World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா Behind the demands for Rumsfeld to resign: White House prepares a fallback position to continue Iraq atrocities ரம்ஸ்பெல்ட் ராஜிநாமா கோரிக்கையின் பின்னணி: ஈராக் அட்டூழியங்களை தொடர்வதற்கு வெள்ளை மாளிகை தயாரிக்கும் ஒரு பின்வாங்கல் By Patrick Martin அபு கிரைப் சிறையில் இராணுவ போலீசாரும், அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளும் ஈராக்கிய கைதிகளை காட்டுமிராண்டித்தனமாக நடத்தியதற்கு பொறுப்பேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் பதவி விலகவேண்டுமா என்பது குறித்து திடீரென்று அமெரிக்க ஊடகங்களிலும் அமெரிக்க அரசியல் வட்டாரங்களிலும் விவாதம் ஆரம்பமாகிவிட்டது. ரம்ஸ் பீல்ட் பதவி விலகல் கோரிக்கை ஜனநாயகக் கட்சி மற்றும் ஊடகங்களின் சில பிரிவுகளிலிருந்து எழுந்துள்ளமை -மற்றும் தனிப்பட்ட முறையில் காங்கிரசின் குடியரசுக் கட்சியினரின் ஒரு பிரிவினரும் இந்தக் கோரிக்கையை எழுப்பியுள்ளமை- அபு கிரைப்-ல் நடைபெற்ற இந்த மறைமுகமான முறைகேடுகளைக்கண்டு நியாயமான ஆத்திர உணர்வு வெளிப்பட்டால் உருவானதல்ல. மாறாக -ஈராக்கில் அமெரிக்க காலனித்துவ நிறுவனத்தின் அதிகரித்துவரும் வெளிப்படையான தோல்வியின் மீதாக ஆளும் குழுவிற்கு தோன்றி வருகின்ற கருத்துவேறுபாடு- மேலும் புஷ் நிர்வாகத்தின் உள்ளேயே தோன்றிவரும் மோதல்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நியூயோர்க் டைம்ஸின் தலைப்புச்செய்தி இப்படி ஆரம்பிக்கிறது: ஜனாதிபதி புஷ் புதன்கிழமையன்று, பாக்தாத் பயங்கர சிறையில் நடைபெற்ற சம்பவங்களில் ஈராக்கியர்களை அமெரிக்கர்கள் இழிவாக நடத்திய விதம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால் ரம்ஸ்பீல்ட்-ஐ கடிந்துகொண்டார் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்''. டைம்ஸ், இந்த அதிகாரிகள் அந்த விவரங்களை "புஷ்-ன் அங்கீகாரத்தின் கீழ்'' வெளியிட்டதாக ஒப்புக்கொண்டிருக்கிறது. முக்கியமாக, புஷ்- கண்டித்ததாகக் கூறப்படுவது அபு கிரைப் சிறைச்சாலையில் என்ன நடைபெற்றது என்பதை குவிமையமாகக் கொள்ளவில்லை, மாறாக அந்த முறைகேடு அம்பலத்திற்கு வந்துவிட்டதால் ஏற்படுகின்ற பாரதூரமான அரசியல் எதிர்விளைவுகளை, குறிப்பாக மத்திய கிழக்கிலும் பரவலாக முஸ்லீம் உலகிலும் அமெரிக்க வெளிவிவகாரக்கொள்கை மீது ஏற்படுகின்ற அரசியல் பாதிப்புக்களை கருத்தில் கொண்டுதான் ஆகும். அவரது முதன்மையான விமர்சனம் நிர்வாணமான ஈராக் கைதிகள் அவர்களின் அமெரிக்க காவலர்களால் இழிவாக நடத்தப்பட்டது பற்றிய டிஜிட்டல் நிழற்படங்கள் இருத்தல் பற்றி தகவல் தெரிவிக்காதது பற்றியதாக இருந்தது. "அவை அவரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்", "மற்றும் அவர் செய்தி ஊடகத்தின் மூலம் அறிய வந்திருக்கக் கூடாது" என்று வெள்ளை மாளிகை அதிகாரி கூறினார். ரம்ஸ் பீல்ட் தொடர்பாக புஷ் நிர்வாகம் தனது சொந்த கவனத்தை ஒருமுகப்படுத்துதல் ஈராக் பேரழிவினால் தூண்டிவிடப்பட்டுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து தன்னை சமாளிக்கும் தீவிரமான முயற்சிதான். தனது சட்டவிரோதமான போரையும் ஆக்கிரமிப்பையும் நீடிப்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில், தேவைப்பட்டால் தனது பாதுகாப்பு செயலாளரைக்கூட பலிகொடுப்பதற்கு வெள்ளை மாளிகை தயாராக இருக்கிறது. ரம்ஸ் பீல்ட் மீது தாக்குதல் தொடுப்பதற்கு புஷ்- தானே சமிக்கை காட்டினார். புதன் கிழமையன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரகசியக் கூட்டத்தில் புஷ் பென்டகன் தலைவரான ரம்ஸ் பீல்ட்-ஐ கண்டித்தார். அது சம்மந்தமான தகவலை மாலையில் தொலைக்காட்சி செய்திகளுக்கும் வியாழன்று தினசரி பத்திரிகைகளில் முதல் பக்க செய்திகளுக்கும் தீனி போடுவதைப்போல் உடனடியாக அந்த இரகசிய கூட்ட தகவலை கசியச்செய்தார். வாஷிங்டன் போஸ்ட் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது: ''ஜனாதிபதி புஷ் நேற்று பாதுகாப்பு- துறை செயலாளர் டொனால்ட் எச். ரம்ஸ் பீல்ட்-ஐ தனிப்பட்டமுறையில் எச்சரித்தார் என்று ஒரு மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார். அப்போது இதர அமெரிக்க அதிகாரிகள் ஆயிரக் கணக்கான கைது செய்யப்பட்ட ஈராக்கியர்களுக்கான நிலைமைகளை மேம்மபடுத்துவது மற்றும் குற்றங்கள் பதிவு செய்யப்படாதவர்களை விடுதலை செய்தல் தொடர்பாக திரும்பத் திரும்ப செய்யப்பட்ட பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினர் என பென்டகன் மீது பழிபோட்டனர். இதை வேறு வார்த்தைகளில் விளக்குதென்றால், ரம்ஸ் பீல்ட் மீதான கடுமையான விமர்சனத்துக்கு காரணம் கைதிகள் முறைகேடாக நடத்தப்பட்டதற்காக அல்ல; ஆனால் ஜனாதிபதியை முறையாக நடத்ததாதற்காகும், அவரது அரசியல் உதவியாளர்களும் பிரச்சார பீரங்கிகளும் சென்ற வாரம் அபு கிரைப் சிறையில் நடந்த சித்ரவதைகள் தொடர்பான செய்தி முதல் தடவையாக CBS-ல் ஒளிபரப்பப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஆகும். ரம்ஸ்பெல்டை அரசியல் இடிதாங்கியாக பயன்படுத்திக்கொள்வதற்கான அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டின் ஆவல், அதன் மூலம் புஷ்-ன் வெள்ளை மாளிகையை காப்பாற்றக் கருதுவது வாஷிங்டன் போஸ்ட்-ல் வியாழன் தலையங்கத்தில் வெளிப்படுத்தப்பட்டது. ''திரு ரம்ஸ் பெல்ட்டின் பொறுப்பு'' என்ற இந்தத் தலைப்பே ஈராக் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு முதன்மை பொறுப்பாளிகளான ஜனாதிபதி புஷ் மற்றும் துணை ஜனாதிபதி செனி ஆகியோரிடமிருந்து அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் பென்டகனுக்கு கவனத்தை திருப்பும் முயற்சியை செறிவாக்குகிறது. அபு கிரைப் முறைகேடுகளுக்கான மூலத்தை அமெரிக்கா ஜெனீவா, ஒப்பந்தங்களுக்கு இனி கட்டுப்பட்டதல்ல, சட்டவிரோத போராளிகள் என்று வகைபடுத்தப்பட்டுள்ள கைதிகளுக்கு "எந்த உரிமையும் இல்லை" என்று தலிபான் மற்றும் அல் கொய்தா ஆப்கானிஸ்தான் கைதிகளை நடத்துவது பற்றியும், குவாண்டநாமோ குடா பகுதியில் அமெரிக்க இராணுவம் நடத்தும் கைதிகள் முகாமில் அமெரிக்கா அல்லது சர்வதேச நீதிமன்றங்கள் எதுவும் கண்காணிக்க முடியாது என்று கூறி ரம்ஸ்பெல்ட் அடிக்கடி வெளியிட்ட அறிவிப்புக்களில், பகுதி அளவில் கண்டுபிடிக்க முடியும் என்று தெளிவாகக் கூறி அத்தலையங்கம் ஆரம்பித்தது. ஆயினும், இந்த அறிக்கைகள் எதுவும் ரம்ஸ்பெல்ட்-ன் தனிப்பட்ட கருத்துக்களின் வெளிப்பாடல்ல. அவை புஷ்-ம் செனியும் வகுத்தளித்துள்ள புஷ் நிர்வாகத்தின் கொள்கையை எதிரொலிப்பது ஆகும். இந்தக் கொள்கை ஆப்கானிஸ்தான் போர்களங்களில் அல்லது, பாக்தாத் இராணுவ அதிரடிச் சோதனைகளில் மற்றும் பல்லூஜாவில் கைது செய்யப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை பிரகடனப்படுத்திய பின்னர் அமெரிக்காவிற்குள்ளேயே கைது செய்யப்படுபவர்களுக்கும் பொருந்தும். அபு கிரைப் சிறையில் ஈராக்கிய கைதிகள் சந்தித்த நடத்தும்விதமானது முன்னர் செப்டம்பர் 11, 2001- ல் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட அரபு மற்றும் முஸ்லீம் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான கொடூரத்திலும் நடந்திருக்கிறது. செப்டம்பர் 11-ற்கு பின்னர் புலன் விசாரணையில் சித்தரவதை மற்றும் கொடூரமான நடைமுறைகள் பின்பற்றப்படுவது தொடர்பாக அமெரிக்க ஊடகங்களில் நிலையான கருத்தாக இருந்துவருகின்றது. காலனி ஆதிக்கத்தின் வெளிப்பாடு புஷ், பென்டகன், மற்றும் அமெரிக்க ஊடகங்கள் அபு கிரைப் கொடுமை தொடர்பாக செயற்கையான ஆவேசத்தை வெளிப்படுத்தியிருப்பது வியப்பிற்குரியதல்ல. அது தற்செயலாக நடந்துவிட்டதல்ல, ஈராக் படையெடுப்பில் அடிப்படை குற்றவியல் தன்மையை தார்மீக அடிப்படையில் ஏகாதிபத்திய சூறையாடும் போக்கை வெளிப்படுத்துகின்ற செயலாகும். அமெரிக்காவிற்கு எந்த வகையிலும் மிரட்டலாக செயல்படாத ஒரு நாட்டின் மீது எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல், அமெரிக்க அரசாங்கம் ஆக்கிரமிப்புப்போரை தொடங்கியது. அந்நாட்டின் எண்ணெய் வளத்தை கைப்பற்றி அந்த நாட்டின் மூலோபாய அமைப்பை பயன்படுத்தி மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் அமெரிக்க அதிகாரத்தை முன்னிலைப்படுத்தவும், அப்படி நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் புஷ் நிர்வாகத்தின் முன்னணி நபர்களான காப்பொரேட் சாகாக்களை செல்வம் கொழிக்க வைக்க, ஹாலிபர்டனிலிருந்து பெக்டெல் வரை மற்றும் பல்வேறு கூலிப்படை நியமன கம்பனிகளை கொழுக்க வைப்பதற்காக போருக்கு பிந்திய பில்லியன்கணக்கன டாலர்கள் ஒப்பந்தம் கொடுப்பதற்காக இந்த கிரிமினல் நடவடிக்கையை புஷ் நிர்வாகம் மேற்கொண்டது. இத்தகைய நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் என்னவென்றால் சூறையாடப்படும் இயற்கை வளங்களைக் கொண்ட நாட்டில் வாழ்கின்ற 'தரம் குறைந்த' மக்கள் மீது காலனி ஆதிக்க இனவெறி அணுகுமுறையோடுதான் இந்த ஆக்கிரமிப்புப்படைகள் நடந்து கொள்ளும். கடலுக்குள் மூழ்கியுள்ள பனிமலையின் முகடுதான் அபு கிரைப் வெளிப்பாடு, தினசரி அதைவிட படுமோசமான அட்டூழியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வாரம் ஏற்கனவே CBS மற்றும் நியூயோர்க்கர் இதழ் வெளியிட்ட செய்திகளை தொடர்ந்து, அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் காவலில் இருந்த குறைந்த பட்சம் 25- ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் கைதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. ஒரு அமெரிக்க போர்வீரர் அல்லது CIA புலன்விசாரணை அதிகாரி மீதுகூட வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை, ஒரு சிலர் மட்டுமே கண்டிக்கப்பட்டுள்ளனர். புதன் அன்று அபு கிரைப் சிறைச்சாலைக்கு நிருபர்கள் குழு ஒன்று சென்றது, அப்போது கைதிகளின் வெளிப்படையான கண்டனங்கள் வெடித்தன. தாங்கள் முறைகேடாக நடத்தப்படுவது குறித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன என்பது அவர்களில் பலருக்குத் தெரியும். புஷ்-ற்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கும் எதிராக அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். சிலர் தங்களது ஊன்றுகோல்களையும் செயற்கை உறுப்புக்களையும் நிருபர்களுக்கு காட்டினர். தங்கள் மீது குற்றம் சாட்டப்படுவதைப்போல் ஆபத்தான கொரில்லா போராளிகள் அல்ல என்றும் முழக்கமிட்டனர். நிருபர்கள் குழுவை அழைத்துச் சென்ற இராணுவ அதிகாரிகள் அவர்களை உடனடியாக கூச்சல் கேட்காத இடத்திற்கு கூட்டிச்சென்று விட்டனர். அபு கிரைப் மற்றும் இதர ஈராக் காவல் முகாம்களில் கைதிகள் முறைகேடாக நடத்தப்படுவது குறித்து புகைப்படங்கள் ஏராளமாக அம்பலத்திற்கு வந்துள்ளன. இவற்றில் வாஷிங்டன் போஸ்ட் 1,000-க்கு மேற்பட்ட டிஜிட்டல் நிழற்படங்களைப் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் சில நிழற்படங்கள் இறந்துவிட்ட ஈராக் கைதிகளின் உடல்களை காட்டுகின்றன. வேறுசில படங்களில் சிதைந்துவிட்ட விலங்குகளின் சடலங்களுக்கு முன்னர் போர்வீரர்கள் நிற்பதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. இன்னும் கொடூரமான படங்கள் மேலும் வரக்கூடும். செனட் புலனாய்வுக்குழு கூட்டத்தில் விவரங்களை புதன்கிழமையன்று தெரிவித்த பின்னர் கலிபோர்னியா ஜனநாயகக் கட்சியை சேர்ந்த Dianne Feinstein திட்டவட்டமாக எதையும் கூற மறுத்துவிட்டார். ஆனால் பத்திரிகையாளருக்கு பேட்டியளிக்கும்போது ''என்னை மிக மோசமாக வருத்துகின்ற சம்பவங்களை நான் அறிந்திருக்கிறேன், அதுதான் நான் இப்போது சொல்ல முடியும்'' என்று குறிப்பிட்டார். இதற்கிடையில் அமெரிக்காவில் பொதுமக்களது கவனம் சித்தரவதை தொடர்பான தகவல்கள் அம்பலப்பட்டதில் ஊன்றி சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், அமெரிக்க இராணுவம் ஒவ்வொரு நாளும் ஈராக்கியரை டசின் கணக்கில் தொடர்ந்து கொன்றுகுவித்துக் கொண்டிருக்கிறது. தெற்கு ஈராக்கில் ஷியைட் மதத்தலைவர் மொக்தாதா சதருக்கு விசுவாசமாகவுள்ள கிளர்ச்சிக்காரர்கள் வசமிருந்த நிலைகளைப் பிடிப்பதற்காக அமெரிக்க இராணுவம் தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. ஷியாக்களின் புனித நகரான நஜாப் புறநகர்களில் புதனன்று நடைபெற்ற சண்டையில் டசின் கணக்கில் மக்கள் மடிந்திருக்கின்றனர், பலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்கப்படைகள் டாங்கிகள் ஹெலிகாப்டர் குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் இதர கனரக ஆயுதங்களைக் கொண்டு, விமானத் தாக்குதல் ஆதரவோடு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈராக்கும் 2004- தேர்தல்களும் புஷ்-ஐ பின்பற்றி காங்கிரஸின் ஜனநாயகக் கட்சிக்காரர்களும் ஈராக் கைதிகள் முறைகேடாக நடத்தப்பட்டதை பற்றி அதிகம் வருந்தவில்லை, ஆனால் அந்தச்செய்தி அம்பலத்திற்கு வந்தது குறித்து அதிகம் வருந்துகின்றனர். ஏனென்றால் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை நலன்களுக்கு அதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று. சபையின் சிறுபான்மைத் தலைவர் நான்சி பெலோசி, ரம்ஸ்பெல்ட் ராஜிநாமா செய்யவேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருக்கிறார். அவருடன் அயோவாவைச்சேர்ந்த செனட்டர் டோம் ஹார்க்கின் வெளியுறவுகள் குழு, மூத்த ஜனநாயகக் கட்சி செனட்டர் டிவேவேரை சேர்ந்த ஜோசப் பிடென் ஆகியோரும் இந்தக் கோரிக்கையை ஆதரித்திருக்கின்றனர். இதில் மிக மோசமான பங்களிப்பை செய்து கொண்டிருப்பவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவிருக்கும், மசாசூசெட்ஸ் செனட்டர் ஜான் கெர்ரி ஆகும். இந்த நெருக்கடி தோன்றுகின்ற காலத்தில் ஏறத்தாழ மூன்று வாரங்கள் வரை அவர் மூச்சுவிடாமல் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்காமல் காலத்தைக்கடத்தினார். புதனன்று அபு கிரைப் தொடர்பாக தனது முதலாவது பகிரங்க விமர்சனத்தை வெளியிட்டார். ''தற்போது உலகம் முழுவதும் அறிந்திருக்கும் படுபயங்கரமான ஈராக் கைதிகள் முறைகேடாக நடத்தப்பட்டது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, மற்றும் மன்னிக்க முடியாதது. அதற்கு நிர்வாகத் தரப்பில் நிச்சயமாக பென்டகன் தரப்பில் வந்திருக்கும் பதில் மிக தாமதமானது, பொருத்தமற்றது'' என்று அவர் கூறினார். ''இது தனித்து நடைபெற்ற சம்பவமா? இது சங்கிலித்தொடர்போல், இராணுவ தலைமை வரை செல்கிறதா? யாருக்குத் தெரியும்? என்ன தெரியும்? எப்போது தெரியும்? என்று மற்ற அமெரிக்கர்களைப்போல் நானும் அறிய விரும்புகிறேன். இந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறப்பட்டாக வேண்டும். நான் என் விருப்பதிற்கு இதில் பதிலளிக்க விரும்பவில்லை'' என்று கெர்ரி மேலும் கூறினார். அபு கிரைப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிறைகாவலர்களின் செயல்களுக்கு புஷ் மன்னிப்புக்கேட்க வேண்டுமா என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு நேரடியாக பதில் கூறாமல் கெர்ரி தவிர்த்தார். அதற்குப்பின்னர் தனது உண்மையான கவலையை வெளிப்படுத்தினார்: பாக்தாத் சிறையில் நடைபெற்ற குற்றங்கள் அம்பலத்திற்கு வந்திருப்பது அமெரிக்காவின் போர் முயற்சிகளை சீர்குலைத்துவிடும். ''அமெரிக்காவிற்கும், அமெரிக்கர்களுக்கும் எதிரான பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கும்'' என்று கூறியுள்ளார். இப்படி பரிதாபகரமான கெர்ரி பதிலளித்து இருப்பது ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை நிலைநாட்ட வேண்டுமென்ற புஷ் நிர்வாகத்தின் கொள்கைக்கு அவரது அடிப்படை உடன்பாட்டை காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஈராக்கிற்கு கூடுதல் துருப்புக்களை அனுப்பவேண்டும் என்று கெர்ரி பகிரங்கமாக அழைப்பு விடுத்தார் மற்றும் ஈராக் நடவடிக்கை வெற்றி பெறுவதற்கு தேவைப்படும் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அதற்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஈராக் போர் அமெரிக்கா மற்றும் ஈராக் மக்களுக்கு எதிராக தீட்டப்பட்ட கிரிமினல் சதித்திட்டமாகும். ஈராக் மீது படையெடுத்து அந்த நாட்டை முறியடிப்பதற்காக நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை தியாகம் செய்ய கோரப்படுவதும், பல்லாயிரக்கணக்கான இளம் போர்வீரர்களை பீரங்கி ரவைகளாக ஆக்குவதற்கு தியாகம் செய்வதும், அமெரிக்காவில் உள்ள உழைக்கும் மக்கள்தான். (புதன் கிழமையன்று புஷ் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை ஊடகங்களில் சரியாக எடுத்துக்காட்டப்படவில்லை. புஷ் நிர்வாகம் மேலும் ஈராக் ஆக்கிரமிப்பை இந்த கோடைகாலம் வரை நீடிப்பதற்கு மேலும் 25- பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீட்டை கோரியிருக்கிறது. அதே நேரத்தில் பென்டகன் 1,38,000- அமெரிக்கத் துருப்புக்களை 2005-வரை ஈராக்கில் வைத்திருப்பதற்கான திட்டத்தையும் வெளியிட்டிருக்கிறது. இந்த படைபலம் இதற்கு முன்னர் திட்டமிடப்பட்டதைவிட இரண்டு மடங்கிற்கும் மேற்பட்டதாகும்.) கோடிக்கணக்கான அமெரிக்க உழைக்கும் மக்கள் ஈராக் ஆக்கரமிப்பை எதிர்க்கின்றனர் மற்றும் போருக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எல்லா அமெரிக்க துருப்புக்களையும் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் அவர்களது கருத்துக்கள் 2004-தேர்தலில் அதிகாரபூர்வமான பொது விவாதத்திலிருந்து முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டுவிட்டது. இது 2004-ல் அமெரிக்க மக்களை எதிர் நோக்கியுள்ள மிக முக்கியமான பிரச்சனையாகும். இதற்கு இரண்டு கட்சி அமைப்பு முறையில் இரண்டு போர் ஆதரவு வேட்பாளர்களை புஷ் மற்றும் கெர்ரி -ஐ அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெற்றிக்கு மாற்று மருந்துகளாக முன்னிறுத்தியுள்ளன. சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்களான பில் வான் ஓகென்-ம், ஜிம் லோரன்ஸ்-ம் மட்டுமே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியாக நிற்கின்றனர். புஷ்-ன் ஈராக் சித்திரவதை நடவடிக்கையிலிருந்து ஈராக் மக்களை விடுவிப்பதற்கு புஷ் நிர்வாகம் திணித்துள்ள புதிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்கு திட்டவட்டமாக நிற்கின்றனர். உடனடியாகவும், எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமலும் அனைத்து அமெரிக்க துருப்புக்களையும் விலக்கிக்கொள்ள வேண்டுமென்றும் ஈராக்கில் கிரிமினல் ஆக்கிரமிப்பிற்கு பொறுப்பான அனைவரையும் தண்டிக்க வேண்டுமென்றும் நாங்கள் கோருகிறோம். இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்ற அனைவரும் முன்வந்து சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை வாக்குப்பதிவுச் சீட்டில் இடம்பெறச் செய்வதற்கும் முடிந்தவரை பரவலாக எங்களது வேலைத்திட்டத்தை பரப்புவதற்கும் உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். |