World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Marxism and the political economy of Paul Sweezy

Part 4: Monopoly Capital

மார்க்சிசமும், போல் ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்

பகுதி 4: ஏகபோக மூலதனம்

By Nick Beams
9 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

க்கட்டுரை உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவைச் சேர்ந்த, நிக் பீம்ஸ், தீவிர அரசியல் பொருளாதார நிபுணர் போல் ஸ்வீசியின் வாழ்வு, படைப்புக்கள் பற்றி எழுதியுள்ள தொடர் கட்டுரைகளில் நான்காவது ஆகும். போல் ஸ்வீசி Monthly Review இன் நிறுவனர்-ஆசிரியராக இருந்து, 2004 பெப்வரி 27 அன்று நியூயோர்க், லார்ஷ்மன்டில் காலமானார்.

போல் பரனுடன் (Paul Baran) இணைந்து எழுதி 1966ல் வெளியிட்ட அவருடைய ஏகபோக மூலதனம் (Monopoly Capital) என்ற முக்கிய நூலில், ஸ்வீசி 25 ஆண்டுகளுக்கு முன் தான் உட்குறிப்பாக எழுதியிருந்ததை வெளிப்படையாகத் தெரிவித்தார். அவருடைய ஆய்வில் குறைநுகர்வு முக்கிய இடத்தைப் பெற்று இருந்தது; இத்துடன் இலாபவிகித வீழ்ச்சிப் போக்கின் விதியும் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இவ்விதி ஒன்று மட்டும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பங்கு பற்றிய மார்க்சின் ஆய்வும் நிராகரிக்கப்படவேண்டும் என்று ஸ்வீசி வலியுறுத்தினார்.

இந்த நூலின் முன்னுரையில், பெருமந்த நிலைக்குப்பின் முதலாளித்துவப் பொருளாதாரம் பற்றிய முக்கிய அபிவிருத்திகள் பற்றி கவனிக்கத்தவறிய மார்க்சிச தத்துவத்தின் பார்வை என தவறாக வழங்கப்பட்ட கருத்துக்கள் பற்றி சரியான வகையில் எதிர்த்தார். குறிப்பாக போருக்குப் பின் ஏற்பட்டிருந்த செழுமைநிலை பற்றிய ஆய்வு ஏதுமில்லாததை அவர் தாக்கினார். ஆனால், "மார்க்சிச சமூக விஞ்ஞானத்தின் தேக்கம், அதனது உயிர்த்திறத்தின் பின்னடைவு, பலனளிக்காத தன்மை" பற்றி, அதற்கு காரணமான தொழிலாளர்கள் இயக்கத்தை அதிகாரத்துவ ஆளுமைக்குள்ளாக்கியிருந்த ஸ்ராலினிசம் மற்றும் பல முக்கிய மார்க்சிச சிந்தனையாளர்கள் கொலைசெய்யப்பட்டமை, எல்லாவற்றிற்கும் மேலாக லியோன் ட்ரொட்ஸ்கி கொலையுண்டது பற்றிய அடிப்படைகளை ஆராய்வதற்கு பதிலாக, இவர் மார்க்சிசத்தை தற்காலத்திற்கு ஒத்ததாக கொண்டுவரும் முயற்சியில், அதன் மைய அஸ்திவாரங்களையே அகற்ற முற்பட்டார்.

இந்த தேக்கத்தின் புறநிலை, அகநிலைக் காரணங்கள் சிக்கல் வாய்ந்தவை என்று ஸ்வீசி கருதினாலும், அதில் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டு, சரிசெய்யப்பட்டுவிடமுடியும் என்று அவர் நினைத்தார். முதலாளித்துவம் பற்றிய மார்க்சிச ஆய்வு, "இன்னும் போட்டி பொருளாதார ஊகம் பற்றிய இறுதி ஆய்வுகளில் தங்கியிருக்கும்." [15]

குறைந்த அளவில் கருத்துத் தெரிவித்தால் கூட இது ஒரு உருக்குலைந்த கருத்து ஆகும். முதலாளித்துவத்தின் இயக்கவிதிகள் அவற்றை நடைமுறைப்படுத்தும் போட்டியில் (Competition) அடிப்படையைக் கொண்டு இராமல், மூலதனக்குவிப்பில்தான் இருக்கும் என மார்க்ஸ் அடிக்கடி வலியுறுத்தியிருந்தார். மூலதனத்தை முழுமையாக ஆராய்ந்த வகையில், குறிப்பாக உபரி மதிப்பு எவ்வாறு கறந்தெடுக்கப்படுகிறது என்று தன்னுடைய மூலதனத்தின் முதற் பகுதியில் ஆய்ந்த மார்க்ஸ், மூலதனத்தின் மூன்றாம் பகுதியில் அதன் பல கூறுபாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஆராய்ந்திருந்தார்.

மூலதனம், அதன் விஸ்தரிப்பு பற்றிய கருத்து போட்டிக்கு முன்புதான் பகுத்தாயப்படவேண்டும்; ஏனெனில் முதலாளித்துவத்தின்கீழ், போட்டி என்பது மூலதனத்தின் பல கூறுபாடுகளுக்கு இடையே உள்ள மோதல்களின் வடிவில்தான் உள்ளது. இதையே வேறுவிதமாகக் கூறினால், மூலதனத்தை பற்றி ஆராயாமல், மார்க்ஸ் போட்டியை அது முன்னர் இருந்த ஒன்று போல் ஆராயமுடியாது; ஏனெனில் போட்டியையே அந்த ஆய்வின்படிதான் விளக்க இயலும்.

மார்க்சை திரித்துக்கூறுதல்

ஸ்வீசியின் கருத்தின்படி, ஏகபோகத்தைப் பற்றி மார்க்ஸ் நன்கு அறிந்திருந்தபோதிலும், "அவர் ஏகபோகங்களை முதலாளித்துவத்தின் இன்றியமையாத கூறுபாடுகளாக ஆராயவில்லை; மாறாக, நிலப்பிரபுத்துவ, வணிகக் குழுவின் மிச்சசொச்சங்களாகத்தான் கையாண்டார், முதலாளித்துவத்தின் அடிப்படை கட்டமைப்பு, போக்குகள் பற்றிய தெளிவான கருத்தைப் பெறும்பொருட்டு அது அருவமாகக் (ஒன்றுடனும் தொடர்பற்றதாக) கொள்ளப்பட்டிருந்தது."[16] மார்க்ஸ், முதலாளித்துவ பொருளாதாரத்தில் உள்ளியல்பாக இருக்கும் ஒருமுகப்படுத்தலையும், மையப்படுத்தல் தன்மையையும் நன்கு அறிந்திருந்தபோதிலும், பேரளவு நிறுவனங்களாலும் ஏகபோகத்தாலும் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்த முதலாளித்துவ பொருளாதாரத்தின் செயற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்டதே இல்லை என்று ஸ்வீசி தொடர்ந்திருந்தார்.

இந்த வாதம், ஏகபோக மூலதனம் நூலின் முக்கிய தத்துவார்த்த அஸ்திவாரமாக இருந்ததுடன், மார்க்ஸ் கண்டறிந்திருந்த முதலாளித்துவ பொருளாதார விதிகளில், குறிப்பாக இலாபவிகித வீழ்ச்சிப் போக்கு, ஏகபோகத்தை கணக்கில் கொண்டு திருத்தியமைக்கப்படவேண்டும் என்ற இவருடைய வலியுறுத்தலுக்கும் காரணமாயிற்று.

இந்த முழு செயல்முறையும், மார்க்சின் நிலைப்பாடு இவரால் திரித்து கூறப்படுவதைத்தான் காட்டுகிறது. முதலில், 1847 இலேயே, புரூதோனுக்குக் (Proudhon) கூறிய பதிலில், முதலாளித்துவத்தின் கீழ் போட்டியின் உள்ளார்ந்த தர்க்கம் ஏகபோகம் என்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்தினார் என்பதை ஸ்வீசி நன்கு அறிவார்.

"நவீன ஏகபோகம் போட்டிகளால் தோன்றுகிறது என்பதைத்தான் எம். புரூதோன் எப்பொழுதும் பேசுகிறார். ஆனால், நாம் அனைவரும் போட்டி, நிலப்பிரபுத்துவ ஏகபோகத்தாலும் தோன்றுகிறது என்பதை அறிவோம். எனவே போட்டி என்பது முதலில் ஏகபோகத்திற்கு எதிரிடையாக இருந்ததே ஒழிய ஏகபோகம் போட்டிக்கு எதிரிடையாக வரவில்லை. எனவே, நவீன ஏகபோகம் வெறும் எளிய முரண் இசைவு இல்லை, மாறாக உண்மையான பகுதிகளின் கூட்டிணைவு ஆகும்.

"உடன்பாட்டு முற்கோள்: போட்டிக்கு முன்னர், நிலப்பிரபுத்துவ ஏகபோகம்

"முரண் இசைவு: போட்டி.

"கூட்டிணைவு: பிரபுத்துவ ஏகபோகத்தின் நிலைமறுப்பான நவீன ஏகபோகம், போட்டி அமைப்புமுறையை குறிப்பாய் சுட்டும்வரையிலும், போட்டியின் நிலைமறுப்பு அது ஏகபோகமாக இருக்கும்வரை ஆகும்.

"எனவே நவீன ஏகபோகம், முதலாளித்துவ ஏகபோகம், கூட்டிணைவாலான ஏகபோகம், நிலைமறுப்பின் நிலைமறுப்பு, எதிர்மறைகளின் ஐக்கியமாகும். இது தூய, இயல்பான, அறிவுபூர்வமான நிலையில் உள்ள ஏகபோகம் ஆகும்." [17]

ஏகபோகத்தை நிலப்பிரப்புத்துவத்தின் மிச்சசொச்சங்களுள் ஒன்றானதாக கருத்திற் கொள்ளாமல், மார்க்ஸ் நவீன ஏகபோகத்தை, போட்டி எனவும், அதனின்று எழுகின்றது எனவும் உட்பொருளைக் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றார்.

"நடைமுறை வாழ்வில் நாம் போட்டியையும், ஏகபோகத்தையும் அவற்றிற்கிடையே உள்ள எதிர்ப்பை மட்டுமின்றி, இரண்டும் கூட்டிணைந்து நிற்பதையும் காண்கிறோம்; இது ஒரு சூத்திரம் அல்ல, ஓர் இயக்கம் ஆகும். ஏகபோகம் போட்டியை ஏற்படுத்துகிறது, போட்டி ஏகபோகத்தைத் தோற்றுவிக்கிறது. போட்டியிலிருந்து ஏகபோக உரிமையாளர்கள் உருவாகின்றனர்: போட்டியாளர்கள் ஏகபோக உரிமையாளர்கள் ஆகின்றனர். ஏகபோக உரிமையாளர்கள் தங்களுக்கு இடையே இருக்கும் போட்டியை ஓரளவு சங்கங்கள் மூலம் குறைத்துக் கொண்டால், போட்டி தொழிலாளர்களிடையே அதிகரிக்கிறது; ஒரு நாட்டின் ஏகபோக உரிமையாளர்களுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் பாரியளவு அதிகரிக்கும்போது, வேறுபட்ட நாடுகளில் உள்ள ஏகபோக உரிமையாளர்களுக்கு இடையே பெரும் வெறிகொண்ட போட்டி அதிகரிக்கிறது. இதன் கூட்டிணைவு எத்தன்மை கொண்டது என்றால், ஏகபோகம் தன்னை தொடர்ந்து போட்டியின் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்ளுவதின் மூலம்தான் நிலைப்படுத்திக் கொள்ளமுடியும்." [18]

ஏகபோகத்தின் விளைவுகளை ஆராயவில்லை என்ற ஸ்வீசியின் கூற்றுக்கு மாறாக, மார்கஸ் அதன் தாக்கங்கள் எவ்வாறு உபரி மதிப்பு பங்கிடப்படுவதில் இருந்தது என்பதைக் கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட முதலாளித்துவப்பிரிவு, போட்டியாளர்களை உற்பத்தித்துறையில் நுழைய முடியாமல் தடை செய்ய முடிந்ததால், அது தன்னுடைய பொருட்களின் விலையை சராசரி இலாபவிகிதத்தை விட அதிகமாக வருவாய் வரும் வகையில் உயர்த்தி வைக்கமுடியும். ஆனால் இது மொத்த மூலதனத்திலிருந்தும் கறந்தெடுக்கப்படும் உபரி மதிப்பின் அளவை மாற்றுவதில்லை. அதாவது, கூடுதலான ஏகபோகங்கள் உள்ள முதலாளித்துவப் பிரிவுகள், குறித்த காலத்திற்காவது, மற்றைய கூடுதல் போட்டியுடைய பிரிவுகளின் செலவில் ஆதாயம் பெறும் என்பதுதான் இதன் பொருள். உபரி மதிப்பின் பங்கீடு இதனால் பாதிப்பிற்கு உட்படுமே தவிர அதன் மொத்த அளவில் மாற்றம் இருக்காது.

புரூதோனுக்கு விடையளிக்கும் வகையிலான தத்துவார்த்த விவாதங்கள் காட்டுவதுபோல், மார்க்ஸ் நிலப்பிரப்புத்துவத்திற்கு எதிரான போராட்டத்திலேயே போட்டி உருவாகியது என்று வலியுறுத்தியுள்ளார். அப்போராட்டத்தின் சாரம் அரசர்கள் வழங்கிய சிறப்பு உரிமங்களினால் பாதுகாப்பிற்கு உட்பட்டிருந்த பெரும் நிறுவனங்களை உடைப்பது அல்ல -- மாறாக நிலப்பிரப்புத்துவ பொருளாதாரத்தின் வரம்புகள் மூலம் நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்த, நகரப்பகுதியில், கைவினைக் கழகத்தில் பிடியிலிருந்த தொழிலாளர்களை விடுவிக்கும் கருத்தைத்தான் கொண்டிருந்தது.

மார்க்சிச எழுத்தாளர் ஜோன் வீக்ஸ் (John Weeks) குறிப்பிட்டிப்பதுபோல், முதலாளித்துவ போட்டியின் சாராம்சம், சிறு அளவு பொருளாதார அமைப்புக்கள், நிறுவனங்கள் இவற்றிற்கிடையே உள்ள மோதல்கள் அல்ல.[19] நிலப்பிரப்புத்துவத்திலும் சிறு அளவு உற்பத்திமுறை இருந்தது; ஆனால் அங்கு போட்டியில்லை. சுதந்திரமான கூலிஉழைப்பு தொழிலாளர் தோன்றியதிலிருந்துதான் போட்டி தொடங்கியது; அதிலும் இலாபநோக்கத்தின் உந்துதலுக்காக, உற்பத்திப்பொருள் சந்தைக்குக் கொண்டுவரும் முறை வந்த பின்னர்தான் இது நிகழ்ந்தது. முதலாளித்துவத்தில்கூட, சிறு நிறுவனங்கள், "இயல்பான ஏகபோகங்கள்" என்று கூறப்படுவன வற்றின் போட்டியிலிருந்து பாதுகாப்பிற்கு உட்படுகின்றன; இதற்கு உதாரணம் நீண்ட தொலைவு உள்ள இடங்களுக்கு போக்குவரத்துக்குக் கூடுதலான செலவினம் ஆகும்.

முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவும், கிடைக்கும் உபரி மதிப்பை அபகரிக்கும் முயற்சியால் ஏற்படும் போராட்டமான போட்டி, பெரிய அளவு உற்பத்திமுறையின் அபிவிருத்தியில் தீவிரமாகிறது. மிகப்பெரிய அளவில் போக்குவரத்து, தொடர்புகள் அபிவிருத்தியடைந்த நிலை, தேசிய மற்றும் பூகோள அளவில் என்பது ஒவ்வொரு நிறுவனமும் உலகச்சந்தையின் அழுத்தத்திற்கு உட்படும் என்ற பொருளைத் தரும்.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் உழைப்பு, இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுவதனாலும், மிகப் பெரிய வங்கிகளும், நிதி சந்தை அமைப்புகளும் அவற்றிற்குத் தேவையான மிகப்பெரிய நிதித் தேவைகளைப் புதிய உற்பத்தித்துறைகளில் புகுவதற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டித் தருவதற்கு இருப்பதாலும், கடந்த இரு தசாப்தங்களில் போட்டி, புதிய, தீவிர உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. போட்டி, கூடுதலான ஏகபோகத்தை விளைவித்துள்ளது; ஆனால் அதேநேரத்தில், ஏகபோகமயமாதல் அதிகரிப்பு, சந்தைகள், வளங்கள், இலாபங்கள் இவற்றிற்கான பூகோளப் போட்டியையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இறுதி ஆய்வில், பூகோளமயமாக்கல் போக்கு என்பது, முதலாளித்துவத்தின் அபிவிருத்தியில் இயல்பாகவே உள்ளது என்று மார்கஸ் வலியுறுத்தியதைத்தான் முக்கியமாகக் கொண்டுள்ளது. ஓர் உயர்ந்த மட்டத்திலான சமுதாயத்தின் வளர்ச்சிக்கான புறநிலை வரலாற்று அஸ்திவாரங்களை அது இட்டுள்ளது. பெரிய அளவு உற்பத்தி முறை பற்றிய உட்குறிப்புக்களை மார்க்ஸ் ஆராயவில்லை என்று ஸ்வீசி உறுதிப்படக் கூறியதற்கு அப்பாற்பட்டு, அவை மார்க்சின் ஆய்வில் மைய இடத்தைத்தான் கொண்டிருந்தன.

முதலாளித்துவ அபிவிருத்தி முதல் வரலாற்றுரீதியான மாற்றம், தொழிலாளர்களை உற்பத்தி முறையிலிலிருந்து பிரித்து, ஓரு சுதந்திர கூலிஉழைப்புத் தொழிலாளர் வர்க்கத்தைப் படைத்தது ஆகும். இந்த வழிவகை அடையப்பட்டவுடன், "முதலாளித்துவ உற்பத்திமுறை தன் இருகால்களிலும் ஊன்றி நின்று, உழைப்பு சமூகமயமாக்கப்பட்டு, மற்றைய உற்பத்திவகைகளும் சமூக அளவில் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவதால், அவற்றின் விளைவாக பொதுவான உற்பத்தி முறை புதிய வடிவமைப்பில் வந்துள்ளது. இப்பொழுது அபகரிக்கப்படவேண்டியது, தன்னையே வேலையில் அமர்த்திக் கொள்ளும் தொழிலாளி அல்ல, ஏராளமான தொழிலாளர்களைச் சுரண்டும் முதலாளித்துவத்தைத்தான். இந்த அபகரிப்பு முதலாளித்துவ உற்பத்தியின் உள்ளார்ந்திருக்கும் விதிகளின் செயற்பாட்டின் மூலம் மூலதனங்களை மத்தியப்படுத்தப்படுதல் மூலம் சாதிக்கப் படுகிறது. ஒரு முதலாளி எப்பொழுதும் மற்ற பல முதலாளிகளைத் தாக்குவார். இந்த மத்தியப்படுத்தும் முறை, அல்லது பல முதலாளிகளைச் சில முதலாளிகள் அபகரிப்பதுடன் இணைந்து, கூடுதலான முறையில் மற்ற அபிவிருத்திகளும் பெருகியுள்ளன; உழைப்பு முறைகளில் கூட்டுறவு முறையிலான வடிவத்தின் அதிகரிப்பு, விஞ்ஞானத்தை நனவாக தொழிற்நுட்பரீதியாகப் பயன்படுத்துதல், திட்டமிட்டு நிலத்தைச் சுரண்டுதல், உழைப்பின் வழிவகையைப் பொதுவாக மாற்றி, அவை பொதுவாகப் பயன்படுத்த வகை செய்தில், அனைத்து உற்பத்தி முறையிலும் சிக்கனப்படுத்தும் வகையில் அவற்றின் பயன்பாட்டை இணைத்து, உழைப்பை சமூகமயமாக்கப்படுத்தல், உலகச் சந்தை எனும் வலையில் எல்லா மக்களையும் சிக்க வைத்தல், மற்றும் அத்துடன், முதலாளித்துவ ஆட்சியின் சர்வதேசத் தன்மையின் வளர்ச்சியையும் ஆகும்." [20]

இந்த வரிகளைப் படித்தால், ஸ்வீசியின் கருத்தான, மார்க்ஸ் காலத்திலிருந்து பின்தங்கி விட்டார் என்று கூறுவதை விட, உலகம் இப்பொழுதுதான் மார்க்சிடம் நெருங்கிக் கொண்டுவருகிறது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

தொடரும்....

குறிப்புகள்:
15. Paul Baran and Paul Sweezy, Monopoly Capital Monthly Review Press New York 1968 pp. 3-4
16. Baran and Sweezy op cit pp. 3-5
17. Marx, The Poverty of Philosophy, International Publishers, New York 1969 p. 151
18. Marx op cit p. 152
19. John Weeks, Capital and Exploitation Princeton University Press, Princeton 1981
20. Marx Capital Volume I, Penguin edition Harmondsworth 1976 pp. 928-929

See Also :

மார்க்சிசமும் போல் ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்
பகுதி 1 : ஆரம்பகால ஆதிக்கம்

மார்க்சிசமும் போல் ஸ்வீசியின்அரசியல் பொருளாதாரமும்
பகுதி 2 : முதலாளித்துவ அபிவிருத்தியின் தத்துவம்

மார்க்சியமும், போல் ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்
பகுதி-3 : தத்துவத்தின் நிலைமுறிவு

Top of page