World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்The politics of opportunism: the "radical left" in France Part one: the LO-LCR electoral alliance சந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் "தீவிர இடது" முதல் 1: LO-LCR தேர்தல் கூட்டு By Peter Schwarz பிரான்சில் "தீவிர இடது" எனக் கூறிக்கொள்ளும் கட்சிகளின் அரசியல் பற்றிய ஏழு பகுதிகள் கொண்ட கட்டுரைத் தொடரின் முதல் பகுதியை கீழே காணலாம். தற்போது ஐரோப்பா முழுவதும், புதிய அரசியல் முன்னோக்கு மற்றும் மாற்றீட்டு கட்சி பற்றிய கேள்வி மிக அவசரமான முறையில் எழுந்துள்ளது. தொழிலாளர் இயக்கத்தின் மீது பல பத்தாண்டுகளாக மேலாதிக்கம் செலுத்தி வந்த சமூக ஜனநாயகவாத, ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை, கடந்த காலத்தில் போராடிப்பெற்ற சமூக மற்றும் ஜனநாயக வெற்றிகளை காப்பதற்கு திறனின்றிப் போனதை நிரூபித்துள்ளன. ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சி போலவும், இங்கிலாந்தில் தொழிற் கட்சி போலவும் இவை எங்கே அரசாங்கம் அமைத்திருந்தாலும், அங்கு அவை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை அழித்த வண்ணம் உள்ளன; சில உரிமைகள் 120 ஆண்டுகளுக்கு முன்பு பிஸ்மார்க் காலத்திலேயே பெறப்பட்டிருந்தவை ஆகும். இந்த நிலைமையின் சமூக விளைவுகள் பேரழிவை தரும் வகையில் இருக்கின்றன. பெருகிய வேலையின்மை, அதிகரித்துச் செல்லும் வறுமை, குறைந்துவிட்ட ஓய்வூதியங்கள், கல்வி, சுகாதார நலன்களில் சரிவு, அடிப்படைக் கட்டுமானங்கள் சிதைவு ஆகிய இவை ஒரு புறமும், இராணுவவாதத்தின் வளர்ச்சி மற்றும் அரசின் போலீஸ் அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டமை மறுபுறமும் ஆக, சமுதாயமானது எங்கும் இவற்றால் கவனிக்கபடக் கூடியதாக இருக்கின்றது. இந்தப் பின்னணியில், பிரான்சில் நடக்கும் நிகழ்வுகள் நெருக்கமாக கவனத்தில் கொள்ளத்தக்கதாக உள்ளன. ஐரோப்பிய அரசியல் கொந்தளிப்புகளின் முன்னோடியாக 200 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்திருந்த நாடு, அரசியல் நிலைமையில் அடிப்படை மாற்றங்களில் புதிய தன்மையை காட்டத் தலைப்பட்டுள்ளது. தேர்தல்களில், தீவிர வலதுசாரி தேசிய முன்னணி (FN) தொடர்ந்து 15 சதவிகித வாக்குகளைப் பெற்றுவந்தாலும், அரசியல் நிறமாலையின் மறுபக்கத்தில் "தீவிர இடது" என அழைக்கப்படும் பல அமைப்புக்கள் தேர்தலில் கணிசமான முன்னேற்றத்தைக் கொண்டுள்ளன. Lutte Ouvriere (LO -தொழிலாளர் போராட்டம்), Ligue Communiste Revolutionnaire (LCR புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்), சற்றே குறைந்த நிலையில், Parti des Travailleurs (PT தொழிலாளர் கட்சி) இவை அனைத்தும் ட்ரொட்ஸ்கிச கட்சிகள் என தம்மை கூறிக் கொள்பவை, தொடர்ந்து சமீபத்திய தேர்தல்களில் கிட்டத்தட்ட 5 சதவிகித வாக்குகளை இணைந்தவகையில் பெற்றுள்ளன. 2002 ஜனாதிபதித் தேர்தல்களின் முதல் சுற்றில், வாக்காளர்களில் 10 சதவிகிதத்திற்கு மேற்பட்ட 3 மில்லியன் வாக்காளர்கள் "தீவிர இடது" கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு அளித்தனர். கடந்த இலையுதிர்காலத்தில், ISOP அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு, வாக்காளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் "தீவிர இடது" கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு வாக்குப் போட்டதாகவும் அல்லது குறிப்பிட்ட சூழ்நிலையில் போடத்தயாராக இருந்ததாகவும் கூறுகிறது. தொடர்ந்த சமூக தாக்குதல்கள் பெருகிய நிலையில், இயலாத்தன்மையும் திகைப்பும் கொண்ட மக்கட் பகுதிகள் அவற்றிற்கு வழிகாணும் வகையில் பக்கவிளைவாக, அளிக்கும் வாக்குகளே தேசிய முன்னணி பெறும் வாக்குகள் ஆகும். எதுவும் செய்ய முடியாத நிலைமை, சமுதாயத்தில் ஒதுக்கிவைக்கப்படுதல், நலன்கள் குறைவு இவை, வலதுசாரி மற்றும் இடதுசாரி தோற்றுவாயின் அரசியல் செல்வந்த தட்டுகள் இருவருமே இழிமுறையில் அரசியலை ஊழல்படுத்தியுள்ளதால் ஏற்படும் சீற்றத்துடன் பிணைந்து நிற்பதின் வெளிப்பாடேயாகும் இது. இந்த வெறுப்பு உணர்வை வெறும் இன, தேசிய பழிப்பு வெறி என மேலே செல்லமுடியாமல் தடுத்து நிறுத்தும் வகையில் திசைதிருப்புவதுதான் FN உடைய பணியாக இருக்கிறது. ஆனால் கூடுதலான முறையில் "தீவிர இடது" பெற்றுள்ள வாக்குகளும், அலைபோல் தொடரும் வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் நாடெங்கிலும் உள்ள நிலையும், தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர் சமுதாயத்தின் கணிசமான பகுதி அவசரமான சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு தீவிரமான விடையை காணவேண்டும் என்ற விழைவை கொண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன. பிரான்சின் எதிர்காலம், ஏன் ஐரோப்பா ஒட்டுமொத்தமாகவும் கூட, எந்தப் போக்கு வெற்றி அடையும் என்பதைப் பொறுத்தேயிருக்கிறது: உத்தியோகபூர்வ தொழிலாளர் இயக்கத்தின் சீரழிவு ஊட்டமளித்த செயலற்ற நம்பிக்கை இழப்பு மற்றும் பாசிச திசையில் பாயும் அச்சுறுத்தல் போக்கா அல்லது சமுதாய மாற்றத்திற்கான செயலூக்கமான முயற்சியா என்பதே ஆகும். இறுதியில் அகநிலைக் காரணிதான் தீர்மானிக்கும். உத்தியோகபூர்வ தொழிலாளர் அமைப்புக்கள் மீதான செயலிழக்கச்செய்யும் பாதிப்பைக் கடந்து வருவதற்கும், அரசியல் நிகழ்வுகளில் செயலூக்கமாக தலையீடு செய்வதற்கும் வழிகாட்டப்பட்டாகவேண்டும். அரசியலில் வெகுஜனங்களின் அத்தகைய தலையீடுதான் அதிகாரச் சமநிலையை அடிப்படையில் மாற்றுவதோடு, அதி வலது போக்கினையும் கீழறுக்கும். இப்பணியைப் பற்றித்தான் இத்தொடர் கட்டுரைகள் கூறவிருக்கின்றன. பிரான்சின் "தீவிர இடது" களின் அரசியல் கருத்துருக்கள், வேலைத்திட்டங்கள், அதன் வரலாறு ஆகியவை கவனமான முறையில் திறனாயப்படும். ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கை பிரதிபலிப்பதாக இந்த "தீவிர இடது" அமைப்புக்கள் கூறிக்கொண்டாலும், அத்திசையில் உண்மையான முன்முயற்சிகள் எதையும் எடுப்பதில் இவை தோல்வியுற்றுள்ளன. அவர்களுடைய கூற்றுக்களுக்கும் அரசியல் நடைமுறைக்கும் இடையே ஆழமான பிளவு உள்ளது. நாம் பார்க்க இருப்பதுபோல், LO தொழிலாள வர்க்கம் ஆழமாய் "நம்பிக்கை இழந்து" இருக்கிறது என நம்பி ஏற்கிறது, அதேவேளை LCR பழைய அதிகாரத்துவ சாதனங்களில் இருந்து ஒதுக்கித்தள்ளப்பட்டுவிட்டவர்களுக்கு ஒரு புதிய இல்லத்தை வழங்கி, பரந்த அளவிலான இடைநிலைவாத இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்றும் விரும்புகின்றது. (1) பிரெஞ்சுத் தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு பல ஏமாற்றப்பட்ட நம்பிக்கைகளை கொண்டுள்ளது. மீண்டும் மீண்டும், நல்ல அறிகுறிகளைக் காட்டும் மக்கள் இயக்கங்கள் முட்டுச்சந்தில் போய் முடிந்தன, ஏனெனில் அவற்றின் அரசியல் தலைவர்கள் எடுத்துக்கொண்ட பணிக்கு தகுதி அற்றவர்களாக இருந்தனர் அல்லது நனவாகவே இயக்கத்தை காட்டிக் கொடுத்தனர். 1930களின் மக்கள் முன்னணி, 1968ன் பொது வேலை நிறுத்தம் ஆகியவை இதற்கு நன்கு அறியப்பட்ட உதாரணங்கள் ஆகும். அத்தகைய தோல்விகள் திரும்ப நடைபெறுவதைத் தவிர்ப்பதற்கு இத் தொடர்கட்டுரைகள் பங்களிப்புச் செய்யும். உண்மையான சோசலிச வெகுஜன இயக்கம் வளர்க்கப்பட வேண்டிய அடிப்படையை தெளிவாக்குவதற்கும், உழைக்கும் மக்களின் வெற்றியை உத்திரவாதப்படுத்துவதற்கும், ஒரு விமர்சன ரீதியான அரசியல் விவாத முறையில், இது முயற்சியை மேற்கொள்ளும். LO-LCR தேர்தல் கூட்டணிLO, LCR இரண்டும் கடந்த ஆண்டு இறுதியில், 2004 மார்ச் மாத பிராந்திய தேர்தல்கள் மற்றும் ஜூன் மாதம் ஐரோப்பிய தேர்தல்கள் இவற்றில் இணைந்து பங்கேற்க முடிவு செய்தன. ஒரு பொது அரங்கில் இணைந்து இரு அமைப்புக்களும் செயல்படுவது இதுதான் முதல் முறை அல்ல. அவ்வப்பொழுது இவை ஒன்று சேர்ந்து செயலாற்றுவது 1970 களில் இருந்தே நடைபெற்று வருகிறது. 1999ம் ஆண்டு, ஐரோப்பிய தேர்தல்களில் இணைந்து நின்றன; அதில் முதல் தடவையாக ஐரோப்பிய பாரளுமன்றத்தில் பிரதிநிதிகளை அனுப்புவதற்காக தேவைப்படும் 5 சதவிகித வாக்குகளுக்கும் மேலாகவே பெற்றன. அப்பொழுதிலிருந்து, பாராளுமன்றத்தில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன. 2002ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், ஆர்லட் லாகியே LO விற்காக தனி வேட்பாளராகவும், LCR க்காக ஒலிவியே பெசன்சேனோ தனி வேட்பாளராகவும் நின்று, தனித்தனியே கிட்டத்தட்ட 5 சதவிகித வாக்குகள் பெற்றனர்; இது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான றொபேர்ட் ஹ்யூ பெற்றிருந்த 3 சதவிகித வாக்குகளைவிடக் கூடுதலாகும். இந்தப் புதிய தேர்தல் கூட்டு, சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள், மாறியிருக்கும் அரசியல் நிலைமை, கூட்டுப் பிரச்சாரத்தின் நோக்கங்கள் பற்றி கவனத்துடன் முன்னரே விவாதிக்கப்பட்டிருக்கும் என பொதுவாக எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. இரண்டு அமைப்புக்களின் நிர்வாகக் குழுக்களிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் கடைத்தெருப் பேரத்தை ஒத்திருந்தன.(2) அவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்தனர், ஒருவரை ஒருவர் நம்பவில்லை, மற்றவரைவிடத் தான் கூடுதலான நன்மையை அடையவேண்டும் என்ற கருத்துத்தான் இருவரிடையேயும் இருந்தது. பரந்த அரசியல் கருத்துருக்கள் வளர்க்கப்படுவது ஒருபுறம் இருக்க, இருக்கும் பிரச்சினைகள் பற்றிய நிலையை தெளிவாக்கவோ, மற்றவரை நம்பிக்கைக்கு உட்படுத்துவதற்கான முயற்சிகளோ மேற்கொள்ளப்படவில்லை. அக்கடிதங்களிலுள்ள நீண்ட பத்திகள் நண்பகலில் இருந்து இரவு வரை சண்டை போட்டுவிட்டு, இறுதியில் ஒன்றாகவே வாழும் வயதான தம்பதியினருக்கு இடையே உள்ள பூசல் தன்மையைத் தான் கொண்டிருந்தது. LCR, ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றில் பழமைவாத முதலாளித்துவ ஜாக் சிராக்கிற்கு ஆதரவு காட்டியதற்கு LO குற்றம் சாட்டுகிறது. இதற்குப் பதில் கூறும் வகையில் LCR இகழ்வுடன், "நீங்கள் எங்களை 'சிராக்கிற்காக துரோகம் செய்தவர்கள்' எனக் கூறுகிறீர்கள்; இது தொடர்ந்து ஒத்த கருத்தைக் கொள்ளாத உங்கள் நிலையைத்தான் வெளிப்படுத்துகிறது; ஏனென்றால் ஒரு கம்யூனிச பாட்டாளி வர்க்கப் போக்கு என்ற முறையில், 'சிராக்கின் ஆதரவாளர்களுடன்' நீங்கள் பொது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா, எப்படி மேற்கொள்ள முடியும்?" இது அலங்காரச் சொற்றொடர் முறையில் கூறப்பட்டது என்றாலும், LO வின் தலையில் ஆணி அறைந்தாற்போல் அமைந்து, அது இதற்கு விடை ஏதும் அளிக்கவில்லை. வேறுபுறத்தில் LO குறை கூறியது: "நாங்கள் மிகச்சிறிய அளவில்கூட LCR ஐப் பற்றிய குறையையோ, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அவர்களுடைய வேட்பாளர்கள் பற்றியோ கருத்தை வெளிப்படுத்தியது கிடையாது. ஆனால் இதேபோல் நீங்கள் நடந்துகொண்டுள்ளதாகக் கூறுவதற்கில்லை." இத்தகைய முறையில்தான் முழுக் கடிதப்போக்குவரத்தும் காணப்படுகிறது; முழு முயற்சியின் இருண்ட தன்மையைப் பற்றிய நிலை புலப்படும் விதமும் இவ்வாறுதான் உள்ளது. அரசியல் நோக்குநிலை அடிப்படைப் பிரச்சினைகளில் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைத் தெளிவாக்குவது பற்றிய தீவிர முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. LCR "குடியரசு முன்னணியில்" சேர்ந்து கொண்டதற்கும் 2002 தேர்தலில் சிராக்கிற்கு வாக்கு அளிக்கவேண்டும் எனக் கூறியதற்கும் LO விமர்சிக்கிறது; அதேநேரத்தில் "மிகச்சிறிய அளவில் கூட LCR பற்றிய குறைகளைக் கூறியது கிடையாது" என்றும் வலியுறுத்துகிறது. LCR நடந்துகொண்ட முறையினால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றிய கருத்தாய்வுகளை கொள்ளவில்லை; புரட்சிகர அமைப்பு என தன்னை கூறிக்கொள்ளும் ஒன்று, வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதியை ஆதரித்தமை மிகச்சாதாரண விஷயம் என்பது போல், பின்னர் உடனடியாக இக்கருத்துக்களைக் கைவிட்டு விடுகிறது. ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களை படித்தவர்கள் அனைவரும், அவர் அரசியல் கொள்கைகள் பற்றிய தன்மையை எவ்வாறு விவாதித்திருக்கிறார் என்றும், பிரான்சிலும் ஸ்பெயினிலும் மக்கள் முன்னணிக்கு எதிராக அயராத போராட்டம் நடத்தினார் என்பதை அறிந்தவர்களும், இது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மரபுகளோடு சிறிதும் பொருந்தாதவை என்பதை உடனடியாக உணர்வர். 2002 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள் LCR இன் நடவடிக்கைகள் வெறும் சாதாரண தன்மையையும் விட அதிகமானவை ஆகும். ஒரு நெருக்கடியின்போதுதான் ஓர் அரசியல்போக்கின் உண்மையான சிறப்பியல்பு தெளிவாக வெளிப்படும். 2002 ஜனாதிபதித் தேர்தல்களின்போது LCR நடந்துகொண்ட முறை, இந்த அமைப்பின் உண்மையான நோக்குநிலையைப் பற்றி சந்தேகத்திற்கிடமின்றி புலப்படுத்துகிறது. ஏப்ரல் 21, 2002 அன்று முதல் வாக்களிப்பின் முடிவு முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியை வெளிப்படுத்தியது. 1981 லிருந்து அரசாங்கத்தை அமைத்து ஜனாதிபதி பதவியையும் பெரும்பான்மையான காலத்திற்கு வகித்துவந்த சோசலிச கட்சி (PS), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) என்ற இரு கட்சிகளும் பெரிதும் அவமதிப்பிற்கு உட்பட்டன. ஒரு இடதுசாரி எனக் கருதப்படுபவரும், 1996 இலையுதிர்கால பெரும் வேலைநிறுத்தத்திற்கு பின்னர் அரசாங்கத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டவரும், வெகு விரைவிலேயே முதலாளித்துவ நலன்களை நம்பகமாகச் செயல்படுத்தக் கூடியவர் எனப் பெயரெடுத்துவிட்டவருமான, PS இன் தலைவர் லியோனல் ஜொஸ்பன், வாக்குகளில் 16 சதவிகிதத்தையே பெற்றிருந்தார். தீவிர வலதுசாரி FN வேட்பாளரான ஜோன் மரி லூபென் பெற்றதை விட இது குறைவு ஆகும்; ரொபேர்ட் ஹ்யூ வோ, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றிலேயே மோசமான 3 சதவிகித வாக்கையே பெற்றார். மேலும் பழமைவாத முதலாளித்துவ வேட்பாளரான ஜாக் சிராக்கிற்கு கிடைத்த வாக்குகளும் மிக மோசமானது ஆகும்; ஒரு பதவியில் இருக்கும் ஜனாதிபதி இதுவரை குறைந்து வாங்கியிராத 19 சதவிகித வாக்குகளையே அவர் பெற்றார். பிரான்சின் செல்வந்தத் தட்டு, கோலிச ஜனாதிபதிக்கு இரண்டாம் சுற்றில் சவால்விடுபவராக நுழைந்திருந்த, லூ பென் இன் வேட்பாளர் நிலைமையோடு எளிதில் ஒத்துப் போயிருக்க முடியும். எத்தனையோ பத்தாண்டுகளாக, அரசியல் நிறுவனத்தின் உள்ளடங்கிய பகுதியாக இருந்து வரும் இந்த வலதுசாரி அரசியல் கிளர்ச்சிப் பேச்சாளர், வலதுசாரி முதலாளித்துவ முகாமின் குறிப்பிட்ட போக்குடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார். 1999 லிருந்தே, FN அதிகாரபூர்வமான பழமைவாத பிராந்திய அரசாங்கங்களை பிரான்சின் பல பகுதிகளிலும் ஆதரித்து வந்துள்ளது. லூ பென் உண்மையான ஆதரவை பெருவர்த்தக வட்டத்தில் இருந்தோ, செய்தி ஊடகத்தில் இருந்தோ, பழமைவாத நிறுவனங்களிடமிருந்தோ பெறாத வரை அவரால் சிராக்கிற்கு எந்த ஆபத்தும் வராது என்பது தெளிவாகத்தான் இருந்தது. ஆனால் லூ பென்-க்கு முதல் சுற்றில் கிடைத்த 17 சதவிகிதத்தைவிட, தேர்தல் முடிவுகளின் எதிர்விளைவுகளைப் பற்றித்தான் பிரான்சின் செல்வந்தத் தட்டு கூடுதலாக கவலை கொண்டது. ஆரம்ப கணினி கருத்துக்கணிப்புக்கள் வந்திராத நிலையில் முதல் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. தொடர்ந்து வரவிருந்த நாட்களில், மில்லியன் கணக்கான மக்கள் நாடு முழுவதும் தெருவிற்கு வந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பெரிய நகரங்களிலும், சிறு மாநில நகரங்களிலும், சமுதாயத்தின் அனைத்து வர்க்கத்தினரும் இதில் கலந்துகொண்டனர். கணக்கிலடங்கா பள்ளி மாணவர்கள், இன்னும் வாக்களிக்கும் உரிமைகூடப் பெறாதவர்கள், தலைநகரில் மணிக்கணக்கில் அணிவகுத்துச் சென்று FN உடைய இனவெறிக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். லூ பென்னிற்கு இனி ஆதரவு கொடுத்தால் உள்நாட்டுப் போர் நிலைமை ஏற்பட்டு ஐந்தாம் குடியரசின் அத்திவாரங்களுக்கே ஆட்டம் வரும் என்ற நிலை தோன்றியது தெளிவாயிற்று. இந்தச் சூழ்நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அரசியல் அமைப்பானது "தீவிர இடது" ஆதரவை சார்ந்திருந்தது. LCR, LO இரண்டும் மொத்த வாக்குப்பதிவில் 10 சதவிகிதத்தைப் பெற்றிருந்தவை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாயின. உத்தியோகபூர்வ இடது (PS, PCF இரண்டும்) பதவியில் இருக்கும் ஜனாதிபதியான, ஏராளமான ஊழல்களில் தத்தளித்துக் கொண்டிருந்த சிராக்கிற்கு, அவரைப் பெரிதும் புகழ்ந்து, வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டன; அவரை "குடியரசின் மதிப்புக்களை" உறுதி செய்பவர் என்று கூறின. செய்தி ஊடகமும், எல்லாவற்றுக்கும் மேலாக Le Monde, Liberation உட்பட இதைத்தவிர வேறு எது செய்தாலும் குறுங்குழுவாத லூ பென்னுக்கு ஆதரவு அளிப்பதுபோல் ஆகும் என்ற கண்டனத்தையும் தெரிவித்தன. LCR ஐ முதலாளித்துவ முகாமிற்குள் இழுக்க அதிக முயற்சி தேவைப்படவில்லை. சிராக்கிற்கு தான் அளித்த சரணாகதியை மறைப்பதற்காக, அது "லூ பென்னை தெருக்களில் இறங்காது நிறுத்து மற்றும் வாக்குப் பெட்டியிலும்" என்ற கோஷத்தை கொடுத்தது. ஆனால் நிலவும் நிலைமையில், லூ பென்னை வாக்குப் பெட்டியிலும் தடுத்து நிறுத்தவேண்டும், என்பது சிராக்கிற்கு வாக்கு அளிக்கவேண்டும் என்ற பொருளைத்தான் கொடுக்கும் -- முக்கியமான LCR பிரதிநிதிகளும் இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். முதலாளித்துவ அமைப்புக்கள், கட்சிகள் இவற்றில் ஆழ்ந்த நெருக்கடி காணப்பட்ட நிலைமையில், உழைக்கும் மக்கள் தனித்த சுயாதீனமான இயக்கத்தை பெறலாம் என்றிருந்த நிலையில், LCR தன்னை ஐந்தாம் குடியரசின் பக்கம் இருத்திக்கொண்ட வகையில் முதலாளித்துவ முகாம் தன் பிடியை இறுக்கிக்கொள்ள அதிக பங்கினைக் கொடுத்தது. முதல் சுற்று முடிந்த மூன்று வாரகாலத்திற்குப் பின், பெரிதும் சவாலிற்கு உட்படாத சிராக் இரண்டாம் சுற்றில் பெரும் வெற்றியை, 82 சதவிகித வாக்குகளை பெற்றுக் கொண்டார். சில வாரங்களுக்கு முன் வருங்காலமே ஐயத்திற்குட்பட்டிருந்த இந்த வலதுசாரி அரசியல்வாதி, மீண்டும் அதிகாரத்தில் உறுதியாக அமர்ந்து, முதலாளித்துவ ஆட்சியின் இயங்குமுறைகள் ஆபத்திற்குட்படாமல் தொடரலானார். முதல் சுற்றின் எதிர்விளைவாகத் தோன்றிய மக்கள் இயக்கத்தின் சுயாதீனமான நோக்கு நிலைக்கு போராடும் சாத்தியத்தை LCR சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மூன்று "தீவிர இடது" கட்சிகளுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில், உலக சோசலிச வலைத் தளம் தேர்தல் புறக்கணிப்பு என்ற கொள்கையை முன்வைத்தது (3). முறைப்படி தேர்தல் புறக்கணிப்பு நடைபெற்றால் தேர்தலுக்கு சட்ட நெறி மறுக்கப்பட்டிருக்கும் என்றும், இத்தேர்தல் இரண்டு வலதுசாரி வேட்பாளர்களுக்கிடையே நடக்கும் விருப்பப் போட்டிதான் என்றும் குறிப்பிட்டிருந்தது. அத்தகைய தீவிர புறக்கணிப்பு, தொழிலாள வர்க்கத்திற்கு வரவிருக்கும் போராட்டங்களில் சுயாதீனமான அரசியல் பாதையை வழங்க இருக்கும் மற்றும் எதிர்காலப் போராட்டங்களுக்காக அதனை தயாரித்திருக்கும். இந்த முன்மொழிவை பரிசீலனைக்கு உகந்ததாகக் கூட LCR எண்ணிப் பார்க்கவில்லை. மாறாக, அது முதலாளித்துவ ஆட்சியின் இடது சாரியாக செயல்பட்டது. கீழே நாம் காண இருப்பதுபோல் இது ஒரு தற்செயல் நிகழ்ச்சியோ, தற்காலிக மனச்சிதைவோ அல்ல. LO வின் பங்கும் சிறந்ததாக இருக்கவில்லை. அது முற்றிலும் செயலற்ற தன்மையைக் காட்டியது. ஆர்லட் லாகியேருக்கு 1.6 மில்லியன் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், LO நெருக்கடியில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாகவும், சக்திவாய்ந்த முறையிலும் தலையிடக்கூடிய முன்னெடுப்புக்கள் எதையும் முன்வைக்கவில்லை. அது, உலக சோசலிச வலைத் தளத்தால் விடுக்கப்பட்ட அழைப்பான முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்க தேர்தல் புறக்கணிப்பு என்பதை நிராகரித்தது. பல நாட்கள் தெளிவான அறிக்கை ஒன்றையும் அளிக்காமல் தவிர்த்ததுடன், இறுதியில் வாக்காளர்களை வெற்று வாக்குச் சீட்டுக்களை அளிக்குமாறு அழைப்பு விடுத்தது. அப்பொழுது LO ஒப்புக் கொண்டபடி "அரசியல் சைகை" என்பதைத் தவிர அது வேறு ஒன்றையும் அர்த்தப்படுத்தவில்லை. LCR, LO இரண்டுமே அடிப்படையில் இதே நிலைமையைத்தான் பகிர்ந்து கொண்டுள்ளன; அவை முதலாளித்துவ அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. 1958ல் டு கோல்- ஆல் ஏற்படுத்தப்பட்ட சர்வாதிகாரப் போக்குடைய அரசியல் அமைப்பை புனிதமாகவே இவை இரண்டும் கருதுகின்றன. ஒரு கூட்டுத் தேர்தல் அரங்கு ஜனாதிபதித் தேர்தல்களின் போது LCR, LO இரண்டும் நடந்து கொண்ட முறையில், அவர்களுடைய தற்போதைய தேர்தல் உடன்படிக்கையில், மேம்போக்கான எதிர் கருத்துக்களை தெரிவித்ததைவிட, வேறு எந்த தீவிர சர்ச்சையும் இல்லாதிருப்பது வியப்பைத் தரவில்லை. LCR அல்லது LO இரண்டுமே கடந்த ஆண்டுகள் பற்றிய நேர்மையான இருப்பு நிலைக் குறிப்பைத் தர இயலாது. மூன்று மாதகால சிறுசிறு சண்டைகளுக்குப் பின்னர், இவர்கள் இறுதியாக ஒரு கூட்டு தேர்தல் அரங்கத்தை (Joint election platform) ஏற்படுத்திக் கொள்ள ஒப்புக்கொண்டனர், அது முக்கிய அரசியல் பிரச்சினைகளை தவிர்த்தது. இந்த உடன்படிக்கை ஒரு மூலப் பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டு, ஒரு தேர்தல் அறிக்கையாகவும் வந்துள்ளது.(4) இரண்டு ஆவணங்களும் அவற்றின் மேம்போக்கான தன்மையையும், மிகச்சிறிய பொருள் உரையையும் கொண்டுள்ளன. ஒரு காகிதத்தில் இருபுறமும் எழுதப்பட்டவையைவிட அதிகமாக இவற்றில் ஏதும் இல்லை. தற்போதைய நிலைமை பற்றியோ, சமீப காலத்திய அரசியலில் முக்கியமான அனுபவங்கள் பற்றியோ இரண்டும் எத்தகைய மதிப்பீட்டையும் குறிப்பிடவில்லை. இந்த புதிய நூற்றாண்டின் மிக முக்கியமான சர்வதேச நிகழ்வான ஈராக்கிய போர் பற்றி ஒரு குறிப்புக் கூட அதில் கிடையாது. ஜனாதிபதி தேர்தல்களிலிருந்து அரசியல் படிப்பினைகள் உணர்தல் பற்றிய அடிப்படை முயற்சி கூட மேற்கொள்ளப்படவில்லை; "உத்தியோகபூர்வ இடது" (PS, PCF) களின் சரிவு பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை. தேர்தல்களில் இவர்கள் கூட்டாக ஏன் செயலாற்ற உள்ளனர் என்பதற்கு முக்கியமான பகுத்தறிவான விளக்கமோ அல்லது அரசியல் நோக்கமோ இவ்வறிக்கைகளில் தேடினாலும் கிடைப்பதற்கில்லை. வேலை நீக்கம், வேலையின்மை, ஊதியங்கள் சரிவு, பொதுநல மற்றும் சமூக ஒதுக்கீடுகளில் வெட்டு என பல சமுதாய, அரசியல் கெடுதல்களை பட்டியலிட்டு, இந்த அறிக்கை தொடங்குகிறது. முதலாளித்துவ சமுதாய அமைப்பை குறைகூறுதல்கள் இதைப் பின்பற்றி தெரிவிக்கப்படுகின்றன: "அரசாங்கத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பொறுப்பேற்றிருப்பவர்கள் அவற்றைச் சூறையாடி, பெரு வர்த்தகத்தின் நன்மைக்காக சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கின்றனர். முதலாளித்துவத்தின் உலகப் பொருளாதார முறை, மில்லியன் கணக்கான மக்கள் துன்பத்தில் வாட, ஒரு சிறுபான்மை மகத்தான செல்வக் கொழிப்பைக் குவிக்க வகை செய்துள்ளது." இறுதியாக, ஏராளமான "நெருக்கடிக் கால நடவடிக்கைகள்" கோரப்படுகின்றன - பெரிய நிறுவனங்களில் வேலையினின்றும் அகற்றப்படுதலுக்கு தடைவிதித்தல்; பொதுத்துறையில் வேலைகளை பெருக்குவதற்காக செல்வந்தர்களிடமிருந்து கூடுதலான அளிப்புவரும் வகையில் வரிவிதிப்பு; தனியார்மயமாக்கலை தடுத்துநிறுத்தல் மற்றும் பொதுத்துறையை விரிவாக்கல்; உதவித் தொகையுடன் குறைந்த வாடகையில் பொதுமக்களுக்கான வீட்டு வசதிகள், மழலையர் பள்ளிகள், ஏனைய சமூக நலன்கள்; ஊக வருமானத்தில் கூடுதலான வரி, ஏழைகளை பெரும் பாதிப்பிற்கு உட்படுத்தும் மறைமுக வரிகள் குறைக்கப்படுதல்; பெருநிறுவனங்கள், வங்கிகள் இவற்றின் கணக்குகளை வெளியிடுதல் ஆகியவை இதில் அடங்கும். இத்தகைய அல்லது இதுபோன்ற நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு சமுதாயம் புரட்சிகரமாக மாற்றியமைக்கப்படுதல் இன்றியமையாததாகும். எந்த முதலாளித்துவ அரசாங்கமும், இடதாயினும் சரி, வலதாயினும் சரி, அத்தகைய நடவடிக்கைகளை எடுக்காது. சமீப காலத்திய அனுபவங்கள் உலகம் முழுவதிலும் இதைத்தான் காட்டியுள்ளன. பிரான்சில் குறிப்பிடத்தக்க வகையில் சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் கடைசியாக மேற்கொள்ளப்பட்டது 1981ல் தான். அப்பொழுது சோசலிஸ்ட் கட்சி, ஐந்தாம் குடியரசில் முதல் தடவையாக ஜனாதிபதி பொறுப்பை கைப்பற்றியிருந்தது. இது கொண்டுவந்த சீர்திருத்தங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தின் கட்டமைப்பை எவ்வகையிலும் அச்சுறுத்தவில்லை. ஆயினும்கூட, ஓராண்டிற்குப் பின், சர்வதேச நிதியமைப்பின் அழுத்தத்தின் விளைவாக ஜனாதிபதி மித்திரோன், திடீரென அனைத்தையும் எதிர்ப்புறமாக திருப்பினார். அப்பொழுதில் இருந்து, பிரான்சிலும் மற்ற தொழிற்துறை வளர்ச்சியுற்ற மேலை நாடுகளிலும், பெரும்பாலான மக்கள் தொடர்ந்து சரியும் வாழ்க்கைத் தரத்தைத்தான் அனுபவித்து வருகிறார்கள். 1998ம் ஆண்டு PS, PCF இவை தேர்தலில் வெற்றியடைந்த பின்னர், சமூக சீர்திருத்தங்கள் புதுப்பிக்கப்படும் என்ற நம்பிக்கைகள் விரைவிலேயே தகர்ந்துவிட்டன். ஒரு இடதுசாரி தோற்றத்தை காட்டிக்கொள்ள முயன்றபோதிலும்கூட, ஜொஸ்பனுடைய அரசாங்கம் சமூக நலன் வெட்டுக்களின் கொள்கையைத்தான் செயல்படுத்தியது. சமூக சீர்திருத்தம் இப்படித் திவாலாகிப் போனதற்கான காரணத்தை, உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அடிப்படை மாறுதல்களில்தான் காணமுடியும். 1960கள், 1970 களின் சீர்திருத்தங்கள் சாத்தியமாக இருந்தன, ஏனெனில் தேசியச் சந்தை ஒழுங்குபடுத்தப்பட்டு, உலகச் சந்தை என்ற புயலின் தாக்குதலிருந்து ஓரளவுக்கு, பாதுகாக்க முடியக்கூடியதாக இருந்தது. உற்பத்தியும் நிதியும் பூகோளமயமாக்கப்பட்டமை இதை சாத்தியமில்லாததாக்கிவிட்டது. உற்பத்தி மற்றும் முதலீட்டை வேறு நாடுகளுக்கு மாற்றிவிடக் கூடிய நாடுகடந்த நிறுவனங்களை எதிர்கொள்கையில், வேலைநிறுத்தம் என்ற ஆயுதம் மழுங்கிவிட்டது. பரந்த முறையில் சமூக சீர்திருத்தங்களுக்காக செலவிடப்படுவதற்காக விதிக்கப்படும் உயர் வரிவிதிப்பு, நிதி செலவீனத்திற்கு இட்டுச்செல்கின்றது; இது இல்லாமல் எந்த தேசியப் பொருளாதாரமும் பிழைத்திருக்க முடியாது. இந்த மாறுதல்களுக்கு நிதி மூலதனம் இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்த பின்விளைவை சமூக ஜனநாயகக் கட்சிகள் கொண்டிருந்ததால் முடிவில்லாத வகையில் சமூக சீர்திருந்த நடவடிக்கைகளில் வெட்டுக்கள் இருந்துகொண்டே இருந்தன. தொழிற்சங்கங்களும் இந்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டுவிட்டன. சமூக சமரசம் சாத்தியம் என்ற நிலை சூறையாடப்பட்டுவிட்டதால், இவை மூலதனத்தின் செயல்களை வழிநடத்தும் கருவிகளாக மாறிவிட்டன. அவை ஆளும் செல்வந்த தட்டோடு நெருங்கி ஒத்துழைப்பதுடன், அவற்றால் போராட்டம் எழாமல் முதலிலேயே அதனைத் தவிர்க்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு தொழிலாளர் போராட்டத்தையும் முதுகில் குத்துகின்றன. இந்த அதிகாரத்துவ சாதனங்களின் செயலற்றதாக்கும் பாதிப்பிலிருந்து தொழிலாள வர்க்கம் ஒரு அடிகூட முன்வைக்கமுடியாத நிலையில்தான் உள்ளது. இந்தப் புரிதல்தான் ஒவ்வொரு புரட்சிகர நோக்குநிலையின் ஆரம்பப்புள்ளியை கட்டாயம் வடிவமைக்கும். கடந்த காலத்தில் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காக போராடும் திறமையையும் தயார்நிலையையும் பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் பலமுறை நிரூபித்துள்ளது. ஆனால் சுயாதீனமான அரசியல் நோக்குநிலை இப்போராட்டங்களினால் தன்னெழுச்சியாக ஏற்படுவதில்லை. எனவேதான் அரசியல் வாழ்வு வலது மற்றும் இடது முதலாளித்துவ முகாம்களின் பரஸ்பர விளைவில் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில், வலதுசாரி சுக்கானைப் பற்றிக் கொள்ளுகிறது, ஏனெனில் இடது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கொள்கையை செயல்படுத்துவதால் செல்வாக்கிழந்து வருகிறது. அடுத்த கட்டத்தில், வலதுசாரி தண்டிக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமல் இடது மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. இந்த சுழற்சியை உடைப்பதுதான் மார்க்சிஸ்டுகளின் பணியாகும். தேர்தல்களில் பங்கு பெறுவது மார்க்சிச அமைப்பிற்கு, பரந்த மக்கட் பகுதிக்கு தன் கொள்கையை விளக்கும் வாய்ப்பை நல்குகிறது மற்றும் அரசியல் விவாதத்தின் பொதுத் தரத்தையும் உயர்த்தி, அதன்மூலம் அகன்ற, பரந்த, சுயாதீனமான மற்றும் அரசியல் ரீதியாக முழு நனவுடன் கூடிய தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சிக்கான சூழ்நிலையையும் தோற்றுவிக்க முடியும்; அது இல்லாவிட்டால், சோசலிசம், புரட்சி பற்றிய பேச்சுக்கள் வெறும் வெற்றுப் பேச்சுக்களே ஆகும். LCR, LO இவை இரண்டும் அத்தகைய பணிகளில் ஈடுபடப்போவதற்கான எந்தக் குறிப்பையும் காண்பதற்கில்லை. தொழிற்சங்க நடவடிக்கையின் மூலம் அவை கோரும் அவசர நடவடிக்கைகள் சாதிக்கப்பட முடியும் என்று அவை தீவிரமாய் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக அவற்றின் தேர்தல் அறிக்கை கூறுகிறது: "இந்த அவசர சமூக நடவடிக்கைகள் நம்முடைய கூட்டுப் போராட்டத்தின் மூலம் செயல்படுத்த நிர்பந்திக்கப்படும். வேலைநிறுத்தத்திலும், ஆர்ப்பாட்டங்களிலும் கடந்த வசந்தகாலத்தில் ஈடுபட்டவர்கள் வழியைக் காட்டியுள்ளனர்." 70 ஆண்டுகளுக்கு முன்பே, லியோன் ட்ரொட்ஸ்கி, பிரான்ஸ் எங்கே போகிறது (Whither France) என்ற தனது நூலில், வர்க்கப் போராட்டத்தை தொழிற்சங்க நடவடிக்கையாகக் குறைக்கும் அத்தகைய முயற்சிகள் பற்றி எச்சரிக்கையை கொடுத்துள்ளார். "இருந்தபோதிலும், இரண்டு மில்லியன் பேர் பகுதியாகவோ அல்லது முழு அளவில் வேலையின்றி இருக்கும்போது, சாதாரண தொழிற்சங்க கூட்டுப் பேர வகையில் போராட்டம் நடத்துவது என்பது கற்பனைநிலை என்பதை ஒவ்வொரு தொழிலாளியும் அறிந்துள்ளனர். இப்பொழுதுள்ள நிலையில், முதலாளித்துவ வாதிகளை முக்கிய சலுகைகள் கொடுக்குமாறு வற்புறுத்துவதற்கு நாம் அவர்களுடைய உறுதியை தகர்க்கவேண்டும். இது புரட்சிகரத் தாக்குதல் மூலம்தான் செய்யப்பட முடியும். ஆனால் ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை எதிர்க்கும் புரட்சிகரத் தாக்குதல் என்பது முற்றிலும் பகுதி அளவினதான பொருளாதாரக் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் வளர்க்கப்பட இயலாது. இங்கு நாம் ஒரு தீய வட்டத்தில் அகப்பட்டுக் கொண்டுள்ளோம்..... பொது மார்க்சிச கருத்தாய்வான, 'புரட்சிகர போராட்டத்தின் பக்கவிளைவுகளே சமூக சீர்திருத்தங்கள்' என்பது முதலாளித்துவ சரிவின் சகாப்தத்தில் ஒரு உடனடியான, பற்றி எரியும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஏதேனும் சிறு சலுகைகளை முதலாளித்துவத்தினர் தொழிலாளர்களுக்கு விட்டுக் கொடுக்கின்றனர் என்றால், அது அனைத்தையுமே இழந்துவிடுவோம் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படும்பொழுதுதான்." (5) LO மற்றும் LCR இரண்டினாலும் மேற்கோள் காட்டப்படும் 2003 வசந்தகால வேலைநிறுத்தம் தனிச்சிறப்பானதாகும். இந்த இயக்கம் தோல்வியில் முடிவுற்றது. பல வாரங்கள் வேலை நிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பின்னரும் கூட, பாராளுமன்றம் எந்த திருத்தமும் இல்லாமல் தான் கூறிய கருத்துக்களையே சட்டமாக்கியது. இயக்கத்தைக் கட்டிற்குள் வைத்திருந்த தொழிற்சங்கங்களை அரசாங்கம் பெரிதும் நம்பியதோடு, அரசாங்கத்திற்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் அவை காக்கும் என்றும் நம்பியது. இதற்குப் பொறுப்பாயிருந்த அமைச்சரான பிரான்சுவா ஃபியோன் (சமூக விவகார அமைச்சர்) "பெரும் மனசாட்சி அணுகுமுறை" கொண்டிருந்த CGT தொழிற்சங்கத்திற்கு தன்னுடைய பாராட்டைத் தெரிவித்தார். பாராளுமன்றத்திற்கு வெளியே இத் தொழிற்சங்கம்தான் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியிருந்தது. "வேலைவாய்ப்புத்துறை அமைச்சர், இயக்கம் பெருமளவில் பெருகாமல் போனதற்கும், கட்டுப்பாட்டிற்கு அப்பால் சென்றிருக்கக் கூடிய அபாயத்திலிருந்து காத்ததற்கும் தொழிற்சங்கத்திற்கு நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார்" என Le Monde குறிப்பிட்டிருந்தது. (6) LCR, LO இரண்டும் CGT இன் துரோகத்தை மறைக்கும் வகையில் தோல்வியை தார்மீக வெற்றி என அறிவிக்கும் முயற்சியைக் கொண்டன. "அரசாங்கத்தில் இருப்பவர்கள் நனவுக்கான போராட்டத்தை இழந்துவிட்டோம் என்று அறிவார்கள்." என்று LCR அறிக்கை விட்டது. LO-ன் படி, தோல்வியுற்ற எதிர்ப்பு அலை, "அரசாங்கத்தை இழிவுடன் புறக்கணித்த தன்மையைப்" புலப்படுதியது என்றது. அவர்களுடைய கூட்டுத் தேர்தல் அரங்கம் தொழிற் சங்கங்களை பற்றி விமர்சித்து ஒற்றை வார்த்தையையாயினும் கொண்டிருக்கவில்லை. ஆயினும், LCR மற்றும் LO இரண்டுமே, சீர்திருத்தவாத கட்சிகளில் முற்றிலும் காணக்கூடிய வலதுசாரி திருப்பத்தை சற்றேனும் ஒப்புக்கொள்ள வைக்கச்செய்வதை தவிர்க்க முடியாது வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் அறிக்கை: "தற்போதைய கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விருப்பை ஜொஸ்பன் அரசாங்கத்தை ஆதரித்த கட்சிகளுக்கு வாக்குப் போடுவதன் மூலம் வெளிப்படுத்த இயலாது; ஏனெனில் அவை அதிகாரத்தில் இருந்தபோது எந்தக் கொள்கைகளை பின்பற்றினவோ அவற்றைத்தான் இன்னும் தொடர விரும்புகின்றன. முதலாளிகளுக்குப் பரிசுகள் பெருகுகின்றன, வேலைநீக்கங்கள் ஏற்கப்படுகின்றன; பொதுத்துறை சேவைகள் தேசியமயமாக்கப்பட்டதில் இருந்து விடுவிக்கப்படுகின்றன." என்று கூறுகிறது. ஆனால், இந்த "தீவிர இடது" கட்சிகள், அரசியல் நிகழ்வுகளில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக செயல்படக்கூடிய முயற்சிகள் எவற்றையும் மேற்கொள்ளவில்லை. தங்கள் தேர்தல் வேட்பாளர் பட்டியலை, தொழிலாள வர்க்கத்தின் புதிய, சுயாதீனமான கட்சியை அமைப்பதற்கான ஒரு அடி எடுப்பாக அவர்கள் முன்வைக்கவில்லை, மாறாக தொழிற்சங்க நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முயற்சியாகத்தான் அதைக் கொண்டுள்ளனர். தேர்தல் அறிக்கை கூறுகிறது: "எங்கள் இணைப்பிற்கு வாக்கு அளிப்பதின்மூலம், நீங்கள் ஒரு அரசியல் அடையாளத்தை வெளியிட முடியும், அது போராட்டங்களை ஊக்குவிக்கும், தொழிலாளர்களின் உரிமைக்கு பாடுபடும் மற்றும் பங்குச்சந்தையில் பெரும் பங்குகளைக் கொண்டிருப்பவர்களுடைய கொடுங்கோன்மைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்க தயாரிப்புச்செய்ய விரும்பும் அனைவருக்கும் ஊக்குவிப்பாக இருக்கும்." தொழிற்சங்கப் போராட்டத்தை பெருமைப்படுத்துவதுதான் இரு அமைப்புக்களும் உண்மையிலேயே குறைந்த பட்சம் ஒற்றுமையைக் காட்டும் கூறுபாடு ஆகும். வெவ்வேறு பார்வைகளில், தொழிலாள வர்க்கத்திற்கான சுயாதீனமான அரசியல் முன்னோக்கு என்பதை இரண்டுமே நிராகரிக்கின்றன. சீர்திருத்தவாத அமைப்புக்களுக்கு சவால்விடும் எந்த முயற்சியும், வெற்றியைக் கொடுக்காது என LO நினைக்கிறது. LCR தொழிலாள வர்க்கத்திற்கு தன்னை நோக்குநிலைப்படுத்திக் கொள்ளாமல், பூகோளமயமாக்கல் எதிர்ப்பு இயக்கம், புதிய சுற்றுச்சூழல் இயக்கம், மகளிர் இயக்கம் போன்ற, குட்டி முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்திற்குள்ளே சிதறிக் கிடக்கும் குழுக்களுக்கு தன்னை தகவமைத்துக்கொள்ள முற்பட்டுள்ளது; அது பழைய சீர்திருத்த அமைப்புக்களின் சிதைவுகளுடன் ஒன்றுபடுத்தப்பார்த்து ஒரு புதிய மத்தியவாத அமைப்பை உருவாக்கலாம் என்று கருதுகிறது. இதைப்பற்றி இன்னும் ஆழமான முறையில் தொடரில் வரவுள்ள கட்டுரைகளில் காண்போம். தொடரும்... Notes |