ஈராக் சித்ரவதை தொடர்பாக வாஷிங்டனின் போலி நடிப்பு
By Bill Van Auken
5 May 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
தலையில் முக்காடோடு, நிர்வாணமாக அமெரிக்கத் துருப்புக்களால் ஈராக்கியர்கள்
சித்ரவதை செய்யப்பட்டு, பாலியல் முறைகேடுகளுக்கு உட்படுத்தப்படுவது தொடர்பான புகைப்படங்கள் ஈராக்கிலும்,
மத்திய கிழக்கு முழுவதிலும் எதிர்த்தாக்குதலை உருவாக்கக்கூடிய பேரழிவு விளைவுகளை கருத்தில் கொண்டு, அதிகாரபூர்வமாக
வாஷிங்டன் இப்போது பேரச்சமூட்டுவதாக பாசாங்கு செய்திருக்கிறது.
திங்களன்று மிச்சிகன் பத்திரிகையாளரிடம் பேசிய ஜனாதிபதி புஷ் அந்த புகைப்படங்களை
கண்டு தான் ''அதிர்ச்சியடைந்ததாக'' குறிப்பிட்டார். ''அவற்றால் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்'' என்று
பாதுகாப்புத்துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் அறிவித்தார். பாக்தாத்திற்கு வெளியிலுள்ள அபு கிரைப் சிறையில்
ஈராக்கியருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ''அமெரிக்க தனத்துக்கு'' மாற்றானது என்று மேலும்
கூறினார்.
யாரை மோசடி செய்ய நினைத்துக்கொண்டு அவர் அவ்வாறு கூறுகிறார்? புஷ், செனி,
ரம்ஸ் பீல்ட் அவருடைய சகாக்களுக்கு சித்ரவதை என்பது ஆப்பிள் பழம் சாப்பிடுவதைப் போன்றது.
இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, ''எல்லாமே மாறிவிட்ட'' பின்னர் 2001
செப்டம்பர் 11-அன்று, அமெரிக்க அரசியல் ஸ்தாபனம் சித்திரவதையின் நன்னெறி பற்றிய பொது விவாதத்திற்கு
ஊக்குவித்தது. அந்த தலைப்பில் கட்டுரைகளை வெளியிடுவதற்காக ரீம் கணக்கில் காகிதங்களை செலவிட்டார்கள்.
பயங்கரவாதிகள் என சந்தேகத்திற்குரியவர்களை சித்தரவதை செய்ய வேண்டுமா என்பது பற்றி கருத்துக்கணிப்புக்களும்
நடத்தப்பட்டன. ABC-ன்
Ted Koppel
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ''நகர மன்ற'' கூட்டத்தை இந்தத் தலைப்பில் நடத்தினார். அதே நேரத்தில்
ஹார்வர்ட் சட்டப் பேராசிரியர் Alan Dershowitz,
சித்ரவதை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட வேண்டும், சர்வதேச சட்டம் தடைவிதித்துள்ள அந்த நடைமுறையை பின்பற்றுவதற்கு
நீதிமன்றங்கள் ஆணைகளை பிறபிக்கவேண்டுமென்று ஊடகங்களை வற்புறுத்துவதற்காக தனி சுற்றுப்பயணமே செய்தார்.
கியூபாவிலுள்ள குவாண்டனாமோ வளைகுடா சிறை முகாமிலிருந்து, ஆப்கானிஸ்தான்,
பஹ்ராம் விமானத்தளம் வரை மற்றும் பல்வேறு ''இடம் குறிப்பிட்டாத'' பல்வேறு சிறைமுகாம்களை வலைப்பின்னல்
போல் நடத்திவருகின்ற புஷ் நிர்வாகம், சித்ரவதைகளை அமெரிக்க மக்களது கண்ணில்பட்டுவிடக்கூடாது என்பதற்காக,
இந்தப் புகைப்படங்கள் வெளிவராமல் தடுக்க இப்போது இந்த பழக்கப்பட்ட பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.
அமெரிக்க இராணுவம் மற்றும் CIA
இந்த வெளிநாட்டு சிறைகளில் கைதிகளை காவலில் வைத்திருப்பது எந்த சட்ட கட்டுப்பாடுகளையும் தவிர்ப்பதற்காகத்தான்,
மற்றும் இந்தக் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை எந்த நீதிமன்றமும் மேற்பார்வையிட்டு விடக்கூடாது,
குற்றத்தை நிரூபிப்பதற்கு எந்த அவசியமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். அபு கிரைப்பில் நடைபெற்றது
கண்டுபிடிக்க பட்டிருப்பதானது இன்னும் படுமோசமாக இதுபோன்ற முகாம்களில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை
நம்புவதற்கு எல்லாவிதமான அடிப்படையும் உண்டு.
செவ்வாயன்று ரெய்டர்சுக்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராணுவ அதிகாரிகள்,
அமெரிக்க இராணுவம் காவலில் வைத்திருக்கும் கைதிகளில் குறைந்த பட்சம் 25-பேர் மடிந்துவிட்டதாக கூறினர்.
இவற்றில் சில சாவுகள் சித்ரவதையின் விளைவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வழக்கில், சிவிலியன்
ஒப்பந்தக்காரர் (Contractor)
ஒருவர் ஈராக் சிறையில் விசாரணை செய்த ஒரு கைதியை கொன்றிருக்கிறார். அவரை இராணுவக்கட்டுப்பாடோ
அல்லது ஈராக் சட்டமோ கட்டுப்படுத்த முடியாததால் அந்த கூலிப்படையைச் சேர்ந்தவர்களுக்கு எந்தவிதமான
தண்டனையும் விதிக்கப்படவில்லை.
தனது சொந்த நடவடிக்கைள் தவிர, வாஷிங்டன் தனது சித்ரவதை நடவடிக்கைளை
ஒப்பந்தமுறை மூலமும் நிறைவேற்றிவருகிறது. அதை மிக எச்சரிக்கையுடன் ''ஒப்படைத்தல்'' (Rendering)
என்று அழைக்கிறார்கள். அமெரிக்கா கைது செய்பவர்களை இதன் மூலம் எகிப்து, பாக்கிஸ்தான்,
உஸ்பெக்கிஸ்தான், சிரியா மற்றும் இதர நாடுகளிடம் ஒப்படைத்து, உள்ளூர் போலீசாரால் கைதிகளை சித்ரவதை
செய்கிறார்கள், அப்போது அடிக்கடி அமெரிக்க விசாரணை அதிகாரிகள் உடனிருக்கின்றனர்.
அமெரிக்க சித்ரவதை தொடர்பாக சமீபத்திய அவதூறு விளைவுகள் ஏற்படுவதற்கு
வரலாற்று முன்மாதிரிகள் உண்டு. அமெரிக்கா பல தசாப்தங்களாக சித்ரவதை செய்தும், மற்றவர்களுக்கு
பயிற்சியளிப்பதையும் நடைமுறையில் கடைபிடித்து வருகிறது. வியட்நாமில், அமெரிக்கா கைது செய்த
ஆயிரக்கணக்கானோர் படுமோசமான ''புலிச் சிறைச்சாலையில்'' சித்ரவதை செய்யப்பட்டு மாண்டனர். லத்தீன்
அமெரிக்காவில் அமெரிக்கா ஆதரவு சர்வாதிகாரிகள் வழக்கமாக அரசியல் கைதிகளை சித்ரவதை செய்தனர்.
இந்த சித்ரவதை நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களில் பலர் அமெரிக்க அதிகாரிகளால்
பயிற்றுவிக்கப்பட்டவர்கள். ஈரான் மன்னர் ஷா பயன்படுத்திய படுமோசமான
SAVAK இரகசிய
போலீஸ் அதே போன்று CIA
யினால் உருவாக்கப்பட்டது. 1979ல் ஈரானியப் புரட்சி நடந்த பின்னர்,
CIA தலைமை
அலுவலகத்தில் எப்படி பெண்களை சித்ரவதை செய்வது என்பதுபற்றிய குறிப்பு உட்பட அமெரிக்கா சித்ரவதை
பயிற்சிக்கு பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1980-களில் மத்திய அமெரிக்காவில் வாஷிங்டன் நடத்திய கறைப்படிந்த போர்களில்
இத்தக் கொடூரமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. அந்தக் காலத்தில் ஹோண்டுராஸின் அமெரிக்க தூதராக
பணியாற்றி வந்த ஜோன் நெக்ரோபொன்ட், நிகரகுவாவிற்கு எதிரான, கான்ட்ரா பயங்கரவாதம் மற்றும்
ஹோண்டுராஸில் கொலைக் குழுக்கள் நடத்திய கொலைகள் ஆகியவற்றோடு நெருக்கமாக தொடர்பு
கொண்டிருந்தவர் ஆவார். எனவே அந்த நெக்ரோபொன்ட் தற்போது ஈராக்கில் அமெரிக்கத் தூதராக/
ஆளுநராக (Proconsul)
நியமிக்கப்பட்டிருப்பது தற்செயலாக நடந்துவிட்ட நிகழ்ச்சியல்ல.
ஈராக் பாதுகாப்புப் படைகளுக்கு தற்போது அமெரிக்க ஆலோசகராக பணியாற்றி
வரும் ஜேம்ஸ் ஸ்டீல் அதேபோன்று அக்காலத்து அனுபவமுள்ளவர். எல்சால்வடோரில் 1985-ம் ஆண்டு அமெரிக்க
இராணுவத்தின் மிக உயர்தர அதிகாரியாக அவர் இருந்தார், அந்த ஆண்டு அமெரிக்கா ஆதரித்த ஆட்சி 1500-க்கு
மேற்பட்ட குடிமக்களைக் கொன்றது மற்றும் மேலும் பல்லாயிரக்கணக்கானோரை சித்ரவதை செய்தது.
நெக்ரோபொன்டை போன்று அவரும் கான்ட்ராக்களுக்கு நிதியுதவி செய்தது மற்றும் ஆயுதங்கள் வழங்கிய சட்ட
விரோத சதிச் செயலில் உடந்தையாக செயல்பட்டவர்தான்.
அத்தகைய சக்திகள் ஈராக்கில் நடவடிக்கைகளை இயக்கிக்கொண்டிருக்கும்போது அபு
கிரைப் சிறையில் நடைபெற்ற சித்ரவதைகளுக்கு அரை டஜன் படை பிரிவுகள்
(Reservists)
தான் காரணம் என்று சொல்வது மற்றும் அதே அளவிற்கு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருந்தனர்
என்று சொல்வது அப்பட்டமான மூடிமறைக்கும் செயலாகும்.
அபு கிரைப் சிறையில் பாலியல் சித்ரவதையில் ஈடுபட்டு அதில் மகிழ்ச்சியடைந்தவர்கள்
நடத்தை கெட்ட மற்றும் பின்தங்கிய மனிதர்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை. அவர்களது
நடவடிக்கைகள், ஈராக்கில் ஏன் இருக்கிறோம் என்று வியப்படைந்து வரும், முழு அமெரிக்க ஆக்கிரமிப்புப்
படைகளுக்குள்ளே நிலவும் மிகவும் பரந்த விரக்திமனப்பான்மையையும் கூட பிரதிபலிக்கிறது. ஈராக்கில் நடைபெற்ற
சித்ரவதை வழக்கமாக நடப்பதுதான். அமெரிக்காவில் மிகப்பரந்த சிறை வளாகங்களிலும் காவல் நிலையங்களின்
பின்பக்க அறைகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் நடக்கத்தான் செய்கின்றன. ஏகாதிபத்தியம் அத்தகைய
கொடூரங்களின் ஊற்றுக்காலாக வெளிநாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவிற்குள்ளேயே அது நடந்து கொண்டிருக்கின்றது.
இதில் தொடர்ந்து இருக்கும் உண்மை என்னவென்றால், ஈராக்கிற்கு எதிரான சட்ட
விரோதப்போரில் பெரும்பொறுப்பு வகிக்கின்ற சக்திகளால்தான் இந்த கொடு வெறி காம நடவடிக்கைகள்
ஊக்குவிக்கப்பட்டிருக்கின்றன.
நிர்வாக கட்டுப்பாட்டிற்கு புறம்பாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை
சந்திக்கும் உயர் அதிகாரி பிரிகேடியர் படைத் தளபதி
Janis Karpinski அந்த சிறையை மேற்பார்வையிட்டவர்.
ஈராக்கிலுள்ள அனைத்து தரைப்படைகளுக்கும் தளபதி பொறுப்பை வகிக்கும் படைத் தளபதி
Ricardo Sanchez
பதில் சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். அந்த சிறையை இராணுவ புலனாய்வு
அதிகாரிகளிடம் ஒப்படைத்து, பெருகிவரும் எதிர்ப்பு தொடர்பான எந்த தகவலையும் துருவி துருவி விசாரிப்பதற்கு
தேவையான எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம் என்ற முடிவு இராணுவ தலைமையின் தலைமை அதிகாரிகளால்
எடுக்கப்பட்ட முடிவாகும். இப்படி இராணுவத்தலைமை ஒப்புதல் அளித்தபின்னர், அந்தப் புகைப்படங்களில்
காட்டப்பட்டிருப்பது போன்ற கொடு வெறிக் காமம் மற்றும் கொடூர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு இராணுவ
புலனாய்வு துறையினர், படைப் பிரிவுகள்
(Reservists) புலனாய்வை தொடங்குவதற்கு
கட்டளையிட்டார்கள்.
இதற்கிடையில் ஈராக்கின் முன்னாள் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சர் அப்துல்
பசத் துர்க்கி, ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். சென்ற நவம்பரில் ஈராக் கைதிகள் சித்ரவதை செய்யப்படுவதாகவும்
அவர்களை முறைகேடாக நடத்துவதாகவும் தான் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் சிவிலியன் தலைவர் போல்
பிரேமரிடம் தெரிவித்ததாக கருத்து வெளியிட்டார். ''அவர் கேட்டுக்கொண்டிருந்தார் ஆனால் பதிலளிக்கவில்லை''
என்று துர்க்கி கூறினார். அந்த சிறைக்குச் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பல்லூஜா மற்றும் நஜாப்
நகரங்கள் மீது அமெரிக்க இராணுவம் முற்றுகையிட்டபோது, குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டபோது கைப்பொம்மை
அரசாங்கத்திடமிருந்து தனது கண்டனத்தை தெரிவிப்பதற்காக ராஜிநாமா செய்துவிட்டார்.
ஆக, இந்த விவகாரத்தில் அமெரிக்க இராணுவம் மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பு
சிவிலியன் தலைவர்கள் இருவரும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கான
அடிப்படை ஆணை அரசியல் ரீதியில் பொறுப்பானவர்கள் வரை சங்கிலிபோல் நீண்டு கொண்டே போகின்றது.
நிர்வாகத்தின் கண்ணோட்டத்தோடு நெருக்கமான வலதுசாரிக் கண்ணோட்டங்கள்
கொண்ட ேவால் ஸ்ரீட் ஜேர்னல் , திங்களன்று எழுதியுள்ள தலையங்கத்தின் முடிவுரையில், ''ஈராக்கில்
கைது செய்யப்பட்டுள்ள மிகப்பெரும்பாலோரைப் பற்றி அமெரிக்கா மிக சர்வசாதாரணமாக எடுத்துக்
கொண்டுவிட்டார்கள் என்று தெரிகிறது'' என்று முடித்திருக்கிறது.
இதே செய்தி வெள்ளை மாளிகையிலிருந்து மிக அடி மட்டத்திலிருக்கும் படைப் பிரிவுகள்
வரை சென்றிருக்கிறது. ஈராக் மீது நடத்தப்பட்ட படையெடுப்பு பூகோள ''பயங்கரவாதத்தின் மீதான போர்''
என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ''எங்களை ஆதரிக்காவிட்டால், பயங்கரவாதத்தை ஆதரிப்பவன்''
என்று இரண்டில் எதாவது ஒன்றை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் காட்டப்பட்டது.
ஈராக் மக்களில் மிகப்பெரும்பாலோர் தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட
ஆக்கிரமிப்பை எதிர்த்து, பல்லாயிரக்கணக்கானோர் ஆயுதந்தாங்கிய எதிர்ப்பில் ஈடுபட்டிருப்பதால் விரக்தியடைந்த,
நோக்குநிலையற்று இருக்கின்ற துருப்புக்கள் அந்த நாட்டையே பயங்கரவாதிகள் நாடு எனவே அவர்கள் மீது
எடுக்கப்படுகின்ற எந்த வன்முறையும் மிகக்கொடூரமானதல்ல என்ற மனப்பான்மையில் நடந்து கொள்ள
ஊக்குவிக்கப்பட்டிருகின்றனர். ஆக இதன் தவிர்க்க முடியாத முடிவு என்னவென்றால், ஒவ்வொரு காலனித்துவ
போரிலும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்பவர்கள் மீது இன வெறுப்பு அடிப்படையில் இது போன்ற
கொடூரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இதுபோன்ற நடவடிக்கைளின் விளைவு என்னவென்றால் அமெரிக்க ஆக்கிரமிப்பை
முறியடிக்க வேண்டும் என்ற போராட்டத்திற்கு ஆதரவு மிகப்பெருமளவில் திரண்டு வெடிக்க கூடியதாக வளர்ந்து
வருகிறது. இது சம்மந்தமாக டைம் ஏசியாவிற்கு இந்த மாத தொடக்கத்தில் போராளிகள் பிடித்து
வைத்திருந்த ஜப்பான் பிணைக்கைதிகளில் ஒருவரான, ஜப்பான் பத்திரிகையாளர்
Jumpei Yasuda
அளித்துள்ள பேட்டியில், தன்னை பிடித்துவைத்துக் கொண்ட போராளிகளில் ஒருவரோடு நடத்திய உரையாடலை கீழ்க்
கண்டவாறு விளக்கியிருக்கிறார்.
''என்னை நோக்கி துப்பாக்கியை பிடித்திருந்த ஒரு மனிதன் என்னிடம் தான்
சாலையோரத்தில் நடந்துசென்று கொண்டிருந்தபோது, அவர்களது கேள்விக்கு அவர் பதில் சொல்ல முடியாததால்
தன்னை GI
க்கள் கைது செய்தார்கள் என தெரிவித்தார். தான் ஏறத்தாழ ஒரு மாதம்வரை சிறையில் அடைக்கப்பட்டேன்
மற்றும் தன்னை தொடர்ந்து அடித்துக்கொண்டேயிருந்தனர் என்றார். ஒரு நாள் தனிப்பட்ட அறைக்கு அவர்
அழைத்துச் செல்லப்பட்டு அவருடன் பாலியல் முறைகேடுகள் நடத்தப்பட்டன என்றார். அவர் என்னிடத்தில்
கேட்டார், அதே நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று, என்னிடம் அதற்கு பதில் இல்லை''.
ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி உட்பட இந்த சித்ரவதை செய்திகள் பற்றி
ஜனநாயகக் கட்சியிடமிருந்து எந்தவிதமான ஆத்திர வெளிப்பாடும் இல்லை. மாறாக, இது போன்ற குற்றங்கள்
பெருகுவதற்கு காரணமாக அமைந்துவிட்ட ஆக்கிரமிப்பு நீடிக்கவேண்டுமென்று முன்னணி ஜனநாயகக் கட்சித் தலைவர்கள்
மீண்டும் வலியுறுத்துகின்றனர்.
ஜனநாயகக் கட்சிகாரர்களின் ஒரே கவலை என்னவென்றால், இந்த புகைப்படங்கள்
வெளியிடப்பட்டது நெருக்கடியில் சூழப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கையை மேலும் சீர்குலைத்துவிடும் என்பதுதான். குடியரசுக்
கட்சிக்காரர்களைப் போல் அவர்களும் ஈராக் மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபற்றி
கவலைப்படவில்லை, மாறாக ஈராக் மக்களை அடக்கி எண்ணெய் வளங்களை கைப்பற்றி அந்த பிராந்தியத்திலும்
பூகோளம் முழுவதிலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில் தான் கவலை
கொண்டிருக்கின்றனர்.
இராணுவம், காங்கிரஸ் அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் எந்த அங்கமும் ஈராக்கில்
சித்ரவதை மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக கடுமையான புலன்விசாரணையை நடத்தும் என்று நம்புவதற்கு எந்தவிதமான
அடிப்படையும் இல்லை. இந்தப்போரில் ஆளும் ஸ்தாபனங்களின் ஒவ்வொரு அங்கமும் சம்மந்தப்பட்டிருக்கிறது. எனவே
எல்லா அட்டூழியங்களும் அந்த அங்கங்கள் பெற்றெடுத்த பிள்ளைகள்தான். எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு
விரைவாக இந்தப் பிரச்சனையை மூடிமறைத்து விடுவதற்கான திட்டமிட்ட முயற்சி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாஷிங்டன் வகுத்தளிக்கும் கொள்கைகளையும், கட்டளைகளையும் நிறைவேற்றி வருகின்ற சங்கிலித் தொடர்போன்ற
இராணுவ அமைப்புக்களில் அடிமட்டத்தில் இருப்பவர்களை மட்டுமே பொறுப்பு சாட்டுவதற்கும் திட்டமிட்டு முயற்சிகள்
ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.
அபு கிரைப் சிறையில் நடைபெற்ற நடவடிக்கைகள் தவறுகள், மோசமான பயிற்சி
அல்லது தேவையான ஒழுக்கக்கட்டுப்பாடு இல்லாத நிலையால் உருவானது அல்ல. இந்த குற்றகரமான நடவடிக்கைகள்
தவிர்க்க முடியாதவாறு மிகப் பெரிய குற்றமான, ஈராக் மீது படையெடுத்தல் மற்றும் அந்த நாட்டை ஆக்கிரமித்துக்கொள்ளலுக்கான
சதியிலிருந்து பெருக்கெடுக்கின்றன.
Top of page |