண்டிருக்கிறது.

19ம் நூற்றாண்டின் இறுதிகளிலிருந்து இந்த மோதல் மூலதனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான போராட்ட வடிவமாக எடுத்தது. அமெரிக்காவில் இந்தப் போராட்டங்கள் அடிக்கடி வன்முறை கிளர்ச்சிகளாகவும், உள்நாட்டுப்போர் அளவிற்கான நிலைகளாகவும் உருவெடுத்தன. 1870களில் நடைபெற்ற ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தங்களிலிருந்து இந்த உண்மை வெளிப்பட்டது. அந்த வேலை நிறுத்தங்களின் பொது பல பெரிய நகரங்களில் துருப்புக்களும், தொழிலாளர்களுக்குமிடையே மிகக்கடுமையான சண்டைகள் நடைபெற்றன. அதிலிருந்து நீடித்து 1930களில் பரந்த வேலைநிறுத்தங்களும், தொழிற்சாலைகளை தொழிலாளர்கள் கைப்பற்றுவதும் நடைபெற்றது. 1960-களில் சிவில் உரிமைகள் இயக்கமும், கெட்டோ கிளர்ச்சிகளும் (ghetto rebellions) நடைபெற்றன. 1980களில் தொழிற்சாலைகளை ஒழிப்பதற்கும், பெரும் எடுப்பில் ஆட்குறைப்பு செய்வதற்கும் எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

கடந்த 10 ஆண்டுகள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு மிகக்கடுமையான கசப்பான அனுபவத்தை தந்தன. நிதியாதிக்க குழுவினர் இடைவிடாத தாக்குதலை நடத்துவதும், பழைய தொழிற்சங்கங்கள் முற்றுமுழுதான சரணாகதியை அடைவதும் நடைபெற்றது. என்றாலும் மகத்தான புரட்சிகர மற்றும் ஜனநாயக பாரம்பரியங்கள் அமெரிக்காவில் இல்லாது ஒழிக்கப்படவில்லை அந்த பாரம்பரியங்கள் உள்ளடங்கியுள்ள அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் நலன்களும் ஆளும் மேல்தட்டினரான முதலாளித்துவ வர்க்கத்தினரின் நலன்களும் எதிர்மாறானவையாகும்.

உள்நாட்டின் போரின்போது சுதந்திரத்திற்கும் சொத்துடைமைக்கும் இடையில் நடைபெற்ற போர் இன்றையதினம் மிக அவசரமான ஒரு பிரச்சனையாக வெடித்துள்ளது. ஆப்ரஹாம் லிங்கனின் வார்த்தைகளை மீண்டும் கவனத்திற்கொள்ளுங்கள் '' ஒரு மனிதனது சுதந்திரம் என்பது இன்னொரு மனிதனது சொத்துடைமை உரிமையோடு மோதுமானால் அந்தத் தனிமனிதனது சுதந்திரம் ஒன்றுக்கும் பயனற்றதாக ஆகிவிடும்''.
இன்றைய தினம் உலகிலுள்ள ஒவ்வொரு பிரதான அரசாங்கங்களின் கொள்கையும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கொள்கையும், கோடிக்கணக்கான உலக மக்களை வறுமையிலும் பட்டினியிலும் தள்ளிவிட்டு பன்னாட்டு வங்கிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்குமான இலாபத்தை உறுதிசெய்து தரும் கொள்கையாக அமைந்திருக்கவில்லையா?

தற்போதுள்ள சொத்துடைமை உறவுகளும் அவை உருவாக்கியிருக்கிற சமூக ஏற்றத்தாழ்வின் அளவுகளும் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு முற்றிலும் ஒவ்வாமை கொண்டவையாக உள்ளன. இந்த முரண்பாடு ஒரு புதிய புரட்சிகர கிளர்ச்சிக்கு வழிவகுக்கும். இப்படி வரவிருக்கிற கிளர்ச்சிகளுக்கு ஆயத்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுதான் எங்களது தேர்தல் பிரச்சாரம் அமைந்திருக்கிறது. நாங்கள் நவம்பர் 2ல் வாக்குப்பெட்டிகளில் கவனம் செலுத்தவில்லை. இந்தத் தேர்தலை தொடர்ந்து என்ன நடக்கும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறோம். வெள்ளை மாளிகையை எக்கட்சி நிர்வாகம் தன்கையில் எடுத்துக்கொண்டாலும் அது மிகத்தீவிரமான ஒரு நெருக்கடியான காலமாக இருக்கும்.

நாங்கள் நியாயமான, சுயாதீனமான தொழிலாளர் இயக்கத்தின் உருவாக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறோம். அத்தகைய ஒரு இயக்கம் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே உருவாக முடியும். நவம்பர் 2 இற்கு பின்னர் இந்த தேர்தல் படிப்பினைகளை நாம் பெறுவோம். போருக்கும், சமூக பிற்போக்குதனத்திற்கும் எதிராக ஒரு முன்னோக்கிற்கு தொழிலாள வர்க்கத்தை வென்றெடுப்பதற்கான நமது போராட்டம் இரட்டிப்பு வேகம் பெறும். தொழிலாள வர்க்கத்தின் உலகரீதியான போராட்டம் என்றவகையில் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கும் முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குமான ஒரு புதிய பரந்த சோசலிச இயக்கத்தை உருவாக்கியாக வேண்டும்.

இதை உலகக் கட்சியின் ஒர் அங்கமாகத்தான் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களை நனவுபூர்வமாக ஐக்கியபடுத்துவதன் மூலம்தான் சாத்தியமாகும். ஆக இறுதியில் இங்கே இலங்கையிலுள்ள உழைக்கும் மக்களும் உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களும் இந்த நாட்டில் எங்களது சகோதர சோசலிச சமத்துவக் கட்சிகளும் மற்ற நாடுகளிலுள்ள கட்சிகளும் இந்த அமெரிக்க தேர்தல் நம்முன்வைத்துள்ள முக்கிய பிரச்சனைகளை தீர்த்துவைப்பதில் முக்கிய பங்களிப்பு செய்யும்.

See Also :

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் பில்வான் ஒகென் இலங்கையில் தெற்காசிய பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார்

Top of page