World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The politics of opportunism: the "radical left" in France

Part three: The Fifteenth World Congress of the Pabloite International

சந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் "தீவிர இடது"

பகுதி 3 : பப்லோவாத அகிலத்தின் பதினைந்தாம் உலக மாநாடு

By Peter Schwarz
19 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

பகுதிகள்

 

 

 

 

 

பகுதி 1: LO-LCR தேர்தல் கூட்டு

பகுதி 2: "முதலாளித்துவ எதிர்ப்பு இடதை" LCR ஒன்று திரட்டல்

பகுதி 4: பப்லோவாதத்தின் வேர்கள் - ஒரு வரலாற்று மறு ஆய்வு

பகுதி 5: பப்லோவாதிகளும் லூலா அரசாங்கமும்
 

பிரான்சில் "தீவிர இடது" எனக் கூறிக்கொள்ளும் கட்சிகளின் அரசியல் பற்றிய ஏழு பகுதிகள் கொண்ட கட்டுரைத் தொடரின் மூன்றாம் பகுதியை கீழே காணலாம். முதல் பகுதி மே 15 அன்றும், இரண்டாம் பகுதி மே 17 அன்றும் (ஆங்கிலத்தில்) பிரசுரமாயின.

LCR (Ligue Communiste Revolutionnaire - புரட்சி கம்யூனிஸ்ட் கழகம்) தெரியப்படுத்தியுள்ள அரசியல் கருத்துருக்கள், அதன் "முதலாளித்துவ-எதிர்ப்பு இடதுக்கான" வேண்டுதல்கள், முற்றிலும் குறிப்பிடத்தக்க வடிவங்களில், பப்லோவாத "நான்காம் அகிலத்தின்" பதினைந்தாம் உலக மாநாட்டின் முடிவுகள், தீர்மானங்கள் இவற்றில் காணப்பட முடியும்; LCR இந்த அமைப்பின் உத்தியோகபூர்வமான பிரெஞ்சு கிளையாகும்.

இம்மாநாடு புருஸ்ஸல்ஸில் பெப்ரவரி 2003ல் நடைபெற்றது. நாம் பின்னர் காணவுள்ளபடி, பப்லோவாத அகிலத்தின் வேர்கள் 1953க்குப் பின்னோக்கிச் செல்லுகின்றன. நீண்ட காலம், இந்த அமைப்பு ஐக்கிய செயலாளர் குழுமம் (Unified Secretariat) என்ற பெயரில் இருந்து, அதனுடைய மிக அறிமுகமாகியிருந்த பிரதிநிதியாக, 1995ல் அவரது இறப்புவரை ஏர்னஸ்ட் மண்டேல் இருந்தார்.

1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் தோற்றுவிக்கப்பட்டிருந்த நான்காம் அகிலத்தின் வேலைத் திட்ட அடிப்படைகளில் இருந்து பல பகுதிகள் 1953ம் ஆண்டு முறித்துக் கொண்டு சென்றன. 1950 களின் ஆரம்பத்தில் நான்காம் அகிலத்தின் செயலாளராக இருந்த மிசேல் பப்லோ தலைமையில், இந்தப் பகுதிகள் பெருகிய வகையில், கிரெம்ளினின் அதிகாரத்துவத்தில் உருக்கொடுத்த, ஸ்ராலினிசத்தின்பால் அதிகரித்த அளவில் நோக்குநிலைப்பட்டிருந்தன.

பப்லோவாதிகளுடைய பதினைந்தாம் உலக மாநாடு, எட்டு ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றது, அந்த அமைப்பு முந்தைய அகிலங்கள் அடிப்படையாகக் கொண்டிருந்த மார்க்சிச மரபுகளை மிக அருமையாக நினைவுகூறினாலும் கூட அவை அனைத்திலுமிருந்து தொடர்பை முறித்துக்கொண்டதை பிரதிநித்துவப்படுத்தும் "ஒரு புதிய மக்கட்திரள் அகிலத்தை" அமைப்பதற்கு ஆதரவாக தான் இருப்பதை அறிவித்தது; பிரான்சுவா வேர்க்கமோ (Francois Vercammen) ஆல் தயாரிக்கப்பட்ட காங்கிரசின் பணி பற்றிய உத்தியோகபூர்வமான அறிக்கை, இந்த உண்மையை இம்மியும் பிசகாமல் வலியுறுத்தியிருந்தது.

பப்லோவாத நிர்வாகக்குழுவில் உறுப்பினரான வேர்க்கமோ எழுதினார்: "இந்தப் புதிய அகிலம், குறைந்த அளவு, அதன் அமைப்பை நோக்கி வைக்கப்படும் முதல் படியாவது, இப்பொழுதுள்ள இயக்கங்கள் மற்றும் அணிதிரடல்கள் இவற்றிலிருந்து வெளிப்படும், எந்த முன்னோடி அமைப்பின் தன்மையையும் இது கொண்டிராது; நிச்சயமாக, புரட்சிகர மார்க்சிச கட்சி அடிப்படையில் இருக்கும் அகிலங்கள் எதையும் பின்பற்றாது. இது தற்போதைய வரலாற்றில் முன்என்றும் இல்லாத வகையில் சர்வாதிகாரப் போக்கு ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மை பீதிக்கு எதிராக 'தன்னியல்பாக' எழும் மக்களுடைய பதிலாக அமையும், இதன் நங்கூரம் சர்வதேசியத்தன்மை உடையதாகவும், உள்ளுணர்விலேயே முதலாளித்துவ-எதிர்ப்பை கொண்டிருப்பதாகவும் இருக்கும்; ஆனால் இதன் பெரும் பன்முகத்தன்மையும் இயல்பாக இருக்கும். இதனுடைய ஐந்து முன்னோடி அமைப்புக்களான 1848ன் சர்வதேச கம்யூனிச அகிலம், முதலாம் அகிலம் (1864-1876), இரண்டாம் அகிலம் (1889-1914), மூன்றாம் (கம்யூனிச) அகிலம் (1919-1943) மற்றும் நான்காம் அகிலம் (1938ல் நிறுவப்பெற்றது) இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும்." (1)

"இயக்கங்களும் அணிதிரட்டல்களும்", "புதிய மக்கட்திரள் அகிலத்திற்கு" அடிப்படையாக அமையும் என்று வேர்க்கமோ கூறும்போது, அவர் குறிப்பிடுவது, பூகோளமயமாக்குதலை விமர்சகர்கள் மற்றும் ஈராக் போரை எதிர்த்த இயக்கம் இவற்றையும், சர்வதேச வர்த்தகத்திற்கு எதிராகவும் 1999ல் சியாட்டிலில் தொடங்கிய பாதுகாப்புக் கூட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும், போர்டோ அலேக்ரே மற்றும் ஃபுளோரன்சில் நடைபெற்ற உலக சமுதாய அரங்குகள், மற்றும் உலகெங்கிலும் ஈராக் போருக்கு எதிராக பெப்ரவரி 2003 ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களையும் குறிப்பிடுகிறார்.

மக்கட்தொகுப்பின் பரந்த தட்டுக்கள் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் எதிரான பெருகிய எதிர்ப்பை பிரதிபலித்தன; மேலும் அவை அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தின. 1960, 1970 களின் எதிர்ப்பு இயக்கங்கள் நடாத்திய அனுபவசாலிகளுடன், தொழிலாளர் தட்டுக்களும், குறிப்பாக இளைஞர்களும், பெரும்பாலும் பழைய சீர்திருத்த தொழிலாளர் அதிகாரத்துவங்களிலிருந்து சுதந்திரமாக அரசியலில் செயலூக்கத்துடன் தலையிட்டனர்.

ஆனால், அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும், இந்த இயக்கங்கள் -Attac, அல்லது பிரேசிலிய தொழிலாளர் கட்சி (PT)- போன்ற குழுக்களால் ஆதிக்கம் செய்யப்பட்டன; இவை ஒரு புரட்சிகர முன்னோக்கை நிராகரித்து, எதிர்ப்பு இயக்கங்களை, மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதலாளித்துவ அமைப்புக்களின் சுற்றுப் பாதையில் சேர்க்கும் தன்மையைத்தான் கொண்டிருந்தன. Attac பழைய பிரெஞ்சு அரசாங்கத்தின் சோசலிஸ்ட் கட்சித் தலைவர் லியோனல் ஜொஸ்பன் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது என்பது ஒரு இரகசியம் அல்ல மற்றும் அதன் பதிவு உறுப்பினருள் சோசலிஸ்ட் கட்சியின் பல பிரதிநிதிகள் இருந்தனர். தன்னுடைய பங்கிற்கு பிரேசிலிய PT, போர்டோ அலேக்ரேயில் (Porto Alegre) சமூக மாமன்றத்தை (Social Forum) ஆதரித்து புரந்தது; பிரேசிலில் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அதன் கொள்கைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டைப் பெற்றது.

இந்த இயக்கங்களை, அவற்றின் முதலாளித்துவ அல்லது குட்டி முதலாளித்துவ தலைமையின் அடிப்படையில் அசட்டை செய்வதோ அல்லது புறம் தள்ளிவிடுவதோ தவறாகி விடும், இதற்குச் சான்றாக Lutte Ouvriere (LO) உள்ளது. ஆனால் அதேவேளை விமர்சனத்திற்குள்ளாக்காமல் ஆதிக்கத்தில் இருக்கும் அரசியல் போக்குகளை அப்படியே ஏற்பதும், இத்தகைய இயக்கங்களின் தன்னியல்பான வளர்ச்சி, அரசியல் தெளிவைத் தாமாகவே கொண்டுவிடும் என்று நம்புவதும் முன்னயதற்கு சமனான தவறாகிவிடும்.

அரசியல் வேறுபடுத்தலைக் காட்டும் ஒரு வழிவகையை முன்னெடுப்பதும், இவ்வியக்கங்கள் தொடர்பாக அதைத் தெளிவுபடுத்துவதும் மார்க்சிஸ்ட்களுடைய முன்னெடுப்பாக இருக்கவேண்டும். இதன் இலக்கு, "இடதை" ---இக்கருத்து இப்பொழுது ஒவ்வொரு சந்தர்ப்பவாத மற்றும் குட்டி முதலாளித்துவப் போக்கும் அரவணைப்பது--- ஒன்றுபடுத்துவது அல்ல, மாறாக நிலவுகின்ற முதலாளித்துவ உறவுகளுடன் தங்களது வாழ்க்கைத் தரம் சமரசத்திற்கு உட்படமுடியாத நிலையில் இருக்கும் உழைக்கும் மக்களின் பரந்த திரளினரை ஐக்கியப்படுத்துதல் மற்றும் அணிதிரட்டுதல் ஆகும்.

இதற்கு Attac, பிரேசிலிய PT மற்றும் பல போக்குகளுக்கும் எதிராக சளையாத போரோட்டம் மேற்கொள்ளப்படவேண்டியது தேவையாகும்; இப்போக்குகள், தங்களின் ஒரு காலையோ அல்லது இரண்டு கால்களையுமோ முதலாளித்துவ முகாம்களில் ஊன்றிக் கொண்டு, மக்கள் எதிர்ப்பை திசை திருப்பவும் இடதுசாரி அல்லது தாராளவாத முதலாளித்துவ அரசியல் வாதிகளின் பின்னே வழிப்படுத்தவும் முற்படுகின்றன. இந்தப் போக்குகளின் அரை மனதுக் கொள்கைகள், உத்தியோகபூர்வமான முதலாளித்துவ கருத்தை ஏற்பதற்குத் தயாராக இருக்கும் தன்மை, முதலாளித்துவ முகாமில் அவற்றின் கூட்டாளிகளை அச்சுறுத்தும் அனைத்து "தீவிரக் கோரிக்கைகளையும்" நசுக்கும் முயற்சி போன்றவை, அவை தவிர்க்க முடியாதபடி பரந்த ஒடுக்கப்பட்ட மக்கட்திரளை அடையமுடியாத நிலையை கொண்டுள்ளன என்பது மட்டுமல்லாமல், அவ் அடுக்குகளை விலக்குவதில் முடிவடைகின்றன. சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்படும் பரந்த மக்கள் திரளினரின் ஓர் உண்மையான ஐக்கியம், இப்போக்குகளின் செயலிழக்கவைக்கும் செல்வாக்கிற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில்தான் வெளிவரும்.

ஸ்பானிய POUM, பிரிட்டனின் சுதந்திர தொழிற் கட்சி போன்ற பல்வேறு வகையான இடைநிலைவாத போக்குகளுக்கு எதிரான ஒரு ஐந்து ஆண்டுகால போராட்டம் மற்றும் அதேபோல முதலாளித்துவ வர்க்கத்தின் இடதுசாரிகளுடன் ஒரு கூட்டின் மூலம் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை தியாகம் செய்ய விழையும் மக்கள் முன்னணிக்கு எதிரான போராட்டத்தின் பின்னர்தான் 1938ல் நான்காம் அகிலம் நிறுவப்பட்டது.

"எந்தவிதமான மக்கள் முன்னணிகளிலும் நான்காம் அகிலம் இடம் பெறாது, அது இருக்கவும் முடியாது. முதலாளித்துவ வர்க்கத்தின் முடிச்சுக்களுடன் பிணைத்துக் கொண்டிருக்கும் அனைத்து அரசியல் குழுக்களையும் இது சிறிதும் சமரசத்திற்கு இடம் இன்றி எதிர்த்துப் போரிடும்" என நான்காம் அகிலத்தின் ஸ்தாபித வேலைத்திட்டம் வலியுறுத்தியுள்ளது.(2) தொழிலாள வர்க்கம் அரசியல் வாழ்வில் சுயாதீனமானதாக, மற்றும் புரட்சிகர அரசியல் சக்தியாக தலையிடுவதற்கு வகைசெய்தல் என்பதே இதன் நோக்கமாக அப்பொழுதும் இருந்தது, இப்பொழுதும் இருக்கிறது.

பப்லோவாதிகள் இத்தகைய இலக்கை முற்றிலும் நிராகரிக்கின்றனர். அவர்களுடைய "புதிய வெகுஜன அகிலத்திற்கான" அழைப்பு என்பது, ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில், "முதலாளித்துவ வர்க்கத்தின் முடிச்சுக்களில் கட்டுண்டிருக்கும்" அரசியல் பிரிவுகளை நோக்கி கொடுக்கப்படும் அழைப்பு ஆகும். அரசியல் ரீதியாக பப்லோவாதம், இடைநிலைவாத, சந்தர்ப்பவாத மற்றும் வெளிப்படையான சீர்திருத்தவாதப் போக்குகளை நோக்கித்தான் இயக்கப்படுகிறது; சமூக ரீதியாக நடுத்தர வர்க்கத்தின் பகுதிகள், பழைய தொழிலாளர் அமைப்புக்களின் அதிகாரத்துவங்கள் இவற்றை நோக்கியே இயக்கப்படுகிறது.

பப்லோவாதிகள் "தொழிலாள வர்க்கம்", "தீவிர இடது" என்பவற்றிற்கு இடையே ஒரு தெளிவான வேறுபாட்டைக் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. "நான்காம் அகிலத்தின் பங்கு, மற்றும் பணிகள்" என்பது பற்றிய மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது: "தொழிலாள வர்க்கம் இன்னும் வலிமையற்ற தன்மையில், காத்துக்கொள்ளவேண்டிய நிலையில்தான் இருக்கிறது; ஆனால் தீவிர இடது பிழைத்துக் கொண்டது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய அளவில் அரசியல் முயற்சிகளை தொடக்கிக் கொண்டிருக்கிறது"(3) மற்றொரு தீர்மானம், உலகம் முழுவதும் மிகப்பரந்த முறையில் மக்கள் திரள் வலதுபுறம் நகர்ந்துகொண்டிருக்கிறது என்று கூறுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப்படும் அரசியல் மற்றும் இராணுவத் தாக்குதல் மற்றும் ஒடுக்குமுறை அரச சாதனங்களின் பகுதியாக தலையீட்டுவாதம், "மக்களிடையே பிற்போக்கு சோவினிச வெறியை ஏற்படுத்தி ஊக்குவிக்கிறது, இந்த அபிவிருத்தியானது நாட்டுக்கு நாடாடாக பூகோளம் முழுவதையும் பாதித்துள்ளது" எனக் கூறியுள்ளது.(4) எனவே, "புதிய வெகுஜன அகிலம்" அதற்கான அடித்தளத்தை தொழிலாள வர்க்கத்தில் அல்லாமல், "தீவிர இடதுகளில்தான்" கொள்ளும்.

வேர்க்கமோ மேலும் எழுதுகிறார்: "புதிய அகிலம் அனைத்து எதிர்ப்பு சக்திகளின் கூட்டமாக, அனைத்து தீவிர அரசியல் சிந்தனையோட்டமாக, ஒரு புதிய அரசியல் உருவாக்கத்தில் (கட்சி, இயக்கம், கூட்டணி, உடன்பாடு) என இருக்கும். ...அத்தகைய உருவாக்கத்தில், புரட்சிகர மார்க்சிச வாதிகள், 'நுழைவுவாதத்தை' இரகசியமாக அல்லது வெளிப்படையான இலக்காக, ஒரு புரட்சிகர வேலைத் திட்டத்தைத் தரித்திருக்கும் 'புரட்சிகர கட்சி'யின் முன்னணிப்படைக்கு எவ்வளவு விரைவாகவோ முடியுமோ அவ்வளவுக்கு கொண்டுசெல்வதை செயல்படுத்தமாட்டார்கள். அவர்கள் இந்த பரந்த கட்சியின் இணைந்து முன்னெடுப்பவர்களாக, இணைந்து ஒழுங்கமைப்பவர்களாக, இணைந்த தலைவர்களாக இருப்பார்கள். அவர்கள் தற்போதைய போராட்டம், முன்னேற்றம் ஆகியவற்றின் அனுபவத்தை சேர்த்து, சோசலிசத்திற்காகப் போராடும் திறமையுள்ள ஒரு பரந்த முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியை நோக்கி பகிர்ந்து கொள்வதை குறியாகக் கொள்வர்.

மற்றொரு பந்தியில் இதே கட்டுரையாளர்: "நம்முடைய குறியிலக்கு, ஏற்கனவே காணப்படும் விரிசல் உள்ள உலக நீதிப் போராட்டத்தில் குறுகிய காலத்தில் ஒரு அரசியல் ரீதியான மற்றும் அமைப்பு ரீதியான தாக்குதலை நடத்தி அதன்மீது ஒரு அரசியல் நிறுவனத்தை சுமத்துவது அல்ல. மாறாக, நாம் அதைக் கட்டாயம் கட்டி எழுப்புவோம், தனித்தன்மைவாய்த்த போரிடும் இயக்கமாக வலுவுறச் செய்வோம், பல்வேறு மட்டங்களிலும் அதன் முழு செயல்திறன்களையும் அடையும் வகையில் செயலாற்றுவோம்: அது ஒரு சமூக-அரசியல் இயக்கமாக, விவாதம், விளக்கம் இவற்றைக் கொள்ளும் அரங்காக, தன்னுரிமை கொண்ட பிரச்சாரங்களை வழிநடத்தும் தன்மை உடையதாக (Tobin Tax, மூன்றாம் உலக கடன்சுமையை ரத்து செய்தல், பொதுப் பணிகளை காத்தல், தற்கால அடிமை முறைக்கு எதிரான போராட்டம், என்ற), சமுதாய இயக்கங்களுக்கு ஒரு குடை அமைப்பாக (தொழிற்சங்கங்கள், வேலையற்றோர், சுற்றுச்சூழல் காப்போர் என்று) ஓர் ஒற்றை அணியாக (போருக்கு எதிரான அணிதிரட்டலாக) செயலாற்றும் என எழுதுகிறார்.

தொழிற்சங்கங்களை மீண்டும் அமைத்தல்

ஒரு "புதிய வெகுஜன அகிலத்திற்கு" அடிப்படையாகப் போகும் "தீவிர இடதுகளில்" பப்லோவாதிகள், "மகளிர், இளைஞர், போர் எதிர்ப்பு, சுற்றுச் சூழல், பாசிச எதிர்ப்பு, இனவெறி எதிர்ப்பு" என்ற ஏராளமான தீவிர எதிர்ப்பு இயக்கங்கள் மட்டும் இராமல், தொழிற்சங்கங்களும், பழைய ஸ்ராலினிச, சீர்திருத்தவாத அதிகாரத்துவங்களின் பகுதிகளும் இருக்கும் என கூறுகிறது.

தொழிற்சங்கங்கள், அதேபோல சமூக ஜனநாயக, ஸ்ராலினிச அமைப்புக்கள் பொதுவாக வலதுபுறம் நகர்ந்துள்ளன என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளக் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்த சீரழிவிற்கான புறநிலை அடிப்படைகளை பகுத்தாராய்வதற்கு அவர்கள் எவ்வித முயற்சியையும் கொள்ளவில்லை --அதாவது பூகோளமயமாதலின் முன் சமூக சீர்திருத்தவாத வேலைத்திட்டங்களின் திவாலாகிவிட்ட தன்மை பற்றி பகுத்தாயவில்லை. மாறாக அவர்கள் தொழிலாள வர்க்கம் புதுப்பிக்கப்படுதல் இந்த அமைப்புக்கள் மூலம் நடைபெறவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

"நான்காம் அகிலத்தின் பணிகள்" என்ற தீர்மானத்தின்படி: "தொழிற்சங்க இயக்கங்களை மறுபடியும் அமைத்தல் என்பது மிக முக்கியமான பணியாகும்." ஆனால் இன்னும் சற்று கீழே: "நீண்ட கால வரலாறுடைய பெரும் கூட்டமைப்புக்களில், அதிக தொழிற்சங்க மயப்படுத்தல் வீதங்கள், மற்றும் பெரும் தொழிற்சங்க மரபுகள் இருந்த நாடுகளில், மறுஅணிதிரட்டல் இந்த தொழிற்சங்கங்களின் மூலம்தான் நிச்சயமாக மேற்கொள்ளப்படும்.... ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் பரந்த அளவில் தொழிற்சங்கவாதம் தோன்றிய (தென்னாபிரிக்காவில் COSATU, பிரேசிலில் CUT போன்றவை) இடங்களில் இது அடிமட்ட உறுப்பினர்களின் விருப்பத்தை ஒட்டி அமைக்கப்படும்" என அது தெரிவிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளின் அனுபவங்கள் இதற்கு முற்றிலும் மாறானவையாகத்தான் இருந்து வருகின்றன. "பெரும் தொழிற்சங்க மரபுடைய நாடுகளில்" என்பது ஜேர்மனி, கிரேட் பிரட்டன் இவைற்றைக் குறிப்பிடும் என்பது தெளிவு; இங்கு பெரும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கள் முக்கியமான முட்டுக் கொடுக்கும் தூணாக வலதுசாரி, தொழிலாள வர்க்க விரோத சமூக ஜனநாயக அரசாங்கங்களுக்கும் ஆதரவு கொடுத்துள்ளன. அதிலும் குறிப்பாக, போர்க்குணம் மிக்கவையாக அடிக்கடி காட்டிக்கொள்ளும் சில எதிர்ப்புக்களையும் கூட ஒழுங்கு செய்யும் தொழிற்சங்கங்கள், மக்கள் எதிர்ப்பு எழுச்சிகளினால் அரசாங்கம் வீழ்ச்சியுறுவதை என்னவிலை கொடுத்தும் தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. ஜேர்மனியில் பெரும் IG Metall and Ver.di தொழிற்சங்கங்கள், கணக்கில் அடங்கா உடன்பாடுகளில் கையெழுத்திட்டு, அவை அவற்றின் உறுப்பினர்களுடைய சம்பளங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் பெருமளவில் சரியவைத்த விளைவைக் கொடுத்துள்ளன.

COSATU, CUT இவற்றைப் பொறுத்தவரையில், இரண்டுமே ஒரு புரட்சிகர நெருக்கடி போக்கில் தோன்றியவை; அவை முறையே தென்னாபிரிக்காவிலும், பிரேசிலிலும் முதலாளித்துவ ஆட்சியின் முக்கிய தூண்களாக மாறிவிட்டன. தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்களின் தலைவரும் COSATU இன் இணை நிறுவனருமான Cyrim Ramaphosa இன்று தென்னாபிரிக்காவில் செல்வம் கொழிக்கும் வியாபாரிகளில் ஒருவராவார். Luis Inacio "Lula" da Silva என்ற CUT உடைய மிகப் புகழ்வாய்ந்த தலைவர் இன்று பிரேசிலின் ஜனாதிபதியாக இருக்கிறார்.

இந்த அனுபவங்கள் 1940 களில் தான் இறப்பதற்கு முன்பு ட்ரொட்ஸ்கி தீர்க்கதரிசனத்துடன் தொழிற்சங்கங்களை பற்றிய தன்மையை சரியாகக் கூறியதை நிரூபிக்கின்றன: "இந்த வளர்ச்சியில் ஒரு பொதுக்கூறுபாடு உள்ளது, அல்லது சரியாகக் கூறினால் உலகம் முழுவதிலும் நவீன தொழிற்சங்க அமைப்புக்களின் இழிசரிவில் என்று கூறவேண்டும்; அவர்கள் அதிகரித்த வகையில் நெருக்கமாக அரச அதிகாரத்துடன் செயல்படுகின்றனர் மற்றும் அதனுடன் சேர்ந்து வளர்கின்றனர். இந்த செயல்முறை நடுநிலை, சமூக ஜனநாயகவாத, கம்யூனிச, அராஜகவாத தொழிற்சங்கங்கள் என்று அனைத்தினதும் சமமான சிறப்பியல்பாகும். இந்த உண்மை மட்டுமே 'ஒன்றாக வளர்வோம்' என்னும் போக்கு இத்தன்மையான அல்லது அத்தன்மையான கொள்கைவழியில் இயல்பாக இருக்கிறது என்றில்லாமல், அனைத்து தொழிற்சங்கங்களுக்குமான பொதுவான சமூக நிலைமைகளில் இருந்து பெறப்படுவதாகக் காட்டுகிறது."(5)

"தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு பற்றி ட்ரொட்ஸ்கி கூறியதாவது: "தொழிற்சங்க இயக்கத்தின் அதிகாரத்துவத்தின் பார்வையில் அதன் முக்கிய பணி, அரசாங்கத்தை முதலாளித்துவத்தின் தழுவிலில் இருந்து "விடுவித்தல்", பெரும் நிதி நிறுவனங்களை சார்ந்திருத்தலை வலுவிழக்கச் செய்தல், தங்களிடம் அதனை ஈர்த்தல் என்பது ஆகும். இந்த நிலை ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கொழுத்த இலாபத்தின் பங்கில் சிதறிவிழும் துணுக்குகளுக்காக சண்டையிட்டுக்கொள்ளும் தொழிலாளர் அதிகாரத்துவத்தின் சமூக நிலையோடு முற்றிலும் பொருந்தி காணப்படுகிறது. தொழிலாளர் அதிகாரத்துவத்தினர் 'ஜனநாயக' அரசாங்கங்களுக்கு தாங்கள் எவ்வளவு விசுவாசமாகவும், இன்றியமையாத தன்மையையும் கொண்டுள்ளோம் என்பதை சமாதான காலத்திலும், குறிப்பாக போர்க்காலத்திலும் காட்டும் தன்மையை சொற்களாலும், செயல்களாலும் அது சிறந்த முறையில் நிரூபிக்க முற்படுகின்றனர். தொழிற்சங்க அமைப்புக்கள் அரசாங்க கருவிகளாக மாற்றுவதன் மூலம் பாசிசம் புதிதாக எதையும் கண்டுபிடித்து விடவில்லை; மாறாக ஏகாதிபத்தியத்தில் உள்ளார்ந்த போக்குகளில் உள்ள இறுதி முடிவுகளுக்குத்தான் இது செல்லுகிறது."

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார செழிப்புநிலை, தங்கள் உறுப்பினர்களுடைய வாழ்க்கைத்தரத்தில் சில முன்னேற்றங்களைக் கொண்டுவரும் சலுகைகளை பெற்றுத்தருவதற்கான சூழ்நிலையை தொழிற்சங்கங்களுக்கு ஏற்படுத்தியது. ஆயினும், அத்தகைய நாட்கள் எப்பொழுதோ மறைந்து விட்டன. கடந்த இருபது ஆண்டுகளின் நிகழ்வுகள் ட்ரொட்ஸ்கியின் தொழிற்சங்கம் பற்றிய மதிப்பீட்டைத்தான் முற்றிலும் உறுதி செய்கின்றன. அனைத்து இடங்களிலும் அவை அரசின் கருவிகளாக மாறிவிட்டிருக்கின்றன. தொழிலாளர் இயக்கத்தை புதுப்பிப்பதற்கான முன்நிபந்தனை இந்த பழைமை நிரம்பிய, மிகத் தொன்மையான சாதனங்களுக்கு எதிராக கிளர்ச்சி எழுச்சி நடத்தப்படவேண்டியது ஆகும். இதைத்தான் என்ன விலைகொடுத்தும் நிறுத்திவிடவேண்டும் என்பதில் பப்லோவாதிகள் உறுதி பூண்டுள்ளனர்; இதுதான் இந்த அமைப்புக்களினூடாக "மறு அணிதிரட்டல்" கட்டாயம் நடைபெறவேண்டும் என அது வெளிப்படையாக வலியுறுத்துவதன் பொருள் ஆகும்.

பிரிட்டனின் பிரதம மந்திரி பிளேயர், ஜேர்மனியின் அதிபர் ஷ்ரோடர், ஜொஸ்பன் இவர்களுடன் ஏற்பட்ட எதிர்மறை அனுபவங்களுக்கு பின்னரும், பப்லோவாதிகள் சமூக ஜனநாயகக் கட்சிகளோடு இணைந்து நிற்க உறுதியாக இருக்கின்றனர். "அடிப்படைக் கோரிக்கைகளை காப்பதில் சமூக ஜனநாயக தலைமையின் கீழ் அமைப்புக்கள் அக்கறையற்று விடப்படுகின்றன என்பதை நன்கு உணர்ந்தாலும், இன்னும் அவர்களை பெரும் மக்கட்திரள் நடவடிக்கையில் ஈடுபடுத்தும் வாய்ப்புக்களை நாம் கைவிட்டுவிடவில்லை" என "நான்காம் அகிலத்தின் பணிகள்" என்ற தீர்மானம் கூறுகிறது.

பெரும் வருத்தத்துடன் தீர்மானம் ஸ்ராலினிஸ்டுகள் சரிவு பற்றி குறிப்புக்களைக் காட்டுகிறது: "மிகப்பெரிய 'தப்பியுள்ள' கம்யூனிஸ்ட் கட்சிகள் அவற்றின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றன; புதிய-தாராளவாத கொள்கைக்கு எதிராக கொண்டிருந்த அவர்களின் நிலை அவர்களை ஒரு முதலாளித்துவ எதிர்ப்பு அரசியல் செயல் திட்டத்திற்கோ, ஜனநாயக, பன்முகவிரிப்புச் செயல் பாட்டிற்கோ, இடது சாரிப்புறமோ ஸ்ராலினிசம் அல்லாத தேசிய கட்டமைப்பு போக்கின் வெளிப்பாட்டிற்கோ வழிவகுக்கவில்லை." இவ்விதத்திலும் கூட, பப்லோவாதிகள் முற்றிலும் நம்பிக்கையை இழக்கவில்லை.

குறிப்பிடத்தக்கவகையில் விதிவிலக்காக, அவர்கள் ஸிமீயீஷீuஸீபீமீபீ சிஷீனீனீuஸீவீsts (ஸிவீயீஷீஸீபீணீக்ஷ்வீஷீஸீமீ சிஷீனீuஸீவீstணீஸிதி), என்னும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் சிதைவிலிருந்து வெளிவந்துள்ள கட்சியை புகழ்ந்திருக்கின்றனர். பல ஆண்டுகள் பப்லோவாத அகிலத்தின் இத்தாலிய பிரிவு, Rifondazione இன் இணைந்த பகுதியாக செயல்பட்டு வந்தது. 1990 களில், Rifondazione இத்தாலிய மைய-இடது அரசாங்கத்தை பாராளுமன்றத்தில் ஆதரித்து வந்தது. இக்கொள்கை, சில்வியோ பெர்லுஸ்கோனியின் தலைமையில் வலதுசாரி கூட்டணி அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகுத்தது. சமீபத்தில் RF அடுத்த தேர்தலில் ரோமலா ப்ரோடின் Olive Tree கூட்டணியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவும் பின்னர் வருங்கால மைய-இடது அரசாங்கத்தில் மந்திரி பதவிகளை ஏற்கவும் தயார் என்று அறிவித்துள்ளது

விவசாயிகள் இயக்கம்

பப்லோவாத உலக மாநாட்டின் தீர்மானங்கள் "விவசாயிகள் இயங்கங்களையும்", "முதலாளித்துவ-எதிர்ப்பு அணிதிரட்டலில் முக்கிய பங்கு கொண்டவர்களாக" உள்ளடக்கியுள்ளன. இந்திய, பிரேசில் பொலிவியா ஆகியவற்றில் உள்ள விவசாய இயக்கங்கள், மெக்சிகன் ஜாபாடிஸ்டாக்கள் (Zapatistas), மற்றும் ஜோசே போவேயின் தலைமையிலான பிரெஞ்சு Paysanne Confederation ஆகியவையும் புதிய வெகுஜன அகிலத்தின் பகுதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.

இந்த விவசாயிகள் இயக்கங்கள் பிரச்சினையில், பப்லோவாதிகள், ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக மார்க்சிச இயக்கம் பெற்றுள்ள அனுபவத்தை ஒதுக்கி வைத்துள்ளனர். விவசாயிகள், அதுவும் குறிப்பாக நாட்டுப்புறத்தில் மிக வறிய, அடக்கப்பட்ட நிலையில் இருக்கும் பண்ணை விவசாயத் தொழிலாளிகளும், நிலமில்லாத விவசாயிகளும் ஒரு சோசலிச சமுதாயத்திற்காக போராடும் தொழிலாள வர்க்கத்தின் உற்ற நண்பர்கள் ஆவர். ஆனால், தாங்களாகவே விவசாயிகள் உறுதியுடன் ஒரு முதலாளித்துவ - எதிர்ப்புக் கொள்கையை வளர்க்க இயலாத நிலையில் உள்ளனர். அவர்களுடைய இந்த இயலாமை, சமுதாயத்தில் விவசாயிகள் சிறிய மட்டத்திலான உற்பத்தியாளர்கள் என்ற தரத்தில் இருப்பதுடன் நேரடியான தொடர்பைக் கொண்டுள்ளது.

"விவசாயி ஒன்றில் தொழிலாளியையோ அல்லது பூர்சுவாவையோ பின்பற்றுகிறார்." என நிரந்தரப் புரட்சி என்ற தன்னுடைய நூலில் ட்ரொட்ஸ்கி எழுதினார். "குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார, அரசியல் சுயாதீனம் இன்மையும் அதன் ஆழ்ந்த உள் வேறுபாடுகளும், விவசாயிகள் கட்சியை உருவாக்கும் பாதைக்கு கடக்க முடியாத தடையாக உள்ளது" என்றும் அவர் மேலும் கூறினார்.(6)

தொழிலாளர்கள் விவசாய மக்களை வழிநடத்திச் செல்லும் நிலைமைகளில்தான், தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு புரட்சிகர கூட்டு ஏற்படும் என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியிருந்தார். 1917 ரஷ்ய புரட்சி இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தது. புரட்சியின் உச்சக்கட்டத்தில், மிகப்பெரிய விவசாய கட்சியான சமூகப் புரட்சியாளர்கள் (Social Revolutionaries) முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளுடன் தங்களை இணைத்துக் கொண்டநிலையில் பெரும்பாலான ஏழை விவசாயிகள் தங்களை தொழிலாள வர்க்கத்துடனும் போல்ஷிவிக்குகளுடனும் பிணைத்துக் கொண்டனர். அப்பொழுதிலிருந்து சீனா, இந்தியா, இலத்தீன் அமெரிக்கா இன்னும் உலகில் பல பகுதிகளின் அனுபவமும், ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. விவசாயிகள் ஒரு சுயாதீனமான புரட்சிகர கொள்கையை உருவாக்கிக் கொள்ளும் திறனை ஒருபோதும் நிரூபித்திருக்கவில்லை.

பப்லோவாதிகளால் விரும்பப்படும் அமைப்பான மெக்சிகன் ஜாபாடிஸ்டாக்கள் இதைப்பற்றி தெளிவுபடுத்துகின்றனர். அவர்கள், மெக்சிகோவின் வறுமை மிகுந்த சியப்பாஸ் மாநிலத்தில் இராணுவத்தினருடன் ஆயுதமேந்திய போர்களை நடத்தியதை ஒட்டி, பொதுக் கவனத்திற்கு 1994ல் வந்தனர். முன்னாள் பல்கலைக்கழக விரிவிரையாளர் செபாஸ்டியன் குய்லன் (Sebastian Guillen) என்ற Subcomandante Marcos தலைமையில், ஜாபாடிஸ்டாக்கள் தங்களுடைய கொரில்லா போர்முறைக்கு அப்பகுதியில் நம்பிக்கை இழந்திருந்த இந்திய விவசாய மக்களின் பகுதிகளில் இருந்து ஆதரவைப் பெற முடிந்தது.

ஏழாண்டுகளுக்குப் பின்னர், Subcomandante Marcos மெக்சிகோ நகரத்திற்குள் அணிவகுத்து சென்றபோது, அவர் மெக்சிக ஜனாதிபதியும் பழைய Coca Cola நிர்வாகியுமான Vincente Fox ஆல் வரவேற்கப்பட்டு பின்னர், பகுதிவாழ் மக்களுக்கு ஒருவகை தன்னாட்சி உரிமையை சூழ்ச்சிகரமாக கொடுத்து அனுப்பப்பட்டார். இந்த உடன்படிக்கை, முதலாளித்துவ சந்தை உறவுகளை மெக்சிகோவில் மாற்றுவதற்கு எந்த உதவியும் செய்யவில்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நாடு நம்பி இருந்த நிலையையும் மாற்றவில்லை; அல்லது உள்நாட்டு இந்திய விவசாயிகள் உட்பட மெக்சிக தொழிலாளர்களும் விவசாயிகளும் அனுபவித்த கடும் வறுமையை மாற்றவும் இல்லை. ஆயினும்கூட, Subcomandante Marcos ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள குட்டி முதலாளித்துவத்தினரால் இன்று புதிய நம்பிக்கையின் ஆதாரமாக போற்றப்படுகிறார்.

அரசியல் ரீதியாக கூறும்போது, பிரான்சின் விவசாயிகள் தலைவரான ஜோசே போவே இன்னும் இழிந்த முறையில் தோற்றம் அளிக்கிறார். பழைய தீவிர மாணவர் போக்கினராக இருந்த இவர் விவசாயம் மற்றும் அமெரிக்க "குப்பை உணவிற்கு" எதிராக எதிர்ப்பைக் காட்டும்பொருட்டு McDonald உணவுவிடுதியைத் தகர்த்தபொழுது 1999ல் பொதுக் கவனத்திற்கு வந்த செம்மறியாட்டின் Roquefort பாலாடைக் கட்டி உற்பத்திக்கு மாறினார். அதிலிருந்து இவர் ஒரு பெரிய புகழ்பெற்ற தலைவராக உயர்த்தப்பட்டு, Francois Mitterrand, Lionel Jospin, Jacques Chirac போன்ற சோசலிஸ்டுகளில் இருந்து வலதுசாரி கோலிச Charles Pasqua வரை அரசியல் வாதிகளுடன் நடத்தும் பேச்சுக்களுக்கு அழைக்கப்படுகிறார். McDonald விவகாரத்திற்குப் பின் Pasqua உடன் இவர் ஒரு பொதுமேடையில் விவாதத்தை நடத்தியிருந்தார். போவே பிரான்ஸ் நாட்டில் விவசாயிகளின் கவலைகளை எடுத்துக் கொண்டுள்ள முறை, முற்றிலும் பிரெஞ்சு வர்த்தக நலன்களுக்கு பொருந்துபவையாகத்தான் உள்ளன; குறிப்பாக அமெரிக்காவை எதிர்க்கும் வகையில். ஆயினும், அவருடைய நிலைப்பாடு ஒரு சோசலிச முன்னோக்கோடு எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.

"நவீன - தாராளவாதத்தை" கடத்தல்

புதிய "வெகுஜன அகிலத்திற்கு" உறுப்பினர்களை சேர்க்க முயலுகின்ற வகையில் வேலைத்திட்ட ரீதியாக, பப்லோவாதிகள் மிகப்பரந்த முறையில் குட்டிமுதலாளித்துவ போக்குகள் பலவற்றிற்கேற்ப தம்மை மாற்றியமைத்து கொண்டுள்ளனர். பதினைந்தாம் உலக மாநாட்டின் ஆவணங்களின்படி, "நவீன-தாராளவாதத்துக்கு" எதிரான போராட்டம் தொடர்ச்சியாக மைய மூலோபாய பணியாக விளக்கப்படுகிறது. "நான்காம் அகிலத்தின் பணிகள்" என்ற தீர்மானம் கூறுகிறது: 'நவீன-தாராளவாத' கொள்கையை முறியடிக்கும் போராட்டம் நம்முடைய அரசியல் போராட்டத்தின் மையத்தானமாக இருக்கிறது." ஆவணத்தின் மற்றொரு பகுதி 'சமூக நவீன தாராளவாத' கொள்கையை தோற்கடிக்கும் மூலோபாய பணியை" குறிக்கிறது.

இந்த வகையில், முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்கு எதிரான போராட்டம் மைய மூலோபாய அச்சு என்ற நிலைக்கு உயர்த்தப்படுகிறது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் மற்ற வகைகளுக்கு ஆதரவுக்கான சாத்தியத்தை திறந்து விடுகிறது- உண்மையில், இதுதான் பப்லோவாதிகளால் அவர்களின் வெகுஜன அகிலத்தில் உள்ளடக்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பலரால் நடைமுறையில் கொள்ளப்படுகிறது.

நவீன தாராளவாத பொருளாதார கொள்கை உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் விரிவடைந்து வருவதற்கு புறநிலைக் காரணங்களை ஆராய பப்லோவாதிகள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. உலகப்போருக்குப்பின், ஒப்பீட்டளவில் சமூக சமநிலையை நோக்கங்கொண்ட போருக்குப் பிந்தைய கீன்சிய கொள்கைகளில் இருந்து 1970 களின் முடிவுகளிலும் 1980களின் தொடக்கத்திலும் இடம்பெற்ற பண ரீதியான நவீன தாராளவாத கொள்கைக்கு மாறுவதாக இருந்தது. இந்த முடிவோடு 1979ல் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரால் அமெரிக்க கூட்டாட்சி ரிசேர்வ் வங்கித் தலைவராக நியமிக்கப்பட்ட போல் வோல்க்கர் மற்றும் அதே ஆண்டு இங்கிலாந்து பிரதம மந்திரியாக பதவி ஏற்ற மார்கரெட் தாட்சர், மற்றும் 1981ல் அமெரிக்க ஜனாதிபதியாக கார்ட்டருக்குப் பின் வந்த ரொனால்ட் றேகன் ஆகியோருடைய பெயர்கள் நெருக்கமான தொடர்பு உடையவை ஆகும். வோல்க்கர், தாட்சர், மற்றும் றேகன், இன்னும் இந்த நபர்களை உயர்த்திய முதலாளித்துவ செல்வந்த தட்டு ஆகியோர் முதலாளித்துவ அமைப்பின் ஆழ்ந்த நெருக்கடிக்கு எதிர்ச்செயலாற்றினர்.

இந்த நெருக்கடி 1960 களிலேயே தொடங்கிவிட்டது. இலாப விகித வீழ்ச்சியில், வளர்ந்துவரும் கடன்களில் மற்றும் அதிகரிக்கும் பணவீக்கத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நெருக்கடி தொழிலாள வர்க்கத்தால் போர்க்குணமிக்க போராட்டங்களின் வெடிப்புக்கு இட்டுச்சென்றது. மாணவர் எதிர்ப்புக்களுடன் வியட்நாம் போருக்கு எதிரான இயக்கத்தையும் பிணைத்து பல நாடுகளில் வலதுசாரி அரசாங்கங்களை வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றது.

ஆரம்பத்தில் இதற்கு முதலாளித்துவ வர்க்கம் சமூக சலுகைகளை காட்டினாலும், அது பொருளாதார நெருக்கடியை மோசமாக்கியது. 1970 களின் இறுதியில், முதலாளித்துவ வர்க்கம் தாக்குதலை தொடங்கியது. தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகளை பெரிதும் குறைக்கும் வகையில், வோல்க்கர் வேண்டுமென்றே வட்டிவிகிதத்தைப் பெரிதாக உயர்த்தியதன் மூலம் பொருளாதார பின்னடைவை உருவாக்கினார். தாட்சரும், றேகனும், மூலதனம் குறைவூதிய உழைப்பு சந்தைகளில் செல்லக்கூடிய வகையில் சர்வதேச நிதிச்சந்தைகளின்மீது இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தினர்; இதனால் புதிய பகுதிகள் சுரண்டலுக்கு கிடைத்ததோடு, இலாபவிகித உயர்வும் புதுப்பிக்கப்பட்டது.

இந்த சீர்திருத்த அமைப்புக்கள் வேறு எந்த மாற்றையும் கொடுக்க முடியவில்லை. 1981ல் பிரான்சுவா மித்திரோன் பிரான்சில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு, தொடர்ச்சியான சமூக சீர்திருத்தங்களை புகுத்த முயற்சி செய்தார். ஆனால் இவை விரைவில் சர்வதேச நிதிச் சந்தைகளில் கெடுதலான விளைவுகளை ஏற்படுத்தியதால் தகர்ந்து விட்டன.

தொழிற்சங்கங்கள் ஒரு தோல்விக்குப் பின் மற்றொன்று என அமைத்து, வெளிப்படையாக வேலைநிறுத்தங்களை காட்டிக்கொடுத்தன அல்லது அவற்றை தனிமைப்படுத்தின. 1981ம் ஆண்டு றேகன் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சங்கத்தின் (PATCO) மீது மிகப் பெரிய தோல்வியை சுமத்தி, அமெரிக்க தொழிற்சங்கக் கூட்டமைப்பான AFL-CIO அதைக் கைவிட்டுவிட்டதும் நடந்தது. ஐரோப்பாவில் பெரிய வேலைநிறுத்தமான பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தமும் (1984-85) தோல்வியில் முடிந்தது, ஏனைய தொழிற்சங்கங்களும், தொழிற் கட்சியும் நேரடியாக தாட்சருடன் மோதலை தவிர்க்கும் வகையில் அதற்கு ஆதரவை கொடுப்பதை தவிர்த்தன. தன்னுடைய பங்கிற்கு, சுரங்கத்தொழிலாளர்களின் தலைவரான பழைய ஸ்ராலினிசவாதி ஆர்தர் ஸ்கார்கில், தொழிற்சங்க, தொழிற் கட்சி அதிகாரத்துவத்தை அரசியல் முறையில் சவால்விடுவதை தவிர்த்து விட்டார்.

கடந்த 20 ஆண்டுகளின் வரலாறு, தொழிலாள வர்க்கத்திற்கு தாங்கள் ஒரு மாற்றுமுறையிலான முதலாளித்துவத்தின் மனிதாபிமான வடிவத்தால் நவீன தாராண்மைவாத கொள்கையை மாற்றீடு செய்வோம் என வாக்களித்து, அந்த உறுதிமொழியில் தோல்வியுற்ற அரசியல் அமைப்புக்களின், மற்றும் தலைவர்களின் அரசியல் சடலங்களால் குப்பைகூளமாகியுள்ளது. இந்தப் பட்டியலில், லியோனல் ஜொஸ்பன், ஒஸ்கார் லாஃபொன்ரைன் (ஜேர்மனியில் தற்போதைய சமூகஜனநாயக-பசுமைக் கட்சி கூட்டணி அமைவதை உருவாக்கியவர்), இத்தாலியில் கம்யூனிஸ்டுகளுக்குப் பின் வந்தவர்கள், மற்றும் ஜேர்மன் PDS (Party of Democratic Socialism, கிழக்கு ஜேர்மனியை ஆண்டிருந்த ஸ்ராலினிசக் கட்சிக்குப் பின்தோன்றலாக வந்தது), இவை அனைத்தும் அடங்கும். இதன் சமீபத்திய உதாரணம் பிரேசிலில் தொழிலாளர் கட்சியால் (PT) ஏற்படுத்தப்பட்ட அரசாங்கம் ஆகும்; இதில் பப்லோவாதிகள் தங்கள் சொந்த அமைச்சரை கொண்டுள்ளனர்.

முதலாளித்துவ அடிப்படையை சவால்செய்யமால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலை வெற்றிகரமாக எதிர்த்து நிற்க முடியாது என்பது அதிகரித்த அளவில் தெளிவாகி உள்ளது. "நவீன தாராளவாத கொள்கைக்கு" சோசலிசத்தை தவிர வேறு ஒரு மாற்றீடு இருக்கிறது என்னும் கூற்று, பொய்த்தோற்றங்களை ஏற்படுத்தி தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை செயலற்றதாக்குவதற்குத்தான் பயன்படும் என்றும் அவர்களை முதலாளித்துவ அமைப்புக்களுடன் சமரசம் செய்விக்கும் நிலையைத்தான் ஏற்படுத்தும் என்பதும் தெரிகிறது. அத்தகைய கொள்கைகளிலிருந்து தவிர்க்க முடியாமல் எழும் மயக்கத்தெளிவு அடிக்கடி வலதுசாரி அமைப்புக்களால் சுரண்டப்டுகின்றன.

"புதுமுறை புகுத்தல்வாதம்", "குறுங்குழுவாதம்" இவற்றிற்கு எதிராக

சந்தர்ப்பவாதிகளையும் குட்டி முதலாளித்துவ பாசாங்குக்காரர்களையும் தங்களின் "வெகுஜன அகிலத்தில்" உற்சாகத்துடன் பப்லோவாதிகள் வரவேற்கும்போது, அவர்கள் "புதிய முறை" மற்றும் "குறுங்குழுவாதம்" இவற்றிற்கு எதிராகவும் சமரசத்திற்கு இடம் கொடாத போரை அறிவிக்கின்றனர். மனநோய்க்குட்பட்ட கூச்சல் போல் அவர்கள் "முடிந்தமுடிவு", "தவறிழைக்காத தலைமை", "புரட்சிகரமான விடைகள்" இவற்றிற்கு எதிராக, தாங்கள் மனத்தில் கொண்டுள்ள அமைப்புக்களின் பெயரைக் கூறாமல் கோஷம் எழுப்புகின்றனர். இந்தப் பல்லவி அடிக்கடி, பதினைந்தாம் உலக மாநாட்டின் பல டஜன் பக்கங்கள் கொண்ட தீர்மானங்களிலும், முடிவுகளிலும் தொடர்ந்து வருகிறது.

"நான்காம் அகிலத்தின் பணிகள்" என்ற தீர்மானம், "இயக்கத்தின் மீது ஒட்டுண்ணியாக இருக்கும் அல்லது அடிமைப்படுத்தும் ஓர் அறிவொளி சார்ந்த, ஆணவம் மிகுந்த, முன்னணி பற்றிய கருத்துருவை" எதிர்க்கிறது. இது "வலிமையான புரட்சிகர விடைகளையும் ஒரு போர்க்குணமிக்க தலையீட்டையும் நாடும் இளைஞர்கள் உள்ளத்தில் குறுங்குழுவாத தீவிரக் கருத்தோட்டங்கள் பூட்டித் தாழிடப்படுவதற்கு" எதிராக அது எச்சரிக்கை விடுக்கிறது. இத்தகைய கருத்துக்கள் ஆவணம் முழுவதும் எண்ணிறைந்து காணப்படுகின்றன.

"குறுங்குழுவாதம்" என்பது மார்க்சிசவாதிகளைப் பொறுத்தவரையில், செயலற்ற முறையில் ஒன்றும் செய்யாதிருத்தலும், அருவமான கோட்பாடுகளை, நடைமுறை அரசியல் பணிகள், போராட்டங்கள் இவற்றிற்கு தொடர்புபடுத்த இயலாத தன்மை என்பதும், மேலும் வர்க்கப் போராட்டம் பற்றிய உண்மையான வளர்ச்சி பற்றி போதிய அளவு அறிந்து கொள்ளாத தன்மை இணைந்திருப்பதும் ஆகும். இறுதிப்பகுப்பாய்வில், குறுங்குழுவாதம் என்பது சந்தர்ப்பவாதத்தின் மறுபுறமாகும். ஒரு சந்தர்ப்பவாதி தத்துவார்த்த முன்மொழிவுகளையும் கோட்பாடுகளையும் துறந்து, நிலவும் அரசியல் நீரோட்டத்துடன் நீந்துவார் அதேசமயம், குறுங்குழுவாதி தன்னுடைய அருவக் கோட்பாடுகளுக்கு முறையிடுவார் மற்றும் நீரில் இறங்க மறுப்பார். எனவேதான், குறுங்குழுவாதம் பற்றிய கட்டுரை ஒன்றில் ட்ரொட்ஸ்கி தெளிவாக குறிப்பிடுகிறவாறு குறுங்குழுவாதி, "பொதுவாக, தன்னுடைய கொள்கை நனைந்துவிடுமோ என்ற பயத்தில் நீந்தச் செல்வதில்லை. அவர் கரையில் உட்கார்ந்துகொண்டு, வர்க்கப் போராட்ட வெள்ளத்தின் அறநெறி பற்றி விரிவுரைகளை படிக்கிறார். ஆனால் சில சமயம் நம்பிக்கை இழந்த ஒரு குறுங்குழுவாதி, திடீரெனத் தலைகீழாக நீரில் குதித்து, இடைநிலைவாதியை இறுக்கிப்பிடித்துக் கொண்டு அவரும் மூழ்குவதற்கு உதவியாக இருக்கிறார்."(7)

பப்லோவாதிகள் குறுங்குழுவாதத்தை வேறுவிதத்தில் விளக்கம் கற்பிக்கின்றனர். அவர்களுக்கு, அது கொள்கைகள் பற்றிய பாதுகாப்பு மற்றும் வேலைத்திட்ட ரீதியான தெளிவு, தங்களுடைய அரசியலை தன்னியல்பாக வரும் இயக்கத்தின் அரசியல் நனவின் மட்டத்திற்கு தாழ்த்திக்கொள்ள மறுப்பைக் காட்டுதல், சந்தர்ப்பவாதத்துடன் சமரசத்திற்கு இடமில்லாத வகையில் விரோதப் போக்கு என்பதாகும் - அதாவது சுருக்கமாக, எல்லாம் ஒரு புரட்சிகர மார்க்சிச அமைப்பின் சிறப்பியல்பாகும்.

வேர்க்கமோ எழுதுகிறார்: "புரட்சிகரமான மார்க்சிச அமைப்பாக இருப்பதாகக் கூறும் ஒரு இயக்கத்திற்கான தேர்வு மிக எளிதானது: வெளியே திறந்துவைத்து, உள் இயங்கியல் ஆய்வை சுதந்திரமாய் கட்டவிழ்த்துவிடுதல் (தவிர்க்கமுடியாத வழக்கத்திலுள்ளதற்கு மாறாக, சந்தேகம், சிறுகூறுகளாய்ப் பிரித்தல் இவற்றுடன்) அல்லது 'சரியான' அரசியல் வழியை திணிப்பதற்கு, செயல்முறை கட்டுப்பாட்டை வலியுறுத்துவதற்கு, 'தவறிழைக்கா தலைமை' யை உறுதிப்படுத்துவதற்கு, ஆய்வுகளையும் தத்துவத்தையும் 'முடிந்தமுடிவாகக் கொள்ளுதல்' என்பதன் மூலம் விவாதங்களை நசுக்குதல்

இந்த பப்லோவாத நிர்வாகக் குழு உறுப்பினர் எல்லாவற்றையும் தலைகீழாக்குகிறார். எப்படி ஒரு சரியான அரசியல் வழியை காப்பது, விவாதத்தை "நசுக்க" பயன்படும் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும். சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம், மற்றும் தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ கருவிகளில் சற்று அனுபவம் எவருக்கேனும் இருந்தால், இந்த அமைப்புக்களின் பகுதியாக எந்தவிதமான கொள்கை கோட்பாடுகள் சம்பந்தமாகவும் ஆழ்ந்த கடுவெறுப்பு கொள்கின்றனர் என்பது, எவ்வாறு உண்மையான ஜனநாயக முறையிலான விவாதங்களை படிப்படியாக நசுக்குவததுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது என்பதை அறிவார்கள். அதிகாரத்துவத்தினர் யதார்த்தத்தை நேரடியாகவும் நாணயத்துடனும் எதிர்கொண்டு தங்கள் அரசியல் விருப்பங்களை வெளியிட மறுத்தும், திறனற்றும் செயல்படும் நிலைமையின் கீழ், இந்த அமைப்புக்களின் மாநாடுகள், தவிர்க்க முடியாத வகையில், அதிகாரத்துவத்தின் சூழ்ச்சிகள், கொள்கையற்ற, திரைக்குப் பின் செயல்படுத்தும் தந்திரோபாயங்கள், அச்சுறுத்தலுக்கு முயற்சிகள், ஆகியவற்றால் பண்பிடப்படுகின்றன.

ஒரு "தவறிழைக்காத தலைமை" நிச்சயமாக ஒரு மார்க்சிச அமைப்பில் வெளிப்படாது; அதன் தலைமையின் அரசியல் பொறுப்பு அதன் மிக முக்கியமான சொத்தாகும். அத்தகைய பொறுப்பு எந்த அளவிற்கு அதன் அரசியல் வளர்ச்சிகளை சரியாக மதிப்பீடுகள் செய்வதில் மற்றும் அவற்றின் விளைவுகளை முன்கணிப்பதில் அதன் திறனை விளக்கிக்காட்டக் கூடியதாய் இருக்கிறது என்ற மட்டத்திற்கு வளர்ச்சி அடையும். ட்ரொட்ஸ்கியை மீண்டும் மேற்கோளிட்டால், "இன்றைய பொறுப்புக்களில் இருந்து விடுபடும், ஆனால் நாளை வரக்கூடிய பெரும் அழிவை தயார் செய்யும் 'எளிதான', 'வசதியான' முடிவுகளை" எந்த அளவிற்கு தலைமை ஏற்க மறுக்கிறதோ, அந்த அளவிற்கு அது வளரும்.(8) தவறிழைக்காத தலைமை பற்றிய வேர்க்கமோ- இன் வெறுப்புணர்ச்சி, அரசியல் தெளிவை, ஸ்ராலினிஸ்டுகளால் மரபுவழி பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளுடன் சமன்படுத்தும் ஒரு பண்பாடற்ற முயற்சி ஆகும்; ஸ்ராலினிஸ்டுகள் தங்களின் "தவறிழைக்காததன்மை"- யை வாதங்கள் மூலம் அல்லாமல் KGB உடைய சித்திரவதை கூடங்கள் மூலம் விளக்கிக் காட்டினர்.

பப்லோவாத அகிலத்தின் தீர்மானங்களில் இருந்து ஒரு விஷயமாவது தெளிவாகிறது: திறந்த மனப்பான்மையை போதித்துக் கொண்டு அனைத்து சந்தர்ப்பவாதங்களுக்கும் சகிப்புத்தன்மை காட்டும் அதேவேளை, அத்தகைய சகிப்புத் தன்மை மார்க்சிச புரட்சியாளர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு இல்லை என்பதாகும். இதை ஒரு வெற்று அச்சுறுத்தலாக விளக்கம் காணக்கூடாது. 1930களின் மக்கள் முன்னணி மாஸ்கோ விசாரணைகளுடனும், உலகெங்கிலும் இருந்த மார்க்சிச புரட்சியாளர்களை விரட்டித் துன்புறுத்தியதோடும் சேர்ந்திருந்தது என்பது வரலாற்று உண்மை ஆகும். ஸ்ராலினிஸ்டுகள், பின்னர் அராஜகவாதிகளும் மற்றும் POUM காரர்களும் ஸ்பெயினில் முதலாளித்துவ அரசில் பொறுப்புக்களை எடுத்த அதேவேளை, கடுமையான நிபந்தனைகளை விதித்தல் அல்லது துணிவான நடவடிக்கைகள் மூலம் முதலாளித்துவத்துடனான அவர்களின் சமரசத்தை அச்சுறுத்திய எவரையும், ஸ்ராலினிச இரகசியப் போலீசார் பின்னணியில் இருந்து கொண்டு, அராஜகவாதிகள் மற்றும் POUM உறுப்பினர்கள் உட்பட பலரை அழித்துவிட உதவினர்.

உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியின் பின்னணியில், பப்லோவாத பதினைந்தாம் உலக காங்கிரஸ் நடைபெற்றது. ஈராக்கியப் போர், அமெரிக்க சமுதாயத்தில் ஆழ்ந்த சமூக துருவமுனைப்படல் ஏற்பட்டுள்ளதற்கு குறைந்த பங்கைக் கொண்டிருக்கவில்லை, அதற்கு ஆளும் செல்வந்த தட்டிடம் தக்க விடையில்லை

ஐரோப்பாவில், புஷ் அரசாங்கத்தின் வலியத்தாக்கும் நடவடிக்கைகளுக்கான விளைவு, தத்தம் படைவலிமையை பெருக்கும் திட்டங்களும், அதேநேரத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துதலும், அதன் மூலம் சமூக நெருக்கடியை தீவிரப்படுத்துவதும்தான்.

முந்தைய காலங்களில் இதுபோன்ற நெருக்கடிகளுக்கு முதலாளித்துவம், சீர்திருத்தவாத தொழிலாளர் அமைப்புக்களை பெரிதும் நம்பமுடிந்தது, ஆனால் அவை இன்று பெருமளவு செல்வாக்கிழந்து விட்டன. இந்தச் சூழ்நிலையில், பப்லோவாதிகள் ஒரு புதிய "வெகுஜன அகிலம்" என்ற அமைப்பை உருவாக்க முன்முயற்சித்தல், ஒரு புதிய கருவியைக் கொண்டு, தொழிலாள வர்க்கம், இளைஞர் ஆகியோரிடம் இருந்து வளர்ந்துவரும் எதிர்ப்பை நீர்த்துப்போகவைப்பதற்கான ஒரு புதிய கருவியை உருவாக்கும் ஒரு முயற்சியே ஆகும். அனைத்து வகை சந்தர்ப்பவாதத்திற்கும் கதவு திறக்கும் பப்லோவாதிகள், "குறுங்குழுவாதம்" மீது, அதாவது புரட்சிகர மார்க்சிசத்தின் மீது ஈவிரக்கமற்ற போரை அறிவிக்கிறார்கள்.

முதலாளித்துவ ஆட்சியை பாதுகாப்பதற்கு பப்லோவாதிகள் எந்த அளவிற்கும் செல்வதற்கு தயாராக இருக்கிறார்கள். சமீபத்தில் பதினைந்தாம் மாநாட்டில் ஒரு புதிய பாணியில் தெளிவாக இது நிரூபிக்கப்பட்டது. இக்கூட்டம் உத்தியோகபூர்வ பிரேசிலிய பகுதியின் உறுப்பினரும், ஜனாதிபதி லுலா மந்திரிசபை உறுப்பினரும், அரசாங்கத்தின் கொள்கைக்கு முழுப் பொறுப்பும் கொண்டிருப்பவருமான Miguel Rosetto விற்கு சகோதரத்துவ வாழ்த்துக்களுடன் தொடங்கியது. பிரேசிலிய முதலாளித்துவத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும், பெரும் நிம்மதி அளிக்கக் கூடிய வகையில், லூலா அரசாங்கம் புரட்சிகர கிளர்ச்சி எழுச்சிகளின் ஆபத்தை தற்காலிகமாக தடுத்துவைத்துள்ளது. இவற்றின் அபிவிருத்திகள் பற்றி வரவிருக்கும் கட்டுரைகளில் அலசப்படும்.

தொடரும்

Notes:

1) "Fifteenth World Congress of the Fourth International" by François Vercammen, International Viewpoint, 349, May 2003 (http://www.3bh.org.uk/IV/Issues/2003/IV349/IV349 06.htm).

2) Leon Trotsky, The Transitional Programme, New Park Publications, 1980, p 58.

3) "Role and Tasks of the Fourth International," International Viewpoint, 351/2, Summer 2003 (http://www.3bh.org.uk/IV/Issues/2003/IV3512/IV3512 06.htm).

4) "A New World Situation," International Viewpoint, 351/2, Summer 2003 (http://www.3bh.org.uk/IV/Issues/2003/IV3512/IV3512 02.htm)

5) Leon Trotsky, Marxism and the Trade Unions, New Park Publications, 1972, pp. 5-6.

6) Leon Trotsky, The Permanent Revolution, New Park Publications.

7) "Sectarianism, Centrism and the Fourth International," Writings of Leon Trotsky (1935-36), New York 1977, p. 154.

8) ibid., p. 152.

Top of page