:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு
Washington imposes punitive sanctions on Syria
சிரியா மீது வாஷிங்டன் பொருளாதார தடைகளை திணிக்கிறது
By Peter Symonds
13 May 2004
Back to screen version
புஷ் நிர்வாகம் சிரியாவிற்கு எதிராக செவ்வாய்க்கிழமையன்று பல்வேறு கடுமையான
பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. இது மத்திய கிழக்கு முழுவதையும் அச்சுறுத்துகின்ற ஒரு திட்டமைப்பு நகர்வாகும்.
''அமெரிக்காவின் பொருளாதாரம், வெளியுறவுக்கொள்கை, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றிக்கு வழக்கத்திற்கு மாறாக
அசாதாரண அச்சுறுத்தலாக'' நாட்டின் அரசியலமைப்பு செயல்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
நிர்வாகம் கூறியுள்ளது.
மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது வாஷிங்டனின் வலியுறுத்தல் முட்டாள்தனமானது.
சிரியா ஒரு மிகச்சிறிய ஏழ்மை நிறைந்த நாடாகும். 17 மில்லியன் மக்களைக்கொண்ட மற்றும் அதன் மொத்த உள்ளநாட்டு
உற்பத்தியின் (GDP)
மதிப்பீடு 40 மில்லியன் டாலருக்கும் சற்று அதிகமாகும். இராணுவ ரீதியாகப்
பார்த்தால், ஈராக்கில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அமெரிக்காவிற்கும், போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கூட்டாளி நாடுகளுக்கும்
மற்றும் இஸ்ரேலுக்குமிடையே சிரியா இறைச்சியாக சிக்கித் தவிக்கிறது. அவை, கடந்த ஓராண்டிற்கும் மேலாகவே சிரியாவின்
எல்லைகளிலும் அல்லது உள்ளேயும் ஆத்திரமூட்டும் வகையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
2003 மார்ச் மாதம் அமெரிக்கா தலைமையில் ஆக்கிரமிப்பு நடப்பதற்கு முன்னர் எப்படி
ஈராக் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இல்லையோ, அதே அடிப்படையில்தான் சிரியாவும் அச்சுறுத்தலாக இல்லை. வாஷிங்டன்
தனது ஆக்கிரமிப்பு நோக்கிலான அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சாக்குப்போக்காக டமாஸ்கஸ்
மீது ஆதாரமற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை திரட்டியுள்ளது. ஈராக்கில் தனது ஆக்கிரமிப்புக்கு நெருக்கடி ஆழமாகிக்
கொண்டிருக்கிற மத்தியில், மத்திய கிழக்கில் தனது பொருளாதார மற்றும் மூலோபாய மேலாதிக்கங்களுக்கு எந்த எதிர்ப்பையும்
அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்பதை புஷ் நிர்வாகம் தெளிவுபடுத்தி வருகிறது.
சிரியா மீது அமெரிக்கா தந்திருக்கும் குற்றச்சாட்டுக்களின் பட்டியலில் ''ஈராக் சீரமைப்பிற்கும்,
அதன் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கும் சர்வதேச சமூகத்தோடு முழுமையாக ஒத்துழைக்க'' அது தவறிவிட்டது
என்பதே ஆகும். அமெரிக்கா பாக்தாத் மீது ஆக்கிரமிப்பதற்கு முன்னர் டமாஸ்கஸ் பாக்தாத்திற்கு சடரீதியான உதவி
வழங்கியது என்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை புஷ் வலியுறுத்தியும், மற்றும் முடக்கப்பட்ட ஈராக் நிதிகளை ஒப்படைக்க
தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஈராக்குடன் தனது எல்லைகளை மூடிவிடுவதற்கு சிரியா நடவடிக்கை எடுத்தது
என்பதை ஒப்புக்கொண்டிருக்கும் புஷ், அந்த நாடு ''வெளிநாட்டுப் போராளிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
மாறிச்செல்லும் எல்லையாகவும்'' மற்றும் தலைமையகமாவும் இருக்கிறது என்று அறிவித்தார்.
இங்கு ஈராக் மீது குவிமையப்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஆக்கிரமிப்புப்
படைகள் ஈராக்கில் முகம் கொடுப்பது என்பது பரவலான ஆதரவு பெற்ற மக்கள் எழுச்சிக்கே ஒழிய ''வெளிநாட்டு
போராளிகளுக்கு'' அல்ல. இந்த எதிர்ப்பை தடுத்து நிறுத்துவதற்கு தீவிரம்காட்டி வருகின்ற வாஷிங்டன், விருப்பத்துடனோ
அல்லது பலவந்தமாகவோ தனக்கு ஆதரவை நாடுவதுடன், எப்படியாயினும் அதனை அடைவதற்கு முயற்சிக்கிறது.
ஆகையால், ஈராக் எதிர்பாளர்களுக்கு எந்தவகையான உதவி வளங்கள் வழங்குவதை சிரியா வெட்டிவிட வேண்டும்,
அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது நடைபெற்று வருகின்ற சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை ஊக்குவிக்க தனது அரசியல்
செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என்று டமாஸ்கசுக்கு அமெரிக்கா தெளிவான செய்தியை கொடுத்துள்ளது.
இதனை மேலும் நியாயப்படுத்துகிற வகையில் அமெரிக்கா நீண்டகாலமாக விடுத்து வருகின்ற,
பெரும்பாலும் இஸ்ரேலுக்கு ஆதரவான ஒரு கோரிக்கையை மேற்கோள் காட்டுகிறது. அது, சிரியா லெபனானிலிருந்து
வெளியேறவேண்டும், டமாஸ்கஸை தளமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற பாலஸ்தீனிய ''பயங்கரவாத''
அமைப்புக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதாகும். சிரியாமீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை
இஸ்ரேல் உடனடியாக வரவேற்றிருப்பது, அதன் கொலைவெறி நடைமுறைகளுக்கும், மேற்குக்கரையின் மிகப்பெரும் பகுதியை
ஒரு தலைப்பட்சமாக இணைத்துக்கொள்ளும் அதன் திட்டங்களுக்கும் ஆதரவு என்பதை மேலும் எடுத்துக் காட்டுகிறது.
சிரியாவின் அரசியலமைப்பு ஒரு ''அசாதாரணமான அச்சுறுத்தல்'' என்ற தனது கூற்றை
நியாயப்படுத்துகிற வகையில் மற்றொரு கட்டுக்கதையை உருவாக்க வேண்டிய கட்டாயம் வாஷிங்டனுக்கு ஏற்பட்டுள்ளது.
ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் (WMD)
உள்ளன என்ற குற்றச்சாட்டு முற்றிலுமாக ஆணவமான பொய் என்று அம்பலமாகிய பின்னரும் புஷ், ''மிக முன்னேறிய அரபு
அரசுகளில் ஒன்றான சிரியா இரசாயன ஆயுதங்களை தயாரிப்பதற்கு திறமை படைத்துள்ளது'' என்றும், ''தொடர்ந்தும்
தாக்குதல் தொடுக்கும் உயிரியியல் ஆயுதங்களை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது'' என்றும் கூறினார். சிரியா இந்தக்
குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துக்கொண்டே வருகிறது. ஆனால், தனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு புஷ்
சிறிதளவிற்குக்கூட இதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்யவில்லை.
2001 ல் புஷ் நிர்வாகம் ஆட்சிக்கு வந்தது முதல் சிரியா மீது தனது கவனத்தை
திருப்பியுள்ளது. 2003 ஏப்ரலில் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு ஒரு மாதத்திற்கு பின்னர் சிரியா மீது வாஷிங்டன் தனது
குற்றச்சாட்டுப் பட்டியலை வலியுறுத்திக் கூறியது. அமெரிக்காவுடன் ஒத்துழைக்க தவறுமானால் சிரியா திட்டவட்டமாக
குறிப்பிடவியலாத விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று வாஷிங்டன் எச்சரித்தது. ஜூனில் அமெரிக்கா இராணுவம்
சிரியாவின் எல்லைச் சாவடி ஒன்றில் ஆத்திரமூட்டும் வகையில் சுட்டதுடன், அருகாமையிலுள்ள ஒரு கிராமத்தின் மீது
தாக்குதல் நடாத்தி சிரியாவின் எல்லைக் காவலர்கள் ஐந்துபேரை பிடித்துசென்றனர்.
சென்ற நவம்பரில் இருகட்சி ஆதரவோடு அமெரிக்கக் நாடாளுமன்றம், சிரியா
பொறுப்புடமை (Syria Accountability)
மற்றும் லெபனான் இறையாண்மை மீட்பு சட்டம் (Lebanese
Sovereignty Restoration Act) என்பவற்றை
நிறைவேற்றியது. டமாஸ்கஸ் மீது அழுத்தம் கொண்டு வருவதற்காக பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தச்
சட்டம் வகைசெய்கிறது. புஷ் டிசம்பரில் இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டதோடு, சிரியா தனது கடமைகளை
நிறைவேற்ற வேண்டுமென்று திரும்ப திரும்ப வலியுறுத்தினார். இந்த வாரம் அமெரிக்கா அறிவித்துள்ள நடவடிக்கைகளில்
உணவு மற்றும் மருத்துப் பொருட்களைத் தவிர வேறு எல்லாவகை வர்த்தகத்திற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. சிரியா
மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. பயங்கரவாத
நடவடிக்கைகள் அல்லது ''பேரழிவுதரும் ஆயுதங்கள்'' தயாரிப்பில் சம்மந்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சிரியாவின்
குடிமகன் யாராகயிருந்தாலும் அவரது சொத்துக்களை முடக்குவதற்கும் இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்,
ஆண்டிற்கு 300 மில்லியன் அளவிற்கே இப்போது வர்த்தம் நடந்துகொண்டிருக்கிறது. மேலும், சிரியாவில் எதிர்கால
முதலீட்டிற்கு வாஷிங்டன் தடைவிதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Conoco மற்றும்
Chevron
உட்பட அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் சிரியாவில் 600 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருப்பதாக மதிப்பீடு
செய்யப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு திட்டவட்டமான கடுமையான நடவடிக்கைககளை
டமாஸ்கஸ் எடுக்கத் தவறுமானால் மேலும் தடைகள் விதிக்கப்படும் என்று புஷ் நிர்வாகம் எச்சரித்திருக்கிறது.
இந்த நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கின்ற வகையில் சிரியா அரசாங்கம் வீறாப்பு மற்றும் திருப்திப்படுத்தல்
ஆகிய கலவைப்போக்கை உள்ளடக்கிய தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. பிரதமர் மொகமாட் நஜி ஒட்ரி (Mohammed
Naji Otri) இந்த தடையை ''நியாயப்படுத்த முடியாதவை''
என்று விமர்சித்துள்ளதுடன், ''சிரியா மீது எந்த விதமான தாக்கமும் இதனால் ஏற்படாது'' என்றும், அதே மூச்சில் வாஷிங்டன்
தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் கோருகிறார். மேலும், சிரியாவின் தலைமைக்கு ''அமெரிக்க
நிர்வாகத்துடன் பிரச்சினைகளை உருவாக்குவதில் எந்தவிதமான அக்கறையும் இல்லை'' என்றும் கூறினார்.
அமெரிக்காவின் அரசியல் அழுத்தங்களால் சிரியாவின் இந்த பொருளாதார உறவுகளில்
தாக்கம் எற்படும் என்று டமாஸ்கஸ் கவலையடைந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிரியா 60 சதவீதம்
ஏற்றுமதியைக் மேற்கொண்டுள்ளது. சென்ற மாதம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடைபெற்ற வர்த்தக பேர
பேச்சுவார்த்தை திடீரென்று நிறுத்தப்பட்டது. சிரியாவிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு
தொடர்பாக பிரிட்டன், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்கள் தமது கவலைகளை தெரிவித்ததால் அந்த
பேச்சுவார்த்தை இடையில் நிறுத்தப்பட்டது.
சிரியா அரசாங்கம் தற்போது கம்பிமேல் நடந்து செல்லும் நிலையில் உள்ளது. இதர அரபு
ஆட்சிகளைப்போல் ஈராக்கில் வாஷிங்டன் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு துணிவில்லாத கண்டனங்களை தெரிவிக்கிறது.
அமெரிக்க ஆக்கிரமிப்பின் கிரிமினல் தன்மை தொடர்பாக சொந்தநாட்டு மக்களிடம் பெருகிவருகின்ற ஆத்திரத்தை மட்டுப்படுத்துகின்ற
வகையில் இத்தகைய கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதேநேரத்தில் புஷ் நிர்வாகம் தன்மீது தண்டிக்கின்ற வகையில்
பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவாறு ஒருபேரத்தை உருவாக்கிக் கொள்வதிலும் டமாஸ்கஸ்
தீவிரமாக உள்ளது.
இந்தக் கோழைத்தனமான சந்தர்ப்பவாத அணுகுமுறையைத்தான் ஈராக் மீது அமெரிக்கா
தாக்குதல் தொடுத்த நேரத்திலிருந்து சிரியா கடைப்பிடித்து வருகின்றது. ஐ.நா பாதுகாப்பு சபையின் உறுப்பினர் என்ற
முறையில் 2002 நவம்பரில் ஈராக்கில் புதிய கடுமையான ஆயுதங்கள் சோதனைகள் வகை செய்யும் அதன் தீர்மானத்திற்கு
சிரியா ஆதரவு தெரிவித்தது. அதுதான் அமெரிக்கா தலைமையில் ஆக்கிரமிப்பு நடத்துவதற்கான சூழ்நிலையை
உருவாக்கியது. ஆனால், 2003 மே மாதம் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கு வாக்கெடுப்பு
நடந்தபோது சிரியா அதில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப்பின்னர் டமாஸ்கஸ் ''ஈராக் மக்களது
வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்ற சகோதர உணர்வோடு ஆரம்பத்தில் தீர்மானத்தை'' ஆதரித்ததாக மிகுந்த
அவதூறான வெறுக்கத்தக்க வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இப்படி கெஞ்சிக் கூத்தாடும் சலுகைகளை சிரியாவின் ஆட்சியாளர்கள் காட்டிய பின்னரும் புஷ்
நிர்வாகம் பொருளாதாரத் தடைகளை மேற்கொள்வது என்ற முடிவில் நடவடிக்கையில் இறங்கியிருப்பதானது, சம்பூர்ண
சரணாகதியே தவிர வேறு எதற்கும் அமெரிக்கா இணங்காது என்று தெளிவுபடுத்துவதற்காகத்தான் ஆகும். ஆகவே,
சிரியாவும் இதர அரபு நாடுகளும் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை ஸ்திரப்படுத்துவதற்கு உதவுவது என்பது,
எதிர்காலத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு மேலும் அதிகரிப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்பது தெளிவு. |