World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel escalates war of terror in Gaza

காசா பகுதியில் இஸ்ரேல் தனது பயங்கரவாத போரை தீவிரப்படுத்துகிறது

By Jean Shaoul
19 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

சென்ற வாரம் காசா பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீனியருக்கு எதிராக பயங்கரவாத குற்றவியல் போரை மிகப்பெருமளவிற்கு முடுக்கிவிட்டது. இஸ்ரேல் இன ஒழிப்பு நடவடிக்கையை அதிகப்படுத்தியதும், நெருக்கடிக்குள்ளான பாலஸ்தீன மக்கள் தங்களது வீடுகளை துறந்து கையில் கிடைக்கும் தங்களது தட்டுமுட்டுச்சாமான்களோடு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

பாலஸ்தீன போராளி குழுக்களை பலவீனப்படுத்தவும், பல பாலஸ்தீனர்கள் தப்பி ஓடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுவதற்கும், பலவீனப்படுத்தப்பட்டுவிட்ட காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு வகைசெய்யும் மற்றும் தனது எல்லைகளுக்கப்பால் மிகப் பெரிய சிறைமுகாம் போல் கருதப்படும் பாலஸ்தீனத்தின் மீது தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டவும் தேவையான "உண்மை நிலவரத்தை" உருவாக்குவதுதான் பிரதமர் ஏரியல் ஷரோனின் நோக்கமாகும். ஜோர்தான் ஆறுவரை விரிந்து செல்லும் அகண்ட இஸ்ரேல் பற்றிய அவரது அவாவை நிறைவேற்றுவதில் ஒரு உந்துதளமாகத்தான் ஷரோன் அளித்துள்ள காசாவிலிருந்து வெளியேறுவது என்ற உறுதிமொழி இருக்கும்.

இஸ்ரேல் தாக்குதலை பாலஸ்தீன மக்கள் மிகக்கடுமையாக எதிர்த்து நின்றதால் 2000- செப்டம்பரில் தொடங்கிய கிளர்ச்சி எழுச்சிகளுக்குப் பின்னர் மிகப்பெருமளவிற்கு உயிர்சேதமும், அழிவும் ஏற்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 31- பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர், இவர்களில் 11-வயது இளம் பிள்ளைகளும் அடங்குவர், பலர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Shaoul Mofaz அழைக்கும் "புதிய யதார்த்தத்தை" இஸ்ரேல் உருவாக்கியதன் மூலம் கடந்த வாரத்தில் 1000-க்கு மேற்பட்ட மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுவிட்டனர். Rayah -விற்கு வெளியே காசாவின் தெற்கு எல்லைக்கும் எகிப்திற்கும் இடையில் எவரும் நடமாடாத மண்டலத்தை அல்லது இடைத்தடை மண்டலத்தை உருவாக்குவதற்காக இஸ்ரேல் புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்துத்தள்ளிய, காசா-வின் இதர பகுதிகளிலிருந்து வெளியேறியதும், இஸ்ரேல் தொடர்ந்து அந்த பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

இஸ்ரேலின் இராணுவ தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் Moshe Yaalon அமைச்சரவை கூட்டத்தில் தகவல் தரும்போது, மே-16- ஞாயிறன்று உச்சநீதிமன்றம் தந்திருக்கின்ற தீர்ப்பின்படி எகிப்து எல்லை அருகிலுள்ள வீடுகளை தற்காப்பு நடவடிக்கையாக இடித்துத் தள்ளுவதற்கு இராணுவம் உரிமைபடைத்ததாகும், ஆள் நடமாடாத பிராந்தியத்தை 200- மீட்டரிலிருந்து 250- மீட்டராக விரிவுபடுத்தலாம் என்றார். நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வீடுகளை இடித்து தள்ளுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இஸ்ரேல் வானொலி செய்தியின்படி எகிப்து - காசா எல்லையை ஒட்டிய சாலையோரம் ஒரு அகழியை தோண்டவும், இராணுவம் திட்டமிட்டிருக்கிறது.

மே 17-அன்று இராணுவ புல்டோசர்கள் ரஃபா அகதிகள் முகாமை சேர்ந்த Saladin மாவட்ட சாலை இணைப்பை துண்டிக்கும் வகையில் புல்டோசர்கள் மூலம் சாலையை தோண்டினர். ஏனென்றால் இடிக்க திட்டமிடப்பட்டுள்ள வீடுகளிலிருந்து நெருக்கடிக்குள்ளாகும் பாலஸ்தீன மக்கள் தங்களது உடைமைகளோடு தப்பி ஓடுவதை தடுப்பதற்காகத்தான். தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவில் காசா நகரில் இஸ்ரேல் ஹெலிகாப்டர் குண்டுவீச்சு விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்திவந்தன. பாலஸ்தீன நிர்வாக தலைவர் யாசர் அரஃபாத்தின் அரசியல் அடித்தளமான Fatah- வின் அரசியல் அலுவலகங்கள் உள்ள கட்டடங்களையும், பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணியின் (DFLP) மற்றொரு கட்டடத்தையும் குறிவைத்து இந்தத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்கு முந்திய இரவில் ஹமாஸ் போராளி குழுவை ஆதரிக்கின்ற வாரப்பத்திரிகையான அல்-ரெசாலா வின் அலுவலகங்கள் மீது ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்கு முந்தியதினத்தில், இஸ்ரேல் படைகள் எதிர்த்தரப்பு போராளி குழுவான இஸ்லாமிக் ஜிஹாத் தலைவர் முகம்மது அல் ஹிந்தி அலுவலகத்தில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் 7-பேர் காயமடைந்தனர்.

மே 15-ல், ரஃபாவில் குறைந்த பட்சம் 80-வீடுகளையும், மாடிகுடியிருப்பு பகுதிகளையும் இடித்துத்தள்ளுவதற்கு இஸ்ரேல் படைகள் கவச புல்டோசர்களை பயன்படுத்தியபோது கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பள்ளிக்கூடங்களிலும் பொது சதுக்கங்களிலும் வீடிழப்பவர்களுக்காக தற்காலிக கூடாரங்கள் 400 உருவாக்கப்பட்டன, அவை விரைவில் நிரம்பிவிட்டன. சென்ற அக்டோபருக்கு பின்னர் ஏற்கனவே 600-வீடுகள் தகர்க்கப்பட்டுவிட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து தவிக்கின்றனர். 2000- செப்டம்பர் முதல் ரஃபா பகுதியில் 12,000-க்கு மேற்பட்டவர்கள் வீடிழந்து தவிப்பதாக ஐ.நா மதிப்பிட்டிருக்கின்ற மக்களில் 10-பேரில் ஒருவர் வீடிழந்துவிட்டனர்.

மே 11-மற்றும் 12-ஆகிய இரண்டு நாட்களில் தனித்தனியாக நடைபெற்ற இரண்டு திட்டமிடப்பட்ட திடீர்தாக்குதலில் இஸ்ரேல் போர்வீரர்களது வாகனங்கள் தாக்கப்பட்டு சிதறியதில் 11-பேர் மடிந்தனர். அதற்கு பழிவாங்கும் வகையில் சென்ற வாரக்கடைசியில் திடீர் தாக்குதல்கள் வீடுகள், இடிப்பு நடவடிக்கைகளுக்கு ஷரோனின் அமைச்சரவை பகிரங்கமாக கட்டளையிட்டது. Intifada தொடங்கிய பின்னர் இது தான் இஸ்ரேல் போர்வீரர்கள் மிகப்பெருமளவிற்கு பலியான தாக்குதல் சம்பவமாகும்.

காசா நகரத்தின் புறநகரான செய்தூணில் மிக மோசமான சண்டைகள் நடைபெற்றுள்ளன. மே-10-ல் இஸ்ரேல் படைகள் செய்தூண் மீது படையெடுத்தன. அடுத்த நாள் நீண்ட நேரம் நடைபெற்ற சண்டைகளில் 8-பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மற்றும் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேல் துருப்புக்கள் வீட்டுக்குவீடு தேடுதல் வேட்டைகளை நடத்திக்கொண்டிரும்போது ஹெலிகாப்டர் குண்டுவீச்சு விமானம் ராக்கெட் வீசியதில் குறைந்த பட்சம் 3-பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அதற்குப்பின்னர் மே 13-ல் இஸ்ரேலிய படைகள் மிரட்டல்கள் மற்றும் கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதில் வீடுகள் இடிக்கப்பட்டன. தெருக்கள், அழிக்கப்பட்டன, செய்தூணில் பெரிய நெடுஞ்சாலையும் அழிக்கப்பட்டது. அதே நாளில் ரஃபா -வில் ஹெலிகாப்டர்கள் ராக்கெட்டுகளை வீசி தாக்கியதில் 12-பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இறந்துவிட்ட பாலஸ்தீனியர்களுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்ற காசா கடற்கரைப் பகுதியில் பீரங்கிப்படகுகள் திரும்பத்திரும்ப சுட்டுக்கொண்டிருந்தன. காசா பகுதியில் உட்பகுதி சோதனை சாவடிகளை இஸ்ரேல் மூடிவிட்டது, பத்திரிகையாளர்கள் மற்றும் உதவிப்பணியாளர்களுக்கு உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சர்வதேச சட்டப்படி குற்றங்கள்

பாலஸ்தீன பிரதமர் அஹமது குரேயா இஸ்ரேல் அரசாங்கம் "இன அழிப்பு குற்றங்களை செய்துவருவதாகவும் அப்பாவி சிவிலியன்கள் மீது கூட்டுத்தண்டனை விதித்துவருவதாகவும்" குற்றம் சாட்டினார்.

ஐ.நா உதவி மற்றும் பணிகள் தொடர்பான அமைப்பின் (UNRWA) பிரதிநிதியான போல் மெக்கேன் செய்தூணில் 48-மணி நேரத்தில் 15-பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 226-பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறினார். பதினாறு குடும்பங்கள் வீடுகளை இழந்துவிட்டனர், மேலும் 32- குடும்பங்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. ''இந்த வீடுகள் ஒவ்வொன்றிலும் போராளிகளுக்கு புகலிடம் தரப்பட்டதென்றோ அல்லது சுரங்கப்பாதைக்கு வழி அமைக்கப் பட்டிருக்கிறதென்றோ எவரும் நம்புவதற்கு இயலாது'' என்று மெக்கேன் சொன்னார்.

கடைசியாக தற்போது நடைபெற்ற வீடுகள் இடிப்பிற்கு முன்னரே கூட பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தந்துள்ள தகவலின்படி, மே மாதம் முதல் ஒன்பது நாட்களில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 1000-பேர் வீடிழந்து தவிக்கின்றனர். பாலஸ்தீன எழுச்சி தொடங்கியபின்னர் "மிகத் தீவிரமான வீடுகள் இடிப்பு காலம்" என்று வர்ணிக்கப்படும் நடவடிக்கைகளில் 131- வீடுகள் இடித்துத்தள்ளப்பட்டன.

UNRWA கமிஷனர் ஜெனரல் பீட்டர் ஹேன்சன் கருத்து தெரிவிக்கும்போது, சர்வதேச சட்டத்தில் தடுக்கப்பட்டுள்ள கூட்டுத் தண்டனைக்கு பாலஸ்தீன மக்கள் இலக்காகி தவிப்பதாகக் கூறியுள்ளார். ''இண்டிபதா தொடங்கிய பின்னர் காசா பகுதியில் 17,000- க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததை தவிர வேறு எந்தக்குற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை'' என்று அவர் கூறினார்.

2000- செப்டம்பருக்குப் பின்னர் இஸ்ரேலின் ஆயுதப்படைகள் 3,000-க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கொன்றிருக்கின்றனர். அவர்களில் குறைந்த பட்சம் 500-பேர் 18-வயதிற்கு குறைந்தவர்கள், குறைந்த பட்சம் 142- பேர் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 83-பேர் விமானப்படைகளாலும் 59 பேர் தரைப்படையாலும் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளின் போது மேலும் 98-பாலஸ்தீனியர்கள் பலியாயினர் அதே காலத்தில் 911- இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது இருதரப்பிற்குமிடையே நிலவுகின்ற தாக்குதல் வலிமையின் வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகிறது.

வாஷிங்டன் தனக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருகிறது தான் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக என்ன குற்றம் செய்தாலும், அதை வாஷிங்டன் பொருட்படுத்தாது என்ற உறுதியான நிலைக்கு பின்னர்தான், ஷரோன் ஆட்சி காசா பகுதியில் தனது பயங்கரவாத போரை முடுக்கிவிட்டிருக்கிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவல் இஸ்ரேலின் நடவடிக்கைகளை மென்மையாக கண்டித்தார். அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு "தற்காப்பு உரிமையுண்டு" என்று வலியுறுத்தினார். ஆனால் உண்மையிலேயே அவரது பகைமை உணர்வு பாலஸ்தீனியர்கள் மீதுதான் என்பதை, Ramallah-வில் கைவிடப்பட்டுக் கிடக்கும் வளாகத்தில் ஏறத்தாழ ஒரு கைதியைப்போல் வாழ்ந்து வரும் அரஃபாத், பாலஸ்தீனிய பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்த மேற்கொள்ளும் அமெரிக்க முயற்சிகளை சீர்குலைத்து வருவதாகவும் இஸ்ரேல் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் கொலின் பவல் குற்றம் சாட்டியதில் வெளிக்காட்டிக் கொண்டார்.

மேற்குக்கரை நிலத்தை அபகரித்துக் கொள்ளுகிற தனது விரிவான அரசியல் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய ஆதரவு சூழ்நிலைகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உருவாக்குகின்ற வகையில் ஷரோன் காசா பகுதியிலிருந்து 7,500- குடியேற்றக்காரர்களை திரும்ப அழைத்துக்கொண்டு தற்காலிகமாக இராணுவத்தை விலக்கிக்கொள்ளுகின்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்னர் 1993-ம் ஆண்டு ஓஸ்லோவில் உருவான உடன்படிக்கை செயல் வடிவம் பெற்றால் சிதைந்துவிட்ட பாலஸ்தீன நாடு மேற்குகரையிலும் காசா பகுதியிலும் உருவாகுமானால் சட்ட விரோத குடியிருப்புக்களை ஒப்படைத்துவிட வேண்டியிருக்கும் என்பதை ஷரோன் - தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தினால் 2000- செப்டம்பரிலேயே அந்த ஒப்பந்தத்தை திட்டமிட்டு சிதைத்தார். அதே காரணத்திற்காக ஈராக் படையெடுப்பிற்கு பின்னர் தனது அரபு கூட்டணி பங்காளிகளையும், பிரிட்டனையும் சமாதானப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ் உருவாக்கிய அமெரிக்காவின் சாலை வரையடத்தையும் சிதைத்தார்.

அந்த இடத்தில் ஷரோன் தனது சொந்த திட்டத்தை தாக்கல் செய்து ஏப்ரல் 14-ல் அமெரிக்காவின் ஒப்புதலையும் பெற்றார். காசா பகுதியிலிருந்து தன்னிச்சையாக விலக்கிக்கொள்வது என்றும் அதற்கு கைமாறாக ஓஸ்லோ ஒப்பந்தத்தில் கண்டுள்ள மேற்குக்கரையின் பாதிக்கும் குறைந்த நிலப்பரப்பிற்கும் குறைவாக மேலும் சிதைந்துவிட்ட பாலஸ்தீன நாட்டை தனது திட்டத்தில் உருவாக்கிக் காட்டினார். இஸ்ரேல் இந்த பாலஸ்தீன குடிசைப்பகுதியில் தனது இராணுவ பொருளாதார மற்றும் அரசியல் கட்டுப்பாடுகளை நிலைநாட்டும். இதற்கெல்லாம் மேலாக, 1948- லும் 1967-லும் நடைபெற்ற போர்களில் தங்களது வீடுகளிலிருந்து விரட்டப்பட்ட அல்லது வெளியேறி ஓடிவிட்ட பாலஸ்தீன அகதிகள் இஸ்ரேலில் உள்ள தங்களது முந்திய வீடுகளுக்கு திரும்பிவருகின்ற உரிமையில்லை என்று அமெரிக்கா சம்மதம் தெரிவித்தது.

ஷரோன் வெளியேறும் திட்டத்தை மே 2-ல் லிக்குட் கட்சி தள்ளுபடி செய்தது. ஏனென்றால் அந்தத்திட்டம் காசா-வில் ஒருசில குடியிருப்புக்களை ஒப்படைக்கவும் மேற்குக்கரையில் தனித்தனியாக உள்ள சில சாவடிகளையும் ஒப்படைக்க வகைசெய்தது. அவருக்கு உருவான எதிர்ப்பு சர்வதேச அளவில் ஷரோனுக்கு ஆரவை பெருக்கியது. இப்போது மிகச்சிறிய பாசிச குடியேற்றக்காரர்கள் பாலஸ்தீனர்கள் அனைவரும் விரட்டப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருவதுடன் ஷரோனின் தன்னிச்சை 'வெளியேற்றத் திட்டம்' வேறுபாட்டைக்காட்ட ஒப்பிடப்படுகிறது. பேர்லினில் பாலஸ்தீன பிரதமர் அஹமது காரியுடன் ஆலோசனை நடத்திவிட்டு திரும்பிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொன்டலீசா ரைஸ் இஸ்ரேலின் உத்தேச காசா 'வெளியேற்ற திட்டம்' முன்னேற்றத்திற்கான ஒரு வாய்ப்பு என்று வர்ணித்தார். ''சரியான வழியில் தன்னிச்சையாக அடியெடுத்து வைப்பதில் எந்தவிதமான தவறுமில்லை என்று நாம் நம்புகிறோம். உலகில் நடக்கிற ஒவ்வொன்றும் உடன்பாட்டுப்பேச்சு அடிப்படையில் தான் நடக்கவேண்டும் என்ற அவசியமில்லை'' என்று அவர் கூறினார்.

ஐரோப்பிய அரசுகளின் கருத்து

சாலை வரைபடத்திற்கு பிளேயர் ஆதரவு காட்டிவந்தாலும் கடமை தவறாது புஷ்ஷின் வழியைப் பின்பற்றி ஷரோனின் வெளியேறும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார், ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்பகட்ட நிலைப்பாடு புஷ்ஷையும், பிளேயர், ஷரோன்-ன் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டதை விமர்சிக்கும் வகையில் அமைந்திருகிறது. ஆனால் நடைமுறையில் புஷ், ஷரோன்-ஐ ஆதரித்த வழியை ஐரோப்பிய ஒன்றியமும் பின்தொடர்ந்து லிக்குட் கட்சி ஷரோன் திட்டத்தை "ஏற்பதில்லை" என்று வாக்களித்த சில நாட்களுக்குள், "நால்வர் குழுவின்" ஏனையவர்களுடன் - அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐ.நா-வோடு சேர்ந்துகொண்டு ஷரோனின் நில அபகரிப்பு திட்டத்தை ஏற்றுக்கொள்ளுகிற வகையில் ''இரண்டு நாடு முன்னோக்கு திட்டத்தை சாதிப்பதற்கான வழியில் ஒரு அடி எடுத்து வைப்பு" என்று அங்கீகாரம் தந்தது. இஸ்ரேல் காசா பகுதியிலிருந்து வெளியேறும்போது யூதர்கள் விட்டுச்செல்லும் சொத்துக்களுக்கு அறங்காவலர்களாக செயல்படவும் ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்தது. இதன் பொருள் என்னவென்றால் பொது சேவைகளை பாதுகாப்பதற்கும், குடியேற்றக்காரர்கள், வெளியேறிச் செல்லும் முன்னர் தங்களது வீடுகளை இடித்து நொறுக்கிவிடாது தடுப்பதற்கும் இஸ்ரேல் அழித்துவிடுகின்ற விமான நிலையம், துறைமுகம், ஆகியவற்றை திரும்ப உருவாக்குவதற்கும் உதவுகின்ற வகையில் நிதியளிப்பதற்கும், சர்வதேச போலீஸ்படையை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பும்.

ஸ்பெயினின் புதிய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மத்திய கிழக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கை கண்டித்து சுதந்திரமான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்று பரவலாக கருதப்பட்டது. ஆனால் வெளியுறவு அமைச்சர் Miguel Angel Morations, ஷரோனுடன் புஷ் கூட்டணி சேர்ந்து மேற்குக்கரை நில அபகரிப்பை வளர்ப்பதில் தனது உடன்பாட்டை தெரிவித்துக் கொண்டார். காசா பகுதியிலிருந்து உத்தேச வெளியேற்றத் திட்டம் "புதிய ஊக்கம்மிக்க நடவடிக்கைக்கான ஆரம்பம்" என்று அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் தொழிற்கட்சி ஆதரவு தருகிறது

இஸ்ரேலுக்குள் லிக்குட் கட்சி தனது திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்ததை ஷரோன் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முயன்று வருகிறார். இதில் தொழிற்கட்சி அவருக்கு அரசியல் அடிப்படையில் வழங்கிவருகின்ற கிரிமினல் ஆதரவு தான் அவ்வாறு அவருக்கு அனுகூலத்தை பெற்றுத்தருகிறது.

ஷரோனின் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிற வலதுசாரி கூட்டணிக்கட்சிகள் சிதைந்து ஆட்சி கவிழ்கின்ற நிலை உருவாகுமானால் தொழிற்கட்சி அவரது அரசாங்கத்தில் சேர்வதற்கு தயாராக இருப்பதாக ஏற்கனவே கோடிட்டுக்காட்டிவிட்டது. அவர்கள் விதித்துள்ள ஒரே நிபந்தனை ஷரோன் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட வேண்டும் என்பதுதான்.

இஸ்ரேல் மக்களில் மிகப்பெருபாலோர் கொள்கை அடிப்படையில் மாற்று எதுவும் இல்லாததால் ஷரோனின் திட்டங்கள்தான் மிகக்குறைந்த தீங்குகள் உள்ள வாய்ப்பு என்று காசா-விலிருந்து வெளியேறுவதை ஆதரிக்கின்றனர். மே 15-ல் Tel Aviv- ல் 1,00,000 -க்கு மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் "சுதந்திரதினத்தன்று" ஆர்பாட்டம் நடத்தினர், ஷரோன் காசா-விலிருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தனர். இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்கள் தொழிற்கட்சி தலைமையில் ஷரோனின் வெளியேற்றுத் திட்டம் என்று கூறப்படுவதில் அடங்கியுள்ள பிரமைகளை உயர்த்திக்காட்ட முயன்றனர். 80-வயதான கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷிமோன் பெரஸ் 80-சதவீத இஸ்ரேலியர்கள் காசா-விலிருந்து வெளியேறுவதை ஆதரிக்கின்றனர், லிக்குட் பொதுவாக்கெடுப்பில் ஒரு சதவீத மக்களே அதை தள்ளிவிட்டனர். அவர்கள் 80-சதவீத மக்களை பிணைக் கைதிகளாக வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது என்றார். ''இந்த ஒரு சதவீத சிறுபான்மையினர் நம்மை மீண்டும் போருக்கு, இரத்தக்களரி பாதைக்கு அனுப்பிவிடக் கூடாது என்று சொல்வதற்காக இன்றிரவு இங்கே வந்திருக்கிறோம்'' என்று அவர் கூறினார்.

Top of page