World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக் US faces ongoing Shiite uprising in southern Iraq தெற்கு ஈராக்கில் ஷியைட்டுக்களின் எழுச்சியை அமெரிக்கா எதிர்கொள்ளுகிறது By James Conachy பல்லூஜா நகரத்தில் எதிர்ப்புப் போராளிகளை எதிர்கொள்ளாமல் கடற்படையின் நிலப்படைப் பிரிவினர் (மரைன்கள்) பின் வாங்கியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் ஏப்ரல் 4ம் தேதி, 31 வயது சமயகுருவான மொக்தாதா அல் சதரின் தலைமையில் வெளிப்பட்டுள்ள ஷியைட்டுக்களின் எழுச்சியை அடக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் பத்து நாட்கள் சண்டை நடந்தபின்னர், இந்த வாரம் வரை தெற்கு ஈராக் ஓரளவு அமைதியாக இருந்தது. பல பெரிய நகரங்களில் இரு புறத்துக்கும் கடுமையான முறுகல் நிலை இருந்தது; அல் சதரின் விசுவாசிகளின் கட்டுப்பாட்டில் சில பகுதிகளும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் சில பகுதிகளும் இருந்தன. சதரும் அவரைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானவர்களும், ஷியா முஸ்லிம்களின் மிகப்புனிதமான தொழுகையிடம் இமன் அலி மசூதிக்கு அருகில், ஷியைட்டுக்களின் புனிதத் தலமான நஜப் நகரத்தில், தங்களுடைய அரண்களை அமைத்துக் கொண்டுள்ளனர். ஷியைட் தலைவர்கள் புனித இடத்திற்கு அமெரிக்கத் தாக்குதலினால் ஏதேனும் ஊறு விளையுமானால், இன்னும் பெரிய எழுச்சி ஏற்படும் என்று எச்சரித்திருக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் நகரத்தில் நுழையும் முயற்சிகளில் இதுகாறும் ஈடுபடவில்லை. இப்பொழுது அமெரிக்கப் படைகளுக்கும் சதரின் மாதி இராணுவப் போராளிகளுக்கும் இடையேயான சண்டைகள் பெருகிய வண்ணம் உள்ளன. முந்தைய தினம் பெரும் ஈராக்கிய குண்டு வீச்சிற்கு இலக்காகியபின்னர், செவ்வாய் இரவு, 450 அமெரிக்க, போலந்து, பல்கேரியத் துருப்புக்கள் பீரங்கிவண்டிகள், பிராட்லி போர் உந்துகள், ஹெலிகாப்டர் குண்டுத்தாக்குதல் பிரிவு இவற்றைக் கொண்டு நள்ளிரவில் கார்பலாவின் தென் மேற்குப் புறநகரப்பகுதிகளில் ஒரு தாக்குதலை நடத்தினர். முதல்தடவையாக, ஷியாக்களின் மற்ற முக்கிய புனித தலங்கள் நிறைந்துள்ள நகரத்தின் தெருக்களில் அமெரிக்கப் படைகள் கனரகத் துப்பாக்கிகளையும், பீரங்கித் தாக்குதலையும் மேற்கொண்டன. போராளிகளால் கைப்பற்றப்பட்டிருந்த ஓர் அரசாங்க அலுவலகம், வெடிமருந்துக் கிடங்காகப் பயன்படுத்துவந்தது, இது அமெரிக்க ஹெலிகாப்டர் பீரங்கியால் தாக்கப்பட்டு, பின்னர் டாங்கின் குண்டுவீச்சினால் தகர்க்கப்பட்டது. இதில் குறைந்தது 10 ஈராக்கிய போராளிகளாவது கொல்லப்பட்டிருப்பர் என்று அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. ஈராக்கியர் ஒருவர் பழைய வண்டியைக் கொண்டு அமெரிக்க சாலைத்தடையை உடைத்து வர முற்பட்டபோது ஒரு அமெரிக்க படையாள் கொல்லப்பட்டார். நஜாப் நகரத்தின் கிழக்கிலிருக்கும் டிவானியாவில் உள்ள சதரின் ஆதரவாளர்கள்மீதும் செவ்வாய் இரவு ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. போராளிகளால் கைப்பற்றப்பட்டிருந்த சில கட்டிடங்களைக் கைப்பற்றும் முயற்சியில் நடந்த கடும் போரை ஒட்டி, மூன்று அமெரிக்க படையினரும், குறைந்தது ஒன்பது ஆயுதம் தாங்கிய ஈராக்கியர்களும் கொல்லப்பட்டனர். ஓர் உள்ளூர் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் குறைந்தது ஐந்து சாதாரண குடிமக்களாவது கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்றும் தெரிவித்தார். நஜாப் நகரத்தில், ஸ்பெயின் நாட்டினர் முன்பு குடியிருந்த அலுவலகக் கட்டிடத்தை, 200 அமெரிக்கப் படையினர் எடுத்துக் கொண்டிருந்தனர்; திங்கள் அன்று தீவிரச்சோதனையை அவர்கள் மேற்கொண்ட பின்னர் இங்கு கடுமையான சண்டை நிகழ்ந்தது. அமெரிக்கப் படைகள் முற்றிலும் நகரத்தைவிட்டு அகலவேண்டும் என்ற முயற்சியில் ஷியைட் போராளிகள் இக்கட்டிடத்தின் அடித்தளத்தை தொடர்ந்து மோட்டார் குண்டுகளால் தாக்கி வந்தனர். நஜாப்பில் இருந்து ஐந்து மைல் தூரத்திலேயே இருக்கும், அல் சதரின் சொந்த ஊரான குபாவிலும் போர் மூண்டது. அமாரா, பாஸ்ரா ஆகிய இடங்களில் நிலைகொண்டுள்ள பிரிட்டிஷ், அமெரிக்கப் படைகளும் கடந்த வாரம் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர். மேலைநாட்டு செய்தி ஊடகத்தில் குறைந்த அளவே செய்திக் கவனிப்பை பெற்ற போதிலும், மிகக் கடுமையான இராணுவ நடவடிக்கைகள் பாக்தாதிலும் நடைபெற்று வருகின்றன என்று தோன்றுகிறது. தலைநகரத்தின், கிழக்கு, வடக்கு மற்றும் மேற்குப்புற புறநகரப்பகுதிகள் அமெரிக்கப் படைகளுக்கும் சதருடைய ஷியைட் போராளிகள் அல்லது சுன்னி முஸ்லிம் கொரில்லா குழுக்கள் இவர்களுக்கிடையே தொடர்ந்து சண்டைகள் நடக்கும் களங்களாகத்தான் இருக்கின்றன. நகரத்தின் மிகுந்த அடக்கப்பட்ட பகுதி, அல் சதரின் தகப்பனாரின் பெயரில் அழைக்கப்படும், சதர் நகரம் எனப்படும் ஷியா புறநகர்ப்பகுதி தொழிலாள வர்க்க வசிப்பிடம், பெரிய கவசக் காப்பு உடைய தொடர் இராணுவ வண்டிகளை தவிர, கிட்டத்தட்ட அமெரிக்க இராணுவத்தினர் நுழைய முடியாத இடமாகும். எதிர்ப்பாளர்களின் தாக்குதல்களினால் அமெரிக்கப் படைகள் பாக்தாதில் தொடர்ந்த இழப்புக்களைக் கொண்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமையன்று, தலைநகரத்தின் வடமேற்கில் ஒரு சாலையோர குண்டுவீச்சினால் இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். திங்கட் கிழமையன்று ஓர் ஆயுதக் கிடங்கின் வெளியே காவல் புரிந்து வந்த அமெரிக்கப் படையாள் கொல்லப்பட்டார், இருவர் காயமுற்றனர். பாக்தாத் விமானநிலையத்தில் வந்திறங்கும் விமானத்தை எதிர்ப்பாளர்கள் சுடுவதற்கு எதிராக தரையிலிருந்து இயங்கும் பீரங்கிப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இடைக்கால கூட்டணி நிர்வாகத்தின் மிகச் சமீபத்திய அறிவிப்பின்படி, பாக்தாதில், கொரில்லா எதிர்ப்புக்களை அடக்கும் நடவடிக்கைகளில், 430 ரோந்துப் பணிகள் செவ்வாய்க்கிழமை மட்டும் மேற்கொள்ளப்பட்டன. குறைந்தது 2005 கடைசி வரையிலாவது 138,000 அமெரிக்கப் படையினராவது ஈராக்கில் நிறுத்திவைக்கப்படுவர் என்று கடந்த வாரம் வந்த அறிவிப்பின் மூலம், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஈராக்கில் எந்த அளவிற்கு மக்கள் ஆயுதமேந்திய எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர் என்ற உண்மையை புலப்படுத்துகிறது. ஈராக்கில் இருக்கும் படைகளின் எண்ணிக்கையை 105,000 ஆகக் குறைக்கும் முறையில், நான்கு மாதங்களுக்கும் குறைவான காலம் முன்னர்தான், ஒரு சுழற்சித்திட்டத்தை அமெரிக்க இராணுவம் அறிமுகப்படுத்தியிருந்தது. இத்திட்டம் இப்பொழுது முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டது. வாஷிங்டன், குறைந்தது இன்னும் 4,000 வீரர்களையாவது அனுப்பிவைக்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறதாகக் கூறப்படுகிறது. ஒரு மாதகாலம் நீடித்திருந்த பல்லூஜா முற்றுகையை எவ்வாறு முடிவிற்குக் கொண்டு வருவது என்ற கவலை எதிர்நோக்கியதைவிடக் கூடுதலான நிர்ணயிக்க முடியாத சங்கடத்தில்தான் இப்பொழுது நஜாப்பின் மீது தாக்குதல் நடத்துவது பற்றி புஷ் நிர்வாகம் சிந்திக்கவேண்டியதாக உள்ளது. ஷியைட்டுக்களின் மிகப்புனிதமான நகரத்தின்மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்துவது என்பது ஈராக்கிலும், மத்திய கிழக்கிலும் மகத்தான சீற்றத்தின் வெளிப்பாட்டை ஏற்படுத்தி கணிக்கமுடியாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அமெரிக்க இராணுவத்தின் சார்பில் சதர் எழுச்சிகளை அடக்க உதவும் வகையில் செயல்படுமாறு, ஷியைட் பொறுப்பாளர்களை வலியுறுத்தும் வகையில், திரைக்குப் பின்பான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது போலவும் தெரிகிறது. அதிலும் குறிப்பாக, புஷ் நிர்வாகம், மிகவும் முக்கியமான ஷியைட்டுகளின் சமயவழிகாட்டியான அலி அல் சிஸ்தானி, மற்றும் இடைக்கால ஈராக்கிய கைப்பொம்மை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள, ஈரானிய ஆதரவுபெற்ற (Supreme Council for the Islamic Revolution in Iraq) (SCIFI) ஈராக்கின் இஸ்லாமிய புரட்சித் தலைமைக் குழுவின் 10,000 பேர் அடங்கிய பதர் போர்ப்பிரிவையும் ஒத்துழைக்குமாறு கேட்டுள்ளது. ஈராக்கை அமெரிக்க ஆட்சியில் இருந்து விடுவிப்பதற்காக ஆயுதமேந்திய போராட்டத்திற்கான அழைப்புக்களுக்கு சிஸ்தானி, SCIFI மற்றும் வேறு ஒரு ஷியைட் கட்சியான அல்-தாவா ஆகியவை ஆதரவைக் கொடுக்கவில்லை. கடந்த சில வாரங்களில், சதரை தன்னுடைய எழுச்சியைக் கைவிட்டு, போராளிகள் பிரிவைக் கலைத்துவிடும் கோரிக்கைகளை அவை வலியுறுத்தி வருகின்றன. இதற்கு ஈடாக அவர்கள் ஒரு முழு இறைமை படைத்த ஈராக்கிய அரசாங்கம் ஏற்படும் வரை, போட்டி ஷியைட் சமயவழிகாட்டி ஒருவரைக் கொலை செய்ததாக அமெரிக்கா கூறும் குற்றங்களுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார் என்ற வெற்று உறுதிமொழியை தரத்தயாராக இருக்கின்றனர். செவ்வாயன்று, SCIRI, அல்-தவா மற்றும் உள்ளூர் நஜாப் வணிக, பழங்குடிக் குழுக்கள் இவற்றிலிருந்து 100 பிரதிநிதிகள், அமெரிக்கா ஷியாக்களின் புனித இடங்கள் அருகே படைகளை அனுப்பக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தி அறிக்கை விட்ட அதேவேளை, சதரும் தன்னுடைய போராளிகளை, நஜாப், குபா முதலிய இடங்களில் உள்ள மசூதிகள், புனித இடங்கள் இவற்றைச் சுற்றிய பகுதிகளில் இருந்து திருப்பப் பெறவேண்டும் என்றும், தன்னுடைய போராளிகளின் ஆயுதங்கள் முழுவதையும் அப்பகுதியில் திருப்பப்பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால், அது ஈராக்கியப் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபடுவதற்கு எளிதாகும் என்றும் கூறியுள்ளனர். நகரைச்சுற்றி 2,500 அமெரிக்கப் படைகள் பீரங்கிகளுடனும், விமான ஆதரவுடனும் இருக்கும் நிலையில், இது கிட்டத்தட்ட சதர் அமெரிக்கப் படைகளிடம் தன்னுடைய போராளிகளுடன் சரணடைய வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பாகும். சிஸ்தானி, SCIRI, மற்றும் அல்-தவாவின் கோரிக்கையின் பின்னணியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஓர் உடன்பாடு காணவேண்டும் என்ற பெருவிருப்பமும், அதையொட்டி ஆக்கிரமிப்பின் ஆதரவில் நடக்கும் ஆட்சியில் தங்களுக்குக் கூடுதலான ஆதிக்க நிலை இவற்றைப் பெறவேண்டும் என்ற கருத்தையும் கொண்டுள்ளது. இந்த பேரத்தை அடைவதற்காக, ஷியைட் அமைப்பு, சதரையும், ஆயுதமேந்திய ஷியைட்டுக்களின் இளைஞர்களையும் காட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிறது போல் தோன்றுகிறது. நியூ யோர்க் டைம்ஸின் கூற்றின்படி, ஒரு நஜாப் பழங்குடித் தலைவர் செவ்வாய்க் கிழமை நடந்த கூட்டத்தில் தெரிவித்ததாவது: "அமெரிக்கர்கள் புனித இடத்திற்குச் செல்லவேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் குற்றவாளிகளையும், திருடர்களையும் அகற்றுவதற்குத்தான் முயற்சிக்கின்றனர். எனவே அவர்கள் நகரில் நுழைந்தால் என்ன தவறு?" டைம்ஸ் நிருபர் இந்தக் கேள்விக்குக் கூட்டத்தில் பலரும், "ஆம், ஆம், அதனால் என்ன" என்று இணக்கம் தெரிவித்ததாகவும் எழுதியுள்ளார். பல்லுஜா முறை போலவே, மற்ற ஷியாக்கள் பிரிவு, புனித நகரத்தில் மஹ்தி படைகளை ஆயுதங்களையும் பொறுப்பை ஏற்பதற்குத்தான் சதரின் போராளிகள் நஜாப் நகரத்திற்கு வெளியே தாக்குதலுக்குட்படுத்தப்படுகின்றனர் என்றும், ஷியாக்களின் எழுச்சி இதையொட்டி முடிந்துவிடும் என்ற ஒரு மூலோபாயத்தை புஷ் நிர்வாகம் கொண்டுள்ளது. அத்தகைய உடன்பாடு வரும்பொருட்டுத்தான் புஷ் நிர்வாகம் மற்ற பிரிவுகளை நம்பவைக்க முயன்று வருகிறது. இதை எளிதாக்கும் வகையில், ஷியா சமயகுருமார்களின் படிமுறை அமைப்பு ஒரு சமரசத்தைக் காணலாம் என்ற குறிப்பைக் கொடுத்ததுடன், புஷ் நிர்வாகம், அது சதரைக் "கொல்லும்" விருப்பத்தை அறிவிப்பதையும் நிறுத்தி விட்டது. அரேபிய நிலையமான அல் அரேபியாவிடம் புஷ், "மிகப் புனிதத்திலும், புனிதமான இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அவரை (சதரை), ஈராக்கிய மக்களே தக்க முறையில் என்ன செய்யவேண்டுமோ, அதைச் செய்வர் என்று நான் நினைக்கிறேன். திருவாளர் சதருக்கு ஈராக்கியர்கள் தக்க விதமாகப் பாடம் புகட்டுவர்" என்று கூறினார். இச்சூழ்நிலையில், தன்னுடைய ஆதரவாளர்களை ஆயுதங்கள் களைய அவர் உத்தரவு இடவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு சதர் பதில் ஏதும் கூறவில்லை. சதருடைய ஆதரவாளர்கள் இடையே, எழுச்சிக்கு ஆதரவு கொடுக்காத ஷியைட் தலைவர்கள் பற்றிய கசப்பு உணர்வின் அடையாளமாக, சிஸ்தானியின் வீரர் ஒருவர் Agence France Presse இடம் தெரிவித்தார்: "சிஸ்தானி தன்னுடைய குளுகுளு வசதி கொண்ட வீட்டிற்குள் உடகார்ந்து கொண்டு அமெரிக்கர்களுக்கு எதிரான போராட்டம் பற்றி ஆதரவு எதும் கூறாமல் இருக்கிறார் என்ற மஹ்தி போராளிகள் சிலர் கூறுகின்றனர்." ஆக்கிரமிப்பிற்கு எதிரான முக்கிய உந்துதல் சக்தியை வாஷிங்டன் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அசட்டை செய்துள்ளது; பெரும்பான்மையான ஈராக்கியர்கள் நாடு ஆக்கிரமிக்கப்பட்டுக் கொள்ளையடிப்பதற்கு எதிர்ப்பைக் கொண்டுள்ளனர் என்பதுதான் அது. இந்த காலனித்துவ- எதிர்ப்பு உணர்வு, பல்லூஜாவிலோ, நஜாப்பிலோ புஷ் நிர்வாகம் மேற்கொள்ளும் எத்தகைய தற்காலிக நடவடிக்கைகளினாலும் மறைந்துவிடப் போவதில்லை. |