World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Marxism and the political economy of Paul Sweezy

Part 7: The socialist revolution

மார்க்சிசமும், போல் ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்

பகுதி 7: சோசலிசப் புரட்சி

By Nick Beams
14 April 2004

Back to screen version

க்கட்டுரை உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவைச் சேர்ந்த, நிக் பீம்ஸ், தீவிர அரசியல் பொருளாதார நிபுணர் போல் ஸ்வீசியின் வாழ்வு, படைப்புக்கள் பற்றி எழுதியுள்ள தொடர் கட்டுரைகளில் நான்காவது ஆகும். போல் ஸ்வீசி Monthly Review இன் நிறுவனர்-ஆசிரியராக இருந்து, 2004 பெப்வரி 27 அன்று நியூயோர்க், லார்ஷ்மன்டில் காலமானார்.

ஏகபோக மூலதனம் வெளிவந்த பின்னர் --இது எதிர்ப்பு இயக்கங்களிடையே கணிசமான முறையில் படிக்கப்பட்டது-- ஸ்வீசி தன்னுடைய தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகரப் பங்கு கிடையாது என்ற கருத்தை மேலும் ஒரு படி அதிகமாக உயர்த்தினார். செப்டம்பர் 1967ல் சோசலிஸ்ட் அறிஞர்களின் மூன்றாம் ஆண்டு மாநாட்டில் ஆற்றிய உரையில், தன்னுடைய ஆய்வு மார்க்ஸ் இனதை ஒத்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

ஸ்வீசி, முதலாளித்துவ உற்பத்தியில் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதில் (Manu என்று Machino என்பதற்குப் பதிலாக மார்க்ஸ் விவரித்தார்), தொழிலாள வர்க்கம் பழைமைவாத கைவினைஞர் மரபின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது என்று கருதினார். இந்த மரபுகள், இயந்திரங்கள் புகுத்தப்பட்டதினால் உடைக்கப்பட்ட பின்னர்தான், தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சி சக்தியாக மாறியது. ஆனால் இது ஒரு மிகக் குறுகிய காலத்திற்குத்தான் நீடித்தது.

"நவீன தொழில்துறையின் ஆரம்ப காலத்தின் புரட்சிகர வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுவிட்டன என்றால் [ரஷ்யாவில் இல்லாவிடினும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இது நிகழ்ந்தது - நிக் பீம்ஸ்], ஒரு தொழில்துறை வளர்ச்சியடைந்துள்ள நாட்டின் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தன்மை குறைந்து கொண்டுவரவேண்டும். ஆனால் இதனால், மார்க்ஸ் கூறியுள்ள முதலாளித்துவம் தனக்கு புதைகுழிதோண்டுபவர்களை தானே உற்பத்தி செய்துகொள்ளுகிறது என்ற கருத்து பிழை என்று கூறமுடியாது. முதலாளித்துவம் ஓர் பூகோள முறை என்று கொண்டோமானால், அதுதான் சரியான முறை, இதில் ஒருபுறம் சிறு எண்ணிக்கையிலான சுரண்டும் நாடுகளும், மறுபுறம் மக்கள் நிறைந்த, ஏராளமான சுரண்டப்படும் நாடுகள் உள்ளநிலை இருப்பதைக் காண்கிறோம். இந்தச் சுரண்டப்படும் நாடுகளில் உள்ள மக்கள், உலக முதலாளித்துவ அமைப்பு முறையில் நவீன தொழிற்துறையின் ஆரம்பகாலத்தில் தொழிலாள வர்க்கம் எவ்வாறு ஒரு புரட்சிகர சக்தியாக உள்ளது என மார்க்ஸ் கருதினாரோ அதேபோல், அதே காரணத்திற்காக இவர்களும் புரட்சிகரமானவர்கள். இரண்டாம் உலகப் போருக்குப்பின், உலக வரலாறு இறுதியாக காட்டுவதுபோல், இந்தப் புரட்சி சக்தி முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு எதிராக உண்மையான புரட்சிகரப் போராட்டங்களை நடத்தும் வலிமையையும் கொண்டுள்ளது." என ஸ்வீசி குறிப்பிடுகின்றார்[29]

மற்றும் ஒரு வரலாற்று வினோதமான முறையில், பிரான்ஸ் நாட்டில் 1930 களுக்குப் பின்னர் மிகப் பெரிய எழுச்சியான முறையில் தொழிலாள வர்க்கம் நடத்திய மே--ஜூன் இயக்கத்திற்கு எட்டு மாதங்கள் முன்புதான் இந்த வரிகள் எழுதப்பட்டன. பிரான்சின் பொது வேலை நிறுத்தத்தை ஒட்டி, பல பெரிய முதலாளித்துவ நாடுகளிலும் பெரும் எழுச்சிகள் தொடர்ந்தன; இத்தாலியின் 1969 வெப்பம் மிகுந்த இலையுதிர்காலப் போராட்டத்தில் இருந்து, பிரிட்டனில் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், 1975ல் போர்த்துக்கல் புரட்சி போன்றவையாகும்.

வர்க்கப் போராட்டம் மறைந்து விட்டது என்று கூறியிருந்த 1950, 1960-களில் வெளிவந்திருந்த "சிந்தாந்தின் முடிவு" என்ற அனைத்து முதலாளித்துவ தத்துவங்களுக்கும் பிரான்சில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியையும் அடியையும் கொடுத்தன. ஆனால் இதனால் ஸ்வீசியிடம் மாற்றம் தோன்றவில்லை. போருக்குப் பிந்தைய காலத்தின் "முக்கிய முரண்பாடுகள்" முதலாளித்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் அல்ல என்றும், அது "அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட தலைமைக்கும் மூன்றாம் உலகத்தின் புரட்சிகரமான தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் இடையிலான" வேறுபாடு என்றும் 1972ல் கூட அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

"தொழில்முறையில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் இருந்த தொழில்நுட்ப, கட்டுமான மாறுதல்கள், தொழிற்புரட்சியின் உச்சக் கட்டத்தில் புரட்சிகரமாக இருந்திருந்த பாட்டாளி வர்க்கத்தை, பல்வகைப்பிரிவுகள் உடைய புரட்சித்தன்மை இல்லாத பாட்டாளி வர்க்கமாக, ஏகபோக முதலாளித்துவ வளர்ச்சியின்கீழ் மாற்றிவிட்டது" என்பதனால் மார்க்சின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவில்லை. அதே நேரத்தில், "உலக அளவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள், மூன்றாம் உலகில் இருக்கும் சுரண்டப்பட்ட வெகுஜனங்கள் மெதுவாக ஒரு புரட்சிகர சக்தியாக, (சீனாவும், வியட்நாமும் நிரூபித்தது போல்), தொழில் நுட்பம் நிறைந்த முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை எதிர்த்து தோற்கடிக்கவும் முடியும் திறனைக் கொண்டுள்ளது என்பதை கண்டோம்."[30]

1930 களுக்குப் பிறகு, மிகப்பெரிய மாறுதல்கள் முதலாளித்துவ முறையில் ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் மேற்கூறிய வரிகளை ஸ்வீசி எழுதிய பின்னர், இன்னும் பெரிய நிகழ்வுகள் வர இருந்தன. 1970களில் தொடங்கி, முதலாளித்துவம் முன்னேறிய நாடுகளில் தொழிற்துறை தொழிலாள வர்க்கத்தினர் ஒப்பீடான அளவிலும், மற்றும் உண்மையான அளவிலும் குறையத் தொடங்கியது. ஆனால் இதையொட்டி "மறைந்துவிடும்" தன்மை ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. அதுவும் உற்பத்தி நிகழ்வுப்போக்கை தொடர்ந்து பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுவரும் நிலையில், உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் அமைப்பு எப்போதும் மாறிக் கொண்டுதான் வருகிறது; இதுதான் முதலாளத்துவ உற்பத்தி முறையின் மத்திய கூறுபாடு அல்லது இயல்பு ஆகும். 1840-களின் பிற்பகுதியில் பாரிசில் மார்க்ஸ் கண்டிருந்த உழைக்கும் வர்க்கம் புதிய தொழில் வழிவகைகள் வளர்ந்தவுடன் அடுத்த தசாப்தங்களிலேயே "மறைந்து விட்டது". அதேபோல், வரிசை முறை உற்பத்தி வகைகளில் (Assembly-line production) ஏற்பட்ட மாறுதல்கள், பெருநிறுவன எழுச்சி இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் எழுச்சியுற்றமை ஆகியவை, புதிய வகையிலான தொழிலாளர்கள் வெளிப்படுவதைக் கண்ணுற்றன. இன்று, கணினி, தகவல் தொடர்பு துறைகளின் தாக்கத்தால் இதே வழிவகை மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

பாட்டாளி வர்க்கத்தின் விஸ்தரிப்பு

தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று பாத்திரம் பற்றிய ஸ்வீசியின் மதிப்பீடு, முதலாளித்துவ பொருளாதாரக் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் பற்றி முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது.

தொழிலாள வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் இது மேற்கொள்ளும் உழைப்பின் வகையை ஒட்டி விளக்கப்படவில்லை; உற்பத்தி வழிவகையோடு இது கொண்டுள்ள உறவை ஒட்டி வரையறுக்கப் படுகிறது. 1848 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பிரகடனத்தின் ஆங்கிலப் பதிப்பில் ஒரு அடிக்குறிப்பில் ஏங்கல்ஸ் விளக்கியுள்ளது போல், "பாட்டாளி வர்க்கம் [என்பதின் பொருள்] தங்களிடத்தின் உற்பத்திமுறைகளில்லாத, தற்கால ஊதியபெறும் தொழிலாளர் ஆவர்; தங்கள் உழைப்புச் சக்தியை வாழ்வு நடத்துவதற்காக விற்கும் நிலைக்கு வந்துள்ளவர்கள்."

இந்த வரையறையை தொடக்க நிலையாகக் கொண்டால், சிறுபான்மையாகிவிட்டனர் என்று கூறுவதைவிட, பாட்டாளி வர்க்கம் என்பது இப்பொழுது முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் மிகக் கூடுதலான பெரும்பான்மையைத்தான் கொண்டுள்ளது. "மறைந்து கொண்டிருக்கும்" வர்க்கம் என்பது பழைய மத்தியதர வர்க்கம், சிறு சொத்துடைமையாளர்கள், விவசாயிகள் போன்றவர்கள் -- முன்பு ஓரளவு சுதந்திரத்தன்மையுடன் வாழ்ந்து வந்தவர்கள்தாம்.

ஏங்கல்சின் வரையறை, கேள்விக்கு முற்றிலும் பதில் கூறிவிடவில்லை. ஆனால் அது வர்க்கம் என்பது ஒரு சமூக உறவு என்பதை நிறுவவில்லை; மேலும், பாட்டாளி வர்க்கம் என்பது பெரும்பாலான ஊதியத்திற்கு, தாங்கள் வாழ்வதற்காக தங்கள் உழைப்பை விற்கும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ள மக்கள் தொகையைக் குறிக்கிறது.

ஸ்வீசியின் முடிவுரைகள் பெருமளவு புதிய மத்தியதர வர்க்கம் என்று அழைக்கப்பட்ட, அனைத்து பெரிய தொழிற்துறை மற்றும் பெரு நிதிநிறுவனங்களாலும் வேலைக்கமர்த்தப்பட்டவர்கள் எழுச்சியின் பாதிப்பால் கொடுக்கப்பட்டுள்ளன. 1950 களிலும், 1960 களிலும், இலாபவிகிதம் நிலைத்து நின்று அல்லது ஓரளவு உயர்ந்தபோது, இந்த வர்க்கங்கள் தங்களுடைய இயல்பான தொழிலாளர் தன்மையையும் மீறி சில வரம்பிற்குட்டபட்ட ஆதாயங்களையும் சலுகைகளையும் பெற்றன. மேலும், ஸ்வீசியின் தத்துவமான எப்பொழுதும் கூடுதலாகும் உபரி மதிப்பு இந்தச் சலுகைகள் தொடர்ந்தும் நிலைக்கும் என்ற உறுதியைக் கொடுத்தது போல் இருந்ததால், புதிய மத்தியதர வர்க்கத்தினர் விற்பனை, காப்பீட்டு, சந்தை, அரசாங்கப் பணிகள் ஆகியவற்றில் வேலையில் அமர்த்தப்பட்டனர்; இச்செயற்பாடுகள் அனைத்துமே, உபரி மதிப்பை உறிஞ்சும் தன்மையைத்தான் கொண்டிருந்தன.

இலாபவிகித வீழ்ச்சிப்போக்கை மீண்டும் கொண்ட நிலை, மற்றும் ஆழ்ந்த போட்டியின் பாதிப்பு ஆகியவை, மிகப் பெரிய நிறுவனங்களில் இந்த ''வெள்ளைச்சட்டை'' ("white collar") உழைக்கும் பிரிவை கூடுதலாக தாக்கும் முயற்சிகளில் ஈடுபடவைத்தன. ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலத்தில், குறைந்த காலகட்டமே ஆயினும் மிகக்கூடுதலான சக்தி வாய்ந்திருந்த இந்தச் சமுதாய தட்டுக்களின் தொழிலாள வர்க்கத் தன்மை மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவை சிறிதுகாலம் அனுபவித்திருந்த சலுகைகள் அகற்றப்பட்டு விட்டன. அந்த தட்டுக்களில் இருப்போர், உண்மையில் அவர்கள் தன்மையான தொழிலாளர் போலத்தான் நடத்தப்படுகின்றனர் --தேவையானால் வேலையில் அமர்த்தப்படவும், வெளியேற்றப்படவும் என்றுள்ள ஊதியத் தொழிலாளர்கள் போல், ஆட்குறைப்பிற்கு உட்பட்டு, இலாப முறையின் தேவைகளுக்கேற்ப உள்ள நிலைப்பாடுதான் இவர்களுடையது. வாழ்க்கையின் இந்த அனுபவம்தான், பெரும்பாலான முக்கிய முதலாளித்துவ நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், பரந்த தட்டு மக்களிடையே பெருநிறுவன எதிர்ப்பு உணர்வு வளர்ச்சிக்குப் பின்னணியாக இருக்கிறது.

தேசிய விடுதலைப் போராட்டங்களின் முடிவு

ஸ்வீசியின் கருத்தாய்வான முன்னேற்றமைடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பங்கு அற்ற நிலை என்பது தற்காலிக வரலாற்றுக் காரணிகளை அடிப்படையாக கொண்டிருந்ததுபோலவே, மூன்றாம் உலகில் விடுதலைப் போரட்டங்களை புகழ்ந்தது, அவற்றின் ஸ்ராலினிச, மாவோயிஸ்டு தலைமைகள் இவரால் துதிபாடப்பெற்றதும் தற்காலிக வரலாற்றுக் காரணிகளை அடிப்படையாக கொண்டவைதாம்.

ஏகாதிபத்திய ஆதிக்கம் தூக்கி எறியப்படுவது, சோசலிசத்திற்கான போராட்டத்தில் மாபெரும் பங்கினை உறுதியாகக் கொள்ளும். ஆனால் கடந்த மூன்று தசாப்தங்களின் வரலாறு, ட்ரொட்ஸ்கியின் ஆய்வான, "உலக பாட்டாளி வர்க்கத்தின் மூலம் அதிகாரம் வெற்றி கொள்ளப்படுவது மட்டும்தான் உண்மையான, நீடித்த சுதந்திரத்தையும் அபிவிருத்தியையும் உறுதியாக இக்கோளத்தில் உள்ள அனைத்து தேசங்களுக்கும் தரும்." [31] என்பதின் உண்மையைத் தெளிவாக நிரூபித்துள்ளது.

1975 மே மாதம், அமெரிக்காவிற்கு எதிரான மகத்தான வெற்றியை, தேசிய விடுதலைப் போராட்டங்கள், வியட்நாமில் கண்டன. ஆனால் உலக முதலாளித்துவத்தின் அரசியல் பொருளாதாரம் ஏற்கனவே பல பெரும் மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது. தேசிய விடுதலைப் போராட்டங்கள் கண்ட வரம்புக்குட்பட்ட வெற்றிங்கள் இரண்டு தற்காலிக (இடைமருவு) காரணிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன: அவை, போருக்குப்பிந்தைய பொருளாதார செழுமைநிலை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு சக்தியாக சோவியத் ஒன்றியம் இருந்தது என்ற இரண்டுமாகும்.

வியட்நாமில் இந்த வெற்றி கிடைக்கப் பெற்ற பதினைந்தே ஆண்டுகளில் இந்த நிலைமை ஏற்கனவே மாறிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பிந்தைய பொருளாதார செழுமைநிலை உண்மையில் முடிவடைந்துவிட்ட நிலையிலும், சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததும் கவனிக்கப்பட வேண்டும். இவற்றின் விளைவாக, தேசிய விடுதலைப் போராட்டங்களின் ஒரு காலத்திய தலைவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சுதந்திர சந்தைக்கும், வெளிநாட்டு முதலீட்டுக்கும் போட்டியிட்டுத் தங்கள் நாடுகள் சார்பாக அழைப்பு விடுத்துள்ளது. வியட்நாமில், அமெரிக்க இராணுவம் தோல்வியுற்றது. ஆனால், இறுதிஆய்வில், ஏகாதிபத்திய முதலாளித்துவ நிதியமைப்புமுறை இன்னும் கூடுதலான வலிமை உள்ள விரோதியாக வெளிப்பட்டுள்ளது.

தேசிய விடுதலை இயக்கங்களின் முடிவு, மற்றும் அவை உலக முதலாளித்துவத்தின் சிறிய முகவர்களாக மாறிவிட்ட நிலையும், சர்வதேச சோசலிசத்தின் வருங்கால நலன்களை குறைத்துவிடவில்லை. அதற்கு முரணாக, எந்த வழிவகைகள் அவற்றின் முடிவைக் கொண்டு வந்தனவோ, எல்லாவற்றிற்கும் மேலாக முதலாளித்துவ உற்பத்தி முறை பூகோளமயமாக்கப்பட்டுள்ளது, உலக தொழிலாள வர்க்கத்தின் பரப்பை அதிகரித்துள்ளதுடன், முன்பு இல்லாத பிராந்தியங்கள் எல்லாவற்றிலும் ஒரு சக்தியாகத்தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வெறும் எண்ணிக்கை அல்லது கொள்ளளவு உயர்வு மட்டும் இல்லை; இது ஒரு தன்மையின் மாற்றமும் ஆகும். முதலாளித்துவ உற்பத்தி மற்றும் நிதி இரண்டின் பூகோள தன்மையே தொழிலாள வர்க்கம் முழுவதையும் இதுகாறும் இல்லாத அளவு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் மூலோபாயப் படிப்பினைகள் அனைத்திலும் உறுதியாய் நிலைநாட்டப்பெற்று, இதைச் செய்து முடிப்பதற்கு, தொழிலாளர்களின் இயக்கங்கள் வரலாற்று முன்னோக்கு பற்றிய படிப்பனைகள் மூலம் மீண்டும் ஆயுதபாணியாக்கவேண்டும். இங்குதான், நாம் இறுதியான, மையமான போல் ஸ்வீசியின் அரசியல் வாழ்வு பற்றிப் பேசவேண்டும்: அதாவது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின்பால் அவர் கொண்டிருந்த மனப்பான்மை பற்றி பேசவேண்டும்.

ஸ்வீசியும், லியோன் ட்ரொட்ஸ்கியும்

ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் தன்னுடைய அரசியல் பரிணாம வளர்ச்சியில் கொண்டிருந்த முக்கிய பங்ககைக் கருத்திற்கொள்ளும்போது, ஸ்வீசி, ட்ரொட்ஸ்கியின் ஸ்ராலினிசத்திற்கு எதிராக கொண்டிருந்த போராட்டம் பற்றி, குறிப்பாக ஸ்ராலினிசக் கோட்பாடான "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்பதை எதிர்த்துப் போராடியதைப் பற்றி விரிவாக கூறாதது குறிப்பிடத்தக்கது ஆகும். ட்ரொட்ஸ்கியின் ரஷ்யப் புரட்சியின் வரலாறு என்ற நூல், தன்னைப் பெரிதும் பாதிப்பிற்குட்படுத்தியது என்று ஸ்வீசி ஒப்புக்கொண்டது, இந்தப் போராட்டத்தின் உச்சக் கட்டத்தில் வெளியிடப்பட்டது ஆகும். மேலும், ஸ்ராலினுடைய கொள்கைகள், மூன்றாம் அகிலம் 1933 ஜனவரியில் ஹிட்லர் பதவிக்கு வருவதற்கு உதவியாக இருந்த ஜேர்மனியின் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் இவற்றைப் பற்றிய ட்ரொட்ஸ்கிய கடுமையான விமர்சனங்களை பற்றி ஸ்வீசி அறிந்திராமல் இருந்திருக்கமுடியாது.

தன்னுடைய அரசியல் பரிணாமம் பற்றிப் பேசும்பொழுதும், ஸ்வீசி இந்தப் பிரச்சினைகளை தவிர்த்திருக்கிறார். 1987ல் ஒரு பேட்டியில் அவர் ஏன் 1960களின் தீவிரவாத காலத்தில் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை என்று கேட்கப்பட்டபோது, அவர் தன்னுடைய பங்கு "சில தீவிர மரபுகளைக் காத்து, உரிய வரலாற்று உணர்வைக் கொண்டு இருத்தல் என்பதும், இருக்கும் அரசியல் நடைமுறைகள் அவ்வாறும் இல்லாமல், குறுகிய பார்வை உடையவையாக இருந்ததால், தான் சேரவில்லை என்று விடையிறுத்தார். எனவே நாங்கள் அவர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய கருத்துக்களை உருவாக்குவது என்றும், அவர்கள் தேவையானால் அத்தகைய வரலாற்று அபிவிருத்தியை பின்பற்றட்டும் என்றும் கருதினோம். உண்மையில் தீவிர அரசியல் கட்சி என்று சொல்லக்கூடியது கம்யூனினிஸ்ட் கட்சிதான்; மற்றும் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், இவர்கள் கம்யூனிசத்தின் ஒரு பிரிவினர்; இவை மூன்றாம் அகிலத்தில் இருந்து வந்தவை. அவை அறிவுஜீவித படைப்பாற்றல் என்னும் கோணத்தில் முற்றிலும் சேருவதற்கு இயலாதவை."[32]

ஸ்வீசியின் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைப் பற்றி, அது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் ''மாற்று வடிவம்'' என்று குறிப்பிட்டது, குறைந்தபட்சம் கூறவேண்டுமென்றால், நாணயமற்ற கருத்து; ஸ்ராலினிசத்தால் செல்வாக்குப் பெற்றவர்கள், பழைய-ஸ்ராலினிஸ்டுகள் இவர்களுடைய கருத்து பொதுவாக இவ்வாறுதான் இருந்தது. ஸ்ராலினிசத்தின் கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் எதிராகக் கடும் போராட்டம் நடத்தியபின்னர்தான் நான்காம் அகிலம் நிறுவப்பட்டிருந்தது என்றும், அந்தப் போராட்டத்தில் ரஷ்யப் புரட்சியின் விதி மட்டும் இன்றி, முழு சோசலிசத் திட்டத்தின் விதியும் அடங்கியிருந்தது என்பதையும் இவர் நன்கு அறிந்திருந்தார். வரலற்று உண்மையை நிறுவ வேண்டும் என்ற விருப்பம் உடைய எந்த மார்க்சிஸ்டுகளும், ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியில் அடிப்படைகளை ஒட்டிய கேள்விகளை மதிப்பீடு செய்ய வேண்டியதும், அவை எவ்வாறு நான்காம் அகிலத்தை தோற்றுவிக்க வழிவகை செய்தது என்பதை அறிதல் அவசியம் ஆகும்.

அத்தகைய ஆய்வு சோசலிசப் புரட்சியின் தன்மையினால் தவிர்க்க இயலாதவையாகும். மார்க்ஸ் விளக்கியுள்ளபடி, பதினெட்டாம் நூற்றாண்டின் முதலாளித்துவப் புரட்சிகள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றியைக் கொண்டிருந்தன, "பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகளோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் போலவே தங்களை இடைவிடாமல் விமர்சித்துக்கொண்டும், தங்கள் போக்கை தொடர்ந்து தடைகளுக்கு உட்படுத்திக்கொண்டும், பழையபடி மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே ஆரம்பித்த வண்ணமாகவும், இயலாதவை, நலிவடைந்தவை, இவை முதல் முயற்சிகளில் இருந்தவற்றை ஏளனம் செய்துகொண்டும், தங்கள் விரோதிகளை தூக்கி எறிவதுபோல் தோற்றம் கொண்டு, புதிய வலிமையுடன் விரோதி மண்ணிலிருந்து மீண்டும் மீண்டும் பெரும் அரக்கன் போல் எழுச்சியுறுவதைக் கண்ணுற்றும், தங்களுடைய வரம்பற்ற இலக்குகளின் முயற்சியில் திரும்பத் திரும்ப ஈடுபட்டு நிற்பதும், இனி பின்வாங்குதல் இயலாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது..."[33]

இந்தக் கருத்துரைகள் ரஷ்யப்புரட்சிக்கும் அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளுக்கும் எவ்வளவு பொருத்தமாக உள்ளது. இந்தப் பெரும் பிரச்சினைகள் பற்றி ஸ்விசியின் மெளனம், இறுதிப்பகுப்பு ஆய்வில் சோஷலிசப் புரட்சி பற்றிய பெரும் ஐயுறவாதத்தைத்தான் பிரதிபலிக்கிறது. இந்த ஐயுறவாதம், அதன் நிலைப்பாட்டை ஒட்டி, இவருடைய அரசியல் பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கிறது.

இறுதியில் ஸ்வீசி 1978-ல் ட்ரொட்ஸ்கியின் தத்துவார்த்த பாரம்பரியத்தைப் பற்றி எழுதியபொழுது, இவர் மையப் பிரச்சினைகளைப் பற்றிய தீவிர ஆய்வின்றித்தான் எழுதினார். Monthly Review கட்டுரை ஒன்றில், சோவியத் ஒன்றியத்தின் வர்க்கங்கள் இயல்பு பற்றி கூறும்பொழுது, இவர் அங்கு "ஒரு புதிய வகை" ஆளும் வர்க்கம் உள்ளது என்று வாதிட்டார். ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஒரு ஒட்டுண்ணி ஜாதி, ''கவர்ச்சிகரமானது'', ஒரு புதிய ஆளும் வர்க்கம் அல்ல, காலத்தின் சோதனைக்குட்பட்டபோது அது தோல்வியடைந்து விட்டது என்று ட்ரொட்ஸ்கியின் கருத்தாய்வு கூறியுள்ளது. நீண்ட காலம் இந்த அதிகாரத்துவம் ஆளப்பட்டபோது, "ட்ரொட்ஸ்கியின் இதன் இன்றியமையாத இயல்பு பற்றிய தத்துவம் நம்பிக்கையளிப்பதாக இல்லை."

இந்த ஆட்சி ஆபத்தில் உள்ளது என்று கூறுவது "பொருத்தமில்லாதது" என்ற வலியுறுத்திய ஸ்வீசி, மேலும் கூறியது; "பொருளாதாரத்திலும், இராணுவத்திலும், சோவியத் ஒன்றியம் வலிமையில் கூடுதலாக உள்ளது; ஆட்சி இந்தப் பெருகிய அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதிலும், தன்னுடைய நலனுக்குப் பயன்படுத்தியதும் கேள்விக்குட்படுத்தப்படமுடியும் என்று தோன்றவில்லை." [34]

இந்த வரிகள் சோவியத் ஒன்றியம் தன்னுடைய இறுதி நெருக்கடியில் நுழைந்தபோது எழுதப் பட்டவை. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கோர்பச்சேவ் அதிகாரத்திற்கு உயர்த்தப்பட்டு, அதிகாரத்துவம் தன்னுடைய சமூக நிலையைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, முதலாளித்துவ மீட்சியை கொண்டு வந்தது. 1991இன் இறுதியில், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. மீண்டும், ஸ்வீசி ஒரு மாறும் நிலையை ஒரு இடைக்கால நிலைமையாக இருக்கும் என்ற அடிப்படையைத்தான் கொண்டிருந்தார், அதுவும் மிகப்பெரிய மாறுதல் வர இருந்த காலத்தில்.

இந்த "புதிய ஆளும் வர்க்கம்" பற்றிய தத்துவங்கள் அனைத்துமே சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிற்குப் பின் சோதனைக்கு உட்பட்டன. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு முன் ட்ரொட்ஸ்கியினால் எதிர்பார்க்கப்பட்டிருந்த வகையிலேயே, ஸ்ராலினிச அதிகாரத்துவம் எதிர்-புரட்சிகர நடவடிக்கை, 1920 களில் ஆரம்பிக்கப்பட்டதை முடித்துவைக்க முற்பட்டது.

"சோவியத் ஆட்சியின் வீழ்ச்சி, தவிர்க்க முடியாதபடி திட்டமிட்ட பொருளாதாரத்தையும் அரசின் சொத்துரிமையையும் இல்லாதொழித்துவிடும். கூட்டுநிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையிலான கூட்டு இல்லாதுபோய்விடும். கூடுதலான வெற்றியான நிறுவனங்கள் சுதந்திரமாகச் செயல்படும் முறைக்கு வந்துவிடும். அவை தங்களை பங்குதாரர் நிறுவனங்களாக மாற்றிக்கொள்ளும் அல்லது வேறு ஏதேனும் இடைக்கால சொத்து உரிமை முறைக்கு மாற்றிக்கொள்ளும்; உதாரணமாக தொழிலாளர்கள் இலாபத்தில் பங்கு பெறக் கூடும். கூட்டுப் பண்ணைகள் அதேநேரத்தில், இன்னும் எளிதான முறையில் சிதைந்துவிடும். தற்போதைய அதிகாரத்துவத்தின் சர்வாதிகாரத்தின் வீழ்ச்சி, புதிய சோசலிச சக்தியால் அரசாங்கம் எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், மீண்டும் முதலாளித்துவத்திற்குத் திரும்புதல் என்ற பேரழிவை பொருளாதாரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் சரிவையும் தரும்." [35]

ஸ்வீசியின் தத்துவார்த்த வேலைகள் பற்றிப் பரந்த அளவில் பரிசீலனை செய்து நாம் இம்முயற்சியை கொண்டுள்ளோம்; ஏனெனில், அவர் இப்பிரச்சினைகள் பற்றி எழுதியபோது, குறிப்பாக அரசியல் பொருளாதாரத்தில் பல இன்று தீர்க்கமானவையாகும். முதலாளித்துவ அமைப்பு எப்பொழுதும் பெருகும் உபரி மதிப்பின் தன்மையை கொண்டுள்ளதா? அல்லது மூலதன திரட்சிப்போக்கில் வேரூன்றியுள்ள தீர்க்கமுடியாத முரண்பாடுகளால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெரும் வன்முறையை கொண்டு மனித சமுதாயத்தின் எதிர்காலத்தையே அழிக்கக் கூடிய வடிவத்தை எடுக்குமா?

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதலாளித்துவ அபிவிருத்தியில் ஒரு மாறுதல் கட்டம்தானா? அல்லது, தொழிலாள வர்க்கம், வரலாற்றில் முதல் தடவையாக உலகின் பெரும்பாலான மக்களைக் கொண்டுள்ள நிலையில், முதலாளித்துவம் மனிதகுலத்தை திகைக்கும் நிலையில் தள்ளியிருப்பதிலிருந்து புதிய வழியை காட்டுமா?

இருபதாம் நூற்றாண்டின் மூலோபாய அனுபவங்களைப் உள்ளீர்த்துக்கொள்வதன் மூலம் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றினையும், வேலைதிட்டத்தினையும் உள்கொண்டுள்ள ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தின் அபிவிருத்தியூடாக தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக மீண்டும் ஆயுதபாணியாகும்.

முடிவுற்றது.

குறிப்புகள்:
29. Paul Sweezy Marx and the Proletariat in Modern Capitalism and Other Essays Monthly Review Press, New York 1972
30. Sweezy op cit p. vi
31. Leon Trotsky, War and the Fourth International in Writings 1933-34 Pathfinder Press, New York 1972 p. 306
32. Interview with Paul Sweezy op cit
33. Marx, TheEighteenth Brumaire of Louis Bonaparte in Marx and Engels, Selected Works Volume 1 Progress Publishers, Moscow 1969 p. 401
34. Paul Sweezy, Is There a Ruling Class in the USSR? Monthly Review October 1978
35. Leon Trotsky, Revolution Betrayed Labor Publications, Detroit 1991 pp. 212-213

See Also:


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved