:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Top US scientists blast Bush administration
புஷ் நிர்வாகத்தை அம்பலப்படுத்திய அமெரிக்காவின் தலைமை விஞ்ஞானிகள்
By Jamie Chapman
26 February 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
புஷ் நிர்வாகம் முன்கூட்டியே முடிவுசெய்த செயற்திட்டத்தை மேம்படுத்துவதற்காக
அறிவியல் சான்றுகளை திரித்தும், மறைத்தும் செயல்படுவதாக நோபல் பரிசு பெற்ற 20 பேர் உட்பட 60 க்கும்
மேற்பட்ட பெருமதிப்பிற்குரிய அமெரிக்க விஞ்ஞானிகள் பெப்ரவரி 18 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கடுமையான
கண்டனம் செய்துள்ளனர். ''கொள்கை வகுப்பதில் விஞ்ஞான கண்ணியத்தை மீட்க வேண்டும்'' என்ற தலைப்பில் அந்த
அறிக்கை குற்றம்சாட்டுவது என்னவென்றால்: ''விஞ்ஞான அறிவாற்றல் அரசியல் குறிக்கோள்களுக்கு மோதலாக
அமையும்போது, பல தடவைகளில் விஞ்ஞானம் தனது முடிவுகளில் நுழையும் போக்கினை நிர்வாகம் திரித்துவிடுகிறது''
என்பதாகும்.
அந்த அறிக்கையை தொடர்ந்து
UCS (UCS-Union
of Concerned Scientists) என்ற விஞ்ஞானிகள்
ஒன்றியம் 38 பக்க விவரக் குறிப்பை இணைத்திருக்கிறது. அதில் புஷ் நிர்வாகத்தின் நடைமுறைகள் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றன.
விஞ்ஞான ஆலோசனைக் குழுக்களில், அவர்களது அரசியல் கருத்துக்கள் அடிப்படையில் அவர்களது தொழில்முறை தகுதிகளை
கருதிப்பாராமல் நியமித்தது மற்றும் ஏற்கெனவே செயல்பட்டுவந்த ஆலோசனைக் குழுக்களை கலைத்தது மற்றும்
அரசாங்கத்தின் சொந்த விஞ்ஞானிகளின் அறிக்கைகளை தணிக்கை செய்தமை, அதனை மறைத்தமை மற்றும் சுதந்திரமான
விஞ்ஞான ஆலோசனையை கேட்காமல் விட்டது போன்ற பல்வேறு விவரங்கள் அந்தக் குறிப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் ஊடகங்களில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டவை
ஆகும். புஷ் நிர்வாகம் விஞ்ஞானத்திற்கு மதிப்பு கொடுக்காமல் செயல்பட்டதற்கான பல சான்றுகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றில், பிரசுரிக்கப்பட்ட விவரங்களோடு சம்மந்தப்பட்ட சில விஞ்ஞானிகளின் பேட்டியையும் சேர்த்திருக்கிறார்கள்.
முந்திய நிர்வாகங்களில் கண்டிராத அளவிற்கு திட்டமிட்ட நடைமுறை பின்பற்றப்பட்டிருப்பதை அறிக்கை நிரூபிக்கிறது.
இந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருக்கிற விஞ்ஞானிகளில் ஒருவரான ரஸ்ஸல் ட்ரென் (Russell
Train) என்பவர் ரிச்சார்ட் நிக்சன் மற்றும் போர்டு ஆட்சி
காலங்களில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவராக பணியாற்றியவர் ஆவர். அவர், தனது
பேட்டியில் ''சுதந்திரமான கண்டுபிடிப்புக்கள் மற்றும் விஞ்ஞானம், சுகாதாரம் மற்றும் பொருளாதார புள்ளி
விவரங்கள், அவற்றிற்கு பொறுப்பான அமைப்புக்கள் ஆகியன தொழில்முறை ஆய்வு அடிப்படையில் நெறிமுறைகள் செயல்படுத்தப்பட்டு
வந்த காலத்திலிருந்து இப்போது நெறிமுறைகள் வெள்ளைமாளிகை மற்றும் அதனது அரசியல் கண்ணோட்டங்களை பிரதானமாகக்கொண்டு
செயல்படுகின்ற நிலைக்கு எந்த அளவிற்கு தீவிரமான மாற்றத்திற்கு இலக்காகி வந்துவிட்டது'' என்று குறிப்பிட்டார்.
இந்த அறிக்கை சென்ற ஜூனில் பரவலாக வெளியிடப்பட்ட அறிக்கையை முதலில் ஆராய்கிறது.
அதில், பூகோளம் முழுவதிலும் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பது தொடர்பான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின்
(Environmental Protection Agency-EPA)
சுற்றுப்புறச்சூழல் அறிக்கையின் சில பிரிவுகளை திருத்தி எழுத வெள்ளைமாளிகை
மேற்கொண்ட முயற்சிகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
1,000 ஆண்டுகளுக்கான வெப்பநிலைப் பட்டியலை நீக்கிவிட்டு
அதற்கு பதிலாக புஷ் நிர்வாகத்தின் சாதகமான செய்தியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முக்கிய திருத்தங்களை
நிர்வாகம் கோரியது என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் உள்சுற்றுக்குறிப்பு சுட்டிக்காட்டுகிறது. அண்மையில்
விஞ்ஞான தேசியக்கழகம் தந்துள்ள அறிக்கை பற்றிய குறிப்புக்களை நீக்கிவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. புஷ்ஷின்
வெள்ளை மாளிகை நியமித்த இந்தக் குழு காலநிலை மாற்றத்தில் மனிதனது பங்கு குறித்து உறுதிப்படுத்தியது. ஆனால்,
இதில் விஞ்ஞான அடிப்படையில் விவாதத்திற்கு இடம் தராத சுருக்கக் குறிப்பான ''காலநிலைமாற்றம் பூகோளரீதியில்
மனிதர்களது உடல்நலத்திலும் மற்றும் சுற்றுச்சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்பது நீக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வெள்ளை மாளிகையின் கோரிக்கைகளுக்கு இணைங்குவதைவிட,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள், காலநிலை மாற்றம் பற்றிய முழுப்பகுதியையும் அறிக்கையிலிருந்து
நீக்கிவிட்டார்கள். இதனால் கடுங்கண்டனங்கள் எழுந்தன. அதையொட்டி
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின்
நிர்வாகி கிரிஸ்டியன் டோட்
ஒயிட்மேன் (Christine
Todd Whitman) பதவி விலகினார். உலக வெப்பநிலை
அதிகரிப்பது தொடர்பான Kyoto
ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டதுதான் புஷ் நிர்வாகம் பதவிக்கு வந்த பின்னர் எடுக்கப்பட்ட முதல்
நடவடிக்கைகளில் ஒன்றாகும். இன்னும் புஷ் நிர்வாகம் அமெரிக்க உற்பத்தியாளர்கள் தங்களது ''கண்ணாடி
ஆலைகளிலிருந்து'' வெளியேறும் நச்சுப்புகைகளை கட்டுப்படுத்துவதற்கு பயனுள்ள நெறிமுறைகளை கொண்டு வருவதற்கு
மறுத்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் வெளியிடப்படாத இன்னொரு சம்பவத்தில்,
UCS அறிக்கை
தயாரித்தவர்கள் பூகோளம் வெப்பமடைவது குறித்து எந்த விவாதமும் நடத்துவதை தடுப்பதற்கு வெள்ளை மாளிகை
எந்தளவிற்கு செல்லக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுகின்றனர். சென்ற செப்டம்பரில் அமெரிக்க விவசாயத்துறை (USDA)
வழக்கமான ஒரு கோரிக்கையை விடுத்தது. விவசாயிகள் தங்களது நிலத்தை பக்குவப்படுத்தும் போது வெளியாகும்
நச்சுவாயு அளவை குறைப்பதற்கு எப்படி உதவ முடியும் என்பதை விளக்குகின்ற பிரபல துண்டு அறிக்கைதான் அது.
அதை அச்சிடக்கூடாது என்று வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் குழு ஆட்சேபித்தது. துண்டுப்பிரசுர வெளியீட்டை
மறுபதிப்பு செய்யும் திட்டத்தை அமெரிக்க விவசாயத்துறை கைவிட்டது. இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் ஒரு
அரசாங்க அதிகாரியை பேட்டி கண்டனர். ''இது நுட்பமான நிர்வாக முறைதொடர்பான சம்பவமல்ல. ஆனால்
உண்மையிலேயே இது அரசாங்கத்தின் தகவலை முன்தணிக்கை செய்வதாகும்'' என்று அந்த பெயர் குறிப்பிட
விரும்பாத அதிகாரி தெரிவித்தார்.
தொழிற்துறைக்கு பாதகமான விஞ்ஞான அறிவாற்றல்களை மூடிமறைப்பதற்கு
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலவற்றை UCS
அறிக்கை பட்டியலிட்டிருக்கிறது. பிள்ளைபெறும் பருவமுள்ள பெண்களுக்கு
பாதரசத்தினால் எந்தளவிற்கு நச்சுத்தன்மை பாதிப்பு ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிற அறிக்கை ஒன்று
2002 மே மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினால் தயாரிக்கப்பட்டது. வெள்ளைமாளிகையின்
''ஆய்விற்காக'' ஒன்பது மாதங்கள் அந்த அறிக்கை வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதியாக
விரக்தியடைந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு அலுவலர் ஒருவர், இந்த நகல் அறிக்கையை
Wall Street Journal
இற்கு தந்தார். இதை இப்பத்திரிகை வெளியிட்ட சில நாட்களுக்கு
பின்னர்தான் அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டது.
மிக அண்மையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களில்
வெளியிடும் பாதரச புகை தொடர்பான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு விதிகளில் 12 பத்திகள் ஒரு
தொழிற்சாலையின் சட்ட ஆவணத்திலிருந்து எடுத்து சேர்க்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நிலக்கரியை
எரிபொருளாகக்கொண்டு மின்சாரம் தயாரிக்கும் தொழிற்கூடங்களில்தான் பாதரச நச்சுப்புகை வெளியேறுகிறது.
அவற்றின் சொந்தக்காரர்கள் ஜோர்ஜ்
டபுள்யூ. புஷ் மற்றும் துணை ஜனாதிபதி செனி ஆகிய இருவருக்கும்
நெருக்கமான உறவுள்ளவர்கள் ஆவர்.
நோய் கட்டுப்பாட்டு நிலையங்களின்
(CDC) விஞ்ஞான
முடிவுகளில் குறுக்கீடுகள் தொடர்பாக மிக முக்கியமான சான்றுகள் தரப்பட்டுள்ளன. டெக்சாஸ் கவர்னராக புஷ்
பணியாற்றிய காலத்தலிருந்தே பாலியியல் கல்வி தொடர்பாக ''தவிர்ப்பு-மட்டும்'' என்ற மனப்பான்மையை
கொண்டிருந்த ஒருவர், இதில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவையென்று மருத்துவ சமுதாயம் ஏறத்தாழ ஒருமனதாக
முடிவு செய்தபின்னர் பிள்ளைப் பேற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் பாலியலால் தொற்று நோய்கள்
வராது தடுப்பது தொடர்பாகவும் தகவல்களைத் தந்தார். அப்படிப்பட்ட நிலையிலும் பாலியல் கல்வி
அறிமுகப்படுத்தப்படாததால் ''தவிர்ப்பு மட்டுமே'' வேலைத்திட்டம் என வலியுறுத்தப்பட்டு வந்ததால், இளமைப்
பருவத்தில் விரும்பாத, விரும்பத்தகாத கருவுற்ற இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என்று அண்மைக்கால
ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
நோய் கட்டுப்பாட்டு நிலைய ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேட்டி பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. விஞ்ஞான ஆய்வுகள் பயன் தருபவை என்று நிரூபித்துள்ள பாலியல் கல்வியை உள்ளடக்கிய
''செயல்படும் வேலைத்திட்டங்கள்'' என்ற செயல்திட்டத்தை கைவிடுமாறு நோய் கட்டுப்பாட்டு நிலையத்தை
நிர்பந்தித்தார்கள் என்று புஷ் நிர்வாகத் தலைமை அதிகாரிகள் மீது நோய் கட்டுப்பாட்டு நிலைய ஊழியர்கள்
புகார் கூறினர். ''ஆசையைத் துறைந்துவிடு'' என்ற தத்துவத்தை மட்டுமே கூறாமல் 2002 ல் விரிவான
அணுகுமுறை அடிப்படையில் ஐந்து வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. நோய் கட்டுப்பாட்டு நிலைய
வலைத்தளத்திலிருந்து இந்த வேலைத்திட்டங்கள் பற்றிய குறிப்புக்கள் அனைத்தையும் நீக்கிவிடுமாறு வெள்ளைமாளிகை
கட்டளையிட்டது.
அதே போன்று சுகாதார மற்றும் மனித சேவைகள் இலாகா (HHS)
என்ற நோய் கட்டுப்பாட்டு நிலையத்தை மேற்பார்வையிடும்
அமைப்பு,
நோய் கட்டுப்பாட்டு நிலைய
வலைத்தளத்திருந்து ஆண்கள் பயன்படுத்தும் உறைகள்
(கன்டோம்கள்) தொடர்பான முறையான விளக்கங்களையும், அந்த விளக்கங்களால் பாலியல் நடவடிக்கைகள்
பெருகவில்லை என்ற ஆய்வுக் குறிப்புகளையும் நீக்கிவிடுமாறு கட்டளையிட்டது. அவற்றிற்கு பதிலாக இப்போது
இடம்பெற்றுள்ள ஆவணத்தில் கன்டோம் பயன்படுத்தியதில் ஏற்பட்ட தோல்வி விகிதங்களும் ஆசைகளைத் துறப்பதால்
ஏற்படுகிற பயன்களையும், எய்ட்ஸ் நோய்குறிகள் பரவுவதை தடுப்பதில் கன்டோம்களின் பயன்பாட்டை
சந்தேகிக்கின்ற அறிவியலுக்கு புறம்பான ஆதாரமற்ற தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன.
மற்றொரு சம்பவத்தில், மார்பு புற்றுநோய்க்கும் கருச்சிதைவிற்கும் தொடர்பு இருப்பதாக
இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு தகவலை தேசிய புற்றுநோய் கழகம் தனது வலைத்தளத்தில் வெளியிடுமாறு
கருச்சிதைவை வெறி உணர்வோடு எதிர்த்து வருகிற புஷ் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதற்கு ஊழியர்கள் கடுமையான
ஆட்சேபம் தெரிவித்தும் நிர்வாகம் புற்றுநோய் கழகத்தை இவ்வாறு நிர்பந்தித்தது. ஆனால், இதற்கு பொதுமக்களிடையே
கூக்குரல் எழுந்ததால் இந்த தவறான தகவல் நீக்கப்பட்டது.
UCS அறிக்கையில் நிர்வாகத்திற்கு
மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பிரிவுகளில் ஒன்று சதாம் ஹூசைன் அணு ஆயுதங்களை பெறும் தனது முயற்சிக்கு
உதவுகின்ற வகையில் அலுமினிய குழாய்களை வாங்குவதற்கு முயன்றார் என்ற புஷ், செனி குற்றச்சாட்டுக்கள் குறித்த
விவாதமாகும். இந்தக் குற்றச்சாட்டுக்கள் வாஷிங்டன் போருக்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிந்த போது
திரும்பத்திரும்ப கூறப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையில் 2002 செப்டம்பர் 12 இல் புஷ் உரையாற்றிய
போதும், அதற்குப் பின்னர் 2003 பிப்ரவரி 5 இல் வெளியுறவுத் அமைச்சர் கொலின் பவல் உரையாற்றிய
போதும் இதே குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.
எவ்வாறாயினும் லிவர்மோர், ஓக் ரிட்ஜ் மற்றும் லாஸ் அலமோஸ் (Livermore,
Oak Ridge and Los Alamos ) எரிபொருள் துறை தேசிய
ஆய்வுக்கூடங்களின் நிபுணர்கள் மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வகையில் தங்களது ஆய்வு முடிவுகளை பதிவு செய்திருக்கின்றனர்.
அலுமினியக் குழாய்கள் யுரேனியத்தை செறிவூட்ட பயன்படுபவையல்ல. குறுகியதூர இலக்குகளை தாக்குகின்ற
ராக்கெட்டுகளில் பயன்படுத்தும் சிறிய குழாய்களுக்கு இணையானவை. இவை 1980 களில் ஈராக் பயன்படுத்தியவை
என்று நிபுணர்கள் கூறினர். CIA
இந்த ஆய்வை எதிர்த்தது. ஆனால் வெளியுறவுத்துறையின் புலனாய்வு அதிகாரிகள் இந்த ஆய்வை ஏற்றுக்கொண்டனர்.
UCS
அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பதைப்போல் மற்றும் ஊடகங்கள் சித்தரித்திருப்பதைப் போல், இது ''தவறான புலனாய்வு
சம்மந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல, விஞ்ஞான ஆய்வுகள் தவறு என்று சுட்டிக்காட்டிய பின்னரும் அறிந்தே அவற்றை
நிர்வாகம் புறக்கணித்திருக்கிறது''.
விஞ்ஞானத்தை முறைகேடாக பயன்படுத்திய பல சம்பவங்களை
UCS அறிக்கை
சுட்டிக்காட்டுகிறது. ஒரு விவசாயத்துறை விஞ்ஞானி பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பின்னரும் நீக்கமுடியாத பாக்டீரியாக்கள்
பற்றி ஒரு உண்மையை கண்டுபிடித்தார். அந்த உண்மையை அறிவியல் மாநாடுகளில் வெளியிட வேண்டாம் என்று மேல்
அதிகாரிகள் கட்டளையிட்டனர். உண்மையில் UCS
அறிக்கையை தயாரித்தவர்கள் அமெரிக்க விவசாயத்துறை அறிவியல் நிபுணர்களின் முன் அனுமதி பெறாமல் பிரசுரிக்கவோ
அல்லது பகிரங்கமாக பேசவோ இயலாத பல முக்கிய பிரச்சனைகள் பற்றிய முழு அறிக்கை விவரங்களை வெளியிட்டிருக்கின்றனர்.
இவற்றில் விவசாயிகளது உடல்நிலை மற்றும் சுற்றுப்புற சூழலை பாதிக்கின்ற பல்வேறு விவசாய நடைமுறைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
சுற்றுப்புற பருவநிலையை பாதிக்கின்ற தண்ணீரின் தூய்மையை கெடுக்கின்ற இரசாயனப்பொருட்கள் கலப்பது உரம்,
பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் ஆடுமாடுகளுக்கான தீவனங்கள், மண்வளம், தண்ணீர் அல்லது காற்றில் பாரதூரமான
விளைவுகளை ஏற்படுத்தும் விவசாய நடைமுறைகள் ஆகிய பல்வேறு பிரச்சனைகளில் விஞ்ஞான நிபுணர்களின் கருத்துக்கள்
என்பன மூடிமறைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று இதர பிரச்சனைகளிலும் அழிந்து வரும் விலங்கினங்கள் பராமரிப்புச்
சட்டம் சிதைக்கப்பட்டுள்ளது. பெரிய கப்பல் போன்ற படகுகள் செலுத்துவோர் மற்றும் விவசாய தொழில்
நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் பாதகமான முறையில் மிசூரி ஆற்றுநீர் தூய்மை கெடாமல் ஓடும் அமெரிக்க மீன் மற்றும்
வனபாதுகாப்பு சேவையின் திட்டம் இரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனை 9 ஆண்டுகளுக்கு மேலாக நூறு
விஞ்ஞானிகள் வனவாழ்க்கை மேம்பாட்டிற்காக ஆராய்ந்து உருவாக்கியதாகும். அதற்கு பதிலாக 3 மடங்கு
அதிகளவில் வர்த்தகர்கள் மரங்களை வெட்டுவதற்கும் அனுமதித்த மாற்றுத்திட்டம் ஆகியவற்றையும்
UCS அறிக்கை
சுட்டிக்காட்டுகிறது.
தங்களது தொழில் முறை நிபுணத்துவச் செல்வாக்கை விட அரசியல் செல்வாக்கு
அதிகமுள்ளவர்களை விஞ்ஞான ஆலோசனைக் குழுக்களிலும் அரசாங்க அமைப்புக்களிலும் புஷ் நிர்வாகம் நிரப்பியிருப்பது
தொடர்பாக அறிக்கையின் ஒரு முழுப்பிரிவு விவரிக்கிறது. 2002 கோடைகாலத்தில், குழந்தைப்பருவத்தில் ஈயம்
கலந்த நச்சுப்பொருளை குழந்தைகளின் ரத்தத்தில் கலக்கவிடாது குறைப்பதற்கான அளவு பற்றி நோய்
கட்டுப்பாட்டு நிலைய ஆலோசனைக்குழு ஆராய இருந்த நேரத்தில் சுகாதார மற்றும் மனித சேவைகள் இலாகா
செயலாளர் டொமி தோம்சன் வழக்கத்திற்கு மாறான ஒரு நடவடிக்கை எடுத்து நோய் கட்டுப்பாட்டு
நிலையத்திற்கு நியமிக்கப்பட்ட குழுவிற்கு பதிலாக மற்றவர்களை நியமித்தார். ஈய நச்சுத்தன்மைத் தரத்தை
இறுக்கமாக நிலைநாட்டுவதை எதிர்ப்பவர்கள் என்று கருதப்பட்டவர்கள் அந்த ஆலோசனைக்குழுவில்
இடம்பெற்றிருந்தனர். புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் ஈயத்தொழிலில் முதலீடு அக்கறை உள்ளவர்கள்
ஆவர்
இதர நியமனங்களில், பெண்கள் மாதவிடாய்க்கு முன்னர் ஏற்படும் நோய்களுக்கு
மருந்து, அதுபற்றி படிப்பதுதான் என்று எழுதப்பட்ட ஒரு நூலின் இணையாசிரியரான டாக்டர் டேவிட் ஹாகர் உணவு
மற்றும் மருந்துகள் நிர்வாக அமைப்புக்கு நியமிக்கப்பட்டதுடன், இவ்வமைப்பின் (FDA)
பிள்ளைப்பேறு சுகாதார ஆலோசனைக் குழு, திருமணமாகாத பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை
ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. இந்த அமைப்பு கருச்சிதைவு, பிள்ளைப்பேறுத் தடுப்பு மற்றும் கருத்து
வேறுபாடுகளுக்கு இடமளிக்கும் மருத்துவ பிரச்சனைகளுக்கு ஆலோசனை கூறும் அமைப்பாகும். இதே போன்று
Dr.Joseph Mcllhaney
ஜனாதிபதியின் HIV/AIDS
ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டார். இவரது ஆய்வுகள் சரிசமமான தகுதிபடைத்த விஞ்ஞானிகளால்
ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. டெக்சாஸில் பணியாற்றும் இந்த மருத்துவர் தனது கட்டுரை ஒன்றில்
எய்ட்ஸை பரவாது தடுப்பதில் ஆணுறைகள் பயனுள்ளவை என்ற கருத்தை மிக அலட்சியமாகப் புறக்கணித்திருக்கிறார்.
பாதுகாப்பு தொடர்பான இரண்டு ஆலோசனைக்குழுக்கள் அடியோடு நீக்கப்பட்டுவிட்டன.
ஒரு குழு அணு ஆயுதங்கள் தொடர்பாக தேசிய அணு பாதுகாப்பு நிர்வாகத்திற்கு அறிக்கைகளைத் தருவது. மற்றொரு
குழு ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிரச்சனைகளை வெளியுறவுத்துறைக்கு ஆலோசனை கூறுவது. முந்திய குழுவில் பல அணு
விஞ்ஞானிகள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள், ஆழமாக புதைக்கப்பட்டுவிட்ட இலக்குகளை அழிப்பதற்கு அணு ஆயுதங்கள்
ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் பயன்பட முடியுமென்பதை விளக்குகின்ற கட்டுரைகளை பிரசுரித்திருந்தனர். அத்தகைய
கருத்துக்கள் விஞ்ஞான சமுதாயத்தில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் 2004 நிதி ஆண்டில் வரவு
செலவுத்திட்டத்தில் பதுங்கு குழிகளை இலக்குக்கொண்டு தாக்குகின்ற அணு ஆயுத திட்டங்களுக்கு புஷ் நிர்வாகம்
ஒதுக்கீடு செய்திருப்பதை நேரடியாக பாதிக்கின்ற வகையில் அந்த விஞ்ஞானிகளின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
UCS அறிக்கையை தயாரித்தவர்கள்
தங்களது முடிவுகளை அறிவிக்கும் பகுதியில் ''நடுநிலை விஞ்ஞான அறிவாற்றலை புஷ் நிர்வாகம் அரசியல் நோக்கங்களுக்காக
சிதைந்த சித்திரமாக்கி விட்டது, மற்றும் தவறான முறையில் சித்தரித்துள்ளது, அல்லது நாடாளுமன்றம் மற்றும்
பொதுமக்களது கவனத்திலிருந்து மறைத்துவிட்டது'' என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் முன்னாள் நோய் கட்டுப்பாட்டு
நிலைய விஞ்ஞானி ஒருவரது கருத்தை மேற்கோள் காட்டியிருக்கின்றனர். அந்த விஞ்ஞானி வெளிப்படையாக ''அறிவியலுக்கு
பதிலாக அரசியல் கொள்கையை புகுத்தியிருப்பதை நாங்கள் தெளிவாக பார்க்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் முடிவுகளை புஷ் நிர்வாகம் மறுத்துள்ளது. அதே நேரத்தில் அந்த
முடிவுகளை நிரூபிக்க எடுத்துக்காட்டியுள்ள சம்பவங்களை எந்த வகையிலும் நிர்வாகம் ஆட்சேபிக்கவில்லை. புஷ்ஷின்
தலைமை விஞ்ஞான ஆலோசகர் Dr. John
Marburger III அந்த அறிக்கையில் சித்தரிக்கப்பட்டுள்ள
உண்மைகளை மறுத்திருக்கிறார். மற்றும் சம்பவங்கள் பட்டியல் ஒன்றோடு ஒன்று பெரும்பாலும் தொடர்பு இல்லாதவையாக
உள்ளதாக கூறியிருக்கிறார். ''மிகப்பெரும்பாலான சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கொள்கைகள் அடிப்படையில்
உருவான மகத்தான நடவடிக்கைள் அல்ல. அரசாங்க அமைப்புகளுக்குள் சாதாரணமாக நடைமுறையிலுள்ள தனிப்பட்ட
நபர்களின் நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது'' என்று அவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை, அதைத்தொடர்ந்த விவரகுறிப்பு, பத்திரிகை குறிப்பு மற்றும்
கையெழுத்திட்டுள்ள விஞ்ஞானிகள் பட்டியல் ஆகியவற்றை
UCS-www.ucsusa.org
என்ற வலைத் தளத்தில் காணலாம்.
Top of page |