World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
பூகோள சமத்துவமின்மை
World Bank chief admits United Nations Development Goals cannot be met ஐ.நாவின் வளர்ச்சி இலக்குகள் அடையப்படமுடியாது என்று உலக வங்கித் தலைவர் ஒப்புக்கொள்ளுகிறார் By Barry Mason உலக வங்கியும் சர்வதேச நிதி அமைப்பும், ஏப்ரல் 16 அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஆயிரமாண்டின் வளர்ச்சி இலக்குகள் (Millennium Development Goals MDGs) அடையப்படமுடியாதவை என்று ஒப்புக்கொண்டுள்ளன. 2000- த்தில் நடைபெற்ற ஐ.நா. பொது மன்றத்தின் உச்சிமாநாட்டில் இந்த MDG க்கள் நிறுவப்பட்டிருந்தன. உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் வாழும் மக்கள் வறுமை, பட்டினி, நோயினால் பீடிப்பு என்ற நிலையில் இருப்பதை குறைந்தது பாதியளவாக குறைப்பது என்பது அதன் குறிவைக்கப்பட்ட இலக்காக இருந்தது. உத்தியோகபூர்வமான அறிக்கைச் சுருக்கத்தில் இது கூறுவதாவது; "MDG க்கள் சாதிக்கப்படுவது என்றால் சீர்திருத்தங்கள் விரைவு படுத்தப்பட்டு, வலுவான பொருளாதார வளர்ச்சியை அடைதல் என்று பொருள்- ஆபிரிக்கா அதன் வளர்ச்சி விகிதத்தை இரட்டிப்பாக்க வேண்டும்." அதன் இலக்குகளில் ஒன்றாகிய வருமானக்குறைவு என்னும் ஏழ்மையைக் குறைப்பது என்பதில், ஆபிரிக்க துணை-சகாராப்பகுதியில் உள்ள நாடுகள் "இலக்கு தவறிய பாதையில் அதிகமாக இருந்து, அப்பகுதியில் 15 சதவீத மக்கட்தொகையை பிரதிபலிக்கும் 8 நாடுகள் மட்டுமே, இலக்கை அடைய வாய்ப்பு உள்ளது" என்று அறிக்கை கூறுகிறது. சரியான பாதையில் செல்லுகின்றன எனப்படும் சீனா போன்ற நாடுகள்கூட பெரும் ஏற்றத் தாழ்வுகளை காட்டுகின்றன. "நாட்டின் உள் மாநிலங்களில் பல பகுதிகளில் வறுமையின் செறிவு மிகுந்த நிலையில்தான் சீனா இருக்கிறது" என்றும் அறிக்கை விளக்குகிறது. சுகாதாரத்தைப் பொறுத்தவரையில் இலக்குகளை அடைதல் என்பது கிட்டத்தட்ட அறவே இல்லை. குழந்தைகள் பிறப்பு குறைப்பு மற்றும் மகப்பேற்றின்போது தாய் இறப்பு குறைக்கும் முயற்சிகளில் 15லிருந்து 20 சதவிகித நாடுகள்தாம் இலக்கில் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்று அறிக்கை கூறுகிறது. HIV/AIDS, மற்ற பெரிய நோய்களான மலேரியா, எலும்புருக்கி நோய் பாதிப்பு போன்றவையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. இலக்குகள் இந்நோய் பாதிப்புக்கள் குறையும் என்ற வகையில் இல்லை என்றும் தெரிவிக்கின்றது: "HIV/AIDS இவை பரவுதலை தடுக்கும் முயற்சிகளில் தோல்வித் தன்மை கூடுதலாகத்தான் இருக்கிறது, அதுவும் துணை சகாரா ஆபிரிக்காவில் அதிகமாகத்தான் உள்ளன, பல நாடுகளில் மற்ற இடங்களிலும் கணிசமாக இருக்கிறது". நல்ல குடிநீர் கிடைக்காமல் உள்ள நிலையும், சுத்தமான சூழ்நிலை இல்லாததும் சுகாதாரம், வளர்ச்சி இவற்றில் பெரிய பாதிப்பைக் கொண்டுள்ளன; இத்துறையிலும் இலக்குகள் பெரிதும் தடம் புரண்டுள்ள முறையில்தான் உள்ளன. ஆபிரிக்க துணை சகாராப்பகுதியில் நல்ல குடிநீர் கிடைக்காத நிலையும், தென் ஆபிரிக்காவில் சுத்தக் குறைவு மிகப் பெரிதாகவும் இருக்கிறது என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. ஐ.நா. உச்சிமாநாட்டில் 2000த்தின் போது கொள்ளப்பட்ட இலக்குகளான, அடுத்த பத்து ஆண்டுகளில், குடிநீர் அற்ற நிலை, சுத்தமின்மை ஆகியவை பாதியாகக் குறைக்கப்பட வேண்டும் என்பது செயல்படுத்தப்படவேண்டும் என்றால், இன்னும் 1.5 பில்லியன் கூடுதலான மக்களுக்கு நல்ல குடிநீர் வேண்டும் என்றும் 2 பில்லியன் மக்களுக்கு சுகாதார வசதிகள் கொடுக்கப்படவேண்டும் என்றும் பொருள் ஆகும். "இப்பொழுதுள்ள முன்னேற்ற விகிதங்களில், தேவையில் பாதி கூட அடையப்படமாட்டாது, பெரும்பாலான பகுதிகளில் இதுகூட அடையப்பட இயலாது" என்று அறிக்கை கூறுகிறது. அண்மையில் "எண்கள் மதிப்பு" போன்ற பட்டியல் ஒன்று, உலக வனவிலங்கு நிதியம், தண்ணீர் உதவி வாரியம், Care, Tearfund, பச்சைச் சிலுவை, Oxfam ஆகியவற்றால் எந்த அளவு தண்ணீர், சுத்தம் ஆகிய திட்டங்களுக்குச் செலவிடப்பட்டன என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தித் தொடர்பு அறிக்கைக்கு "உலக அரசாங்கங்கள் சரியாகச் செயல்படாததால், தண்ணீர் நெருக்கடி மோசமாகிறது" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 30 வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் முன்னேற்றம் பற்றிய அறிக்கையை இது தருகிறது. இவற்றில் 15 நாடுகள் ஆபிரிக்காவிலும், 10 ஆசியாவிலும் உள்ளன; 18 நாடுகள் மிகக் குறைந்த வளர்ச்சி பெற்றுள்ளவையாக பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் உள்ள 1.1 பில்லியன் மக்களில் 87 சதவிகிதத்தினர் பாதுகாப்பான நீருக்குக் கூட வழியின்றி இந்நாடுகளில் உள்ளனர். தூய நீரின் முக்கிய பங்கை வலியுறுத்தும் வகையில், இந்த அறிக்கை கூறுகிறது: "தொடர்ச்சியான அல்லது அடிக்கடி நல்ல தண்ணீர் கிடைக்காத கொடுமையினால் பாதிக்கப்பட்டுள்ள இந்நாடுகளில் உள்ள மக்களில் நான்கில் ஒரு பங்கினராவது 2050 அளவில் பாதிப்பிற்கு ஆளாவர் என்று கணிக்கப்படுகிறது." சமீபத்திய ஐ.நா. மதிப்பீடு ஒன்றின்படி, உலகின் மொத்த மக்கட்தொகையில் ஆறில் ஒரு பங்கினர் சேரிகளில் வாழ்கின்றனர் என்ற உண்மையில் இந்நிலையின் தீவிரம் அறியப்படலாம். மதிப்பீட்டு அடிப்படையில் உள்ள 30 நாடுகளில், 25 நாடுகள் "தங்கள் நகர்ப்புற மக்களில் 50 சதவிகிதத்திற்கும் மேலானவர்களை சேரிப்பகுதிகளில் கொண்டுள்ளன, அதாவது கிட்டத்தட்ட 10 மில்லியன் நகர்ப்புறச் சேரிவாசிகள் ஆவர்; ஆறு நாடுகள் கிராமப்புற, நகர்ப்புறச் சேரி மக்கள் என்ற இரு தன்மையையும் கொண்டுள்ளன." மக்கள் இத்தகைய சேரித்தன்மையில் வாழ்வது கூடுதலான கட்டாய வெளியேற்றத்தையும் எதிர்கொள்ளும் கட்டாயத்தை ஏற்படுத்தும். தனியார் மற்றும் அரசாங்க நீர் அளிப்போர், இப்பகுதிகளில் வசிப்பவர்கள் உறுதியான காலத்திற்கு இருப்பர் எனக்கூறவியலாததால், நீர் அளிக்க விரும்புவதில்லை. எனவே சேரிகளில் வாழ்வோருக்கு இரு விதத்திலும் நன்மைகளின் இழப்பு ஏற்படுகிறது. "நீர் அளித்தல் மற்றும் சுகாதரத்திற்கான உதவியின் பங்கு, மொத்த ODA (Overseas Development Assistance) அயல் வளர்ச்சிக்கான உதவியில் ஒரே சீராக 1990 களில் 6 சதவிகிதம் இருபக்க உதவி என்றும் 4 முதல் சதவிகிதம் பன்முகமாக வந்தது என்றும் இருந்தன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) விகிதத்திற்கு மொத்த உதவித் தொகைகளின் சதவிகிதம் குறைந்துவிட்டதால், தண்ணீர்த்துறையில் செலவிடப்படும் தொகையின் மொத்த அளவும் குறைந்து விட்டது. தண்ணீருக்காகவும், சுகாதாரத்திற்காகவும் பெரிய OECD நன்கொடையாளர் அளிக்கும் இருபுற உதவியை ஆராய்ந்தால் அது 2001, 2002 ம் ஆண்டுகளில் 1998, 1999 ஆண்டுகளைவிட 25 சதவிகிதம் குறைந்து விட்டது எனத் தெரியவரும். ஆயினும்கூட குறைந்தது 10 - 15 பில்லியன் டாலர்கள் கூடுதல் தொகை ஒவ்வோரு ஆண்டும் சர்வதேச நீர், சுகாதார இலக்குகளை அடைவதற்குத் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. Oxfam International, சர்வதேச நிதி நிறுவன வசந்தகால கூட்டத்திற்குமுன் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது, இதில் கூறப்பட்டுள்ளதாவது: "இந்த வாரக்கடைசியில் (ஏப்ரல் 25) உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் வாஷிங்டன் DC யில் தங்கள் 60வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றன. இதற்கிடையில், உலகு எங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் நாடுகளை முடக்கவைக்கும் கடனைத் தொடர்ந்து கட்டிவரவேண்டுமா, அல்லது அவர்கள் குழுந்தைகளைக் கல்விக் கூடங்களுக்கு அனுப்ப இயலுமா என்பது பற்றி அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கின்றனர்.... ஒருபுறம் கொடையாளி நாடுகள் வறுமையைக் குறைத்து, புதிய ஆயிரமாண்டு தொடக்கத்தில் வளர்ச்சி இலக்குகள் அடையப்படவேண்டும் என்ற குவிப்பில் உள்ளனர். அதேநேரத்தில் புதிய கட்டமைப்பானது எந்த அளவு ஒரு நாடு கடனைத் திருப்பித்தர முடியும் என்பது பற்றிய விவரங்கள் அந்நாட்டின் வறுமை நிலையோடு தொடர்பு படுத்தப்படாமலும், எந்த அளவிற்கு ஆயிரமாவது ஆண்டின் இலக்குகள் செயல்படுத்தப்படமுடியும் என்பதோடு தொடர்பு படுத்தப்படாமலும் உள்ளன." Oxfam உடைய கொள்கை ஆலோசகரான மாக்ஸ் லோசன் வறுமை குறைப்பு பற்றி விவாதிக்க கூடுகின்ற அமைச்சர்களை பாசாங்கு செய்பவர்கள் என்று குறை கூறியுள்ளார்; ஏனெனில் அவர்கள் நிர்ணயிக்கும் கடன் திருப்பித்தரவேண்டிய அளவு MDG க்களோடு பொருந்திய நிலையில் இருப்பது இல்லை. வளரும் நாடுகளில் உள்ள வறியவர்கள் ஒருபுறம் வெட்டுக்களினாலும், மறுபுறம் கடன் நிவாரணம் கிடைக்காமலும் இருபக்க தாக்குதலுக்கு உட்படுகின்றனர் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மத்தியகாலத்தில் ஏற்பட்டிருந்த கொள்ளை நோயிற்குப் பின்னர், மனிதகுலத்தையே அச்சுறுத்தும் பெரும் நேரடி வியாதியாக HIV/AIDS தொற்றுநோய் உள்ள நிலையில், மேலை நாடுகளிலிருந்து இதற்குக் கிடைத்துள்ள எதிர்விளைவு குற்றஞ்சார் முறையில் போதாத தன்மையில் உள்ளன. உலகளாவிய நிதி HIV/AIDS, எலும்புருக்கி நோய் மற்றும் மலேரியாவிற்காக என்று ஐ.நா. ஒரு நிதியத்தை ஒதுக்கிவைத்துள்ளது. இந்த நோய்கள் வளர்ச்சிபெறும் நாடுகளில் பெரும் தாக்கத்தை கொண்டுள்ளன, அதிலும் குறிப்பாக ஆபிரிக்க துணை சகாரப்பகுதியில் இது அதிகமாகும். உலக வங்கி/ சர்வதேச நாணைய நிதிய அறிக்கை, "உலக வங்கி/ சர்வதேச நாணைய நிதியம் HIV/AIDS, எலும்புருக்கி நோய், மலேரியா இவற்றிற்காக... செலவிடப்படுவது ஜனவரி 2004 ஐ ஒட்டி மிகவும் குறைந்துவிட்டது. மொத்தம் 3.4 பில்லியன் டாலர்கள் உறுதியாக அளிக்கப்படும் என்று இருந்த இடத்தில் 1.5 பில்லியன் டாலர்கள்தான் வரவாயிற்று; அதில் 230 மில்லியன் டாலர்கள்தான் பகிர்ந்துகொடுக்கப்பட்டுள்ளது." அறிக்கையில் வந்துள்ள இந்தக் கணக்குக் குறிப்புக்கள், IMF, உலக வங்கி, மற்றும் வேறு சில சர்வதேச அமைப்புக்கள், உலகின் ஏழைகளில் நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதில், கடந்த இருபது ஆண்டுகளில் பெரும் தோல்வியைத்தான் கண்டுள்ளன என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. நிலமைகள் மோசம் அடைந்துள்ளனவே ஒழிய முன்னேறவில்லை. ஏற்கனவே தோல்வியடைந்துவிட்ட கொள்கைகளை மாற்றுவதைவிட, இந்த அறிக்கை அவையே செயல்படுத்தப்படவேண்டும் எனக் கூறுகிறது. வளரும் நாடுகள் தங்களுடைய பொருளாதாரத்தை பெரு வணிகம் நுழைவதற்கு தடையற்ற வகையில் திறந்தால் கூடுதல் வசதியாக இருக்கும் என்ற கோரிக்கையை அது முன்வைத்துள்ளது. கூடுதலான தனியார்மயம் ஆக்கப்படலும், IMF உடைய அடிப்படைக் கட்டுமான சீரமைப்புத் திட்டங்களும் தேவை என்று அது விரும்புகிறது. அத்தகைய சீரமைப்புத் திட்டங்கள் விவசாயம், சுகாதாரம், கல்வி இவற்றிற்கு கொடுக்கப்பட்டுவந்த அரசு மானிய உதவிகளை ஏற்கனவே தகர்த்துவிட்டன. இந்த அறிக்கை வளரும் நாடுகளோடு மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. "ஐரோப்பாவில் முக்கியமான சவால் அடிப்படைக் கட்டுமான சீர்திருத்தங்கள்தான், அதுவும் தொழிலாளர் சந்தையிலும், சமுதாய பாதுகாப்பு முறைகளிலும்; அப்பொழுதுதான் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 2.3 சதவிகித தரத்தில் மத்திய காலத்தில் அடையப்படமுடியும்" என்று அது கூறியுள்ளது. மேலும், விவசாயத்திற்கு கொடுக்கப்படும் உதவித் தொகைகளைக் குறைக்கவேண்டும் என்றும் அது, பொதுச்செலவினங்களில் நிதி மூலதனத்திற்கு நன்மை அளிக்கும் என்ற அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளது. வளரும் நாடுகளில் உள்ள குறைவூதியத் தொழிலாளர் நிலைமையும் நன்கு பயன்படுத்தப்படவேண்டும் என்றும் அதற்காக அவ்விடங்களில் தொழில்களை ஆரம்பிக்காலாம், அதாவது அழைப்பு மையங்கள் போன்றவை என்றும், வளர்சியுற்ற நாடுகளுக்குள்ளேயே புலம் பெயரும் தொழிலாளரையும் குறைவூதிய முறையைக் கையாண்டு சுரண்டலாம் என்றும் தெரிவித்துள்ளது. வணிகத்திலும் தாராளமயமாக்கல் தேவை எனக் கூறும் அறிக்கை, பணிகளில் இது விரைவாக வளரும் நாடுகளில் ஒரு பகுதியாக வந்துகொண்டிருக்கிறது என்றும், அதற்குச் சான்றாக அழைப்பு மையங்களைக் கூறலாம் என்று தெரிவித்துள்ளது. கூடுதலான அரசாங்க ஒப்பந்தங்கள், வளர்ச்சியுற்ற நாடுகளில் இருந்து வெளியே மூன்றாம் உலக நாடுகளுக்கு கொடுக்கப்படவேண்டும் என்றும் அது கூறுகிறது. தொழிலாளர்கள் தற்காலிகமாக இடம் பெயர்தலின் பொருளாதார மதிப்பை, இவ்வறிக்கை வலியுறுத்துகிறது: இது புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பற்ற, சமுதாய நலன்கள் அற்ற, நன்கு சுரண்டப்படக் கூடிய வகையில் ஒரு தட்டைத் தோற்றுவிப்பதற்கு நல்ல ஒப்புதலைக் கொடுக்கிறது. இதன் மிகப்பரந்த இருப்புக்களில் இருந்து, உலக வங்கி, உலகத்தின் வறியவர்களைச் சூழ்ந்துள்ள பேரழிவிற்கான சான்றுகளை திரட்டும் ஆற்றலை முழுமையாகக் கொண்டுள்ளது; ஏனென்றால் அது வறியவரை ஒட்டச் சுரண்டும் பெரு வங்கிகள், பெரு நிறுவனங்கள் இவற்றின் நலன்களைத்தான் பிரதிபலிக்கிறது; எனவே இது புலப்படுத்தும் நெருக்கடிக்களைத் தீர்ப்பதற்கான நல்ல முடிவுகளை இது கொடுக்காது. |