World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை இலங்கை பொலிசாரும் இராணுவத்தினரும் இரு தோட்டத் தொழிலாளர்களை கொலை செய்தனர் By Shree Haran and M. Thevarajah ஏப்பிரல் 28 அன்று கந்தப்பளை நகரில் பொலிசாராலும் இராணுவத்தினராலும் இரண்டு தமிழ் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து 400,000க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மே 3ம் திகதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி உட்பட மத்திய மலையக பிரதேசங்களில் உள்ள தொழிலாளர்கள் இதில் பங்குபற்றினர். இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அநேக நகரங்களில் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. ஏப்பிரல் 28 காலை, ஒரு தனியார் பஸ்சும் ஒரு முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்ட ஒரு சிறு சம்பவத்தை அடுத்தே இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றன. சிங்கள பஸ் சாரதிக்கும் தமிழ் முச்சகர வண்டி சாரதிக்கும் இடையில் எழுந்த வாக்குவாதம், விரைவில் ஒரு இனவாத வன்செயலாக தீவிரமடைந்தது. கந்தப்பளையானது, தமிழ் தொழிலாளர்களின் செல்வாக்கை பிரதிபலிக்கும் பெருந்தோட்டங்களால் சூழப்பட்ட, பெருமளவிலான தமிழ் பேசும் மக்களைக் கொண்ட ஒரு பிற்படுத்தப்பட்ட சிறிய நகரமாகும். விபத்து நடந்த ஒரு சில மணித்தியாலங்களுள், ஒரு சிங்கள ஆதரவாளர்கள் கும்பலுடன் திரும்பிவந்த பஸ் சாரதி, பண்புடன் பதிலளித்த தமிழ் முச்சக்கரவண்டி சாரதிகளை திட்டத் தொடங்கினார். அன்று மாலை, தேயிலைத் தோட்டத்தை அண்டிய கிராமங்களில் இருந்து ஒரு சிங்கள கும்பல் நகரத்திற்கு கொண்டுவரப்பட்டது. பதட்டநிலைமை முற்றியபோது, தமிழ் தோட்டத் தொழிலாளர்களும் நகருக்குள் திரண்டனர். இரு சாராரும் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கியதோடு உள்ளூர் கடைகளும் கல்லெறிக்குட்பட்டன. பொலிசார், நிலமையை அமைதிப்படுத்துவதற்கு பதிலாக சிங்கள காடையர்கள் பக்கம் சார்ந்திருந்தனர். அவர்கள் ஆகாயத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்த போதிலும் சிங்கள ஆத்திரமூட்டல்காரர்களை தடுத்து நிறுத்த முற்படவில்லை. இந்த ஆத்திரமூட்டலில் ஈடுபட்ட சிலர், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு (ஸ்ரீ.ல.சு.க) ஆதரவாளர்களாகும். மேலும் இவர்கள் பொலிசாருடன் நட்புறவுகொண்டுள்ள குண்டர்களாகும். மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) தலைவர் பெ. சந்திரசேகரன், மிக மோசமான சூழ்நிலை உருவாகி வருவதாக நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்த போதிலும், தனது எச்சரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இரவு 9 மணியளவில் ஒரு இராணுவக் குழு நகருக்கு வந்தது. பதட்டம் அதிகரித்து மோதல்கள் இடம்பெற்றவுடன் தமிழ் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த பொலிசார் அழகன் விமலாநந்தனை கொன்றனர். 26 வயதான விமலாநந்தன் அருகிலுள்ள பாக் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாய தொழிலாளியாகும். தலையில் சூடுபட்ட அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். விமலானந்தனின் உடலை தூக்கிச்செல்ல முனைந்த மற்றொரு தொழிலாளி புட்டத்தில் காயங்களுக்குள்ளானார். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த பல சாட்சிகள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் உரையாடும் போது, தொழிலாளர்கள் நகருக்கு விரைவதை தடுப்பதற்காக இராணுவம் நோனா தோட்டத்திற்கு படையெடுத்ததாக கூறினர். அந்த இராணுவப் பிரிவு கூட்டத்தை நோக்கி சுட்டதனால் 44 வயதான ஜெயராம் எனும் தொழிலாளி பலியானார். சுமார் பத்து தொழிலாளர்கள் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கைகளிலும் வயிற்றிலும் காயமடைந்த மூவர் இன்னமும் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவத்தின் பின், கலகம் அடக்கும் படை உட்பட நூற்றுக்கணக்கான பொலிசார், கந்தப்பளையில் குவிக்கப்பட்டதுடன், ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. ஆயினும் மே தினத்தன்று, ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள், பலியான இரு தொழிலாளர்களதும் மரணச் சடங்கில் பங்கு பற்றியதோடு இராணுவத்தினதும் பொலிசாரினதும் நடவடிக்கைகளை கண்டனம் செய்தனர். இறந்தவர்களை தியாகிகளாக பிரகடனம் செய்யும் வகையில் நகர வீதிகள் அனைத்திலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. விமலானந்தனது தகப்பனார் அழகன், உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்து தெரிவிக்கயில்: "பொலிசார் சிங்களவர்களை பாதுகாத்தார்கள், எங்களை விரட்டியடித்ததோடு எம்மீது துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்த்தார்கள். பொலிஸ் எங்களை சுடும்போது தாக்குதல்காரர்கள் தொடர்ந்தும் கல்லெறிந்தவன்னம் இருந்தனர். எமக்கு ஓடித்தப்ப வழியிருக்கவில்லை. அத்தோடு நாங்கள் நிராயுதபாணிகளாகவும் இருந்தோம். எனது மகனைச் சுடும்போது நான் சுமார் 30 அடி தூரத்திலேயே இருந்தேன்," எனக் கூறினார். மூன்று மாத கர்ப்பிணியான விமலானந்தனின் மனைவி ஜெயேஸ்வரி, "இக்கொலைகளுக்கு பொறுப்பானவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தினார். உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடிய பாக் தோட்டத்தைச் சேர்ந்த இன்னுமொரு தொழிலாளி: கந்தப்பளையில் இதற்கு முன்னர் இத்தகைய சம்பவங்கள் நடந்தது கிடையாது. நகரில் ஒரு பொலிஸ் நிலையம் நிறுவப்பட்டதை தொடர்ந்தே இந்த பிரச்சினை ஆரம்பித்தது. "பொலிசார், சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிடும் ஒரு வஞ்சக பாத்திரத்தை வகிக்கின்றனர். அவர்கள் சிங்கள இனவாதிகளுக்கு சார்பாக இருக்கின்றனர்," எனக் குறிப்பிட்டார். கந்தப்பளையில் நடந்த தமிழ் தொழிலாளர்களுக்கு எதிரானத் தாக்குதலானது, ஏப்பில் 2 பொதுத் தேர்தலை அடுத்து நடந்த ஒரு தொடர்ச்சியான சம்பவங்களில் மிக மோசமான ஒன்றாகும். சில சம்பவங்கள் ஸ்ரீ.ல.சு.க வும் ஜே.வி.பி யும் மற்றும் ஏனைய சிறிய கட்சிகளின் கூட்டமைப்பான, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களாலேயே தூண்டிவிடப்பட்டுள்ளன. இவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் எதிரணியான ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களித்ததையிட்டு ஆத்திரமடைந்துள்ளனர். சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், தேர்தல் பிரச்சாரங்ளின் போது, ஐ.தே.மு தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டியதன் மூலம் தமிழர் விரோத உணர்வை திட்டமிட்டு தூண்டினர். இறுதி தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திற்கு மறுநாள், ஏப்பிரல் 5 இரவு, களுத்துறை மத்துகமையில் உள்ள மெதகெதர தோட்டத்திற்குள் நுழைந்த ஒரு குண்டர் கும்பல், ஐ.தே.மு க்கு வாக்களித்ததற்காக தொழிலாளர்களை திட்டியவாறு அவர்களை தாக்கியது. பொலிசார் இதற்கெதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தவறியதால், 500 க்கும் அதிகமான தொழிலாளர்கள் மத்துகம பிரதேச சபைக்கு முன்னால் ஒன்றுதிரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த தோட்டத்திலுள்ள சுமார் 30 குடும்பங்கள் உள்ளூர் கோவிலொன்றில் தஞ்சம் புகுந்திருந்தனர். அதேவாரம், காவத்தை, எந்தன், நிவித்திகல, மற்றும் கிரிபத்கல ஆகிய தோட்டங்கள் உட்பட இரத்தினபுரி மாவட்டத்தின் பல தோட்டங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. தொழிலாளர்களின்படி, தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட குண்டர்கள், பொலிசாருக்கு முறையிடக் கூடாதென எச்சரித்துடன், "தமிழர்கள் எல்லாம் புலிகள், (விடுதலைப் புலிகள்). விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களித்தீர்கள் தானே?" இந்த நாட்டிற்கு தமிழர்களும் அவர்களது வாக்குகளும் தேவையில்லை" என கூச்சலிட்டுள்ளனர். டெல்வின் தோட்டத்தை சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல வாரங்களாக இந்த வன்முறைகளை அலட்சியம் செய்டதுகொண்டிருந்த ஜனாதிபதி குமாரதுங்க, கந்தபளை படுகொலைகளை அடுத்து, இந்த சம்பவம் தோட்டத் தொழிலாளரிடையே கண்டன மற்றும் வேலைநிறுத்த அலையைத் தூண்டிவிடக் கூடும் என்ற அச்சத்தால் கடைசியில் நடவடிக்கை எடுத்தார். தோட்டத் தொழிற்சங்கங்களான மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) உடனான சந்திப்பை அடுத்து அவர் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவை உடனடியாக சம்பவம் நடந்த பிரதேசத்திற்கு அனுப்பி வைத்தார். தொழிற்சங்கப் பிரதநிதிகளுடன் அங்கு சமூகமளித்த பிரதமர், இறந்த தொழிலாளர்களின் குடும்பமொன்றுக்கு நட்ட ஈடாக ஒரு லட்சம் ரூபாவை ஜனாதிபதி வழங்கவுள்ளதாக அறிவித்தார். கடந்த புதன் கிழமை, குமாரதுங்க, தோட்டத் தொழிலாளர்களை அமைதிப்படுத்தும் மேலதிக முயற்சியாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து காசோலைகளை கையளித்தார். "நுவரெலியா மற்றும் கந்தப்பளை பொலிஸ் நிலையங்களை சுத்தப்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் பிரகடனம் செய்ததோடு, அத்தடன் இந்த நியமனங்கள் முன்னைய ஐ.தே.மு அரசாங்கத்தால் வழங்கப்பட்டவை எனவும் குற்றம் சாட்டினார். தன்னை இனவாத விரோதியாக காட்டிக்கொண்ட அவர், 1990களில் இருந்த ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான அரசாங்கங்கள் இனவாத பதட்ட நிலைமைகளை கட்டுப்படுத்த செயலாற்றியதாகவும் பிரகடனம் செய்தார். உண்மையில், குமாரதுங்கவின் ஸ்ரீ.ல.சு.க மற்றும் அதன் சிங்களப் பேரினவாத பங்காளியான ஜே.வி.பி. யும் இத்தகைய தாக்குதல்கள் இடம்பெறுவதற்கான தற்போதைய அரசியல் சூழ்நிலையை உருவாக்கியமைக்கு நேரடிப் பொறுப்பாளிகளாகும். குமாரதுங்கவின் பிரகடனத்திற்கு முதல் நாள், மே 4 அன்று, கொழும்பில் இருந்து 51 கிலோமீட்டர் அப்பாலுள்ள இங்கிரியவின் எதுரகல தோட்டத்தில் இன்னுமொரு தோட்டத் தொழிலாளி கொல்லப்பட்டார். 39 வயதான நாராயணன் அந்தோனிமுத்து மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். வாள் மற்றும் பொல்லுகளுடன் வந்த ஒரு கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார். 22 வயதான பெருமாள் யுசங்கர் என்ற மற்றுமோர் தொழிலாளி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் மோசமான நிலைமையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். அந்தோனிமுத்து மற்றும் அவரது ஐந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீதான தாக்குதலிற்கு தலைமை வகித்தமைக்காக தொழிலாள மேற்பார்வையாளரான நந்தசேன குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, "நந்சேன அந்தோனிமுத்துவை ஐ.தே.மு க்கு வாக்களிக்க வேண்டாமென எச்சரித்ததாகவும், தேர்தலின் பின்னர்: "இப்போது எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்துவிட்டது. உன்னை நான் கவனித்துக் கொள்கிறேன்" என எச்சரித்ததாகவும் தெரிவித்தனர். நந்தசேனவும் அவனது குடும்பத்தினரும் ஸ்ரீ.ல.சு.க வின் நீண்டகால ஆதரவாளர்களாகும். தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஸ்ரீ.ல.சு.க வேட்பாளர் விதுர விக்கிரமநாயகவுக்காக தோட்டத்தில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தை இவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆரம்பத்தில், உத்தியோகபூர்வ முறைப்பாட்டை செய்வதற்காக பொலிஸ் நிலையம் சென்ற அந்தோனிமுத்துவின் சகோதரனை பொலிசார் இரண்டு நாட்கள் காவலில் வைத்திருந்தனர். சில நாட்களின் பின்னரே நந்தசேன கைது செய்யப்பட்டார். |