World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா Sonia Gandhi declines India's prime ministership A craven capitulation to big business and the Hindu right பிரதமர் பதவி ஏற்க சோனியாகாந்தி மறுப்பு இந்து வலதுசாரிகள் மற்றும் பெருவர்த்தக அமைப்புகளிடம் அப்பட்டமான சரணாகதி By Keith Jones இந்தியாவின் பிரதமர் பதவியை கைவிட்ட சோனியா காந்தியின் முடிவை இந்திய மற்றும் சர்வதேச பத்திரிகைகள் ஒட்டுமொத்தமாக அவரது செயல் தன்னைத்தானே, அர்ப்பணித்துக்கொள்ளும் தியாக மனப்பான்மையின் துணிச்சலான செயல் என பாராட்டியது. யதார்த்தத்தில் இது ஒரு இழிவான சரணாகதியாகும். இந்து மேலாதிக்கவாத, வலதுசாரி கட்சியான பாரதிய ஜனதாக்கட்சி (BJP) ஒரு "வெளிநாட்டவர்'' பிரதமராக வருகின்ற ''இழிவு'' க்கு எதிராக கிளர்ச்சியை தொடங்கியது, அதற்கு சரணாகதி ஆகும். ஆனால், இதைவிட இன்னும் மேலாக அடிப்படையிலேயே இந்திய மற்றும் சர்வதேச மூலதனத்திற்கு சரணாகதி ஆகும். திருமதி சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சி தற்போது அரை டஜன் மாநிலக்கட்சிகள், மற்றும் இடதுசாரி அணியின் ஆதரவோடு இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைக்கிறது. மன் மோகன் சிங்-கை பிரதமராக இப்பொழுது திருமுழுக்காட்டி இருக்கிறது. நரசிம்மராவின் காங்கிரஸ் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த சிங் 1991-க்கு பின் வந்த ஒவ்வொரு இந்திய அரசாங்கமும் பின்பற்றி வருகிற "தாராளமயமாக்கல்" பொருளாதார செயல்திட்டங்களின் முதன்மை சிற்பியாவார். காங்கிரஸ் தலைமையில் தனது முன்னோடி பிரதிநிதி என்று அவரை பெரு வர்த்தக நிறுவனங்கள் நீண்டகாலமாக கருதிவருகின்றன. சென்ற வாரம் பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு பதில்கொடுக்கும் முகமாக இந்தியாவின் பங்குச்சந்தைகளில் பங்கு விலைகள் படுவீழ்ச்சியடைந்தன. பெருகிவரும் வறுமை, பாதுகாப்பற்ற பொருளாதார நிலைமை இந்தியாவை உலக முதலாளித்துவத்தின் மலிவு ஊதிய மண்டலமாக ஆக்குகின்ற முயற்சியினால் ஏற்பட்டுவிட்ட சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றால் பொதுமக்களது எதிர்ப்பு BJP தலைமையிலான தேசிய முன்னணியை (NDA) பதவியிலிருந்து விரட்டியது. செவ்வாய்கிழமை பிற்பகல் சோனியாகாந்தி பிரதமர் பதவியை உதறிவிட்டார், சிங் அந்த இடத்தில் அவருக்குப்பதிலாக நியமிக்கப்படலாம் என்ற தகவல் பகிரங்கமானதும், பங்கு விலைகள் உயரத் தொடங்கின. பம்பாய் பங்குச்சந்தை இந்தியாவிலேயே மிகப்பெரியது, அன்றைய தினம் பங்குகள் விலைமதிப்பு 8-சதவீதம் உயர்ந்தது. ஒரே நாளில் இரண்டாவதாக நடைபெற்ற மிகப்பெரிய உயர்வு இது. இந்திய வர்த்தகத்தின் சார்பில் குரல்தரவல்லவர்கள் சிங்-கை மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர், சோனியா காந்தியின் "பெருந்தகைப் பண்பை" பாராட்டினர். ''பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாததன் மூலமும், நிதானமும், பொருளாதார ஞானமும், பணிவும் மக்களுக்கு செவிசாய்க்கின்ற ஆற்றலும் படைத்த சிங்கின் பெயரை பரிந்துரைத்ததற்காக திருமதி சோனியா காந்தியின் புகழ் மகத்தான அளவிற்கு உயர்ந்துவிட்டது'' என்று இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் N. சீனிவாசன் இந்தியாவின் மிகப்பெரிய செய்தி ஏஜென்ஸியிடம் தெரிவித்தார். காந்தி, சிங்கை பிரதமர் பதவிக்கு உயர்த்தியது வரவிருக்கின்ற அரசாங்கம் வாக்காளர்களது விருப்பம் எதிராக இருப்பினும், "தாராள மயமாக்கல்" பொருளாதார சீர்திருத்த செயற்திட்டங்களை நிறைவேற்றும் என்பதற்கான வரவேற்கத்தக்க சமிக்கையாக பெரு வர்த்தக நிறுவனங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றன. காந்தி தனது முடிவிற்கு பகிரங்கமான விளக்கம் எதையும் தரவில்லை. காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் பேசியது தொடர்பான குறிப்புக்கள் பத்திரிகைகளுக்கு தரப்பட்டுள்ளன, அதில் பிரதமர் ஆகவேண்டும் என்று எப்போதுமே தான் ஆர்வம் செலுத்தவில்லை என்று கூறியிருக்கிறார். இந்தக் கூற்றை பொய்யாக்குகின்ற வகையில், அவரது காங்கிரஸ் கட்சியின் எல்லா மட்டங்களிலும் அவரது முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் நாடாளுமன்ற குழு அவரது முடிவை இரத்து செய்யவேண்டும் என்று ஒருமனதாக கேட்டுக்கொண்டது. காங்கிரஸ் செயற்குழுவின் சில உறுப்பினர்கள் அரவது முடிவை கண்டித்து விலகிக்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியுள்ளனர். இதற்கிடையே விரக்தி கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் காந்தியின் தில்லி இல்லத்திற்கு வெளியிலும் BJP- ன் தலைமை அலுவலகத்திற்கு வெளியிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சோனியா காந்தி 1998-முதல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான தலைவராக பணியாற்றி வந்திருந்தமை, நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் தலைமை பிரதிநிதியாக செயற்பட்டமை ஆகியன அவர் பிரதமராக பதவியேற்றுக்கொள்ள தயாராகிறார் என்பதற்கான ஒவ்வொரு அடையாள சமிக்கையையும் தந்தன. வார இறுதியில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவராக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு தேவையான வாக்குகளை பெற்றுத்தந்த கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார் அல்லது அவரது தூதர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தனர். தன்னிச்சையான மற்றும் கருத்துவேறுபாடுகளுக்கு இடம் தருகின்ற அரசியல் முடிவுகள் எடுப்பதை நியாயப்படுத்துவதற்கு 'மகாத்மா' காந்தி கடைப்பிடித்துவந்த இராஜதந்திரத்தை பின்பற்றி திருமதி சோனியா காந்தி தனது உள்மனதின் குரலுக்கு மதிப்பளிப்பதாக காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்தார். அதிகாரத்தை கையில் எடுதுக்கொள்வதில் தனக்கு அக்கறையில்லை என்றும் கூறினார். ஆனால் பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்ட அவர் காங்கிரஸ் அரசியல் அமைப்பின் மீதான நேரு - காந்தி குடும்பத்தின் கட்டுப்பாட்டை எந்த வகையிலும் குறைத்துக்கொள்ள முயலவில்லை. கட்சியின் அமைப்புச்சட்ட விதிகள் செய்வாயன்று திருத்தப்பட்டன. அதில் காங்கிரஸ் கட்சிக்கு அவைத் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது, அவரது முக்கியமான முதன்மை தனியுரிமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்சித்தலைவர்களை தேர்ந்தெடுப்பதாகும். காங்கிரஸ் அரசாங்கத்தை அமைக்க முடியுமென்றால் பிரதமரை அவர் தேர்ந்தெடுப்பார். (இதுவரை நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தான் தலைவரை தேர்ந்தெடுப்பர்.) சோனியா காந்தி உடனடியாக காங்கிரஸ் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பொருள் என்னவென்றால் அவரது விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அவர் விரும்புகின்ற வரையில்தான் பதவியில் நீடிக்க முடியும். இதற்கிடையில் காந்தியின் உதவியாளர்களும் காங்கிரஸ் தலைவர்களும், இந்து மேலாதிக்கவாதிகளால் எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பு கண்டு அவரது குடும்பத்தினர் பயந்துவிட்டதாக கூறுகின்றனர். அவர் பிரதமராவதற்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பால் அவர் தனிப்பட்ட முறையில் உள்ளம் நொந்துபோனார், BJP -ம் RSS- ம், அவர் இந்தியரல்ல, என்று கூறிவந்ததால் அந்தப்பிரச்சனை நாட்டை பிளவுபடுத்துவதை அவர் விரும்பவில்லை என்று கூறுகின்றனர். ஆயினும், சோனியா காந்தியின் இத்தாலிய பிறப்பை ஒரு பிரச்சனையாக்கியிருப்பது BJP -ம் RSS- ம், வகுப்புவாத பகைமைகளை தூண்டிவிட்டு, தேர்தல் முடிவுகளை தலைகீழாக புரட்டுகின்ற ஒரு முயற்சிக்கு சாக்குப்போக்குத்தான் என்பதை அனைவரும் அறிவர். காந்தி பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதை மறுத்திருப்பது இந்து மேலாதிக்கவாதிகள் இந்தியாவை "பிளவுபடுத்த" முயலுவதை தடுத்துநிறுத்திவிட முடியாது. மாறாக இந்து மேலாதிக்கவாதிகள் கொடுத்த நிர்பந்தத்திற்கு தலைவணங்கியிருப்பதன் மூலம் இந்திய வாக்காளர்கள் இந்து மேலாதிக்கவாதிகளுக்கு தர மறுத்துவிட்ட சட்டபூர்வமான நியாயத்தை திருமதி காந்தி அவர்களுக்கு தந்துவிட்டார். சோனியா காந்தியின் நடவடிக்கைகளுக்கு பத்திரிகைகள் தந்துவருகின்ற ஒப்புதல் கூப்பாடுகளுக்கு நடுவில் இந்து வலதுசாரி மிரட்டல்களுக்கு மற்றும் ஓரளவிற்கு வன்முறை என்ற மறைமுக அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவதால் உருவாகின்ற தாக்கம் குறித்து சில குரல்கள் கவலைதெரிவித்தன. ''இப்போது சங்பரிவாரிலுள்ள (RSS தலைமையிலான இயக்கங்களின் வலைப்பின்னல்) காந்தியை மிக ஓங்காரக்குரலில் கண்டிப்பவர்கள்கூட இப்போது 'காக்காய்' பிடிப்பதற்கும், மகிழ்ச்சியால் துள்ளுவதற்கும் ஆசையூட்டப்படுவார்கள். தொடக்கத்திலிருந்தே திருமதி சோனியா காந்தி அரவது நோக்கத்தை தெளிவுபடுத்தியிருப்பாரானால் அவரது உன்னதனமான, துணிவான, தன்னலமற்ற முடிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்'' என்று இந்துஸ்தான் டைம்ஸ் கூறியுள்ளது. இந்து அதன் பங்கிற்கு சோனியா காந்தியின் "அதிர்ச்சிதரும் தன்னலமறுப்பு நடவடிகையை" குறிப்பிட்டு, ''சுஷ்மா சுவராஜ்கள், உமா பாரதிகள், கோவிந்தாச்சாரியார்கள், - (அனைவரும் BJP முன்னணி தலைவர்கள்) சங்பரிவாரில் எஞ்சி இருப்பவர்கள் தீர்ப்பை சிதைக்க தடுத்துநிறுத்த தொடக்கியுள்ள விஷமத்தனமான பிரச்சாரத்தை ஏற்றுக்கொள்வதாக திருமதி காந்தியின் முடிவு அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்....... எந்த ஜனநாயகத்திலும் தேர்தலில் தோற்றவர்கள் யார் வென்றார்கள் மற்றும் யார் தோற்றார்கள், என்று முடிவுசெய்கின்ற நடுவரது தீர்ப்பையே தள்ளுபடிசெய்வதற்கு எந்த உரிமையும் இல்லை'' என்று இந்து மன்றாடுகிறது. இடதுசாரி அணியைச்சார்ந்த தலைவர்கள், தேர்தல்கள் நடைபெற்ற காலம் முழுவதிலும் உழைக்கும் மக்கள் காங்கிரஸிற்கு ஆதரவு தரவேண்டும் அதன் மூலம் BJP பதவிக்கு மீண்டும் வருவதை தடுக்கவேண்டும் என்று விவாதித்துவந்தவர்கள், காந்தியின் முடிவை ஏற்றுக்கொள்வதற்கு உடனடியாக முன்வந்தார்கள் மற்றும் இந்திய பெருவர்த்தக நிறுவனங்களின் தேர்வான பிரதமரை ஆதரிப்பதாக அறிவித்தனர். என்றாலும் அதற்குப்பின்னர், காந்தி மன் மோகன் சிங்கை பிரதமர் பதவிக்கு உயர்த்தி இருப்பதால் தங்களது அதிர்ச்சியையும், கவலையையும் கோடிட்டுக்காட்டியுள்ளனர். அது உண்மையாக இருக்குமானால் அவர்களது திட்டமிட்ட கிரிமினல் அரசியல் குறுகிய நோக்கின் ஆதாரம் அது ஒன்றே போதும். டைம்ஸ் ஆப் இந்தியா தந்துள்ள தகவலின்படி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சி பொதுச் செயலாளர் H.S. சுர்ஜித்தும் மேற்குவங்காளத்தின் சிபிஐ(எம்) முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசுவும், "திருமதி காந்தியுடன் மிக நெருக்கமான நட்புறவு கொண்டிருப்பவர்கள், அவரது முடிவை நம்ப முடியவில்லை'' என்று கருதுகின்றனர். CPI(M) -ன் வங்காள மொழி நாளிதழ் திருமதி சோனியா காந்தியின் முடிவை "சரணாகதி" என்று குறிப்பிட்டிருக்கிறது. அந்த முடிவால் "வகுப்புவாத சக்திகளுக்கு கூடுதல் வலிமையே'' ஏற்படும் என்று கூறியுள்ளது. மக்களை கவருகின்ற போலி சோசலிச சொற் சிலம்பத்திற்கு பின்னால், இந்திய மேட்டுக்குடியின் பாரம்பரிய ஆளுங்கட்சியான, காங்கிரஸ் இந்தியாவில் பிற்போக்குத்தனம் வளருவதற்குரிய வழியை உருவாக்கும் கொள்கைகளைக் கடைபிடித்து வந்தது. முதலாவதாக தேசிய பொருளாதார வளர்ச்சி செயல்திட்டத்தை மேற்கொண்டது. அது தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு பயன்பட்டது, ஆனால் இந்தியாவின் உழைக்கும் மக்களை வறுமையில் விட்டது. அதற்குப்பின்னர் 1990-களின் தொடக்கத்தில் அக்கட்சி தனது போக்கை எதிர்மாறாகத் திருப்பிக்கொண்டு ஏற்றுமதி அடிப்படையிலான வளர்ச்சி மூலோபாயத்தை கடைப்பிடித்தது. அந்த மூலோபாயம் தனியார்மயம், பொருளாதார நெறிமுறைகள் தளர்வு, சிறு விவசாயிகளுக்கான உதவி, சமூக சேவைகள், மற்றும் பொது சேவைகளில் பெருமளவில் செலவினங்கள் குறைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் காந்த சக்தியாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும். மேலும் காங்கிரஸ் கட்சி இந்து வலதுசாரியோடு உடந்தையாக அதன் கொள்கைகளை ஏற்று செயற்படுத்துகின்ற அமைப்பாக நீண்ட துயரமான வரலாற்றக் கொண்டிருக்கிறது. 1947-ல் காங்கிரஸ் தலைமை இந்திய துணைக் கண்டத்தை மத அடிப்படையில் பிரிப்பதற்கு பிரிட்டிஷாரோடு முஸ்லீம் லீக்கோடும், பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நேரத்திலேயே, மேற்கு வங்காளத்தை இந்து மகாசபை தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி தலைமையில் இந்து மேலாதிக்க மாநிலமாக உருவாக்குவதற்கு பிரச்சாரம் செய்தது. இவர் ஜனசங்கத்தை பின்னர் நிறுவினார், அந்த ஜனசங்கம் தான் இன்றைய BJP- ன் நேரடி அரசியல் அமைப்பு ரீதியிலான மற்றும் கொள்கைவழியிலான முன்னோடியாகும். இந்தியா சுதந்திரம் பெற்ற தொடக்க ஆண்டுகளில் உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் தலைமைக்கு பண்டித ஜவஹர்லால் நேருவின் முதன்மை எதிரியுமான வல்லபாய் பட்டேல், காங்கிரஸில் RSS- நுழைவதற்கு திரும்ப திரும்ப பேச்சுவார்த்தைகளை நடத்தினார். 1990-களின் தொடக்கத்தில் மன்மோகன் சிங்- காங்கிரஸ் அரசாங்கத்தில் ஒரு மூத்த அமைச்சராவார். அயோத்தியிலுள்ள பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கும் நிகழ்ச்சியில் முடிவடைந்த BJP-ன் கிளர்ச்சியை எதிர்த்து முறியடிக்க அந்த அரசாங்கம் விரும்பவில்லை, மற்றும் அதனால் இயலவுமில்லை, அதனால் நாட்டுப்பிரிவினைக்குப் பின்னர் படுமோசமான வகுப்புக்கலவரங்கள் நடைபெற்றன. சோனியா காந்தியின் முடிவு இந்து மேலாதிக்க வலதுசாரிகளின் கொள்கைகளை ஏற்பதாக அமைந்திருக்கின்றதென்றால், அதை விட மேலாக இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவத்திற்கு விட்டுக்கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது. இந்திய உழைக்கும் மக்களிப் பெரும்பாலோர் எதை விரும்பினாலும் பதவிக்கு வருகின்ற அரசாங்கம் பெரு வர்த்தக நிறுவனங்களின் செயற்திட்டங்களை நிறைவேற்றும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராக கிளர்ந்தெழவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குகளை திரட்டுவதற்காக கலப்பட அறிக்கைகளை வெளியிடுகின்ற போக்கை கடைபிடித்தது. இந்தியாவின் தேசிய அளவிலான நெறிமுறைபடுத்தப்பட்ட பொருளாதாரத்தை தொடர்ந்து சிதைக்கப்போவதாக பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு உறுதியளித்த, அதே நேரத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பெருகிவரும் பொருளாதார துன்பங்களால் ஆத்திரமடைந்துள்ள மக்களை பரிவிரக்கம் கொள்கின்ற முறையில் பொதுமக்களை கவருகின்ற பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியது. தேர்தல் முடிவுகளைக்கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்ட, இந்திய மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் எந்தவகை காலம்கடத்தும் போக்கையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை என்று காங்கிரஸ் தலைமைக்கு உணர்த்துவதற்கு உறுதியோடு நின்றன. சோனியா காந்தியை மூலதனம் குறிவைத்து வீழ்த்தவில்லை, அவர் தன்னாலேயே வீழ்த்தப்பட்டார். ஆனால், அவர் பிரதமர் பதவி ஏற்றுக்கொள்ள மறுத்து அதை மன் மோகன் சிங்கிற்கு கொடுத்தபொழுது, மூலதனம் அதை மிக விரைவாக அங்கீகரித்தது. இந்திய உழைக்கும் மக்களது குரலைவிட சந்தைகளின் நோக்கத்திற்கு காங்கிரசும், சோனியா காந்தியும் வளைந்து கொடுப்பார்கள் என்பதை அதிரடியாக அவர் உணர்த்திவிட்டார். வோல் ஸ்ரீட் ஜேர்னல் புதன் கிழமை அதன் தலைமை தலையங்கத்தில் சர்வதேச முதலாளித்துவத்தின் வெற்றியை இந்த வகையில் பாராட்டியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதும், இந்திய பங்குச்சந்தைகளில் பெருமளவில் தங்களது பங்குச்சந்தை விற்பனையை பயன்படுத்தி பதவிக்கு வர இருக்கின்ற காங்கிரஸிற்கு தெளிவாக ஒரு அறிவிப்பை தந்தார்கள். மன் மோகன் சிங் தேர்வு உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே அவர் "மிகவும் உறுதியளிக்கின்ற (பிரதமருக்கான) வேட்பாளர்" என்று முதலாளிகள் பிரகடனப்படுத்தினர். ''கடந்த வாரத்து படிப்பினை என்னவென்றால், இந்தியா உண்மையிலேயே ஒரு பொருளாதார வல்லரசாக விரும்பினால் சர்வதேச வாக்காளர்கள் என்று கருதப்படும் முதலீட்டாளர்கள் குரலுக்கு செவிகொடுக்க வேண்டும், அவர்களது உள்நாட்டு வாக்காளர்களோடு சேர்த்து இந்த சர்வதேச வாக்காளர் குரலுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டும். இந்தியா தற்போது சர்வதேச கவனத்தையும், முதலீடுகளையும் ஈர்க்கிறது. பொருளாதார மறுமலர்ச்சியை வளர்ப்பதற்கு உதவிய அதே சந்தை சக்திகள் கொள்கை தவறுகளை கடுமையாக தண்டிக்கும்'' என வோல் ஸ்ரீட் ஜேர்னல் அறிவித்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக மாறி இருக்கிறது. வோல் ஸ்ரீட் இந்திய மூலதனத்தின் அபிலாஷைகளை பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவை மலிவு ஊதிய உற்பத்திக்கான பிரதான தளமாக மாற்ற வேண்டும், குறிப்பாகவும், சிறப்பாகவும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் வர்த்தகம் செம்மையாக்கும் தயாரிப்புக்கள், மருந்தியல் மற்றும் உயிரி-தொழில் நுட்பவியல் ஆய்வுகளில் பிரதான உற்பத்தி கேந்திரமாக மாற்றவேண்டும் என்பது ஆகும். இந்திய பெரு வர்த்தக நிறுவனங்களை போன்று வோல் ஸ்ரீட்டும் இந்தியவாவின் தாராளமயமாக்கல் எதிர்ப்பு தேர்தல் தீர்ப்பை விரைவாகவும் திட்டவட்டமாகவும் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. தேர்தலில் மக்களைக் கவருகின்ற உறுதிமொழிகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலாளித்துவ அரசாங்கம் இவ்வளவு விரைவாக தனது உண்மையான வர்ணத்தை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. இடது முன்னணி ஆதரவு பெற்ற காங்கிரஸ் ஆட்சி தீவிரமான நெருக்கடி உள்ள அரசாங்கமாகும். அந்த அரசாங்கம் இந்து வலதுசாரிகளுக்கு உடந்தையாக செயல்படும் இந்திய பெரு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச மூலதனத்தின் செயற்திட்டங்களை செயல்படுத்தும். |