World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India's new prime minister: a representative of corporate interests par excellence

இந்தியாவின் புதிய பிரதமர்: கம்பெனி நலன்களைக் காப்பதில் தன்னிகரற்ற ஒரு பிரதிநிதி

By Deepal Jayasekera
25 May 2004

Back to screen version

இந்தியாவின் பிரதமராக சென்ற சனிக்கிழமையன்று மன்மோகன் சிங் பதவியேற்றிருக்கிறபொழுது உள்நாட்டு பெரிய வர்த்தக நிறுவனங்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தங்களுக்கு வேண்டிய ஆளை தலைமை பதவியில் பெற்றிருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை. ''திருவாளர் தூய்மையின் தூய்மையென்றும்'', "இந்தியாவின் பொருளாதார விடுதலைக்கு வித்திட்டவர்" என்றும் "இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் தந்தை" என்றும் பல்வேறு வகைகளில் அறியப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் நியமனம் காங்கிரஸ் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அரசாங்கம் பொருளாதார சீரமைப்பு மற்றும் தனியார்மய திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தயங்காது என்பதற்கு உத்திரவாதம் ஆகும்.

முன்னய பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் ஏழைமக்கள் மீது கொண்டுவந்த சந்தை பொருளாதார சீர்திருத்தங்களால் ஏற்பட்ட காட்டுமிராண்டித்தனமான பாதிப்பின் காரணமாக பெரும்பகுதியில் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து சிங் பிரதமர் பதவி ஏற்றிருக்கிறார். பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை புதிய நிர்வாகம் மந்த கதியில் கொண்டு செல்லக்கூடுமென்ற கவலையின் காரணமாக சென்றவாரம் பங்குச் சந்தைகளில் பங்குவிலைகள் படுவீழ்ச்சியடைந்தன மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தான் ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்து சிங்கை பிரதமர் ஆக்க முடிவு செய்தவுடன் தான் மீண்டும் பங்குவிலைகள் உயரத் தொடங்கின.

சிங்கை பிரதமராக நியமிப்பது என்ற முடிவை உடனடியாக பெரு வர்த்தக அமைப்புக்களின் தலைவர்களும் ஆய்வாளர்களும் பாராட்டினர். வாஷிங்டனிலிருந்து இயங்கிவரும் முன்னாள் சர்வதேச முதலீட்டு வங்கியாளர் Martin Hutchinson ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது, ''(சிங்கைப் போன்ற) ஒரு சீர்திருத்தக்காரர் பொருளாதார முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு பணியாற்றுவார். அதே நேரத்தில் பழைய சோசலிஸ்ட் தலைவர் அல்லது சோனியா காந்தியைப் போன்ற அறிவுஜீவி என்ற பின்னணியில்லாத பலவீனமான தலைவரால் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புக்கள் கணிசமான அளவிற்கு குறைகின்ற ஆபத்து உண்டு'' என்று கூறியிருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தெற்கு ஆசிய ஆய்வுகள் பற்றிய பேராசிரியர் C. ராஜா மோகன் அதற்குமேலாக மிகுந்த உற்சாகத்தோடு பாராட்டியுள்ளார்: '' இதைவிட சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க முடியாது...அது வெளி உலகிற்கு நல்லதொரு சமிக்கையையும் கூட அனுப்பும். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்வேகத்தில் வளருமானால் அது சர்வதேச விவகாரங்களில் பெரியபங்களிப்பை செய்ய முடியும்''.

சிங் ஒரு சீக்கியர் இந்தியாவின் முதலாவது இந்து அல்லாத பிரதமர் என்பதை ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி செய்திகளை தந்திருக்கின்றன. அத்துடன் BJP இந்து மேலாதிக்கவாத செயல்திட்டத்திற்கு மாற்றாக காங்கிரஸ் மதச்சார்பற்ற மாற்றைத்தர முடியும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் இந்தத் தேர்வு அமைந்திருப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டின. சிங்கின் நீண்டகால அடிப்படையிலான சாதனை அவர் பொருளாதார நிபுணர் மற்றும் பகிரங்க சந்தை சீர்திருத்தங்களை முழுமையாக ஆதரித்து நிற்பவர் என்ற காரணத்தினால்தான் வர்த்தக வட்டாரங்களில் அவர் தேர்விற்கு மிகப்பெரிய ஆர்வப்பெருக்கு வரவேற்புக் கிடைத்துள்ளது என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.

1991-ல் அவர் நிதியமைச்சராக நியமிக்கப்படும் முன்னர், சிங் பல்கலைக்கழக பேராசிரியராகவும், இந்திய பொருளாதார அதிகாரத்துவத்தில் முன்னணிப்பதவிகளிலும் நீண்ட அனுபவம் பெற்றிருந்திருந்தார். 1932-ம் ஆண்டு தற்போது பாக்கிஸ்தானிலுள்ள Gah- கிராமத்தில் அவர் பிறந்தார், இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்த அவர், 1960- களிலும், 1970-களிலும் டில்லி பல்கலைக்கழகத்தில் எண்ணிறைந்த கல்வித்துறை பதவிகளை வகித்தார்.

சிங் 1970-களிலும், 1980-களிலும் அரசாங்க மூத்த அதிகாரியாக பலதுறைகளில் பணியாற்றியுள்ளார். 1976-முதல் 1980-வரை நிதித்துறை செயலாளராக ஆகி, அற்குப்பின்னர் 1982-முதல் 1985- வரை ரிசேர்வ் வங்கி கவர்னராக பணியாற்றியுள்ளார். இதர வாரியங்கள் கமிஷன்களிலும் அவர் பணியாற்றியிருக்கிறார். மிகவும் குறிப்பிடத்தக்கவகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கவர்னராக பணியாற்றியுள்ளார் மற்றும் சர்வதேச நிதி நிறுவனத்திலும் (IMF) பணியாற்றியிருக்கிறார். இந்திரா காந்தியில் தொடங்கி பல பிரதமர்களுக்கு பொருளாதார ஆலோசகராக பணியாற்றியுள்ளார். நாட்டின் அதிகாரம் படைத்த திட்ட கமிஷனின் துணைத்தலைவராகவும் அவர் சேவை புரிந்திருக்கிறார். பொதுவாக இந்தியத்திட்ட கமிஷன் தலைவராக பிரதமர்தான் பொறுப்பேற்பார்.

இந்திய பொருளாதாரத்தை சீரமைத்தவர் என்ற வகையில்தான் அவருக்கு செல்வாக்கு அதிகம் ஏற்பட்டது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தினால் அவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். சில விமர்சகர்கள் குறிப்பிடுவதைப்போல் இந்தியாவின் முந்திய கொள்கைகள் காங்கிரஸ் சோசலிசம் என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் இந்தியாவில் இருந்தது மிக உயர்ந்த காப்புவரித்தடைகளால் பாதுகாக்கப்பட்ட பெருமளவிற்கு நெறிமுறைபடுத்தப்பட்ட முலாளித்துவ பொருளாதாரம் தான். பிற நாடுகளில் நிலவியதைப் போல் 1980-களில் தொடங்கிய உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கின் பூகோள ஒருங்கிணைப்பு, இந்தியாவின் தேசிய பொருளாதார நெறிமுறைகளைக் கீழறுத்ததது. இதன் விளைவாக மிகப்பெருமளவில் நிதிப் பற்றாக்குறையும் நடப்புக் கணக்குப்பற்றாக்குறைகளும் உருவாயின, பண வீக்கம் அதிகரித்தது.

சிங் தனக்குக்கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய பொருளாதாரத்தை கடுமையாக சீரமைத்தார். பொருளாதார விவகாரங்களில் தனக்கு முழு நடவடிக்கை சுதந்திரம் வேண்டுமென்ற நிபந்தனையடிப்படையில்தான் அவர் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கீன்ஸிய பொருளாதார தத்துவங்களின் படி அரசாங்க தலையீட்டை பயன்படுத்துவதில் அன்றைய முன்னணி பொருளாதார நிபுணர்களான Joan Robinson மற்றும் Maurice Dobb ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர். ஆனால் 1980-கள் வாக்கில் இதர பல பொருளாதார நிபுணர்களைப்போல் றொனால்ட் றேகன் மற்றும் மார்க்கரட் தாட்சர் ஆகியோரின் மோசமான சுதந்திர சந்தைக்கொள்கைகளை முழுமனதாக சிங் தழுவிக்கொண்டார்.

2001-ல் அமெரிக்காவின் PBS TV-க்கு சிங் அளித்த தெளிவான பேட்டியில், அவர் தனிப்பட்ட முறையில் தாட்சருக்கு தனது மரியாதையை தெரிவித்துக்கொண்டார். ''திருமதி தாட்சரை பாராட்டுகிற பலர் இந்தியாவில் உள்ளனர். அவரை பலமுறை சந்திக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரை நான் பெருமளவிற்கு பாராட்டுகிறேன். ஆனால் பொருளாதார சீர்திருத்தங்களில் அவரது தாக்கம் மிகக்குறைவானது என்றே நினைக்கிறேன்'' என்று அவர் சொன்னார்.

1991-ல் சிங் இறக்குமதி காப்புவரிகளை வெட்ட தொடங்கினார், அமெரிக்காவின் காப்பரேஷன்களான Ford, மற்றும் AT&T- உட்பட இந்தியத் தொழில்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் புகுவதற்கு வழியமைத்துக் கொடுத்தார். இரண்டு கட்டங்களில் இந்திய நாணய மதிப்பைக் குறைத்தார். லைசன்ஸ் ராஜியத்தை சிதைக்கத் தொடங்கினார். தனியார் வர்த்தக நிறுவனங்கள், தொழில்களை தொடங்குவதற்கு அரசாங்கத்தின் உரிமங்களை பெறுவதும் அரசாங்க நெறிமுறைகளுக்கு உட்படுவதும் "லைசன்ஸ் ராஜ்ஜியம்" என்றழைக்கப்பட்டு வந்தது, அதனை சிங் நீக்கினார்.

சிங்கின் பங்களிப்பு பற்றி செய்திப்பத்திரிகையின் கட்டுரையாளரும் Procter & Gamble India நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியுமான குருச்சரன்தாஸ் அண்மையில் கூறினார்: ''அடிப்படையிலேயே அவர் ஒரு வலுவான பொருளாதார நிபுணர், சந்தைகளில் நம்பிக்கை கொண்டவர் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன், 1991-முதல் 1993-வரை அவரது வரலாற்று அடிப்படையிலான சாதனையின் பாரம்பரியம் மகத்தான மாற்றாகும். உண்மையிலேயே நாம் அவருக்கு மிகப்பெருமளவில் கடன் பட்டிருக்கிறோம்''.

பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறபோது எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் துச்சமாக நடத்தினார். நிதியமைச்சர் என்ற முறையில் கன்னி உரையாற்றிய சிங், விக்டர் ஊகோவை மேற்கோள் காட்டி, ''ஒரு கருத்து மண்ணுலகில் வலம் வரும் காலம் கனிந்துவிட்டதென்றால் அதைத்தடுத்து நிறுத்திட எந்த சக்தியாலும் முடியாது'' என்று அறிவித்தார். சந்தைச் சீர்திருத்தங்களின் தாக்கம் பெரும்பாலும் உழைக்கும் மக்களையும் கிராமப்புற ஏழைகளையும்தான் வாட்டியது, வேலை வாய்ப்புக்கள் குறைக்கப்பட்டன, மானியங்கள் இரத்துச் செய்யப்பட்டன, தொழிலாளர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டன மற்றும் வாழ்க்கைத்தரம் குறைந்தது.

பொதுமக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியை BJP பயன்படுத்திக் கொள்வதற்காக தேசியவாதத்தையும், இந்து வகுப்புவாதத்தையும் தூண்டிவிட்டது. பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு வலுத்துவந்தது. 1992-மற்றும் 1993-ல் பல முக்கிய மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றது. சிங்கிற்கும் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தது. ''அந்த எதிர்ப்புக்கள் எனது முயற்சிகளின் எல்லையைக் குறைத்துவிட்டது'' என்று சென்ற டிசம்பரில் பைனான்சியல் எக்ஸ்பிரசுக்கு சிங் தெரிவித்தார், ஆனால் அந்த எதிர்ப்பு அவரது கொள்கைகளை எந்த வகையிலும் மாற்றிவிடவில்லை.

சிங் பொதுமக்களது ஆதரவு இல்லாதவர் என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையில் அமைந்திருக்கும் ஒரு உண்மை என்ன வென்றால் அவர் எப்போதுமே இந்த மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. அவர் நிதியமைச்சராக ஆக்கப்பட்டதும் காங்கிரஸ் கட்சி அவருக்கு ராஜ்ஜியசபை உறுப்பினர் பதவியை பெற்றுத்தந்தது. அது இந்தியாவின் பாராளுமன்றத்தில் மேல் சபை அதன் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அல்ல, மறைமுகமாக ஒவ்வொரு மாநில சட்டசபையும் ராஜியசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறது. 1999-ல் ஒரு முறை மன் மோகன் சிங் தெற்கு தில்லி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஆளும் வட்டாரங்களில் அவர் பிரதமரானதற்கு பொதுவான வரவேற்புள்ளது என்றாலும் பொருதாளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு செலுத்தி மிகவும் பலவீனமான நிலையிலுள்ள கூட்டணி அரசாங்கத்தை பராமரிக்க முடியுமா என்ற கவலையும் அங்கு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு டஜனுக்கு மேற்பட்ட சிறிய மாநில மற்றும் சாதிக்கட்சிகளை கொண்ட கூட்டணிக்கு தலைமை வகிப்பதுடன் இரண்டு பிரதான ஸ்ராலினிச கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPIM) ஆகியவற்றை சார்ந்திருக்கிறது.

"Robust Economic Analysis அமைப்பின் தலைவரான P.K.Basu ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ''இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை பிரதமர் பதவிக்கு உயர்ந்திருப்பது சந்தைப் பொருளாதாரத்தின் கண்ணோட்டத்தில் ஆக்கபூர்வமானதுதான். ஆனால் அளவிற்கதிகமான உற்சாகப் பெருக்கோடு டாக்டர் சிங்கை வரவேற்பது குறித்து நான் ஒரு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். அவர் ஒரு பொருளாதார சீர்திருத்தக்காரர் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அவரது அரசியல் நிர்வாகத்திறமை இன்னமும் சோதிக்கப்படவில்லை''.

பொருளாதார சீரமைப்பிற்கு எதிர்ப்பு நிலவுவதை சிங்கே தெளிவாக அறிந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் வெற்றி பெற்றது முந்திய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்ததாலும், அவற்றால் ஏற்பட்ட வேலை வாய்ப்பு பாதிப்பு, வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி ஆகியவற்றை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டதாலும் தான். அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றபின்னர் சிங் சென்றவாரம் ஒரு உறுதி மொழி அளித்துள்ளார்: ''இந்த உலகிற்கும் நமது மக்களுக்கும் பொருளாதார சீர்திருத்த முன்மாதிரியை நாங்கள் தருவோம், அந்த முன்மாதிரி, பொருளாதார வளர்ச்சியை பெருக்கும் ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் புதிய வாய்ப்புக்களை உருவாக்கிக் தருவதாக அமைந்திருக்கும்''.

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்ட்டோருக்கு உதவுகின்ற நோக்கத்தில் பொருளாதார சீர்திருத்தங்களை வளர்ப்பதற்கு சிங் மேற்கொள்ளும் முயற்சிகள் BJP மேற் கொண்ட முயற்சிகளை போன்றுதான் அமையும். அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னர் BJP தலைமையிலான அரசாங்கம் 20-மில்லியன் டாலர்களை செலவிட்டு ஆடம்பரமாக ''இந்தியா ஒளிர்கிறது'' விளம்பரத்தை செய்தது. தகவல் தொழில் நுட்ப அடிப்படையில் அமைந்த சேவைகளுக்கு இந்தியாவை மலிவு ஊதிய உழைப்பு அரங்காக மாற்றுவதற்கு இந்த விளம்பரம் செய்யப்பட்டது. இந்தியாவில் பெருகிவரும் வெளிநாட்டு முதலீடுகளால் நடுத்தர வர்க்கங்களை சார்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவு பயனடைந்துள்ளது. இதை முன்னிறுத்தி BJP செய்த பிரச்சாரத்தினால் உண்மையிலேயே வாழ்க்கைத்தரம் மோசமடைந்து விட்ட மிகப்பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே BJP பதவியிலிருந்து இறக்கப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைகளால் உருவாகும் அதிருப்தியை சமாளிப்பதற்கு குறிப்பாக ஸ்ராலினிச கட்சிகளின் அரசியல் சேவைகளை சிங் சார்ந்திருக்க வேண்டிவரும். தேர்தல் பிரச்சாரத்தின்போது CPI மற்றும் CPI(M) இரண்டும் காங்கிரசிற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தன. காங்கிரஸ் பாரம்பரியமாக இந்திய ஆளும் வர்க்கத்தின் கட்சி, வலதுசாரி வகுப்புவாத BJP யோடு ஒப்பிடும்போது காங்கிரஸ் குறைந்த தீங்குதான் என்று இரண்டு ஸ்ராலினிசக் கட்சிகளும் வாதிட்டன. சிங் பதவியில் அமர்த்தப்பட்டதும் உடனடியாக CPI(M) குதித்தெழுந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தது. "ஏழைகள்" மற்றும் ஒடுக்கப்பட்டோர் பற்றி சிங் கூறிய கருத்துக்களை கையில் எடுத்துக்கொண்டு CPI(M) 'பொலிட் பீரோ' உறுப்பினர் சீதாராம் எச்சூரி ''அவர் ஆக்கப்பூர்வமான தொனியில் தொடக்கம் செய்திருக்கிறார்'' என்று தனது ஒப்புதலை வழங்கியிருக்கிறார்.

உண்மையிலேயே சிங் பிரதமராக பதவியேற்றிருப்பது இந்திய அரசியல் கட்டுக்கோப்பு முழுவதிலும் நிலவுகின்ற ஆழமான இடைவெளியை மட்டுமே கோடிட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. அந்தக் கட்டுக்கோப்பில் CPI மற்றும் CPI(M) இரண்டுமே ஒர் அங்கமாகிவிட்டன. மற்றும் சாதாரண உழைக்கும் மக்கள் மிகப்பெரும்பாலோரது நலன்களுக்கு நியாயமான சோசலிச மாற்று ஒன்றே தேவை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved