World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US: Mass opposition grows to Iraq war

அமெரிக்கா: ஈராக் போருக்கு பரந்த அளவில் எதிர்ப்பு வளர்கிறது

By Bill Van Auken
30 April 2004

Back to screen version

ஈராக்கிய மக்களுக்கு எதிராக வாஷிங்டன் கட்டவிழ்த்துவிட்டுள்ள இரத்தக்களரிக்கு எதிராக அமெரிக்க மக்களிடையே போருக்கு எதிர்ப்பும் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேற பரந்த ஆதரவும் அதிகரித்து வருகிறது.

டென்மார்க் கோபன்ஹேகனில் வியாழன் அன்று பேசிய வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் போருக்கும், ஆக்கிரமிப்பிற்கும் வீழ்ச்சியடைந்து கொண்டுவரும் மக்களது ஆதரவுபற்றி ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ''ஏப்ரல் குறிப்பாக களச்சாவுகளைப் பொறுத்தவரை கெட்டமாதம். இதனால் மக்கள் நின்று நிதானித்து, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்று சிந்திக்கிறார்கள். வாக்குப்பதிவில் அது எதிரொலிப்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம்'' என்று அவர் கூறினார்.

நியூயோர்க் டைம்ஸ் மற்றும் CBS நியூஸ் நடத்திய கடைசி கருத்துக்கணிப்புக்களில் தெளிவான பெரும்பான்மை மக்கள் -58-சதவீதம் பேர், அமெரிக்க உயிர்சேதத்தோடு ஒப்பிடும்போது இந்தப்போர் பயனற்றது என்று உறுதியாகக் கூறியுள்ளனர். கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பாதிப்பேர் ஈராக்கில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும், முடிந்தவரை விரைவாக அமெரிக்கத் துருப்புக்கள் அனைத்தையும் வாஷிங்டன் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

அமெரிக்கா ஈராக்கில் "தொடர்ந்து தனது போக்கில் நிலை நிற்க வேண்டும்" என்று குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டினாலும் வலியுறுத்தி வருகின்றதையும், நிர்வாகம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு பொய்யையும் நியாயப்படுத்தி விமர்சனக் கண்ணோட்டத்தில் ஆராயாமல் ஊடகங்கள் அப்படியே வாந்தி எடுக்கின்றதையும் எடுத்துக் கொண்டால், இந்தச் சூழ்நிலையில் இந்தப்புள்ளி விவரங்கள், அமெரிக்க மக்களுக்கும் ஒட்டுமொத்த அரசியல் ஒழுங்கமைப்புக்கும் இடையே நிலவுகின்ற இடைவெளியை அதிர்ச்சியூட்டும் வகையில் வெளிப்படுத்துகின்ற குற்றச்சாட்டாகும்.

பவல் குறிப்பிட்ட "கெட்டமாதம்" ஏறத்தாழ முடிவிற்கு வந்துவிட்டது, ஆனால் ஈராக் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சாத்தியக்கூறு எதுவும் இல்லை. இந்த மாதம் இதுவரை குறைந்த பட்சம் 134- அமெரிக்கத் துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சண்டையில் 800-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வாஷிங்டன் போஸ்டின் Karl Vick எழுதியுள்ள உள்ளத்தை உறையவைக்கும் ஒரு கட்டுரை காயமடைந்தவர்களில் கணிசமான பிரிவினர் கடுமையான தலைக்காயம், அடைந்துள்ளனர். அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் அமெரிக்காவிற்கு மூளை மடிந்துவிட்டவர்கள் என்று அனுப்பப்பட்டு வருகின்றனர் என தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

"உயிர் ஆதார இயந்திரங்களை நீக்குவதற்கான முடிவை எதிர்கொள்ளும் முன்னர், அன்பிற்குரியவர்கள், ஆதரவாளர்கள் காயமடைந்த சிப்பாயின் கைகளைப் பிடிப்பது பெறுமதி உள்ளதாக இருக்கும் எனக் கருதும் நடைமுறையானது, குடும்பத்தினரிடமிருந்து கருத்துக்களைத் திரட்டிய பின்னர் மீளாய்வுக்கு உள்ளாகும்."

அமெரிக்கப்படைகளால் கொல்லப்படுகின்ற ஈராக்கியர் எண்ணிக்கையை கொள்கை அடிப்படையில் கணக்கிடுவதில்லை என்று ஆக்கிரமிப்பு அதிகாரிகள் முடிவு செய்திருக்கின்றனர். இந்த மாதம் மட்டுமே ஆயிரக்கணக்கான ஈராக்கியர் அவர்களில் பெரும்பாலோர் பெண்களும், குழந்தைகளும், மடிந்திருக்கின்றனர். ெலாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வியாழனன்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், பல்லூஜா-வில் மாண்டவர்கள் 1500-முதல் 2000-வரை இருக்கலாம் என்று அமெரிக்க இராணுவமே மதிப்பீடு செய்திருக்கிறது.

படுகொலையை அதிரடியாக தீவிரப்படுத்த வாஷிங்டன் உத்தேசித்திருக்கிறது என்பதை அதன் ஒவ்வொரு செயலும் கோடிட்டுக்காட்டுகிறது. ஜேர்மனியிலிருந்தும் இதர பகுதிகளிலிருந்தும் மத்திய ஈராக் நகரான பல்லூஜாவை முற்றுகையிட்டுள்ள 7,000-கடற்படையின் நிலப்படை வீரர்களுக்கு வலுவூட்டுவதற்காக குறைந்தபட்சம் 48 MIAI Abrams டாங்கிகள் விரைந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த 68-டன் கவச வாகனங்கள் டாங்கிப் போருக்காக வடிவமைக்கப்பட்டவை மற்றும் நகரப் பகுதிகளை ரோந்து சுற்றுவதற்கு பயனற்றவை. அவை ஈராக்கில் கட்டடங்களைத் தகர்க்கவும் அதில் இருப்பவர்களையும் சேர்த்து கொன்று குவிக்கும் நோக்கத்திற்குத்தான் பயன்பட முடியும்.

ஈராக்கிலுள்ள இராணுவத்தளபதிகள் வியாழன்று, பல்லூஜா நகரப்பொறுப்பை முற்றிலும் முன்னாள் பாத்திஸ்ட் ஜெனரல்கள் அடங்கிய ஈராக் படையிடமே கடற்படையின் நிலப்படைப் பிரிவினர் ஒப்படைத்துவிடப் போவதாக கூறினர். ஆனால் பென்டகன் அதிகாரிகள் அத்தகைய உடன்படிக்கை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டனர். அந்த ஈராக் நகரத்தில் நடைபெறுகின்ற படுகொலைகளுக்கு எதிராக உலகம் முழுவதிலும் எழுந்துள்ள கண்டனங்களை திசை திருப்பச் செய்யவும் படுகொலைத்தாக்குதல்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்வதற்காகவும் தான், அப்படிப்பட்ட கருத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ஒரு படை உருவாக்கப்பட்டாலும், அது தாக்குதலுக்கு உதவியாகத்தான் அமையும். தங்களது ஈராக் கொத்தடிமைகளை "பயங்கரவாதிகள்" மற்றும் "முரடர்களிடமிருந்து" காப்பாற்றுவதற்காக தலையிடுகிறோம் என்ற சாக்குப்போக்கை உருவாக்குவதற்கே அது உதவும்.

லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிற்கு ஒரு மூத்த இராணுவ அதிகாரி சொன்னதைப்போல் கடந்த சில நாட்களாக பல்லூஜா நகர் மீது நடத்தப்பட்டு வரும் குண்டு வீச்சுத்தாக்குதல்கள் ஒட்டுமொத்த தாக்குதலுக்கான முன்னோட்டம்தான். ''நாங்கள் அங்கே நுழைகிறோம் என்றால் அதன் விளைவுகளை நீங்கள் பார்க்க வேண்டும் நாங்கள் கனரக கவச வாகனங்களோடு அங்கே செல்கிறோம். மக்களை கொல்வதற்காக அங்கே போகிறோம்'' என்று அவர் சொன்னார். இதற்கிடையில் ஜெட்போர் விமானங்கள் வியாழனன்று மீண்டும் அந்த நகரத்தை தாக்கின.

அந்தப் பத்திரிகை, பல்லூஜா எதிர்ப்பை நசுக்குவதன் மூலம் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது பயனற்றது, அது மற்ற ஈராக்கியருக்கும் "செய்தி அனுப்பும்" என்று குறிப்பிட்ட மேஜர் ஜெனரல் John Sattler கருத்தையும் மேற்கோள் காட்டியுள்ளது. இதை வேறு வார்த்தைகளில் விளக்குவது என்றால், ஈராக் மக்கள் அனைவரையும் அச்சமூட்டி பயங்கர நடவடிக்கைகளால் பணியவைக்கும் நோக்கத்தோடு 3,00,000- மக்களைக் கொண்ட நகரத்தின் மீது கூட்டாக தண்டனை விதிக்க அமெரிக்க இராணுவம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

வாஷிங்டனில், புஷ் நிர்வாகம் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் கிரிமினல் குற்றத்தன்மையை அமெரிக்க மக்களிடமிருந்து மூடி மறைப்பதற்காக தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது.

புதன்கிழமையன்று, புஷ் பல்லூஜாவில் பெரும்பகுதி மாமூல் வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக வியப்பூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜெட்போர் விமானங்களும், AC- 130-குண்டு வீச்சு விமானங்களும், டாங்கிகளும், அந்த நகரத்தின் மீது தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், அந்த நகரத்து மக்கள் மனித நேய அடிப்படையில் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும்போது மின்சாரம் இல்லாமல் பல இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் தங்களது சொந்த வீடுகளுக்குள்ளேயே எந்த நேரத்திலும் திடீரென்று சாவு வரலாம் என்று பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிற நேரத்தில், புஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

பல்லூஜா மக்கள், சர்வதேச தலையீடு கோரி விடுத்த கோரிக்கைகள் செவிடர் காதில் ஊதிய சங்காகிவிட்டது. நகர அதிகாரிகள் தூதுக்குழு ஒன்று சென்ற வாரம் அம்மானுக்கு சென்று ஐ.நா அதிகாரிகள் ஐரோப்பிய யூனியன் மற்றும் அரபு லீக்குடன் முறையிட்டு படுகொலையை நிறுத்தக்கேட்டுக் கொண்டது.

அமெரிக்க ஒடுக்குமுறை ஈராக் எதிர்ப்பை தீரவிரப்படுத்தவே செய்யும் என்று எச்சரித்த ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னான், ஈராக்கில் "பாதுகாப்பு நிலை" மேம்படுகிற வரை ஐ.நா ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறியுள்ளார். சென்ற மாதம் நடைபெறவேண்டிய அரபு லீக் கூட்டத்தை மே-மாதம் வரை ஒத்திவைத்து விட்டார்கள். ஊழல் மலிந்த கோழைத்தனமான அரபு முதலாளித்துவ வர்க்க தலைவர்கள் வாஷிங்டனுக்கு கோபமூட்டும் தீர்மானத்தைக்கூட நிறைவேற்ற விருப்பமில்லாமல் செயல்பட்டனர்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று கருதப்படும் மசாசூசெட்ஸ் செனட்டர் ஜோன் கெர்ரி அல்லது, வேறு எந்த ஜனநாயகக்கட்சி முன்னணி அரசியல்வாதியும் பல்லூஜா முற்றுகையை கண்டிக்கவில்லை. அது அப்பட்டமான போர்க் குற்றமாகும். மாறாக 33-ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க இராணுவம் வியட்நாமில் மேற்கொண்ட போர்குற்றங்களுக்கு எதிராக கெர்ரி தெரிவித்த கண்டனங்களிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள சென்றவாரம் முழுவதும் முயற்சி செய்து தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வந்தார்.

மேலே கூறப்பட்ட புள்ளி விபரங்கள் அமெரிக்க மக்களில் மிகப்பெரும்பாலோர் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை காட்டுவதுடன், மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கெர்ரி மற்றும் ஜனநாயக கட்சியினரின் அரசியல் வாய்ப்புக்களை உயர்த்துவதற்கு போர் எதிர்ப்பு உணர்வுகள் எந்தவகையிலும் பயன்படாது என்பது தெளிவுபடுத்துகின்றன.

இது தற்செயலாக நடந்துவிட்டது அல்ல. ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்திற்கு தேவையான பேராளர்களை பெற்றவுடன், கெர்ரியும் கட்சி தலைமையும் ஜனநாயகக் கட்சியின் ஆரம்ப தேர்தல்களில் முன்னணி பங்களிப்புச் செய்த போர் எதிர்ப்பு அணியினரை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டனர்.

இந்த திருப்பு முனைக்கு அடித்தளம் அமைத்தது ஹோவார்ட் டீன் -க்கு எதிராக நடத்தப்பட்ட அவரை வேட்பாளர் தகுதியிலிருந்து ஒழித்துக்கட்டும் பிரச்சாரமாகும். அவர் போர் எதிர்ப்பு உணர்வுகளோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர் போல் காணப்பட்டார். கெர்ரி ஈராக் படையெடுப்பிற்கு அங்கீகாரம் தந்தவர், "தேர்ந்தெடுக்கப்படக்கூடிய" மாற்று என்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த அரசியல் சூழ்ச்சியின் நோக்கம் போர் ஒரு தேசிய பொதுவாக்கெடுப்பாக மாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

கெர்ரி தொடர்ந்து ஈராக் ஆக்கிரமிப்பை ஆதரித்துவருகின்றது முதல், அந்த நாட்டை ஆக்கிரமிப்பதற்கு இன்னும் கூடுதலாக படைகளை அனுப்பவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இந்த மாத தொடக்கத்தில் வானொலியில் உரையாற்றிய அவர், ''அமெரிக்கர்களுக்கிடையில் நான் எப்படி மற்றும் எப்போது போருக்குச் சென்றிருக்க வேண்டும் என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்...... ஆனால் பின்வாங்குவது நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. ....அமெரிக்க மக்கள் அனைவரும் நமது துருப்புக்களை ஆதரித்து நிற்பதில் உறுதியாக உள்ளனர். அமைதியான சகிப்புத்தன்மையுள்ள நிலையான சுதந்திர ஈராக்கை உருவாக்குவதில் ஈராக் மக்களுக்கு உதவுவது என்ற உறுதிப்பாட்டில் அமெரிக்க மக்கள் ஒன்றுபட்டு ஆதரித்து நிற்கின்றனர்'' என்று குறிப்பிட்டார்.

ஆனால் CBS/ நியூயோர்க் டைம்ஸ் கருத்துக்கணிப்பு தெளிவாக விளக்கியிருப்பதைப்போல், ஈராக் ஆக்கிரமிப்பிற்கு எல்லா அமெரிக்கர்களும் ஒன்றுபட்டு நிற்கவில்லை. பாதிப்பேர் அமெரிக்கத் துருப்புகள் திரும்ப அழைக்கப்பட்டு அமெரிக்காவின் தலையீட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அப்படியிருந்தும் அமெரிக்காவின் இருகட்சி அரசியல் முறை அரசியல் நடைமுறைகளிலிருந்தே போர் பற்றிய அமெரிக்க மக்களின் கருத்துக்கள் முற்றிலுமாக விலக்கப்படுவதற்கு பயன்பட்டிருக்கிறது.

போருக்கும் புஷ் நிர்வாகத்தின் பிற்போக்குத் கொள்கைகளுக்கும் முடிவு கட்டும் ஒரே வேட்பாளர் என்று கெர்ரியின் வேட்பு மனுவை ஆதரிக்கும் "இடதுசாரி" ஆதரவாளர்கள் சிலர், ஆக்கிரமிப்பிற்கு அவரது பகிரங்க ஆதரவை அரசியல் சந்தர்ப்பவாதம் என்று கூறி, ஜனநாயகக் கட்சி வேட்பாளரைக் கண்டிக்கின்றனர்.

நவம்பரில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தேர்வு செய்வதை ஊடறுத்துச்செல்லும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்விற்கு எதிராக நடைபெறுகின்ற அரசியல் நடவடிக்கை அனைத்தையும் - ரால்ஃப் நாடர் பிரச்சாரம் உட்பட - சட்டவிரோதம் என்று முத்திரை குத்திய நேஷன், கெர்ரி ஒரு இளைஞராக போர் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டதை மீண்டும் உயிர்தெழப் பண்ணுமாறு இப்பொழுது கோருகின்றது. அவர், உண்மைகளை "உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து" பேசவும் "புஷ்ஷின் முழுமையான கண்ணோட்டத்தையும் சவால்விட வேண்டும்" என்று நேஷன் அவரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

இத்தகைய வேண்டுகோள்கள் முற்றிலும் பயனற்றவை. புஷ் நிர்வாகத்தின் எல்லா அத்தியாவசிய கொள்கைகளையும் ஆரத்தழுவி நிற்கும் கடைந்தெடுத்த வலதுசாரி வேட்பாளரில் பிரமைகளை ஊட்டுவதற்கு மட்டுமே அவை பயன்படும்.

கெர்ரியின் வலதுசாரி போக்கு வெறும் தேர்தல் கணிப்புக்களால் உந்தப்பட்டது அல்ல. ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு பொதுமக்களது ஆதரவை மிகப்பெரும் அளவில் திரட்டும் என்பதே தெளிவான நிலை. என்றாலும், அவர் அமெரிக்க உழைக்கும் மக்களுக்காக குரல்கொடுக்கவில்லை, மாறாக அமெரிக்க நிதி ஆதிக்க செல்வந்தத் தட்டிற்காக குரல்கொடுக்கிறார். அதன் நலன்களும் எதிர்கால வாய்ப்புக்களும், இராணுவவாதம் மற்றும் வலிந்துதாக்குதல் மற்றும் வெற்றிகொள்ளுதல் மூலம் அமெரிக்க உலக மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு உந்துதலுடன் பின்னிப் பிணைந்துள்ளன. அவர் ஈராக் மீதான கட்டுப்பாட்டையும் அதன் எண்ணெய் வளத்தையும் கைவிட நோக்கம் இல்லாத இந்த ஆளும் தட்டினருக்கு, இன்றைய வெள்ளைமாளிகை அதிபரைவிட தான் சிறப்பாக இந்தக் கொள்கையை நிறைவேற்ற முடியுமென்று உறுதியளிக்க முயன்று வருகிறார்.

அமெரிக்காவின் இரண்டு கட்சி முறைக்குள்ளே போரை எதிர்ப்பதற்கும், ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கும் வழிவகை எதுவும் இல்லை அல்லது ''பல்லூஜா'' மீது நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான முற்றுகையை முடிவிற்கு கொண்டுவர ஈராக் மக்கள் விடுத்துள்ள கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவும், அமெரிக்க மக்களது பெயரால் நடத்தப்பட்டுவரும் எண்ணிறைந்த குற்றங்களை கைவிடச் செய்வதற்கும் எந்தவிதமான வழிவகையும் இல்லை.

இப்போது தேவைப்படுவது என்னவென்றால், அமெரிக்காவில் நிலவுகின்ற இராணுவவாதத்திற்கு உள்ள பரவலான எதிர்ப்பை ஓரணியில் திரட்டக் கூடிய, ஈராக் படுகொலைகளால் துயரம் அடைந்து, இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கருதுகின்ற மில்லியன் கணக்கான மக்களுக்கான அரசியல் போராட்டத்திற்கு வழிகளை வழங்கக் கூடிய உழைக்கும் மக்களின் ஒரு புதிய சுயாதீனமான சோசலிச இயக்கமாகும்.

அத்தகைய இயக்கத்தை கட்டி எழுப்புவதற்கான போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு 2004-தேர்தல்களில் சோசலிச சமத்துவக்கட்சி தலையீடு செய்கின்றது. நமது வேட்பாளர்கள் ஈராக்கிலிருந்து அனைத்து துருப்புக்களும் உடனடியாகவும், நிபந்தனை எதுவும் இல்லாமலும் திரும்ப அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய புள்ளியாக தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வைத்துள்ளனர். போரை எதிர்ப்பவர்களை பெருவர்த்தக நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கட்சிகளுமே சட்டவிரோதமானவர்கள் என்று முத்திரை குத்துவதற்கு மாற்றாக நாங்கள் ஒரு அரசியல் மாற்று இயக்கத்தை தருவதை நோக்கங்கொண்டுள்ளோம்.

இந்தப் போருக்கு எதிராக, பிற்போக்குத்தனத்திற்கும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதலுக்கும் எதிராக போராடுவதற்கு ஒரு வழியை எதிர்பார்த்துக்கொண்டுள்ள அனைவரையும், எங்களது பிரச்சாரத்தில் சேர்ந்து, எங்களது வேட்பாளர்களை வாக்களிப்புச் சீட்டில் இடம் பெறச்செய்யப் போராடுமாறும், சோசலிச சமத்துவக் கட்சியால் எடுத்துவைக்கப்படும் சோசலிச வேலைத்திட்டங்கள் மீது முடிந்தவரை விரிவாக விவாதிப்பதை முன்னெடுக்குமாறும் அழைக்கிறோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved